You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 36

Quote

36

நம்பிக்கை

“ஏ வீரா” என்றவன் கோபமாய் அழைக்க, அவள் அலட்டிக் கொள்ளாமல் திரும்பி நின்று, “ஹ்ம்ம்” என்றாள்.

“என்னடி பண்ணி வைச்சிருக்க என் ரூமை” என்றவன் குழப்பமாய் சுற்றும்முற்றும் பார்க்க, “உன் ரூமா? நம்ம ரூம்... நீதானேய்யா சொன்ன... நம்ம ஃப்ரஸ்ட் நைட் அன்னைக்கு... ச்சே! என் ப்ஃரஸ்ட் நைட் அன்னைக்கு” என்றாள். 

முதலில் கோபத்தோடு அவளை முறைத்தவன் பின் தன்னைதானே நிதானப்படுத்திக் கொண்டு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து ஆழமாய் அவளை ஒரு பார்வை பார்த்து,

“நம்ம ரூம்... சரிதான்... ஆனா யாரைக் கேட்டு இதெல்லாம் நீ மாத்தி வைச்ச” என்று கேட்கவும் அவள் சர்வசாதர்ணமாய்,

“யாரைக் கேட்கணும்?” என்றாள்.

“என்னைக் கேட்கணும்”

“எதுக்கு? நீ மட்டும் என்னை கேட்டுக்கினா எல்லாத்தையும் செய்ற... ஏன்? நம்ம கல்யாணத்துக்கு கூட நீ என்னைக் கேட்கலையே” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் பார்வை குனிந்து மேஜையிலிருந்த  ஆஷ் ட்ரேவைத் தேடியது.

“ஏய்... எங்கடி இங்கிருந்த ஆஷ் ட்ரே?” என்றவன் பார்வை அதனைத் தேடிக் கொண்டே கேட்க,

“அது எனக்குப் பிடிக்கல.... எடுத்து போட்டேன்” என்று அலட்டிக் கொள்ளமால் பதிலளித்தாள் அவள்!

“உன்னை” என்று சீற்றமாய் அவளை நெருங்கப் போனவன்,

அங்கே காலியாய் கிடந்த கப்போர்டை கண்டு... அடுத்த கட்ட அதிர்ச்சிக்குள்ளாகி அப்படியே சிலையாய் நின்றுவிட்டான்.

“எங்கடி இங்க இருந்த பாட்டில் லாம்?”

“அந்த கர்மத்தையெல்லாம்.... நான்தான் தூக்கி பக்கத்து காம்பௌண்டில வீசிட்டேன்” என்றாள் வெகுஇயல்பாக!

“அடிப்பாவி! தூக்கி போட்டதுமில்லாம... அதுவும் பக்கத்து கம்பௌன்ட்ல வேற தூக்கிப் போட்டிருக்கியா?” என்று தலையிலடித்துக் கொண்டவன்,

மீண்டும் அவளை நிமிர்ந்து நோக்கி, “இன்னும் வேற என்னலான்டி செஞ்சு வைச்சிருக்க... அதையும் சொல்லுடி” என்றான்.

“அவ்வளவுதான்” என்று அவள் சாதாரணமாய் சொல்ல, “அவ்வளவுதானா?!” என்றபடி ஆவேசமாய் அவன் அவள் புறம் படையெடுக்க,  வீரா அச்சத்தோடு பின்வாங்கினாள்.

“இரு ய்யா... இப்ப இன்னாத்துக்கு நீ டென்ஷனாவுற... எதுவாயிருந்தாலும் பேசி தீத்துக்கலாமே!” என்று  சொல்லிக் கொண்டே அவள் தப்பிக்கும் உபாயத்தை தேட,

“பேசுறதா... மவளே! நீ செஞ்ச வேலைக்கு உன்னை” என்றவன் அவளை எட்டி பிடிக்கப் பார்க்க, “வேணாம்”  அவள் தப்பி அங்கிருந்த படுக்கை மீது ஏறி குரங்கு கணக்காய் இருபக்கமும் தாவித்தாவி சென்றவளை, “இன்னைக்கு என்கிட்ட இருந்து நீ தப்பிக்கவே முடியாது” என்றபடி சாரதி அவளைப் பிடிக்க இருபுறமும்  அணைக்கட்ட அவள் தவித்துப் போனாள்.

“இரு ய்யா... நானே வந்திடுறேன்” என்றவள் சமாதானக் கொடியை பறக்க விடவும், “அப்ப ஒழுங்கா கீழ இறங்கு” என்றபடி கைகளை கட்டிக் கொண்டு அவளையே பார்த்தான்.

“நான் உன் நல்லதுக்காகதான் அதெல்லாம் தூக்கிப் போட்டேன்” என்று பவ்யமாய் அவள் பதில் சொல்ல,

“பார்றா... என் நல்லதுக்காக” என்று கேட்டு கேலி சிரிப்போடு அவளைப் பார்த்து, “போதும் டி...  உன் ஆக்டிங்கை நிறுத்து?” என்றான்.

“ஐயோ... சத்தியமா” என்று அவன் தலையிலேயே அவள் கை வைக்க, “அடிங்க!” என்று மீண்டும் அவளிடம் எகிறினான்.

 “இருய்யா... கொஞ்சம் சொல்றதைக் கேட்டுட்டு கோபப்படேன்”

“என்னடி கேட்கணும்?... நேத்து இதே வாய்தானே என்னை கன்னாபின்னான்னு பேசுச்சு... இப்ப என்னடி... அப்படியே தலைகீழா மாத்திப் பேசுது”

“அதுக்குதான் நேத்தே நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டேன்ல... அப்புறம் ஏன் திரும்பியும் முதல்ல இருந்து வர்ற”

“மன்னிப்பு கேட்டியா...இது எப்போ?!”

“நேத்து நைட்தான்”

“நான் குடிசிருந்தேனே... அப்பவா?”

“ஆமா... நீ எப்ப தெளிவா இருக்க எப்ப குடிச்சிருக்கன்னு யாருக்குய்யா தெரியுது”

“சரி... நீ எதுக்கு அந்த டைம்ல என் ரூம்க்குள்ள வந்த”

“அது... அது வந்து” அவள் தடுமாற,

“ப்ச்... மேல சொல்லு” என்றபடி அவளையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.

“அது.... எல்லாம் என் தங்கச்சிங்க பண்ண வேலை”

“என்ன பண்னாங்க?”

“அது... நமக்கு கல்யாணம் முடிஞ்சதால... நான் உன் ரூம்ல தான் படுக்கணும்னு சொல்லி... அந்த பெரிய மனுஷிங்க... என்னை இங்க துரத்தி விட்டாளுங்க... அதான் வேற வழியில்லாம்” என்றதும் சாரதி நமட்டுச் சிரிப்போடு அவளைப் பார்த்து, “உன் தங்கச்சிங்களுக்கு புரிஞ்ச விஷயம் கூட உனக்கு புரியல” என்க,

அவள் பதில் பேசாமல் அவனைப் பார்த்தாள்.

“சரி அதை விடு... நேத்து நைட் என்ன நடந்துச்சு”

“என்ன நடந்துச்சு? நீ பாட்டுக்கு குடிச்சிட்டு ஏடாகுடமா என்கிட்ட புலம்பின... அவ்வளவுதான்” என்றாள்.

“நான் புலம்பினேன்... அதுவும் உன் கிட்ட... சும்மா கதை விடாதே”

“சத்தியமா” என்று மீண்டும் அவன் தலையில் கை வைக்க வந்தவளை, “அடிங்க! உன் சத்தியமும் வேணாம்... ஒண்ணும் வேண்டாம்... எதாச்சும் ரோமான்டிக்கா நடந்துச்சா... அதை மட்டும் சொல்லு” என்று கல்மிஷமாய் சிரித்தபடி அவன் கேட்கவும் அவள் கடுப்பாகி,

“மூஞ்சி... அதெல்லாம் ஒண்ணும் நடக்கல”என்றாள்.

அவன் தனக்குத்தானே, “என்ன சாரதீ?...  ஒரு நல்ல சீனை மிஸ் பண்ணிட்டியே” என்று சொல்லிக் கொண்டு வருத்தப்பட அவள் பதட்டமானாள்.

அவனோ அந்த நொடி அவளை ஒரு மார்க்கமாய் அளவெடுத்துப் பார்க்க, “அப்படியெல்லாம் பார்க்காதய்யா... நான் என் தங்கச்சிங்க சொன்னதாலதான் இந்த ரூமுக்குள்ள வந்தேன்...  நீ பாட்டுக்குக் கண்ட மேனிக்கு யோசிக்காத” என்க,

அவன் மேலும் விஷமமாய் சிரித்துக் கொண்டே அவள் அருகில் வர,

“இத பாரு... என் தங்கச்சிங்க உன்ன ரொம்ப நம்புறாங்க... ரொம்ப மதிப்பு வைச்சிருக்காங்க...  இன்னும் கேட்டா உன்னை ஒரு ஹீரோ மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க... ஆனா அவங்குளுக்கு  உன்னைப் பத்தி முழுசா தெரிஞ்சா” என்று அவனை நெருங்க விடாமல் அவள் விலகிச் செல்ல,

“தெரிஞ்சா?!” என்று அலட்டிக்கொள்ளாமல் வினவினான்.

“உன் மேல இருக்கிற மதிப்பு போயிடும்... மனசு உடைஞ்சு போயிடுவாங்க” என்று வருத்தத்தோடு அவள் சொல்ல, “அதனால” என்று கேட்டு கொண்டே அவளை நோக்கி வந்தான்.

“அதான் இந்த ரூம்ல இருந்த பாட்டில் எல்லாத்தையும் நான் தூக்கி போட்டேன்”

“ஓ!” என்றான்.

அவளோ, “ப்ளீஸ்... அவங்க முன்னாடி மட்டுமாச்சும் நீ கொஞ்சம் நல்லவனா இருந்துட்டு போயேன்” என்க,

“அவங்க முன்னாடி மட்டும்தானே...  ஹ்ம்ம் இருந்துட்டா போச்சு... ஆனா” என்றவன் இழுக்க,

“ஆனா என்ன?” என்று அவனை சந்தேகமாய் பார்த்தாள்.

“நீ....  எனக்கு நல்லவளா இருக்கணும்” என்றான்.

“புரியல”

“அடாவடித்தனமெல்லாம் பண்ணாம சமத்தா நான் சொல்றதெல்லாம் கேட்கணும்... அதாவது எனக்குப் பொண்டாட்டியா இருக்கணும்” என்று அவள் கன்னத்தை கிள்ள அவள் அவன் கரத்தை வெறுப்பாய் தட்டிவிட்டு,

“ச்சே! நேத்து அவ்வளவு போதையிலையும்... ஒழுங்கா  நடந்துக்கின” என்றாள்.

“அதுவா பேபி... உள்ள போன சரக்கும் நெகடிவ் ... நம்மளும் நெகட்டிவா... அதான் பாசிட்டிவாயிடுச்சு... இப்போ ஒன்லி நெகடிவ்”

“உனக்கு போய் பாவம் பார்த்தேன் பார்... என்னை” என்று அவள் பல்லை கடித்துக் கொண்டு வாயிற்குள்ளேயே முனக,

“இப்போ ஏன் இவ்வளவு யோசிக்குற... உன்னோட தேவையென்ன... உன் சிஸ்டர்ஸோட எதிர்காலம் ரைட்... அதை நீ என்கிட்ட விட்ரு... அவங்களுக்கு தி பெஸ்ட்டா எல்லாம் கொடுக்குறேன்... நீ” என்றவன் பேசி முடிக்கும் முன்னரே அவள் இடையிட்டு,

“ஓ!... உன் தேவையை நான் பூர்த்தி செய்றேன்... நீ என் தேவையை பூர்த்தி செய்யிங்கிறியா?”

“பாயிண்ட்”  என்றபடி அவன் அலட்சியமாய் தோள்களைக் குலுக்கினான்.

அவள் அந்த நொடி விரக்தியாய் ஒரு புன்னகையை உதிர்த்து,“சும்மா சொல்ல கூடாது... பக்கா பிசினஸ்மேன்யா நீ” என்றாள்.

“நேத்து இன்னாவோ... நீ என் தங்கச்சிங்கள உன் தங்கச்சிங்க மாதிரி பார்க்குறேன்னு சொன்ன... இப்ப இன்னாடானா... அவங்களுக்கு செய்றதுக்கு  போய் நீ என்கிட்ட விலை பேசுற... இதான் நீ அவங்க மேல வைச்சிருக்க அன்பா?” இவ்வாறாக வீரா சாரதியைப் பார்த்து கேட்டதும் அவனுக்குச் சுருக்கென்றது.

அவளை ஆழ்ந்து நோக்கியவன், “யூ ஆர் ரைட்.... நான் இப்படி ஒரு பாய்ண்ட் ஆப் வ்யூல யோசிக்கவே இல்ல”  என்றான் வெகுஇயல்பாக!

“நீ யோசிக்க மாட்ட... ஏன்னா நீ வளர்ந்த விதம் அப்படி... உனக்கு எல்லாமே பிசினஸ்தான்” என்றவள் சொல்ல,

“நாட் எக்சேக்ட்லி ... ஆனா கொஞ்சம் அப்படிதான்” என்று எதார்த்தமாகத் தான் இப்படிதான் என்று அவனே ஒத்துக்கொள்ள அவள் முறுவலித்தாள். அவள் முகத்தில் கோபத்தை எதிர்பார்த்தவனுக்கு அவளின் இந்த நகைப்பு ஆச்சரியப்படுத்த அப்போது அவள் அவனிடம், 

“நேத்து நைட் மட்டும் நீ என்கிட்ட பேசலன்னு வைச்சுக்கோ... சத்தியமா நீ இப்போ இப்படி கேட்டதுக்கு  நான் உன்கிட்ட கோபப்பட்டிருப்பேன்” என்க,

“அப்படி என்ன பேசினேன்?” என்று கேட்டான் குழப்பத்தோடு!

“பேசல... புலம்பின... அம்மா அப்பா இல்லாம நீ சின்ன வயசுல இருந்து எவ்வளோ கஷ்டபட்டன்னு உன் கதையெல்லாம் சொன்ன... இத்தனை வருஷத்தில யாருமே உன்கிட்ட அன்பா அக்கறையா நடந்துகிட்டதே  இல்லன்னு சொன்னே....அப்புறம்... பட்டுன்னு  என் கையை பிடிச்சுக்கின்னு நான்தான் உன்கிட்ட முதல் முதலா அன்பா அக்கறையா நடந்துக்கினன்னு சொன்ன”

“அப்படியா என்ன?!” என்றவன் புருவங்களை நெறிக்க, 

“ஆமாம்” என்றவள் சலிப்போடு தொடர்ந்தாள்.

“அதோட நீ வுட்டியா... நீ பாட்டுக்கு  புலம்பி முடிச்சு கடைசியா என்கிட்ட  ஒரு சத்தியம் கேட்ட” என்றவள் சொல்ல,

“என்ன சத்தியம்?” என்று ஆவல் ததும்ப அவளை நோக்கினான்.

“நானும் என் தங்கச்சிங்களும் எந்தக் காரணத்தைக் கொண்டும் உன்னை விட்டுட்டு போயிடக் கூடாதுன்னு” 

சாரதியின் விழிகள் எதிர்பார்போடு அகல விரிந்தன. “சத்தியம் பண்ணியா?!” என்றவன் கேட்க,  அவள் பதில் பேசமால் அவன் முகத்தை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சொல்லுடி” என்றவன் மீண்டும் அழுத்திக் கேட்க, 

“நீ எங்க என்னை விட்ட” 

“அப்போ பண்ணிட்ட” என்று அவன் கேட்கவும், “ஹ்ம்ம்” என்று அவள் சிரத்தையின்றி தலையசைத்து ஆமோதித்தாள். அந்த நொடி சாரதியின் கால்கள் தரையில் நிற்கவில்லை. வானத்தில் பறந்தது போல் இருந்தது. அவன் இன்பத்தில் மூழ்கித் திளைக்க அவன் உதட்டில் மெலிதாய் ஓர் புன்னகை தவழ்ந்தது.

அவளோ அவன் மனநிலையை கவனியாதவளாய்,

“உன்கிட்ட பேசுன பிறகுதான் ய்யா  நீ அன்புக்காக எந்தளவுக்கு ஏங்குறன்னு எனக்கு புரிஞ்சுது... எனக்கு ரொம்ப கஷ்டமா போயிருச்சு... அதுவும் நானே அடிக்கடிக்கு... யோசிக்காம உனக்கு குடும்பம் இல்லன்னு சொல்லி குத்தி காட்டிட்டேன்” என்று வருத்தத்தோடு அவள் தலைகவிழ்ந்து கொண்டபடி,  “என்னை மன்னிச்சிருய்யா” என்றாள் குற்றவுணர்வோடு!

“ஏ! வீரா ஸ்டாப் இட்... நீ பாட்டுக்கு ஓவர் இமோஷனலா பேசி என்னை அழ வைக்காதே... அதெல்லாம் நம்ம கேரக்டருக்கு சுத்தமா ஒத்து வராது” என்றான்.

“அப்படியா?! அப்போ நேத்து என் தோள்ல படுத்துக்கின்னு குழந்தை மாதிரி அழுதது யாருங்க ஆபீசர்?” என்றவள் கிண்டல் தொனியில் கேட்க,

“திஸ் இஸ் டூ மச்... அப்படியெல்லாம் நடந்திருக்காது... நோ வே” என்றவன் ஈகோ அவனுக்கு முன்னதாக முந்திக் கொண்டு அவசரமாய் மறுதலிக்க, 

“அப்போ அது நீங்க இல்லையா ஆபீசர்?!” என்று அதிர்ச்சியான பாவனையில் கேட்பது போல் சற்றே எகத்தாளமாகக் கேட்டாள்.

“சான்ஸே இல்ல” என்றவன் தீர்க்கமாக மறுக்க, வீராவுக்கு சிரிப்புத் தாங்கவில்லை. 

அவனுக்கு உள்ளுர கோபம் ஏறிக் கொண்டிருக்க வீரா பிராயத்தனப்பட்டு தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு, “எவ்வளவு பெரிய அப்பாட்டாக்கரா இருந்தாலும் பொண்டாட்டிக்கிட்ட பொய்யா நடிக்க முடியாது... ஆபீசர்” என்றவள் சொல்ல, அப்போது சாரதியின் இதழிலும் குறும்புத்தனமான புன்னகை இழையோடியது.

“பொண்டாட்டி மட்டும் புருஷன்கிட்ட பொய்யா நடிக்கிலாங்களா ஆபீசர்” என்றபடி அவளை நெருங்கி வர அவன் பார்வையில் ... கொஞ்சம் கலவரமானவள், “நான் எப்போ நடிச்சேன்?” என்று குழப்பமாக கேட்டுக்  கொண்டே  பின்னோடு நகர்ந்தவளை மேலே செல்ல விடாமல் ஒரே பாய்ச்சலில் அவள் இடையை தன் கரத்தில் வளைத்துப் பிடித்து,

“என்னை பிடிக்காத மாதிரியே நடிச்சியே” என்றான்.

“நடிக்க என்ன இருக்கு... பிடிக்கலதான்... விடுய்யா” என்றவள் அவனைத் தள்ளிவிட முற்பட, அவளை இன்னும் நெருக்கமாய் அணைத்து நின்றான்.

“உண்மையா பிடிக்கல?!” என்றவன் புருவங்களை நெறித்து கல்மிஷமாய் அவளைப் பார்த்து சிரித்தான்.

அவளோ அவன் கரத்திலிருந்து வெளிவர முடியாமல் தவித்தபடி, “எனக்கு உன்னை பார்த்தா பாவமாகீதுதான்.. ஆனா இப்பவும் சொல்றேன்... எனக்கு உன்னைப் பிடிக்கல பிடிக்கலதான்” என்று முகத்தை சுளித்தாள்.

அவன் மீண்டும் சத்தமாய் சிரித்துவிட்டு, “அய்யோடா... பாவம் பார்க்குறாங்கலாமே... மதர் தெரஸாக்கு அக்காவாடி நீ” என்று எகத்தாளமாய் கேட்டான்.

“இப்ப நீ என்ன விடல... செவுலு பேந்திரும்” என்றவள் மிரட்ட, “அப்படியா?” என்று அவளைப் பார்த்து விஷமமாய் சிரித்துக் கொண்டே தன் முதல் காதல் முத்தத்தை அவள் அதரங்களில் அழுந்தப் பதித்தான்.

அன்று போல் அல்லாது முழுக்க முழக்க மோகத்தோடு அவன் பாய்ச்சிய முத்தம், அவளைத் திக்குமுக்காட வைத்திருந்தது. 

“இப்ப சொல்லு... உனக்கு என்னைப் பிடிக்கல” என்றவன் கேட்டுக் கொண்டே அவளைப் படுக்கையில் தள்ளி விட, அவள் எழுந்திருக்கும் முன்னதாக அவன் தேகம் அவளை முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டது. 

அவன் விழிகளின் தாக்கத்திலிருந்து அவள் தப்பிக் கொள்ள முடியாமல் தவிப்புற, “எனக்குத் தெரியும்... உனக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு... இல்லாட்டி போனா நான் எவ்வளவு கட்டாயப்படுத்தி இருந்தாலும் நிச்சயம் நீ என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சிருக்க மாட்ட” என்க, அவள் விழிகள் ஆச்சரியத்தில் பெரிதாகின.

நேற்று இதே கேள்வியை அவன் கேட்ட போது பதில் சொல்லாமல் தப்பிக் கொண்டவளுக்கு  இப்போது அவனிடமிருந்து தப்பிக் கொள்ள இயலும் என்று தோன்றவில்லை. அவனின் நெருக்கத்திலும் அணைப்பிலும் அவள் ஊமையாகிப் போனாள். மெல்ல மெல்ல அவனிடம் அவள் தன் வசம் இழந்து கொண்டிருந்தாள்.  

பல ஆண்களின் பார்வைக்கும் இச்சைக்கும் தோற்றுப் போகாமல் தன் பெண்மையைத்  தற்காத்துக் கொண்டவள்... இப்போது விரும்பியே அவனிடம் தோற்றுப் போக விழைந்தாள் என்பதே உண்மை!

அவனின் வசீகரம் எப்போதோ அவள் இளமையைக் களவாடிவிட்டிருந்தது. 

ஆதலாலேயே அவளால் அவனை அழுத்தமாய் எதிர்க்கவும் முடியவில்லை. அதே நேரம் அவன் செய்கைகளுக்கு உடன் படவும் முடியவில்லை. இரண்டுங்கெட்டான்  நிலையில்தான்  இருந்தாள். அதுவே சாரதிக்கு சாதகமாய் போனது. 

களவியலைக் கூட கடமைக்கென்றே புரிந்தவனுக்கு அவளுடனான இந்தக் கூடல் சற்றே புது அனுபவமாகத்தான் இருந்தது. அவளின் பெண்மையோடு கலந்திருந்த நாணத்தோடு விளையாடிய விளையாட்டில் அவன் தன்னிலை மறந்து அவளோடு முழ்கித் திளைக்க விடிந்த பின்னும் கூட அவளை விடுவிக்க மனமில்லை அவனுக்கு!

அத்தகைய உறவுக்காகவும் காதலுக்காகவும்தானே அவன் மனம் உள்ளூர ஏங்கிக் கொண்டிருந்தது. அது கிடைத்த மாத்திரத்தில் விட அவனுக்கு மனமில்லை. அவள் தனக்கே உரியவள் என்ற உரிமையை நிலைநாட்டிக் கொள்வதில் அவனுக்கிருந்த தீவிரம் அது!

அப்போது வீராவின் கண்களின் ஒதுங்கிய நீரை உணர்ந்த போதே அவன் துணுக்குற்று அவள் முகத்தை நிமிர்த்தி, “வீரா என்னாச்சு? ஆர் யூ ஆல்ரைட்?” என்று கேட்கவும் அந்த நொடி அவனைத் தள்ளிவிட்டு அவள் விலகிச் சென்றாள்.

“வீரா... வாட்?” என்றவன் புரியாமல் அவளைப் பார்க்க,

“என்னையும் அந்த மேனாமினுக்கிங்க மாதிரி... பத்தோடு பதினொன்னா ஆக்கிட்ட இல்ல... ச்சே! நானும்” என்றவள் தன் செய்கையை எண்ணி அவமானமாய் உணர்ந்து தம் கரங்களால் அவள் முகத்தை மூடிக் கொண்டாள்.

சாரதி எழுந்தமர்ந்து, “வீரா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ... நான் உன்னை அந்த மாதிரி நினைச்சு தொடல... எனக்கு உன்மேல இருந்த பீலிங்க்ஸ் வேற... அதை எப்படி சொல்றது” என்றவன் குழப்பமாய் யோசிக்கும் போதே,

அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு அவன் புறம் திரும்பி, “நீ எதுவும் சொல்ல வேணாம்” என்றவள் சற்று இடைவெளிவிட்டு தன அழுகையை விழுங்கிக் கொண்டு தொடர்ந்தாள்.

“நல்லா கேட்டுக்கோ...  நான் மனசாரதான் உன் கூட இருந்தேன்... பிடிச்சுதான் உன்னைக் கல்யாணம் பண்ணேன்...  என் வாழ்கை பூரா...  உன் கூடத்தான் இருப்பேன்... ஆனா ஒண்ணு... இப்போ நீ  என்னைத் தொட்ட கையால இன்னொரு பொண்ணைத் தொட்டியோ... கொன்னுடுவேன் ... சத்தியமா கொன்னுடுவேன்” என்று உக்கிரமாய் சொன்னவளைப் பார்த்தவன் சிறுபுன்னகையோடு, 

“ப்பா... என்ன கோபம் அந்த கண்ணுல... இதுக்காகவே வாழ்கை பூரா உன் காலடில கிடக்கலாம்டி” என்று சொல்லி மீண்டும் அவளை அவன் தன்னருகில் இழுத்து அணைத்துக் கொண்டான். அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டவளோ சில நொடிகள் ஸ்தம்பித்து விட்டாள்.

அவன் அவள் கன்னங்களை தம் விரல்களால் வருடியபடி , 

“எல்லாரையும் அடக்கி ஆள்றதுல ஒரு கிக் இருக்குன்னா... உன்னை மாதிரி பொண்ணுகிட்ட  அடங்கி போறதுல கூட ஒரு கிக் இருக்கு... இந்த சாரதி மொத்தமா உன்கிட்ட அடங்கிட்டான் வீரா... அன் மோரோவர்... அது இன்னைகில்ல... அன்னைக்கே” என்க அப்போதே தன்னிலை மீட்டுக் கொண்டு அவனைக் குழப்பமாய் பார்த்து, “என்னைக்கு” என்றாள்.

“ஆமா... நான் ரெஜிஸ்டர் அபீஸில போட்டது வெறும் கையெழுத்துன்னு நினைச்சியா?... ச்ச்... அது நான் உன்மேல வைச்சிருக்க நம்பிக்கை... இல்லாட்டி போன... ஜஸ்ட் லைக் தட் ஒரு சைன்ல... நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச... என் பேர்... அங்கீகாரம்.... என் சொத்துல உனக்கு ஈக்குவல் ரைட்ஸ் கொடுத்திருப்பேனா?!” என்றவன் கேட்கவும் வீராவிற்கு வியப்பானது.

நம்பிக்கைதான் உறவுகளை இணைக்கும் பாலம். அதில் காதலும் கூட இரண்டாம் பட்சம்தான். அத்தகைய நம்பிக்கைதான் வீரா சாரதியின் உறவை ஆழமாய் அழுத்தமாய் கட்டமைத்திருந்தது. அவர்களை இணைத்தும் வைத்தது. நாளாக நாளாக அவர்களை இன்னும் நெருக்கமாய் மாற்றியிருந்தது.

அடுத்த நாள் சாரதி ரேடியோவில் பேசப் போவதை அறிந்து அம்முவும் நதியாவும் செய்து கொண்டிருந்த அலப்பறையை வீராவால் தாங்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே அவர்கள் அத்தனை ஆர்வமாய் ஃபோனில் FM வைத்து... அவன் பேசப் போவதாக சொன்ன சேனலை டியூன் செய்து காத்துக் கொண்டிருக்க, 

“இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு” என்றாள் வீரா கடுப்போடு!

“கொஞ்ச நேரம் சும்மா இரு க்கா... மாமா பேச போறாரு” என்று நதியாவும் அமலாவும் சொல்ல வீரா தலையிலடித்துக் கொண்டு, “முடியலடி... ரொம்பதாண்டி பண்றீங்க இரண்டு பேரும்” என்றாள்.

“ஷ்ஷ்ஷ்ஷ்” என்று அம்மு அவளை அதட்டிவிட்டு வால்யூமை ஏற்ற அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சாரதியைப் பற்றி புகழுரையை ஆரம்பித்திருந்தாள்.

இளைஞர்களுக்கான  சுயமுன்னேற்றத்தைப் பற்றிய நிகழ்ச்சி அது! அவன் வளர்ந்தது படித்தது அவனின் வெற்றிக்கான காரணங்கள் என பல்வேறு கேள்விகளை அந்தத் தொகுப்பாளர் சாரதியிடம் தொடுக்க அவன் நிறுத்தி நிதானமாய் தம் பதில்களை வழங்கிக் கொண்டிருந்தான்.

அவன் பேசுவதைக் கேட்ட அம்முவும் நதியாவும் அவ்வப்போது மெய்சிலிர்த்து உச்சு கொட்டி மெச்ச... வீரா தலையை பிடித்துக் கொண்டு, “செம்ம மொக்க ஷோ” என்று மேலும் கடுப்பானாள்.

அப்போது நதியா தன் தமக்கையைப் பார்த்து, “எதுக்கோ எதோட வாசனையோ தெரியாதாம்” என்றுரைக்க, வீரா சீற்றத்தோடு அவள் காதை திருகினாள்.

அதற்கு பிறகு  அவர்களுக்கு இடையில் ஒரு யுத்தம் தொடங்கி மும்முரமாய் நடந்துகொண்டிருக்க அந்தச் சமயம், “உங்களுக்கு எப்போ சார் கல்யாணம்?” என்று அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சாரதியிடம் கேட்க, அந்த சகோதரிகள் காதிலும் அந்த கேள்வி விழுந்து அவர்களை அதிர்சிக்குள்ளாக்கியது.

மூவர் முகத்திலும் ஈயாடவில்லை. அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று அவர்கள் படுஆர்வமாய் காத்திருக்க, “ஐம் மேரிட்” என்றான் சுருக்கமாக.

“இஸ் இட்” என்று அந்த பெண் ஆச்சர்யமாய் கேட்டு, “ஹ்ம்ம்... அப்படி எந்த நியூஸும் வந்த மாதிரித் தெரியலையே... நிஜமாவா?!” என்று வினவினாள்.

“சிம்பிளா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டேன்... பெருசா விளம்பரபடுத்திக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல”

“நீங்க இன்னைக்கு ஜெனரேஷன் ஆளுங்களையே ரொம்ப வித்தியாசமான ஆள் சார்” என்றவள் மேலும், “உங்க மனைவியோட பேர்” என்று வினவினாள். அவன் பட்டென, “வீரா” என்க,

“வீராவா... முழு பேரே வீராவா” என்று தொகுப்பாளர் புரியாமல் கேட்கவும் 

அம்முவும் நதியாவும் வீராவைப் பார்த்து கேலியாய் வாயைப் பொத்தி கொண்டு சிரிக்க அவர்களைப் பார்த்து முறைத்து விட்டு, “நான் போறேன்” என்று சொல்லி வீரா அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல முற்பட்டாள்.

அப்போது சாரதி, “சாரி... அவங்களோட முழு பேரை சொன்னா அவங்களுக்குப் பிடிக்காது...  விட்ருங்க... அப்புறம் மேடம் இந்த ரேடியோ ஸ்டேஷனுக்கே வந்து உங்கள அந்தர் பண்ணிடுவாங்க” என்றதும் அந்தத் தொகுப்பாளர் சிரிக்கத் தொடங்கியிருந்தாள்.

வீராவின் முகமும் கூட அவன் சொன்னதைக் கேட்டு அழகாய் மலர,

“ஐ! அக்கா சிரிச்சிட்டா” என்று அவள் சகோதரிகள் குதூகலித்தனர்.

சாரதி மேலும் வீராவின் தைரியம்... அவள் உதவி செய்யும் குணத்தைக் குறித்தும் அந்தத் தொகுப்பாளரிடம் பாராட்டித் தள்ள... அவன் பேச்சைக் கேட்ட வீரா அடங்கா வியப்பில் நின்றாள்.

அன்று இரவு சாரதி... வீட்டிற்கு வந்ததும் வராததுமாய் அவனை அமலாவும் நதியாவும் நிறுத்தி வைத்து புகழுரை பாட, 

“ஒண்ணும் இல்லாத மேட்டருக்கு இன்னாத்துக்குடி இவ்வளோ பேசறீங்க” என்று வீரா அலுத்துக் கொண்டாள்.

“மாமாகிட்டதானே பேசிட்டிருகோம்... இப்போ நீ ஏன்... காண்டாவுற” என்று அமலா கேட்க, “பொறாமையில பொசுங்குறா போல” என்றான் சாரதி.

வீரா அவனைக் கோபமாய் முறைத்துப் பார்க்க, “ஓகே ஓகே... சண்டையெல்லாம் வந்து போட்டுக்கலாம்... இப்போ கொஞ்சம் வெளிய போகணும்... எல்லாரும் கிளம்புங்க” என்றான்.

“எங்க?”

“ஒரு பேமிலி ஃபங்க்ஷன்” 

வீரா யோசனையாய் அவனைப் பார்க்க சாரதி, “முத்து... கொஞ்சம் வண்டில டிரஸஸ் இருக்கு... அதை எடுத்துட்டு வாங்க” என்று பணித்துவிட்டு அவன் எடுத்து வந்த உடையைச் சாரதி மூவரிடமும் கொடுத்து மாற்றிக் கொள்ள சொல்ல, வீரா தயக்கமாய் அவனிடம் வேண்டாமென மறுத்தாள்.

ஆனால் சாரதி அவள் சொல்வதைக் கேட்பதாக இல்லை. இறுதியாய் அவன் பிடிவாதத்தின் முன் எதுவும் செய்ய முடியாமல் தங்கைகளை அழைத்துக் கொண்டு அவனோடு புறப்பட்டாள்.

போகும் போது எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது. ஆனால் அந்த விழாவில் பங்கேற்க சென்ற இடத்தில்... அங்குள்ள பலரும்... வீராவை வித்தியாசமாய் பார்த்தனர். அவள் சாரதியின் மனைவி என்று யாருக்கும் தெரியாத பட்சத்தில் அவர்கள் பார்வையும் பேச்சும் வீராவை வெகுவாய் காயப்படுத்த, சாரதிக்கும் அதே சங்கடமான நிலைதான் !

எத்தனை பேரிடம் அவனால் அவளைப் பற்றி விளக்கம் கொடுக்க முடியும். ஆனால் அம்முவும் நதியாவும் அவற்றையெல்லாம் கூர்ந்து கவனிக்கவில்லை. வீராவும் சாரதியும் தங்கள் மனநிலையை அவர்களிடம் காட்டிக் கொள்ளாமல் வீட்டை அடைந்தனர்.

வீரா தன் அறைக்குள் நுழைந்து படுக்கையில் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து கொள்ள,  சாரதி அறைக் கதவை மூடிவிட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

“அப்செட் ஆயிட்டியோ?!”

“இல்ல சந்தோஷமா இருக்கேன்... ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று சற்றும் கோபம் குறையாமல் அவள் பதிலுரைக்க, 

“ஓ! மேடம்... ரொம்ப கோபமா இருக்கீங்களோ?”

“சேச்சே... நான் ஏன் கோபமா இருக்கேன்... எப்போ உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேனோ அப்பவே இந்த சூடு சொரணை ரோஷம் எல்லாத்தையும் தூக்கி தூர போட்டேன்” என்றவள் அவனிடம் சொல்ல சாரதி சிரித்தபடி, 

“எப்படி டி? சிட்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி கவுண்ட்டர் கொடுக்குற... சான்ச்ஏ இல்ல... போ” என்றான்.

அவனை அவள் கோபமாய் முறைக்க உடனடியாய் அவன் அவள் தோள் மீது கரம் பதித்து, “வீரா காம் டவுன்... இந்த பிரச்சனைக்கு நான் ஒரு முடிவு கட்டுறேன்... நீ இந்த மேட்டர இதோட விடு” என்றான்.

“இன்னா பண்ணுவ?” என்றபடி அவன் கரத்தை அவள் தட்டிவிட,

“இந்த நாஸ்டி சொசைடிக்காக ஒரு மேரேஜ் பார்ட்டி அரேஞ் பண்ணிட்டா போச்சு... சிம்பிள்” என்றவன் சொல்லி தோள்களைக் குலுக்க, அவனை ஏறஇறங்கப் பார்த்தாள். இந்த விஷயத்தை அவன் இத்தனை எளிதாக எடுத்துக் கொண்டது அவளின் கோபத்தை இன்னும் அதிகரிக்க, 

“அப்பயாச்சும் இந்த மாலை தாலி எல்லாம் வாங்குவியா?!” என்று முறைப்பாய் கேட்டாள். இதைக் கேட்டு சாரதி மீண்டும் சிரித்துவிட்டான்.

ஆனால் அவள் முகத்திலிருந்த கோபம் துளியளவும் குறையவில்லை. அவள் முகத்தைச் சுளித்து கொண்டு எழுந்து  உடை மாற்றிக் கொள்ள செல்ல அவனோ அவள் கரத்தைப் பற்றித் தடுத்தான்.

“விடுய்யா கையை” என்றவள் சீற்றமாய் அவனைப் பார்க்க,  “இந்த ஸாரி உனக்கு சூப்பரா இருந்துச்சு...  அங்க இருக்கிறவன் கண்ணெலாம் உன் மேலதான்... ஏன்டா உன்னை பஃங்க்ஷனுக்கு கூட்டிட்டு போனோம்னு ஆயிடுச்சு”

“ஆகும் ஆகும்” என்றவள் அவனிடமிருந்து அவள் கரத்தை உருவிக் கொள்ள,

அவனோ அவளைப் பின்னோடு அணைத்துக் கொண்டு, “கம் ஆன் டார்லிங்” என்றான்.

“மாட்டேன்... நானே செம்ம கடுப்பில இருக்கேன்” 

அவளைத் தன் புறம் திருப்பி, “அப்போ முடியாதா?!” என்று கேட்டு அவனும் பதிலுக்கு முறைக்க, “முடியவே முடியாது” என்றாள் தீர்க்கமாக!

அவன் அந்த நொடி விறுவிறுவென பால்கனி கதவு வழியாக வெளியே  நடந்து சென்று... தன் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்து வாயில் வைக்க,

வீரா அவன் செய்கையை கவனித்த மறுகணமே... வேகமாய் அவனை நெருங்கி அதனைப் பிடுங்கி வீசினாள். அவன் மீண்டும் இன்னொன்றை எடுத்துப் பற்ற வைக்க அவள் கோபமாய் அதனையும் தூக்கி வீச இப்படியே சில நொடிகள் அவர்கள் இருவரும் மாறி மாறி செய்து கொண்டிருக்க அவன் சிகரெட் பாக்கெட்  காலியானது.

“காலியாயிடுச்சே” என்றவள் தன் கரத்தை அவன் முகத்துக்கு நேராய் ஆட்ட, 

“நான் செக்யூரிட்டி கிட்ட சொல்லி வாங்கிட்டு வர சொல்வேனே” என்றவன் தன கைப்பேசியை எடுத்து காதில் வைத்தான்.

“போயா... நீ திருந்தவே மாட்ட” என்றவள் சொல்லவும் அவன் முறுவலித்து,

“சரி பிடிக்கல .... ஆனா நீ ஓகே சொல்லணும்” என்றவன் தன் விழிகளின் மார்க்கமாய் அவளின் தேகத்தை தொடாமல் தொட்டு தழுவிக் கொண்டிருக்க அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.

அவன் பார்வையின் தாக்குதலோடு தாக்கு பிடிக்க முடியாமல் அவள் அறைக்குள் நுழைந்தாள். சாரதியும் பால்கனி கதவைமூடிவிட்டு அவள் பின்னோடு வந்து அணைத்தான்.

“வேண்டாம்னு சொல்றேன்ல” என்றவள் மீண்டும் அவனை விலக்கிவிட ,

“நோக்கு வேணாம்னா பரவாயில்ல... ஆனா நேக்கு வேணுமே” என்றவன் அமாஞ்சி போல முகத்தை மாற்றிக் கொண்டு அவளைப் பார்த்து கண்ணடிக்கவும், அவள் உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு,

“அப்போ... நீ நினைச்சதுதான் நடக்கணுமா?”  பொய்யான கோபத்தோடு அவனை முறைத்துக் கொண்டு கேட்டாள்.

“ஏ!பொண்டாட்டி... உனக்கு எது வருதோ இல்லையோ... நடிப்பு நல்லா வருது... சரியான ஃப்ராடு” என்றவன் சொன்னதுதான் தாமதம். அவள் கலீரென சிரித்துவிட, சாரதிக்கு அதுவே போதுமானது. 

அவளை அருகில் இழுத்து தன் சரச லீலைகளை அவன் புரிய ஆரம்பிக்க, அப்போது அந்த அறை முழுக்கவும் ஒருவித  நிசப்தமான நிலைக்கு மாறியது.

ஆனால் அந்த அமைதியை அப்போது மொத்தமாய் குலைத்தது சாரதியின் அலைப்பேசி! அவன் கடுப்பின் உச்சதொடு, “அந்த இடியட் கணேஷாத்தான் இருக்கும்... அவனை” என்று சொல்லிக் கொண்டே அவளை விட்டு விலகி பேசியை எடுத்து பார்த்தவன், “கணேஷேதான்” என்று சொல்ல 

“நீ பேசாம அந்த கணேஷையே கட்டின்னிருக்கலாம்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள்.

“ஏன் டி...  இந்த கொலைவெறி உனக்கு?!” என்று கேட்டு சிரித்துக் கொண்டே பேசியை எடுத்து அவன் தன் காதில் வைக்க, சில நொடிகளில் அவன் முகம் முற்றிலும் வேறு பரிமாணத்திற்கு மாறியது.

அவன் கணேஷிடம் பேசி முடித்த மறுகணம் அவசரமாய் தன் அறையிலிருந்த டிவியை இயக்க,  வீரா அவன் முக மாற்றத்தைப் பார்த்து குழம்பி, “என்னாச்சு?” என்று கேட்டாள். அவளிடம் அமைதியாய் இருக்கச் சொல்லி சைகை காண்பித்துவிட்டு செய்தி சேனல் ஒன்றை வைத்தான்.

முக்கிய செய்திகளில்... சில மாதங்கள் முன்பு மங்களம் சில்க்ஸ் கடையின் மாடலாக இருந்த பிரபல நடிகை இஷிகா அந்தக் கடையின் நிறுவனரான நாராயணசுவாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகச்  சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில்... இன்று நீதிமன்றத்தில் நாராயணசுவாமி... இஷிகாவின் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருப்பதாக செய்தி வாசிப்பாளர் சொல்லிக் கொண்டிருக்க,

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சாரதியின் முகம் அதிர்ச்சியாய் மாறியது. அவன் அப்போது அந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பதென்று தீவரமான யோசனைக்குள் மூழ்கினான்.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content