You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

En Iniya Pynthamizhe - 24

Quote

24

பரிமளம் சொன்ன விஷயத்தை குறித்து நேரடியாகவே சந்திரனிடம் கேட்டுவிட வேண்டுமென்றுதான் தமிழ் அவசரமாக வீட்டிற்குப் புறப்பட்டாள். ஆனால் தன் சித்தி சொன்னதை யோசித்தபடி நடந்து வந்தவளுக்கு அவனிடம் இது பற்றி எப்படி கேட்பது என்று குழப்பமாக இருந்தது.

ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று இதை வேறு கேட்டு வைத்து இன்னும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை பெரிதாகிவிட்டால் என்ற பயம் வேறு அவளை ஆட்கொண்டது.

அதுவுமில்லாமல் பரிமளம் சித்தியின் வார்த்தைகளை நம்பி எப்படி கேட்பது?

இந்த யோசனையோடு அவள் வீடு வந்து சேர்ந்தாள். ஆனால் அவள் வந்த நேரத்தில் சந்திரன் மும்முரமாக நிலத்தில் கருகிய பயிர்களை அகற்றும் வேலையலிருந்தான். அவனிடம் அப்போதைக்கு எதுவும் பேச இயலாமல் அவள் இரவு சமையலுக்கு தயார் செய்து கொண்டிருக்க,

வேலையை முடித்து குளித்து வந்தவன், “ஏய் உன்னை யாரு இந்த வேலையெல்லாம் பார்க்கச் சொன்னது… நான் வந்து செய்ய மாட்டேன்… கைல அடிப்பட்டு இருக்கு இல்ல” என்றான்.

அப்போதே அவள் கையைக் கவனித்து, “எங்கடி கட்டு… அதை கூட ஒழுங்கா கட்டி இருக்க மாட்டியா?” என்று சொல்லி மீண்டும் அவள் கையில் கட்டுக் கட்டிவிட்டான்.

அவள் மௌனமாக அமர்ந்திருக்க, “ஆமா என்ன? அதுக்குள்ள வந்துட்ட? உங்க ஐயனையும் அம்மாவையும் பார்த்தியா… உன் தம்பி தங்கச்சிகிட்ட பேசுனியா?”

அவன் கேள்விக்கு எதற்கும் பதில் சொல்லாமல் அவள் தன் மௌனத்தை தீவிரமாகக் கடைபிடித்திருக்க, “என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க? வூட்டுல யாரச்சும் என்னைய பத்தி ஏதாவது சொன்னாங்களா?” என்றான்.

அவனை அதிர்ச்சியாக அவள் நிமிர்ந்து பார்க்க அவள் பார்வையைக் கணித்தவன், “அப்போ சொல்லி இருக்காங்க?” என்று அவளைக் கடுப்பாகப் பார்த்து,

“அவங்க சொல்றதை எல்லாம் கேட்டுப் போட்டு என்கிட்ட சண்டை போடுற வேலை வைச்சுக்காதே… இதுக்கு மேல என்னால முடியாது… சொல்லிட்டேன்” என்று கண்டிப்போடுச் சொல்லிவிட்டான்.

அதன் பிறகு அவள் எங்கே அவனிடம் அது பற்றி கேட்பது. மௌனமாக அவள் இருந்த போதும் பரிமளம் சித்தி சொன்னது அவள் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது.

அமைதியாக அவர்கள் இரவு உணவு கழிந்தது.

“நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்போணோம்? ட்ரைனா பஸ்ஸா?” என்று அவளின் பயண விபரங்களைக் கேட்டுக் கொண்டிருக்க, அவள் கவனம் அங்கே இல்லை.

“தமிழு” என்று சத்தமாக அழைக்கவும், அவள் தன் யோசனையிலிருந்து மீண்டு அவன் முகம் பார்த்தாள்.

“என்ன கேட்ட?” என்றவள் புரியாமல் விழிக்க,

“நான் இங்கன பேசிட்டு இருக்கேன்… அப்படி என்னத்த யோசிச்சிட்டு இருக்கவ?” என்றவன் பல்லைக் கடித்து கொண்டு கோபமாகக் கேட்கவும்,

“உஹும் ஒன்னும் யோசிக்கல… ஆமா நீ என்ன கேட்ட… அதை சொல்லு” என்றாள்.

“நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்போணோம்னு கேட்டேன்?”

“காலையில ஆறு மணிக்கே எழுந்து கிளம்பனாதான் சரியா இருக்கும்” என்றவள் அவனிடம் தன் பயண ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லியிருந்தாள்.

“பேக்ல எல்லாம் இப்பவே எடுத்து வைச்சுக்கோ? காலம்பற கிளம்பும் போது எதையாச்சும் மறந்து போட போற” என்றவன் சொல்லிக் கொண்டே, பின் அவள் படுத்துக் கொள்ள மெத்தையை விரித்துவிட்டு,

“சரி… நேரத்தோடு படுத்துடு… வெள்ளன எழுந்து கிளம்பணோம்ல” என்றான்.

அவள் தலையை மட்டும் அசைத்து வைக்க தலையணையை எடுத்து கொண்டு அவன் வெளியே செல்ல, எப்படியாவது தன் மனதில் நினைத்ததைக் கேட்டு விடலாம் என்று அவள் அவனை அழைக்க எண்ணினாள்.

ஆனால் அதற்குள் சந்திரனே திரும்பி, “தமிழு” என்று அழைக்கவும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனை அவள் குழப்பமாக ஏறிட,

“இல்ல… கையில அடிபட்டு இருக்கும் போது… இப்பவே கிளம்பி போகோணுமா? இன்னும் ஒரு நாள் இருந்துட்டு நாளைக்குப் போகலாம்தானே?” என்று கேட்டு ஏக்கமாகப் பார்த்தான்.

ரொம்ப நேரமாக இதனை சொல்லத்தான் அவன் தவியாய் தவித்திருந்தான் என்பது புரிந்த போதும் அவள், “இல்ல சந்திரா… நான் போகோணோம்… ஒரு முக்கியமான ப்ரொஜெக்ட்ல வேலை செஞ்சிட்டு இருக்கேன்… லீவ் போட முடியாது” என்றாள்.

அவன் முகத்தில் ஏமாற்றத்தோடு கோபமும் பிரதிபலிக்க அவன் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனமாகத் திண்ணையில் சென்று படுத்துக் கொண்டான். இந்தக் கோப நிலையோடு அவனிடம் கேட்க முடியுமா என்ற தயக்கத்தில் அவளும் படுத்துவிட்டாள்.

ஆனால் எப்படி புரண்டு படுத்தாலும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. அதற்கு மேல் முடியாமல் தன்னுடைய குழப்பத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டே ஆக வேண்டுமென்ற என்ற முடிவோடு எழுந்து வந்து அவள் திண்ணையில் அமர்ந்தாள்.

அவனுமே தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருக்க, அவளைப் பார்த்த நொடி எழுந்து அமர்ந்து, “என்னாச்சு? தூக்கம் வரலையா?” என்று வினவ,

“இல்ல… உன்கிட்ட ஒன்னும் கேட்கோணோம்… ஆனா நீ கோவிக்க கூடாது” என்று அவள் பீடிகையோடு ஆரம்பித்தாள்.

“இயற்கை விவசாயம் அது இதுன்னு திரும்பவும் ஆரம்பிக்காதே”

“அது இல்ல” என்றவள் தயக்கத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“புறவு என்ன?”

“நம்ம பயிரெல்லாம் மருந்தடிச்சு நாசம் பண்ணாங்க இல்ல… அன்னைக்கு நீ நம்ம வூட்டுலதான் இருந்தியா?” என்று அவள் சந்தேகமாகக் கேட்டு இழுக்க,

“நான்தான் அப்பவே எல்லாத்தையும் சொல்லி போட்டேன் இல்ல… இப்ப எதுக்கு அதே ராமாயணத்தை முதல இருந்து ஆரம்பிக்குற… போய் படு” என்று அவளிடம் கடுகடுத்தான்.

“இல்ல சந்திரா எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது… பரிமளம் சித்தி சொன்னதுதான் என் காதுல திரும்ப திரும்ப கேட்டுட்டே இருக்கு”

“அவங்க ஏதாவது வேலை வெட்டி இல்லாம பேசுவாங்க… நீ ஏன் அதெல்லாம் காதுல போட்டுக்குற?”

“வேறு என்ன சொல்லி இருந்தாலும் நான் அதை பெருசா எடுத்து இருக்க மாட்டேன்… ஆனா நீ குடிச்சன்னு” என்றவள் சொன்ன மாத்திரத்தில் அவன் அவள் முகத்தைப் பார்க்காமல் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

“சித்தப்பா வேற பார்த்தாங்களாம்… ஆனா நான் நம்பல… நீ இப்பெல்லாம் அப்படி இல்லன்னு சொல்லி போட்டேன்” என்றவள் சொல்லி முடிக்கும் போது சந்திரன் அப்படியே மௌன கெதியில் அமர்ந்திருந்தான்.

அத்தனை நேரம் அவளுக்குள் இருந்த நம்பிக்கை லேசாக தளர, “சந்திரா” என்று அவன் தோளைத் தொடவும், அவன் எதுவும் பேசவுமில்லை. அவளை நிமிர்ந்து பார்க்கவுமில்லை.

“ஆமா ஏன் நீ அமைதியா இருக்க? எதுவும் பேச மாட்டுற… அப்படின்னா” என்றவள் அவனை ஆழ்ந்து பார்க்க அப்போதும் அவன் மௌனம் களையவில்லை. அவளுக்கு ஒரு பக்கம் பயமாக இருந்தது என்றால் இன்னொரு புறம் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

“சந்திரா சொல்லு… நீ குடிக்கலதானே… குடிக்கலதானே” என்றவள் தொடர்ச்சியாகக் கேட்க, அவனிடம் அப்போதும் பதிலில்லை.

“டேய்… உன்னைத்தான்டா கேட்குறேன்… பதில் சொல்லு” என்றவள் அவன் முகத்தைப் பிடித்து நிமிர்த்தவும்,

“அது அன்னைக்கு நான் கொஞ்சமா குடிச்சேன்… ஆனா” என்றவன் ஒப்புக்கொண்டுவிட்ட அடுத்த நொடி,

“அப்போ நீ இன்னும் அந்தப் பழக்கத்தை விடலையாடா?” என்று எரிச்சலும் கோபமாகவும் கேட்டுத் தள்ளிச் சென்றவளின் கையைப் பற்றியவன்,

“இல்லடி… நான் என் அம்மத்தா இறந்த புறவு… அந்தப் பழக்கத்தை வுட்டுப் போட்டேன்” என்றான்.

“வுட்டுப் போட்டன்னு சொல்ற… புறவு எதுக்கு குடிச்ச?”

“இல்லடி அன்னைக்கு”

“நீ ஒரு மண்ணாங்கட்டி காரணமும் சொல்ல வேண்டாம்… குடிக்கணும்னு நினைச்சிட்டா அதுக்கு உங்களுக்கு எல்லாம் ஆயிரம் காரணம் கிடைக்கும்… அதுவும் நீ ஏற்கனவே குடிகார பையன்தானே டா!” என்றவள் அருவருக்கத்தக்க பார்வையோடு அவன் கையை உதறிவிட்டிருந்தாள்.

“விசயம் தெரியாம வார்த்தை வுடாதே தமிழு” என்றவன் குரலை உயர்த்த,

“யாரு வார்த்தை வுடுறா? நீதானே டா இப்ப சொன்ன… குடிச்சேன்னு” என்றவள் அழுதபடி,

“உனக்கு தெரியுமா? நான் என் சித்திகிட்ட நீ அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்னு நம்பிக்கையா சொன்னேன்… கடைசில என் நம்பிக்கை எல்லாம் பொய்யாக்கிட்டியே… ஏன்டா இப்படி பண்ண?

ஐயோ! நான் ஒரு பைத்தியக்காரி… நீ திருந்திப் போட்டன்னு இத்தனை நாளா உன்னைய நம்பிட்டு இருந்திருக்கேன்” என்றவள் ஆவேசமாகத் தலையிலடித்து கொண்டு கத்தத் தொடங்கினாள்.

“அப்படி அடிசிக்காதேடி… கையில அடிப்பட்டு இருக்கு… வலிக்கப் போகுது” அவள் கரத்தைப் பற்றி தடுத்த போதும் அவள் ஆவேசமும் கோபமும் அடங்கவில்லை.

“வலிக்கட்டும்… நல்லா வலிக்கட்டும்… உன்னை மாதிரி ஒருத்தனை நம்பனதுக்கு எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்…”

“தமிழு… நான் சொல்றதைப் பொறுமையா கேளு”

“மாட்டேன்… எதுவும் கேட்க மாட்டேன்… போடா” என்றவள் வேகமாக வீட்டிற்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

“தமிழு… கதவைத் திற” என்றவன் கதவைப் பலமாகத் தட்ட,

“இந்த மாதிரி நீ என்கிட்ட என்னவெல்லாம் பொய் சொல்லி இருக்கியோ… நான் இன்னும் எத்தனை விசயத்துல உன்னை நம்பி ஏமாந்து போயிருக்கேனோ… தெரியலயே” என்றவள் புலம்ப,

“சத்தியமா நான் உன்னை வேற எந்த விசயத்துலயும் ஏமாத்தல தமிழு… இந்தக் குடி விசயத்தைக் கூட உன்கிட்ட மறைக்கோணும்னு நான் நினைக்கல… அதுக்கு ஒரு காரணம் இருக்கு” என்றவன் சொன்னது எதையும் அவள் கேட்க விரும்பாதவளாய் காதை அழுந்த மூடிக் கொண்டு மெத்தையில் படுத்துக் கொண்டாள்.

அவன் கெஞ்சல் தவிப்பு என எதற்கும் அவள் இறங்கிவரவில்லை. கதவையும் திறக்கவில்லை. வெகுநேரமாக அவளின் விசும்பல் சத்தம் கேட்டுப் பின் மெல்ல அந்தச் சத்தமும் ஓய்ந்திருந்தது.

அவள் தூங்கியிருப்பாள் என்று நம்பித் திண்ணையில் தலைசாய்த்து அமைதியாக அமர்ந்தவன் அப்படியே கண்ணயர்ந்துவிட்டான்.

விடியலுக்கு முன்னதாகவே கண் விழித்தவன் அவள் புறப்பட வேண்டும் என்று சொன்னது நினைவு வர கதவைத் தட்டிப் பார்த்தான். பின்வாசலுக்கு சென்று பார்த்த போது அந்தக் கதவும் திறக்கப்படவில்லை.

“தமிழு… தமிழு” என்றவன் அழைப்பிற்கு பதிலே இல்லை.

அங்கிருந்த ஜன்னல் கதவை திறந்து பார்க்க அவள் அப்படியே படுத்தபடி இருந்தாள்.

வெகுநேரமாக அவன் அழைக்க அவள் எழுந்து கொள்ளவே இல்லை. அவனுக்குப் பதட்டமேறியது. ஏன் அவள் எழுந்து கொள்ளவில்லை என்று பயந்து பதறித் துடித்து கதவை உடைத்து திறந்தான்.

அவள் கன்னத்தில் தட்டிப் பார்த்தான். முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தான். அப்போதும் அவள் விழித்துக் கொண்டபாடில்லை.

“ஐயோ! தமிழு என்னடி ஆச்சு உனக்கு” என்றவன் பதறித் துடித்து அவளை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பித்தான்.

அவள் பெற்றோருக்கும் தகவல் சொல்லியிருந்தான். அவர்களோடு சேர்த்து அவள் உறவினர்களும் மருத்துவமனையில் வந்து குவிந்தனர்.

அவளுக்கு சிகிச்சைக் கொடுத்த மருத்துவர், “ரொம்ப சீரியஸா இருக்காங்க… உடம்பெல்லாம் விஷம் பரவி இருக்கு… பூச்சிமருந்து மாதிரி ஏதாச்சும் குடிச்சு இருப்பங்களோன்னு டவுட்டா இருக்கு… உடனே போலிசுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க” என்று அவர் சொல்லிவிட்டுப் போய்விட சந்திரன் அதிர்ந்து நின்றுவிட்டான்.

மதுசூதனன் முகம் வெளுத்து போனது. அவர் சந்திரனை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க அவன் திடுக்கிட்டான்.

சகுந்தலா மகளின் நிலையை அறிந்து கண்ணீரும் கோபமாகவும், “அடப்பாவி… அவ விஷம் குடிக்குற அளவுக்கு என்னடா பண்ண அவளை” என்று சந்திரனிடம் சீற்றமாகக் கத்தத் தொடங்க,

“இல்லைங்க அத்தை… நான் எதுவும் பண்ணல… தமிழும் அந்த மாதிரி எல்லாம் செய்ய கூடிய ஆளு இல்ல… உங்கப் பொண்ணைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? அவ தைரியசாலி… அவ இந்த மாதிரி கோழைத்தனமான முடிவு எல்லாம் எடுக்க மாட்டா” என்றவன் நிதானமாக எடுத்துரைக்க,

சங்கரன் அப்போது, “முதல் புள்ள குணமாகி வரட்டும் க்கா… புறவு எல்லாத்தையும் பேசிக்கலாம்” என்றவர் சமாதானமாகப் பேசினார்.

அப்போது மதுசூதனன் அவனை நெருங்கிவந்து, “என் பொண்ணு உண்மையிலேயே மருந்து குடிச்சிருக்கான்னு தெரிஞ்சுது… உன்னை சும்மா வுட மாட்டேன்… இங்கனயே வைச்சு கொன்னு புதைச்சிடுவேன் பார்த்துக்க” என்றவர் மிரட்டினார்.

ஏற்கனவே தமிழின் நிலைமையை எண்ணி அவன் உள்ளுர நொறுங்கிப் போயிருக்க, இந்தச் சம்பவத்திற்காக எல்லோரும் அவனையே குற்றவாளியாக நிறுத்தியிருப்பது அவனை மேலும் வேதனையில் ஆழ்த்தியது.

Quote

Super ma 

You cannot copy content