You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 23

Quote

23

அவள் திரௌபதி அல்ல

விந்தியா உள்ளே நுழைந்ததும் அங்கே நடப்பவை அனைத்தும் அவளை முகம் சுழிக்க வைத்தது. ஆதித்தியா நேராக லீனாவை நோக்கி சென்றான். அவன் கைகளை நீட்டி வாழ்த்தியதும், அவள் அவன் கைகளைத் தட்டி விட்டு இழுத்து அணைத்து கொண்டாள்.

 விந்தியா சலனமில்லாமல் ரொம்பவும் இயல்பாகவே நின்று கொண்டிருந்தாள். லீனாவிடம் விந்தியாவைக் காட்டி மனைவி என்று அறிமுகப்படுத்த, அவள் விந்தியாவை ஏறிட்டுப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

லீனா கேக் வெட்ட, அங்கே பெரும் ஆரவாரமே நிகழ்ந்தது. அந்த நிகழ்வு முடிந்ததும் எல்லோரும் ஆண் பெண் வித்தியாசமின்றி ஆட்டம் பாட்டமாய் குதுகலித்தனர்.

லீனா “கம்மான் ஆதி... லெட்ஸ் டான்ஸ்” என்று சொல்லி ஆதித்தியாவை கையோடு இழுத்துக் கொண்டு போனாள். அவளைத் தவிர்க்க முடியாமல் விந்தியாவைப் பார்த்தபடியே அவனும் சென்றான்.

விந்தியா அங்கே நடப்பவை எதிலும் ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கிக் கொண்டாள்.

விந்தியாவை அவமானப்படுத்த கிடைத்த சரியான சந்தர்ப்பம் என்று மனோஜ் அவளை நோக்கி முன்னேறிச் சென்றான். சமுத்திரன் மெளனமாய் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தான்.

மனோஜ் கையிலிருந்த டிரிங்க்ஸை ரொம்ப பழகியவன் போல விந்தியாவிடம் நீட்டினான்.

“ஹேவ் இட்” என்றான். அதைச் சற்றும் எதிர்பாராதவள் அவன் யாரென்று புரியாமல் முகத்தைத் திருப்பியபடி,

“நோ... தேங்க்ஸ்” என்றாள்.

“இது வெரி நார்மல் டிரிங்க்... அவ்வளவு போதை எல்லாம் இல்லை” என்று மனோஜ் சொன்னதற்கு, விந்தியா அவனைக் கோபமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

“இட்ஸ் ஒகே... விருப்பமில்லனா பரவாயில்லை” என்று அவள் பார்வையின் பொருள் புரிந்தவனாய் அந்தக் கிளாஸை ஓரமாய் வைத்தான்.

மீண்டும் அவன் கைகளை நீட்டி, “லெட் அஸ் டான்ஸ்” என்றான்.

“யார் நீங்க மிஸ்டர்? வாட் டு யு வான்ட்?” என்று கேட்டுவிட்டு அவள் அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவளின் முன்னே மீண்டும் வந்து நின்று, “யாருனு தெரிஞ்சாதான் ஆடுவியா?”

“நிச்சயம் மாட்டேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவளின் கைகளை அழுத்தி பிடித்துக் கொண்டான்.

அவனின் செயல் விந்தியாவிற்கு எரிச்சலை தர கைகளை உதறி விட்டு ஆதித்தியாவை தேடினாள். ஆனால் அவள் கண்களில் ஆதித்தியா தென்படாமல் போக, விந்தியா மனோஜை தவிர்க்க அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றாள்.

ஆதித்தியா லீனாவை சமாளித்துவிட்டு விந்தியாவைத் தேடிக் கொண்டு வந்தான். அதே சமயத்தில் மனோஜ் விந்தியாவை விடுவதாக இல்லை.

அங்கே ஆடிக்கொண்டிருந்த கூட்டத்திற்கு இடையே வந்து அவளை மீண்டும் வழிமறித்துக் கொண்டான். அவனின் செயலால் அருவருப்பு அடைந்தவளாய் விந்தியா அவன் மீது ஏற்பட்ட கோபத்தை அடக்கி கொண்டு விலகிச் செல்ல எத்தனித்தாள்.

ஆனால், மனோஜ் அநாகரிகமாய் அவளின் இடுப்பை வளைத்து அணைக்க முயற்சி செய்ய விந்தியாவின் பொறுமை தூள்தூளாய் நொறுங்கிப் போனது. கண்களில் கோபம் கனலாய் எரிய விந்தியா அவனைத் தள்ளிவிட்டு கால்களிலிருந்த செருப்பைக் கொண்டு முகத்தில் அறைந்தாள்.

தன்னிலை மறந்து ஆடிக்கொண்டிருந்த எல்லோருமே அதிர்ச்சியில் உறைந்து போயினர். விந்தியாவின் செயலை கண்ட ஆதித்தியாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆதி நடந்ததை யூகிப்பதற்குள் விந்தியா அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வெளியேறியிருந்தாள்.

விந்தியாவின் செயலால் உறைந்து போயிருந்த மனோஜ், ஆதித்தியா சட்டையை இழுத்து பிடிக்க இன்னும் மிரண்டு போனான்.

“ஆதி லிஸன்... நான் ஜஸ்ட் டான்ஸாட கூப்பிட்டேன்... அதுக்கு போய் ஓவரா ரியாக்ட் பண்றா” என்றான் மனோஜ்.

“ராஸ்கல்... பொய் சொல்லாதடா” என்று ஆதி கை ஓங்க லீனா குறுக்கே வந்து நின்றாள்.

“ஆதி ஸ்டாப் இட்... இது என்ன நீங்க சண்டை போடற இடமா? உண்மை என்னன்னு தெரியாம மனோஜ் மேல கை ஒங்கிட்டு வர்ற. முதல உன் மனைவிக்குப் போய் நாகரிகம்னா என்னன்னு கத்துக்கொடு” என்றாள்.

“லீனா... போதும்... விந்தியா பத்தி பேச இங்க யாருக்கும் தகுதி இல்லை… அன் யு... நீ என் கையில மட்டும் சிக்கின... அதுக்கப்புறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது மனோஜ்” என்று லீனாவின் பின்னோடு ஒளிந்து கொண்டிருக்கும் மனோஜை பார்த்து மிரட்டிவிட்டு வேகமாய் வெளியேறினான்.

லீனா மனோஜின் பக்கம் திரும்பி, “கெட் அவுட் ஆஃப் மை சைட்” என்றாள் கோபமாக.

சமுத்திரன் மட்டும் அங்கே நடந்த எவற்றிலும் கலந்து கொள்ளாமல் பார்வையாளனாகவே வேடிக்கை பார்த்தான்.

ஆதித்தியா வெளியெ வந்தான். விந்தியா காரில் ஏறாமல் விறுவிறுவென சென்றுவிட்டதாக டிரைவர் சொன்னதும், கவலையுற்றவனாக அந்த நடுநிசி இரவில் எப்படித் தனியாகச் சென்றிருப்பாள் என அந்த இடத்தைச் சுற்றிலும் தேடிப் பார்த்தான்.

பின்னர் விந்தியா வீட்டிற்கு சென்றிருப்பாளோ என்ற எண்ணத்தோடு வீட்டை வந்தடைந்தான். அவன் எண்ணமிட்டபடி அவள் அறையில் கைகளைப் பின்னிக்கொண்டு தலையைக் குனிந்தபடி சோபாவில் அமர்ந்திருந்தாள்.

ஆதி விந்தியாவின் முன் நின்று கோபமாக, “அறிவில்லை உனக்கு? இந்த ராத்திரியில் உன்னைச் சுற்றி சுற்றி தேட வைச்சிட்ட இல்ல... பைத்தியக்காரன் மாதிரி ரோடெல்லாம் ஓட வைச்சிட்ட. இவ்வளவு திமிரும் தெனாவெட்டும் ஒரு பொண்ணுக்கு நல்லதில்லை.

 ஆம்பிளைங்க எல்லாம் உன் காலில விழணும்னு நினைச்சிட்டிருக்கியா? அடிமட்ட நாகரிகம் கூடத் தெரியாதாடி உனக்கு?

 நீயெல்லாம் இந்த ஊர் எல்லைய தாண்டி போயிருந்தாதானே... காட்டு கத்துக் கத்திட்டிருக்கேன்... காதிலேயே வாங்காம உட்காந்திட்டிருக்க” என்று சொல்லியபடி மேஜை மேலிருந்த பூஜாடியை உடைக்கத் தூக்கினான்.

“ஸ்டாப் இட் ஆதி...” என்று கத்தியபடி அந்த ஜாடியை பிடுங்கி மீண்டும் இருந்த இடத்திலேயே வைத்தாள்.

“எல்லாத்தையும் ஈஸியா தூக்கி போட்டு உடைச்சிடலாம்... அதை மாதிரி ஒன்றை உருவாக்குறதுதான் கஷ்டம்” என்றாள்.

“நான் வெறும் ஜாடியைதான் உடைக்க நினைச்சேன்... ஆனா நீ உணர்வுகளையே சுலபமாய் தூக்கிப் போட்டு உடைக்கிற” என்று விந்தியாவின் மீது கடுமையான வார்த்தைகளைக் கொண்டு தாக்கிவிட்டு அமைதியானான்.

“ஏன் நிறுத்திட்டீங்க? அறிவில்லாதவ... நாகரிகம் தெரியாதவ... திமிரு பிடிச்சவ... உணர்வுகளை மதிக்கத் தெரியாதவ... இன்னும் ஏதாவது மிச்சம் மீதி இருக்கா? கம்மான் ஆதி... முழுசா சொல்லி முடிச்சிடுங்க” என்று சொல்லி விந்தியா ஆதித்தியாவை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் சிவந்து போயிருந்தது.

அந்தப் பார்வையே அவளுடைய வேதனையைப் புலப்படுத்தியது.

“என்ன பிரச்சனை உனக்கு... நானும் அங்கதானே இருந்தேன்...”

“அதுதான் எனக்கும் தெரியணும்... நீங்க எங்கதான் இருந்தீங்க?”

“என்னதான் இருந்தாலும் நீ நடந்துக்கிட்டது ரொம்ப ஓவர்... இடம் பொருள் ஏவல் தெரியாம”

“ரொம்ப ஓவர்தான். நாகரிகம் தெரியாம நடந்துக்கிட்டேன்... ஆமாம்... எனக்கு உங்க நாகரிகம் தெரியாது... தெரிஞ்சுக்கவும் விருப்பப்படல...

இந்த ஊர் எல்லை தாண்டி போய் இருப்பேனானு கேட்டீங்க இல்ல... ஆஸ்டிரேலியா... அட்லான்டா... பேரீஸ்னு பல இடங்களில் வேலை பாத்திருக்கேன். எத்தனை மைல் கடந்து போனாலும் என்னோட நாகரிகத்தையும் என் நாட்டோட கலாச்சாரத்தையும் விட்டு கொடுத்ததில்லை... எதுவும் தெரியாம பேசாதீங்க!”

“சரி... நான் எதுவும் தெரியாம பேசிட்டதாகவே இருக்கட்டும்... ஆனா நீ கோபத்தைக் காட்டின விதம் சரியா?” என்றான்

“தப்புதான்... நான் அப்படி நடந்திருக்கக்கூடாது. என்கிட்ட அநாகரிகமாய் நடந்துக்கிட்டவனை... என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செய்ய நினைச்சவனை நான் செருப்பால அடிச்சிருக்கக் கூடாது.

வேறெப்படி நடந்துக்கணும்... திரௌபதியை சபையில் அவமானப்படுத்திய பொழுது, அஞ்சு புருஷனில் ஒருவனாவது காப்பாத்துவான்னு எதிர்பார்த்து நின்னுட்டிருந்தாளே... அப்படியா? இல்ல கடவுளே காப்பாத்துனு கை தூக்கிட்டு நிக்கணுமா?” என்று சொல்லிவிட்டு விந்தியா ஆதித்தியாவை பார்த்த பார்வையில் அவன் பதில் சொல்ல முடியாமல் நிலைகுலைந்து நின்றான்.

ஆதித்தியா பிரச்சனை இத்தனை தீவிரமாய் இருக்கும் எனத் தெரிந்து கொள்ளாமலே, விந்தியாவிடம் வார்த்தைகளை விட்டுவிட்டதை எண்ணி வேதனையுற்றான்.

“சாரி... விந்தியா... நான் என்ன நடந்ததுனு கேட்காமலே... ஐம் ரியலி சாரி” என்றான்.

“இந்த நிதானமும் பொறுமையும் வார்த்தைகளை அள்ளி கொட்டுறதுக்கு முன்னாடியே இருந்திருக்கணும். இட்ஸ் டூ லேட்... இந்த நொடி வரைக்கும் ஏதாவது ஒரு சின்னப் புள்ளியில் நமக்குள்ள ஒத்துப்போகும்னு முட்டாள்தனமா நினைச்சிட்டிருந்தேன்...

பட் நெவர்... நீங்களும் நானும் இரண்டு துருவங்கள் மாதிரி... அது ஒன்றாகச் சேரவே முடியாது” என்று சொல்லிவிட்டுச் சோபாவில் தலையணை போட்டு சாய்ந்து கொண்டாள்.

ஆதி விந்தியாவை சமாதானப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை இழந்தவனாய் பால்கனியில் நின்று கொண்டான்.

‘கல்யாணம் செஞ்சு ஒரு நாள் கூட நிம்மதி இல்லை... வேண்டாம்னு தூக்கி போடவும் முடியல... நீதான்டி வேணும்னு உரிமையோட சொல்லவும் முடியல...

மனசில இருக்கிறதை சொல்லலாம்னு நினைக்கும் போதுதான் ஏதாவது பிரச்சனை வருது... பிரச்சனை தானா வருதா இல்ல இவளா உருவாக்கிறாளா தெரியல’ என்று மனதிற்குள் புலம்பியபடி சிகரெட்டை வாயில் வைத்தான்.

 எதிர்பாராமல் விந்தியாவை அவன் பார்க்க... அவள் புருவத்தை சுருக்கிக் கொண்டு பார்த்த பார்வையில் அந்த சிகரெட்டை அவனை அறியாமலே தூக்கி வீசினான். அவன் மனம் அவளின் பார்வையை மீறி கூடச் செயல்பட மறுத்தது.

மனோஜ் கன்னங்கள் வீங்க நடந்த அவமானத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் குடிபோதையில் மூழ்கினான். சமுத்திரனின் அறிவுரை எதுவும் அவன் காதில் விழவில்லை.

மனோஜின் நினைப்பு முழுக்க விந்தியாவை வேதனைபடுத்த வேண்டும்... அவளைத் தனிமைப்படுத்திக் கதற வைக்க வேண்டும்... அவனிடம் வந்து அவள் மண்டியிட வேண்டும்... இப்படியாக அவன் தீவரமாய் எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.

இராவணன் சீதையை சந்தித்த நொடி இருவரில் யாருக்கான பிரச்சனையைத் தீர்மானித்தது என்ற பதில் சொல்ல முடியாத கேள்வியாக விந்தியா மனோஜின் சந்திப்பு அமைந்தது.

You cannot copy content