You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

En Iniya Pynthamizhe - 29

Quote

29

“சார் நீங்கதான் சகாவா?” என்றவள் வியப்போடுக் கேட்கவும்,

“அப்போ நீங்கதான் ஃபோன் பண்ணதா?” என்றவனும் அதே அளவு வியப்போடு கேட்டதும், “ம்ம்ம்ம் ஆமாங்க சார்… எனக்கு அப்பவே உங்க குரல் மாதிரி தோனுச்சுங்க… ஆனா நீங்களாவே இருப்பீங்கன்னு சத்தியமா நினைக்கலங்க சார்” என்றவள் சொல்ல, “நானுமே நினைக்கல” என்றான்.

இப்படி வியப்பும் பூரிப்புமாக நீண்டு கொண்டிருந்த அவர்களின் உரையாடலைச் சுற்றியிருப்பவர்கள் புரிந்தும் புரியாமலும் பார்த்து கொண்டிருந்தனர்.

அதுவும் சந்திரனின் பார்வை கூர்மையாக அவர்கள் இருவரைப் பார்ப்பதிலேயே லயித்திருந்தன. அதுவும் அவனிடம் பேசும் போது அவள் குரலிலும் முகத்திலும் அப்படியொரு மகழ்ச்சி!

அவள் கால்கள் தரையில் நிற்கிறதா என்று சந்தேகம் கூட தோன்றியது அவனுக்கு!

ஆச்சரியமாக விரிந்த அவள் பார்வையைப் பார்த்திருந்த சந்திரனுக்கு ஏனோ இன்னொரு ஆண்மகனிடம் அவள் அப்படி பேசிக் கொண்டிருப்பது அந்தளவு உவப்பாக இல்லை. அதுவும் அருகில் தான் நிற்பதைக் கூட மறந்து அப்படி என்ன? என்ற கோபம் அப்போது அப்பட்டமாக அவன் கண்களில் வெளிப்பட்டது.

“ஆமா இவங்க யாரு?” என்று காமராஜ் அவளிடம் கேட்கும் வரை சந்திரன் தன்னோடு வந்திருந்தைக் கூட மறந்துதான் போய்விட்டாள். அவன் புறம் அவள் திரும்பிய போது அவன் படுஉக்கிரமாக முறைத்துக் கொண்டிருப்பது தென்பட, அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

அந்தச் சமயத்தில் காமராஜின் அண்ணன் மற்றும் அண்ணிமாரும் அந்தப் பெண் யாரென்று விசாரித்துக் கொண்டிருக்க சந்திரன் அப்போது அவள் காதோடு நெருங்கி, “என்னைய இங்க நிற்க வைச்சுட்டு… நீ பாட்டுக்கு அங்கன கதை கதையா அளந்துட்டு இருக்க… ஆமா யாரு அவங்க?” என்று கேட்டான்.

“அவங்க என் காலேஜ் ப்ரொஃபசர் காமராஜ் சார்” என்று உற்சாகமாக சொன்னவள் உடனடியாக, “ஆமா அவரு உன்னை யாருன்னு கேட்குறாரு? இப்போ நான் அவர்கிட்ட உன்னை யாருன்னு சொல்லட்டும்?” என்று தீவிரமாக சந்தேகம் வேறு கேட்டு வைக்க,

“இதென்னடி கேள்வி? யாருன்னு கேட்டா புருஷன்னு சொல்லு” என்றாள்.

“இல்ல… நீதானே அங்கன கிரேஸி மிஸ்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்ன” என்றவள் சமயம் பார்த்துக் குத்தியதோடு நிறுத்தாமல் அவனை மேலும் சீண்டிப் பார்க்கும் விதமாக, “பேசாம தெரிஞ்சவங்கன்னு சொல்லிடட்டுமா?” என்று வேறு கேட்டு அவனை வெறுப்பேற்றிப் பார்த்தாள்.

“குத்திக் காட்டிறியாக்கும்… மவளே கொன்னுடுவேன்… ஒழுங்கா புருஷன்னு சொல்லுடி” என்றவன் கடுப்பாக அவள் காதைக் கடிக்கும் போது,

காமராஜ் அவர்கள் புறம் திரும்பி தன் அண்ணன் அண்ணியை அறிமுகம் செய்து வைத்தான்.

“உன்னை பத்தி ஏற்கனவே தம்பி சொல்லி இருக்காவுங்க ம்மா… ரொம்ப புத்திசாலியான பொண்ணுன்னுட்டு” என்றவர்கள் பேசிக் கொண்டே, “ஆமா நீங்க என்ன ஆளுங்க?” என்று வேறு கேட்டு வைக்க,

‘எது?’ என்ற சந்திரன் முகம் இறுகியது.

“என்னங்க அண்ணி? இப்படியெல்லாம் கேட்டுகிட்டு” என்று காமராஜ் சொல்லவும், “இல்ல தம்பி தெரிஞ்சுக்கலாம்னுட்டு” என்று அவர் இழுக்க,

‘முதலுக்கே மோசமாகிடும் போல… அப்படி என்ன பெரிய சாரு மோரு… அடக்கமே இல்லாம சிரிச்சு சிரிச்சு பேசனா இப்படிதான்… கல்லுளி மங்கி எப்படி நிற்குறா பாரு’ என்று மனைவியை மனதில் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான்.

“ஆமா தமிழு… இவங்க யாருன்னு சொல்லவே இல்லையே” என்று காமராஜ் மீண்டும் கேட்கவும்தான் சந்திரனை அவளை விஷமமாகப் பார்க்க, ‘சொல்லுடி’ என்று வாயசைத்தான்.

“இவங்கதான் என் ஹஸ்பென்ட்” என்றவள் சொன்ன நொடி காமராஜ் பார்வை நம்ப முடியாமல் பார்த்திருக்க, அவர்கள் அண்ணிமாருக்குப் பெருத்த ஏமாற்றம் என்று அவர்கள் பார்வையே எடுத்துரைத்தது.

தமிழ் அப்போது, “சார்… உங்க பேரு போல இவங்க பேரும் நம்ம முன்னாள் முதலமைச்சரோட பெயருதான்…?” என்க, காமராஜ் அவளை யோசனையாகப் பார்த்தான்.

“ராமசந்திரன் என்கிற எம்.சி.ஆரு… இவங்க அம்மாத்தா சரியான எம்.சி.ஆரு பைத்தியம்… அதான் பேரனுக்கு அவரோட பேரையே வைச்சுட்டாங்க” என்று சொல்லி சிரித்தாள்.

அதன் பிறகு காமராஜ் அவர்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றிச் சொல்லிவிட்டு விளையாடிக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் தன்னுடைய தமையன்களின் பிள்ளைகள் என்று சொல்லி அவர்களையும் வரிசையாக அழைத்து அறிமுகம் செய்வித்தான்.

எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருப்பதகாவும் சொன்னவன் மாடியில் மற்ற இரண்டு அண்ணமார்கள் குடும்பங்கள் இருப்பதாகச் சொல்லி சுவரில் மாட்டியிருந்த அவர்களின் குடும்ப படத்தைக் காட்டினான்.

தமிழ் அந்தப் படத்தை மிகவும் சுவாரசியமாகப் பார்த்து கொண்டிருக்க சந்திரனுக்கு உள்ளுர எரிந்தது.

‘வந்த வேலை என்ன? இப்போது இவள் பார்த்து கொண்டிருக்கும் வேலை என்ன?’ என்று பொறுமினான்.

“இதெல்லாம் இப்போ ரொம்ப முக்கியமாக்கும்… வந்த விசயத்தைச் சொல்லு” என்று சந்திரன் மீண்டும் அவள் காதைக் கடிக்க,

தமிழ் தயங்கியபடி காமராஜிடம், “இல்ல… நாங்க இரண்டு பேரும் இயற்கை விவசாயம் பண்ணனும்னு முடிவு பண்ணி இருக்கோம்… அதை பத்தி உங்க கிட்ட பேசிட்டுப் போலாம்னு” என்ற அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவன் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.

அவள் திருமணம் செய்து கொண்டதாக சொன்னது ஒரு புறம் அவனுக்கு அதிர்ச்சியென்றால் விவசாயம் செய்ய போவதாகச் சொன்னது அவள் லட்சியத்திற்கு முற்றிலும் முரண்பாடாகத் தெரிந்தது. இருப்பினும் காமராஜ் அவளைத் தோண்டித் துருவி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

“கண்டிப்பா பேசுவோம்… ஆனா இரண்டு பேரும் இருந்து சாப்பிட்டுதான் போகோணோம்” என்று காமராஜ் சொல்ல அத்தனை நேரம் மௌனமாக இருந்த சந்திரன் முன்வந்து, “இல்லைங்க… நிறைய வேலை கிடக்கு போகோணோம்… தமிழ் சொல்லு” என்று அவளை முறைப்பாகப் பார்க்க,

“இல்ல இல்ல… அதெல்லாம் ஒத்துக்கவே முடியாது… சாப்பிட்டுட்டுதான் போகோணோம்” என்று காமராஜ் கட்டாயமாகச் சொன்னதில் தமிழ் மறுக்க முடியாமல் சம்மதம் சொல்ல, ‘என்ன இவள் இப்படி செய்கிறாள்?’ என்று அவள் மீது கனலாகக் கோபமேறியது அவனுக்கு.

என்னதான் அவன் அவளின் ஆசிரியராக இருந்த போதும் இந்தளவு இவள் பணிந்து பேசுவதும் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதும் அதற்கும் மேல அவள் சிரித்து சிரித்து பேசுவதும் அவனுக்குச் சரியாகப்படவில்லை.

“சார்… உங்க நிலத்துக்குக் கூட்டிட்டுப் போக முடியுமா? பார்க்கணும்… அப்படியே நீங்க இயற்கை விவசாயம் செய்ற முறையெல்லாம் பத்தி” என்று தமிழ் கேட்கவும்,

“சாப்பிட்டுப் போகலாம் தமிழு” என்று காமராஜ் சொல்ல,

“போயிட்டு வந்துட்டு சாப்பிடுவோமே” என்றாள்.

அதன் பின் காமராஜ் அவர்களை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். பத்து நிமிட தூரத்தில் அவர்கள் ஒரு தென்னந் தோப்பிற்குள் நுழைந்தனர்.

“இந்த தென்னந்தோப்பு எங்களோடதுதான்… மூணு ஏக்கரா” என்றவன் அங்கிருந்த கயிற்றுக் கட்டிலை இழுத்துப் போட்டு, “உட்காருங்க… இளநீ குடிக்கலாம்” என்று அவர்களை அமரச் சொன்னவன்,

“அண்ணே இளநீ வெட்டிக் கொடுங்க” என்று அங்கிருந்த பணியாளை ஏவ,

“இல்ல சார் வேண்டாம்… வீட்டுல உங்க அண்ணி இப்பதான் மோர் கொடுத்தாங்க” என்றவள் மறுத்தாள்.

“அதெல்லாம் பரவாயில்ல… இளநீ குடிச்சிட்டுப் போலாம்” என்றவர்களை அமர சொல்லி அவர்களுக்குக் குடிக்க இளநீரை வாங்கி தந்தான். அதனைக் குடித்தபடி தமிழ் அந்த இடத்தைச் சுற்றிலும் பார்த்து விசித்திரமாக,

“அதென்னங்க சார்… ஒவ்வொரு தென்னைக்கு நடுவிலயும் வாழை வைச்சு இருக்கீங்க… நான் இப்படி பார்த்தில்லையே” என்று கேட்க, காமராஜ் அவர்களுக்கு விளக்கினான்.

“எப்பவுமே தென்னைக்கு அதிகமா தண்ணி தேவைப்படும்… கோடை காலத்துல தண்ணீர் பற்றாகுறையா இருக்கும் போது வாழை தன்னோட தண்டுல சேர்த்து வைச்சு இருக்க தண்ணியைத் தென்னைக்கும் சேர்த்து கொடுக்கும்… அதான் ஒவ்வொரு தென்னை பக்கத்துலயும் இரண்டு வாழையை நட்டு வைச்சுருக்கோம்

இதை கூட்டாளி தாவரம்னு சொல்லுவாங்க…. முருங்கை பக்கத்துல கத்தாழையை வைச்சா அது கரையானைக் கட்டுபடுத்தும்… முருங்கைக்குன்னு இல்லா… எந்த மரக்கன்றை வைச்சாலும் கூட காற்றாழையை நடலாம்… செடிகளைச் சாப்பிடுற பூச்சிகளுக்கு நஞ்சாக செயல்படும் ‘சபோநைன்ஸ்’ காற்றழையில இருக்கு… பூச்சி, பூஞ்சணம், வைரஸ்க்கு எதிரா காற்றாழை வேலை செய்யும்” என்று காமராஜ் சொன்ன தகவல்களை தமிழ் ஆர்வமாகக் கேட்டிருந்தாள்.

இதெல்லாம் பல விவசாயிகளுக்குத் தெரிந்த விஷயங்கள்தான் எனினும் இதற்கு பின்னிருக்கும் அறிவியல் தகவல்களை ஆராயாமலே அவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

சந்திரன் அப்போது, “நீங்க சொல்ற மாதிரி எங்க ஊர்ல கூட கூட்டாளி தாவரமா… மஞ்சள் தோட்டத்துல கருஞ்செம்பையை நடுவாங்க… சூட்டைத் தணிக்கும்னு சொல்லுவாங்க” என்றான்.

“அது சூட்டைத் தணிப்பது மட்டும் காரணம் இல்ல… கருஞ்செம்பை நைட்ரோஜனை சேமிக்கும்… இப்படி ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு தனிமத்தை மண்ணுக்குக் கொடுக்கும்…

கொள்ளுப் பயிரிட்டு அது பூவிடுற நேரத்துல மடிச்சு உழுதோம்னா நம்ம மண்ணுக்கு நைட்ரேட் சத்து கிடைக்கும்… அதே மாதிரிதான் கொழுஞ்சி தக்கை பூண்டு, சித்தக்கத்தி இப்படி பசுந்தாள் பயிரைப் போட்டு மடித்து உழுதா இயற்கையா மண்ணோட வளத்தைப் பெருக்க முடியும்” என்றவன் சொல்வதைக் கேட்டு தமிழ் குழப்பமாக,

“நிறைய உழவு முறை பத்தி கேள்விபட்டிருக்கேன்… அதென்ன சார் மடிச்சு உழுவது?” என்று சந்தேகம் கேட்டாள்.

அப்போது சந்திரன் அவளிடம், “மேலே பயிறு இருக்கும் போதே மூணு அடி ஆழத்துக்குப் பயிரைத் திருப்பிப் போட்டு உழறது… அதுதான் மடிச்சு உழுறது” என்று சொல்ல காமராஜும் ஆமோதித்தான்.

“ஓ!” என்று ஆச்சரியப்பட்டவள் அதற்கு பிறகு காமராஜ் காட்டிய பாதையில் தென்னந்தோப்பின் குறுக்கே நடந்து அங்கிருந்து வெளியே வந்தாள்.

“இந்த நிலமெல்லாம் எங்களோடதுதான்… பாரம்பரியமா எங்க குடும்பத்துல எல்லோரும் விவசாயம்தான் பார்த்திட்டு இருந்தாவுங்க… எனக்கும் கூட அக்ரி படிச்சிட்டு விவசாயம் பார்க்கணும்னுதான்…

அப்பவே எனக்கு நம்மாழ்வார் கருத்து மேல ரொம்ப ஈடுபாடு… எங்க அப்பாருகிட்ட சொல்லுவேன்… மருந்து யூரியா எல்லாம் போடாம நம்ம விவசாயம் பண்ணனும்னு…

நீ சின்ன பையன் உனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிடுவாரு… அதுவுமில்லாம எங்க அப்பாருக்கு என்னை இன்ஜனியரிங் படிக்க வைக்கணும்னு ஆசை… ஆனா எனக்கு அதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல… நான் அக்ரிதான் படிப்பேன்னு சொன்னேன்

அப்பா கேட்கவே இல்ல… அப்பாவுக்காகதான் நான் இஞ்சினியரிங் படிச்சேன்… ஆனா நம்ம நிலம் மொத்ததையும் இயற்கை விவசாயம் பண்ணா மட்டும்தான் நான் இன்ஜினியரிங் படிப்பேன்னு கண்டிஷனா சொல்லிப் போட்டேன்

அப்பாவுக்கு நான் இஞ்சினியரிங் படிக்கணும்… அதுக்காக ஒத்துக்கிட்டாரு… எங்க நாற்பது ஏக்கர்ல முதல ஒரு பத்து ஏக்கரை இயற்கை விவசாயத்துக்கு அண்ணனுங்க மாத்துனாங்க… புறவு மொத்தமா அடுத்த முப்பத்து ஏக்கரையும் மாத்திட்டாங்க.

மாத்தின புறவுதான் அது எம்புட்டு நல்ல விஷயம்னு எல்லோருக்குமே புரிஞ்சுது… உரம்னு சொல்லி நம் மண்ணுக்குப் போட்டுட்டு இருக்கிற இடுபொருளெல்லாம் அனாவசியம்னு புரிஞ்சுது.

நாங்களே தாயாரிச்சு பயன்படுத்தின இயற்கை உரமும் பூச்சிவிரட்டிகளுமே நல்ல பலன் தந்துச்சு… தேவையில்லாம காசுப் போட்டு வாங்கி நம்ம மண்ணையும் அதோட வளத்தையும் கெடுத்துக்கிறதுக்குப் பதிலா இப்படி இயற்கை உரங்கள் தயாரிக்கிறது மூலமா பயிரும் நல்லா வளருது… மண்ணோட வளமும் பாதுகாக்கப்படுது… செலவும் இல்ல… உடலுக்கும் ஆரோக்கியமான உணவு” என்றவன் அங்கிருந்த ஓலைக் கொட்டகையில் நுழைந்து,

“இங்க வாங்க உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்று சொல்ல இருவரும் அவனைப் பின்தொடர்ந்தனர்.

அங்கிருந்த பேரலை திறந்து காமராஜ் காட்ட, அதில் வேப்பங்கொட்டைகள் தண்ணீரில் ஊறவைக்கப்படிருந்தன.

“இந்த வேப்பங்கொட்டையை இராத்திரி முழுக்க நல்லா ஊற வைச்சு புறவு அதை மாவா அரைச்சு துணியில வடிக்கட்டி பிழிஞ்சு அதோட காதி சோப்பு தூளை கலந்தா வேப்பம் கோட்டை சாறு தயார்… இது பயிருக்குக் கொடுத்தா பூச்சி தானா கட்டுப்படும்” என்று சொன்னதைக் கேட்டு சந்திரனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

“இப்படி நிறைய இருக்கு…. அமிர்த கரைசல்… ஜீவாமிர்தம் இதெல்லாம் நில ஊக்கி… மண்ணோட வளத்தைப் பெருக்க” என்று காமராஜ் அதனைத் தயாரிக்கும் முறையை அவர்களுக்கு விளக்கிவிட்டு,

“இது என்னோட பேஜ்ல கூட இருக்கும்… அங்கேயும் பார்த்து தெரிஞ்சுக்கலாம்” என்றான்.

அதன் பிறகு காமராஜ் தங்கள் நிலத்தைச் சுற்றிக் காண்பித்தான். கடலை, மஞ்சள், நெல், சிறுதானியங்கள் என்று கலப்பு பயிர்களாக இருந்தன.

“நீங்க இயற்கை விவசாயத்துக்கு மாறும் போது ராகி, சோளம், கம்பு இப்படி பயிரிட்டா நட்டம் வராம இருக்கும்… அந்த பயிர்களையெல்லாம் அந்தளவு பூச்சித் தாக்காது… அதேபோல அதிகமான கவனிப்பும் தேவையில்ல” என்று காமராஜ் அவர்களுக்கு இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவதற்கான வழிமுறைகளை விவரிக்க அவற்றைக் கேட்டுக் கொண்டே தமிழ் பின்தொடர்ந்தாள்.

எங்குப்பார்த்தாலும் பசுமைமயம்! கண்ணக்கு எட்டிய தூரம் வரை விவசாய நிலங்கள்! பலரும் நிலத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தனர். களை எடுக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. இன்னும் சில இடங்களில் நீர் பாய்ச்சும் பணி நடந்து கொண்டிருந்தது.

இந்தக் காட்சிகள் எதுவும் அவளுக்குப் புதிது இல்லை. ஆனால் அங்கே உயரமாக வரிசையாக அணிவகுத்து இருந்த மரங்களைப் பார்த்து, “இது என்னது சார்?” என்று அவள் கேட்க,

“இதுதான் உயிர் வேலி… காத்து அது போற இடத்துல இருக்கிற ஈரத்தை எல்லாம் உறிஞ்சிக்கிட்டு நிலத்தை உலர வைச்சிக்கிட்டுப் போயிடும்… காத்து ஈரத்தை எடுத்துட்டு போகாம தடுக்குறதுதான் உயிர் வேலி வேளாண்மை…

சவுண்டல், அகத்தி, கிளிரிசிடியா, நொச்சி மாதிரியான பயிருகளை வேலி பயிருங்களா நட்டு உயிர் வேலி அமைச்சுக்கணும் வேலியோரமா நிற்குற மரங்க… காத்தோட வேகத்தைத் தடுத்து நிலத்தோடா ஈர்பதத்தைத் தக்க வைச்சுக்கும்… மழை காலத்துல உயிர் வேலி நட்டுவைச்சா அது நல்லா வேர் பிடிச்சு வளர்ந்துடும்

அங்க பாருங்க… எங்க நிலத்தைச் சுத்தி நாங்க உயிர் வேலி அமைச்சு இருக்கோம்… இந்த மாதிரி செய்வது இயற்கை வேளாண்மைக்கு அவசியம்” என்று காமராஜ் சொல்வதைக் கவனமாகக் கேட்டவன்,

“எங்க நிலம்.. வெறும் இரண்டு ஏக்கருதான்… அதுக்கு கூட உயிர்வேலி அவசியமா?” என்று கேட்டான்.

“எத்தனை ஏக்கரா இருந்தாலும் உயிர்வேலி போடுறது அவசியம்தான்” என்று சொல்லி கொண்டே காமராஜ் வரப்பின் மீது நடந்தான். இவர்கள் இருவரும் அவனைப் பின்தொடர்ந்து நடந்தனர்.

அவர்கள் நடந்த பாதையில் நெல் பயிரிடப்பட்டு இருந்தது. அவர்கள் உயரத்திற்கு நிகராக உயர்ந்து வளர்ந்திருந்த நெற்கதிர்களைப் பார்த்து, “இதென்ன இம்புட்டு பெருசா என்ற ஒசரத்துக்கு வளர்ந்திருக்கு” என்று தமிழ் ஆச்சரியப்பட,

“இது நம்ம பாரம்பரிய நெல் ரகம் மாப்பிளை சம்பா… இந்தப் பயிறு அஞ்சு ஆறடிக்கும் மேல வளரும்… சோழர் காலத்துல யானைக் கட்டிப் போரடிசாங்கன்னு சொல்லுவாங்க இல்ல… அப்பா எல்லாம் இந்த மாதிரியான பாரம்பரிய நெல் ரகத்தைதான் சாகுபடி செஞ்சாங்க… தஞ்சாவூர் எப்பவுமே காவிரில பெருக்கெடுக்கிற வெள்ளத்துல மூழ்கி பாதிக்குற ஊர்… அப்போ இந்த மாதிரி ரக நெல் அவ்வளவு சீக்கிரம் மூழ்காது.

வெள்ளம் வந்த காலத்துல விவசாயிங்க படகுல போய் நெல் அறுத்ததா சொல்லி இருக்காங்க”

“படகா?”

“நெல் அவிக்கும் கொப்பரையை மிதக்கவிட்டு அதுல ஏறி அறுத்து வருவாங்களாம்… ஆனா நம்ம இப்போ பயன்படுத்துற குள்ள ரக நெல் எல்லாம் வெள்ளதில மூழ்கி அழுகிப் போயிடுது… உரம், பூச்சிக்கொல்லின்னு செலவு பண்ணி வாங்கிப் போட்டு நட்டம்தான்.

இப்ப விவசாயிங்க தற்கொலைக்கு இதான் காரணம்… ஆனா பார்மபரிய நெல் ரகம் வறட்சியும் வெள்ளம் எல்லாத்திலையும் தாங்கி வளரும்

ஆனா நம்ம பத்தாயிரத்துக்கும் மேல இருந்த நம்மோட பாரம்பரிய நெல் ரகத்தை அழிச்சிட்டு IR ரகத்தை மட்டுமே விதைக்கிறோம்… காரணம் பேராசை… சீக்கிரம் வளரணும்… நிறைய மூட்டை அறுவடை செஞ்சு காசு பார்த்துரணும்…. ஆரம்பத்துல அறுபது மூட்டை தந்தது… ஆனா இப்போ முப்பதுக்கு குறைவாதான் தருது… வறட்சி வெள்ளம் வந்தா அதுவும் இல்ல

யூரியா மருந்து அடிச்ச செலவுதான் மிச்சம்… ஆனா பாரம்பரிய நெல் ரகம் ஏக்கருக்கு பதினெட்டு மூட்டைக்குக் குறைவா தந்தாலும்… வறட்சி எல்லாம் தாங்கி ஒரளவு நமக்கு நட்டம் வராம இருக்கும்

இதுல நம்ம புரிஞ்சுக்காத இன்னொரு விசயம் நம்ம பாரம்பரிய நெல் ரகத்தில விளைஞ்ச அரிசி ஒரளவுக்கு மேல நம்மல சாப்பிட முடியாது… அளவாதான் சாப்பிட முடியும்… ஆனா குள்ள ரக நெல் அப்படி இல்ல… எம்புட்டு சாப்பிட்டாலும் வயிறு நிரம்பாத மாதிரியே இருக்கும்…

இதனால்தான் சுகர் மத்த நோயெல்லாம் வர காரணம்… இப்ப இருக்க எல்லோரும் ஊளைச் சதைப் போட்டுப் பெருசா ஊதிப் போறதுக்கும் அதுதான் காரணம்” என்ற காமராஜ் பாரம்பரிய நெல் ரகத்தின் அருமையை விளக்கிய போதுதான் சந்திரனுக்கு எங்கே விவசாயிகள் நஷ்டப்படுகிறார்கள் என்று மிகத் தெளிவாகப் புரிந்தது.

அந்த நிலங்களைச் சுற்றி வருவதற்குள் காமராஜ் கடந்த அறுபது வருடத்தில் நம் விவசாய முறையில் புகுத்தப்பட்ட ரசாயன உரத்தின் பின்னணி பற்றிச் சொன்னான்.

இரண்டாம் உலக போரின் போது தயாரிக்கப்பட்ட வெடி உப்புகள் போர் நின்ற பிறகு உரத்தொழிற்சாலையாக மாறியதும் அதனை விவசாயிகளிடம் அதிக விளைச்சல் தரும் என்று பேராசைக் காட்டி விற்ற கதைகளையும் சொன்னான்.

நம்முடைய விவசாயிகள் வியாபாரிகளுக்குப் பலியானார்கள். நெல் சாகுபடி செய்த பல நிலங்கள் இப்போது கரும்பு சாகுபடி செய்து கொண்டிருக்கின்றன. உணவு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் லாபத்தின் கண்ணோட்டத்தோடு கரும்பு ஆலைகளுக்காகத் தயாரிக்கின்றன.

 ஆறு மாத பயிரான நெல் உற்பத்திக்குத் தேவையான நீரை விட ஒரு வருட பயிரான கரும்பிற்கு இரண்டு மடங்கு அதிகமாகத் தேவையிருப்பதால் பெரியளவிலான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளால் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது.

இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கபட்டு சிறு குறு நில விவசாயிகள் தற்கொலையில் மடிந்து கொண்டிருக்கின்றனர்.

முற்றிலும் வியாபாரமாக மாறி போன இந்த விவசாய முறைகளில் நிலம், நீர், காற்று என்று எல்லாமே மாசுப்பட்டதோடு அல்லாமல் தீர்க்க முடியாத நோய்களையும் மலட்டுத்தன்மையையும் நாம் பணம் செலவழித்து பெற்று கொண்டதுதான் மிச்சம்!

காமராஜ் சொன்னவற்றைக் கேட்டபடி இருவரும் நிலத்திலிருந்து வீட்டிற்குத் திரும்ப அங்கே அவர்களுக்கு தடபுடலான விருந்து ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கல்லூரியில் காமராஜிற்கு வேலை போன விஷயம் பேச்சு வாக்கில் அடிப்பட, “சாரி சார்… உங்களுக்கு என்னாலதான் வேலை போயிடுச்சு” என்றாள்.

“அப்படி எல்லாம் யோசிச்சு நீ வருத்தப்படவே தேவையில்ல… உண்மையிலேயே அந்த வேலை போனதுல நான் ரொம்ப சந்தோஷப்படுறேன் தெரியுமா? எங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரி பிடெக் எம்.டெக் முடிச்சசாலும் எனக்கு விவசாயத்து மேல இருக்கு ஈடுபாடு குறைவே இல்ல… காலேஜ் போயிட்டு வந்தாலும் நான் காட்டுலதான் கிடப்பேன்

எங்க நான் இங்க இருந்தா திரும்பியும் விவசாயம் பார்க்க போறேன்னுட்டுதான் எங்க அப்பா என்னை சென்னைக்கு வேலைக்குப் போகச் சொல்லி அனுப்பிவிட்டாரு.

கிரமத்து மனுஷங்க சொந்த பந்தம் இப்படி இருந்த எனக்கு சாஃப்ட்வேர் கம்பெனில போய் எந்திரத்துக்கு முன்னாடி உட்கார்ந்துட்டு இருக்க பிடிக்கல… அதான் டீச்சிங் லைன் வந்தேன்… ஒரு வகையில வேலை போனது ஒரு சாக்குதான்… எனக்கு இங்க இப்படி இருக்கத்தான் பிடிச்சிருக்கு” என்று காமராஜ் சொல்லி கொண்டிருப்பதைக் கேட்டவளுக்கு வியப்பாக இருந்தது.

“நீ விவசாயம் பண்ண போறேன்னு சொன்னது சந்தோஷம்தான்… ஆனா நீ இஞ்சினியரிங்கை எப்படி விட்டன்னுதான் எனக்கு புரியல?” என்று காமராஜ் கேள்வி எழுப்ப, தமிழ் எந்த பதிலும் சொல்லாமல் தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.

ஆனால் அதன் பிறகு கை அலம்ப தனியே வந்த போது தமிழ் காமராஜிடம் நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தாள்.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல… ஆனா சந்திரா ரொம்ப அதிர்ஷ்டசாலிதான்” என்ற காமராஜின் கடைசி வாக்கியத்தைக் கேட்டபடி சந்திரன் அங்கே வந்து நின்றதை இருவரும் கவனிக்கவில்லை.

பேருந்தில் வீட்டிற்கு வந்து சேரும் வரை இருவரும் மௌனத்தில் ஆழ்ந்திருந்தனர். தமிழின் சிந்தனை முழுக்க இயற்கை வேளாண்மை பற்றிய எண்ணம்தான். ஆனால் சந்திரனின் சிந்தனையெல்லாம் தமிழால் காமராஜுக்கு ஏன் வேலை போனது? என்பதாக இருந்தது.

indra.karthikeyan and shiyamala.sothy have reacted to this post.
indra.karthikeyanshiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content