You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 20

Quote

20

மதிப்புக்குரியவள்

வீட்டிற்குள் செல்ல இருந்த விந்தியாவை ஆதித்தியா அழைத்தான்.

“விந்தியா... ஒரு நிமிஷம்” அவள் முன்னேறிச் செல்லாமல் அவனைத் திரும்பி பார்த்து அமைதியாக நின்றாள்.

“கேட்கிறனேன்னு தப்பா எடுத்துக்காதே... ஊருக்கெல்லாம் மரியாதை சொல்லித் தர்ற. உன் தங்கச்சி புருஷனுக்கு சொல்லி தரலியா? அவனுக்கு மரியாதைன்னா என்னன்னு தெரியாதா?”

அவனின் கேள்வியின் காரணத்தைப் புரிந்து கொண்ட விந்தியா இயல்பாகச் சிரித்தபடி,  “நண்பர்களுக்குள்ள யாராவது மரியாதையோட பேசிப்பாங்களா என்ன? அப்படிப் பழகினா அந்த நட்பு இயந்திரத்தனமா இருக்காது? அதுவுமில்லாம எங்க நட்பு ஜஸ்ட் டூ, த்ரீ இயர்ஸ் இல்ல... மோர்தென் டுவென்ட்டி இயர்ஸ்.

அவன் எப்பவும் என்கிட்ட அப்படித்தான் பேசுவான். நானும் வாடா போடானுதான் பேசுவேன். இன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்குமிடையே இருக்கிற கமிட்மென்டுக்காகவெல்லாம் எங்க பழக்க வழக்கத்தை மாத்திக்க முடியாது... சோ சாரி” என்று ஒரு விநாடி கூட யோசிக்காமல் அவள் மனதில் தோன்றியதை சொல்லி விட்டு சென்றாள்.

கண்களைப் பார்த்து அவள் தயங்காமல் சொன்ன விதமும் அந்தப் பதிலில் இருந்த திமிரும் அவனை ரசிக்க வைத்தது. அவள் தன் நட்பை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள முடியாது என்று கர்வமாய் சொன்னாலும் அது அழகாகவே இருந்தது. இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் சிவாவின் மீதான பொறாமையும் வெறுப்பும் உள்ளுக்குள் மீதம் இருந்தது.

விந்தியா அன்று முதன்முறையாக ஹோட்டலின் முக்கியப் பொறுப்புகளை எடுத்து கொள்வதற்காக புறப்பட்டாள். ஆதித்தியா சந்திரகாந்தை வழிமறித்து நின்று கொண்டு தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாக சொன்னான்.

“எதுக்கு ஆதி?”

“ஒரு நல்ல சைட் விலைக்கு வந்திருக்கு... அதை டிலே பண்ணாம வாங்கணும்”

“ஓகே... சைட்டோட கம்ப்ளீட் டீடைல்ஸை எனக்கு மெயில் பண்ணு” என்றார் சந்திரகாந்த்.

“நான் உங்ககிட்ட எல்லாவற்றிற்கும் ஆதாரம் கொடுத்துட்டே இருக்கணுமா? என் மேல உங்களுக்கு இம்மி அளவு கூட நம்பிக்கை இல்லையா?” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினான் ஆதி.

“இல்லை” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு சந்திரகாந்த் வேகமாக வெளியே சென்றுவிட்டார்.

ஆதித்தியா எரிச்சலடைந்தவனாய் சோபாவில் தலையைச் சாய்த்தபடி அமர்ந்து கொண்டான். விந்தியா ஆதியின் அருகில் வந்து நின்றாள்.

“உங்க அப்பா...” என்று விந்தியா ஏதோ சொல்ல யத்தனிக்க ஆதி அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.

“சரி... உங்க அப்பா இல்லை... மிஸ்டர். சந்திரகாந்த்... என்னோட மாமனார்... உங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒருத்தர்... அவர்கிட்ட எந்த உரிமையில் பணம் எதிர்பார்க்கிறீங்க ஆதித்தியா?”

“என்ன உங்க மாமானாருக்கு சப்போர்ட்டா?”

“இல்லவே இல்ல... உங்களுக்காகத்தான் பேசிறேன் ஆதி. உங்களோட பிஸினஸ் சம்பந்தப்பட்ட பைஃலை படிச்சேன்... இட் வாஸ் எக்ஸெலன்ட் ஆதி. இப்படி ஒரு வித்தியசமான ஐடியாவை வைச்சுக்கிட்டு நீங்க ஏன் மாமா பின்னாடி போகணும்? பேங்கில லோன் அப்ளை பண்ணலாமே...”

“நீ தெரிஞ்சுதான் பேசிறியா? நான் கேட்கிறது பெரிய தொகை... பேங்கில எல்லாம் பாஸிபில் இல்லை”

விந்தியா அவனைப் பார்த்து லேசான புன்னகையோடு,  “நத்திங் இஸ் இம்பாஸிபில்... இந்தப் பணமும் சொத்தும் இருக்கும் போது நான் ஏன் வெளிய அலையணும்னு யோசிக்கிறீங்க… உங்களுக்குத் தெரியுமா?

பெரிய ஆலமர நிழலில் சிறு புல் பூண்டு கூட முளைக்காது. கொஞ்சமாவது சிரமப்படணும். நீங்க வெற்றி பெறும் போது அது உங்க பெயரை மட்டும் சொல்வதாக இருக்கணும்...

இந்தக் கதவை பார்த்தீங்களா? இது திறந்திருக்கிற வரைக்கும் இந்த வீட்டை விட்டு வெளியே போகும் வேறு வழிகள் கண்ணுக்குத் தெரியாது. அதுவே இந்தக் கதவை அடைச்சிட்டா வெளியே போவதற்கான வேற வழியைத் தேடி போகத் தோன்றும்.

அப்படித்தான்… இந்தச் சொத்தும் பணமும் இல்லாமல் போனால், நீங்க என்ன செய்வீங்க... உங்க பிஸினஸுக்கான இன்வஸ்மென்ட்டை எப்படி ஏற்பாடு பண்ணுவீங்க…

 அப்படி யோசிச்சு பாருங்க... சாரி ஆதி! ஏதோ சொல்லணும்னு தோணுச்சு... சொல்லிட்டேன். எடுத்துக்கிறதும் எடுத்துக்காததும் உங்க விருப்பம்” என்று சொல்லிவிட்டு விந்தியா வெளியே புறப்பட்டாள்.

அம்மாவின் அரவணைப்பில் வளராத ஆதித்தியாவிற்கு பெண்மையின் மதிப்பு புரிந்ததில்லை. முதன் முறையாய் ஒரு பெண் அவன் வாழ்வில் மதிப்புகுரியவளாய் மாறுகிறாள். விந்தியா சொன்ன ஒவ்வொரு வார்த்தையின் பொருளும் அவனின் மனதில் அழுத்தமாய் பதிந்தது.

ஆதித்தியா சமுத்திரன் ஆபிஸில் அமர்ந்திருந்தான்.

“நீ எதுக்கு லோனுக்காக அலையணும்... உனக்கென்னடா தலையெழுத்து?” என்றான் சமுத்திரன்.

“முதல் முறையாய் என்னோட தப்பு எனக்குப் புரியுது”

“என்ன சொல்ல வர்ற? எனக்குப் புரியலயே?”

“புரியலைனா பரவாயில்ல... எனக்கு இது சம்பந்தமா நீதான்டா உதவி செய்யணும்”

சமுத்திரன் சிரித்துக் கொண்டே,  “லாயர்ஸ் யாருக்கும் பேங்கில லோன் தரமாட்டானுங்க… ரொம்ப ரூல்ஸ் பேசுவோமே. ஏமாந்தவனுக்குதான் தருவானூங்க... இதுல நான் என்னடா உதவுறது?” என்றான்.

“நான் உன்னைக்கூட வந்து லோன் வாங்கித் தரவா சொன்னேன்? சில டாகுமெண்ட்ஸ் ரெடி பண்ணிக் கொடு”

“செஞ்சிட்டா போச்சு... ஆனா உனக்கு என்ன திடீர் ஞானோதயம்?”

“விந்தியா...” என்றான்.

சமுத்திரனின் முகப்பாவம் அப்படியே மாறிப் போனது.

“ஒரு பொண்ணுக்காக உன்னை நீ மாத்திக்கிட்டியா?”

“மாறுவதா? நானா? அவ சொன்ன விதமும் சொன்ன விஷயமும் பிடிச்சிருந்துச்சு... எடுத்துக்கிட்டேன்... தட்ஸ் இட்”

“ம்... பாத்து நடந்துக்கோ... அப்பா பொறுப்பை எல்லாம் தூக்கி விந்தியாவிடம் கொடுத்துட்டாருனு கேள்விப்பட்டேன்” எதுவும் தெரியாதவன் போல் சமுத்திரன் ஆதியிடம் விசாரித்தான்.

“அவளால மேனேஜ் பண்ண முடியும்னு அவர் நினைச்சிருக்கலாம்... அதில் என்ன இருக்கு?” என்றான் ஆதி.

சமுத்திரனுக்கு ஆதித்தியாவின் பதில் அதிர்ச்சியாக இருந்தது. சந்திரகாந்த் எது செய்தாலும் குறை சொல்லும் குணமுடையவன் முதல் முறையாய் அவர் செயலை நியாயப்படுத்துகிறான்.

விந்தியாவைப் பற்றி ஏதாவது குறை கூறினாள் அது தனக்குத்தானே வினையாக முடியும் என்று சமுத்திரன் அதோடு அமைதியானான். விந்தியாவுடன் ஆதி இன்னும் சில நாட்கள் இருந்தால் அவன் தலைகீழாய் மாறிவிடுவானோ என்ற எண்ணம் சமுத்திரனுக்கு உதித்தது.

வனிதா பெட்டிக்குள் சிவாவின் உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள். அவள் முகம் வாடிப் போயிருந்தது. சிவா வேறு சில முக்கியமான பொருட்களை சின்னதாய் ஒரு பேக் ஒன்றில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

“எப்போ வருவீங்க மாமா?”

“கரெக்டா சொல்ல முடியாது வனிதா... ஒரு முக்கியமான கேஸ் விஷயமா போகிறேன்”

வனிதா ரொம்பவும் சோகமானாள். அதைச் சிவாவும் கவனித்தான்.

“என்னை விட்டுட்டு ஒரு மாசம் அம்மா வீட்டில் ஜாலியா இருந்த... இப்ப மட்டும் என்னடி ஆச்சு?” வனிதா அவனிடம் எதுவும் சொல்லாமல் சோகமயமாய் அமர்ந்து கொண்டாள்.

“ஏய் அழுமூஞ்சி... போய் உங்க அம்மா வீட்டில் இருந்துட்டு வாயேன்... உன் தம்பி மனைவிக்கு துணையா இருக்கும்”

“வேண்டாம்” எனப் பதில் சொல்லிவிட்டு பொம்மைக்காக அழும் குழந்தை போல முகத்தை வைத்து கொண்டாள்.

“என்னடி இது? நீ இப்படி முகத்தைத் தூக்கி வைச்சிட்டிருந்தா நான் போற வேலை எப்படி நடக்கும்? அப்புறம் எப்படி நான் சீக்கிரம் வரமுடியும்?”

வனிதா ரொம்பவும் பிராயத்தனப்பட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள்.

“இது நல்ல பெண்ணுக்கு அழகு” என்று சொல்லி செல்லமாகக் கன்னத்தில் தட்டினான்.

“நான் ஒரு விஷயம் சொன்னால் கோபப்பபட மாட்டீங்களே?“

“முதலில் விஷயத்தைச் சொல்லு “என்றான் சிவா.

“நீங்க வீட்டுக்கு வந்த அக்காவிடம் அப்படி நடந்திருக்கக் கூடாது. அவ மனசு ரொம்ப வருத்தப்பட்டிருக்கும்... நீங்க கோவா கிளம்பும் முன் அக்காகிட்ட ஒரு வார்த்தை பேசுங்க மாமா... ப்ளீஸ்” என்று சொல்லி அவனுடைய செல்ஃபோனை நீட்டினாள்.

சிவாவின் மனதிலும் அதே எண்ணம் இருந்ததினால் செல்ஃபோனை வாங்கிக் கொண்டான். அவன் விந்தியாவிற்கு ஃபோன் போட்டதும் வனிதா வேலை இருப்பதாகச் சொல்லி அங்கிருந்து அகன்றாள்.

விந்தியா அழைப்பை ஏற்றாலும் சிவா எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தான். விந்தியாவும் அவனே பேசட்டும் என மௌனம் காத்தாள்.

இறுதியாக விந்தியா, “தாங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தற்சமயம் மிகுந்த கோபத்தில் உள்ளார்” என்று சொன்னதும் சிவா மறுபுறத்தில் சிரித்துவிட்டான்.

விந்தியாவும் சிவாவும் எப்படியோ சண்டை போட்டு சமாதானமாகினர்.

சிவாவிடம் தான் ஹோட்டல் ஆதித்தியாவில் முக்கியப் பொறுப்புகளைக் கவனிப்பதாகச் சொன்னாள். அவள் அப்படி சொன்னவுடன் சிவா விந்தியாவிடம் கேஸ் விஷயமாக ஒரு ரகசிய உதவி ஒன்றை கேட்டான். அது பற்றி விளக்கமாக உரைத்தான்.

அவள் சந்தேகம் கொண்டவளாய் அவனிடம் “இது சாத்தியமா?” என்று கேட்டாள்.

“நீ நினைத்தால் முடியும்” என்று சிவா சொன்னதும் விந்தியா தெளிவுற்றவளாய் அவன் கேட்ட உதவியைக் கண்டிப்பாகச் செய்வதாகக் கூறி இணைப்பைத் துண்டித்தாள்.

சிவாவுக்கு விந்தியா செய்யப்போகும் உதவி, அவர்கள் வாழ்வில் பெரும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்று அவர்கள் அப்போது உணரந்திருக்கவில்லை.

You cannot copy content