You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

En Iniya Pynthamizhe - 12

Quote

12

அக்கணம் பைந்தமிழுக்குள் பரவிய நிம்மதியும் கண்ணீரும் அவளை உணர்ச்சிவசப்பட வைத்திருந்தது. இருப்பினும் சந்திரனிடம் அதெல்லாம் காட்டிக் கொள்ளாமல்,

“என்னங்க மிஸ்டர் எம்.சி.ஆர்?” என்று அவனிடம் கர்வப் பார்வையை வீசினாள்.

அவனோ இன்னும் நடந்ததை நம்ப முடியாமல் திகைப்பாக நின்றிருந்தான்.

“ஒன்ற அம்மத்தாவுக்கு என் மேல கோவம் இல்லன்னு இப்பயாச்சும் ஒத்துக்குறியா?”

“ஊருக்குள்ளர ஒரு பழமொழி சொல்வாய்ங்க… காக்கா ஒட்கார்ந்து பனம்பழம் வுழுந்துச்சுன்னு” என்றவன் வேண்டுமென்றே அவளை வார,

அவளுக்குள் அத்தனை நேரம் பொங்கிய உத்வேகமெல்லாம் சட்டென்று வடிந்து காணாமல் போனது.

“அப்போ… என்ற தொண்டைத் தண்ணி வத்த நான் காகாவைக் கூப்பிட்டதெல்லாம்”

“உன்னைய யாருடி கூப்பிட சொன்னது? நீதானே வம்படியா கூப்புடுறேன்னு வந்து நின்னவ” என்று அவன் அலட்டிக் கொள்ளாமல் சொன்ன விதத்தில் அவளுக்கு கோபம் சுறுசுறுவென ஏறியது.

“உஹும்… அதெல்லாம் கிடையாது… நம்ம பேசிக்கிட்ட படி சவாலை நான் ஜெய்ச்சி போட்டேனாக்கும்… ஒன்ற அம்மத்தா என்னைய மன்னிச்சிட்டாங்கன்னு நீ ஒத்துக்கிட்டுதான் ஆகோணோம்”

வேண்டுமென்றே அவள் கோபத்தை ஏற்றி பார்த்து ரசித்தவனுக்கு அவளின் அந்த தவிப்பு மனதைத் தாக்க, “சரி சரி ஒத்துக்கிட்டேன் தாயே… என்ற அம்மத்தா உன்னைய மன்னிச்சிட்டாங்க? போதுமா” என்று போனா போகுதென்று ஒத்துக்கொண்டது போல ஒரு பாவனையைச் செய்துவிட்டு அவளைக் கடந்து சென்றான்.

ஆனால் அந்தப் பொய்யான பாவத்திற்குப் பிண்ணனியில் இத்தனை நாளாக அவள் மீது அவன் சுமந்திருந்த கோபமும் துவேஷமும் கண்காணாமல் தொலைந்து போனது அவன் மட்டுமே அறிந்த உண்மை.

அதன் பின் அவன் ஆச்சிக்குப் படையல் உணவைப் பரிமாற, அவளும் வந்து அருகில் அமர்ந்து, “ஹெலோ மிஸ்டர் எம். சி. ஆர் இங்கனயும் கொஞ்சம் போடுங்க” என்றவள் சொல்லவும் அவன் கோபம் எழ,

“என்னடி சும்மா சும்மா எம்.சி.ஆர்னு கூப்பிட்டு கடுப்பேத்திறவ?” என்று பொங்கினான்.

“என்னத்த கடுப்பேத்தி போட்டாங்க… அதானவே ஒம்பேரு?”

“என்ற அம்மத்தா மட்டும்தான் என்னைய அபப்டி கூப்பிடும்… கூப்பிட்டுச்சு… வேற யாரும் என்னைய அப்படி கூப்பிட வேண்டாம்”

“நான் அப்படிதான் கூப்புடுவேன்… என்ன பண்ணுவ?” என்று அவள் திமிராக சொன்னதில் அவளை முறைப்பாகப் பார்த்திருந்தான்.

“அட… முறைச்சது போதும்… சோத்தைப் போடு… பாவம் ஆச்சி எம்புட்டு நேரமா வெறும் இலையையே சொரண்டிக்கிட்டு கிடக்கு”

‘சரியான ராங்கிக்காரி’ என்று உதட்டளவில் அவளை வைதாலும் உள்ளத்தளவில் அவளின் அந்த எடக்கான பேச்சுக்களை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

அதுவும் அவளுக்கு உணவு பரிமாறிய போது அவன் கண்கள் அவள் மீது ஏறி ஏறி இறங்க, ‘வேண்டாம்டா சந்திரா?’ என்று அவன் உள்ளம் எச்சரிக்கை மணியை ஒலித்தபடியே இருந்தது.

ஆனால் அவளோ அந்த உணவு பண்டங்களை ருசிக்க ஆரம்பித்த பின் அவள் கவனம் வேறு எதிலும் திரும்பவில்லை. அவனா இத்தனை உணவு வகைகளையும் சமைத்தான் என்று வியப்பில் அவளிருக்க,

அவன் ஆச்சியிடம், “உப்பு உரப்பெல்லாம் சரியா இருக்கா ஆச்சி?” என்று பரிமாறி கொண்டே விசாரிக்க,

“எல்லா சரியா இருக்கு கண்ணு…. ஒரு குறை சொல்ல முடியாது…. அம்புட்டு ருசியா செஞ்சுருக்க… இப்படி ருசி பசியோட சாப்பிட்டே ரொம்ப நாளாச்சு… கெழவி வயறும் மனசும் குளிர்ந்து சொல்றேன்… நீ நல்லா இருப்ப கண்ணு” என்று அவர் மனநிறைவோடு வாழ்த்திவிட்டு இலையை மடிக்கவும் அவரைக் கைத் தாங்கலாக அழைத்து சென்று கை அலம்ப செய்து உள்ளே அழைத்து வந்தான்.

தமிழ் சாப்பிட்டு முடித்து தன் இலையை எடுக்க எத்தனிக்க,

அவளைத் தடுத்தவன், “வூட்டுக்கு வந்த விருந்தாளிங்க சாப்பிட்ட இலை எல்லாம் எடுக்க பிடாது… நான் எடுத்து போட்டுக்கிறேன்… நீ எழுந்திரு” என்று இலைகளை எடுத்து அவற்றைப் பின்புறமாகப் போட சென்றான்.

அவனின் ஒவ்வொரு செயலிலும் அவளுக்கு வியப்பு எட்டிப் பார்க்க கை அலம்பிவிட்டு வந்தவள், “ஆமா… எங்கன நீ இம்புட்டு ருசியா சமைக்க கத்துக்கிட்ட?” என்று வினவ,

“என்றகிட்ட நானே கத்துகிட்டேன்” என்றவன் சொன்னதைக் கேட்டு அவள் புரியாமல் விழித்தாள்.

“அம்மத்தா இறந்த புறவு எல்லோரும் என்னைய ஒதுக்கிப் போட்டாங்க… சொந்த பந்தத்துல கூட ஆரும் என்னைய சேர்த்துக்கிடல… ஏன்? என்னைய ஒரு ஆளா கூட மதிக்கல…

அப்பதான் முடிவு பண்ணேன்… எனக்கு தேவையானதை நானே செஞ்சுக்கோணோம்னு… இந்த மூணு வருசமா தப்பும் தவறுமா செஞ்சு செஞ்சு எப்படியோ ஒரு வழியா நாங்களும் சமைக்க கத்துகிட்டோம்ல” என்றவன் சாதாரணமாகச் சொல்லித் தோளைக் குலுக்கினாலும் அவன் வார்த்தையிலிருந்த வலியை அவளால் உணர முடிந்தது.

“பரவாயில்ல எம்.சி.ஆரு… கை வசம் இன்னொரு தொழிலும் வைச்சு இருக்க” என்று எக்காளம் செய்து சிரித்தபடி அவன் முன்னே செல்ல,

“இவளுக்கு ஒடம்பு முழுக்க திமிரு” என்றவன் கடுகடுத்து வாயிற்குள் முனங்கிய போதும் அது அவள் செவிக்கு எட்டிவிட, “இப்ப என்ன சொல்லிட்டாங்க… திமிரு கிமிருங்கிற… உன்னைய நான் பாராட்டத்தானே செஞ்சேன்” என்று முறைத்துக் கொண்டு நின்றாள்.

“ஒரு ஆணியும் வேண்டாம்… அதான் சாமியைக் கும்பிட்டு சாப்பிட்டாச்சு இல்ல… கிளம்பு”

“புறவு கிளம்பாம இங்கனயே இருக்க போறேனாக்கும்” என்றவள் அவனிடம் ஒழுங்கெடுத்துவிட்டு முன்னே சென்று,

“ஆச்சிக் கிளம்பலாமா?” என்றாள்.

“உண்டுட்டு களைப்பா இருக்குடி… செத்த நேரம் படுத்து எந்திருச்சு வாரேன்” என்றவர் படுக்கையைப் போட்டுவிட, “ஐயோ! கெழவி… அம்மா சந்தையில இருந்து வந்துரும்” என்று அவள் தவிக்கலானாள்.

பின்னோடு வந்த சந்திரன், “நீ கிளம்பு… ஆச்சியை நான் கொண்டு வந்து வுடுறேன்” என்றதும் வேகமாக வெளியே வந்தவள் அங்கிருந்த வயல்வெளிகளும் பசுமையான சூழ்நிலையும் அவளை வெகுவாக ஈர்க்கவும் அவற்றை எல்லாம் ரசித்தபடி காற்றோட்டமாகச் சற்று நேரம் திண்ணையில் அமர்ந்து கொண்டாள்.

கால்களைக் காற்றில் வீசிக் கொண்டு அவள் அமர்ந்திருந்த தோரணையை வெளியே வந்து பார்த்த சந்திரனுக்கு மனம் வெகுவாக அலைபாய தொடங்க அந்த நொடி எல்லையை மீறி அவள் மீது பாயும் தன் காதல் பார்வையை அவனால் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

அடங்காமல் காற்றில் பறந்திருந்த அவள் கூந்தலும் அவளும் ஒரே ரகம் போல என்று எண்ணத் தோன்றியது அவனுக்கு. மறுபுறம் அவள் கழுத்தில் சரிந்திருந்த அந்த மெல்லிய துப்பட்டாவின் வழியே காட்சிப்படுத்திக் கொண்டிருந்த அவள் பெண்மையின் வன்மையை வேண்டாம் வேண்டாமென்று அவன் உள்ளம் சொல்லியும் அவன் விழிகளோ வேலியைத் தாண்ட,

‘படுத்துறாளே சந்திரா?’ என்று காதலுக்கும் காமத்திற்குமான இடைப்பட்ட உணர்வில் பரிதவித்து போனான் அந்த இளம் காளை!

அப்போது வரை எதையும் கவனித்திராமல் இயற்கையின் அழகை ரசித்திருந்த தமிழின் உள்ளுணர்வு சட்டென்று தட்ட, அவன் நின்ற திசையில் பார்வையைத் திருப்பியவளுக்கு உள்ளம் நடுங்கிப் போனது.

அவனின் அந்த ஒற்றை பார்வையில் அவள் தேகம் மொத்தமும் சிலிர்த்து கொள்ள, “ஏ! என்ன எ… என்ன.. பார்த்துட்டு இருந்த” என்று அவள் எழுந்து நின்று சீறிய போதும் அவள் குரலில் கோபத்தை விடவும் உள்ளத்தின் தடுமாற்றமே அப்பட்டமாகத் தெரிந்தது.

‘உன்னையதான்டி’ என்றவன் உள்ளம் அவளிடம் கிறங்கினாலும் உதடுகளோ, “என்னத்த பார்த்துட்டாங்க? ஒன்னையும் பார்க்கல?” என்று திடமாக மறுத்துவிட்டு,

“அப்பவே கிளம்புறேன் சொல்லி போட்டு… இன்னும் கிளம்பாம இருக்கவ?” என்று பேச்சை மாற்றினான்.

அவனையும் அவன் பார்வையையும் அவளுக்கா தெரியாது?

“சமாளிக்காதே… நீ என்னைய தப்பா பார்த்த”

“ஐயோடா! பெரிய உலக அழகின்னு நினைப்பு இவளுக்கு… அப்படியே இந்தம்மா அழகுல மயங்கி கிறங்கி ஒளிஞ்சு இருந்து பார்த்து ரசிச்சு போட்டோமாக்கும்… போடி” என்றவன் சொன்ன விதத்தில் தான்தான் தவறாக நினைத்துவிட்டோமோ என்று சந்தேகம் எட்டிப் பார்த்தது.

ஆனால் ஆழமாக யோசித்தவளுக்கு அவன் பார்வையிலிருந்த கிறக்கம் அவன் சொல்வது பொய்யென்றே தோன்றியது.

“டேய் டேய்! சமாளிக்காதடா… நெத்தில பட்டையெல்லாம் போட்டுக்கிட்டா… நீ ரொம்ப நல்லவன்… அப்படின்னு நான் நம்பிடுவேனா? ஒன்ற களவானித்தனம் பொறுக்கித்தனம் எல்லாம் எமக்கு தெரியாதா என்ன?” என்று அவள் சொன்னதில் தீவிரமாக அவளை முறைத்தவன்,

“என்னைய பத்தி அம்புட்டு நல்லா தெரிஞ்சவ எதுக்குடி என்ற வூட்டுக்கு வரோணோம்” என்றான்.

“நான் ஒன்னும் உன்னைய பார்க்க வரல… பேச்சிக் கிழவிக்காகதான் வந்தேன்… நான் அன்னைக்குக் கெழவி கிட்ட பேசுனது இன்னுமும் என்ற மனசைப் போட்டு அறுத்துக்கிட்டுக் கிடக்கு” என்றவள் உரைத்ததைக் கேட்டு அவளை அவன் ஆழமாகப் பார்க்க,

“நான் எம்புட்டு நாள் தனியா அழுதிருக்கேன் தெரியுமா? யார்கிட்டயும் அப்படியெல்லாம் நான் பேசுனதே இல்ல… ஒன்ற அம்மத்தாவோட சாவுல நீ எம்புட்டு உடைஞ்சு போனியோ அதே அளவு நானும் உடைஞ்சு போனேன்?

நீ என்னடான்னா வார்த்தைக்கு வார்த்தை நான்தான் ஒன்ற அம்மத்தாவை கொன்னு போட்டேங்கிற மாதிரி பேசுற… அப்படி நீ சொல்லும் போதெல்லாம் எனக்கு எப்படி வலிக்குது தெரியுமா?” என்றவள் சொல்லும் போதே அவள் விழிகளில் கண்ணீர் இறங்கியது.

“ஏய்… அழுவுறியா?” என்று பதறியவன்,

“தமிழு” என்று அச்சம் தொனிக்க சற்றே தாழ்ந்த குரலில் அழைத்தான். அதற்குள் சரசரவென தன் விழியில் வழிந்த நீரைக் கட்டுபடுத்த முடியாமல் அவள் முகத்தை மூடிக் கொண்டாள். அத்தனை நாளாக தனக்குள் சுமந்த வலியை அவள் உள்ளம் அழுகையாகக் கொட்டித் தீர்த்தது.

அவளிடம் சண்டிக் குதிரையாக எகிறிக் கொண்டிருந்தவனோ அவளின் கண்ணீரை பார்த்த மறுவினாடியே அடங்கி ஒடுங்கி அவளிடம் மொத்தமாக சரணடைந்துவிட்டான்.

“அழுகையை நிறுத்து புள்ள… சத்தியமா இனிமே நான் அப்படி சொல்ல மாட்டேன்… கெஞ்சிக் கேட்டுக்கிறேன்… அழுகையை நிறுத்து… நீ என்ற வூட்டு திண்ணையில் உட்கார்ந்துகிட்டு அழுவுறதை ஊர்காரங்க யாரச்சும் பார்த்தா… அம்புட்டுதான்… வேற வினையே வேணாம்” என்றவன் பதட்டத்தோடு சொன்னதைக் கேட்டு அவள் அழுகை மட்டுப்பட்டது. முகத்தைத் துடைத்து கொண்டு அவள் நிமிர்ந்து கொள்ள அவன் நிம்மதியாக மூச்சை இழுத்துவிட்டு கொண்டான்.

“சரி… நீ முதல புறப்படு… ஒன்ற வூட்ல உனக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டிருக்காங்க… இந்த மாதிரி சமயத்தில நீ இங்கன எல்லாம் வர கூடாது… நான் வேற இங்கன ஒண்டிக் கட்டையா தங்கிட்டுக் கிடக்கேன்” என்றவனுக்கு அவள் விஷயத்தில் தன் மீதே நம்பிக்கை இல்லை.

அவளோ அவன் கல்யாணம் என்று சொன்னதில் கடுப்பாகி, “கல்யாணமாவது மண்ணாவது… நான் எவனையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்… எவனாச்சும் ஏதாச்சும் பேசிட்டுப் போட்டோம்” என்றாள்.

அவன் புரியாமல், “ஏன் என்னாச்சு? இப்போ உனக்கு பார்த்த மாப்பிளை நீ ஆசைப்பட்ட மாதிரி நல்லா படிச்ச ஒழுக்கமானவன்தானே… அதுவும் மாப்பிளையோட குடும்பம் வேற நல்ல வசதின்னு பரிமளம் அக்கா சொன்னாவுங்க” என்று படிச்ச ஒழுக்கமான என்ற வார்த்தைகளுக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து கேட்கவும் அவனை ஏறஇறங்கப் பார்த்தவள்,

“என்ன? நான் முன்ன ஒரு தடவை உன்கிட்ட சொன்னதை வைச்சு இன்னைக்கு என்னைய குத்திக் காட்டுறியா?” என்றாள்.

“நான் எதுக்கு உன்னைய குத்திக் காட்டோனோம்? அதெல்லாம் இல்ல.. பரிமளம் அக்கா சொன்னதைதான் நானும் சொன்னேன்”

“அப்போ உனக்கு விசயமே தெரியாதா?”

“என்ன விசயம்?”

“நிசமா தெரியாதா? இல்ல தெரியாத மாதிரி நடிக்குறியா?” என்றவள் அவனைப் கூர்மையாகப் பார்க்க,

“நான் எதுக்கு நடிக்கோனோம்… எனக்கு எதுவும் தெரியாது” என்றான்.

“அந்த மாப்பிளை என்னைய வேண்டாம்னு சொன்னது உனக்கு அப்போ தெரியாது” என்றவள் சொன்னதைக் கேட்டு அவனுக்குள் பரவிய சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

இருப்பினும் அந்த உணர்வை சாதுரியமாக மறைத்து கொண்டு, “உன்னைய போய் வேண்டாம்னு சொன்னானா… ஏன்?” என்று அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ள ஆவல் கொள்ள,

“நான் கருப்பா இருக்கேனாம்” என்றாள்.

“ஏன் கருப்பா இருந்தா என்னவாம்?”

“அவனுக்கு செவ்வ செவ்வன்னு அழகான பொண்ணா பார்த்துக் கட்டிக்கணும் போல… அதான் என்னை வேண்டாம்னுட்டான்” அவள் சாதாரணமாகச் சொல்ல,

“செவ்வ செவ்வன்னு கட்டிக்கணும்னு சொல்லு… அதென்ன அழகா? சிவப்பா இருந்தாதான் அழகா என்ன?” என்று அவன் பதிலுக்குக் கேட்க,

“ஆமா பின்ன… சினிமா படத்துல எல்லாம் பொண்ணுங்க எம்புட்டு சிவப்பா அழகா இருக்காங்கன்னு பார்த்த இல்ல” என்று அவள் சொல்ல அவன் உதட்டில் மந்தகாசமாய் ஒரு புன்னகை உதிர்ந்தது.

“அது ஒரு தனி அழகு… ஆனா உனக்கு ஒன்ற நிறம்தான்டி ஒன்ற அழகே… அந்த கருப்பு நிறம் மட்டும் இல்லீனா… நீ இம்புட்டு அழகா இருந்திருப்பியான்னு சந்தேகம்தான்…

அதுவும் ஒன்ற குண்டு குண்டு கண்ணும்… நீ லேசா சிரிச்சா கூட வுழுற ஒன்ற கன்னத்து குழியும் ஒன்ற கருப்பு நிறத்துலதான்டி அம்புட்டு எடுப்பா தெரியுது…

சாயம் பூசாமலே ஒன்ற உதடு செதுக்கி வைச்ச மாதிரி அந்த கருப்பில தனியா தெரியுது புள்ள” என்றவன் அவளை ரசித்து வர்ணிக்க, அவளுக்குள் ஏதோ ஒரு புதுவிதமான உணர்வு சுரக்கத் தொடங்கியது.

இந்தளவுக்கு தன்னை ஒருவன் ரசிக்க முடியுமா என்ற வியப்பு உணர்வு! அந்த வியப்புணர்வோடு சேர்ந்த காதல் உணர்வு! அந்த காதல் உணர்வில் செறிந்த மயக்க உணர்வு!

அந்த மயக்க உணர்வில் கட்டுண்டு அவன் மீதான விழிகளை அவள் கிஞ்சிற்றும் அகற்றிக் கொள்ளாமல் பார்த்திருந்தாள்.

அவள் பார்வை அப்படி அவனைத் தீவிரமாக பார்த்த விதத்தில்தான் அவன் ஓரளவு தெளிந்து தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று புரிந்து, சுயநினைவு பெற்று தன் உதட்டைக் கடித்துக் கொண்டான்.

அவன் பேச்சை நிறுத்திய பின்பும் கூட அவனின் விழிகளுக்குள் அவள் ஆழமாக சிக்குண்டிருந்தாள். மீள முடியாமல் இல்லை… மீள விரும்பாமல்.

ஆனால் கொஞ்சம் தாமதமாக அவள் மூளை தருவித்த எச்சரிக்கை உணர்வில் ஒருவாறு விழித்து கொண்டவள் அதற்கு பிறகாய் அங்கே ஒரு நொடி கூட இருக்கவில்லை. காற்றில் கரைந்தவள் போல அவள் அவன் கண்களை விட்டு மறைந்திருந்தாள்.

அவனோ தான் செய்த வேலையை எண்ணித் திண்ணையில் அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான். அவள் என்ன நினைத்து கொண்டாலோ என்ற தவிப்பு அவனைப் பெரிதுமாகத் தாக்கியது.

தமிழுக்கு வீடு வந்து சேரும் வரை அவள் மனதிலிருந்த படபடப்பு அடங்கவே இல்லை.

விரைவாக தன்னறைக்குள் வந்து படுக்கையில் சரிந்துவிட்டாள்.

indra.karthikeyan has reacted to this post.
indra.karthikeyan
Quote

Super ma 

You cannot copy content