You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

En Iniya Pynthamizhe - 22

Quote

22

மைசூரில் நான்கு மாத கால பயிற்சியை முடித்துக் கொண்டு சென்னையில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள் பைந்தமிழ்.

எப்படி இந்த நான்கு மாதங்கள் ஓடியதென்றே அவளுக்குத் தெரியவில்லை. தனிமைக் கொடுமையாக இருந்த போதும் தான் நினைத்ததை சாதித்துவிட்டோம் என்ற பூரிப்பு மற்ற விஷயங்களை மறக்கடித்திருந்தது.

கிட்டத்தட்ட சென்னையில் வேலைக்கு சேர்ந்தும் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. அங்கிருந்தப் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கிக் கொண்டாள்.

அந்த வேலை இடம் போன்றவற்றில் பழகுவதில் இருந்த சிரமமங்களை சமாளிக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. எப்படி நாட்களும் வாரங்களும் ஓடுகிறதென்றே தெரியாதளவுக்குப் பறந்துக்கட்டிக் கொண்டு சென்றன.

வாழ்க்கையே முற்றிலும் இயந்திரத்தனமாக மாறிவிட்டது போன்ற உணர்வு. உடன் வேலை செய்பவர்கள் இயல்பாக பழகினாலும் அவளால் ஒரு எல்லைக்கு மேல் அவர்களிடம் கலந்து பழக முடியவில்லை. அவ்வப்போது அலுவலகத்தில் நடக்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கூட பெரிதாக அவள் கலந்து கொள்ள மாட்டாள்.

அந்த கான்க்ரீட் காடுகளுக்குள் தானும் இயந்திரத்துடன் மற்றொரு இயந்திரமாக மாறிவிட்டது போன்ற எண்ணம் அவளுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும். அந்த அலுவலக ஏசி காற்றை விடவும் அவள் கிராமத்தில் வீசும் சில்லென்ற காற்றுக்கு மனம் ஏங்க துவங்கியது. அதுவும் சந்திரன் வீட்டிலிருந்த காலத்தில் இயற்கையோடு இயற்கையாக இயைந்து வாழ்ந்த அந்த உணர்வுடன் ஒத்து பார்க்கையில் இதென்ன வாழ்க்கை என்ற வெறுமைதான் அவளுக்கு இருக்கும்.

ஆனால் ஏதோ ஒன்று அவளை அங்கே பிணைத்து வைத்திருந்தது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்குச் சென்ற போது அங்கேயே தங்கவிடலாமா என்றவள் மனம் தவிக்கும். பிறகு மனம் தானாக மாறிவிடும்.

இதற்கிடையில் சந்திரனுக்கு அவளுக்கும் இடையிலான உறவின் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. அவன் கோபமாக நடந்து கொள்ளவில்லையே தவிர அதே ஒதுக்கத்துடன்தான் நடந்து கொண்டான்.

அவ்வளவுதானா? அவனுக்கும் எனக்கும் இருந்த காதல் வெறும் உடல் சார்ந்த ஈர்ப்புதானா? மனதளவில் என் பிரிவு அவனை தாக்கவே இல்லையா?

என்னதான் அவள் வேலையில் ஈடுப்பட்டாலும் இந்தக் கேள்விகள் எல்லாம் அவள் மனதைக் குடைந்து கொண்டே இருந்தன. சில நேரங்களில் அவனிடம் அலைபேசியில் பேசும் போது தன் ஆதங்கத்தைக் கொட்டுவிட நினைப்பாள். ஆனால் அவன் வேலை இருப்பதாக சாக்குப் போக்குச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிடுவான்.

தனக்கும் சந்திரனுக்கும் இடையில் உண்மையிலேயே காதல் என்ற ஒன்று இருக்கிறதா?

திருமணமான பிறகு இப்படி யோசிப்பது முட்டாள்தனம் என்று தெரிந்த போதும் கூட அவளால் அப்படி யோசிக்காமலும்… தன் மனதிடம் அந்தக் கேள்வியைக் கேட்காமலும் இருக்க முடியவில்லை!

முழுவதுமாக மூன்று மாதம் மட்டுமே சேர்ந்திருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் அவனுடன் சந்தோஷமாக இருந்தது வெறும் இரண்டு வாரங்கள்தான். அதற்கு பிறகு அவர்கள் உறவிற்கு இடையில் புகுந்து கொண்ட வெறுமை இந்த ஆறு மாதத்தில் இன்னும் அதிகமாகிவிட்டதாகவே தோன்றியது.

அப்படி அவளுக்கு யோசித்ததற்கு மிக முக்கிய காரணம் அவள் உடன் தங்கியிருந்த நேத்ரா என்ற வடஇந்திய பெண்! இரவு பகல் பாராமல் தன் காதலனுடன் ரகசிய உரையாடலில் லயித்து களித்திருக்கும் பெண்ணைப் பார்க்க அவளுக்கு வியப்பாகவும் அதேநேரம் பொறாமையாகவும் கூட இருக்கும்.

என்னதான் நேத்ரா ரகசியமாகப் பேசினாலும் தமிழின் காதுகளை அவளது காதல் மொழிகள் அதுவும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கலந்து வந்து அவளைக் கடுப்பபேற்றியது.

நீயில்லாமல் சாப்பிட முடியவில்லை தூங்க முடியவில்லை… எதுவுமே எனக்கு இயங்கவில்லை என்று காதலில் அவள் நெகிழ்ந்து உருகும் போது தமிழால் அவற்றை இயல்பாகக் கடந்துவிட முடியவில்லை.

ஏனெனில் இந்த ஒரு மாதத்தில் காலை அல்லது மாலை என ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே சந்திரனும் அவளும் பேசிக் கொள்வது வழக்கம்.

அதுவும் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக நீடிக்காத அவர்களின் உரையாடலில் நலவிசாரிப்புகளளைத் தாண்டி காதலும் கொஞ்சலும் இடம்பெற்றதே இல்லை. இவளாக ஏதாவது பேச்சை வளர்த்தாலும் வேலை இருக்கிறது என்று சொல்லி பட்டென்று அவன் அந்த உரையாடலைக் கத்தரித்து விடுவது அவள் குழப்பத்தை மேலும் அதிகரித்தது.

ஆனால் அன்று அந்த இரண்டு நிமிட பேச்சிற்கு கூட சந்திரன் அழைக்கவில்லை. அவளாக அழைத்த போதும் அவன் பேசி அணைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதில் திரும்பி அவனாக அழைப்பான் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து அவள் ஏமாந்ததுதான் மிச்சம்.

அதுவும் அன்று சனிக்கிழமை. மனம் முழுக்க ஒருவிதமான தனிமை சூழ்ந்து கொண்டது.

நேத்ரா வேறு நேற்று இரவிலிருந்து கடலைப் போடுவதை நிறுத்தியபாடில்லை. அப்படி என்னதான் பேசிக் கொள்வார்கள் என்று உள்ளம் கடுகடுத்தது.

அவர்கள் விடுதியின் மாடியில் சென்று நின்று கொண்டாள். தனிமையின் வலியில் மூழ்கியவளின் விழிகளில் கண்ணீர் சுரக்கத் தொடங்கியது.

கொஞ்சம் மனம் லேசான பிறகு இவள் மீண்டும் அறைக்கு வர நேத்ரா இன்னும் செல்பேசியில் அளவளாவிக் கொண்டிருந்தாள். அதுவும் ஃபோனை சார்ஜில் போட்டபடி!

‘அட கரம்மமே’ என்று தலையிலடித்துக் கொண்டு நுழைய, அவள் செல்பேசியில் மூன்று மிஸ்ட் கால்!

பரபரப்பாய் யாரென்று பார்த்த போது சகுந்தலா அழைத்திருந்தார், காற்று போன பலூன் போல அவள் முகம் மீண்டும் சுண்டிப் போனது.

‘இவன் பேசலன்னு யோசிச்சு யோசிச்சு அம்மாவுக்கு கூட பேசாம விட்டிருக்கேன்’ என்று எண்ணிக் கொண்டே அவருக்கு அவள் அழைக்க,

“ஃபோன் பண்ணா எடுக்க மாட்டியா?” காரமாக ஒலித்தது அவர் குரல். அவள் விளக்கம் கொடுப்பதற்குள் அவரே முந்திக் கொண்டு,

“எதுக்கு ஒன்ற புருஷன் ஊர் பிரச்சனையெல்லாம் இழுத்து வுட்டுக்கிட்டு இருக்காரு…. நல்ல வேளை தலைக்கு வந்தது தலை பாகையோட போச்சுங்குற மாதிரி வந்தவனுங்க பயிரை மட்டும் நாசம் பண்ணிட்டுப் போயிட்டானுங்க” என்றதும் அவள் அதிர்ந்து,

“என்னங்கமா சொல்றீங்க? பயிரை நாசம் பண்ணிட்டாங்களா?” என்றாள்.

“ஏன்? உனக்கு தெரியாதா?”

“இல்லிங்க ம்மா அவர் என்கிட்ட காலையில இருந்து பேசவே இல்ல”

அவள் சொன்னதைக் கேட்டு சகுந்தலா மௌனமாகிட, “ம்மா… என்னாச்சுங்கம்மா பேசுங்க?” என்றாள் பதட்டத்தோடு!

“நீ அவங்க கிட்ட பேசு… தேவையில்லாம எந்தப் பிரச்சனைக்கும் போக வேண்டாம்னு சொல்லு… பயிரை நாசம் பண்ண வரைக்கும் சரி… இதுவே அவங்க உசுருக்கு ஏதாச்சும் ஆபத்து வந்திருந்தா” என்று அவர் சொல்லி நிறுத்த, மேலே அவளால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.

அவர் பேசி முடித்து அழைப்பைத் துண்டித்துவிட மீண்டும் சந்திரனுக்கு அழைத்தாள். அவன் பேசி அணைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே இருக்க, அவளின் பதட்டம் அதிகரித்தது.

அங்கே அவனுடைய வேதனைகளைப் பகிர்ந்து கொள்ள கூட யாருமே இல்லையே! இந்த எண்ணம் உதித்த மறுகணம் அவளுக்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை. உடனடியாக ஊருக்குச் செல்வது எப்படி என்றுதான் யோசித்தாள்.

அவள் இப்படி யோசித்து பதறிய நேரத்தில் சந்திரன் வீட்டில்…. ஊர்க்காரர்கள் மொத்தமாகக் குழுமியிருந்தனர்.

“இன்னைக்கு சந்திரா பயிரை நாசம் பண்ணவங்க… நாளைக்கு நம்ம பயிரையும் நாசம் பண்ணுவாங்க… பண்ணலாம் என்ன… கண்டிப்பா பண்ணுவாங்க” என்று ஒருவர் குமுற,

“இதை பத்தி நம்ம கலக்ட்டர் கிட்ட மனு கொடுத்தோம்… ஆனா ஒன்னும் பிரயோசனமில்லையே”

“நம்ம நதியை நாசம் பண்ணி அழிச்சுப் போட்டாங்க… இப்ப நம்ம கிராமத்தையும் மொத்தமா அழிச்சுப் போடா பார்க்குறாங்க”

இப்படி அந்தக் கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராக தங்கள் உணர்வுகளைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்க, அவர்கள் குரலில் கோபம் மட்டுமில்லை. ஆழமான வலியும் வேதனையும் இருந்தது.

“நம்ம எல்லாம் ஒத்துமையா இருந்தா யாராலையும் நம்மல ஒன்னும் பண்ண முடியாது… இதை இப்படியே வுட்டோம்னா நாளைக்கு நமக்குதான் பெரிய பாதிப்பு” என்று சந்திரன் பேசவும்.

“சந்திரன் சொல்றதுதான் சரி” என்று அங்கு குழுமியிருந்த கிராமத்தினர் அனைவரும் அவனுக்கு ஆதரவாகப் பேசினர்.

நடுநாயகமாக அமர்ந்திருந்த ஊர் தலைவருமே அவன் சொல்வதைச் சரியென்று ஆமோதித்து,

“இப்போ சந்திரனுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு நம்ம என்ன பண்ண போறோம்?” என்று கேள்வியை தலைவர் பொதுவில் வைக்க எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“நம்ம ஊருக்காகதானே தம்பி இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கு… அதனாலதான் அந்தக் களவாணி பயலுங்க சந்திரனோட பயிரை நாசம் பண்ணிப் போட்டாங்க… நம்ம ஊர்காரவுங்க எல்லாம் சேர்ந்து தம்பிக்கு எதாவது செய்யோனோம்” என்று ஒரு முறுக்கு மீசை சொல்ல,

“இல்லைங்க யா… வேண்டாம்… நான் பார்த்துக்கிறேன்” என்று சந்திரன் மறுத்தான்.

“அதான் அவன் பெஞ்சாதி நல்லா சம்பாதிக்குறா இல்ல… பெருசா அவனுக்கு ஒரு நஷ்டமுமில்ல” என்று இடையில் ஒருவன் கேலியாகச் சொல்ல,

“அதுக்குதானே பா… நல்லா படிச்ச புள்ளைய பார்த்து மயக்கி இவன் வலையில விழ வைச்சு கண்ணாலம் கட்டிக்கிட்டான்” என்று மற்றொருவன் ஒத்து ஊத, சந்திரன் முகம் கன்றிவிட்டது,

“தலைவர் இருக்காருன்னு மரியாதை இல்லாம இப்படி ஆளாளுக்குப் பேசிட்டு இருந்தா என்னதான் அர்த்தம்?” என்று கண்டிப்போடு ஒலித்த முறுக்கு மீசையின் குரலில் அந்தப் பேச்சுக்கள் அதோடு நின்றுவிட்டன. ஆனால் சந்திரனின் கொதிப்பு அடங்கவேயில்லை.

அதற்கு பிறகு அந்தக் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் களைந்துவிட ஊர் தலைவர் அவன் தோளைத் தட்டி, “நீ செஞ்சது பெரிய விசயம் தம்பி” என்று அவனைப் பாராட்டிவிட்டு தன் கைப்பையிலிருந்த பணத்தை எடுத்துக் கொடுக்க,

“எனக்கு வேண்டாமுங்க ஐயா… நான் பார்த்துக்குவேன்” என்று சந்திரன் திடமாகச் சொல்ல அவர் அவன் தோளில் தட்டிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட மதுசூதனன் அவனிடம் வந்து நின்று,

“நீ செஞ்ச வீரசாகசத்தை ஊர் வேணா பாராட்டலாம்… அவனுங்களுக்கு என்ன வந்துது… சுலுவா பேசிட்டுப் போயிட்டே இருப்பாய்ங்க

ஆனா என்னால அப்படி போக முடியாது… நான் ஒன்னைய நம்பி என் பொண்ணைக் கொடுத்திருக்கேன்… நீ செய்ற ஒவ்வொரு காரியமும் என் பொண்ணோட வாழ்க்கையையும் சேர்த்தே பாதிக்கும்குறதை நினைப்புல வைச்சுக்கோ” என்று எச்சரிக்கையாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

“இப்ப என்ன இவர் சொல்ல வராரு… நடக்குற அநியாயத்தை எல்லாம் பார்த்தும் பார்க்காம இருந்திருக்கோனும்கிறாராக்கும்?” என்று புலம்பியபடி திண்ணையில் வந்து அமர்ந்தவனுக்கு, அவர் மகளைப் பற்றி சொன்னதுதான் இன்னும் எரிச்சலை மூட்டியது.

‘ஆமா… அவளுக்கு என் மேல அப்படியே ரொம்ப அக்கறை’ என்று யோசித்தவனுக்கு ஊர்காரர்களின் கேலி பேச்சுக்கள் நினைவுக்கு வந்து சமட்டையால் ஓங்கி அடித்தது போலிருந்தது.

தன் காதலை தன்னவளே புரிந்து கொள்ளாத போது ஊர்காரர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று தான் யோசித்து வருத்தப்படுவதே முட்டாள்தனமாக தோன்றியது.

“அவள் தன்னை உண்மையிலேயே காதலித்தாளா? காதலிக்கிறாளா?” என்று தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டவனுக்கு பதில் கிடைக்கவில்லை. தலைவலிதான் கிட்டியது.

முந்தைய இரவில் உறக்கம் இல்லாமல் சுற்றி அலைந்ததில் தலை பாரமாக அழுத்த வலியால் வெகுநேரம் அவதியுற்றவனுக்கு தனக்காக யாருமில்லை என்ற வேதனையில் உள்ளம் வலித்ததுதான் அதிகம். அப்படியே திண்ணயில் சாய்ந்து கண்ணயர்ந்துவிட்டான்.

எத்தனை மணி நேரம் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான் என்பதை கூட அவன் அறிந்திருக்கவில்லை

“அண்ணே” என்று அவனை ஒரு கை உலுக்கவும் மெல்ல கண் விழித்து பார்த்தவனுக்கு சுளீரென்று வெயில் முகத்தில் அடித்ததை கூட அப்போதே உணர முடிந்தது.

“வா கண்ணா… நீ எப்போ வந்த?” என்று கேட்டுக் கொண்டே தலையைப் பிடித்துக் கொண்டான்.

“என்ன அண்ணே! என்னாச்சு? இம்புட்டு நேரமா தூங்கிட்டு இருக்கீங்க” என்று கண்ணன் வினவ,

“நேத்தெல்லாம் கொஞ்சம் தலை வலி… இப்ப கூட லேசா வலிக்குற மாதிரி இருக்கு” என்று சொல்லியபடி எழுந்தவன் தலையைக் கோதியபடி, “மணி என்னடா?” என்று விசாரிக்க,

“பத்து ண்ணா” என்றதும்,

“அம்புட்டு நேரமா தூங்கிப் போட்டேன்” என்று பரபரப்பாக எழுந்து அவன் பின்வாயிற்குள் சென்றான்.

“நேத்துல இருந்து நீங்க சாப்பிடவே இல்ல போல… அதான் தலை வலிக்குது… சாப்பாடு வாங்கிட்டு வரட்டுமா?” என்று அவனைப் பின்தொடர்ந்து கண்ணன் அக்கறையாகக் கேட்கவும்,

“பரவாயில்லடா… உனக்காச்சும் என் மேல அக்கறை இருக்கே” என்று சொல்லி விரக்தியாகப் புன்னகைத்தான்.

“என்ன அண்ணே! இப்படி சொல்லிட்டீங்க… தமிழு அக்கா” என்றவன் அவள் பெயரை சொன்ன நொடி அவன் முகம் சுருங்கிப் போனது.

“ம்ம்கும்… என்னை பத்தின நினைப்பு எல்லாம் அவளுக்கு இருக்கா என்ன?” என்று முனங்கியபடி மாட்டுக் கொட்டகையைச் சுத்தம் செய்ய,

“என்ன அண்ணே இப்படி சொல்லி போட்டீங்க… நான் இங்க வந்ததே தமிழு அக்கா ஃபோன் பண்ணதாலதான்” என்றவன் மேலும்,

“உங்க ஃபோன் சுவிட்ச் ஆஃப்ல இருக்காம்… அக்கா சொன்னாவுங்க” என்று சொல்லவும்தான் அவன் தலையிலடித்துக் கொண்டான்.

“ச்சே… என் ஃபோன் முந்தா நாள் ராத்திரி நடந்த பிரச்சனையில கீழே விழுந்து ஏதோ ஆச்சு… நான் அந்த விசயத்தையே மறந்துட்டேன்” என்றவன் சொல்லும் போதே மனம் லேசாய் குறுகுறுக்க,

“தமிழு என்ன சொன்னா?” என்று அவன் ஆர்வமாக விசாரித்தான்

“இந்தாங்க ண்ணே… அக்கா கிட்ட பேசுங்க” என்று அவன் தன் பேசியில் தமிழுக்கு அழைத்து அவனிடம் கொடுத்தான்.

ஆனால் அவன் பேசுவதற்கு முன்னதாக அவள் முந்திக் கொண்டு, “நானே உனக்கு கூப்பிடணும்னு நினைச்சேன்டா… நல்ல வேளை நீயே கூப்பிட்ட… கொஞ்சம் பைக் எடுத்துட்டு வாடா… இங்க பஸ் ப்ரேக் டவுன் ஆகிடுச்சு” என்க,

“தமிழு… ஊருக்கு வந்திருக்கியா? எங்க நின்னுடுச்சு பஸ்? எங்க நிற்குற?“ என்றவன் குரலிலும் முகத்திலும் அந்தளவு உற்சாகம்.

“நான் எங்கேயோ இருக்கேன்… உனக்கென்ன… எனக்கு ஒரு ஃபோன் பண்ணுன்னு தோணுச்சா உனக்கு? ஆயிரம் பிரச்சனை இருக்கட்டும்… என்னை பத்தி நீ யோசிக்கல இல்ல” என்று சொல்லிவிட்டு,

“ஃபோனை கண்ணன் கிட்ட கொடு… உன்கிட்ட நான் பேச மாட்டேன்” என்றாள்.

“தமிழு” என்றவன் கெஞ்சலாய் அழைக்க,

“ஃபோனை கண்ணன் கிட்ட கொடுன்னு சொன்னேன்” என்றாள் அழுத்தமாக!

அவள் கோபமும் அதற்கு பின்னிருக்கும் அவள் தவிப்பும் அவனுக்கு நன்றாகவே புரிந்தது. மௌனமாகப் பேசியை கண்ணனிடம் கொடுத்து பேச சொன்னவன், அவள் அழைப்பைத் துண்டித்ததும்,

“நான் போய் கூட்டிட்டு வரேன் டா… சாவியைக் கொடு” என்றவன் கேட்கவும், “இல்ல அண்ணே… உங்களுக்கு தலை வலியா இருக்குன்னு சொன்னீங்களே” என்க,

தனக்காக அவள் வந்திருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு புது தெம்பைக் கொடுக்க அவனுடைய தலைவலியெல்லாம் எப்போதோ கண்காணாமல் போயிருந்தது.

“எனக்கு தலைவலியும் இல்ல… ஒன்னும் இல்ல… நீ சாவியைக் கொடு” என்றவன் பரபரப்பாக கண்ணனிடமிருந்து சாவியைப் பறித்துக் கொண்டு விரைந்துவிட்டான்.

அவன் ஓட்டிச் சென்ற அந்த இருசக்கர வாகனம் சாலையில் சென்றாலும் மனமோ அவளைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் சிறகில்லாமல் வானத்தில் பறந்து கொண்டிருந்தது.

Quote

Super ma 

You cannot copy content