You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

En Iniya Pynthamizhe - 17

Quote

17

புல்லினங்களின் கூச்சலில் புது தெம்போடு பரவசமாக விடிந்தது அன்றைய விடியல்!

சூரியனின் வெளிச்ச கீற்று அவர்களின் அறையின் சாளரத்திற்குள் மிதமாக நுழைய, மெல்ல அவள் தம் விழிகளை மலர்த்தினாள். விழித்து கொள்ள மனமே இல்லாமல்!

ரத்தம் ஓட்டம் தடைபட்டது போல என்னவோ கை கால்கள் எல்லாம் மரத்த நிலை!

உள்ளமெல்லாம் களிப்புற்றிருக்க உடல் முழுக்கவும் சோர்ந்து களைத்திருந்த காரணத்தால் மீண்டும் உறக்கத்தைத் தழுவ விழிகள் சொருகிக் கொண்ட போதும் பெண்ணவள் மனம் விழித்துக் கொண்டது.

அவசரமாய் தம் விழிகளை திறந்தவளுக்கு அப்போதே புரிந்தது. தன் தேகம் அவனின் வலிய புஜங்களுக்குள் அடங்கியிருப்பதை!

அவள் பார்வை அவனது வெற்று மார்பகத்தில் பதிந்திருந்த அவளின் பெயரின் மீது நிலைத்தது.

தன் பெயரை அவன் பச்சைக்குத்தியிருப்பதை அறிந்த கணம் அவள் மனதில் பயம் கோபத்தைத் தாண்டி… சொல்லிலடங்கா ஆச்சரியம்தான்!

அந்த நொடிதான் அவளுக்குள் முதல் காதல் துளி விழுந்தது.

இந்தளவு தன் மீது அவன் காதல் கொண்டிருக்கிறானா என்று!

அவன் விளையாட்டுத்தனமாகச் செய்திருந்தாலும் அவன் நேசம் உண்மையானது என்று சொல்லாமல் சொல்லியது அவன் மார்பிலிருந்த அவளது பெயர்!

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அந்த உணர்வு அவன் மீதான காதல் அல்லவே. அவன் காதலின் மீதான காதல்!

நேற்றிரவு அவன் காட்டிய மோகமும் தாபமும் கூட அந்த காதலின் ஒரு வகைதானே! தன்னை நேசிக்கும் அவன் நேசத்தை உளமார அவள் நேசித்தாள். அவனருகில் அவனின் காதல் பார்வையில் அவள் தன்னை மறந்தாள்.

தற்போது அந்த நெருக்கத்தில் அவன் மார்பில் தன் பெயரைப் பார்த்த போது அவளுக்குள் பொங்கிய உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவன் நேசம் தனக்கானது மட்டுமே என்ற கர்வ உணர்வு அது. உலகையே வென்ற உணர்வு!

இன்னுமே அன்றைய இரவின் மயக்கங்கள் தெளியவில்லை அவளுக்கு. அவன் பிடிக்குள்ளிருந்து விலக மனமில்லாத போதும் வெளியே கேட்ட பேச்சு குரல்களில் சுற்றுபுறம் உணர்ந்து எழ முயன்றாள்.

‘ப்பா… உடும்பு பிடி’ மெல்ல உடலை வளைத்து நெளித்து அவன் பிடியிலிருந்து வெளிவந்திருந்தாள்.

“தமிழு” என்றவன் உளறிக் கொண்டே அருகிலிருந்த தலையணையை இழுத்து அணைத்து கொள்வதைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு தாளவில்லை

அவளின் சிரிப்பு சத்தத்தில் அவன் தூக்கம் களைந்ததை அவள் கவனிக்கவில்லை. கண்ணாடி முன்பு அவள் தன் உடையை சரி செய்வதை ஒரு விஷம புன்னகையோடு ரசித்திருந்தவன், இடைக்குக் கீழே நீண்டிருந்த கூந்தலை வாரி சுருட்டி அவள் கொண்டையிடவும் பின்னிருந்து தன் கரத்திற்குள் அவளை வளைத்து பிடித்தான்.

ஆனால் அவன் பிடியில் அழுத்தம் இல்லை. ஒருவிதமான கிறக்கம்!

“ஐயோ! சந்திரா விடு… எல்லோரும் எழுந்துட்டாவுங்க… நான் போகோணோம்” என்றவள் பதற. அவள் தோள் மீது தலையைச் சாய்த்தபடி,

“என்ற அம்மத்தா போன பிறகு தனியா இப்படியே அனாதையா கிடந்து செத்து போயிடுவேனோனு தோனும்… ஆனா அந்த நினைப்பெல்லாம் பொய்யாக்கி போட்டு நீ என்ற வாழ்க்கைல வந்துட்ட… இந்த நிமிசம் எம்புட்டு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” என்று அவன் உணர்வுபூர்வமாகச் சொல்லி அவள் இடையை இறுக தன்னோடு பூட்டிக் கொள்ள, அந்த நொடி இருவருமே ஒருவித மோனநிலைக்குச் சென்றனர்.

அவள் உள்ளம் நெகிழ்ந்து அவளும் அவனோடு ஒண்டிக் கொண்ட போதும் மனம் முழுவதுமாக அவன் அணைப்பில் லயிக்க முடியாமல்,

“சந்திரா ப்ளீஸ்… இப்பவே லேட்டாகிடுச்சு” என்றவள் கெஞ்ச,

“கண்டிப்பா போகோணுமா” என்றவன் கேட்க,

“என்னடா கேள்வி இது? போக வேண்டாமா? அதுவும் எப்படி இப்படியே வெளியே போக போறேன்னு தெரியல… ஒரு மாதிரி இருக்குடா” என்றவள் அவஸ்த்தையோடும் நாணத்தோடும் நெளிய,

செங்கொழுந்தாக சிவந்திருந்த அவள் கன்னங்களும் கன்றிச் சிவந்திருந்த அவள் உதடுகளும் அவனின் இரவு லீலைகளைச் சொல்லாமல் சொல்ல, அவள் தவிப்பை ஓரளவு புரிந்தவனாக அவன் பிடியைத் தளர்த்திக் கொண்ட போதும் அவன் கரம் அவளை வளைத்தபடியேதான் இருந்தது.

“சந்திரா” என்றவள் அழுத்தம் கொடுக்க,

“இப்படியே இருக்கோணோம் போல இருக்குடி” என்றான் அவன் கிறக்கமாய்!

பின் அவளை முன்புறமாகத் திருப்பி, “என்னைய வுட்டுட்டு நீ எங்கயும் போக மாட்ட இல்ல?” அவள் முகத்தை தம் கரங்களுக்குள் ஏந்தி அவன் வாஞ்சையாகக் கேட்க,

காதல் பொங்கிய அவன் பார்வையில் கட்டுண்டவளாக, “உஹும்” என்றாள்.

சில நொடிகள் அவள் தன்னையே மறந்து போகும் நிலையில் அவளை ஆரத்தழுவி கொண்டு பின் பிரியவே மனமில்லாமல் அவளை விடுவித்திருந்தான்.

தன்னிடம் லயித்து களித்த அவனது பார்வை, அணைப்பு, முத்தம் என்று அப்படியொரு போதையை அவன் அவளுக்குள் ஏற்றியிருக்க,

அந்தப் போதை அவள் வயதின் மற்றும் உடலின் தேவையாக மட்டுமே இருந்தது. ஆனால் அவனுடையது அப்படியல்ல. அது அவனின் உயிரின் தேவை! அவளை எதற்காகவும் யாருக்காவும் விட்டுக் கொடுத்து விட கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தவன் அவளைத் தன்னுடைய அத்தனை உறவாகவும் பார்த்தான். உயிருக்கும் மேலாக நேசித்தான்.

அந்த நேசிப்பை அவன் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் காட்டியிருந்தான். மறு வீடு சம்பிராதயமெல்லாம் முடிந்து அவர்கள் இருவரையும் அழைத்து வந்து அவன் வீட்டில் விட்டிருந்தனர். ஆனால் உடன் சகுந்தலாவும் மதுசூதனனும் வரவில்லை.

இதே ஊரில் நடந்து செல்லும் தூரத்தில்தான் அவர்கள் வசிக்க போகிறார்கள் என்ற அலட்சிய போக்காகத் தெரிந்தாலும் அவர்களுக்கு விருப்பமில்லை என்பதே உண்மையான காரணம்.

செல்வியும் அரசனும்தான் அழுது தீர்த்துவிட்டனர். செல்வி கூட ஓரளவு புரிந்து கொண்டு அமைதியாகிவிட அரசன்தான் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தான்.

“இங்கன பக்கத்துலதானே டா இருக்க போறேன்… பார்க்கோணோம்னு தோனுனா உடனே ஓடி வந்துரு” என்று சொல்லி தம்பியின் கண்ணீரை அவள் துடைத்துவிட்டு சமாதானப்படுத்த,

 

“உஹும்… நான் அந்த ஆளு வூட்டுக்கு வர மாட்டேன்” என்றவன் மேலும், “நீங்க ஏனுங்க க்கா… அவனைப் போய் கண்ணாலம் பண்ணிக்கிடீங்க?” என்று தன் மனதில் பொங்கிய ஆதங்கத்தை அவளிடம் அப்போது கேட்டும் விட்டான்.

“இப்ப யாரை நீ ஆளு அவன் இவன்னு சொல்லி பேசுனவன்” என்று தமிழ் கொதிக்க அரசன் விக்கித்துப் போனான்.

“அக்கா” என்றவன் குரல் இறங்க,

“இதுவரைக்கும் நீ அவங்கள எப்படி பேசி இருந்தாலும் சரி… ஆனா இனிமே அப்படி பேசக் கூடாது… அவங்க என்ற வூட்டுக்காரரு… உனக்கு மாமா முறையாக்கும்… மருவாதையா பேசோணோம்… விளங்குச்சா?” என்றவள் கண்டிப்போடுச் சொல்லவும் மிரட்சியோடு அவன் தலை சம்மதமாக ஆடியது.

ஆனால் செல்வி முகத்தைச் சுளித்துக் கொண்டு, “மருவாதைங்குறது வெறும் உறவு முறையில இருந்து மட்டும் வந்திராது… அது அவங்க அவங்க நடந்துக்கிற முறையில இருந்தும் வரோணோம்” என்று சொல்ல,

“என்னடி சொன்ன?” என்று இவள் தங்கையை முறைத்தாள்.

அதற்குள் உறவினர்கள் கூடிவிட்டதில் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்குள் பெரிதாக வாக்குவாதம் எதுவும் நிகழவில்லை.

அவள் அறையை விட்டு வெளியே வர மதுசூதனன் மருமகனைத் தனியே அழைத்துச் சென்று, அவன் கையில் ஒரு சாவியைக் கொடுத்தார்.

“என்னங்க இது?” என்று அவன் குழப்பமாக,

“இது தமிழோட மாமா… சங்கரன் வீட்டு சாவி” என்றார்.

“எதுக்கு?” என்று சந்திரன் புரியாமல் நிற்க,

“இதுவரைக்கும் நீங்க ஒண்டிக் கட்டையா அங்கன இருந்தது எல்லாம் சரிதான்… ஆனா இனிமே அதெல்லாம் சரியா வராது… ஊருக்கு வெளிய தனியா தங்குறது எல்லாம் பாதுகாப்பு இல்ல” என்றவர் மேலும்,

“அதுவும் இல்லாம நாங்க வாங்கித் தர சீர் செனத்த எல்லாம் அந்த வீட்டுல வைக்க முடியுமா?” என்றார்.

“இல்ல எங்களுக்கு இந்த சாவி வேண்டாம்… நாங்க அங்கதான் இருக்க போறோம்” என்றவன் மறுத்துவிட்டு அதற்கான விளக்கத்தையும் அவருக்குத் தந்திருந்தான்.

தமிழுக்குத் தூரத்திலிருந்து அவர்கள் பேசிக் கொள்வது தெரிந்ததே ஒழிய, என்ன பேசுகிறார்கள் என்று எதுவும் தெரியவில்லை. அருகில் செல்லவும் தயக்கமாக இருந்தது.

ஆனால் சில நொடிகளுக்கு பின் தன் கணவரிடம் பேசிவிட்டு சகுந்தலா மகளை முறைத்தபடி வந்து நின்றார்.

“இருந்தாலும் ஒன்ற புருஷனுக்கு இம்புட்டுத் தெனவாட்டும் திமிரும் ஆகாதுடி” என்று அவர் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவளைக் குழப்ப, “என்னங்க ம்மா ஆச்சு?” என்று கேட்டாள்.

“ம்க்கும்… ஒன்ற ஐயனை விடவும் அவங்க உன்னைய நல்லா பார்த்துப்பாங்களாமில்ல” என்று நொடித்து கொண்ட சகுந்தலாவின் முகத்தில் அவன் வார்த்தையினால் ஏற்பட்ட அதிருப்தி அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஏன் இப்படி சொல்லித் தொலைச்சான்?” என்று அவளுக்குமே கொஞ்சம் கடுப்பானது.

அதன் பின் நெருங்கிய உறவினர்கள் சிலர் தமிழை அழைத்து வந்து அவன் வீடு வரை விட்டுவிட்டு புறப்பட்டனர். அப்படியே அவர்கள் சென்றிருந்தால் பரவாயில்லை.

‘இந்த வீட்டுல நீ எப்படித்தான் குடித்தனம் நடத்தப் போறியே’ என்று வருத்தப்படுவது போல மட்டம்தட்ட,

சிலர் அவள் காதோடு, “சென்னையில இருந்து படிச்ச வசதியான மாப்பிளை வந்தான்… அதெல்லாம் வுட்டு போட்டு இங்கன வந்து வக்காப்பாட்டிருக்கியே” என்று கடுப்பைக் கிளப்பினர். .

அவளின் தமையன் ரவியும் கூட செல்வதற்கு முன்னதாக, “நீ ரொம்ப புத்திசாலி பொண்ணுன்னு நினைச்சேன் தமிழ்… ஆனா நீ இப்படியொரு காரியத்தைச் செய்வன்னு நினைக்கல” என்று இளப்பமாகச் சொன்ன விதத்தில் அவள் உள்ளம் குழம்பியது.

என்னதான் சுயமாக சிந்திக்க வேண்டுமென்று எண்ணினாலும் சுற்றத்தாரின் பேச்சுக்களைக் கேட்காமல் தவிர்க்கவும் முடியாது. அதனை சுலபமாகக் கடக்கவும் முடியாது.

அதுவும் தமிழ் போன்று புத்திக்கும் மனதிற்கும் இடையில் ஊசலாடுபவர்களால் இயல்பாக இவற்றை கடந்து வருவது சிரமம்தான். ஆனால் சந்திரன் மனநிலையை இந்தப் பேச்சுக்கள் எதுவும் பாதிக்கவில்லை.

அதற்கு காரணம் அவன் மனதிலிருந்து மட்டுமே யோசிக்கிறான். அது அவளுக்கானதாக மட்டுமே இருக்கும் போது அவனுக்கு அதில் அதிகம் யோசிக்கவும் குழம்பவும் தேவையிருக்கவில்லை.

வீட்டிற்கு வந்த உறவினர்கள் கிளம்பும் வரை அமைதி காத்தவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல், அவனிடம் ஏறு ஏறு என்று ஏறிவிட்டாள்.

“ஏன்டா என்ற ஐயன் கிட்ட அப்படி பேசுனே” என்று ஆவேசமாக.

“எப்படி பேசுனேன்?” என்று அவன் சாவகாசமாகக் கேட்டான்.

“ம்ம்ம்… ஊருக்குள்ளர ஒரு பழமொழி சொல்லுவாங்க… ஒரு புல்லைக் கிள்ளி தரையில போட்டு மாப்பிளைன்னு சொன்னா… அது கூட முறுக்கிக்குமாம்”

“நான் மாப்பிளை முறுக்கு எல்லாம் காட்டல… என்ற மனசுல பட்டதை அப்படியே சொன்னேனாக்கும்… இதுல என்ன தப்பைக் கண்ண்டுட்டவ”

“தப்பில்லையா பின்ன? அவங்க கிட்ட நீ எப்படி உங்களை விடவும் நீ என்னைய நல்லா பார்த்துப்பேன்னு சொல்லுவ”

“ஏன் சொல்ல கூடாது? பொண்ணைப் பெத்தவங்க எல்லோரும் தன்னை விடவும் தனக்கு வர மருமக புள்ள அவங்கப் பொண்ணை நல்லா பார்த்துக்கணும்னுதானே ஆசை படுவாங்க”

அவனைப் பார்த்து ஏளனமாக உதட்டை வளைத்தவள், “ம்ம்ம்ம்…. சுலபமா சொல்லி போடலாம்… ஆனா பெத்தவங்களுக்கு மேலா பார்த்துக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம்… அதுவும் என்ற ஐயன் எனக்கு செஞ்ச மாதிரியெல்லாம் யாருமே செய்ய முடியாது” என்று கடுகடுத்து,

“நீ அவசரப்பட்டு வார்த்தைய வுட்டு போட்ட சந்திரா” என்றாள்.

மேலும் அவனிடம் வாக்குவாதம் வளர்க்க விரும்பாமல் முகத்தைத் தூக்கி வைத்து கொண்டு திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

எங்கு பார்த்தாலும் இருள் கவ்வியிருந்த அந்த இடத்தில் சிறு சிறு பூச்சிகளின் சத்தம் மட்டுமே மெலிதாக ஒலிக்க, அவள் மனத்தாங்கலை அங்கே வீசம் குளிர்ந்த காற்று கொஞ்சமாக மட்டுப்படுத்தியிருந்தது.

சந்தடி இல்லாமல் சந்திரன் அவள் தோளை உரசி வந்து அமர அவள் விலகி அமர்ந்தாள். மீண்டுமே அவளை நெருங்கி அமர்ந்தவன், “ரொம்ப கோபமா?” என்று இறங்க,

“தப்பு சந்திரா! நீ ஐயன்கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது” என்று அவள் அந்த விஷயத்தை விடுவதாக இல்லை. அவன் எப்படி அப்படி சொல்வான் என்ற கோபம்! அது அவர்கள் மனதை எப்படி பாதித்திருக்கும் என்ற வலி!

அதுவும் அவர்கள் இந்தத் திருமணத்தின் மூலமாக ரொம்பவும் காயப்பட்டிருக்கிறார்கள் என்பது அவளுக்குத் தெரியும். அவள் சுலபமாக அவன் உறவை ஏற்றுக் கொண்டுவிட்டாள். ஆனால் அவர்களால்…

மனம் எதைதையோ யோசித்து தவிக்க அவன் அவளிடம், “நீ நினைக்குற மாதிரி நான் அவங்களை கஷ்டபடுத்ணும்னு பேசல” என்று தெளிவுபடுத்த,

“பின்ன வேறு எதுக்கு பேசுன? என்னைய உனக்கு கட்டிக் கொடுத்தாங்க இல்ல… அதுக்கா?” என்று காட்டமாகக் கேட்கவும்

“வார்த்தையை வுடாதே… முதல விசயம் என்னன்னு தெரிஞ்சிக்கோ” என்றவன் நிதானமாக நடந்தவற்றைச் சொல்ல தொடங்கினான்.

“என்னதான் சின்ன வூடா இருந்தாலும் நம்ம வூட்டுல இருந்தாதான்டி நமக்கு மருவாதை… ஏன் நீயே என்கிட்ட சொல்லி இருக்க… ஒரு வேளை சாப்பிட்டாலும் அது நம்ம உழைப்பா நம்ம சம்பாத்யமா அது இருக்கோணோம்னு… அப்படி இருக்கும் போது நம்ம வூட்டை விட்டுட்டு ஒன்ற மாமா வூட்ல தங்கறது சரியா வருமா?” என்றவன் சொல்ல, அப்போதே அவளுக்கு விஷயம் புரிந்தது.

அவன் மேலும், “உங்க ஐயனுக்கு அவரு குடுக்கிற சீர் செனத்த எல்லாம் இந்த வூட்ல வைக்க முடியாதுன்னு கவலை… அதான் நான் சீர் செனத்த எல்லாம் வேண்டாம்… கொஞ்ச நாள் பொறுங்க… நானே உங்கப் பொண்ணுக்கு வேண்டிய வசதியெல்லாம் செஞ்சு தருவேன்னு சொன்னேன்… அப்படி சொல்லும் போதுதான் கொஞ்சம் அதிகபடியா வார்த்தையா வுட்டு போட்டேன்… அது கூட அவங்கள அவமானப்படுத்த இல்ல… உன்னைய நல்லா பார்த்துபேங்குற நம்பிக்கைல சொன்னேன்” என்றவன் சொல்லி முடிக்கும் வரை அவள் விழிகள் அவனை விட்டு அகலவேயில்லை. அவனைத் தவறாகப் புரிந்து கொண்டோம் என்று அவளுக்கு அப்போதே புரிந்தது.

“சீர் செனத்த எல்லாம் வேண்டாம்னு சொல்லி போட்டியா?” அடங்கா வியப்போடு அவள் கேட்க, .

“அது இல்ல தமிழு… ஏற்கனவே ஒன்ற மனசைக் கெடுத்துப் போட்டேன்னு ஊரெல்லாம் பேசிக்கிறாவுங்க… அப்படி இருக்கும் போது நான் இதெல்லாம் வாங்குனா…

என்னவோ இதுக்காகதான் உன்னைய கட்டிக்கிட்டேன்னும் பேசுவாங்க… வேண்டாம்… அப்படி ஒரு சொல்லு வரவே வேண்டாம்… எம்புட்டு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை… உன்னோட தேவை எல்லாத்தையும் நானே பூர்த்தி செய்றேன்” என்றான்.

அவன் சொன்ன வார்த்தையில் அவள் உள்ளம் நெகிழ்ந்து போனது. அவன் மனதை குழப்பிக் கொண்டிருந்த அவளுடைய உறவினர்களின் பேச்சுக்கள் எல்லாம் முழுக்க அபத்தமென்று தோன்ற, அவன் குணத்திற்கு முன்னே எந்தப் படித்த வசதியான மாப்பிளையும் நிற்க முடியாதென்று அவள் மனம் ஆணித்தரமாக நம்ப தொடங்கியது.

தெளிந்த ஓடை நீராக அவள் உள்ளம் சலசலக்க மனநிறைவாக உணர்ந்தவள் மௌனமாக அவன் தோளின் மீது தலை சாய்த்துக் கொண்டாள். அந்த இதமான சூழ்நிலை இன்னுமே இதம் சேர்த்தது.

“அப்போ ஒன்ற கோபம் போயிடுச்சு?” என்று அவன் வினவும்,

“அது போயிடுச்சு… இருந்தாலும் என்ற ஐயனை விட நல்லா பார்த்துபேன்னு நீ சொன்னதேல்லாம் ரொம்ப ஓவர்தான்” என்றவள் தன் பெற்றோரை விட்டுக் கொடுக்காமல் பேச, அது அவர்கள் மீதான அளவுகடந்த அன்பு என்பது அவனுக்குப் புரிந்திருந்தது.

இருப்பினும் அவன் விதாண்டவாதமாக, “நான் சொன்னா சொன்ன மாதிரி செய்வேன்… நீ பார்த்துக்கிட்டே இரு” என்று உரைக்க,

“சவால் வுடுறியாக்கும்… எப்படி? தோத்து போனா ஒன்ற பெயரை எம்.சி.ஆர்ல இருந்து சிவாஜின்னு மாத்திக்குவியா?” என்றவள் நக்கலடித்து சிரிக்க,

“ஏத்தம்டி உனக்கு” என்றவன் அவளை அப்படியே தன் மடியில் சரித்துக் கொள்ள,

“விடுடா யாரச்சும் பார்க்கப் போறாவுங்க” என்று அவள் அவனிடமிருந்து விடுபட முயன்றாள்.

“இங்கன யாரும் நம்மல பார்க்கவும் மாட்டாங்க… நம்ம பேசறதைக் கேட்கவும் மாட்டாங்க” என்று அவன் கண்ணடித்து அவள் இதழ்களில் முத்தமிட,

“உம்ம்ம்… எருமை… வெட்ட வெளில என்ன வேலைடா பண்ற?” என்றவனை விலக்கித் தள்ளிவிட்டாள்.

“ஏன்டி? அப்பதான் என்னைய எருமை பன்னின்னு கூப்பிட்டுட்டு இருந்த… இப்போ நான் ஒன்ற புருஷன்… கொஞ்சமாச்சும் மருவாதைக் கொடுத்து பேசலாம் இல்ல?”

“ஓ! இவருக்கு மருவாதை வேற கொடுக்கோனோமா? இதுல கட்டின புருஷன் வேற… போடா” என்றவள் அலட்சியமாகச் சொல்ல,

“இப்ப என்னடி சொன்ன? போடாவா” என்று அவன் அவளை அணைக்க முற்பட அவள் சாதுரியமாகத் தப்பி வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துவிட்டு,

“போடா போடா புண்ணாக்கு போடாதே தப்பு கணக்கு” என்று பாட்டுப் பாடி அவனை வெறியேற்ற,

“மவளே! பாட்டா பாடுற… நான் உள்ளே வந்தனேன்னு வை” என்றவன் மிரட்டலை அவள் மதிக்கவே இல்லை.

“கதவைத் திறக்காமலே இருந்துடுவியாக்கும்?”

“போடா… இன்னைக்கு நீ வெளிய… நான் உள்ளே”

சில நிமிட அமைதிக்கு பின், “சரிடி நீ திறக்க வேண்டாம்… நான் இங்கனயே படுத்துக்கிறேன்… எனக்கு திண்ணையில் படுத்துதான் பழக்கம்… நீ அங்கன இருக்க மெத்தையைத் தரையில் விரிச்சு படுதுக்கிடு” என்றவன் வெகுசாதரணமாகச் சொல்லிவிட்டு படுத்தும் விட்டான்.

ஜன்னல் வழியாக அவன் செய்கையைப் பார்த்தவளுக்குக் கோபமாக வந்தது.

அவனைக் கடுப்பேற்ற பார்த்து கடைசியில் தனக்கே அது ஆப்பாகிவிடும் என்றவள் நினைக்கவில்லை. அந்த இடம் வேறு புதிது. அந்த அறையின் நிசப்தம் அவளை வெகுவாக மிரட்ட, சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு தனியே படுப்பதெல்லாம் சாத்தியப்படும் என்று தோன்றவில்லை.

“ஏ… சீ… உள்ளே வந்து படு” என்றவள் அவனைத் தட்டி எழுப்ப,

“நீதானடி என்னைய வெளிய படுக்க சொன்ன” என்று அவன் அடம் பிடிக்க வேறுவழியில்லாமல்,

“சும்மா விளையாடுனேன்டா… வா டா” என்றவள் அவனிடம் கெஞ்சினாள்.

“உஹும் முடியாது” என்று அவளிடம் முரண்டு பிடிப்பது போல் நடித்தவன் அவளை நன்றாக தவிக்க விட அவள் அதற்கு மேல் முடியாமல்,

“ம்ம்கும்… நீ ஒன்னும் வரவே வேண்டாம்” என்று நொடித்துக் கொண்டு எழுந்து செல்லவும், சந்தடியில்லாமல் அவள் பின்னோடு வந்து அவளை அலேக்காக தூக்கிக் கொண்டுவிட்டான்.

“டேய் சந்திரா… வுடுடா” என்றவள் கத்திக் கூப்பாடு போட, அவளின் அபய குரலெல்லாம் அங்கே காற்றோடு கரைந்து போனதுதான் மிச்சம்!

“பாட்டா பாடுறவ… அதுவும் போடா போடா புண்ணாக்கு” என்றவன் கல்மிஷ புன்னகையோடு,

“சும்மா விளையாடுனியா? இப்ப நான் விளையாட போறேன் பாரு” என்று அவன் தொடங்கிய காதல் விளையாட்டில் முற்பாதி அவன் ஆளுமையிலும் பிற்பாதி அவளின் ஆதிக்கத்திலும் என்று சலிக்க சலிக்க இருவரும் ஆடித் தீர்த்ததில் அவர்களின் கோபமும் மனஸ்தாபமும் வந்த தடமே தெரியாமல் தொலைந்து போனது.

indra.karthikeyan has reacted to this post.
indra.karthikeyan
Quote

Super ma 

You cannot copy content