You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 2

Quote

2

கூட்டிற்கு செல்லும் பறவை

அவள் வானின் உயரத்தில் பறந்து கொண்டிருந்தாள். ஜன்னல் வழியே அந்த ஆடம்பரமான நகரத்தை எட்டிப் பார்த்தாள். எங்கும் நிரம்பியிருந்த விளக்குகள் பூமியில் நட்சத்திரங்கள் மின்னுவதாய் தோன்றியது.

“என்ன விந்து... ஹேப்பியா? நாட்களை எண்ணி கொண்டிருந்தாய். கடைசியாக நீ எதிர்பார்த்த அந்த நாள்...”

“ஆமாம் சித்ரா... நான் எத்தனை சந்தோஷமா இருக்கேன்னு சொல்ல வார்த்தைகளே இல்ல... கனவு மாதிரி இருக்கு” என்று சொல்லி முடிக்கும் பொழுது அவளின் கையில் சுருக்கென்று வலித்தது.

“ஆ... என்னடி செஞ்ச?” என்று விந்து கைகளைத் தேய்த்தாள்.

“கனவில்லை விந்து” என்றாள் சித்ரா.

இந்தத் தோழிகள் இருவரும் தங்கள் தேசத்தை விட்டு வெகு தொலைவு தங்கள் வேலைக்காகப் பயணித்து வந்தவர்கள். இன்று மீண்டும் தங்கள் நாட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.

விந்தியாவும் சித்ராவும் மெலிதாகச் சிரித்துக் கொண்டனர்.

விந்தியா விமானத்தில் அமைந்த சிறு வட்ட கண்ணாடி சாளரத்தில் எட்டி பார்த்து,

“பை அமெரிக்கா... என் நாட்டிற்கு... என் கூட்டிற்கு திரும்பிச் செல்கிறேன்” என்று சொல்லி பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

“என்ன… ஊருக்குப் போனதும் மாப்பிள்ளை பார்க்கும் படலமா?” என்று சித்ரா கேட்க,

“அடி போடி… கொஞ்ச நாட்களையாவது நான் எனக்காக வாழணும்”

இப்படி இவர்கள் உரையாடிக் கொண்டிருக்க அருகே அமர்ந்திருந்த நபரை, விந்தியா அவளை அறியாமல் கவனித்தாள். ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த நபரின் முகம் களைப்புற்று வியர்வை படிந்திருந்தது. மூச்சை இழுத்து விட்டுக் கொண்டிருந்தார்.

விந்தியா, ‘சம்திங் ராங்’ என்று சித்ராவிடம் காண்பித்தாள்.

தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்துக் குடிக்கச் செய்தாள். அவர் அணிந்திருந்த கோட்டை அவிழ்க்க சொல்லி பணித்தாள். அதற்குள் சித்ரா ஏர் ஹோஸ்டஸை அழைத்து நிலைமையை விளக்கினாள். உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது. சில மணி நேரங்ளில் அவருடைய நிலைமை சீரானது.

“ஆர் யூ ஒகே நவ்?” என்று ஏர்ஹோஸ்டஸ் விசாரித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

விந்தியாவிடம் தமிழில் 'நன்றி' என்று அந்த நபர் உரைத்தார்.

“நீங்க தமிழா அங்கிள்?” என்று சித்ரா ஆவலாகக் கேட்டாள்.

“பார்த்தா அமெரிக்கன் மாதிரியா தெரியுது?”

“சத்தியமா இல்லை” என்றாள் சித்ரா.

“அப்புறம் என்ன சந்தேகம்?”

“ஹிந்தி, மராத்தி, பெங்காளி அப்படி இருக்குமோனு நினைச்சேன்” என்று சித்ரா சொல்ல மூவரும் அந்தச் சில மணி நேர பயணங்களில் நன்கு பேசி பழகினர்.

சென்னை இரவு மணி 12. 35.

நடுநிசியில் அந்த விமானம் தரையிறங்கியது.

பயணிகள் எல்லோரும் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு சென்னை மாநகரத்தை நோக்கி புறப்பட்டனர். சித்ரா விமான நிலைய வாசலில் நின்றிருந்த அவளின் அண்ணனோடு புறப்பட்டாள்.

அந்த நபர் விந்தியாவை அருகில் அழைத்தார்.

“நான் பல பிரச்சனைகளோடு இந்த ஃப்ளைட்டில் ஏறினேன். உங்களோட டிராவல் பண்ணி வந்த இந்தச் சில மணி நேரங்கள்ல எல்லாற்றையும் மறந்துட்டேன்” என்றார்.

தன்னுடைய விசிட்டிங் கார்ட்டை எடுத்து விந்தியாவிடம் நீட்டினார். அதில் சந்திரகாந்த் என்ற அவர் பெயரை மட்டும் கவனித்து விட்டு அந்தக் கார்ட்டை அவள் பேக்கில் திணித்தாள். சந்திரகாந்தை அழைத்துச் செல்ல அவருடைய கார் ஓட்டுநர் காத்துக் கொண்டிருந்தார்.

“வாம்மா... எங்க போகணும்னு சொல்லு… நான் டிராப் பன்றேன்” என்று சந்திரகாந்த் விந்தியாவை அழைத்தார்.

“நோ தேங்க்ஸ் அங்கிள்” என்று சொல்லி விந்தியா தன் வழியே புறப்பட்டாள்.

பயணங்களில் ஏற்படும் சந்திப்புகள் பல நேரங்களில் தொடர்வதில்லை... ஆனால், நம் கதைநாயகி விந்தியாவிற்கு ஏற்பட்ட இந்தச் சந்திப்பு அவள் கதை களத்தை மாற்றி அமைக்கப் போகிறது.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content