You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 39

Quote

39

புத்திக்கூர்மை

சாரதி வீராவை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அவளை தனக்குள்ளாகவே மூழ்கடித்துக் கொண்டிருந்தான். அவளோ ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியாமல் அவனை விலக்கித் தள்ள பார்த்துத் தோற்று போக, அவனோ அவளை கிஞ்சிற்றும் விடுவதாக இல்லை. ஏன்? அதற்கான சிறு அறிகுறிகள் கூட அவனிடம் தென்படவில்லை.

“யோவ் விடுய்யா... தங்கச்சிங்க வந்துட போறாங்க” என்று சொல்லி அவள் தவிப்புற... அவன் அந்த நொடியே அவளை விட்டு விலகி நின்றான்.

அவள் சுதாரித்து அவன் முகத்தைப் பார்க்க நிமிர, “சரி வா சாப்பிட போலாம்” என்று அழைத்தபடியே அறையைவிட்டு வெளியேறி விட்டான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் என்ன மாதரியான மனநிலையில் இருக்கிறான் என்பதையும் கணிக்க முடியவில்லை. அவனைப் பற்றி யோசித்துக் கொண்டே அவள் டைனிங்கிற்கு வந்திருக்க,

அங்கே அவன் அம்மு நதியவோடு கேலியும் கிண்டலுமாய் உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து... அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அப்படியே மௌனமாய் அவனருகில் அமர்ந்தவள் அவனின் முகபாவனையை கூர்ந்து பார்த்துக் கொண்டே உணவருந்தினாள்.

“உன் தட்டைப் பார்த்து கொஞ்சம் சாப்பிடுறியா?!” என்றவன் முறைப்பாய் அவள் காதோரம் சொல்ல, “ம்ம்கும்... எல்லாம் எங்களுக்கு தெரியும்” என்று நொடித்துக் கொண்டாள்.

அப்போது சாரதி அவளைப் பார்த்து முறுவலிக்க,  அவளுக்கோ சற்று பீதியாகத்தான் இருந்தது. எப்போதும் புயலுக்கு பின்தான் அமைதி வரும்... ஆனால் இங்கே அமைதிக்குப் பின் புயல் வருமோ என்று எண்ணிக் கொண்டே உணவை முடித்தவள் அவனிடம் தப்பிக் கொள்ளும் சாக்கில் தங்கைகளிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே அவர்கள் அறைக்குச் சென்றுவிட்டாள். ஆனால் இன்றும் அவர்கள் அறையில் படுத்துக் கொள்வது சாத்தியமில்லையே! தேவையில்லாத சந்தேகங்களும் கேள்விகளும் எழுமே!

ஆதலால் சில நொடிகள் தாமதித்துவிட்டு அவன் அறைக்குள் தயக்கத்தோடே நுழைந்தாள். அதுவும் அவன் என்ன நிலைமையில் இருக்கிறானோ? போதையிலா அல்லது புகை விட்டுக் கொண்டா? என்ற அச்சத்தோடு அவள் உள்ளே வர,

அவள் நினைத்தது போல் அல்லாது அவன் அந்த அறையின் பின்புற கதவின் மீது சாய்ந்து கொண்டு வான்வெளியை வெறித்துக் கொண்டிருந்தான். நடுநாயகமாய் இருந்த வெண்மதியோனை நட்சித்திர பட்டாளங்கள் சூழ்ந்திருக்க, அப்போது வானவீதியே விழாக்கோலம் பூண்டிருந்ததோ என்று எண்ணி வியக்கத் தோன்றியது.

ஆனால் அந்த அழகிய காட்சியை ரசிக்கும் மனநிலையில் அவன் நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை என்று யூகித்தவள் ஓசைப்படாமல் அவன் பின்னோடு வந்து நின்று,

“நான்... அப்படி பேசி இரு... க்க கூடாது...தப்புதான்”  என்று அவள் சொல்லும் போதே அவன் அவள் புறம் திரும்ப, அவளோ வார்த்தைகள் வெளிவராமல் திக்கிநின்றாள்.

“எப்படி பேசி இருக்க கூடாது?” என்றவன் கேட்டுக் கொண்டே அவளை நெருங்க

அவள் சட்டேன்று திரும்பிக் கொண்டு, “அதான் தப்புன்னு ஒத்துக்குறேன்ல... பேசாம இந்த பிரச்சனையை இதோட விட்டுடேன்” என்று படபடப்போடு  அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே...  அவள் எதிர்பாராவிதமாய் பின்னிருந்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போக அவனோ,

“தப்பு செஞ்சது நீ இல்ல...  நான்தான்... நான்தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்” என்றவன் கிறக்கமாய், “ஐம் சாரி... எக்ஸ்ட்ரீம்லி சாரி” என்று சொல்லி அவள் பின்னங்கழுத்தில் முத்தங்களால் ஆராதித்துக் கொண்டிருந்தான். 

“ம்ச்” என்றவள் சலிப்போடு அவனை விலக்கிவிட்டு,

“அப்போ என் மேல உனக்கு கோபமே வரலயா?” என்று வியந்து கேட்க, அவனோ இரும்பைக் காந்தம் இழுப்பது போல அவளை மீண்டும் தன்புறம் இழுத்து அணைத்துக் கொண்டு,

“வராம... பயங்கரமா வந்துச்சு... கோபத்துல என் லேப்டாப் நார்நாரயிடிச்சு... தெரியுமா?!” என்றான்.

அவன் சொல்வதைக் கேட்ட அவள் விழிகள் இரண்டு மடங்கு பெரிதாக அவன் மேலும், “ஆனா அந்த கோபமெல்லாம் ஒரே நிமிஷத்துல காணாம போயிடுச்சு... என் சித்தி என் கையைப் பிடிச்சுகிட்டு அழுத போது” என்று சொல்லி நெகிழ்ச்சியுற்றான்.

அவள் அவன் உணர்வுகளைப் புரிந்தவளாய், “அப்போ நீ சந்தோஷமா இருக்கியா?” என்றவள் கேட்கவும், “ஹ்ம்ம்” என்று தலையசைத்தான்.

மேலும் அவன், “யு நோ வாட்? இத்தனை வருஷத்துல... ஒரு நாள்... ஒரே ஒரு நாள் கூட அவங்க என்கிட்ட இப்படி பேசுனதில்ல... நெவர் அட் ஆல்... ஆனா இன்னைக்கு... எப்படி நடந்துச்சு இதெல்லாம்?!” என்றவன் நன்றியோடு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு தன் தலையை அவள் தோள் மீது சாய்த்து கொண்டான். ஓர் தாயை அணைக்கும் குழந்தை போல!

அவன் உணர்வுகளையும் ஏக்கங்களையும் புரிந்து கொண்டவளாய் அவளும் தன் கரங்களை அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டாள். சில நொடிகள் அப்படியே கிடந்தவன் பின் அவளை விட்டு விலகி தன் கரங்களால் அவள் கன்னங்களை தாங்கிக் கொண்டு,

“எனக்குத் தெரியும்... நீ கோபத்துலதான் அப்படி ஒரு வார்த்தையை சொன்னன்னு... ஆனா அந்த வார்த்தை என்னை கொல்லாம கொன்னுடுச்சு... அப்போதான் புரிஞ்சுது... செக்ஸ்ன்னா என்ன? கற்புன்னா என்னன்னு... நீ சொன்ன வார்த்தையே என்னால தாங்கிக்க முடியல... ஆனா நான்... அப்படிதானே ஒரு வாழ்கையை வாழ்ந்திட்டு இருந்திருக்கேன்... அதை இப்போ யோசிக்கும் போது... எனக்கு ரொம்ப டிஸ்கஸ்டிங்கா இருக்கு... நான் உனக்கு தகுதியானவன் இல்லயோன்னு” என்று அவன் மேலே பேச முடியாமல் அவள் முகத்தைத் தவிப்பாய் பார்க்க,

“அப்படின்னா... என்னை விட்டுட போறியா?!” என்றவள் உடனடியாய் கேட்கவும் அவன் அதிர்ந்து போனான்.

“நெவர்... என்னால உன்னை எந்த காரணத்தைக் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது” என்றவன் சொல்லி முடித்து மறுகணம் அவள் அவன் மீது சாய்ந்து கொண்டு,

“அப்புறம் இன்னாத்துக்கு இந்த தகுதி மண்ணாங்கட்டியை பத்தியெல்லாம் நீ பேசிட்டிருக்க”  என்றாள்.

“கில்டியா இருக்கேடி” என்றவன் வருத்தமாய் சொல்ல,

“ம்ம்கும்... இப்ப வருத்தப்பட்டு... முன்னாடியே இதெல்லாம் யோசிச்சிருக்கணும்” 

“அப்போ எனக்கு இந்த மேரேஜ் மாதிரி கமிட்மென்ட்ல எல்லாம் சுத்தமா நம்பிக்கை இல்ல” என்றான்.

“இதேதான் அந்த இஷிகாவும் என்கிட்ட சொன்னா... அதோட இன்னொன்னும் சொன்னா பாரு” என்றவள் கடுப்பாக,

“என்ன?” என்று யோசனையோடு கேட்டான்.

“ஹ்ம்ம்... நீ அடங்காத குதிரையாம்... ரொம்ப நாளைக்கு உன்னை இப்படி கட்டி வைச்சு மேய்க்க முடியாதாம்... சொல்லிட்டு போறா... அந்த” என்று வீரா வாயிற்குள்ளேயே ஒரு கெட்ட வார்த்தையை கோபமாய் முனக,

“ரிலாக்ஸ்... அவ சொன்னதும் உண்மைதான்... ஆனா நீதான் சாரதிக்கே சாரதியாச்சே!” என்றவன் அவளை இன்னும் இறுக்கமாய் இழுக்க அவள் வெட்கப் புன்னகையோடு தலைகவிழ்ந்து, “போப்யா” என்றபடி அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவள் முகத்தை நிம்ர்தியவன், “இப்படியே எவ்வளவு நேரம்டி பேசிக்கிட்டு இருக்கிறது” என்றவன் ஹஸ்கி குரலில் சொல்லி அவள் உதடுகளை தம் உதடுகளால் உரசிக் கொண்டிருந்தான்.

அவளோ சன்னமாய், “இப்போ கணேஷ் ஃபோன் பண்ணனும்” என்றவள் சொல்ல அவன் அதிர்ந்து, “ஏன்....?. நல்லாதானே போயிட்டிருக்கு” என்றான்.

“இல்ல... ஃபோன் பண்ணா” என்றவள் அவன் கழுத்தை தம் கரங்களால் வளைத்துப் பிடித்துக் கொள்ள, “ஸ்விட்ச்ட் ஆஃப்” என்று சொல்லி அவள் இதழ்களை தம் இதழ்களால் அழுந்த மூடினான். அதற்குப் பின் ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து தொலை தூரம் கடந்து போயினர்.

இம்முறை அவளை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்ற வேகம் அவனிடம் இல்லை. அவளுக்குள் தன்னை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்ற காதலும் தாபமுமே அதீதமாய் இருந்தது.

*********

மீண்டும் இஷிகா நாராயணசுவாமி பற்றிய பேச்சுக்கள் தொலைக்காட்சிகளில் பரபரப்பாகிக் கொண்டிருந்தன. இம்முறையும் இஷிகாவின் சார்பாகப் பேசியவர்கள்தான் அதிகம். அதற்குக் காரணம் அவள் சமீபத்தில் ஓர் சேனலுக்குக் கொடுத்த பரபரப்பு பேட்டிதான்.

யாரும் தன்னைப் போல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே தான் அனுபவித்த பாலியல் சீண்டல்களைச் சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்து கொண்டதாகவும்...  இப்போது அதற்காக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது இந்த சமுதாயத்தில் பெண்களின் அவல நிலை என்றாள்.

மேலும் அந்த வழக்கையும் எதிர்கொள்ளத் தான் தயாராக இருக்கிறேன்.  தன்னால் முடிந்த வரை இதை நீதிமன்றத்திலும் உண்மையென்று நிரூபிக்க முயல்வேன் என்று அவள் தைரியமாகவும் தெளிவாகவும்  சிறு தடுமாற்றமும் இல்லாமல் சொல்ல, அவள் சொல்வது உண்மையாக இருக்கக் கூடும் என்று அவளுக்கு எதிராகப் பேசியவர்கள் கூட எண்ண ஆரம்பித்தனர்.

சரத்திற்கும் அரவிந்திற்கும் இஷிகாவின் துணிச்சல் மிரட்சி கொள்ள வைத்தது. அதுவும் சில மாதர் சங்கங்கள் வேறு அவளுக்காகப் போர் கொடி பிடிக்க, கேஸ் கோர்ட்டில் தீர்ப்பாவதற்குள் நிலைமை அவர்கள் பக்கமே சிக்கலாகிவிடுமோ என்று தோன்றவைத்தது. அவர்கள் வியாபாரத்தையும் இது பாதிக்க செய்யலாம்.

ஆதலாலேயே சரத் நேரடியாய் இஷிகாவைத் தொடர்பு கொண்டு, அவள் வீட்டிலேயே அவளை சந்தித்துப் பேச அனுமதி பெற்றான். அந்த வீட்டின் மேல்மாடியில் ஓர் சிறு தோட்டமே குடியிருந்தது. அந்த இடமெங்கும் வண்ண மலர்களின் அணிவகுப்புகள்... அதனை சரத் கண்டுகளித்தபடி, “வெரி நைஸ்!” என்று பாராட்ட, 

“தேங்க்ஸ்” என்று சொல்லி அவளும் முகம் மலர்ந்தாள்.

அதன் பின் அவன் அவளின் புறம் திரும்பி... அவள் அழகை ஆழ்ந்து ரசிக்கலானான்.

“அந்த மலர்களுக்கும் உனக்கும் பெரிய வித்தியாசமே தெரியல்ல” என்றவன் சொல்ல,

“பேச வந்த விஷயத்தைப் பத்தி மட்டும் பேசலாமே” என்று இஷிகா பளிச்சென்று கேட்டாள்.

சரத் முறுவலித்து, “உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு அத நீயே ஏன் கெடுத்துக்க பார்க்குற” என்க, “என்ன சொல்ல வரீங்க... புரியல” என்றாள்.

அவன் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, “எனக்கு தெரியும்... அந்த சாரதிதான் உன் பின்னாடி இருக்கான்னு...  ஆனா அவன் எவ்வளவு தூரம் உனக்கு சப்போர்ட் பண்ணுவான்னு நீ நினைக்கிற... பேசாம நான் சொல்றதைக் கேளு... கோர்ட்ல ஒழுங்கா சாரதிதான் உன்னை மிரட்டி இப்படி செய்ய சொன்னான்னு சொல்லிடு... உனக்கும் பிரச்சனை வராம நான் பாத்துக்கிறேன்” என்றான் சாமர்த்தியமாக!

அவள் உடனே, “யாரு சாரதி? ஒ!!  எஸ் எஸ்... அந்த சாரதி டெக்ஸ்டைல்ஸ் ஓனர் இல்ல” என்றவள் கேட்க,

“நல்லாவே நடிக்கிற” என்று அடக்கிய கோபத்தோடு சரத் பேசினான்.

“அதானே என் தொழிலே” என்று எகத்தாளமாய் அவனைப் பார்த்து புன்னகைத்தாள் இஷிகா!

“நான் சொல்றத புரிஞ்சுக்கோ இஷிகா... இந்த கேஸ் ஒன்னும் விளையாட்டில்ல... உன் இமேஜ்... இதுவரைக்கும் நீ சம்பாதிச்ச சொத்துன்னு எல்லாம் உன் கையை விட்டுப் போயிடும்... இன்னும் கேட்டா... நீ இந்த கேஸ்ல தோத்துட்டா... வெளிய தலை காட்ட கூட முடியாது... தேவையில்லாம அந்த சாரதியை நம்பி நீ சிக்கல்ல மாட்டிக்காத... சொல்லிட்டேன்” என்றவன் மேலும்,

“மோரோவேர்... உனக்கு என்ன தேவைன்னு சொல்லு... நான் அதை செய்றேன்” என்று தீவிரமாய் சொல்லி முடித்தான்.

“அப்படின்னா... இந்த கேஸ வாபஸ் வாங்குங்க”  என்றாள்.

அவன் அதிர்ச்சியுற்று, “அது முடியாது” என்க,

“அப்போ பிரச்சனை உங்க குடும்பத்துக்குத்தான்” என்றாள் அவள்!

“புரியாம பேசாத... எல்லா பிரச்சனையும் உனக்குதான்... ஒழுங்கு மரியாதையா நான் சொல்றத நீ கேட்டன்னா... உனக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துகுறேன்” என்று அவன் சற்று மிரட்டலாய் உரைத்தான்.

ஆனால் அவளிடத்தில் கொஞ்சம் கூட பதட்டம் இல்லை. புன்னகை ததும்ப அவனை நோக்கியவள், ”ரிலாக்ஸ் பாஸ்... நீங்க பாட்டுக்கு இப்படியெல்லாம் மிரட்டுனிங்கன்னா... நான் பாட்டுக்கு மன உளைச்சளுக்காளாகி...  சூசைட் பண்ண ட்ரை பண்ணிட்டேனா, ஐயோ! அப்புறம் உங்க நிலைமை” என்றவள் பதட்டம் கொள்வது போல் முகத்தை மாற்றிக் கொண்டு சொல்ல அவனுக்கு வியர்த்துவிட்டது.

சரத்தின் பொறுமை தகர்ந்து போக, “என்னடி மிரட்டுறியா?" என்று கோபமாய் கேட்க,

“சேச்சே! லெட்டர்லாம் எழுதி... ஆல்ரெடி கொடுத்து வைச்சிருக்கேன் பாஸ்... அது யாருன்னு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லன்னு நினைக்கிறேன்” என்று சொல்ல அவனுக்கு தூக்குவாரிப் போட்டது.

அவன் அதிர்ச்சியில் மௌனமாய் நிற்க அவளோ, “பேசாம கேசை வாபஸ் வாங்குங்க... அதான் உங்களுக்கு நல்லது” என்றாள் திட்டவட்டமாக.

அதற்கு மேல் அவனால் அவளிடம் எதுவும் பேச முடியவில்லை. அப்படியே பேசினால் ஏதேனும் வம்பில் முடிந்து விடுமோ என்று அச்சம் தொற்றிக் கொண்டது அவனுக்கு. அவள் வீட்டிலிருந்து புறப்பட்ட சரத் இந்த விஷயத்தை அரவிந்திடம் தெரிவிக்க, அவனுக்கு கதிகலங்கியது.

“அந்த இஷிகா ஜஸ்ட் மிரட்டுறா அரவிந்த்” என்று சரத் சொல்ல,

“இல்ல மாமா... சாரதி அவளுக்குப் பின்னாடி இருந்து ப்ளே பண்ணிட்டு இருக்கான்... அவ சொல்ற மாதிரி ஏதாச்சும் லெட்டர் கிட்டர் இருந்து... அந்த சாரதியே அவளைப் போட்டு தள்ளிட்டு நம்ம பேர்ல பழியைப் போட்டா” என்று அரவிந்த் பதட்டம் கொண்டான். சரத் அவனிடம் பொறுமையாக இருக்கச் சொல்ல...  அரவிந்திற்கோ மீண்டும் பெரியளவில் அவனிடம் தோற்றுப் போக விருப்பமில்லை.

அதுவும் இஷிகாவுக்கு பின்னணியில் சாரதி இருந்து அவளை கைபொம்மைமையாக  ஆட்டுவிக்கும் பட்சத்தில் இஷிகாவின் வார்த்தைகள் வெறும் மிரட்டல்தான் என்று இருவராலும் அலட்சியப்படுத்த முடியவில்லை. சாரதி எதையும் செய்யக் கூடியவன்.

வழக்கு நீதிமன்றத்தில் வெல்வதற்கு முன்னதாக ஏதேனும் ஏடாகூடமாய் நிகழ்ந்துவிட்டால் என்று அவர்களுக்குள் அச்சம் பரவ, இருவரும் நிறைய விவாதங்களுக்குப் பின்  ஒரு மனதாய் அந்த வழக்கை வாபஸ் பெற்றனர். கிட்டதட்ட அதுவும் பெரும் சர்ச்சையை மீடியாக்களில் கிளப்பியிருந்தன. நாராயணசுவாமிக்கு  உடல்நிலை மோசமாய் இருப்பதால் இந்த வழக்கை நடத்த முடியாத நிலையென்று ஒருவாறு சமாளித்து விட்டனர்.

சரத் இம்முறை நேரடியாகவே சாரதியின் புத்திசாலித்தனத்தைக் கண்டு பிரமித்துப் போயிருந்தான். அரவிந்திற்கு இது பழகியிருந்தாலும் கஜினியைப் போல் சாரதி மீதான படையெடுப்பை அவன் நிறுத்தத் தயாராயில்லை

சாரதி சரியாய் காய்களை நகர்த்தி அவர்கள் ஆரம்பித்த விளையாட்டை அவர்களையே முடிக்க வைத்துவிட்டான். அதுவே அவனின் புத்திக்கூர்மை! மொத்தத்தில் அவன் குறி இப்போதும் தப்பவில்லை. ஆனால் என்றுமே அப்படி இருந்துவிடும் என்று சொல்வதற்கில்லை.

*********************

சாரதியின் வீடு,

அந்தச் சமையலறை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. முத்து ஒருவாரமாய் விடுமுறையில் சென்றிருக்க, சமையல் வேலையை தானே முன்வந்து கவனித்துக் கொண்டாள் வீரா.

அருமை என்றளவுக்கு அவள் சமையல் இல்லையெனினும் கொடுமை என்றும் சொல்வதற்கில்லை. ஏதோ சமைப்பாள்... ஆனால் அந்த ஏதோவை கூடச் செய்யவிடாமல் அவளை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தான் அவள் ஆருயிர் மணாளன்.

சமைத்துக் கொண்டிருந்தவள் பின்னோடு நின்று அவன் தன் சரசலீலைகளைப் புரிய, “உன்னை யாருய்யா இவ்வளவு சீக்கிரம் ஆபீசில இருந்து வர சொன்னது” என்றவள் கடுப்பாக,

“அது என் அபீஸ்டி... நான் எப்ப வேணா போவேன்.. எப்ப வேணா வருவேன்” என்றவன் சொல்லி... அவன் மேற்கொண்ட சீண்டல்களிலும் அவனைப் பொருட்படுத்தாமல் அவள் தன் வேலையிலேயே மும்முரமாய் இருந்தாள். அவனோ அவள் வேலையைக் கெடுப்பதிலேயே மும்முரமாய் இருந்தான். அதன் விளைவாக அவள் கிண்ணத்தில் கொட்ட எண்ணிய மைதா மாவு சிந்தாமல் சிதறாமல் அந்தச் சமையல் மேடையில் மாக்கோலமாய் மாறியது.

“போடாங்” என்று அவனைத் தள்ளிவிட்டு கோபமாய் அவனை அவள் முறைக்கவும், “கொஞ்ச நேரம் எனக்கு... ஒத்துழைச்சிருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்காதுல்ல டார்லிங்” என்று சொல்லி வஞ்சமாய் புன்னகைத்தான்.

“எனக்கு நல்லா வாயில வந்துர போகுது...சொல்லிட்டேன்” என்று ஆவேசமானவள் அந்த அலங்கோலமாய் கிடந்த மேடையைக் காண்பித்து,

“நான் இதை எப்போ சுத்தம் செஞ்சு... எப்போ சமைச்சு... போயா... ஒரு வேலையை இப்படி பத்து வேலையாக்கிட்டியே” என்று அலுத்துக் கொண்டாள்.

“சாரதி சொல்றத கேட்கலன்னா இப்படிதான்” என்றவன் அலட்சியமாய்  தோள்களைக் குலுக்க, “இப்ப இன்னா வேணும் உனக்கு” என்று கேட்டாள் வீரா.

“ஹாட் அன் ஸ்பைசியா ஒரு கிஸ் கொடு... நான் போயிட்டே இருக்கேன்” என்றவன் அவள் உதடுகளை நெருங்கவும் தன் கரத்தில் ஒட்டியிருந்த மைதா மாவை அவன் முகத்தில் பூசித் தள்ளிவிட்டாள்.

அவன் முகத்தைத் துடைத்துக் கொண்டிருக்கும் போதே, “இன்னும் கொஞ்சம் நேரம் இங்க நின்ன... மிளகா தூளை தடவிடுவேன் பாத்துக்கோ” என்று மிரட்டியவளை படுகோபமாய் முறைத்தவன்,

என்ன செய்திருப்பான் என்று சொல்லவா வேண்டும். கிட்டத்தட்டக் கால் கிலோ மைதா மாவு அவள் தலையில் கொட்டப்பட்டது.

“த்தூ... ம்ம்கும் ம்ம்கும்” என்றவள் அதனைத் துடைத்துக் கொண்டே, “உன் கூட ஒரே ரப்சரா போச்சு... தங்கச்சிங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல ஸ்கூல்ல இருந்து வந்துடுவாங்க... நம்ம ரெண்டு பேரையும் இந்த கோலத்துல பார்த்தா” என்று அழமாட்டாத குறையாய் அவள் சொல்லவும், “அந்த அறிவு என் மூஞ்சில மைதா மாவை பூசுறத்துக்கு முன்னாடி இருந்திருக்கணும் டார்லிங்!” என்றான் வெகு இயல்பாக!

“நான் இப்போ என்ன பண்றது?”

“நான் ஒன்னு சொல்றேன் கேப்பியா?” என்றவன் அவள் முகத்தை அக்கறையோடு துடைத்துவிட, “சொல்லித் தொலை” என்றாள்.

“நாம ரெண்டு பேரும் ஒண்ணா குளிச்சிட்டு... நதியா அம்முவும் வந்த பிறகு ஜாலியா ஹோட்டல் போய் டின்னர் சாப்பிடலாம்... ஓகே வா” என்றவன் சொல்லி அவளை அவன் அணைத்துக் கொள்ள, “ஆணிய புடுங்க வேணாம்... போயிரு” என்றவனைத் தள்ளிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். ஆனால் அவனா விடுவான். அவன்தான் விடாக்கொண்டனாயிற்றே!

அவன் விஷமமாக புன்னகத்துக் கொண்டே மாடியேறப் போனவளை தன் கரத்தில் அலேக்காக தூக்கிக் கொள்ள, அவள் பதிறினாள். ஹம்ம்! அதற்குப் பிறகு அரங்கேறியவை எல்லாம் சமையல் கலைக்கு சம்பந்தமற்ற வேறொரு கலை என்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

அதன் பின் இருவரும் தங்கைகள் வருவதற்கு முன் குளித்து முடித்து அம்மு நதியாவையும் தயாராக்கி அழைத்துக்கொண்டு பெரிய நட்சித்திர ஹோட்டலுக்கு வந்துசேர்ந்தனர். அந்த சகோதரிகள் முவரும் அந்த இடத்தின் பிரமாண்டத்தை பார்த்துப் பிரமித்தனர். சாரதி அவர்களுக்கு பல்வேறு வகையான உணவுகளை ஆர்டர் செய்ய, அவர்கள் மூவரும் அதனைப் பார்த்தே திக்குமுக்காடிப் போயினர்.

அம்முவும் நதியாவும் ஒவ்வொரு உணவையும் ருசித்து அவர்கள் கருத்தை பிரஸ்தாபம் செய்து கொண்டிருக்க, அப்போது சாரதி தன் பேசியில் வந்த அழைப்பைப் பார்த்துவிட்டு, அவர்களிடம் வந்துவிடுவதாக சமிக்ஞை செய்துவிட்டு எழுந்து சென்றான்.

“பேசாம... சாப்பிட்டு கிளம்புங்கடி... நேரமாவுது” என்று வீரா உணவை முடித்து தங்கைகளுக்கு அறிவுரை வழங்கியபடி டிஷ்யுவால் தன் கரத்தைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

சட்டென்று அவள் எதையோ கண்டு கோபம் கொப்பளிக்க அந்தத் திசையிலேயே பார்த்துக் கொண்டிருக்க, அம்முவும் நதியாவும் கூட அவள் பார்த்த திசையில் கவனித்தனர்.

“இவன்... அவன் இல்ல” என்று அம்மு அரவிந்தைப் பார்த்து உரைக்க, “அவனேதான்” என்று உறுதிப்படுத்தினாள் நதியா.

வீரா உடனடியாய் எழுந்து நின்று கொண்டு, “நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்க... நான் வந்துடறேன்” என்றவள் சொல்ல,

“அவன் கிட்ட போய் பேசப் போறியா க்கா?!” என்று நதியா அதிர்ச்சியாக, “பேச போறதில்ல.. செவுலையே ஒன்னு விட போறேன்” என்று சொல்லிவிட்டு தாமதிக்காமல் விரைந்து அரவிந்தை நோக்கி நடந்தாள்.      

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content