You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 13

Quote

13

யாரடி நீ?

 

விடிந்தும் விடியாமல் வானம் செந்நிற துகள்களைத் தூவ ஆதவன் மெல்ல அந்தக் கரும் போர்வையில் இருந்து வெளியே எட்டி பார்த்தான்.

அந்த அழகிய விடியலை ரசிக்க நேரமின்றி எல்லோரும் அந்தப் பிரமாண்டமான திருமண மண்டபத்தில் தங்களின் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். மணமேடையோ பார்ப்பவர்கள் கண்ணைக் கவரும் விதமாய் வண்ணமயமான பூ மாலைகளால் அலங்கரிக்கபட்டு வாசம் வீசியபடி இருந்தது. இரு திருமணங்கள் ஒரே மேடையில் அரங்கேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேடையின் ஒரு புறம் மாதவி அவளுக்கென்ற இருக்கையில் அமர்ந்திருக்க வனிதா ஏற்பாடு செய்ய வேண்டிய சடங்குகளைப் பற்றி அம்மாவிடம் ஆலோசனை கேட்டு கொண்டிருந்தாள். சந்திரகாந்த் ஒரு வெள்ளை ஷர்வானியில் அவருக்கே உரிய பாணியில் கை கூப்பி வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தார்.

மேடையின் ஒரு புறத்தில் வருண் மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருக்க, மறு புறத்தில் வேட்டி சட்டை அணிந்து கொண்டு அகன்ற தோள்களோடு கம்பீரமாய் அமர்ந்து கொண்டு நடைபெறும் திருமணத்திற்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் காதில் போனை வைத்து பேசிக் கொண்டிருந்தான் நம் கதை நாயகன் ஆதித்தியா.

போனில் மறுபுறம் சமுத்திரன் பேசிக் கொண்டிருந்தான்.

“வெரி சாரி ஆதி... திடீர்னு உனக்குக் கல்யாணம்னு சொல்லிட்டாரு... நான் ஒரு கேஸ் விஷயமா கொல்கத்தாவில் மாட்டிக்கிட்டேன்டா... வர முடியல”

“எனக்கே திடீர்னுதான் சொன்னாரு... நீ அங்கயே இரு... வந்து ஒண்ணும் கழட்ட வேண்டாம்”

“அப்போ கல்யாணம் கன்ஃபார்மா”

“அதான் என் கழுத்தில் மாலையை மாட்டி பலியாடா உட்கார வைச்சிட்டாரே... அருவா ஒண்ணுதான் மிஸ்ஸிங்” என்று ஆதி சொல்ல சமுத்திரன் சிரித்து விட்டு

“பொண்ணு யாருடா?” என்று கேட்டான்.

“அப்படி எந்த ஊர் இளவரசியைப் பாத்து வைச்சிருக்காருன்னு தெரியலையே”

“என்னடா சொல்ற? பொண்ண நீ பார்க்கலையா?”

“பெயர்தான் தெரியும்... அதுவும் இன்விட்டேஷன்லதான் பார்த்தேன்”

“இது ரொம்ப ஓவர்டா... ஆனா நீ எப்படி ஒத்துக்கிட்டேன்னுதான் எனக்குப் புரியல ஆதி“

“நான் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண பணம் கேட்டதுக்கு என்னை நம்பி கொடுக்க மாட்டேன்னு சொன்னாரு... பட் நவ் நான் எவ்வளவு டிமான்ட் பண்ணாலும் கொடுக்கிறேன்னு மிஸ்டர். சந்திரகாந்த் ஒத்துக்கிட்டாரு. ஆன் ஒன் கண்டிஷன்... இந்த மேரெஜுக்கு நான் சம்மதிக்கணும்”

“நிஜமாவா? ஷாக்கிங்கா இருக்கே?”

“எனக்கும்தான் சமுத்திரா... இத்தனை நாள் கேட்டதைக் கொடுக்காம அந்த விந்தியாவை கல்யாணம் செய்தா கொடுப்பாருன்னா... அப்படி என்ன மிஸ். விந்தியாகிட்ட ஸ்பெஷல்?”

“மொத்ததில் நீ நினைச்சது நடக்குது... கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க உனக்கு ரொம்ப அதிர்ஷ்டமானவங்க”

“நாட் அட் ஆல்... அவள் எப்பேர்ப்பட்டவளா இருந்தாலும் மிஸ்டர். சந்திரகாந்த் செலக்ட் பண்ண பெண்ணை நான் ஏத்துக்கவே மாட்டேன்... அவ எனக்கு வேலைக்காரிதான்”

கடைசியில் சமுத்திரன் ஆதிக்கு விருப்பமில்லாத போதும் வாழ்த்து சொல்லி விட்டுப் ஃபோனை கட் செய்தான்.

ஆதிக்கு விந்தியாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. அவன் அவள் வரும் வழி நோக்கியே பார்த்துக் கொண்டிருந்தான்.

மணமகள் அறையில் விந்தியா மணக்கோலத்தில் அமர்ந்திருந்தாள். அந்த அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மஞ்சள் நிற பட்டுபுடவை உடுத்தி கொண்டு பிரகாசிக்கும் சூரியனை போலவே மின்னிக் கொண்டிருந்தாள்.

தலையில் நீட்டமாய்ப் பின்னப்பட்டிருந்த ஜடையும், அவற்றின் மீது சூட்டப்பட்ட பூக்களும் ஓர் கிரீடம் போல் அமைந்துவிட்டன. கண்ணாடியில் தெரிந்து கொண்டிருக்கும் விந்தியாவின் பிம்பம், அவள் எதையோ ஆழமாக யோசித்துக் கொண்டிருப்பது போல் புலப்பட்டது.

விந்தியாவின் யோசனை எல்லாம் ஆதித்தியா பற்றி அவள் குடும்பத்தினரிடம் உறைத்த பொய்கள்தான். திருமணத்திற்குப் பின் அந்தப் பொய்கள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடுமோ என்ற கவலைதான்.

மாதவி சாக்ஷி மருத்துவனையில் இருந்த போது விந்தியா ரொம்பவும் பணம் ஏற்பாடு செய்யச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில்தான் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மோகன் அவளின் நிலைமையைப் புரிந்து கொண்டு சில செலவுகளை மருத்துவமனை ஏற்றுக் கொண்டு உதவி செய்வதாகச் சொன்னார்.

 சிகிச்சைகளை எல்லாம் துரிதப்படுத்த மாதவி வேகமாய் முன்னேற்றம் அடைந்து கொண்டு வந்தாள்.

மாதவி குணமடைந்து வீட்டிற்குப் போகும் போதுதான் தலைமை மருத்துவர் மோகன், “என்னுடைய நண்பன் சந்திரகாந்த்தான் இந்த உதவியை உனக்காகச் செய்யச் சொல்லி பணித்தார். பணம் கொடுத்து உதவியதும் அவர்தான்” என்று கூறினார்.

சந்திரகாந்த் தன்னைச் சுற்றியுள்ள அனைவரின் பிரச்சனையையும் புரிந்து கொண்டு உதவக் கூடியவர். அப்படிதான் மருத்துவமனைக்கு வரும் போது விந்தியாவைக் கவனித்து விட்டு அவள் பிரச்சனையை விசாரித்து அவரே தானாக முன் வந்து உதவி செய்ய முடிவு செய்திருக்கிறார். அப்பொழுதுதான் விந்தியாவைப் பற்றி அவர் தெரிந்து கொண்டார்.

இளம் வயதில் அவள் தன் தந்தையை இழந்து தன் குடும்பப் பொறுப்புகளைத் தானே சுமந்து கடமைகளை நிறைவேற்றிய விதம் சந்திரகாந்த்தை பிரமிக்க வைத்தது. அதுதான் ஆதியின் மனைவியாய் விந்தியாவைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.

அந்த எண்ணத்தை தான் நன்றி சொல்ல வந்த விந்தியாவிடம் வெளிப்படுத்தினார். ஆதியின் குணத்தைப் பற்றியும் விந்தியாவிடம் மறைக்காமல் உண்மையைக் கூறினார்.

“நீ ஆதியை மணந்து கொள்ளச் சம்மதித்தால் நீ எனக்கு மருமகளாய் இருப்ப... இதற்கு உனக்கு விருப்பமில்லை என்றால் நீ எனக்கு மகள்... அவ்வளவுதான். இதில் உனக்கு எந்த வித கட்டாயமும் இல்லை” என்றார்.

அந்த நேர்மையான கேள்வி விந்தியாவை அந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தது.

“ஏன்... நான் உங்க மகனை கல்யாணம் செஞ்சா உங்கள் மகளாய் இருக்கக் கூடாதா என்ன... அம்மாகிட்ட பேசுங்க சார்... அவங்க முடிவும் முக்கியம் “ என்றாள்.

மாதவிக்குக் கிருஷ்ண குமாரின் விஷயம் தெரிய வந்து அவளை அதிர்ச்சி அடைய வைத்தாலும் சந்திரகாந்த் சம்பந்தம் பேச அந்த வருத்தமும் மறைந்தது.

அதே நேரத்தில் வருண் காதலித்த நந்தினியை திருமணம் செய்விக்க அம்மாவிடம் சம்மதம் வாங்கினாள்.

ஆதியை பார்க்க வேண்டும் எனக் கேட்ட போது ஃபோட்டோவை மட்டும் காண்பித்து அவன் வெளிநாட்டில் இருப்பதாகப் பொய்யுரைத்து சமாளித்தாள். அதுமட்டுமின்றி அவனிடம் தான் பேசி இருப்பதாகவும் அடுக்கடுக்கான பொய்களைக் கூறினாள்.

விந்தியா தன்னுடைய கடைசி கடமையான தம்பியின் திருமணத்தையும் முடித்துவிட வருணுக்கும் அதே மேடையில் திருமணம் நடைபெற சந்திரகாந்த்திடம் வேண்டுதல் விடுத்தாள்.

விந்தியாவிற்கும் சந்திரகாந்த்திற்கும் உள்ள புரிதல் இருபக்கமும் ஏதேதோ பொய்களைச் சொல்லி மேடைவரை இந்த இரண்டு திருமணத்தைக் கொண்டுவந்துவிட்டது. ஆனால் சிவாவை மட்டும் அவளால் ஏமாற்ற முடியவில்லை.

அவன் ஆதித்தியா பற்றிய முழு விவரங்களை விசாரித்துவிட்டான். அவன் இந்தத் திருமணத்தை நிறுத்தியே தீர வேண்டும் என விந்தியாவிடம் சொல்ல அவர்கள் இடையில் மோதல் பெரிதானது.

“உனக்கு விருப்பமில்லைனா திருமணத்திற்கு வராதே” எனக் கோபத்தோடு உரைத்துவிட்டாள் விந்தியா.

இத்தனை சோதனைக்குப் பிறகு இந்தத் திருமணம் கடைசிப் பரபரப்பை எட்டியுள்ளது. வருண் மாப்பிள்ளை கோலத்தில் அமைதியோடு சொல்லும் மந்திரங்களையும் உச்சரித்துச் சடங்குகளை எல்லாம் செய்து கொண்டிருக்க ஆதி அவன் அருகில் அமர்ந்திருந்த ஐயரை பாடாய்ப்படுத்தி எடுத்துக் கொண்டிருந்தான்.

“நான் சொல்லும் மந்திரத்தை திருப்பிச் சொல்லுங்கோ”

“அதை எல்லாம் நீங்களே சொல்லுங்கோ... முதலில் பொண்ணை வரச் சொல்லுங்கோ”

“அதுக்கு நாழி இருக்கு தம்பி”

“என்னை மட்டும் காலையில எழுப்பிக் குளிக்கச் சொல்லி புகை போட்டு தள்ளிண்டிருக்கேள்”

“அதுதான் ப்ரொசீஜர்...”

“நல்ல ப்ரொசீஜர்... அட்லீஸ்ட் நான் இருக்கிறது தெரியாதபடிக்கு புகை இன்னும் கொஞ்சம் அதிகமா போடுங்கோ... நான் போய்ப் பொண்ணைப் பாத்துட்டு வந்துடுறேன்”

“அது அபச்சாரம்”

“நீங்க எதுக்கும் ஒத்துழைக்க மாட்டேங்கறேள்”

“நீங்க என்னைக் கொஞ்சம் தொந்தரவு செய்யாம இருந்தா நான் சடங்குகளை சீக்கிரம் செஞ்சிடுவேன்”

ஆதித்தியா சலித்துக் கொண்டு ”கேரி ஆன்” என்று ஐயரிடம் சொல்லிவிட்டு விந்தியாவைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான். ‘யாரடி நீ?’

அவன் எதிர்பார்த்த சமயம் வந்தது. மணமகளை அழைத்துக் கொண்டு வரச் சொல்ல விந்தியாவின் அறைக்கு வனிதா சென்றாள். அவள் நெற்றியில் விலகி இருந்த சுட்டியை சரி செய்து மாலையை லாவகமாய் ஜடையில் சிக்காமல் மாட்டிவிட்டாள்.

“அக்கா என் முகத்தைப் பாருக்கா... இப்பையாவது பேசுக்கா” என்றாள் வனிதா.

ஆனால் விந்தியா பதில் எதுவும் பேசாமல் அவளைக் கவனியாமல் நின்றிருந்தாள். அவள் மாலையும் கழுத்துமாய் அம்மன் சிலைப் போல நடந்து வருவதைப் பார்த்துக் கண்ணீர் வடித்தாள் மாதவி.

வருண் அருகில் நந்தினி மணக்கோலத்தில் அமர்ந்திருக்க விந்தியா அதை ஆனந்தமாய் ரசித்தாள். ஆனால் அவள் தேடிய முகம் அவள் கண் முன் தோன்றவில்லை. சிவா உண்மையிலேயே திருமணத்திற்கு வரவில்லை என்பதை அவளால் நம்ப முடியவில்லை.

சிவா எங்கே சென்றான் என விந்தியாவின் விழிகள் தேட அந்த உண்மையை நம் வாசகர்களுக்குத் தெரியப்படுத்த கடமை பட்டிருக்கிறோம்.

கிட்டதட்ட பத்து மாதங்களுக்கு முன்பு இறந்து போன கேத்ரீன் மரணம் விபத்தல்ல என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அந்தக் கேஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் வேணு மகாதேவன் தலைமையில் இன்ஸ்பெக்டராகப் போஸ்டிங் தந்து சிவாவும் சேர்ந்து விசாரிக்கக் கமிஷ்னர் அவர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

தவிர்க்க முடியாத சூழலில் தன் தோழியின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் சிவா அங்கே மாட்டிக் கொண்டான்.

மண்டபத்தில் தலை குனிய வரவேண்டிய மணமகளின் கண்கள் அலைப்பாய்ந்து கொண்டிருந்தன. விந்தியாவைப் பார்க்க ஆவலோடு காத்திருந்த நம் கதைநாயகன் புகை மூட்டத்தில் கண்கள் எரிய ஐயரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content