You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

IrumunaiKathi - Episode 11

Quote

11

அபிரிமிதமான ஏமாற்றம்

தமிழச்சி பரபரப்பாய் தன் காக்கி உடையை அணிந்து கொண்டு வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். இன்று கண்டிப்பாக அந்த கமலக்கண்ணனைப் பிடித்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே அவள் முகப்பறை நோக்கி வர,

 

அங்கே சோஃபாவில் அவளின் தாத்தா மகேந்திரபூபதி அமர்ந்து அன்றைய செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்தார். அவரருகில் வந்து அமர்ந்தவள், ‘சாப்பிட்டீங்களா... மாத்திரை போட்டீங்களா?’ என்று வரிசையாய் கேள்விகளை அடுக்கினாள்.

“ஆமா! இதெல்லாம் சாப்பிட்டு... இன்னும் யாருக்காக நான் என் உயிரைக் காப்பாத்தி வைச்சிருக்கணுங்கிற?” என்றவர் விரக்தியாய் சொல்லி அந்தச் செய்தித்தாளை மூடி வைத்தார்.

“என்ன தாத்தா நீங்க? காலங்காத்தால ஏன் இப்படி மூட் ஆஃப் பண்ற மாதிரி பேசறீங்க”

“பின்ன... என்னை எப்படிப் பேச சொல்ற... உன் பாட்டி செத்த போதே நானும் செத்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்ற அவர் புலம்ப... அந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தவள்,

“ப்ளீஸ் தாத்தா... அப்படி எல்லாம் பேசாதீங்க” என்று கெஞ்சலாய் உரைத்தாள்.

“முடியலடா... உங்க அம்மா தனக்கு கஷ்டம் நினைக்கிறவங்களுக்குக் கூட கெடுதல் நினைக்க மாட்டாளே... நான் உங்க அப்பா அம்மா கல்யாணம் ஆன புதுசுல... உங்க அம்மா மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்துக்கிட்டு இருந்திருக்கேன்... ஆனா உங்க அம்மா அதெல்லாம் மனசுல வைச்சுக்காம ஒரு அப்பா மாதிரில என்னை இத்தனை வருஷமா பார்த்துக்கிட்டா... அவளுக்கு ஏன் இந்த நிலைமை... அந்தக் கடவுளுக்குக் கூட கண்ணில்லாம போச்சா?” என்று அவர் பொருமிக் கொண்டிருக்க, தமிழச்சியும் அவர் பேசியதைக் கேட்டு தாங்க முடியாமல் அவர் தோள் மீது சாய்ந்து கண்ணீர் பெருக்கினாள்.

மகேந்திரபூபதி தன் பேத்தியின் தலையை வருடிக் கொண்டே, “உங்க அப்பன் எப்படி கம்பீரமா இருப்பான்... ஏன்? அவன் போலீஸ் வேலைய விட்ட போது கூட அவனோட கம்பீரம் கொஞ்சம் கூட குறையலயே... ஆனா இன்னைக்கு” என்று அவர் மகனின் நிலையை எண்ணி வார்த்தைகள் வராமல் திக்கித் திணறி அழவும், “தாத்தா ரிலாக்ஸ்” என்றபடி அவள் அவர் நெஞ்சை நீவிக் கொடுத்து அவரைத் தண்ணீர் பருகச் செய்தாள்.

மகேந்திரன் அப்போதும் தன் வேதனை நீங்காமல், “இதுல உங்க அண்ணன் வேற எங்க போய் தொலைஞ்சான்னே தெரியல” என்ற அவர் கேட்டதுதான் தாமதம்.

“அவனைப் பத்தி பேசாதீங்க தாத்தா... சரியான செல்ஃபிஷ்” என்று பொங்கினாள். அத்தனை நேரம் இவர்களின் சம்பாஷணையை ஓரமாய் நின்று கேட்டு வருத்தப்பட்டுக் கொண்டிருந்த மதியழகிக்கு அந்த வார்த்தை தாங்க முடியாத வலியை உண்டாக்கியது.

சிம்மனின் மீது காதல் கொண்ட அவள் மனமோ அவர் நிச்சயம் அப்படியெல்லாம் கிடையாது என்று ஆழமாய் நம்பியது. அதேநேரம் தமிழச்சியின் மீது கோபம் பெருகியது. அதற்கு மேல் அவர்கள் பேசுவதைக் கேட்க முடியாமல் மதியழகி அந்த இடத்தை விட்டு அகன்று வெளியே தோட்டத்திற்குச் சென்றுவிட்டாள்.

தமிழச்சி தன் தாத்தாவை ஒருவாறு தேற்றி தந்தையைத் தேடிப் போக, அவர் தன் மனைவியின் அறையில் அவர் படுக்கையின் மீது தலை சாய்த்தபடி அப்படியே அமர்ந்த வாக்கில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அந்தக் காட்சியைப் பார்த்த நொடியே அவள் உடைந்து, “டேட்” என்று கண்ணீர் உகுத்து அவர் இருக்கைக்கு அருகில் சென்று அமர்ந்து கொள்ள,

மகளின் அழுகுரல் கேட்டு விழித்துக் கொண்ட வீரேந்திரன், “தமிழச்சி!” என்று எழுந்து நின்று அவளைத் தூக்கி நிறுத்தினார்.

அந்த நொடி தமிழச்சி தன் தந்தையை அணைத்துக் கொண்டாள்.

“என்னடா?” என்றவர் தன் மகளின் தலையை வருடிக் கொடுக்க,

“இந்த மாதிரி நேரத்துல கூட நான் உங்க கூடவும் அம்மா கூடவும் இல்லாம... அப்படி என்ன ட்யூட்டி முக்கியம்... வேண்டாம்... நான் போகல... அந்த சரணே பார்த்துக்கட்டும்” என்று அவள் குழந்தை போல அழுதபடி உரைக்க வீர் அவள் முகத்தை நிமிர்த்தினார்.

“என் தமிழச்சியோட பொண்ணு இப்படி எல்லாம் பேசமாட்டா... நான் உனக்கு தமிழச்சின்னு பேர் வைச்சதுக்குக் காரணமே... நீ உங்க அம்மா போல தைரியமா திமிரா இருக்கணும்ங்கிறதுக்காகதான்?” என்று அவர் மகளிடம் சொல்ல அவள் முகம் அப்போதும் தெளிவுப் பெறவில்லை.

“போலீஸ்காரனுக்கு குடும்பத்தைவிடக் கடமைதான் முக்கியம்... இல்ல எனக்குக் குடும்பம்தான் முக்கியம்ன்னு நீ யோசிச்சன்னா... ஒன்னும் பிரச்சனை இல்ல... இப்பவே நீ வேலைய விட்டுடு” என்றவர் சொல்லும் போதே,

“டேட்” என்று அவள் அதிர்ச்சியானாள்.

“முடியாது இல்ல... அப்போ ட்யூட்டிக்கு கிளம்பு... எனக்கு நம்பிக்கை இருக்கு... உங்க அம்மா சீக்கிரமே சரியாயிடுவா... நேத்து டாக்டர் கூட உங்க அம்மாவைச் செக் பண்ணிட்டு இம்ப்ரூவ்மென்ட் இருக்குன்னு சொன்னாரு” என்றதும் அவள் முகம் மலர்ந்தது.

அவள் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டு, “சரி டேட்... நான் கிளம்பறேன்... ஆனா நான் வீட்டுக்கு வரும் போது நீங்க இப்படி இருக்கக் கூடாது... என்னால உங்களை இப்படிப் பார்க்க முடியல... நீங்க என்னோட ஹீரோ டேட்... க்ளீனா ஷேவ் பண்ணி மீசையை முறுக்கிவிட்டு... எப்பவும் எப்படி கெத்தா இருப்பீங்களோ அப்படி இருங்க” என்றவள் தன் தந்தையிடம் இறைஞ்சுதலாய் கூற அவர்,

“சரி டா செய்றேன்... நீ இப்போ கிளம்பு” என்றார்.

அதன் பின் அந்த அறையை விட்டு அவள் வெளியேற, அவள் மனம் அப்போதும் பாரமாகவே உணர்ந்தது. அவளால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதல் அவளுக்குள் எழும்பவேயில்லை. இவ்விதம் அவள் எண்ணியபடி வாசல்புறம் வர, அவள் விழிகள் இரண்டும் ஸ்தம்பித்தன.

இவான் தோட்டத்தில் நின்று மதியழகியோடு பேசிக் கொண்டிருந்தான். அவள் குழப்பமாய் அவர்களை நோக்கி நடந்து வந்து, “இவான்” என்று அழைக்க, “ஹாய் தமிழச்சி!” என்று அவன் முறுவலித்துத் தன் கரத்தை உயர்த்தினான்.

அவள் எந்த எதிர்வினையும் காட்டாமல் அவன் எதற்கு இங்கே வந்திருக்கிறான் என்று யோசனையோடு நிற்க... அப்போது மதியழகி தமிழச்சியிடம், “இப்படி ஒரு வெள்ளைக்கார தொரை... பாய் ஃப்ரெண்டா வைச்சிருக்கறதைப் பத்தி நீ என்கிட்ட சொல்லவே இல்ல” என்று கேட்க,

“பாய் ஃப்ரெண்டா?! மூஞ்சி” என்று அவளை எரிச்சலாய் திட்டி உள்ளே அனுப்பிவிட்டு, “எதுக்காக இங்கே வந்திருக்கீங்க மிஸ்டர். இவான்... எனிதிங் இம்பார்டன்ட்” என்று கேட்டு கைகளைக் கட்டிக் கொண்டு அவனை அளவெடுத்துப் பார்த்தாள்.

“இப்படித்தான் நீங்கெல்லாம் கெஸ்டை வரவேற்பீங்களோ? ஓ! இதுதான் நீங்க சொல்ற பண்டைய கால தமிழ் மரபோ?” என்றவன் படபடவென ஆங்கிலத்தில் வினவ, அவளுக்கு அவனின் வார்த்தைகள் கோபத்தை ஊற்றெடுக்க வைத்தது.

“யாரை எப்படி வெல்கம் பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும்... நீங்க எதுக்கு வந்தீங்க... அதை மட்டும் சொல்லுங்க” அவள் காரசாரமாய் சொன்னாலும் அவன் பார்வையும் முகபாவனையும் மாறவில்லை.

அவன் அப்போது அவள் அம்மா செந்தமிழின் அறையைப் பார்க்க முடியுமா என்று அனுமதியாய் கேட்டான். அவர் சேமித்து வைத்திருக்கும் அரிதான தொல்லியல் பொருட்களையும் அதன் புகைப்படங்களையும் பார்வையிட வேண்டும் என்று அவன் தாழ்மையாகவே வினவ, அவள் அவனை மிகுந்த அதிர்ச்சியோடு பார்த்தாள்.

“நோ இவான்... அம்மா இப்போ இருக்குற நிலைமையில... அவங்க அனுமதி இல்லாம சாரி... முடியாது” என்று அவள் துளியும் யோசிக்காமல் மறுக்க, அவன் உடனே ஆதியின் பெயரைச் சொல்ல அவள் தயக்கமாய் அவனைப் ஏறிட்டாள்.

ஆதிம்மா இவனை அனுப்பியிருக்கக் கூடுமா என்ற சந்தேகத்தோடு அவருக்கு அழைத்துப் பேச எதிர்புறத்தில் அவரும் அவனுக்காகப் பேசினார்.

தமிழச்சியால் அதற்கு மேல் மறுத்துப் பேச முடியவில்லை. வேறுவழியின்றி அவனை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல அப்போது வீரேந்திரன் முகப்பறையில் அமர்ந்திருந்தார். அவரிடம் அவனை நண்பன் என்று அறிமுகம் செய்து, அன்று நடந்த சேஸிங் சீன் குறித்து அவனைப் பற்றி புகழ்ந்துரைத்தாள்.

வீரேந்திரன் புன்னகைத்து இவானுக்குக் கைக்குலுக்கி... அவன் செய்த உதவியைப் பாராட்ட... அவன் தன்னடக்கமாய் புன்னகைத்தான்.

அதன் பின் தமிழச்சி, அவன் அம்மாவின் அறையைப் பார்க்க வேண்டும் என்று வீரிடம் சொல்ல அவர் தயக்கமாய் மகளைப் பார்க்க, “ஆதிம்மாவோட கெஸ்ட்... அவங்களே பேசினாங்க” என்று சொல்லவும் வீரேந்திரனும் சம்மதித்தார்.

பின் அவர் தன் மகளிடம் , “உனக்கு ட்யூட்டிக்கு டைம் ஆகுதுன்னா நீ கிளம்பு... நான் வேணா இவரைக் கூட்டிட்டுப் போய் அம்மா ரூமைக் காண்பிக்கிறேன்” என்றார்.

“இல்ல டேட்... இன்னும் டைம் இருக்கு... நானே அழைச்சிட்டுப் போய் காண்பிக்கிறேன்” என்றாள்.

இவான் முகம் பிரகாசமாய் மாற தமிழச்சி அவனைத் தன் தாயின் அறைக்கு வழிநடத்திச் சென்றாள். அவள் பின்னோடு வந்தவன் அந்த வீட்டின் பிரம்மாண்ட அமைப்பைப் பார்த்து உள்ளூர வியந்தான்.

அப்போது தமிழச்சி தன் தாயின் அறைக் கதவைத் திறக்க, அந்த வீட்டின் பிரமாண்டத்தையும் அந்த அறை ஒன்றுமில்லாமல் மறக்கடித்துவிட்டது.

ஒரு சிறிய அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த உணர்வுதான். அந்த அறை தமிழனின் பாரம்பரியம், பண்பாடு, பழம்பெருமை, எல்லாவற்றையும் ஒருசேர பறைசாற்றிக் கொண்டிருந்தது. இப்போது அந்த அறை செந்தமிழின் தனிப்பட்ட அறையல்ல. அலுவலக அறைப் போல தன் பொருட்களை வைக்கவே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

இவான் பிரமிப்புடன் வாசலிலேயே நின்றுவிட தமிழச்சி அவனை உள்ளே அழைத்தாள். அவன் நுழைந்ததும் அவனை முகமன் கூறி வரவேற்றது அந்த எதிர்புற சுவற்றில் எழுதப்பட்டிருந்த மகாகவி பாரதியின் கம்பீர ஓவியம்!

அந்த ஓவியத்தின் ஆளுமையைப் பார்த்து விழி விரித்தவன், “தி கிரேட் மகாகவி பாரதி ரைட்!” என்று கேட்க, “யா எஸ்... ஹி இஸ் மை மாம்ஸ் இன்ஸ்பிரேஷேன்... ஐடியல்... இன்னும் சொல்லிகிட்டே போகலாம்... அம்மாவுக்கு அவ்வளவு பிடிக்கும்” என்றாள்.

அப்போது இவான் தனக்கே உரியப் பாணியில், “அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே

உச்சி மீது வான் இடிந்து வீழ் கின்ற போதிலும் அச்சம் என்பது இல்லையே” என்று பாட இம்முறை வியப்பது அவள் முறையானது. அதே நேரம் சந்தேகமாய் அவனைப் பார்த்து,

“தமிழ் பேசத் தெரியாதுன்னுல நீங்க என்கிட்ட சொன்னீங்க?” என்று கேட்டாள்.

“ஆமா தெரியாது... இந்த வார்த்தைகள் ஆதிமா எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்றான்.

“ஓ!” என்றவள் தான் தேவையில்லாமல் அவனைச் சந்தேகப்படுகிறோம் என்று எண்ணி அவன் மீதான எதிர்மறை கருத்தை மாற்றிக் கொள்ள விழைந்தாள்.

இவானோ அப்போது அந்த அறையின் பொருட்களை வியப்பிலும் வியப்பாய் பார்த்துக் கொண்டே அங்கிருந்த ஒரு ஃபோட்டோவைப் பார்த்துவிட்டு, “வெரி க்யூட் பிக்ச்சர்” என்றான். பின் அவள் முகத்தையும் அந்தப் படத்தையும் மாறி மாறிப் பார்த்து, “மயக்கும் விழிகள்... ஏதோ ஒரு மாயசக்தி இந்தக் கண்களில் இருக்கு” என்றான்.

அவனைக் கோபமாய் முறைத்தவள், “தட்ஸ் மை மாம்” என்றாள்.

“எனிவே... யு போத் ஆர் ஜஸ்ட் அலைக்” என்று அவன் சொல்ல அவள் முகம் கோபத்தில் சிவந்தது. அதற்குள் அவன் அவள் எண்ணங்களை மாற்றும் விதமாய், அங்கே இருந்த ஒரு கம்பீரமான கோவில் கோபுரத்தின் புகைப்படத்தைக் காண்பித்து அது பற்றிய வரலாற்றையும் அந்தக் கோவில் அமைந்திருக்கும் இடத்தையும் குறித்து வினவ,

“சாரி இவான்... எனக்கு இதைப் பத்தி எல்லாம் அவ்வளவு டீடைல்ஸ் தெரியாது... எங்க அம்மாவுக்கு... இல்ல எங்க அண்ணனுக்குதான் தெரியும்” என்றவள் மேலும் தொடர்ந்தாள்.

“எங்க அண்ணனுக்கு இதெல்லாம் தண்ணிப்பட்டபாடு... ஒரு கோவிலோட அமைப்பை வைச்சே அது எந்த நூற்றாண்டுல எந்த மன்னன் கட்டினதுன்னு சொல்லுவாரு... அதெல்லாம் கூட பரவாயில்ல... சிலைகளோட முக அமைப்பை வைச்சே அது சோழன் காலத்துதா... பாண்டியன் காலத்துதா... இல்ல பல்லவர் காலத்துதான்னு சொல்லுவாரு ... அந்த அளவுக்கு அவர் இதைப் பத்தி எல்லாம் ரிசர்ச் பண்ணி வைச்சிருக்காரு... சிற்பக்கலை... மன்னர் காலத்துக் கட்டடக் கலை... கல்வெட்டியல்... தொல்லியல் இதுல எல்லாம் அவருக்கு அவ்வளவு நாலேஜ்” என்று அவள் தன் தமையனின் புகுழுரையை கூறிக் கொண்டே இவானின் முகபாவனையை ஆராய,

“அவர் இப்போ எங்கே... அவரை நான் மீட் பண்ணி பேச முடியுமா?” என்று சாதாரணமாகக் கேட்டான்.

அவனின் இந்தக் கேள்வி தமிழச்சிக்கு ஏமாற்றமாய் இருந்தது. இத்தனை நேரம் தான் மூச்சு வாங்க சொன்னதெல்லாம் வீணா? இவனுக்கு உண்மையிலேயே அண்ணனைக் குறித்து எந்தத் தகவலும் தெரியாதோ என்று எண்ணிக் கொண்டே, “அவர் இப்போ இங்க இல்லை” என்றாள்.

“ஓ! எங்க போயிருக்காரு?” என்று அவன் தெரியாதவன் போல் கேட்க,

அவள் முகத்தில் சொல்லவொண்ணா வருத்தம் ஆட்கொண்டது. அதனைக் கவனித்தவனுக்கும் லேசாய் மனம் இளகிப் போனது. இருந்தும் தன் உணர்வுகளைக் காட்டிக் கொள்ளாமல் அந்த அறையைப் பார்ப்பதில் தன் கவனத்தைச் செலுத்த, அப்போது அவன் பார்வை எதேச்சையாக ஒரு ஓவியத்தைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தது.

“வாட் இஸ் இட்?” என்றவன் அந்த ஓவியத்தைப் பார்த்து கொண்டே வினவ, “அது ஒரு கிரீடம்” என்று அவள் சொல்லி முடிக்கும் போது அவன் பார்வை இன்னும் ஆழமாய் அதைத் துளைத்துப் பார்க்க அவன் சிந்தனையோ வேறெங்கோ பயணித்தது.

அந்த நொடி இவானின் கவனத்தைச் சிதறடிப்பது போல் அவனின் கைப்பேசி அழைக்க அதனை எடுத்துப் பார்த்தவனின் முகத்தில் அதிர்ச்சி படர்ந்தது. அவளைத் தயக்கமாய் பார்த்தவன் தள்ளி வந்து தன் பேசியைக் காதில் வைக்க, அவன் முகம் மாறியது.

“இடியட்!” என்று அவன் தன் உதட்டிற்குள் முனங்க, அப்போது அவனின் முகபாவனைகளை தமிழச்சி கவனிக்கத் தவறினாள். அவனும் அவளிடம் தன் படபடப்பைக் காட்டிவிட கூடாதென்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.

அந்தச் சமயத்தில் தமிழச்சியின் கைப்பேசி அழைக்க அதன் எண்ணைப் பார்த்து அழைப்பை ஏற்றவளின் முகத்தில் அத்தனை சந்தோஷம். கமலக்கண்ணன் வேறேதோ புது எண்ணின் மூலமாக திருச்சியில் உள்ள அவன் தங்கையை அழைத்துப் பேசியதாகவும் அதை அவன் குரலை வைத்து போலீஸ் ட்ராக் செய்திருந்தது. இந்தத் தகவலைக் கேட்ட

“எஸ்ஸ்ஸ்!!” என்று முக மலர்ச்சியோடு, “அந்த நம்பரை வைச்சு அவன் இருக்க இடத்தை ட்ராக் பண்ணுங்க” என்றதும் இவான் முகம் இருளடர்ந்து போனது. அவனுக்கு அங்கே இருக்க இருப்புக் கொள்ளவில்லை. உடனே புறப்பட வேண்டும் என்று தவிப்பில் இருக்க,

தமிழச்சி அந்தச் சூழ்நிலையில் அவன் அருகில் இருப்பதை மறந்து போயிருந்தாள்.

பேசிக் கொண்டே புறப்பட எத்தனித்தவள்... இவானை அப்போதே கவனித்து, “சாரி இவான் ஐ ஹவ் டு” என்று அவள் ஆரம்பிக்கும் போதே, “இட்ஸ் ஓகே” என்றான்.

“நோ இவான்... யு” என்றவள் சொல்ல எத்தனித்ததைப் பேசவிடாமல், “இட்ஸ் ஓகே சம் அதர் டைம்” என்று அவனும் புறப்படும் அவசரத்தில் இருந்தான். அதுவும் அவளுக்கு முன்னதாக!

அதற்குள் மீண்டும் தமிழச்சியின் பேசி ஒலிக்க அதனைப் பரபரப்பாய் ஏற்றவள், “ட்ராக் பண்ணிட்டீங்களா?” என்று கேட்டாள்.

“எஸ் மேடம்... ஈசிஆர்... திருவிடந்தைப் பக்கத்துல”

அவள் முகம் பளிச்சிட்டது. “திருவிடந்தையா?” என்று கேட்டுக் கொண்டே அறையை விட்டு வெளியே வர அவனுக்கு இன்னும் பதட்டமானது. அவள் வேகமாய் முகப்பறைக்குச் சென்று தன் தந்தையிடம் விடைப்பெற்றுக் கொண்டு இவான் புறமும் திரும்பி,

“சாரி இவான்! நெக்ஸ்ட் டைம்” என்று ஏதோ சொல்லிக் கொண்டே அவள் பரபரவென சென்றுவிட இவானும் அந்தக் கணம் வீரேந்திரனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

அதற்குள் தமிழச்சியின் போலீஸ் வாகனம் அங்கிருந்து சென்றிருக்க இவானும் தன் பைக்கை இயக்கி, “காட் சேக்... நத்திங் ஷுட் ஹப்பன்” என்று முனகிக் கொண்டே அசுர வேகத்தில் தன் பைக்கை இயக்கினான்.

அவள் செல்வதற்கு முன்னதாக தான் சென்று விட வேண்டும் என்று அவன் எண்ணி வேகமெடுத்ததில் அவன் பைக் காற்றிலேயே பறந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனாலும் அவன் எண்ணம் ஈடேறவில்லையே. அவன் வருவதற்கு முன்னதாக அந்த வீட்டைச் சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. ஆதலால் அவர்கள் யார் கண்ணிலும் பட்டுவிடாமல் தன் பைக்கைத் தூரமாகவே நிறுத்திக் கொண்டான். அந்த நொடி தன் முயற்சி தோல்வி என்பதையும் தாண்டி மதிநுட்பத்தோடு வெகுசிறப்பாய் செயல்பட்ட தமிழச்சியின் திறமையை அவன் மனம் பாராட்டவே செய்தது.

அதேநேரம் அங்கே நிற்கும் காவலாளிகளின் செயல்பாடுகளைத் தூரமாக நின்று அலசியவனுக்கு... சற்று முன் தான் என்ன நடக்கக் கூடாது என்று நினைத்தோமா அது நடந்துவிட்டது என்பது புரிந்தது.

அப்போது தமிழச்சியின் வாகனம் படுவேகமாய் அவனைக் கடந்து சென்றது. இவான் அந்த நொடி தன் கைப்பேசியை எடுத்து அவன் செய்ய நினைத்ததைச் செயல்படுத்திவிட்டு தாமதிக்காமல் அங்கிருந்து விரைந்தான்.

தமிழச்சி அந்த கணம் தன் வாகனத்திலிருந்து அந்த வீட்டின் முன்னே வந்து இறங்கி விரைவாய் உள்ளே நுழைந்தாள். சற்று முன்பு அவள் முகத்தில் பரவியிருந்த சந்தோஷம் அப்போது மொத்தமாய் துடைத்து எறியப்பட்டிருந்தது.

உள்ளே நுழைந்தவள் அங்கே எதிர்கொண்டது தலையில் குண்டடிப்பட்டு இறந்து கிடந்த கமலக்கண்ணனின் உடலைதான். அவள் முகத்தில் எந்த அதிர்ச்சியும் இல்லை. மாறாய் அபிரிமிதமான ஏமாற்றம் தென்பட்டது. அமர்ந்த வாக்கில் அவன் உயிரற்ற உடலைப் பார்த்தவள் சிதறியிருந்த ஈரம் காயாத இரத்தத் துளிகளைப் பார்த்தாள்.

தனக்குத் தகவல் வந்த சில நிமிடங்களிலேயே இந்தக் கொலை நிகழ்ந்தப்பட்டிருக்கக் கூடும் என்பதை யோசித்தவளுக்கு மயிரிழையில் தான் ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டோமே என்று அவள் மீதே அவளுக்குக் கோபம் கனலாய் ஏறியது.

அப்போது, “மேடம்” என்று வினோத்தின் குரல் கேட்டு அவள் திரும்ப, அவன் கையில் இரத்தச் சுவடுகள். அவன் வலியில் துடிக்க, “என்னாச்சு வினோத்?” என்று அவள் பதட்டத்தோடு கேட்டபடியே தன் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டை எடுத்துத் தாமதிக்காமல் அவன் அடிப்பட்ட கையில் கட்டினாள்.

“இல்ல மேடம்... இங்க ஒரு செல்ஃபோன் இருந்துச்சு... அது எவிடன்சுன்னு நினைச்சு கையில எடுத்தேன்... அது டக்குனு ப்ளாஸ்ட் ஆயிடிச்சு... ஜஸ்ட் நீங்க உள்ள நுழையறதுக்குக் கொஞ்ச நேரம் முன்னாடி” என்றான்.

“நீங்க உடனே ஹாஸ்பிடல் கிளம்புங்க” என்று வினோத்தை அங்கிருந்து அனுப்பியவள்... அதன் பின் அங்கே தூள்தூளாய் சிதறிக் கிடந்த கைப்பேசியின் பாகங்களை உற்றுப் பார்த்தாள். எதிராளி நிச்சயம் ரொம்பவும் பக்கத்தில் இருந்தே இதனை வெடிக்க வைத்திருக்கக் கூடும் என்பதாகத் தோன்றியது அவளுக்கு...

You cannot copy content