You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

En Iniya Pynthamizhe - 1

Quote

1

விவசாயம் என்பது மனிதனுக்கும் நிலத்திற்குமான ஆழமான உறவு. அதுவே மனிதனின் அதிமுக்கியமான முதனிலைத் தொழிலும் கூட. இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துக்கொள்கிறான்.

உணவுக்கும் தண்ணீருக்கும் அங்கும் இங்குமாக ஓடித் திரிந்தவன் நதிகரையோரங்களில் தங்கி தனக்கான உணவுப் பொருட்களை தாமே விளைவித்து விவசாயம் என்னும் புது யுக்தியைக் கற்றுத் தேர்ந்தான். அங்கிருந்துதான் மனிதன் நாகரிக வாழ்க்கைக்குப் பரிணமிக்கிறான்.

இதில் வேளாண்மை சிறக்கவும் நாகரிகம் தழைத்தோங்கவும் முக்கிய அடையாளமாக விளங்கியதுதான் அந்தந்த இடங்களில் பாயும் ஆறுகள்.

நதிநீர் படுகையில்தான் ஆரம்ப கால மனித வாழ்வின் அடையாளங்கள் தொல்லியல் எச்சங்களாகக் கிடைக்கின்றன.

அத்தகைய வகையில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும், விவசாயத்திற்கு ஆதாரமாகவும் திகழ்கிறது நொய்யல் ஆறு!

வெள்ளையங்கிரி அடிவாரத்தில் தோன்றிய ஓடைகள் இணைந்துதான் நொய்யலாக பிறப்பெடுக்கிறாள். அவள் பருவமெய்திய பெண்ணவளின் கொலுசொலி சிணுங்கல் போல் சலசலப்போடு பாய்ந்து படர்ந்து வருகிறாள்.

ஆனால் நகர கழிவுகள், மணற் கொள்ளை, சாயப்பட்டறையின் கழிவுகள் என அவள் வரும் பாதையெங்கும் அவளின் தூய்மையைக் கெடுத்து வனப்பை அழித்து பின் நீராதாரம் விவசாயம் என்று அவள் எதற்கும் யாருக்கும் உபயோகம் இல்லாமல் மனம் நொந்து காவிரியில் தம் பயணத்தை முடித்து கொள்கிறாள்.

அவ்விடத்தில் அமைந்துள்ள நொய்யல் கிராமத்திலிருந்தே... நம் கதையின் பயணம் தொடங்குகிறது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கு திரும்பினாலும் பச்சை பசலென்று... காட்சியளிக்க இடையில் தென்னை, அரசு, வேப்ப மரங்கள் என வழியெங்கும் இயற்கையின் சர்வாதிகாரங்களே!

அந்த அதிகாலைப் பொழுதில்... கூடடைந்த பறவைகள் யாவும் கிறீச்சென சத்தமிட்டு வானை நோக்கி சுற்றிச்சுற்றி பறந்து வண்ண கோலமிட,

காணக்கிடைக்காத வண்ண மலர்களின் அணிவகுப்பாகப் பூந்தோட்டங்கள், நாணிக்கொண்டிருக்கும் புதுப்பெண் போல அறுவடைக்கு காத்திருக்கும் நெல்மணிகள் என எங்கு பார்த்தாலும் பசுமை! பசுமை! பசுமை! மட்டுமே.

ஆனால் இத்தனை அழகையும் விட்டுவிட்டு மனிதன் இயந்திரத்தனமான நகர்புற வாழ்க்கையைத் தேடி ஓடுகிறானெனில் அது வெறும் பணத்திற்காக மட்டுமல்ல... என்னதான் காலை முதல் இரவு வரை ஓடி ஓடி மாடாக உழைத்தாலும் நகரத்து மக்களுக்கு கிடைக்கும் மரியாதையும் சன்மானமும் இங்கே யாருக்கும் கிடைப்பதில்லை.

கிராம மக்களின் பிரதான தொழிலான விவசாயமும் பால் கொள்முதலும் அந்தளவுக்காய் லாபம் ஈட்டி தருவதுமில்லை. ஒருவாறு செலவுக்கும் வரவுக்குமாக சரியாகயிருந்தது. இதற்கிடையில் சூதாட்டம் போல வானிலை மாற்றங்கள் அவர்கள் வரவிலும் வாழ்க்கையிலும் கூட விளையாடிவிடுகிறது.

இதில் ஓய்வில்லாத உடல் உழைப்பு மட்டுமே அவர்களுக்கு எஞ்சி நிற்க, நாளடைவில் ஒருவித சலிப்புத்தன்மை அவர்களை ஆக்கிரமித்து கொள்கிறது. தன் மகனுக்கும் மகளுக்கும் இந்த நிலை வேண்டாமென்று யோசிக்க வைக்கிறது.

மதுசூதனனும் அப்படியான கனவுகளை சுமக்கும் ஒரு சாதாரண விவசாய குடிமகன்தான். தன் மூன்று பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து அவர்களை நல்ல உத்தியோகத்தில் பார்க்க வேண்டுமென்பதுதான் அவரின் நீண்ட நெடிய கனவு.  

கண்ணார அவர்கள் உயர்ந்த நிலையிலிருக்கும் காட்சியைப் பார்த்துவிட மாட்டோமா என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு விடியலிலும் அவர் தன் நிலத்தில் ஓய்வின்றி உழைத்து கொண்டேயிருக்கிறார். அவர் மனைவி சகுந்தலாவும் அவருக்குக் கொஞ்சமும் சளைத்தவர் இல்லை.

மூன்று கறவை மாடுகளும் இரண்டு காளை மாடுகளையும் வைத்து கட்டி மேய்பதோடு அல்லாமல் குடும்பத் தலைவியாக வீட்டு வேலை சமையல் வேலை எனப் பம்பரமாகச் சுழன்றுக் கொண்டே வீட்டின் முன்பாக சிறிய டீ கடையையும் வைத்து நடத்தி பிள்ளைகளின் கல்விக்கு சில்லறைகளைச் சேர்க்கிறார்.

அவர்களின் ஒரே சந்தோஷமெல்லாம் குழந்தைகளின் படிப்புதான்!

மதுசூதனன் சகுந்தலா தம்பதிகளும் தங்கள் மூன்று பிள்ளைகளையும் அந்த கிராமப்புறத்தை ஒட்டியுள்ள பெரிய தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.

எப்போதும் காலை நேரம் அவர்கள் வீட்டில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சகுந்தலா நான்கு மணிக்கே எழுந்து பால் கறப்பதில் தொடங்கி காலை உணவு மதிய உணவு எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு டீ கடையில் போய் நின்றுவிடுவார்.

"சக்கு க்கா கொஞ்சம் டீ குடுங்" என்று சொம்போடு சில மகளிர்கள் ஒருபுறம் நிற்க, "டீ ஒன்னு போடுங்க அம்மணி" என்று தேநீர் அருந்த ஆடவர்கள் வந்து காத்திருப்பர். இப்படியாக காலையும் மாலையும் வியாபாரம் களைகாட்டும்.

இதற்கிடையில், "காசு வேணுங்க் ம்மா" என்று வந்து நின்றாள். சகுந்தலாவின் மூத்த புதல்வி!

"எதுக்கு கண்ணு? அதான் நேத்தே பஸ் பாஸ் வந்திருச்சு இல்ல" என்று சகுந்தலா கேட்க,

"நோட்டு வாங்கோணுமா?" என்று அவள் தயக்க பார்வையுடன் உரைக்க,

"காலம்பறதான் நோட்டு வாங்கோணோம்னு ஒம்பட நியவாத்துக்கு வருமாக்கும்... பள்ளிக்கூடம் துறக்கும் போதே நோட்டு புஸ்தகமெல்லாம் கொடுக்கிறாவுங்கல... அதையெல்லாம் என்னத்த பண்ணவ" என்றவர் கடுப்புடன் கேட்டார்.

"அது வேறங்... இது தனியா வாங்கித்தான் ஆகோணுங்கம்மா" என்று அவள் அவசரப்படுத்த அவளை முறைத்து பார்த்தவர்,

"இங்கன எங்க... இனிமேதான் வியாவாரமே... போய் ஒன்ற அய்யன் கிட்ட கேளு" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

"அய்யன் அப்பவே காட்டுக்குப் போயிட்டாங்... நேராமாவுதுங்க ம்மா... சீக்கிரம் காசு கொடுங்க" என்றவள் நின்ற இடத்திலேயே கதகளி ஆடிக் கொண்டிருக்க,

சகுந்தலாவிற்கு எரிச்சல் மூண்டது. கல்லாவிலிருந்த சில்லறைகளை எல்லாம் பொருக்கி எடுத்து, "இந்தா..." என்று அவள் கையில் வைத்துவிட்டு, "பார்த்து பத்திரமா போவோணும்" என்று மூன்று பிள்ளைகளையும் வழியனுப்பி ஒரு நீண்ட நெடிய பெருமூச்சொன்றை வெளிவிட்டவர்,

"என்னத்த பள்ளிக்கூடம் நடத்திறாவுங்களோ... அதை வாங்கணோம்... இதை வாங்கணோம்னு எப்ப பாரு" என்று அங்கலாய்த்து கொண்டே தேநீர் தயாரிக்கும் தன் பணியில் இறங்கினார்.

பைந்தமிழ்! சகுந்தலாவின் மூத்த புதல்வி. நிறத்தில் கருப்பு அவள். அதுவும் அழகான கலையான கருப்பு. அந்த கருப்பு நிறம்தான் அவளின் மொத்த அழகே. அவற்றோடு அவள் கருவிழிகளும் கன்னத்தின் குழியும் அவள் முகத்தை இன்னும் அழகாக மிளிர செய்தன.

அவளைப் போலவே அவள் கூந்தலும் கைக்குள் அடங்காமல் கரிசல் காடு போல சுருட்டிக் கொண்டிருக்க, அதனை இழுத்து வாரி ஜடையாகப் பின்னலிட்டு கொள்வதற்குள் அவளுக்கு நாக்கு வெளியே தள்ளிவிடும். இருப்பதிலேயே அவளுக்கு மிக கஷ்டமான பிடிக்காத வேலையும் அதுதான். ஆனாலும் ஒவ்வொரு பக்க ஜடையும் பின்னிக் கொண்ட இரு கருநாகம் போல அத்தனை அடர்த்தி.

இதெல்லாம் தாண்டி அவளின் புன்னகை சிந்தும் செம்மாதுளை இதழ்களில் அழகாகத் தெரியும் அந்த முத்து பல்வரிசை அவள் முகத்திற்கு தனி ஒளியூட்டும். ஆனால் தற்போது அவள் முகத்தில் அத்தகைய ஒளி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவள் பாட்டுக்கு 'வாழ்வே மாயம்' பாட்டின் சோக பீஜியம் கொடுத்து கொண்டே நடந்து வர, அவள் அருகில் வந்த தங்கை தமிழ்செல்வி, "இதுக்கெல்லாமா இம்புட்டு சோகமா இருப்பாய்ங்க்... விடுங்க்கா... நம்ம அம்மாதானே" என்று சமாதானம் சொல்ல,

"நான் ஒன்னும் அதுக்காவ எல்லாம் சோகமா இல்ல.... நோட்டு வாங்க கொடுத்த காசு பத்தாது... இதுக்கே இப்படி வஞ்சிட்டு அனுப்பி விட்டாய்ங்க... இதுக்கு மேல கேட்டேன்னு வைய்யு... என்னை வச்சு ஆஞ்சுபுடுவாய்ங்களாக்கும்" என்றவள் முகத்தைச் சுருக்கினாள்.

அவள் சொன்னதில் செல்வியும் வருத்தம் கொள்ள தம்பி தமிழரசனின் கவலையே வேறு.

"அப்போ மீதி காசுல எனக்கு குச்சி ஐஸ் வாங்கித் தரமாட்டிங்களாக்கும்" என்று கேட்டானே ஒரு கேள்வி!

பைந்தமிழ் முகம் கடுகடுக்க, "மீதி காசுல குச்சி ஐஸ் வேணுமாக்கும்... அவன் மண்டையிலேயே நங்குன்னு ஒரு கொட்டுப் போடுடி" என்று தங்கையிடம் சொல்ல செல்வியும் செவ்வென அப்பணியைச் செய்து முடித்தாள்.

"அம்ம்மாஆஆஆஆ" அந்த இடமே அதிருமளவுக்காய் அரசன் அலறிவிட்டு, "அம்மாகிட்டயே சொல்றேன்" என்று கோபித்துக் கொண்டு முன்னே நடக்க, அக்காவுக்கும் தங்கைக்கும் சிரிப்பு தாங்கவில்லை. இப்படியான சேட்டைகள் எப்போதும் இவர்களுக்கு இடையில் வழக்கமாக நடப்பதுதான்.

பைந்தமிழ் பதினொன்றாம் வகுப்பிலிருக்க, செல்வி ஒன்பதாம் வகுப்பும் அரசன் ஐந்தாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தான். தமக்கைகள் இருவரும் கடைக்குட்டி என்று அவனை செல்லம் கொஞ்சவும் செய்வார்கள். அதேநேரம் கோபம் வந்தால் இரண்டு பேருமாக சேர்ந்து அடி பின்னியும் எடுத்துவிடுவார்கள்.

அதற்கு முக்கிய காரணம் அவன் ஒரே ஆண் வாரிசு என்று சகுந்தலாவும் மதுசூதனனும் அவனைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாட, இதனால் தமக்கைகள் இருவருக்கும் ஏகத்துக்கும் அவன் மீது கடுப்பு.

அவன் அழுது கொண்டே செல்வதைப் பார்த்து அந்த பாசமலர் அக்காள்களுக்கு தற்போது கொஞ்சமே கொஞ்சம் பாவமாக இருந்ததில் தம்பியின் அருகில் வந்தவர்கள், அவனை இருப்பக்கமாக வளைத்து இடித்து கொண்டே, "சரி விடுறா விடுறா... இதெல்லாம் வீரனுக்கு ஜகஜமாக்கும்" என்றவனை கலாய்த்து கூடவே கொஞ்சிக் கெஞ்சி சமாதானம் செய்துவிட்டனர்.

இப்படி ஆர தீர மூவரும் கதையடித்து கொண்டே வந்தவர்கள் பேருந்து வருவதை பார்த்து,

"யக்க்க்க்க்கா... பஸ்" என்று செல்வி கூவ, தோளில் அந்தப் பெரிய மூட்டையை... அதாவது ஸ்கூல் பையைத் தூக்கிக் கொண்டு அடித்து பிடித்து ஓடி ஒரு வழியாக பேருந்தில் ஏறிவிட்டனர்.

"என்னத்துக்கு இந்த ஒட்டம் ஓடியாறது... நேரத்தோட வூட்டுல இருந்து கிளம்பி வந்திருக்லாம்ல" என்று நடத்துனர் எகத்தளமாகக் கேட்கவும் பைந்தமழுக்கு கடுப்பானது.

"ஏனுங்... நீங்க ஒரு வாட்டியாச்சும் நேரத்தோட வண்டி எடுத்துட்டு வந்திருக்கீங்களா?" என்று அவளும் பதிலுக்குக் கேட்டு வைத்தாள். அந்த பேருந்தில் உள்ளவர்கள் எல்லாம் சத்தமாகச் சிரித்துவிட நடத்துனரின் முகம் சிறுத்து போனது.

"இத்துன்னுன்டு இருந்துக்கிட்டு இத்தாச்சோட்டு பேசுறாளே" என்று முனங்கி கொண்டே அங்கிருந்து அவர் நழுவி விட்டார்.

அதுதானே பைந்தமிழ். எதிரே நிற்பவர்கள் யாராக இருந்தாலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனப் பேசும் ரகம் அவள். முடிவெடுப்பதிலும் கூட அப்படிதான்.

பைந்தமிழ் தங்கை தம்பிகளுக்கு இடம் கொடுத்துவிட்டு அவள் நின்று கொண்டு வர, அவள் பேகையும் புத்தகத்தையும் செல்வி வாங்கி வைத்து கொண்டாள்.

அப்போதுதான் எதச்சையாக தமிழின் புத்தகத்திலிருந்து கடைசிப் பக்கத்தைப் பிரித்து பார்த்த செல்வி, "இது என்னங்க க்கா?" என்று வினவ, அவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

செல்வி அதை படிக்க தொடங்கவும்தான் அவளுக்கு கொஞ்சமாக விளங்க தொடங்கியது.

"என்... கரூ... வாச்சை காவயா மே..."

உன்... கா... ன்னத்தி குழியல காலாத்தக்கு கிட... க்குனா ம்டி" என்று செல்வி தப்பும் தவறுமாக இருந்த அந்த காதல் கிறுக்கல்களைத் திக்கித் திணறி படிக்கும் போதே தமிழ் அதனைப் பிடுங்கிக் கொண்டாள்.

"புறம்போக்கு... எருமை பன்னி" என்று திட்டிய தமிழின் கண்கள் கோபத்தில் சிவந்தன. உதடுகள் அவமானத்தில் துடித்தன.

செல்வி சிரிப்பு தாங்காமல், "யாருங்க்கா அந்த கருவாச்சி காவியம்" என்று கேட்க, "அதான்... அந்தப் பேச்சி கிழவியோட உருபுடாத பேரன்... ராமசந்திரன்" என்று நறநறவென பல்லைக் கடித்து கொண்டே உரைத்தாள். அப்போது மட்டும் அவன் சிக்கியிருந்தால் அவனையும் சேர்த்தே கடித்து குதறும் கோபத்தில் இருந்தாள்.

எப்போது இந்த வேலையை செய்திருப்பான் என்று யோசிக்க யோசிக்க அவளுக்கு மூளை சூடேறியது. பத்தாவது வரை இருவரும் வேறு வேறு வகுப்புதான். ஆனால் தற்போது கணினி பிரிவு, ஆதலால் ஒரே வகுப்பு. அப்போதிலிருந்துதான் அவளுக்கு இவன் பிரச்சனை தொடங்கியது.

கிறுக்குப் பிடித்தவன் போல வகுப்பில் அவன் இவளையே பார்த்திருப்பதை எல்லாம் அவள் அறியாளா என்ன?

இருப்பினும் எதற்கு வம்பு என்று ஒதுங்கி போனால் அவன் இந்தளவு வேலை பார்த்திருக்கிறானே என்று பற்றிக் கொண்டு வந்தது.

அவள் சீற்றத்தைப் பார்த்த தம்பி தங்கை இருவரும், "யக்கா வேண்டாம்... இந்த விசயத்தை இதோடு வுட்டுபுட்டு வேற வேலைய பாருங்" என்றனர். அவள் கேட்டாளா?

அதே கடுப்போடு அவள் வகுப்பிற்குள் நுழையும் போதே அவன்தான் அவளுக்கு தரிசனம் கொடுத்தான்.

"என்றா காரியம் பண்ணி வைச்சு இருக்க... எருமை" என்று அவள் சீற்றமாகப் பொங்க,

"படிச்சு போட்டியா?" என்று முகமெல்லாம் புன்னகையாகக் கேட்டான் அந்த காதல் நாயகன். அவள் எரிச்சலான அதேநேரம் அவனைப் பார்த்து முகம் சுளித்து,

"த்தூ! அந்த கருமத்தைப் படிக்கிற மாதிரியா இருக்கு... ஒரு வாரத்தையாச்சும் தப்பும் தவறும் இல்லாம எழுதி இருக்கியா?" என்று அவன் காதல் கவிதை எழுதியதை விட அவன் அப்படி தப்பு தப்பாக எழுதியதுதான் அவளுக்குக் கடுப்பைக் கிளப்பியது.

"கவிதை அருவி மாறி கொட்டுது புள்ள? ஆனா எழுதலாம்னுட்டு பேனாவை புடிச்சா அந்த வார்த்ததைன்" என்று கமல் வசனத்தைப் பேசியவனைப் பார்த்து தலையில் அடித்து கொண்டவள்,

"ரொம்பதான் ஏத்தம்டா உனக்கு... இதை நான் இப்படியே வுட்டு போடுவேனு மட்டும் நினைச்சி போடாதே" என்று அவள் சில நொடிகள் யோசித்துவிட்டு நேராக போய் முதல்வர் அறையில் நின்றுவிட்டாள்.

கவிதை என்ற பெயரில் அவன் செய்த கிறுக்கலைப் படிக்கக் கூட முடியாமல் மூக்கு புடைக்க முதல்வர், "வு இஸ் தட் இடியட்" என்று பொங்க, அடுத்தடுத்து அவர்களின் வகுப்பாசிரியர் கிரேஸியும் ராமச்சந்திரனும் அவர் முன்னே வந்து ஆஜராகினர்.

பைந்தமிழ் கடுப்பில் நிற்க... முதல்வர் கோபத்தில் கொப்பளிக்க... கிரேஸி டீச்சரோ பயத்தில் நடுங்க...

இது எல்லாவற்றுக்கும் காரணமான ராமசந்திரனோ அலட்சியமாக ஒரு பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.

"ஆமா நான்தான்" என்றவன் உடல்மொழியில் முதல்வருக்கு அப்போதே டீசியைக் கிழித்து அவன் கையில் கொடுத்து விடலாமா என்று இருந்தது. ஆனால் அவன் பாட்டி பேச்சியை நினைத்தால்தான் அவருக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. அவன் செய்யும் அலும்பை விட அவன் பாட்டியின் அலும்புதான் ரொம்ப அதிகம்.

எத்தனை பெரிய பிரச்சனை என்றாலும் பேரனைப் பார்த்து, "என்றா கண்ணு செஞ்ச?" என்ற அந்த பாசமான விளிப்புதான் முதல் எரிச்சலே!

அதுவுமில்லாமல் பேரன் எத்தனை தப்பு செய்தாலும் அசராமல் அவனுக்கு பரிந்து பேசும் அவரிடம் என்னவென்று சொல்ல? ஆனால் அதற்கு அவருக்கான ஒரு காரணம் இருந்தது.

அவனுக்கு பெற்றோர் இல்லை. பிள்ளை பெற்றவள் பெற்ற கணத்தில் அவனை விட்டு மேலோகம் போய்விட, தந்தை என்ற தறுதலை அடுத்த கணம் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு எந்த லோகம் போனானோ!

இதனால் அவன் முழுவதுமாக பாட்டியின் பொறுப்பில் வந்தான்.

அதுவும் பேச்சி கிழவி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகை வேறா?! ஒவ்வொரு படத்தையும் நூறு தடையாவது அலுக்க சலிக்க பார்த்தவர் தன் பேரனுக்கும் அவர் பெயரையே வைத்து அழகும் பார்த்தார்.

"என்ற பேரன் அன்பே வா ல வர எம்.சி.ஆர் கணக்கா இருக்கானக்கும்" என்று பாட்டி கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் தன் பேரனை பார்த்து பெருமையடித்து கொள்வார்.

அவன் அந்த எம்.ஜி.ராமசந்திரனை போல வெள்ளை வெளேரென்று இல்லாவிட்டாலும் நல்ல நிறம்தான். போதாக்குறைக்கு நல்ல உயரமும் கூட. இப்போதே பெரிய ஆண் மகன் போல தோற்றமும் மீசையும் கொண்டிருந்தான். அதற்கு காரணமும் இருந்தது. அவனை ஐந்து வயதில்தானே பாட்டி பள்ளியில் சேர்த்திருந்தார். ஆதலால் அவன் வகுப்பு மாணவர்களை விட அவனுக்கு இரண்டு வயது அதிகம்,

அவன் ஒவ்வொரு முறையும் ஏதாவது இப்படி சேட்டைகள் செய்வதும் பாட்டியை அழைத்து பேசுவதும், இறுதியாக அவர், "ஆயி அப்பன இல்லாத புள்ளைங்க" என்று செண்டிமெண்ட் டச் கொடுத்து உஷராக எதிரே இருப்பவர்களை கவிழ்த்துவிடுவதும் வழமையாக அரங்கேறும் காட்சிகள்.

எப்படியும் அவன் பத்தாவது தேர்வில் நிச்சயம் தேற மாட்டான் அவனை பள்ளியை விட்டு அனுப்பிவிடலாம் என்று முதல்வர் நம்பிக்கையாக இருக்க, அனைத்து பாடங்களிலும் பார்டர் மார்க் எடுத்து தேர்ச்சிப் பெற்றதோடு அல்லாமல் அவர் ஆசையிலும் நம்பிக்கையிலும் மொத்தமாக மண்ணள்ளிப் போட்டான் அந்த நல்லவன். எப்படி அவன் தேர்ச்சி பெற்றிருப்பான் என்று அவர்கள் பள்ளியே இன்றுவரை குழம்பிக் கொண்டிருக்கிறது.

திறமையான புத்திசாலியான மாணவியாக பைந்தமிழை அந்த பள்ளி முழுக்கவும் எல்லோருக்கும் எப்படி தெரியுமோ அதேபோல ராமசந்திரனையும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நேர்மறையாக!

பாட்டி வந்துவிட்டதாக தகவல் வந்த நொடி பைந்தமிழுக்கும் கொஞ்சம் உதறத்தான் செய்தது. அந்தப் பேச்சு கிழவியும் அவரின் செல்ல பேரனும் அவர்களிருக்கும் தெருவில்தான் வசிக்கிறார்கள்.

பாட்டி வீட்டில் ஒரு முருங்கைக்காய் திருடு போனால் கூட திருடியவன் மூக்கிலும் வாயிலும் பேசியே ரத்தம் வருமளவுக்கு வண்டை வண்டையாக திட்டுவதோடு நிறுத்தாமல் ஒரு கை மண்ணும் லாரியாக லாரியாக சாபத்தையும் அள்ளி அள்ளி வழங்கிவிட்டுதான் மூச்சே விடுவார்.

பைந்தமிழ் கண்களில் எட்டிப் பார்த்த பயம் முதல்வரிடமும் இல்லாமல் இல்லை.

பேச்சியம்மா சிறு வயதிலேயே கணவன் இழந்த பின் தனியாளாக விவசாயம் பார்த்து பால் விற்று என்று இரண்டு மகள்களையும் கரை சேர்த்தார். ஓயாத உடல் உழைப்பு காரணமாக உடல் தளர்ச்சியுற்று முதுமை விரைவாக அவர் தோற்றத்தை ஆக்கிரமித்து கொண்டது.

அவருடைய மூத்த மகள் நல்ல இடத்தில் வாழ்க்கைப் பட்டிருந்ததால் தாயைத் தேடி வர பெரிதாக அவசியமிருக்கவில்லை. தேவையென்றால் வந்து எட்டி பார்ப்பதோடு சரி. இரண்டாவது மகளின் பிள்ளைதான் சந்திரன். மகனுக்கு மகனாக பேரனுக்கு பேரனாக அவனை நினைத்துவிட்ட காரணத்தால் தவறி கூட ஒரு வார்த்தை அவனிடம் கோபமாக பேசிவிட மாட்டார் பேச்சி!

அதனால்தான் ஊருக்குள் இல்லாத அழிச்சாட்டியம் செய்து கொண்டு திரிந்தான் சந்திரன்.

இப்போது கூட உள்ளே நுழைந்த கணம், "என்றா கண்ணு பண்ண?" என்று செல்லமாக அவர் பேரனின் தாடையைப் பிடித்து கேட்க, அவனோ அலட்சியமாக உதட்டைப் பிதுக்கினான்.

"உங்க பேரன் என்ன பண்ணான்னு எங்களை கேளுங்க" என்று பஞ்சாயத்தைத் தொடங்கி திறம்பட அவன் செய்த வேலையை முதல்வர் சொல்லி முடிக்க அந்த நோட்டை உற்று பார்த்தவர்,

"என்றா கண்ணு... ஒன்ற கையெழுத்தா இது... முத்து முத்தாவுல எழுதி இருக்க... அதை ஏன் கண்ணு அந்தப் பொண்ணு புஸ்தகத்துல எழுதுன" என்று சாவகசமாக பேசிய பேச்சியை கடுப்புடன் பார்த்த முதலவர்,

"உங்க பேரன் இதுவரைக்கும் செஞ்சதெல்லாம் கூட பரவாயில்ல... இந்த தடவை செஞ்ச தப்பை மன்னிக்கவே முடியாது" என்று அதை காரணமாக வைத்து அவனுக்கு டிசி எழுதிக் கொடுக்க சொல்லிவிட்டார்.

பேச்சியின் செண்டிமெண்ட் டிராமா கூட ஒன்றும் பலிக்கவில்லை. ஆனால் அதோடு பிரச்சனை முடியவில்லை. சகுந்தலாவின் காதில் ரத்தம் வருமளவுக்காய் அவர்கள் வீட்டின் முன்னே வந்து நின்று பாட்டி நாரசமாக திட்டியதோடு, சாபங்களை வஞ்சனை இல்லாமல் வாரி வழங்க உடன் பிறப்புகள் மூவரும் தங்கள் காதுகளை மூடி கொண்டு வீட்டிற்குள் முடங்கினர்.

சகுந்தலாவும் பதிலுக்கு பதில் மல்லுக்கு நின்றாலும் பேச்சி கிழவிக்கு ஈடு கொடுக்கக் முடியவில்லை. இறுதியாகப் பேச்சியம்மா, "என்ற குடியை நாசம் பண்ண மாதிரி ஒன்ற பொண்ணு எவன் எவன் குடியை நாசம் பண்ண போறாளோ" என்று சொன்ன வார்த்தை தமிழின் மூடியிருந்த காதுகளையும் துளைத்து கொண்டு விழ, அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.

இதுவரையில் ஒரு நாளும் இப்படியெல்லாம் அவள் பேச்சு கேட்டதே இல்லை. பள்ளியிலும் ஊரிலும் அவள் படிப்பையும் குணத்தையும் பார்த்து மெச்சி பாராட்டியவர்கள்தான் அதிகம்.

ஏனோ பாட்டியின் வார்த்தைகள் அவள் மனதில் ஆழமாக பதிந்து போனது. அவள் வாழ்க்கையின் மிக மோசமான அனுபவத்தில் அந்த நாள் பதிவானது. அவளின் அதிமுக்கியமான எதிரியின் பட்டியலில் சந்திரனும் பேச்சியும் முதன்மையான இடத்தை பிடித்து கொண்டனர்.

இனி அவர்கள் முகத்திலேயே விழிக்க கூடாது என்ற சங்கல்பம் எல்லாம் அவளால் எடுக்க முடியாது. எப்படி பார்த்தாலும் ஒரே ஊரில் அந்த சின்ன தெருவில் அவள் முகத்தை அவனும் அவன் முகத்தை அவளும் தினமும் பார்த்தே தீர வேண்டிய தலைவிதி அவர்களுக்கு!

அவனுக்குமே அவள் மீது ஏகபோகமாக கோபம் இருந்தது. பள்ளியை விட்டு அனுப்பியதில் அவனுக்கு கொஞ்சமும் வருத்தமில்லை என்றாலும் அவள் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்திவிட்டாளே என்ற கடுப்பு!

ஆதலால் அவர்கள் சந்திக்கும் தருணங்களில் எல்லாம் இருவரும் மாறி மாறி வெறுப்பை பரிமாறி கொள்ளாமல் நகர மாட்டார்கள்.

'என்றா ஜென்மம் நீயெல்லாம்' என்றவள் கடுப்பாக பார்த்தால், 'அடி போடி' என்று அவன் அலட்சியப் பார்வையைத் தந்துவிட்டு செல்வான்.

இவர்கள் என்னதான் வெறுப்பை வாரி வாரி வழங்கி கொண்டாலும் விதி இவர்கள் இருவருக்கும்தான் முடிச்சு போட போகிறது. இப்படி எதிரும் புதிருமாக நிற்கும் இவர்களை இந்த ஊரே ஒரு நாள் ஆதர்ச தம்பதிகள் என்று கொண்டாடவும் போகிறது.

indra.karthikeyan has reacted to this post.
indra.karthikeyan
Quote

Super ma 

You cannot copy content