You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 32

Quote

32

விந்தையானவள்

தன் அறையின் படுக்கை மீது அப்படியே சிலை போலவே அமர்ந்திருந்தாள். கருமை அடர்ந்திருந்த விழிகள் பார்ப்பவர்களையும் கூடச் சோகத்தில் ஆழ்த்தும் அளவிற்கு வேதனை நிரம்பியிருந்தது. வீட்டில் உள்ள எல்லோருக்குமே அவளின் வருத்தம் புரிந்தாலும், அதற்கான காரணம் தெரிந்திருக்கவில்லை.

அனைவரும் மாறி மாறி சொன்ன சமாதனங்கள் அவள் காதுக்கு எட்டியதே தவிர மூளைக்கு எட்டவில்லை. தான் அவன் முன்னே, ஒவ்வொரு முறையும் பலவீனமாய் மாறிவிடுவது ஏன் என்று எண்ணிய போதே, அவளுக்கு அவள் மீதே வெறுப்பும் கோபமும் உண்டானது.

ஆதித்தியா தான் செய்த செயலுக்கு இனி எந்த ஒரு நியாயம் கற்பித்தாலும் அதெல்லாம் அவள் முன்னே எடுபட வாய்ப்பில்லை. இனி வரும் ஆதியுடனான அத்தியாயங்கள் கசந்து போனதாகவே இருக்கப் போகின்றன.

இந்நிலையில் விந்தியாவைப் பார்க்க சிவா வீட்டிற்கு வர,

“அக்கா ரொம்ப அப்செட்டா இருக்கா மாமா... என்னன்னு எதுவும் சொல்ல மாட்டிறா...” என்று வருண் கூறினான்.

எந்த நிலையில் இருக்கிறாளோ என்று குழப்பத்தோடு அவளின் அறைக்கதவை தட்டிவிட்டு திறந்தவன், உள்ளே எங்குமே அவளைக் காணாமல் விழித்தான். விந்தியா தன்னை இந்தக் கவலையில் இருந்து மீட்டுக்கொள்ள எண்ணி முகத்தை அலம்பி விட்டு துடைத்துக் கொண்டே குளியலறையிலிருந்து வெளியே வந்தாள்.

சிவா “விந்தியா...” என்று அழைத்ததும் அவனைப் பார்த்த விந்தியாவிற்கு மீண்டும் மறக்க நினைத்த விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தது.

எல்லாவற்றிக்கும் இவன்தான் காரணம் என்று எண்ணி கோபம் கொண்டவளாய் வாயில் வந்த வார்த்தைகளால் திட்டி கையில் கிடைத்த பொருட்களை அவன் மீது எறிந்தாள்.

“நிறுத்துடீ... உன் தம்பி நீ அப்செட்டா இருக்கனு சொன்னான்... பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு சொல்லவே இல்லையே” என்று சொல்லிக் கொண்டே அவள் எறிந்த பொருட்களின் தாக்குதலில் இருந்து லாவகமாகத் தப்பித்துக் கொண்டான்.

“ஆமான்டா பைத்தியம்தான்” என்று சொல்லி பெரிய பொம்மையை எடுத்து தூக்கி வீச அவன் தலைக்குக் குறியாக வந்ததைச் சிவா ஒரு நொடியில் கையில் பிடித்துக் கொண்டான்.

“என்னடி இது? இந்தக் கணம் கணக்குது? கொலை முயற்சினு சொல்லி உள்ள தூக்கி போட்ருவேன்... ஜாக்கிரதை” என்று சிவா மிரட்ட, பெருமூச்சு விட்டு தன் அறையின் படுக்கையில் அமர்ந்தாள்.

“நான் ரெடி... முதல்ல உள்ள தூக்கி போடு” என்றாள்.

“என்னாச்சு?” என்றான் அவள் அருகில் போய் நின்று கொண்டு

“என்கிட்ட பேசாதே... நானும் உன் கூடப் பேசமாட்டேன்...” என்றாள்.

“சரி பேசலன்னா பரவாயில்ல... ஃபோட்டோவை எடுத்துக் கொடு... கிளம்பறேன்” என்றான்.

“அவன் அவனுக்கு அவன் அவனோட வேலைதான் முக்கியம்...” என்று விந்தியா வாய்க்குள் முனக,

சிவா உடனே “யார திட்ற?”

“ம்... என்னத்தான்” என்று சொல்லிக் கொண்டே அறையைச் சுற்றி சுற்றி எதையோ தேடினாள்.

“என்னடி தேடற? என்கிட்ட சொன்னா நானும் தேடுவேன் இல்ல”

“மை ஹேன்ட் பேக்” என்றாள்.

“பொறுப்பே இல்லடி உனக்கு” என்று சொல்லிக் கொண்டே அறை முழுக்கத் தேடினான்.

“மறந்துட்டு வந்துட்டியா விந்து” என்று சிவா கேட்க,

“அதற்கு வாய்ப்பே இல்லை” என்றாள்.

அவளுக்கு நன்றாய் ஞாபகம் இருந்தது. அவள் மனம் நொந்து கிளம்பும் போது ஆதித்தியா அவள் ஹேன்ட் பேக்கை கையில் கொடுத்து,

“இதுதானே உனக்கு வேணும்” என்று சொல்லி கையில் திணித்தான்.

அத்தனை வேதனையிலும் வலியிலும் அந்த பேக்கை எடுத்து வந்தது அவளுக்கு நன்றாய் நினைவிருந்தது.

சிவா “இதுவா?” என்று ஒரு பேக்கை எடுத்துக் காட்டினான்.

“ஆமாம்” என்று சொல்லி அந்த பேக்கினுள் வைத்த ஃபோட்டோவை பார்க்க கூட விருப்மின்றிச் சிவாவிடம் கொடுத்தாள்.

சிவா சில கணங்கள் அந்த ஃபோட்டோவை உற்று பார்த்து விட்டு

“இதுதான் ஆதித்தியாவா ஆளே அடையாளம் தெரியல” என்று ஃபோட்டோவை அவள் முன் நீட்டினான்.

“எனக்குத் தெரியாது... நீயே தேடிக்கோ” என்று அந்த ஃபோட்டோவை தன் முன்னிருந்து அகற்ற, அந்த ஃபோட்டோவில் இருந்த ஒருவனின் முகம் வேறொரு சம்பவத்தை நினைவுப்படுத்தியது.

சிவாவிடம் அந்த ஃபோட்டோவை வாங்கி உற்று பார்த்தவள்…

சிவாவிடம் அந்த முகத்தைக் காண்பித்து, “இவன் யாருன்னு உனக்குத் தெரியுமா சிவா?” என்றாள்.

“தெரியலியே... ஏன் கேக்குற?” என்றான் விந்தியாவை நோக்கி.

“எனக்கு யாருன்னு தெரியாது. பட் இந்த ராஸ்கல்... நான் ஆதியோட பார்ட்டிக்குப் போன போது என்கிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்தான். எனக்கு என்ன தோணுதுன்னா இவன் அந்த மினிஸ்டர் பையனா இருப்பானோ? பிகாஸ் இவனோட ஆட்டீட்யூட், திமிரெல்லாம் பார்த்தா சேன்ஸ் இருக்கு” என்றாள்.

“நான் விசாரிச்சுப் பாக்குறேன்” என்றான். திடீரென சிவாவிற்கு அவனைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.

“எதுக்குச் சிவா சிரிச்சே... ?”

“தப்பா நடந்துக்கப் பார்த்தான்னு சொன்னியே... அதான் சிங்கத்தோட வாயில தலையை விட்ட அவன் நிலைமையை நினைச்சேன்... சிரிச்சேன்”

“போடா” என்று அவனிடம் கோபித்துக் கொண்டாள்.

சிவா ஃபோட்டோவை எடுத்துக் கொண்டு புறப்பட நினைத்தவன் மீண்டும் விந்தியாவைப் பார்த்தபடி திரும்பினான்.

“நீ இரண்டு நாளைக்கு வந்து வனிதாவோட இரு” என்றான்.

“எதுக்கு?” என்று விந்தியா கேட்டாள்

“நான் இந்தக் கேஸ் விஷயமா கோவா போறேன்... எனக்கு உடம்பு சரியில்லனு பொய் சொல்லி டிபார்ட்மன்டுக்கு தெரியாம போயிட்டு வரப் போறேன். முக்கியமா வேணு மகாதேவனுக்கு தெரியவே கூடாது. சோ என்னைத் தேடி யார் வந்தாலும் நீதான் சமாளிக்கணும்” என்றான்.

“ஏன் உன் பொண்டாட்டிக்கு பொய் சொல்லவே வராதா?”

“உன் அளவுக்கு வராது... நீதான் சமாளிக்க முடியும்... சீக்கிரம் வந்து சேரு” என்று அதிகாரமாய் சொல்லிவிட்டு புறப்பட்டான்.

தனக்கு எல்லோரையும் சமாளிக்கத் தெரிந்திருந்தால் நேற்று ஏன் தன்னால் ஆதித்தியாவை சமாளிக்க முடியாமல் போனது. முடிந்த வரை விந்தியா இயல்பாய் இருக்க முயற்சி செய்தாள்.

அவள் கண்களில் மட்டும் ஒரு விதமான சோகம் படிந்திருந்தது. வலியோடும் வேதனையோடும் வாழ கற்றுக் கொண்ட பின்னும் இந்தக் கவலை மட்டும் அவளை முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டு சரியாக இயங்க விடாமல் செய்தது.

விந்தியா வனிதா வீட்டிற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க வருண் தன்னுடைய ஃபோனிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருப்பதாகக் கூறினான்.

மறுமுனையில் சண்முகம் சந்திரகாந்த்தின் உடல் நிலை சரியில்லை என்றும் சாக்ஷி மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினான். விந்தியா பதறிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.

சண்முகம் தனியாகக் கலங்கியபடி நின்று கொண்டிருந்தார்.

“என்னாச்சு அண்ணா... நீங்க மட்டும்தான் இருக்கீங்களா?”

“இன்னைக்குக் காலையில் சின்ன ஐயாவுக்கும் பெரிய ஐயாவுக்கும் பயங்கர வாக்குவாதம்... அதைப் பற்றியே யோசிச்சு யோசிச்சு... பெரிய ஐயாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியாம போச்சு” என்றார் சண்முகம்.

‘ஆதித்தியாவிற்கு வெறி பிடித்து விட்டதா என்ன?’ என்று எண்ணிக்கொண்டே சீஃப் டாக்டர் அறைக்குச் சென்றாள்.

அவளைப் பார்த்தவுடனே சாக்ஷி மருத்துவமனையின் தலைமை மருத்துவருக்கு அவளை நன்றாக அடையாளம் தெரிந்தது.

“வாங்க ஸ்ட்ராங்க் லேடி...” என்றார். ஏற்கனவே மாதவி இருந்த மருத்துவமனை என்பதால் டாக்டர் ரொம்பவும் பழக்கப்பட்டவராய் இருந்தார்.

“டாக்டர்!... மாமாவுக்கு என்ன பிராப்ளம்”என்றாள்.

அவர் மெலிதான புன்னகையோடு

“வயசாகிட்டாலே இதெல்லாம் சகஜம்தான்... ஆனா என்ன... மனசில தெம்பு இருந்தால் இதெல்லாம் பெரிய நோயே இல்லை “ என்றார்.

“அப்போ குணமாயிடுவாரு இல்ல?”

“என் சைடுலருந்து செய்ய வேண்டியதை முழுமையா செய்றேன்... அட் தி சேம் டைம் ஒரு மருமகளாய் உன் கடமையையும் சரியா செஞ்சாத்தான் சந்திரகாந்த்தை குணமாக்க முடியும்” என்றார்.

விந்தியா புரிந்தும் புரியாமல் தலையாட்டிவிட்டு மீண்டும் சந்திரகாந்த்தின் அறைக்கு வந்தாள்.

அந்த அறைக்குள் சுபா, சமுத்திரன், திருமூர்த்தி மூவரும் நின்றிருந்தனார்.

சுபா அவளைப் பார்த்த மறு கணமே, “ஆதித்தியா அண்ணனை கூட்டிட்டு வந்திருக்கலாமே அண்ணி” என்றாள்.

இந்தக் கேள்விக்கு விந்தியாவிடம் பதில் எதுவும் இல்லை. அவள் மெளனமாய் இருந்ததைப் பார்த்து சுபா மேலும் தொடர்ந்தாள்.

“அங்கிள் ... ஆதி அண்ணன் வரலியானு கேட்டுட்டே இருக்காரு அண்ணி “ என்றாள். விந்தியா சந்திரகாந்த்தின் சோர்வடர்ந்த முகத்தைப் பார்த்தாள்.

கண்ணில் நீர் நிரம்பியது. லேசான மயக்க நிலையில் இருந்தவரின் கையைப் பிடிக்க, அவர் எழுந்தவுடன் விந்தியாவின் கையை அழுத்தி பிடித்துக் கொண்டு,

“ஆதியை பார்க்கணும் விந்தியா... அவங்கிட்ட மனசார மன்னிப்பு கேட்கணும்” என்று வேதனையோடு உரைத்தார்.

“நீங்க ஏன் மாமா மன்னிப்பு கேட்கணும்? அதுக்கெல்லாம் அவசியமில்ல...” என்றாள்.

“ஆதியோட பிரச்சனைக்கு நான்தான் காரணம்... நான் அவனைக் கவனிக்காம விட்டதுனாலதான்”

“உங்க அருமை பிள்ளை இப்படி எல்லாம் சொன்னாராக்கும்... உங்களுக்கு மகனா இருக்கவே அவருக்குத் தகுதி இல்ல” என்றாள்.

“எப்படி வேணா இருக்கட்டும். எனக்கு ஏதாவது ஆவதற்கு முன்னாடி நான் ஆதியை பார்க்கணும்... எல்லாப் பிரச்சனையும் மறந்து அவன் என்னை அப்பானு கூப்பிடணும்... எனக்காக இந்த உதவியைச் செய்றியாம்மா?” என்று சந்திரகாந்த் உணர்ச்சி வசப்பட்டுப் பேச... விந்தியா விரும்பாத ஒன்றை சந்திரகாந்த் வரமாய்க் கேட்கிறார்.

வார்த்தைகளின்றி தலையை மட்டும் அசைத்து விட்டு அறைக்கு வெளியே வந்து நின்று கொண்டாள். சிறிது நேரத்திற்கெல்லாம் சுபாவும் திருமூர்த்தியும் அவளிடம் சொல்லிவிட்டு முன்னே போக, சமுத்திரன் மட்டும் அவளின் எதிரே நின்றபடி அந்தத் தவிப்பையும் சோகத்தையும் உள்ளூர ரசித்தான்.

“ச்சோ... ச்சோ... பாவமாய் இருக்கு உன்னைப் பார்த்தா... உன் மாமானாரோட கடைசி ஆசையை உன்னால நிறைவேற்றவே முடியாதே...

 ஆதியை நீ நல்லாவே கைக்குள்ள போட்டு வைச்சிருக்கலாம்... நீ எது சொன்னாலும் செய்யலாம்... ஆனா இந்த விஷயத்தில் மட்டும் ஆதி இறங்கி வரவே மாட்டான். ரொம்பக் கஷ்டம்... உன்னால இது மட்டும் முடியவே முடியாது” என்றான்.

துவண்டுக்கிடந்த விந்தியா நிமிர்ந்து பார்த்தாள்.

“கெட்ட எண்ணத்தோட அப்பாவையும் பிள்ளையையும் இத்தனை காலமாய்ப் பிரிச்சு வைச்சிருக்க உன்னால முடியும்னா நல்ல எண்ணத்தோட அவங்களைச் சேர்த்து வைக்க என்னால முடியாதா?”

“நானா பிரிச்சு வைச்சேன்?“

“வேறு யாரு... நீதான்... உன் சுயநலத்துக்காக இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிருக்கியே... வெட்கமா இல்லை உனக்கு?”

“வேண்டாம் விந்தியா “

“என்ன சமுத்திரன்... உண்மை கசக்குதோ? இன்னமும் சொல்றேன் கேளு... ஹோட்டல் ஆதித்தியாதான் உன்னோட மோட்டிவ். மாமாக்கிட்ட நீ நல்ல பேர் வாங்கிட்டு... ஆதியை தப்பானவன் மாதிரி காட்டின... அப்படியே வாரிசாயிடலாம்னு கனவு கண்ட... உன்னோட பேட் லக்... நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தேன்...

என்மேல இருந்த நம்பிக்கையால ஹோட்டல் பொறுப்பை மாமா என்கிட்ட கொடுத்ததை உன்னால தாங்கிக்க முடியல... என்னை விரட்ட நீ என்னல்லாம் பிளான் போட்ட... சோ சேட்... நான்தான் உன்னைப் பாத்து பாவப்படனும்... நீ நினைச்சது எதுவும் நடக்கல”

சமுத்திரனுக்கு அதிர்ச்சி தாங்க முடியயவில்லை. தன் மனைவி கூட யூகிக்க முடியாத தன் எண்ணத்தை எப்படி தெரிந்து கொண்டிருப்பாள் என்று புரியாமல் நின்றான்.

“இன்னமும் சொல்றேன் கேட்டுட்டு போ சமுத்திரன். ஆதி இங்க வருவார் தன்னோட அப்பாகிட்ட பேசுவார்... உன்னால என்ன கிழிக்க முடியுமோ கிழிச்சுக்கோ...

அடுத்தவங்க பிச்சை போட்டு வளர்ந்த உனக்கே இவ்வளவு திமிருன்னா... சுயமா வளர்ந்த எனக்கு எவ்வளவு இருக்கும்? இனிமேயாவது என்கிட்ட உன் வாய் சவடாலை காட்டாதே” என்று சொல்லிவிட்டு சந்திரகாந்த் இருந்த அறைக்குள் சென்றாள்.

விந்தியா ஏற்கனவே கோபத்தோடு இருந்த நிலையில் சமுத்திரன் அவளிடம் வகையாக வந்து சிக்கி கொண்டான்.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content