You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 40

Quote

40

 காதல் போதை   

ஹோட்டலிலிருந்து திரும்பியதுமே காரை நிறுத்திவிட்டு தன் அறைக்குள் நுழைந்த சாரதி பேசியில் யாருடனோ அளவளாவிக் கொண்டிருந்தான்.

வீரா தன் தங்ககைகளை அவர்கள் அறைகளில் படுக்க வைத்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தாள். அப்போது சாரதி பேசியில் உரையாடிக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல்....

தன் உடையை மாற்றிக் கொண்டு படுக்கையில் சரிந்தாள்.

சாரதியும் சில நொடிகளில் பேசி முடித்து தன் அழைப்பைத் துண்டித்துவிட்டு, "வீரா" என்றழைக்க அவள் பதிலேதும் சொல்லவில்லை. அவன் புறம் திரும்பக் கூட இல்லை.

பின்னர் அவனும் உடைமாற்றிக் கொண்டு அவளை நெருங்கிப் படுத்தவன் அவள் இடையை தன் கரத்தில் வளைத்துக் கொண்டு,

"தூங்குற மாதிரி நடிக்காதடி?" என்றபடி அவள் காதுமடலில் உரசினான்.

அவள் அப்படியே உணர்வற்றவளாய் கிடக்க, "வீரா" என்றழைத்து அவளைத் தன் புறம் திருப்ப அவள் முகத்தில் ஒருவித கலக்கம்.

"அரவிந்த் உன்கிட்ட ஏதாச்சும் பேசினானா?" என்று அவன் அழுத்தமாய் கேட்க அதிர்ந்து அவனைப் பார்த்தாள் அவள்.

சாரதி அரவிந்தை ஹோட்டலில் ஏற்கனவே பார்த்துவிட்டான். ஆனால் வீரா அவனுடன் பேசியதைக் கவனிக்கவில்லை. அதே நேரம் வீரா அரவிந்தை சீற்றமாய் அடிக்க போனாளே ஒழிய பொது இடமான அந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவனை எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு திரும்பினாள்.

அப்போது அரவிந்த் அவளைப் பின்தொடர்ந்து சாரதியைப் பற்றி தெரிவித்த விஷயங்கள் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அவனிடம் அது பற்றி எந்த விளக்கமும் கேட்காமல் அவள் அகன்றாள்.

அந்த எண்ணத்தை மனதில் கொண்டே சாரதியிடம் அவள் மௌனம் காக்க...  அவனுக்கு கோபமேறியது.

"அந்த அரவிந்த் ஏதாவது லூசுத்தனமா உளறினானோ... அதான் நீ இப்படி இருக்கியா?!" என்றவன் கேட்க, அவள் பட்டென தன் இடை மீதிருந்த அவன் கரத்தைத் தட்டிவிட்டு எழுந்தமர்ந்து கொண்டு,

"அவன் உளறினா மாதிரி எனக்குத் தெரியல?" என்றாள்.

சாரதியும் எழுந்தமர்ந்து, "வீரா கம் டூ தி பாயின்ட்... அவன் என்ன சொன்னான்?" என்று கேட்டு அவள் தோள்களைப் பற்ற,

"ஹ்ம்ம்... உன் அருமை பெருமையெல்லாம் சொன்னான்" என்று ஆவேசமாய் பதிலளித்தாள். சாரதி யோசனைக்குறியோடு அமர்ந்திருக்க, அவள் விழிகள்  கூர்மையாய் அவனைத் தாக்கி நின்றன. 

"முறைக்காம விஷயத்தை சொல்றியா?!" என்று அவள் பார்வையைத் தவிர்த்தபடி அவன் கேட்க,

அவள் உஷ்ணமான பார்வையோடு, "நீ அந்த விளங்காதவன்கிட்ட சவால் விட்டுதான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்றான்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் உதடுகள் துடித்தன.

சாரதி மௌனமாகிட சில நொடிகள் அந்த அறையில் நிசப்தம் குடியேறியது.

அதனை உடைத்தவள், "நீ சைலண்டா இருக்கேன்னா அப்போ....  நீ அந்த விளக்கெண்ணை கிட்ட சவால் விட்ட... அப்படிதானே?" என்று வீரா அழுத்தமாய் கேட்க,

"ஹ்ம்ம்" என்றவன் அவள் முகத்தைப் பாராமல் திரும்பிக் கொண்டு தலையசைத்தான். அவள் அந்த நொடியே உடைந்து தன் கரங்களால் தலையை அழுந்திபிடித்துக் கொள்ள,

"வீரா ப்ளீஸ் நீயா ஒரு முடிவுக்கு வராத... நான் சொல்றதைக் கேளு" என்று அவள் கரத்தை விலக்கி முகத்தை நிமிர்த்திப் பிடித்தான்.

"இதுக்கு மேல என்னத்தை சொல்ல போற" என்றவள் தோற்றுப் போன பார்வையோடு கேட்க,

"நான் அரவிந்த்கிட்ட சவால் விட்டது என்னவோ உண்மைதான்... ஆனா அதுக்காக மட்டும் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கலடி... எனக்கு உன்னை பிடிச்சிருந்ததுது... நீ என் மேல காட்டின அன்பும் அக்கறையும் நிரந்தரமா எனக்கு வேணும்னு ஆசைப்பட்டேன்... உன்னை.. உன் தங்கச்சிங்களை... கூடவே வைச்சுக்கணும்னு ஆசைப்பட்டேன்... இதுல... அவனைப் பழிவாங்கணும்கிற எண்ணத்தை விட... உன்னை விட்டுக் கொடுத்துட கூடாதுங்கிற எண்ணம்தான்... எனக்குப் பெரிசா இருந்துச்சு" என்றவன் சொல்லி முடிக்க அவள் முகம் லேசாய் மாறியிருந்தது.

சாரதி மேலும், "அவன் சொன்னான்னு என் காதலை சந்தேகப்படாதே... என்னால அதை தாங்கிக்க முடியாது" என்க, அவன் விழிகளில் பொய்யில்லை என்பதை உணர்ந்தாலும் அவளின் குழப்பம் தீரவில்லை.

அவள் யோசனைக்குறியோடு அவன் முகத்தை ஏறிட்டு,

"சரி அது போகட்டும்... அரவிந்த் அப்பாவை இஷிகாவை வைச்சு அவமானப்படுத்தினது... அவங்க கடையை எரிச்சது... இதெல்லாம் யார் செஞ்சது... நீதானே?!" என்று தீர்க்கமாய் அவள் கேட்க பதில் உரைக்க முடியாமல் அவன் படப்பானான்.

"இதெல்லாம் என்ன மாதிரி பொழப்பு?" என்றவள் அவன் முகத்துக்கு நேராய் பார்த்துக் கேட்க,

இம்முறை அவன் கோபம் கொண்டு, "இட்ஸ் ஆல் பிஸ்னஸ்... நீ தேவையில்லாம இதுல எல்லாம் தலையிட்டுக்காத சொல்லிட்டேன்" என்று இறுக்கமாய் உரைத்தான்.

"கூட்டிக் கொடுக்கறதும் கொளுத்தி விடறதும்தான் உங்க ஊர்ல பிஸ்னஸா?!" என்றவள் கோபமும் எள்ளலும் கலந்த நகைப்போடு கேட்கவும்,

சாரதி சீற்றத்தோடு, "வீரா ஸ்டாப் இட்.... அவங்க என்ன செஞ்சாங்கன்னு தெரியுமா உனக்கு?!" என்று கேட்டான்.

"அப்படி என்ன செஞ்சாங்க? அதுவும் அந்த கடையை கொளுத்துறளவுக்கு... போதாக் குறைக்கு அந்த வயசான மனுஷனைப் போய் அந்த இஷிகாவோட சம்பந்தப்படுத்தி... சே!" என்றவள் அசூயையாய் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"நான் நடந்ததை முழுசா சொல்றேன்... அதுக்கப்புறம் நீ பேசு" என்றான்.

அவள் மௌனமாய் அவன் முகத்தைப் பார்க்க சாரதி நடந்த விஷயங்களை முழுவதையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டான் அவன் செய்தது உட்பட!

வீரா சிலையாய் சமைந்திருக்க சாரதி மேலும், "என்னை தேவையில்லாம தூண்டிவிட்டது அவங்கதான்" என்க,

அவள் அவன் புறம் திரும்பி, "இப்பவும் நீ செஞ்சது சரியில்லதான்" என்றாள்.

"தெரியும்...  ஆனா இந்த வியாபார உலகத்துல.... சர்வைவ் ஆகணும்னா... நாம இதெல்லாம் செஞ்சுதான் ஆகணும்... அன்ட் உனக்கு இதெல்லாம் தலைகீழா நின்னாலும் புரியாது... விட்டுடு!" என்றான் அழுத்தமாக!

"அப்போ... பொய் சொல்லி அநியாயம் பண்ணாதான் இந்த உலகத்துல வாழ முடியுங்கறியா?" அவள் நிதானித்துக் கேட்க,

"அஃப்கோர்ஸ்" என்றவஃ சற்று இடைவெளிவிட்டு, "மறந்துட்டியா... நீயே... ஆம்பிளன்னு சொல்லி நடிச்சுதானடி... என்கிட்ட வேலை வாங்கின" என்றவன் சொல்ல அவள் விழிகள் தணலாய் மாறியது.

"நான் என்னை காப்பாத்திக்கிறதுக்காக சொன்ன பொய்யும்... நீ பிஸ்னஸுங்கற பேர்ல செய்ற அநியாயமும் ஒண்ணாய்யா?" என்று அதிர்ந்து வினவினாள்.

"நீ உன்னை  காப்பாத்திக்க பொய் சொன்ன... நான் அதே போல என் பிஸ்னஸைக் காப்பாத்திக்க பொய் சொல்றேன்... அநியாயம் பண்றேன்... எனக்கு வேற ஆப்ஷனும் இல்ல... இதுதான் இன்னைக்கு ஃபேக்ட்" என்றவன் மேலும்,

"அதர்மம் செஞ்சாதான் தர்மத்தையே நிலைநாட்ட முடியுங்கிறது மகாபாரதத்தில அன்னைக்கே ஃபேக்ட்" என்றான். அவளுக்கு அவனிடம் அதற்கு மேல் என்ன பேசுவதென்றே புரியவில்லை. மௌனமானாள்.

அவளின் மௌனத்தைப் பார்த்தவன் அவள் கரத்தைப் பற்றவும் அதனை உதறிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு அவள் படுத்துக் கொள்ள, ஏக்க பெருமூச்சை வெளியிட்டுக் கொண்டு அவனும் தன் பக்கம் படுத்துக் கொண்டான்.

இத்தனை நாள் சாரதியின் தோளின் மீதே படுத்து உறங்கியவளுக்கு இன்று தலையணையோடு உறக்கம் வரவில்லை.  அவ்வப்போது வீரா அவன் உறங்கிவிட்டானா என்று திரும்பிப் பார்த்து, பின் உறங்கிவிட்டானா என்று மெல்ல எட்டிப் பார்க்க, அவனோ அசைவற்றுக் கிடந்தான்.

அவன் உறங்கிவிட்டான் என்ற முடிவுக்கு வந்தவள் படுத்துக் கொண்டு சத்தம் வராமல் தனக்குள்ளாகவே முனகிக் கொண்டிருக்க, அப்போது சாரதியின் கரம் அவளை அணைத்து பிடித்துக் கொண்டது.

அவள் அதிர்ந்திருக்கும் போதே, "தூக்கம் வரமாட்டேங்குதுடி... ப்ளீஸ்" என்று அவள் காதோரம் சொல்லியபடி அவன் உறக்க நிலைக்குப் போக அவனுக்கான தன் தவிப்பைக்  காட்டிக்கொள்ளாமல்... முகம் மலர்ந்தாள்.

பெண்மைக்கே உரிய கள்ளத்தனம் அது!

சாரதி வாழ்கைப் பாடத்தை  வலிக்க வலிக்க கற்றுக் கொண்டவன். வீராவோ தன் தாய் சொர்ணத்திடம் அடியும் மிதியும் வாங்கி கற்றுக் கொண்டவள். எத்தகைய கடுமையான சூழ்நிலையிலும் இப்படிதான் வாழ வேண்டுமென்று போதிக்கப்பட்டவள். இருவரின் கோணங்களும் பார்வைகளும் முற்றிலும் வேறு வேறாயிருக்க இந்த கோபங்களும் மோதல்களும் இயல்புதான்.

ஆனால் இருவராலும் அந்த சண்டையை சில நிமிடங்களுக்கு கூட பிடித்திருக்க முடியவில்லை. அவன் காதலை மறுதலிக்க முடியாத அதே நேரம் அவனின் கருத்துக்களையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனம் நெருடியது. இரண்டொரு நாட்கள் கழித்து மீண்டும் அவனிடம் அது குறித்துப் பேசினாள்.

சாரதி குரலையுயர்த்தி, "வீரா ப்ளீஸ்... புரிஞ்சுக்கோ...  நடந்தது நடந்ததுதான்... இனி நானே நினைச்சாலும் நடந்ததை மாற்ற முடியாது... அப்படி மாத்தணும் நினைச்சா அது எனக்கே வினையாதான் முடியும்! வேணும்னா... இனிமே இந்த மாதிரி நான் எதுவும் செய்யல... ரைட்" என்றவன் அழுத்தம் திருத்தமாய் சொல்ல, அவள் முகம் தொங்கிப் போனது.

அவன் மனம் தாங்காமல், "சரி இப்ப நான் என்ன பண்ணனுங்கற" என்றவன் கேட்க, அவள் தயங்கித் தயங்கி,

"அரவிந்த் அப்பா கிட்ட ஒரு மன்னிப்பாச்சும் கேளுய்யா" என்றாள்.

"லூசாடி நீ... மன்னிப்பு கேட்டா... எல்லா சரியாயிடுமா?!" என்றவன் அதிர, "சரியாகலன்னாலும் பரவாயில்ல.... மன்னிப்பு கேளு" என்றவள் பிடிவாதமாய் சொல்ல அவனும் அதே பிடிவாதத்தோடு "நெவர்" என்றான்.

அதற்கு பின் வீரா இரண்டு நாட்கள் அவன் முகத்தைப் பார்த்துக் கூட பேசவில்லை. சாரதி தன் பொறுமையிழந்து வலுக்கட்டாயமாய் அவளைத் தொட, அவளோ அவனை நிராகரிக்கவும் செய்யாமல் அவனின் தொடுகையின் உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் மரக்கட்டையைப் போல் கிடந்தாள்.

"வீரா ப்ளீஸ் இப்படி இருக்காதடி... இட்ஸ் ஹர்டிங் மீ" என்றவன் பொறும, அப்போதும் அவள் எதுவும் பேசவில்லை.

"இப்ப என்ன... நான் மன்னிப்பு கேட்கணும்... அவ்வளவுதானே... கேட்கறேன்... கேட்டுத் தொலைக்கறேன்... போதுமா?!" என்றவன் ஆவேசமாய் அவளிடம் கத்த, அவள் அப்போதே கொஞ்சம் இயல்பு நிலைக்கு மாறினாள்.

அன்பும் காதலும் கூட ஒருவிதத்தில் போதைதான். அதுவும் காதல் போதை ரொம்பவும் விபரீதமானது. அதுதான் சாரதியின் இத்தனை வருட கோட்பாடுகளை உடைத்தெறிந்து அவனை அவளுக்காக எந்தளவுக்கும் இறங்கிப் போக துணிய வைத்தது. அந்த போதை இதோடு நிற்காது. இன்னமும் செய்யும்.

அவள் சொன்ன ஒரே காரணத்திற்காக சாரதி நாராயணசுவாமி வீட்டிற்கு வந்திருந்தான். உடன் வீராவும் வந்திருந்தாள். அவன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல்!

அவர்கள் இருவரும் வீட்டிற்குள் நுழையும் போதே நாராயணசுவாமியின் மனைவி சாரதா அவனைப் பார்த்துவிட்டு உக்கிரமானார். அவர் சாரதியின் சட்டையை கொத்தாய் பிடித்துக் கொண்டு,

"ஏன்டா இங்க வந்த... உன்னை யாருடா உள்ளே விட்டது... செக்யூரிட்டி"  என்று கத்த,

"ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க" என்றான் தன் பொறுமையை விடாமல்!

"என்னடா கேட்கணும்... சே... எப்படி டா அவரைப் போய் அசிங்கப்படுத்த மனசு வந்தது உனக்கு... நல்லா இருந்த மனுஷனை இப்படி படுத்த படுக்கையாக்கிட்டியே... நீ நல்லா இருப்பியா?" என்று  ஆவேசமாய் அவர்  மூச்சுவிடாமல் திட்ட வீரா அவரைத் தடுக்க முடியாமல் தவிப்பாய் பார்த்தாள்.

சாரதி முறைப்பாய் அவளை ஒரு பார்வை பார்த்தான். சரத்தோ மேலிருந்து இந்த காட்சிகளைப் பார்த்து நடப்பவற்றை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்க, அப்போது அவன் அருகாமையில் நின்றிருந்த அவன் மனைவி, "இவன் அந்த சாரதிதானே" என்று சீற்றமாய் கேட்க, "ஹ்ம்ம்" என்று ஆமோதித்தான் சரத்.

அவள் உடனடியாய் கீழே செல்லப் பார்க்க, "அனு... வெயிட்... என்ன டிராமா நடக்குதுன்னு நாம இங்கிருந்தே பார்ப்போமே" என்றான்.

"நீங்க எப்படியோ போங்க... அவனை நாலு வார்த்தையாவது நறுக்குன்னு கேட்டாதான் என் மனசு ஆறும்" என்றவள் சொல்ல, "அதான் உங்க அம்மா கேட்கறாங்க இல்ல... நீ நில்லு" என்று சொல்லி அவள் கையை இறுக்கி பிடித்துக் கொண்டான்.

அனுசுயா கடுப்போடு தன் கணவனின் கரத்தை உதற முடியாமல் கீழே நடப்பவற்றை பார்த்த சமயம், "ஆமா யாரந்த பொண்ணு?" என்று குழப்பமாய் கேட்கவும்,

"அவன் வொஃய்ப்" என்றான். ஆரம்பித்திலிருந்தே அவன் பார்வை அவள் மீதுதான் பதிந்திருந்தது. என்ன எண்ணத்தோடு பார்த்திருந்தான் என்பது அவனுக்குதான் தெரியும்.

'இப்ப அரவிந்த் இருந்திருந்தா சீன் இன்னும் நல்லா இருக்குமே!' என்று  சரத் எண்ணிக் கொண்டே தன் பேசியை எடுத்து அரவிந்திற்கு அழைத்தான். அப்போது நடந்தேறிய காட்சிகள் இன்னும் கலவரமாய் மாற,

"நான் அவர்கிட்ட மன்னிப்பு கேட்கணும்" என்று சாரதி பிடிவாதமாய் சொல்ல

"அதெல்லாம் முடியாது... போடா வெளியே" என்ற சாரதா, "செக்யூரிட்டி" என்று சத்தமாய் குரலெழுப்பினார்.

சாரதி அப்போது வீராவைப் பார்த்து, 'இது தேவையா?!' என்பது போல் ஓர் பார்வை பார்க்க இத்தனை நேரம் மௌனியாக நின்றவள் அந்த நொடி சாரதாவின் முன்னே வந்து மண்டியிட்டு,

"ஓரே ஒரு தடவை சாரைப் பார்த்து மன்னிப்பு கேட்டுட்டு போயிடுறோம் ம்மா" என்று கை கூப்பினாள். அவரோ வாயடைத்துப் போனார்.

"என்னடி பண்ற நீ?" என்று சாரதி அவள் கரத்தைப் பிடித்து தூக்கிவிட,

"இப்ப என்ன பண்ணிட்டாங்க... அம்மா வயசுல இருக்கறவங்கதானே... தப்பில்ல" என்றாள்.

அவளின் வார்த்தை சாரதாவின் கோபத்தை மொத்தமாய் இறங்க செய்திட... அப்போது அழைப்பை ஏற்று வாயிலில் வந்து நின்ற காவலாளியை சாரதா போகச் சொல்லி அனுப்பிவிட்டார் .

அதன் பின் அவர் வீராவை நோக்கி,  "இப்ப அவர் இருக்குற நிலைமையில உங்களை பார்த்தா அவருக்கு டென்ஷன்தாம்மா ஏறும்" என்று பொறுமையாக எடுத்து சொல்ல,

"ரொம்ப நேரம்லாம் எடுத்துக்க மாட்டோம்... மன்னிப்பு கேட்டுட்டு உடனே போயிடுறோம்" என்று வீரா கெஞ்சலாய் கேட்க சாரதா பெருமூச்செறிந்து,

"சரி.. நான் அவர்கிட்ட சொல்றேன்... அப்படி அவர் சம்மதிச்சா வந்து பாருங்க" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சில நிமிடங்கள் கழித்து சாரதா அவர்களை அழைக்க சாரதி அவரை எப்படி எதிர்கொள்வதென்று தயக்கத்தோடு அறைக்குள் நுழைந்தான்.

அப்போது படுக்கையில் துவண்டு கிடந்த நாராயணசுவாமியின் நிலையைப் பார்த்து சாரதியின் உள்ளம் நெருடியது.  நெருஞ்சில் முள்ளாய்  குத்தியது. குற்றவுணர்வில் அவன் தலை தரைதாழ்ந்து போக,

"மன்னிப்பு கேட்க வந்திருக்கியாமே" என்று நாராயணசுவாமி படுக்கையில் சாய்வாய் படுத்துக் கொண்டு எகத்தாளமாய் கேட்டார்.

"என்னை...  மன்னிச்சிருங்க முதலாளி" என்று சாரதி சிரமப்பட்டு  அந்த வார்த்தையை வெளிக்கொணர,

"சீ! அப்படி கூப்பிடாதடா... உன் மனசில அந்த எண்ணம் இருந்திருந்தா என்னை இப்படி கேவலப்படுத்திருக்க மாட்டே" என்றவர் ஆக்ரோஷத்தோடு பொங்கினார்.

"கண்டிப்பா மாட்டேன்... நீங்களும் என்னை உங்ககிட்ட வேலை செஞ்ச பையன்தானேன்னு நினைச்சிருந்தீங்கன்னா" என்று அவன் தலைகவிழ்ந்தபடி நிதானமாய் பதிலளிக்க,

"நீ செஞ்சதை நியாயப்படுத்துறியாடா" என்று அவர் ரௌத்திரமாகக் கத்தி இரும ஆரம்பிக்க, சாரதா பதட்டமாய் அவர் நெஞ்சை நீவி, "டென்ஷனாகாதீங்க" என்று அவருக்கு தண்ணீரைப் பருக தந்தார்.

வீரா உடனே, "அய்யோ சார்... நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க...  நாங்க போயிடுறோம்" என்று சாரதியைப் பார்த்து அவள் சென்றுவிடலாம் என்று சமிக்ஞை செய்தாள்.

நாராயணசாமி குழப்பமாய், "ஆமா... யாரும்மா நீ" என்று வினவினார்.

சாரதா அப்போது, "அவன் பொண்டாட்டி போல" என்று மெலிதாக தன் கணவனிடம் தெரிவிக்க,

"உனக்கு கட்டிக்க வேற நல்ல பையனே கிடைக்கலயா?! போயும் போயும் இவனை நம்பி போன உன் வாழ்கையையே குட்டிச்சுவராக்கிடுவான்" என்று முகத்தை சுருக்கிக் கொண்டு வீராவிடம் உரைத்தார் நாராயணசுவாமி.

சாரதிக்கு கோபம் தலைதூக்க வீரா நிதானமான பார்வையோடு, "அதெல்லாம் மாட்டாரு சார்... எனக்குத் தெரிஞ்சு அவர் நம்பினவங்க யாருக்கும் கெடுதல் செஞ்சதில்ல... நல்லவர்னு சொல்ல முடியாட்டியும் கெட்டவர்னும் சொல்ல முடியாது... ம்ச்... நல்ல பொறுப்பான அப்பா அம்மா அவருக்குக் கிடைச்சிருந்தா  இப்படியெல்லாம் அவர் ஆயிருக்கவும் மாட்டாரு" என்றாள்.

அவள் வார்த்தைகளில் சாரதியின் விழிகள் கலங்கிவிட வெகு பிரயத்தனப்பட்டு அதனை அவன் மறைத்துக் கொண்டான்.

சாரதாவும் நாராயணசுவாமியும்...  வீராவின் பேச்சில் வயதுக்கு மீறிய முதிர்ச்சியைப் பார்த்து வியந்து போயினர்.

அப்போது சாரதி வீராவின் கரத்தை அழுந்த பிடித்துக் கொண்டு புறப்படலாம் என்று தலையசைக்க, "இரு ம்மா" என்றார் சாரதா.

அவள் என்னவென்று திரும்பிப் பார்க்க, "குங்குமம் வாங்கிட்டு போ" என்க, வீரா சாரதியை தயக்கமாய் பார்க்க அவன் வெளியே காத்திருப்பதாக சொல்லி சென்றான்.

சாரதா வீராவை பூஜையறைக்கு அழைத்துச் சென்று குங்குமம் வழங்க அப்போது கீழே வந்த அனுசுயா, "என்னம்மா போயும் போயும் இவளுக்கு போய்" என்று கோபவேசமானாள்.

"எதிரியாவே இருந்தாலும் வீட்டுக்கு வந்த சுமங்கலிப் பொண்ணுக்கு... குங்குமம் கொடுக்குறதான் நம்ம வீட்டு வழக்கம்" என்று சாரதா சொல்ல அனுசூயா கடுப்பானாள். வீரா முறுவலித்துக் கொண்டாள்.

"தாலிலயும் வைச்சுக்கோம்மா" என்று சாரதா சொல்லவும் வீரா திருதிருவென்று விழித்துக் கொண்டு அவர்களைப் பார்த்து,

"தாலி இல்லங்க... ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கினோம்" என்றதும் சாரதாவின் புருவங்கள் சுருங்க, "ம்ம்கும் இதுக்கே இவ்வளவு சீனா" என்று கேவலமாய் பார்த்தாள் அனுசூயா.

இவற்றையெல்லாம் ஒரு ஓரமாய் நின்றபடி சரத் பார்த்துக் கொண்டுதானிருந்தான். வீரா வீட்டு வாசலை அடைய...  அங்கே சாரதியும் அரவிந்தும் மாறி மாறி ஒருவர் சட்டையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு நின்று பெரும் கலவரம் செய்து கொண்டிருந்தனர். 

அவள் பதறிக் கொண்டு அங்கே வந்து நின்றாள். சாரதி அவளைப் பார்த்த மாத்திரத்தில் அரவிந்தைத் தள்ளிவிட அவன் சுதாரித்தபடி,

"இந்த மன்னிப்பு கேட்கற சீனெல்லாம் இங்க வேண்டாம்" என்க,

"சீன் எல்லாம் போடல... உண்மையிலேயே மன்னிப்பு கேட்கதான் வந்தோம்" என்று வீரா பதிலளித்தாள்.

அரவிந்த் தன் சட்டையை சரி செய்து கொண்டு, "அப்படின்னா உன் புருஷனை எங்க கடையை எரிச்சதுக்கான பணத்தை வைச்சிட்டுப் போக சொல்லு... பார்ப்போம்" என்க, வீரா சாரதியை தவிப்பாய் பார்த்தாள்.

சாரதி உடனடியாய் தன் செக் புக்கை எடுத்து ஒரு தொகையை எழுதி அரவிந்திடம் நீட்ட அவன் வியப்போடு அதனை வாங்கினான். பிறகு அதிலிருந்த தொகையை  பார்த்துவிட்டு அவன் சாரதியை முறைக்க,

"இப்ப மொத்தமா முடியாது... கொஞ்சம் கொஞ்சமா செட்டில் பண்றேன்... வா வீரா போலாம்" என்று சொல்லிவிட்டு சாரதி காரில் ஏறப் போனான்.

"இந்த பிச்சை காசெல்லாம் எனக்கு வேண்டாம்... மொத்தமா செட்டில் பண்ணுடா" என்று அரவிந்த் செக்கைக் கிழித்து அவன் முகத்திலேயே வீச,

இப்போது வீராவுக்குக் கோபம் பொங்க, "என்னடா ஓவரா பண்ற?" என்று முறைத்தாள்.

"உன் புருஷன் செஞ்சதுக்கு...  வேறென்ன பண்ணுவாங்களாம்" என்று பதிலுக்கு முறைத்தான் அரவிந்த்.

சாரதி வீராவின் கரத்தைப் பிடித்து தடுக்க அவளோ அவனைக் கவனியாமல், "அப்போ நீ செஞ்சதுக்கு... என்ன கணக்கு?" என்றவள் கேட்கும் போதே அவள் விழிகள் கனலாய் மாறியது. அரவிந்த் அவளை ஆழ்ந்து பார்க்க, வீரா மேலும்,

"மறந்துட்டியா... அவரை உயிரோட எரிக்க ஆளை அனுப்புனியே... அந்த கணக்கை செட்டில் பண்ணுடா பார்ப்போம்... அப்புறம் அவரும் உன் கணக்கை செட்டில் பண்ணுவாரு" என்றவள் சொல்ல அரவிந்த் மட்டுமல்ல... சாரதியும் வாயடைத்துப் போய் நின்றான்.

அப்போது வீரா, "போலாம்" என்று சொல்லி சாரதியைப் பார்க்க,

தன் காரில் ஏறப் போனவன் ஸ்தம்பித்து நின்றிருந்த அரவிந்தை பார்த்து,

'நான் அனாதை இல்ல...  எனக்கும் ஆள் இருக்கு' என்று வாய்மொழியில் சொல்லாமல் அரவிந்தை கர்வமாய் ஒரு பார்வை பார்த்தான். 

சாரதி காரை இயக்கிக் கொண்டு வீராவின் கரத்தை நெகிழ்ச்சியாய் பற்றிக் கொண்டு, "இந்த நிமிஷமே செத்தாலும்.... பரவாயில்லடி" என்று உரைக்க,

வீரா அவனை அதிர்ந்து பார்த்து, "கொஞ்சம் காரை ஓரமா நிறுத்தேன்" என்றாள்.

"எதுக்கு?"

"சொல்றேன்" என்றதும் அவன் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு என்னவென்று பார்க்க சுளீரென்று ஓர் அரை விழுந்தது அவன் கன்னத்தில்!

"இனிமே இப்படியெல்லாம் பேசுன... மவனே அவ்வளவுதான்!" என்றவள் சொல்ல சாரதி சிரித்துக் கொண்டே காரை இயக்கிவிட்டு,

"ஹாட் அன்ட் ஸ்பைசி டார்லிங்" என்று ஒருபக்க கன்னத்தை தேய்த்துக் கொண்டே உரைத்தான். 

"என்னய்யா நீ...  வெட்கமே இல்லாம அடிச்சதைக் கூட ரசிக்கிற" என்று சொல்லி அவள் தலையிலடித்துக் கொண்டாள்.

"நீ எது செஞ்சாலும் ரசனையா இருக்கேடி! அன்னைக்கு பண்ண மைதா மாவு பாத் மாதிரி" என்றவன் அவளைப் பார்த்து கண்ணடித்து கல்மிஷமாய் சிரித்தான்.

"சீ... போய்யா!" என்று அவள் நாண அவள் முகம் அந்தி வானமாய் சிவந்தது.

akila.l has reacted to this post.
akila.l
Quote

Super!

You cannot copy content