You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 26

Quote

26

பிரம்மாஸ்திரம்

விடிந்தவுடன் விந்தியா புறப்பட தயாராகிக் கொண்டிருக்க ஆதித்தியா அவளைப் போக வேண்டாம் என தடுத்தான். முடிந்த வரை சீக்கிரம் வந்துவிடுவதாகச் சொல்ல அப்படியும் ஆதித்தியா சமாதனமாவதாகத் தெரியவில்லை. கடைசியில் ஆதித்தியா விந்தியாவின் பிடிவாதத்திற்கு ஒத்துப்போக வேண்டியே இருந்தது.

விந்தியா அன்று ஹோட்டலுக்கு வந்தது சிவா கேட்ட ஆதாரத்தை வேறு யாரின் கையிலும் கிடைக்காமல் தானே அவனிடம் கொடுக்க வேண்டுமே என்ற அவசியத்தால்.

நேராக அவள் தன் அறைக்குள் நுழைந்தவுடன் மேனேஜர் ரமேஷை அழைத்தாள்.

ரமேஷ் உள்ளே நுழைந்தவுடன், “ஆதித்தியா சார் எப்படி இருக்காரு?” என்று நலம் விசாரித்தான்.

“ஹி இஸ் பைஃன்... நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடுவார். அப்புறம் ரமேஷ் நான் பழைய சிசிடிவி ரெக்காடிங்ஸை பேக்அப் எடுக்கச் சொன்னனே... அந்த ரெக்காடிங்ஸ் வந்துருச்சா?”

“எஸ் மேடம்” என்று சொல்லிவிட்டு ரமேஷ் ஒரு சீ. டி யை அவளிடம் தயக்கத்தோடு கொடுத்தான்.

“தேங்க்ஸ் ரமேஷ்!” என்று சொல்லிவிட்டு சீ. டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

“மேடம்... ஒரு நிமிஷம்... அந்தச் சீ. டி எதுக்குனு நான் தெரிஞ்சிக்கலாமா?”

விந்தியா அவன் ஏன் கேட்கிறான் எனப புரியாதவளாய், “நம் ஹோட்டலில் நடந்த டெத் பத்தின விசாரணைக்காக போலிஸ் கிட்ட கொடுக்கணும்”

ரமேஷுக்கு முகமெல்லாம் வியர்த்துப் போனது.

“அந்த ஆக்ஸிடென்ட் நடந்த போதே போலீஸ் கேட்ட எல்லா ஆதாரத்தையும் கொடுத்தாச்சு”

“அத பத்தி எனக்குத் தெரியல ரமேஷ்... அப்போ கொடுத்த ஆதாரத்தில் தப்பு இருக்குனு இன்ஸ்பெக்டர் சிவா பீஃல் பண்றாரு... அதை நாமதானே தெளிவுபடுத்தனும்” என்று சொன்னாள்.

ரமேஷின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டவளாய், “நீங்க ஏன் இத்தனை கேள்வி கேட்கீறீங்க? இந்த ஆதாரத்தினால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள் விந்தியா.

“இல்ல மேடம்... அது உங்களுக்குத்தான் பிரச்சனை” என்றான்.

“எனக்கு பிரச்சனையா?” என்று குழப்பமாகக் கேட்டாள்.

“நீங்களே அந்த சீ.டியை போட்டு பாருங்க” என்றான்.

அப்படி என்ன இருந்துவிட போகிறதென ஆவலுடன் அந்த சீ. டியை தன்னுடைய லேப் டாப்பில் போட்டு பார்த்தாள். அவள் சொன்ன குறிப்பிட்ட தேதியில் ஹோட்டல் முழுக்க உள்ள கேமராக்களின் பதிவுகள் அடங்கியிருந்தன.

ரமேஷ் சொன்னபடி கேமரா நம்பர் 61 பதிவை திறந்து பார்த்தாள். அறை எண் 603 கதவு பளிச்சென்று தெரிந்தது.

இரவு வெகு நேரம் கழித்துக் கேத்ரீன் தள்ளாடிக் கொணடு நுழைய அவள் போன சில நொடிகளில் ஆதித்தியாவும் பின்னோடு நுழைந்தான். அதைப் பார்த்த கணத்தில் விந்தியா அப்படியே உறைந்து போனாள்.

என்ன நடந்தது என்று யூகிக்க முடியாமல் தலை மேல் பெரும் பாரம் இறங்கியது. இவைகளுக்கான விளக்கம் என்ன என்பது போல் கேள்வி குறியோடு ரமேஷை பார்க்க அவன் நடந்ததைத் தெளிவாக உரைத்தான்.

“சந்திரகாந்த் சார் வெளிநாட்டுக்கு ஒரு ஆர்டர் விஷயமா போயிருந்த சமயத்தில் ஆதித்தியா சார்கிட்டதான் பொறுப்பை கொடுத்துட்டு போனாரு. அந்த இன்சிடன்ட் நடந்த நைட் மிஸ். கேத்ரீன் குடிச்சிட்டு வந்து ஆதித்தியா சாரை மீட் பண்ணனும் என்று ரொம்பக் கலாட்டா பண்ணாங்க... பட் நான் அலோவ் பண்ணல.

அப்புறம் கேத்ரீன் போன பிறகு நான் அவங்க கொடுத்த விசிட்டிங் கார்ட்டை கொடுத்தேன். அப்புறம் கேத்ரீன் அதிகப்படியான போதையில் வந்தது பற்றியும் சொன்னேன்.

 உடனே ஆதித்தியா சார் என்கிட்ட எதுவும் சொல்லாம வேகமா போயிட்டாரு... அந்த நேரத்தில்தான் ரூம் நம்பர் 603 ல் இருந்து ஒரு பெண் தவறி விழுந்துட்டதா நீயூஸ் வந்துச்சு.

அந்த நேரம் பார்த்து ஆதி சார் எங்க போனாருனு தெரியல. நான் உடனே சமுத்திரன் சாருக்கு ஃபோன் பண்ணேன். அவர் வந்த பிறகுதான் இறந்தது கேத்ரீன் என எனக்குத் தெரிய வந்தது மேடம்” என்று அன்று நடந்த சம்பவத்தைச் சொல்லி முடித்தான்.

“ஓகே... அந்த சீசிடிவி ரெக்காட்டிங்க்ஸை மாத்தினது யாரு?”

“சமுத்திரன் சார்கிட்ட கேத்ரீன் ஆதித்தியாவை மீட் பண்ண வந்ததைப் பத்தி நான்தான் சொன்னேன். அப்புறம் சமுத்திரன் சார்தான் இந்தப் பிராப்ளத்தை சால்வ் பண்ணறதுக்காக...” என்று சொல்லி முடிக்கும் போதே விந்தியா கோபமானாள்.

“அந்த சமுத்திரன் கிரிமனல் லாயரா இல்ல கிரிமனலா?” என்றாள்.

“இல்ல மேடம்... ஆதித்தியா சாரை காப்பாற்றத்தான்”

“ஸ்டாப் இட் ரமேஷ்... தானா நீந்தி கரையேறுபவனை காப்பாத்துறேனு தண்ணில அமுக்கி கொல்ற மாதிரி இருக்கு... நீங்க சொல்ற கதை”

ரமேஷ் அப்படியே மெளனமாய் நின்றான். விந்தியா தீவரமாய் யோசித்து விட்டு சொன்னாள்.

“வேற வழியே இல்லை... இந்த சீடியை போலீஸ்கிட்ட கொடுத்துதான் ஆகணும்” என்றாள்.

“மேடம்… ஆதித்தியா சார்...”

“பொய் எதுக்கும் தீர்வில்லை ரமேஷ். உண்மையை மறைப்பது நமக்கு மேலும் மேலும் சிக்கலைத்தான் அதிகமாக்கும்” என்று விந்தியா சொல்லிவிட்டு சோர்வுடன் தலையில் கை வைத்து கொண்டாள். ரமேஷ் அவளை தனிமையில் விட்டுவிட்டு அங்கிருந்து அகன்றான்.

இங்கே விந்தியா கவலையோடு வீழ்ந்து கிடக்க, அங்கே ஆதித்தியா தவிப்புடன் காத்துக் கிடந்தான்.

ஆதித்தியாவிற்கு விந்தியா இல்லாத நொடி பொழுதும் யுகங்களாய் தோன்றியது. சந்திரகாந்தும் சமுத்திரனும் ஆதித்தியாவை பார்க்க வந்த போது அங்கே விந்தியா இல்லாதது அவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. கடைசியில் அன்று இரவு சமுத்திரனே ஆதித்தியாவோடு தங்கினான்.

“விந்தியாவிற்கு அப்படி என்ன முக்கியமான வேலை வந்திருக்கும்... அதுவும் உன்னைக் கூட கவனிச்சிக்க முடியாத அளவுக்கு” என்று ஆதியை தூண்டி விட்டான் சமுத்திரன்.

“இங்க அவ வராமல் இருக்கானா... அதுக்கு ஏதாவது முக்கியமான ரீஸன் இருக்கும்” என்றான் ஆதித்தியா. அதற்கு மேல் விந்தியாவைப் பற்றி எதுவும் பேசாமல் சமுத்திரன் அமைதியானான்.

அன்று இரவு கோவாவிலிருந்து சிவாவும் வேணுவும் சென்னை வந்து இறங்கினர்.

சிவா வீட்டை அடைந்த போது அங்கே விந்தியாவை எதிர்பார்க்கவில்லை. அவள் சோபாவில் அமர்ந்து கொண்டு சிந்துவோடு விளையாடிக் கொண்டிருந்தாள். சிவா வந்ததும் தன் பொருட்களை எடுத்து வைத்து விட்டு உடை மாற்றிக் கொண்டு வந்தான்.

அதற்குள் சிந்து விந்தியாவின் கைகளிலேயே உறங்கிப் போக, வனிதா அவளைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

விந்தியாவும் சிவாவும் வெகு நேரம் மௌனமாகவே இருக்க முதலில் சிவா அவன் மனதில் தோன்றியதை கேட்டான்.

“ஏதோ கேட்கணும்னு வந்துட்டு இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம் விந்து?”

பேக்கில் இருந்த சீடியை அவனிடம் நீட்டினாள்.

“கேட்க வரல... கொடுக்க வந்திருக்கேன். இது என் கையில் இருந்தா தேவையில்லாத டென்ஷன்... பிடி... நான் கிளம்பணூம்”

“நீ டென்ஷனாகிற அளவுக்கு அப்போ இந்த சீடில ஏதோ இருக்கு... நீ தேடி கண்டுபிடிச்சி கட்டிக்கிட்டியே அந்த நல்லவன் சம்பந்தப்பட்ட ஆதாரமா?”

சிவா அந்த ஆதாரத்தைப் பார்க்காமலே சரியாக யூகித்தான்.

“இதான் டைம்னு குத்திக் காட்டுறியா?” என்றாள் விந்தியா.

“அதெல்லாம் இல்ல... இந்த ஆதாரம் என் கைக்கு வந்துட்டா அப்புறம் நடக்கப் போகிற எதையும் என்னாலயும் தடுத்து நிறுத்த முடியாது”

“கோ அஹெட்... ஆதித்தியா தப்பு செய்யலனா இந்த ஆதாரத்தால் அவரை ஒண்ணும் செய்ய முடியாது” என்று சொல்லியபடி விந்தியா சீடியை அவன் அருகில் வைத்து விட்டு புறப்பட்டாள்.

“ரொம்ப லேட்டாயிடுச்சு... நானும் துணைக்கு வர்றேன்”

“இல்ல... வேண்டாம்... காரிலதான் வந்தேன். இனிமே நீ எனக்கு துணைக்கு வர முடியாது... உன் வழியும் என்னோட வழியும் வேற வேறாயிடுச்சு” என்று சொல்லிவிட்டு விந்தியா புறப்பட அவள் சென்ற வழித்தடத்தைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

விந்தியா வீட்டை அடைந்ததும் சந்திரகாந்த் வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார்.

“என்னம்மா இவ்வளவு லேட்டாயிடுச்சு...” என்றார்.

“நான் அத்தை வீட்டுக்கு போயிட்டு வந்தேன்”

“ஒ அப்படியா! சரி பரவாயில்ல... நாளைக்குக் காலையில் ஆதிக்கு டிஸ்சார்ஜ்... நீயும் வர இல்ல”

“இல்ல மாமா... நீங்க போயிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு மாடியிலிருந்த தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

சந்திரகாந்திற்கு அவளின் போக்கே விளங்கவில்லை.

விந்தியாவிற்கு அந்த அறையின் வாசனையும் ஆதித்தியாவை நினைவுப்படுத்தியது. அன்றைய நீண்ட இரவும், தனிமையும் விந்தியாவிற்குப் பெரும் வலியாக இருந்தது.

ஆதித்தியா விழித்திருக்கும் அந்த இரவு விளக்குகளோடு அவனும் விந்தியாவைப் பற்றி நினைத்தபடி விழித்திருந்தான்.

பொழுது விடிந்து விட்ட போதும் விந்தியாவை சூழ்ந்திருந்த குழப்பங்கள் இருளாய் படர்ந்திருந்தன. வாசலில் கார் நின்ற சத்தம் கேட்க ஆதித்தியாவின் வருகை விந்தியாவை மேலும் கலவரப்படுத்தியது.

அவனிடம் எதற்கான விளக்கத்தைக் கேட்பது... நடக்கும் பிரச்சனையை எப்படி விவரிப்பது என்று புரியாமல் திணறினாள்.

சிவா தன்னிடமிருந்த அந்த ஆதாரத்தை வேணு மகாதேவனிடம் காண்பித்தான்.

“வெல் டன் சிவா... கிரேட்...” என்று ஆரவாரித்தார்.

சிவாவின் மனிதில் துளி கூட சந்தோஷம் ஏற்படவில்லை.

“இந்தக் கேஸோட பெரிய முடிச்சு அவிழ்ந்திடுச்சு. நம்ம கையில சிக்கியிருக்கிறது பிரம்மாஸ்திரம் சிவா... சரியா உபயோகப்படுத்தணும். இனி ஆதித்தியாவோட பிடி நம்ம கையில” என்றான் வேணு அதீத உற்சாகத்தோடு.

“இந்த ஆதாரத்தை மட்டும் வைச்சு நாம ஆதியை குற்றவாளினு சொல்ல முடியாது” என்றான் சிவா

“அது நமக்கு தேவையில்லாத விஷயம்... ஆதித்தியா குற்றவாளியா இல்லையா என்பதை கோர்ட் முடிவு பண்ணிக்கும்... நான் கமிஷனரை பார்த்துட்டு வர்றேன்... கெட் ரெடி சிவா... நாம ஆதித்தியா வீட்டுக்கு போகணும்” என்றார்.

விந்தியாவின் முன்னிலையில் ஆதித்தியாவை கைது செய்யப் போகும் தருணத்தை நினைத்தாலே சிவாவிற்கு நிலை தடுமாறியது.

ஆதித்தியா ரொம்பவும் பொறுமையாக தன் அறைக்குள் நுழைந்தான். அவனுடைய வலது காலில் லேசான வலியிருந்தது. உள்ளே நுழைந்ததும் அவன் பார்வை விந்தியாவைத் தேடியது.

அவள் சோபாவில் கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு தலையைச் சாய்த்தடி துவண்டு இருந்ததைப் பார்த்து அவனுக்கும் இனம் புரியாத சோகம் தொற்றிக் கொண்டது.

மெல்ல நடந்து வந்து அவள் நெற்றியில் கை வைத்தான். அவன் தொடுகையை உணர்ந்தவுடன் விந்தியா எழுந்து விலகி நின்று கொண்டாள்.

“என்னாச்சு... உடம்பு சரியில்லையா?” என்று ஆதி கேட்கவும், ‘இல்லை’ என்பது போல் முகத்தைப் பார்க்காமல் தலையாட்டினாள் விந்தியா.

“அப்புறம் ஏன் நீ இவ்வளவு டல்லா இருக்கே?”

“நான் நல்லாதான் இருக்கேன் ஆதி”

“எனக்கு அப்படித் தோணல”

“என்னைப் பத்தி விடுங்க... உங்களுக்கு காலில் வலி குறைஞ்சிருக்கா?”

“அந்த வலியை விட மனசில ஏற்பட்ட வலிதான் அதிகமாயிருக்கு... காலையிலிருந்து இப்ப வரைக்கும் நீ எனக்கு விஷ் பண்ணுவேன்னு வெயிட் பண்ணிட்டிருக்கேன்... தெரியுமா?”

விந்தியா ஏதோ நினைவுக்கு வந்தவளாய், “ஓ சாரி... இன்னைக்குதான் உங்களோட பிறந்த நாளா?”

“தெரியாத மாதிரி கேட்கிற? அன்னைக்கே சொன்னேன்ல, மறந்துட்டியா? இட்ஸ் ஓகே... ஒண்ணும் பிரச்சனை இல்லை” என்றான்.

விந்தியாவிற்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. ஆதித்தியா அவளின் உணர்வுகளைக் கவனிக்காமல் அவன் இடது கையிலிருந்த பூங்கொத்தை நீட்டினான்.

“திஸ் இஸ் பாஃர் மை டார்லிங்... என் வாழ்க்கையை மாற்றிய தேவதைக்காக...” என்று சொல்லியபடி ஆதி அழகான அந்தப் பூங்கொத்தை விந்தியாவிடம் நீட்டினான்.

அழகான சிவப்பு நிற ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தோடு ஆதித்தியா நிற்க அந்தத் தருணத்தின் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் விந்தியா தவித்தாள்.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content