You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

En Iniya Pynthamizhe - 2

Quote

2

கடந்த பத்து வருடங்களில் அந்த கிராமத்திலிருந்த வீடுகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மாடி வீடுகளாக மாறியிருந்தன. தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகதான் கூரை வேய்ந்த வீடுகளையே பார்க்க முடிந்தது. அவ்வகை கூரை வீடுதான் மதுசூதனின் வீடும்.

கூரை வீடாக இருந்தாலும் உள்ளே சுவரெல்லாம் வைத்து வசதியாக சமையலறை, படுக்கையறை என்று தனித்தனியாக அறைகளும் சகுந்தலாவின் தேநீர் கடைக்கு முன்புறம் தனியாக தடுப்பு வைத்து சுவரும் வைத்து கட்டப்பட்டிருந்தது.

அதேநேரம் தொலைக்காட்சி, குளிர்சாதனபெட்டி என சாதாரண நடுத்தர குடிக்களின் வீட்டிலிருக்கும் அனைத்து மின்சாதன உபகரணங்களும் அவர்கள் வீட்டிலும் இருந்தன.

பின்புறம் மாட்டு கொட்டகை, கிணறு, விறகடுப்பு வைத்த தனி கைச்சாளை(சமையலறை) கூடவே தென்னை, வேப்பம், அரசம் என்ற மரவகைகளும் மற்றும் கிழங்கு காய்கறி வகைகளும் எனக் கிடைத்த இடங்களில் எல்லாம் வஞ்சனை இல்லாமல் பயிரிட்டிருந்தனர். அந்த செடிகளுக்கு அவர்கள் குளிக்கும் தண்ணீரே பாய்வது போல கழிவறைகள் வெளியேவே அமைக்கப்பட்டிருந்தன.

இதெல்லாவற்றையும் தாண்டி கிராமப்புற வீடுகளுக்கே உரித்தான திண்ணைகள் மதுசூதனின் வீட்டிலும் நீட்டமாக அதுவும் ஒரேநேரத்தில் பத்து பதினைந்து பேர் அமர்ந்து அரட்டை அடிக்குமளவுக்காய் இருந்தது. தற்போது அந்த பெரிய திண்ணையில் அரசன் மட்டுமே தனியே பரிதாபகரமாக அமர்ந்திருந்தான்.

உள்ளே அவன் சகோதிரிகள் செய்யும் அலும்புகள் தாங்க முடியாமல்தான் அவன் அங்கே வந்து அமர்ந்தது.

“யக்கா… செத்த நேரம்… நான் சீவிக்கிறேனே” என்று செல்வி கெஞ்ச,

“நான் முடிச்ச புறவுதான்” என்றாள் தமிழ் திட்டவட்டமாக!

அதற்குள் சகுந்தலா வந்து, “தமிழு… செல்வி… வேன் வந்து காத்திட்டு கிடக்குல… வெரசா கிளம்பி வாங்க… நேரத்தோடு மண்டபத்துக்கு போவோணும் இல்ல” என்று குரல் கொடுக்கவும்,

“நாங்க பஸ்ல வந்துக்கிடுறோம்… நீங்க அரசனை அழைச்சு போட்டு கிளம்புங்க ம்மா” என்று உள்ளிருந்தபடி தமிழ் குரல் கொடுக்க,

“ம்க்கும்... ஒம்பட ரெண்டு பேரையும் நம்பி வூட்டை வுட்டு போனா அம்புட்டுதான்டி” என்று கடுப்பான சகுந்தலா மேலும், “இப்ப உள்ற வந்தேன்னு வை… இரண்டு பேர் தோலையும் உரிச்சு தொங்க வுட்ருவேனாக்கும்… சீக்கிரம் கிளம்பி வாங்கடி“ என்று மிரட்டவும்,

“இதோ அஞ்சே நிமிஷங்க ம்மா” என்று இருவரும் அடித்து பிடித்து தயாராகி வந்து நின்றனர்.

கிளி பச்சை நிறத்தில் தமிழ் அழகாக பட்டு புடவை உடுத்தியும், செல்வி சிவப்பு வண்ணத்தில் பட்டுப்பாவடை தாவணியும் அணிந்து ஒப்பனைகளோடு பொன்னும் பூவும் சூட்டி அம்சமாக அலங்கரித்தபடி வந்து நிற்க,

“எத்தனை வெசை கூப்புடுறது? இரண்டு பெரும் வராளுங்க பாரு… ஆடி அசைஞ்சு திருவாரூர் தேராட்டும்” என்று சகுந்தலா கடுகடுத்த அதேநேரம் புடவையில் பெரிய மனுஷி போல வந்து நின்ற மூத்தவளை பார்த்து அவருக்கு மனம் நெருடியது. தற்போதுதான் அவள் பன்னிரெண்டாவது தேர்வே எழுதி முடித்திருந்தாள்.

அதற்குள் இத்தனை முதிர்ச்சியாகத் தெரிகிறாளே என்று தாயிற்கே உண்டான தவிப்பும் மனகலக்கமும் அவரைச் சூழ்ந்து கொண்டது.

அவர் இப்படி யோசித்திருக்க அரசன் இடைபுகுந்து, “உங்க இரண்டு பேரோட அழகுக்கு முன்னாடி திரிஷாவும் நயன்தாராவுமே பிச்சை வாங்கோனுங்க க்கா” என்று கிண்டல் செய்தவன் வடிவேல் பாணியில், “ஒரேடியா எம்புட்டு மேக் அப்ப்ப்ப்ப்பூ” என்று இருவரையும் சேர்த்தே வார, அவன் சொன்ன விதத்தில் அத்தனை நேரமிருந்த கவலை முழுவதும் மறைந்து சகுந்தலா கொல்லென்று சிரித்துவிட்டார்.

“என்றா நக்கலா?” என்று தமிழ் தம்பியை முறைக்க, “அவன் சொன்னதுல என்னங்கடி தப்பு… இரண்டு பேரும் சீவி சிங்காரிச்சு வர்றதுக்குள்ளார அங்கன கண்ணாலமே நடந்து முடிஞ்சி போடும்” என்று மகனுக்கு பரிந்து பேசினார் சகுந்தலா.

இருசகோதரிகளும் தம்பியை வஞ்சமாகப் பார்த்து வைத்து, “மவனே! நீ தனியா சிக்குவ இல்லடி” என்று சமிஞ்சை செய்ய,

அரசனோ தன் சகோதிரிகளுக்கு பழுப்பு காட்டிவிட்டு, “சிக்குனாதானே” என்று தன் அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு முன்னே சென்றுவிட்டான்.

அவர்கள் கிராமத்திலிருந்து புறப்பட்ட அந்த வேன் மண்டபத்தை வந்தடைய ஒரு மணிநேரத்திற்கு மேலானது.

மண்டபத்தின் நுழைவு வாயிலில் பூவலங்காரங்களோடு, “ரவீந்திரன் வெட்ஸ் அனிதா லக்ஷ்மி” என்று மணமக்கள் பெயர் பொறிக்கப்பட்டிருந்த பலகையை தமிழ் வெகுஆர்வமாகப் பார்த்தபடியே கடந்து சென்றாள்.

“என்னங்க க்கா பார்க்குறீங்க?” என்று செல்வி கேட்க,

அவளின் கண்களிலிருந்து பொங்கிய ஆவல் பலகையிலிருந்த பெயரை பார்த்து அல்ல. பீ இ என்ற மணமக்களின் பெயருக்கு அருகிலிருந்த பட்டத்தை பார்த்துதான்!

அவள் அதனை தன் தங்கையிடம் சுட்டிக்காட்டியபடி, “எனக்கு இஞ்சினியர் காலேஜ்ல சீட்டு கிடைச்சு போடும்லடி” என்று ஏக்கமாகக் கேட்க,

“உங்களுக்கு கிடைக்காம வேற யாருங் க்கா… இந்த ஜில்லாவில நீங்கதான் முத மார்க் எடுக்க போறீங்களாக்கும் பார்த்துக்கிட்டே இருங்க” என்று தமக்கை மீதிருந்த நம்பிக்கையை தங்கை பறைசாற்ற தமிழின் விழிகளில் நீர் ஒதுங்கியது.

இன்றைய காலகட்டத்தில் பொறியியல் படிப்பு என்பது பெரிய விஷயமாக இல்லாவிட்டாலும் தமிழை போன்ற ஒரு சாதாரண விவசாயின் மகளுக்கு அது பெரிய கனவுதான்.

சகுந்தலா மகள்களை நேராக மணமகன் அறைக்கு அழைத்து செல்ல, “வாங்க சித்தி… வா தமிழு செல்வி” என்று மணமகன் ரவி அவர்களை வரவேற்றான்

“வாங்க கண்ணுங்களா?” என்று அவனின் தாயும் அவர்களை பாசமாக அழைத்த அதேநேரம் தன் ஒரகத்தி சகுந்தலாவிடம், “ஏன் சக்கு… செத்த சீக்கிரமா வந்திருக்கலாம்ல” என்று கேட்டு கொண்டே திருமண வேலைகளில் அவரையும் சேர்த்து இணைத்து கொண்டார்.

“எப்படி இருக்கீங்க ண்ணா? இப்ப எல்லாம் நீங்க ஊரு பக்கமே வர்றது இல்ல” என்று தமிழ் ரவியை விசாரித்து கொண்டிருக்க,

“எங்க ம்மா வர்றது… வேலையே சரியா இருக்கு” என்றான்.

“ஆமா நீ போர்ட் எக்ஸாம் முடிச்சிருக்க இல்ல… மேலே என்ன படிக்க போற?” என்றவன் அவளிடம் கேட்டு கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த பெரியவர் அவனிடம் பேச்சு கொடுத்தார்.

“ஊர்ல இருக்க விவசாய நிலத்தை எல்லாம் வித்து போட்டியாட்டமா இருக்கு” என்றவர் கேட்க,

“ஆமா மாமா… அதை வைச்சிக்கிட்டு நான் என்னத்த செய்ய… என்னால விவசாயம் எல்லாம் பார்க்க முடியாது… அப்பாவும் இப்ப இருக்க நிலைமையில விவசாயம் பார்க்கிறது கஷ்டம்தான்” என்றான் அவன்.

“என்னவே அப்படி சொல்லி போட்ட… பூர்விக நிலத்தை வித்து போட்டன்னா சொந்த ஊரு கூட உனக்கு சொந்தமில்லாம போயிடுமாக்கும்” என்றவர் வருத்தமாக அதேநேரம் கோபமாகவும் சொல்லிவிட்டு செல்ல அவன் காதை குடைந்தபடி, “கடுப்படிக்கிறாங்க… சொந்த ஊரு… பூர்விகம்… விவாசயம்னு சொல்லிக்கிட்டு” என்றவன் தமிழ் புறம் திரும்பி,

“ஏன் தமிழு… நான் படிச்ச படிப்புக்கு இந்த ஊர்ல என்னத்த செய்ய முடியும்… அதுவுமில்லாம பி இ முடிச்சு நான் ஐ டி கம்பெனில பிளேசான பிறகுதான் இன்னைக்கு இந்தளவு வசதியா இருக்கேன்… சென்னையில ஒரு தனி ஃபிளாட் வாங்கிவிட்டிருக்கேன்…

ஆனா இவங்க சொல்லற மாதிரி சொந்த ஊரு விவசாயம்னு இருந்தா இதெல்லாம் சாத்தியமாகுமா… நம்ம தாத்தா உன் அப்பா என் அப்பா எல்லோரும் விவசாயம் பண்ணாங்க அப்படி என்னத்த சேர்த்து வைச்சு போட்டாங்க… விவசாயம் பண்ணாம ஒரு வேளை ஆளுகொரு பொட்டி கடை வைச்சு இருந்தலாவது இன்னைக்கு அது பெரிய சூப்பர் மார்கெட்டாவாச்சும் மாறியிருக்கும்” என்றவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு சுருக்கென்று தைத்தது.

ஏனோ தன் அப்பாவின் வேலையை பற்றி அவன் அத்தனை கீழாகப் பேசுவது மனதிற்கு வருத்தமாக இருந்த போதும் ஒரு வகையில் அது ஏற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான உண்மைதான் என்றும் தோன்றியது.

“நீயும் என்னை மாதிரி படிச்சு உன் குடும்பத்தை ஒசத்த பாரு”

“நானும் பி இ கம்ப்யூட்டர் சைன்ஸ் தானுங்கண்ணா படிக்கலாம்னுட்டு இருக்கேன்” என்றவள் சொன்ன நொடி அவன் முகத்தில் அத்தனை பிரகாசம்.

“சூப்பர் தமிழ்… கேம்பெஸ் இண்டர்வியூ வர நல்ல காலேஜா பார்த்து சேரு… அதுதான் ரொம்ப முக்கியம்… பெட்டர் நீ சென்னையில இருக்க காலேஜ் கிடைச்சா சேர்ந்துடு… நம்ம வீட்டுல இருந்தே காலேஜ் போயிட்டு வரலாம்” என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது,

“டே மாப்பிளை” என்று ரவியின் தோழர்கள் அனைவரும் உள்ளே நுழையவும் தமிழ் அதற்கு மேல் அங்கே இருப்பது உசிதமில்லை என்று எண்ணி வெளியே வந்துவிட்டாள்.

“எங்கே இந்த செல்வி புள்ள? நம்ம கூடத்தானே இருந்துச்சு” என்று தங்கையைத் தேடிக் கொண்டு மண்டபத்திற்கு பின்புறமாக வரவும்,

“ஏடி கருவாச்சி!” என்ற அழைப்பில் அவளுக்கு திக்கென்றது. அதேநேரம் தாறுமாறாக கோபம் ஏறியது.

“இந்த பக்கி எங்க இங்கன வந்துச்சு” என்று அவள் கடுப்பாகத் திரும்ப சந்திரன் பின்னிருந்து அவளை பார்த்து எள்ளலாக நகைக்கவும், “யாரை பார்த்துடா கருவாச்சின்னு சொன்ன எருமை?” என்றவள் சீறினாள்.

“உன்னைய பார்த்துதான்டி சொன்னேன் என் கருவாச்சி” என்றவன் மீண்டும் அழுத்திச் சொல்லவும்,

“மறுக்கா அப்படி சொன்னா ஒன்ற வாயைக் கிழிச்சு போடுவேனாக்கும்” என்றவள் கொந்தளிக்க,

“அதுக்கு முன்ன நான் ஒன்ற பல்லைத் தட்டி கையில கொடுத்து போடுவேனாக்கும்” என்றவன் பதிலுக்கு அவளிடம் மல்லுக்கு நின்றான்.

இவர்கள் சண்டையினூடே, “எம். சி. ஆரு” என்ற பேச்சி கிழவி அழைத்து கொண்டே அங்கே வர, “அம்மத்தா” என்றான் அவன்.

“ஏய்யய்யா ராசா… எங்கயா போன… உன்னைய எங்கனய எல்லாம் தேடி போட்டு வரேன் தெரியுமா?” என்றவர் பாசமாக உருக,

“ஷப்பா முடியல” என்று தமிழ் தலையிலடித்து கொண்டதோடு அல்லாமல் பேச்சியைப் பார்த்து, “ஏ! கெழவி… ஒன்ற பேரனை நீ இடுப்பில வைச்சு கூட கொஞ்சிக்கோ… ஆனா எம்.ஜி.ஆருன்னு மட்டும் கூப்பிட்டு அந்த நல்ல மனுஷனோட பேரை நாரடிக்காதே” என்றவள் கடுப்பிலும் கடுப்பாக, “அடியேய்” என்று பொங்கினான் சந்திரன்.

அப்போதுதான் பேச்சி அவளை உற்று பார்த்து யாரென்று அடையாளம் தெரியாமல், “ஆரு டி அவ… எம். சி. ஆரை கேவலமா பேசறது” என்று கேட்டு வைத்தார்.

“ஏ செவிட்டு கெழிவி… நான் ஒன்னும் எம். சி. ஆரை சொல்லல… ஒன்ற உருப்படாத பேரனைத்தான் சொன்னேன்”

“எடுபட்ட சிறுக்கி… என்ற பேரனை பத்தி நீ யாருடி பேச?”

“நான் ஒன்னும் பேசல… ஒன்ற பேரன்தான் என்னைய தேடிக்கிட்டு வந்து வம்பு வளர்க்கான்”

“ஐயோ! அம்மத்தா ஒன்ற மேல சத்தியமா இல்ல… இவதான் என்கிட்ட பேசி வம்பு வளக்கா” என்றவன் பாட்டி தலையில் கை வைத்து அப்படியே பிளேட்டை தலை கீழாகத் திருப்ப,

“அட! பக்கி பயபுள்ள” என்றவள் அதிர்ச்சியாகும் போதே பேச்சிக்கு சுறுசுறுவெனக் கோபமேறியது.

“ஊரெல்ல்லாம் இப்படிதான் என்ற பேரனைப் பார்த்து புளுகிட்டு திரியிரியாடி கொழப்பெடுத்த சிறுக்கி… நீ அவனை வம்பு இழுத்து போட்டு அவன் ஒன்றகிட்ட வம்பு இழுத்தான் புளுகுதியா… கேட்கிறவன் கேனயனா இருந்தா கேப்பையில நெய் வடியுதும்பாங்களாம்…“ என்று திருமணம் மண்டபம் என்றும் பாராமல் பேச்சி கிழவி தன் திருவாயைத் திறக்கவும், இனி ஒரு நிமிடம் கூட அங்கே நிற்க கூடாது.

அதுதான் தனக்கும் தன் காதுக்கும் நல்லது என்று அவள் ஓட்டம் பிடிக்க செல்வி அவளை வழிமறித்து, “யக்கா… எங்க அவசரமா ஓடுற” என்று வினவ அவள் மூச்சு வாங்கியபடி,

“உன்னைய தேடிக்கிட்டு போய் அந்த லூசு கெழவி கிட்டயும் அது பேரன்கிட்டயும் மாட்டிக்கிட்டேன் புள்ள” என்றாள்.

அதேநேரம் சந்திரன் மூச்சு விடாமல் பேசிய தன் பாட்டியிடம், “போதும் வுடு அம்மத்தா” என்று நிறுத்த,

“ஒரு நாள் இல்ல ஒரு நாள் அவ தோலை உரிச்சு உப்பு கண்டம் போடல என்ற பேர் பேச்சியம்மா இல்ல” என்று ஆவேசமாக அவர் சபதம் வேறு எடுக்க,

“ஆமா அம்மத்தா… செய்யோணும்… அந்த வாயாடியை ஏதாச்சும் செய்யோணும்” என்றவன் சொன்ன தொனியில் பழிவாங்கலோ அல்லது கோபமோ துளி கூட இல்லை. அதற்கு மாறாய் வேறு ஒரு அர்த்தம் ஒளிந்திருந்ததை பேச்சி கிழவியின் வயதிற்கு அவரால் நிச்சயம் புரிந்து கொள்ள இயலாது.

indra.karthikeyan has reacted to this post.
indra.karthikeyan
Quote

Super ma 

You cannot copy content