You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 29

Quote

29

மீண்டும் சுழற்சி

விந்தியா பெட்டியோடு வீட்டு வாசலில் நின்றிருப்பதை வருண் பார்த்து கலக்கமுற்றான். அவளை உள்ளே கூட அழைக்காமல் ஏதேதோ கேள்விகளை வரிசையாய் கேட்டுக் கொண்டிருந்தான்.

விந்தியா என்ன சொல்வதென்று புரியாமல் நிற்க நந்தினி ஓடி வந்து பெட்டியை வாங்கினாள்.

“நல்ல மரம் மாதிரி நின்னுட்டு இருக்கீங்க... வழியை விடுங்க” என்று வருணிடம் சொல்லிவிட்டு நந்தினி விந்தியாவை உள்ளே அழைத்தாள்.

விந்தியா உள்ளே நுழைந்ததுமே சுவற்றில் தரையில் சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டாள்.

“மாமாவை ஏன் அரெஸ்ட் பண்ணாங்க? அதைப் பத்தி தெரிஞ்சதிலிருந்து அம்மா ரொம்ப அப்செட்டா இருந்தாங்க. இதுல நீ வேற இங்க வந்திருக்கே... என்னதான் அக்கா நடந்துச்சு?”

“நான் இங்க வரக் கூடாதா? இது என் வீடில்லையா வருண்?”

“சேச்சே… அப்படி இல்லக்கா...”

“அப்புறம் என்ன? காலையில எல்லாவற்றையும் தெளிவா சொல்றேன்... இப்போ போய்ப்படு” என்றாள் விந்தியா அதிகார தொனியில்.

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் அண்ணி... முதலில் வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்தாள் நந்தினி.

ஆதித்தியாவை சாப்பிட அழைக்கும் போதுதான் இத்தனை பிரச்சனையும் நடந்து முடிந்தது. அங்கே அவன் சாப்பிட்டிருப்பானோ என்று எண்ணுகையில் அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தது.

“என்ன அண்ணி?” என்று அவள் வேதனையைக் கண்டு நந்தினி பதறினாள்.

“எனக்குப் பசிக்கல நந்தினி. நீ போ... என்னை கொஞ்ச நேரம் தனியா விடு” என்றாள் விந்தியா.

அவளை மேலும் வேதனைப்படுத்தாமல் அவர்கள் இருவரும் அங்கிருந்து அகன்றனர்.

கமிஷனர் ஆபிஸுக்கு போயிட்டு திரும்பி வந்த சந்திரகாந்திற்கு நடந்தவை எல்லாம் சண்முகம் மூலமாக தெரிய வந்தது. கோபத்தோடு ஆதித்தியாவின் அறைக்குச் சென்றவர் ஆதியை பார்த்த மாத்திரத்தில் சிலை போல நின்றார்.

ஆதித்தியா சிதறிய பூக்களுக்கும், உடைந்த ஜாடிக்கும் அருகாமையில் சுவற்றில் தலை சாய்த்தபடி அப்படியே நொறுங்கி போயிருந்தான்.

அவனின் குறும்புதனத்தையும் கோபத்தையும் அதிகாரத்தையும் பார்த்த சந்திரகாந்திற்கு அவனின் இந்த வேதனையும் வலியும் தோய்ந்த முகம் புதிதாய் தோன்றியது. அவனை அப்படிப் பார்க்க முடியாமல் மீண்டும் தன் அறைக்கே சென்றார் சந்திரகாந்த்.

விடிந்து சில மணி நேரங்களில் சிவா தன்னுடைய பைக்கில் போலிஸ் ஸ்டேஷன் வந்து இறங்கினான். சிவாவின் வருகையைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோரும் தங்கள் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினர்.

அவன் உள்ளே நுழைந்தவுடன் அங்கே இருந்த கான்ஸ்டபிளை அழைத்து, “வேணு சார் வந்துட்டாரா? “என்று கேட்டான்.

“இல்ல சார்... இன்னைக்கு அவரோட பொண்ணை காலேஜ் சேர்க்கிற விஷயமா போயிருக்காரு” என்றான்.

இதைக் கேட்டதும் சிவா தலையாட்டிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தவுடன் அவன் எதிர்பாராமல் கான்ஸ்டபிள் இருவர் பேசிக் கொண்டது காதில் விழுந்தது.

“அசிஸ்டன்ட் கமிஷனர் ரொம்ப நேர்மையானவர் ஆச்சே... அவர் பொண்ணுக்கு எப்படி வித்யா மெடிக்கல் காலேஜில் சீட் கிடைச்சதுனு புரியலயே”

இதற்கு மற்றொரு கான்ஸ்டபிள் சொன்ன பதில்தான் சிவாவை கலவரப்படுத்தியது.

“ஒவ்வொரு மனிஷனுக்கும் ஒவ்வோரு விதமான விலை இருக்கும்” என்றான்.

சிவாவின் மூளை ரொம்ப வேகமாய் வேலை செய்தது. சட்டென்று லேப்டாப்பை இயக்கி வித்யா மெடிக்கல் காலேஜ் பற்றிய விவரங்களை தேடினான்.

அது சென்டிரல் மினஸ்டர் வித்யாதரனுடையது. அவனைப் பற்றிய விவரங்களைப் பற்றித் தேடிப் பார்த்தான்.

அவனின் அரசியல் பிரவேசத்திற்கு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் செய்திருந்தான். வி. டி ரியல் எஸ்டேட். ‘வி. டி' என்ற வார்த்தை எங்கயோ கேள்விப்பட்டதாய் தோன்ற அதை அவன் ரொம்பவும் பிராயத்தனப்பட்டு நினைவுப்படுத்த முயற்சி செய்தான்.

திடீரென்று அவனுக்கு ஞாபகம் வந்ததும் முன்னாடி இருந்த டேபிள் மீது ஓங்கி ஒரு குத்து குத்தி ”எஸ்” என்றான்.

உடனே கான்ஸ்டபிள் அவனருகில் வந்து “சார்” என்றார்.

“ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

கோவாவில் உள்ள எம். வி. டி லிக்கர் ஃபாக்டரி... அதுவும் வித்யதாரனுடையது என்பது அவனுடைய யூகம். இந்த எம் என்ற வார்த்தை மக்களை ஏமாற்ற அவன் வைத்த குறியா இல்லை அதற்கும் ஏதேனும் அர்த்தம் இருக்குமோ என்று யோசித்தான்.

 நம் வாசகர்கள் கூட மறந்திருக்கக் கூடும். ஆனால் சிவாவிற்கு ஞாபகம் பலமாய் இருந்தது. அந்த எம். வி. டி லிக்கர் ஃபாக்டரியை பத்தி வேணுவிடம் சொல்லும் போது ஏதேதொ கதை சொல்லி வேணு அவனை திசை திருப்பியதை நினைவுப்படுத்தினான்.

அதுவும் இன்றி லாக்கரை உடைக்கலாம் என்று சொல்லும் போது அதற்கு மறுப்புத் தெரிவித்தது, லாக்கரின் ரகசிய எண்ணை பற்றி முதலில் வேணுவிடம் சொன்னது, அடுத்த நாள் அவன் லாக்கரை திறந்த போது அதில் முக்கியமான எந்த விஷயமும் கிடைக்காதது, இவை எல்லாம் வேணுவின் லீலைகள் என்று தோன்றிற்று. ஆனால் இவை அனைத்துமே இப்போதைக்கு சிவாவின் யூகம் மட்டும்தான்.

கடைசியாக ஆதியின் விசாரணை நினைவுக்கு வர, அதில் ஆதி கேத்ரீன் தானாக விழுந்ததை அவன் பார்த்ததாக சொன்னது… இந்த கேஸை ஆரம்பித்திலிருந்து தனக்கு ஏற்பட்ட யூகமும் சந்தேகமும் தவறா என்று கேள்வி மனதில் எழுந்தது. ஆதியும் கொலையாளிகளுக்கு உடந்தையா என தவிர்க்க முடியாத கேள்வி மனதில் ஏற்பட்டது. அந்தக் கேஸ் மீண்டும் அவனை சுழற்சியில் தள்ளியது.

சிவா தன்னுடைய வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்க்கு விரைந்தான். படுக்கையின் மீது அமர்ந்திருந்த வனிதாவிடம் “காபி” என்றான்.

அவன் உடைகளை மாற்றிக் கொண்டு வந்த பின்பும் அவள் அங்கேயே அசையாமல் அமர்ந்திருந்தாள்.

“ஏ வனிதா” என்று அவள் தோள்களை உலுக்கியதும் சிவாவை நிமிர்ந்து பார்த்தாள்.

“நீங்கதான் ஆதித்தியா மாமாவை அரஸ்ட் பண்ணீங்களா?” என்று வனிதா கேட்டதும் அவளின் வருத்தம் புரிந்தவனாய், “நீ நினைக்கிற அளவுக்கு ஒண்ணுமில்ல... நான் பாத்துக்கிறேன்” என்றான்.

“என்ன நீங்க பாத்துப்பீங்க? அக்கா அம்மா வீட்டில இருக்கா... தெரியுமா உங்களுக்கு?” என்றாள்.

அப்பொழுது சிவாவிற்கு ஆதிக்கும் தனக்கும் நிகழ்ந்த வாக்குவாதம் நினைவுக்கு வர அதன் விளைவாக ஆதி விந்தியாவிடம் கோபித்துக் கொண்டிருப்பானோ என்று தோன்றியது.

 பல நேரங்களில் சிவாவின் யூகம் சரியாகவே இருந்தது. வனிதாவின் கலக்கத்தைத் தீர்க்க அவன் வனிதாவை விந்தியாவிடம் அழைத்து சென்றான்.

விந்தியாவிற்கு காலையிலிருந்து மாதவியைத் தேற்றவே சரியாக இருந்தது. விந்தியாவின் தன்னம்பிக்கையான பேச்சை தவிர்த்து வேறு எந்த வித பிடிப்பும் மாதவிக்கு ஏற்படவில்லை.

ஆதித்தியாவை பார்த்து பேச வேண்டும் என்று மாதவி பிடிவாதமாய் இருக்க, ‘என்ன செய்யப் போகிறோம்’ எனக் குழம்பி கொண்டிருந்த நேரத்தில்தான் வனிதாவும் சிவாவும் வீட்டிற்கு வந்தனர்.

விந்தியா மாடியில் நின்று கொண்டிருக்க வனிதா நடந்தவற்றை எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தாள். வனிதா மாதவியின் அழைப்பிற்கு கீழே செல்ல சிவாவும் விந்தியாவும் பேசத் தொடங்கினர்.

ஒரு சில மணி நேரங்களில் விந்தியா சிவாவை சண்டையிட்டு கீழே இறங்கி போகச் சொன்னாள்.

“இத பார் விந்தியா... ஆதிக்கிட்ட சண்டை போடணும்னு நான் ப்ளான் பண்ணல... அதுவா நடந்து போச்சு”

“அதெப்படி அதுவா நடக்கும்... உனக்கு வாய் ரொம்ப அதிகம்” என்றாள்.

“ஆதிதான் முதல்ல வம்புக்கு வந்தான்”

“சரி இருக்கட்டும்... அதுக்காக நீ வரைமுறை இல்லாம பேசுவியா?”

“பாத்தியா வனிதா... நேத்து வந்தவனுக்காக இவ என்கிட்ட சண்டை போடுறா. இனிமே நாம இங்க இருக்கக் கூடாது... வா கிளம்பலாம்”

வனிதாவின் முகத்தில் ஈயாடவில்லை. சிவாவின் கையைப் பிடித்துக் கொண்டு விந்தியாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே போனாள்.

“இனிமே நீ என் முகத்தில் கூட விழிக்காதே” என்றாள் விந்தியா.

“நீயும்தான்” என்று சொல்லிவிட்டு வனிதாவை அழைத்துக் கொண்டு வாசலை கடந்து போக, அங்கே சந்திரகாந்த் சமுத்திரனுடன் வந்திருக்க அவர்களைப் பார்த்தும் பார்க்காமல் கடந்து சென்றான்.

இவர்கள் பிரச்சனையில் சந்திரகாந்தை கவனிக்காத மாதவி தன் தவறை உணர்ந்து மரியாதையுடன் உள்ளே அழைத்தாள்.

 விந்தியாவிற்கு சமுத்திரனை பார்க்க பார்க்க எரிச்சலாய் இருந்தது. கண்களால் எரிப்பது போல் அவன் அவளைப் பார்த்த பார்வையும், ‘தான் நினைத்தது போல் ஆதித்தியாவிடம் இருந்து உன்னைப் பிரித்து விட்டேன்’ என அவன் திமிராகப் பார்த்த பார்வையும் யார் பார்வையிலும் படவில்லை.

விந்தியாவை அழைத்துச் செல்ல வந்த சந்திரகாந்தின் எண்ணம் விந்தியாவின் பிடிவாதத்திற்கு முன் நிறைவேறவில்லை. கொஞ்சம் சோகம் கலந்த முகத்தோடு அவர் புறப்படும் நேரத்தில் ஆதித்தியாவின் துறுதுறுப்பு மறைந்து சோகமயமாய் இருப்பதாய் சொன்னார்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் விந்தியா உணர்ச்சிவசப்பட்டு அவர்களை வழியனுப்பாமல் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டாள். எதையும் தைரியமாய் எதிர்கொள்ளும் விந்தியாவின் நிலைமையும் நேரெதிராய் மாறி இருப்பதை சந்திரகாந்த் கண்ணெதிரே கண்டார்.

இவர்கள் இருவருமே வெகு நாட்களுக்குப் பிரிந்திருக்க மாட்டார்கள் என மாதவிக்குத் தைரியம் சொல்லிவிட்டு புறப்பட்டார். முடிந்த வரை அவர்களைச் சேரவே விடக்கூடாது எனச் சமுத்திரன் எண்ணிக் கொண்டான்.

வனிதா குழப்பத்தோடு வீட்டு வாசலில் இறங்க சிவா தன் அறைக்குள் சென்றான்.

விந்தியாவைப் பற்றி சரோஜாவும் தனசேகரும் விசாரிக்க அவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தாள். சிவா தன் கையிலிருந்த ஃபைலை ஆர்வமாய் புரட்டிக் கொண்டிருக்க வனிதா அவன் முன்னே வந்து,

“நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கட்டுமா?” என்றாள்.

“ம்…” என்றான் பக்கங்களைப் புரட்டியபடியே...

“நீங்க சண்டை போட்டீங்களா இல்ல நடிச்சீங்களா?” என்றாள்.

சிவா அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“சந்தேகமே வேண்டாம்... நடிப்புதான்”

வனிதா அப்படியே வாயில் கை வைத்து கொண்டாள்.

“நாங்க எல்லாம் எவ்வளவு டென்ஷனாகிட்டோம் தெரியுமா?”

“நீங்க எங்க டார்கெட் இல்ல... வேற ஒருத்தனுக்காக அந்த நடிப்பு.. நம்மை நாமே பலவீனமாகக் காட்டிக்கிட்டாதான் எதிரியோட பலத்தைக் குறைக்க முடியும்” என்றான்.

“அப்படின்னா?”

“ஆமை முயலை எப்படி ஜெயிச்சிதோ அப்படி”

வனிதாவிற்கு அப்போதும் புரியவில்லை. அதற்கு மேல் விளக்கம் கேட்காமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

சிவா விந்தியாவின் கைப்பேசியில் அழைத்தான். ஆதித்தியாவின் நினைப்பிலிருந்து மனதை தேற்றிக் கொண்டவளாய் அழைப்பை ஏற்றாள்

“சொல்லு சிவா... லிஸ்டை செக் பண்ணியா?” என்றாள்.

“நோ யூஸ்... என்னால கண்டுபிடிக்க முடியல”

“அப்போ என்ன பண்ணலாம்?”

“நீ அந்த ஃபோட்டோவை கொண்டு வா”

“அது ஆதித்தியா ரூம்ல இருக்கு”

“சோ வாட்?”

“நான் அவன் கூட சண்டை போட்டுட்டு வந்திருக்கேன்”

“உன்னை யாரு சண்டை போட சொன்னது? கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமில்ல”

“இதெல்லாம் எனக்கு தேவைதான்” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“நாளைக்கு அந்த ஃபோட்டோ எனக்கு வேணும்”

“முடியாது சிவா. நீ போலிஸ்தானே... நீயே முயற்சி பண்ணி பாரு”

“ஏற்கனவே உன் புருஷனுக்கு என்னைப் பிடிக்காது... இதை வேற செஞ்சா வேண்டாத வம்பு. நான் ஒரு ஐடியா சொல்றேன்... ஆதித்தியா இல்லாத டைமா பார்த்து தூக்கிட்டு வந்துரு”

“நீயும் உன் ஐடியாவும்... அவன் கிட்ட மாட்டினா செத்தேன்”

“என் திங்க்ஸை விட்டுட்டுப் போயிட்டேன்... எடுக்க வந்தேன்னு சொல்லு”

“என்னை மாட்டி விடறதுக்கு முடிவு பண்ணிட்ட... வேற வழியில்ல... போய் தொலைக்கிறேன்”

“உன் புருஷனை காப்பாத்த இருக்கிற பெரிய எவிடன்ஸ்... விட்டுராதே” என்று சொல்லிவிட்டுப் ஃபோனை துண்டித்தான் சிவா.

ஆதியின் வேதனையோ கோபமோ இரண்டுமே தனக்கு பாதிப்பை தரக் கூடியதென மனதில் நினைத்து கொண்டாள் விந்தியா.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content