You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 8

Quote

8

ஊடல்

அன்று இரவு சிவா கையில் ஏதொ ஒரு ஃபைலை வைத்துக் கொண்டு தீவரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

கேத்ரீன் கேஸை நடத்தும் இன்ஸ்ப்பெக்டர் விஜயன் இந்தக் கேஸை சரியான வழியில் கொண்டு செல்ல மாட்டார் என்று சிவாவுக்குத் தோன்றிற்று.

நிச்சயம் அன்று நடந்தது விபத்து அல்ல. கொலையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் இதனை ஆரம்பத்திலிருந்தே விபத்து என்று மீடியாக்கள் மக்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டிருக்கின்றன.

இதில் ஹோட்டல் ஆதித்தியா நிர்வாகமும் சம்பந்தப்பட்டு இருக்குமோ?

விருந்தினர் தங்கியிருக்கும் அறை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவள் விழுந்தது அவள் தங்கியிருந்த அறையிலிருந்து...

கேமராக்கள் இல்லாத இடத்தைக் கொலையாளி ஏன் தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது.

‘சோ... இட் மே பி எ மர்டர்?’

இப்படி அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போது வனிதா தூங்காமல் விழித்துக் கொண்டிருந்ததைச் சிவா கவனித்தான்.

“என்ன வனிதா தூக்கம் வரலியா?”

‘இல்லை’ என்று தலையாட்டினாள்.

“இந்நேரத்தில என்னடி யோசிச்சிட்டிருக்க?” என்றான். அவள் உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஏ அழகி! என்னடி கோபம்?” என்று அவள் முகத்தை அவன் புறம் திருப்பினான்.

“நான் உங்களுக்குப் பொருத்தமானவளா?” என்று மனக்கலக்கத்தோடு கேட்டாள் வனிதா.

“முடியை மட்டும் நீட்டா வளர்த்து வச்சிருக்க... மூளையை வளர்த்தியா? என்னடி பேசற? உன்னைத் தவிர வேற யார் எனக்குப் பொருத்தமா இருப்பா?”

“நீங்க பொய் சொல்றீங்க மாமா” என்றாள் வனிதா கோபத்துடன்.

“ம்... இப்போ உண்மையைச் சொல்லட்டுமா?”என்று சிவா அவளைக் கூர்மையாய் பார்த்தான்.

அவன் என்ன சொல்லப்போகிறான் என்று அவள் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க, சிவா அவளைத் தன் அருகாமையில் இழுத்து இதழோடு இதழ் பதித்தான். அவனின் இறுக்கமான பிடியிலிருந்து அவள் தப்புவது அசாத்தியமாய் இருந்தது. சில நொடிகளில் அவனாக விலகிப் போக,  

“போங்க மாமா” என்று வெட்கத்தோடு உதட்டை துடைத்துக்கொண்டாள்.

அவன் மீண்டும் அவளைத் தன் வசப்படுத்தி அணைத்தபடி, “என்னடி அழகி! சொன்னது புரிஞ்சிதா இல்லை இன்னொரு தடவை புரிய வைக்கட்டுமா?” என்றான் புன்னகை தவழ்ந்த முகத்தோடு.

அவன் அவள் நெற்றியை வருடி முத்தமிட்டு, அந்தப் பிரிவினால் ஏற்பட்ட ஊடலில் மலர்ந்த காதலை அவன் முழுமையாய் அனுபவிக்க வனிதாவின் முகத்தில் அந்த இன்பம் புலப்படவே இல்லை.

ஒரு விதமான இறுக்கம் தென்பட அவளை விட்டு விலகி புருவத்தை உயர்த்தி, “என்னாச்சு?” என்றான் அதிகார தோரணையில்.

“உங்க கூட நான் இத்தனை வருஷமா என்ன வாழ்க்கையை வாழ்ந்திருக்கேன்? நீங்க கோபப்படுறீங்களா நடிக்கிறீங்களானு கூட என்னால கண்டுபிடிக்க முடியல... உங்களை நான் இப்ப வரைக்கும் சரியா புரிஞ்சிக்கவே இல்லையோனு தோணுது”

இதை கேட்டவுடன் சிவா கலகலவெனச் சிரித்துவிட்டு, “போடி லூசு... இதெல்லாம் ஒரு விஷயமனு கவலைப்பட்டுட்டு இருக்கியா? எங்க அம்மாவால கூடதான் கண்டுபிடிக்க முடியல... அதுக்காக அவங்களும் என்ன புரிஞ்சிக்கலியா?”

“அதானே... அப்புறம் அக்கா மட்டும் எப்படி கண்டுபிடிச்சா?”

“வி ஆர் ஃபிரண்டஸ்... தட் டூ ஃபார் டுவென்டி இயர்ஸ். அப்படி இருக்கும் போது, விந்தியாவிற்கு இதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல. என்னோட ஒவ்வொரு அசைவையும் அவ கரெக்டா கணிச்சிருவா. நான் அவள ஏமாத்திறது ரொம்பக் கஷ்டம்” என்று அவன் வனிதாவின் எண்ணத்தைத் தெளிவுப்படுத்தினான். ஆனால் அதுவே அவளுக்குள் இருக்கும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

“நான் உங்களுக்கும் அக்காவுக்கும் இடையில வந்துட்டேனா?” என்று தன் மனதில் பட்டதை வனிதா வெளிப்படையாகக் கேட்க சிவாவிற்கு இம்முறை கோபம் ஏற்பட்ட போதும் அதனை மறைத்துக் கொண்டு,

“இப்ப நான் என்ன பதில் சொல்லணும்... ஆமாம்னு சொல்லணுமா? இல்லனு சொல்லணுமா?” என்று கேட்க,  

“உங்க மனசில பட்டதைச் சொல்லுங்க” என்றாள். கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்த சிவா மீண்டும் அவளைத் தோள் மீது சாய்த்தபடி,

“இத பாரு வனிதா... நானும் உங்க அக்காவும் நல்ல நண்பர்கள்... அவ்வளவுதான்! அந்த உறவுதான் எங்களுக்கு ரொம்பப் பொருத்தமானதாய் இருக்கும். மத்தபடி பழைய விஷயங்கள் எல்லாம் எங்கள் நினைப்பில் இல்ல.

 அதே போல எனக்கு மனைவியாய் நீ மட்டும்தான் பொருத்தமானவளா இருக்க முடியும். புரிஞ்சதா? தேவையில்லாம ரொம்ப யோசிக்காதே.” என்று குழந்தைக்குச் சொல்வதைப் போல் அவளுக்குப் புரிய வைத்தான்.

வனிதா அமைதியடைந்தாலும் மீண்டும் அவள் மனதில் தோன்றிய எண்ணத்தைச் சிவாவிடம் கேள்வியாய் கேட்டாள்.

இத்தனை நேரம் அவன் காத்த பொறுமை உடைந்து போனது. அவன் முகம் கோபத்தில் சிவந்தது. சட்டென்று அவளைக் கைகளில் இருந்து உதறிவிட்டான்.

அந்தக் கோபத்தை வெளிகாட்டிக் கொள்ளாமல், “நீ படுத்துக்கோ... எனக்கு வேலை இருக்கு...” என்று சொல்லிவிட்டு சிவா அறையை விட்டு வேகமாய் வெளியேறினான்.

அவன் சென்ற சில நொடிகளில் வனிதா வெளியே வந்து பார்த்த போது, சிவா சோபாவில் தலையைச் சாய்த்தபடி படுத்து கொண்டிருந்தானே தவிர உறங்கவில்லை.

“வெளியே அக்காவும் நீங்களும் என்ன பேசிக்கிட்டீங்க? அக்கா எதற்காக கண்களைத் துடைத்தாள்?” என்று அவள் கேட்ட கேள்வி அவனை ரொம்பவும் காயப்படுத்தியது.

சந்தேகம் அவள் மனதில் விருட்சமாய் வளர்ந்திருக்க அவனின் விளக்கம் எதுவும் அவளின் மூளையைச் சென்றடையவில்லை என்பதைப் புரிந்து கொண்டான்.

அதிலும் திருமணத்திற்குப் பிறகு வனிதாவிற்கு உண்மையான கணவனாய் இருந்த சிவாவினால் எப்படி அவளின் சந்தேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியும். அதுவும் தங்கைக்காகத் தன் காதலை தூக்கி போட்ட விந்தியாவோடு என்பது வனிதாவின் மீது அளவில்லா எரிச்சலை ஏற்படுத்தியது.

என்ன செய்வது?

பரந்த மனப்பான்மை கொண்ட பெண்கள்கூடக் கணவன் என்று வந்து விட்டால் சுயநலமாக மாறிவிடுவது இயல்புதானே!

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content