You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 28

Quote

28

உடைந்து போனதோ!

ஆதித்தியாவும் சமுத்திரனும் வீட்டு வாசலில் வந்து இறங்கினர். ஆதித்தியாவின் முகத்திலிருந்த வேதனையைப் பார்த்து சமுத்திரன் சொன்னான்.

“உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் ஐம் தேர் பாஃர் யூ... நீ ஏன் கவலைப்படற...” என்றான் சமுத்திரன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல... விந்தியாவிற்கு இந்தப் பிரச்சனையை எப்படி புரிய வைக்கப் போறேன்னு நினைச்சாதான் பயமா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.

அவனை எதிர்பார்த்திருப்பது போலவே அவன் வந்தவுடன் வாசலில் நின்று அழைத்து வந்தாள் விந்தியா.

“நீங்க வருவீங்கன்னு மாமா இப்பதான் ஃபோன் பண்ணாரு... ஆர் யூ ஓகே?” என்று அவள் கனிவாக விசாரித்த விதம் அவனுக்குக் குழப்பமாய் இருந்தது. எந்த பதிலும் சொல்லாமல் அவளின் முகத்தை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன அப்படி பார்க்கிறீங்க? வாங்க சாப்பிடலாம்”

“எனக்குப் பசிக்கல... வேண்டாம் விந்தியா”

“நானும் உங்களுக்காகச் சாப்பிடாம காத்திருக்கேனே... பரவாயில்லையா?”என்று விந்தியா சொன்னதும் படிக்கெட்டு ஏறச் சென்றவன் மீண்டும் விந்தியாவை நோக்கி திரும்பி வந்தான்.

அதற்குள் பின்னாடியிருந்து கை தட்டும் ஓசை கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர். அவர்கள் பார்த்த திசையில் சமுத்திரன் நின்று கொண்டு ஏளனமாய் சிரித்தபடி கைதட்டி கொண்டிருந்தான்.

“சூப்பர் விந்தியா... பிரமாதமான நடிப்பு… ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்” என்றான் சமுத்திரன்.

ஆதித்தியாவிற்கு அவன் செயலின் அர்த்தம் புரியவில்லை. ஆனால் விந்தியா அவன் எண்ணத்தை யூகித்து விட்டாள்.

“நடிச்சு நடிச்சு இன்னும் எத்தனை நாளைக்கு ஆதித்தியாவை ஏமாத்த போற?”

“நீ உன் வேலையைப் பாத்துட்டு போ... தேவையில்லாம பேசாதே” என்றாள் விந்தியா கோபமாக.

“இன்னைக்கு நான் பேசியே தீருவேன்... உன்னால என்ன செய்ய முடியும்னு நானும் பாக்குறேன்” என்று சமுத்திரன் பேசியதும் ஆதித்தியா தலை கால் புரியாமல் விழித்தான்.

“என்ன நடக்குது இங்க... உங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சனை?” என்று இருவரையும் பொதுவாக ஆதித்தியா கேட்டான்.

“நத்திங் ஆதி... நாம இதைப் பத்தி அப்புறம் பேசலாம்” என்றாள் விந்தியா.

ஆனால் சமுத்திரன் விடுவதாக இல்லை.

“என்ன விந்தியா... உன்னோட வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும்னு பயமா இருக்கா?”

விந்தியா எரிச்சல் அடைந்தளாய், “ஹி இஸ் டோட்டலி மேட்” என்றாள்.

ஆதித்தியா இம்முறை கொஞ்சம் தெளிவு பெற்றவனாய், “வெயிட் பண்ணு விந்தியா... அப்படி என்னதான் சொல்றான்னு கேட்போமே” என்று ஆதித்தியா உரைத்ததும் சமுத்திரன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

விந்தியா எதுவும் பேசாமல் மாடிக்குச் செல்லும் படிக்கெட்டுகளில் அமர்ந்து கொண்டு சமுத்திரன் முகத்தைப் பாராதது போல் திரும்பிக் கொண்டாள்.

விந்தியா ஹோட்டலில் இருந்து ஆதாரத்தை எடுத்து வந்தது... ஆதியை மருத்துவமனையில் பார்க்க வராமல் சிவாவிடம் அந்தச் சீடியை கொடுத்தது வரை சமுத்திரன் சொல்லி முடித்தான்.

ஆதியின் முகத்தில் லேசான சலனம் ஏற்பட அவன் விந்தியாவை நோக்கினான்.

“இதெல்லாம் என்ன கதை விந்தியா? சமுத்திரன் சொல்றதெல்லாம் கொஞ்சம் கூட நம்புகிற மாதிரி இல்லையே”

எவற்றை எல்லாம் அவள் சொல்ல தயங்கினாளோ அவற்றை அனைத்தும் சமுத்திரனே சொல்லி முடித்தான்.

“ஹி இஸ் ரைட் ஆதி. நான் என்ன சொல்ல தயங்கிட்டு இருந்தேனோ... அதை எல்லாம் மிஸ்டர். சமுத்திரனே சொல்லி முடிச்சிட்டாரு. தேங்க் யூ வெரி மச்... நீங்க வந்த வேலை முடிஞ்சுதா... கிளம்புங்க” என்று வாசலை காண்பித்தாள் விந்தியா.

ஆதித்தியாவிற்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அவனைச் சில நிமிடங்கள் இயங்க விடாமல் செய்தது.

“நான் கிளம்பணுமா... இருக்கணுமா என்பதை பத்தி ஆதி சொல்லட்டும்... அத பத்தி நீ ஏன் கவலைப்படற? உன் முன்னாள் காதலன் பத்தின ரகசியத்தைப் பத்தி சொல்லிடுவேனோனு பயமா இருக்கா?”

விந்தியா அவன் பேசியதை கேட்டுப் படிக்கெட்டில் இருந்து எழுந்து கொள்ள ஆதி அவள் கைகளைப் பிடித்துத் தடுத்தான்.

“வேண்டாம் சமுத்திரன்... உன் பேச்சு சரியில்ல... நீ புறப்படு“ என்றான் ஆதித்தியா.

“என் பேச்சு சரியாதான் இருக்கு... உன் மனைவியோட கேரக்டர்தான் சரியில்ல” என்று சமுத்திரன் சொன்ன மாத்திரத்தில் ஆதித்தியா கோபம் கொண்டவனாய் கை ஓங்கி கொண்டு போக, சமுத்திரன் துளி கூடப் பயமின்றி தொடர்ந்து பேசினான்.

“நீயே விந்தியா கிட்ட கேளு... சிவா அவளோட முன்னாள் காதலனா இல்லையானு”

சமுத்திரனின் பேச்சை கேட்டு ஆதித்தியா கொஞ்சம் யோசனையோடு அடிக்காமல் கையினை இறக்கினான். சிவா என்ற பெயர் அவன் மனதில் வெறுப்பை உண்டாக்கியிருந்தது.

ஆதித்தியா அமைதியாய் சோபாவில் தலையை மேலே சாய்த்தபடி அமர்ந்து கொண்டான். விந்தியா சமுத்திரனின் வார்த்தைகள் கேட்டு அவனை எதுவும் செய்ய முடியாத இயலாமையோடு அங்கிருந்த தூணில் சாய்ந்து கொண்டாள்.

சீதையென வாழும் ஒவ்வொரு பெண்ணுமே வார்த்தை என்ற நெருப்பால் பற்ற வைக்கப்படுவாள் என்பதுதான் இந்தச் சமூக நியதி என்று விந்தியா மனதில் எண்ணிக் கொண்டாள்.

ஆதியின் அமைதி சமுத்திரனுக்கு சாதகமாய் அமைந்தது. அவன் ஆதித்தியாவின் அருகில் அமர்ந்தான்

“கேத்ரீன் பற்றிய விஷயம் முன்னாடியே தெரிஞ்சதை பற்றி உன் பொண்டாட்டி கேட்டாளா? இல்ல சீடியை கொடுப்பதற்கு முன்னாடியாவது இத பத்தி ஏதாச்சும் பேசினாளா? அவ வாழ்கையில் சிவாவுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தில் பாதியாவது உனக்குக் கொடுக்கிறாளானு யோசிச்சியா ஆதி?” என்று அவன் இஷ்டத்துக்கு விந்தியாவின் மீது குற்றங்களைச் சுமத்தி கொண்டிருந்தான்.

விந்தியா சமுத்திரனின் பேச்சை கேட்கக்கேட்க அவனை அறைய வேண்டும் போல் கோபம் பொங்கி கொண்டு வந்தது. ஆதித்தியாவின் மெளனம் விந்தியாவை எதுவும் செய்ய முடியாமல் தடுத்தது.

ஆதித்தியா மீண்டும் எழுந்து விந்தியாவின் அருகில் வந்து நின்றான்.

“கேத்ரீன் பத்தி உனக்குத் தெரிஞ்சது... அத பத்தி நீ என்கிட்ட சொல்லாம மறைச்சது... அப்புறம் அந்த சீடியை நீ போலிஸ்கிட்ட கொடுத்தது... இது எல்லாதுக்கும் நிச்சயமா உன்கிட்ட நியாயமான காரணம் இருக்கும். அதை நீ விளக்க வேண்டிய அவசியமும் இல்ல... நானும் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமுமில்ல... நான் உன்னை முழுசா நம்புறேன்டி” என்று ஆதித்தியா சொன்னதும் சமுத்திரனின் முகம் கறுத்துப் போனது.

அத்தனை நேரம் தன் நிலைமையைப் புரிய வைக்க முடியாமல் வாடிக் கொண்டிருக்க இந்த வார்த்தைகள் விந்தியாவை உயிர்ப்பித்தன.

விந்தியா விவரிக்க முடியாத ஆனந்த்துடன், “தேங்க் யூ... ஆதி... தேங்க் யூ சோ மச்...” என்று சொல்லியபடி ஆதியின் தோள்களின் மீது சாய்ந்து கொண்டு கண்ணீர் வடித்தாள். ஆதித்தியா அவளின் தலையை வருட சமுத்திரன் அங்கே நடப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் வெளியே சென்றான்.

விந்தியா சாய்ந்தபடி இருக்க ஆதித்தியா அவளிடம் தன் மனதில் தோன்றிய எண்ணத்தை உரைத்தான்.

“நாம இப்படியே சந்தோஷமா இருக்கணும்னா... அந்த சிவா நம் வாழ்கையில் இருக்கக் கூடாது” என்றான்.

உடனே விந்தியா அவனின் கைகளை விலக்கி விட்டு நிமர்ந்து கொண்டாள். கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி அவனை உற்றுப் பார்க்க ஆதி மேலும் சொன்னான்.

“உன்னுடைய பாஸ்ட் பத்தி எனக்குக் கவலையில்ல... அதுல சிவா என்ன ரோல் வேணா பிளே பண்ணி இருக்கட்டுமே... ஐ டோன்ட் கேர்... பட் இனிமே அவன் நம்ம லைஃப்ல வரவே கூடாது”

ஆதித்தியாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அவனை விட்டு விலகி வந்தாள்.

“நமக்கு அதுதான் நல்லது விந்தியா” என்று மீண்டும் அவள் அருகில் சென்றவனிடம் இருந்து விலகி நின்றாள்.

“அங்கயே நில்லுங்க ஆதி... என்கிட்ட வராதீங்க...”

“ஏன்?” என்று ஆதங்கத்துடன் கேட்டான்.

“சிவாவை விட்டுக்கொடுத்தால்தான் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்னா... அப்படி ஒரு லைஃப் எனக்கு வேண்டவே வேண்டாம்... சாரி” என்றாள்.

“இதுக்கு என்ன அர்த்தம்... என் கூட வாழ உனக்கு விருப்பமில்லையா?”

“சத்தியமா அப்படி இல்ல. என் மனசிலிருந்து சொல்றேன்... நான் உங்களை விரும்புறேன் ஆதி... நான் உங்க கூட வாழணும்னு ஆசைப்படறேன்... யூ ஆர் மை லவ். அதுக்காகவெல்லாம் எனக்கு எப்பவுமே சப்போர்ட்டா இருந்த என் நண்பனை உதறித் தள்ளணும்னு சொன்னா... அது இம்பாஸிபிள் ஆதி” என்றாள்.

“அவனுக்காக நீ என்னை வேண்டாம்னு சொல்ற... அப்போ அவன்தான் உனக்கு ரொம்ப முக்கியம் இல்ல”

விந்தியா சோகம் கலந்த சிரிப்போடு, “மூளை, இதயம் இந்த இரண்டில் முக்கியத்துவம் வாய்ந்தது எதுனு நீங்க சொல்லுங்க... அப்புறம் உங்களில் யார் முக்கியமானவங்கன்னு நான் சொல்றேன்” என்று அவனைக் கேட்டாள்.

ஆதித்தியா மெளனமாக நிற்க விந்தியா படிக்கட்டு ஏறி அவள் அறைக்குள் சென்றாள்.

ஆதித்தியாவும் சிறிது நேரம் கழித்து அவன் அறைக்கு செல்ல விந்தியா அவளுடைய பொருட்களை எடுத்து பெட்டிக்குள் அடுக்கிக்கொண்டிருந்தாள்.

“விந்தியா ஸ்டாப் இட்” என்று அவள் அடுக்குவதை தடுத்தான்.

“இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சனை?”

“அந்த சிவா என் பார்வைக்கு நல்லவனா தெரியல”

“அப்படின்னா உங்க பார்வையிலதான் தப்பு இருக்கு”

“என் வார்த்தையில உனக்கு நம்பிக்கை இல்லையா?”

“எனக்கு சிவா மேல நம்பிக்கை இருக்கு”

“அவன் உனக்கு உண்மையான நண்பனா இருந்தா... என்னையும் நண்பன மாதிரிதானே பார்க்கணும்? ஆனா அவன் ஏன் என்னை எதிரி மாதிரி நடத்தணும்? அவனுக்கு என் மேல கோபமா இல்ல உன் மேல விருப்பமா?”

“போதும் நிறுத்துங்க ப்ளீஸ்... எங்க நட்பை புரிஞ்சுக்க ஒரு தகுதி வேணும்... சாரி அது உங்கக்கிட்ட இல்ல” என்று விந்தியா சொல்ல இதே வார்த்தையை அச்சுப் பிசகாமல் சிவா சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.

இதற்கு பிறகு ஆதித்தியா விந்தியாவைத் தடுத்து நிறுத்தவில்லை.

கடைசியாக விந்தியா தன் பெட்டியை எடுத்துக் கொண்டு போகும் போது வழிமறித்து நின்றான்.

“உங்க மாமனார் வந்து உன்னைப் பத்தி கேட்டா நான் என்ன சொல்லணும்? நன்றிக்கடனுக்காக செய்த கல்யாணம் இன்றோடு முறிஞ்சு போச்சுனு சொல்லணுமா?”

அவளுக்குக் குத்தலாக இருக்க வேண்டுமென்றே ஆதித்தியா அப்படி பேசினான்.

“எனக்கான உரிமையையும் சுதந்திரத்தையும் தொலைச்சிட்டு அவரோட மகன் கூட எனக்கு வாழ விருப்பமில்லைனு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு விந்தியா கடந்து சென்றாள்.

அவளுக்காக வாங்கிய ரோஜாக்கள் படுக்கை மீது துவண்டு கிடக்க கோபத்தில் அதை கைகளில் எடுத்து வீசி எறிந்தான். ஏற்கனவே ஆதியின் கைகளில் இருந்து விந்தியா காப்பாற்றிய பூ ஜாடி அந்தப் பூக்கள் பட்டு சாய்ந்து விழுந்து உடைந்தது.

ஈகோ என்ற கண்ணாடி துகள்களால் மென்மையான உறவுகளைக் கையாள்வதால், அது கிழிந்து போகும் என்பதை ஆதித்தியா மட்டுமல்ல நாம் யாருமே உணர்வதில்லை.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content