You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 45(Final)

Quote

45

நல்ல மாற்றத்திற்கான அறிகுறி

சரியாக ஐந்து வருடங்களுக்குப் பிறகு....

பல பிரச்சனைகளை அசாதாரணமாய் கடந்து வந்த வீரமாகாளியை  கதறவிட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். அவன்தான் கண்ணன். சாரதி வீராவின் ஒரே புதல்வன். சாரங்கபாணி தெய்வானையின் செல்லப் பேரன். அம்மு நதியாவிற்கு செல்ல மகன்... அவன் சேட்டைகளை சமாளிக்க முடியாமல் வீரா திக்கித் திணற, “அம்மா ம்மா ம்மா” என்று அவன் கத்திக் கொண்டு தன் சித்திகள் பின்னோடு சென்று ஒளிந்து கொண்டான்.

நதியவோ, “அக்கா வேணா க்கா” என்று கெஞ்ச, “பாவம் க்கா கண்ணா” என்று கூட சேர்ந்து பரிந்து கொண்டு வந்தாள் அம்மு.

“ஒழுங்கா இரண்டு பேரும் தள்ளிப் போயிடுங்க... இல்ல உங்களுக்கும் சேர்ந்து அடி விழும்” என்றவள் மிரட்ட அம்முவும் நதியாவும் அவனை  விட்டுக்கொடுப்பதாக இல்லை. கண்ணனும் அவர்களை விட்டு அசைந்து கொடுப்பதாக இல்லை. சில நொடிகள் நின்று யோசித்த வீரா பின் பாரபட்சம் பார்க்காமல் மூவரையும் வெளுத்து வாங்கிவிட்டாள்.

 புயலுக்குப் பின் அமைதி என்பது போல் அந்த வீடே அதன் பின் நிசப்தமாய் மாற மூவரும் முகப்பறையில் கப்பல் கவிழ்ந்த நிலையில் கன்னத்தை தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்து திரும்பிய சாரதி அவர்கள் முகபாவனையை  பார்த்து,

“என்னாச்சு?” என்று வினவ, மூவருமே பதிலளிக்கவில்லை.

என்ன நிகழ்ந்திருக்கும் என்று தானே கணித்தவன், “சரி... யார் அடி வாங்கினது? அதையாச்சும் சொல்லுங்க” என்றான்.

அப்போது அம்மு, “மூணுபேரும்தான்” என்று பதிலளிக்க அவன் சத்தமாய் சிரிக்கத் தொடங்க,

 “என்ன மாமா சிரிக்கிறீங்க... போய் அக்காகிட்ட கேளுங்க?” என்று அம்மு கோபமானாள்.

 “எதுக்கு... உங்க வரிசையில என்னையும் உட்கார சொல்றீங்களா?” என்று அவன் அலட்டிக்  கொள்ளாமல் சொல்லிவிட்டு மேலே தன் அறை நோக்கி நடக்க... அவர்கள் மூவரின் வழக்கு மொத்தத்தில் விசாரிக்கப்படாமலே தள்ளுபடியானது.

சாரதி தன் அறைக்குள் நுழைய வீரா மும்முரமாய் களைந்திருந்த பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். அந்த அறையின் பரிதாப நிலையைப் பார்த்தவனுக்கு நடந்த சம்பவங்களின் காரிய காரணம் நன்றாகவே விளங்கியது. அவன் கதவை அடைக்கும் சத்தம் கேட்டுத் திரும்பியவள் அவனிடம் கண்ணன் செய்த சேட்டைகளைப் பற்றிய வசைப்பாட்டை பாட ஆரம்பிக்க  அவன் சிரித்த மேனிக்கு அதனைக் கேட்டு கொண்டான். சஷ்டி கவசம் போல் தினமும் அவள் பாடும் கண்ணன் கவசம் அது. அதனைக் கேட்டு கொண்டே உடையெல்லாம் மாற்றியவன்,

“உன் பையன் உனக்குக் கொஞ்சமும் சளைச்சவன் இல்லடி?” என்று அவசரப்பட்டு வாயை விட.. அந்த வார்த்தைகளைக் கேட்ட நொடி அவள் உக்கிர கோலத்தில் அவனை கொதிப்போடு பார்த்தாள்.

அதோடு அவள் மீண்டும் தன் திருவாயைத் திறக்க எத்தனிக்க அவன் சாதுரியமாய் அவளை மேலே பேசவிடாமல் அவள் உதடுகளைப் பூட்டிவிட்டான். வெகு சில நொடிகள்தான் எனினும் தணலாய் தகித்துக் கொண்டிருந்த அந்த எரிமலை ஐஸ்மலையாய் தணிந்து போனது.

 அதற்குப் பிறகு மௌன பாஷையில் காதல் லீலைகளைப் புரிந்தபடியே இருவரும் சேர்ந்து அவர்கள் அறையைப் பழைய நிலைக்கு மாற்றியிருந்தனர்.

வீரா வேலை முடிந்த திருப்தியில் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு,  “சரி... நான் போய் உனக்கு காபி எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லி அவள் செல்ல பார்க்கச் சாரதி அவள் கரத்தை பற்றிப் போகவிடாமல் தடுத்ததோடு அல்லாமல் அவளை அருகில் அமர்த்தினான்.

“விடுய்யா போதும்... தங்கச்சிங்க வெளிய இருக்காங்க” என்றவள் நாணத்தோடு சொல்ல, “ஐயோ... அதில்லடி... நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றான்.

“இன்னாது?!” என்றவள் கேட்கும் போதே,

அவன் தன் பேகிலிருந்த செய்தித்தாளை அவளிடம் கொடுத்தான்.

அவள் சலிப்போடு, “இன்னா மேட்டர்?” என்று கேட்க, “படி டி” என்றான்.

வீரா அவன் காட்டிய செய்தியை படிக்கலானாள். படிக்கப் படிக்க அவள் முகம் பிரகாசிக்க உதடுகள் தம் அளவுகளைக் கடந்து விரிந்தது. பூரிப்போடு பேச வார்த்தையின்றி அவனை அவள் பார்க்க,

 “இதெல்லாம் உன்னாலதான்” என்றான் அவன்.

அவள் மறுப்பாய் தலையசைத்து, “ம்ஹும்... நான் எதுவுமே பண்ணல... நீதான் எல்லாத்துக்கும் காரணம்” என்றாள்.

அவனோ, “நீ சொன்னததானே நான் செஞ்சேன்... இதோட எல்லா க்ரெடிட்டும் உனக்குதான்?” என்றவன் மேலும்,

 “உண்மையிலேயே இது ஒரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறி” என்று சொல்ல அவள் விழிகள் இன்பத்தில் கண்ணீரை உதிர்த்தன. தான் பட்ட துன்பத்தை யாரும் அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு அவள் சொன்னது. அவன் மூலமாக சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ய்யா“ என்றவள் நெகிழ்ந்து கூறி அவன் தோள் மீது சாய்ந்து கொள்ள, “எனக்கும்தான் வீரா... நாம விதைச்ச விதை இப்போ விருட்சமா மாற ஆரம்பிச்சிருக்கு” என்று சொல்லி அவளை அணைத்துக் கொண்டான்.

சாரதி சொன்னது போல் அவன் விதைத்த விதைதான் அது. சரியாய் நான்கரை ஆண்டுகள் முன்பு... கிறிஸ்டீனா மரணித்த பின்னர் அவரின் இறுதி சடங்கை சாரதி ஏற்றுச் செய்த கையோடு... எதிர்பாராமல் அவன் கைக்கு சில சொத்து பத்திரங்கள் வந்து சேர்ந்தன. அது கிறிஸ்டீனா சாரதி பெயரில் ஆரம்பித்திருந்த டிரஸ்ட் குறித்த பத்திரங்கள். அதன் மேலாளராக அவனையே நியமித்திருந்தார் கிறிஸ்டீனா.

அதனை தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டவன் பல ஏழை ஆதரவற்ற குழந்தைகளுக்கும் மாற்றுத் திறனாளியாய் உள்ள குழந்தைகளுக்கும் தானே முன்னின்று படிப்பு செலவு உட்பட ஏனைய செலவுகளை ஏற்றுச் செய்து கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில்தான் வீரா ஓர் யோசனை சொன்னாள்.

“ஆம்பள பசங்களுக்கு படிப்பு மட்டும் போதுமா இருக்கலாம்... ஆனா பொம்பள பசங்களுக்கு அது மட்டும் போதாது” என்றவள் ஆதரவற்ற பெண் குழந்தைளுக்கு இலவசமாய் தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்றாள்.

அவள் சொன்னதை ஏற்றவன் உடனடியாய் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தன் உதவி நிறுவனம் மூலமாய் படிக்கும் அனைவருக்கும் பாலினம் பேதமின்றி தற்காப்பு கலையைப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்திருதான். அது சம்பந்தமான ஒரு செய்திதான் அவர்கள் இருவரையும் இப்போது இன்பத்தில் திளைக்க செய்தது.

“ஓடும் ரயிலில் தவறுதலாய் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறிய ஓர் இளைஞன்... அந்தப் பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்த  பார்வை குறைபாடுடைய பதினைந்து வயது பெண்ணின் மீது தவறான நோக்கத்தோடு கை வைக்க அந்தப் பெண் அதனை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட மறுகணம் அவன் விரல்களை அழுந்தப் பற்றி முறித்து அவன் கரத்தை பின்னோடு வளைத்து மண்டியிடச் செய்தாள். அவள் தாக்குதலில் அந்த இளைஞன் திக்குமுக்காடிப் போனான். அதோடு அந்தப் பெண் அவனை விடாமல் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தாள். அந்தப் பெண்ணின் துணிச்சலைக் கண்டு எல்லோரும் வியந்து பாராட்ட இது பற்றி அந்தப் பெண்... பத்திரிக்கைகளிடம் சொன்னதாவது,

  “நான் சாரதி டிரஸ்ட் மூலமா படிக்கிறேன்... எனக்கு தேவையான எல்லாத்தையும் அவங்க செய்றதில்லாம இலவசமா தற்காப்புக் கலை கத்து கொடுத்திருக்காங்க... அதனால்தான் இன்னைக்கு என்னால அவனை தாக்கவும்  முடிஞ்சது... என்னோட இயலாமையைக் கடந்தும் என்னை  காப்பாத்திக்கவும் முடிஞ்சது... அன்ட் எல்லாருக்கும் இப்ப புரிஞ்சிருக்கும்...வீ... ஆர் ... நாட்... வீக்கர் செக்ஸ்” என்று கம்பீரமாய் உரைத்தாள் பதினைந்து வயதே ஆன அந்த மாற்றுத்திறனாளி பெண்! (பின்குறிப்பு:மும்பை உள்ளூர் ரயிலில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் பெட்டியில் நடைபெற்ற ஓர் உண்மை சம்பவத்தை தழுவியே இந்தக் காட்சி  எழுதப்பட்டது)

வீரமும் துணிச்சலும் வயதையோ உடல் பலத்தையோ சார்ந்தது மட்டுமல்ல என்பதற்கான சிறந்த சான்று அந்தப் பெண்ணின் பதிலுரை.

*மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்*

*********சுபம்*********

baminikani and akila.l have reacted to this post.
baminikaniakila.l
Quote

Hi

Quote

Hi u r story very nice I like this story❤❤❤❤😍😍😍🌷🌷🌷🌷🌷🌷

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from Guest on January 22, 2024, 11:02 PM

Hi u r story very nice I like this story❤❤❤❤😍😍😍🌷🌷🌷🌷🌷🌷

Thank you

Quote

Very nice and impressive story 👍

You cannot copy content