You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

IrumunaiKathi - Episode 23

Quote

23

எல்லாம் சிவமயம்

இந்திய பிரதமருக்குப் பிரத்தியேக முறையில் பாதுகாப்புத் தரும் ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் க்ரூப்பால் (எஸ்.பி.ஜி) சோதனைக்கு உட்படுத்தப்பட்டான் விக்ரம். அதுவும் ஒன்று இரண்டல்ல. பல அடுக்குப் பாதுகாப்பு வளையங்களைக் கடந்து அவன் பிரதமரின் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டான்.

எப்போதும் சம்யுக்தா ராய் அவனைத் தன் அலுவலகத்திற்கு வரவழைத்து சந்திப்பதுதான் வழக்கம். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாய் அவன் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டது கொஞ்சம் அதிர்ச்சியாகவும் கூடவே குழப்பமாகவும் இருந்தது. அந்தளவுக்கு ஏதேனும் முக்கியமான விஷயமா என்ற யோசிக்கத் தொடங்கினான்.

சற்று முன்தான் மனோகரன் மற்றும் தங்கள் கட்சி சார்பான சிலரோடு சென்னையில் இருந்து புறப்பட்டு டில்லி வந்து சேர்ந்திருந்தான். வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திர பாரத் கட்சி தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களைப் பிடிப்பது எப்படி? என்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கவே அந்தப் பயணம்.

அடுத்த நாள் காலை பத்து மணி வாக்கில்தான் சுதந்திர பாரத் கட்சி வளாகத்தில் சம்யுக்தா ராயுடனான சந்திப்பு. அந்த சந்திப்பிற்கு சம்யுக்தா அவர்கள் வழங்கிய நேரப்படி ஒரு நாள் முன்னதாகவே மனோகரன், விக்ரம் மற்றும் கட்சி சார்பில் அவர்களுடன் வந்தவர்கள் பயணப்பட்டு தலைநகரம் வந்து சேர்ந்தனர்.

சம்யுக்தாவுடன் விக்ரமுக்கு இது ஒன்றும் முதல் சந்திப்பு அல்ல. நான்கு வருடங்களுக்கு முன்னதாக ஒரு முறைக் கட்சி சார்பில் அவனும் ஒரு ஓரமாய் உடன் வந்தான். அவனுக்கு ஹிந்தி, ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்ற ஒரு காரணத்திற்காக கிட்டிய வாய்ப்பு அது. கிடைத்த வாய்ப்பை சரியாய் பிடித்துக் கொள்ளும் வல்லவனாயிற்றே அவன். அதுவும் அவன் பயன்படுத்திய அரசியல் சாணக்கியத்தனங்கள் சரியாகவே வேலை செய்தது.

அதன் விளைவாக சம்யுக்தாவின் நன்மதிப்பை அவன் பெற்றிருந்தான். அது அவனுக்கும் கூட அன்று தெரியாது. அவனுக்கேத் தெரியாமல் அவரின் கண்காணிப்பில் வந்திருந்தான்.

விக்ரமின் குடும்பம் அதோடு அவனைப் பற்றிய மற்ற எல்லா தகவல்களையும் சேகரித்தப் பின் சம்யுக்தாவிற்கு அவன் மீது நம்பகத்தன்மை உண்டாகியிருந்தது.

அப்படியான சூழ்நிலையில் விக்ரம் தமிழச்சியுடன் டில்லியில் தங்கிய போது கட்சி சார்பில் நேரடியாக அவனிடம் பேச அழைத்திருந்தார் சம்யுக்தா! கிடுகிடு என்று உலகமே ஒரு நொடி ஆடிய உணர்வுதான். ஆனால் தன் மனநிலையை சம்யுக்தாவிடம் காட்டிக் கொள்ளாமல் மிக நேர்த்தியாக அதேநேரம் திடமாகவும் புத்திக்கூர்மையாகவும் பேசிய விதத்தில் அவரிடம் மீண்டும் தன் திறமையை நிரூபித்து நம்பிக்கையையும் பாராட்டையும் பெற்றிருந்தான்.

அதன் பின் சம்யுக்தா அவரின் தமிழகக் கட்சியின் செயல்பாடுகளை இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்கும் உளவாளியாக அவனை வைத்துக் கொண்டார்.

மனோகரன் தமிழக சுதந்திர பாரத் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பதாகத் தெரிவதெல்லாம் வெறும் பிம்பம். அப்படியான முட்டாள்களை முன்னிருத்திப் புத்திசாலிகளைப் பின்னே வைத்திருந்து காய் நகர்த்துவதுதான் பெரிய தலைகளின் அரசியல் சூட்சுமம். அத்தகைய சூத்ரதாரியாய் சம்யுக்தா செயல்பட, அவரின் சூட்சமங்களின் மூலமாய் விளங்கினான் விக்ரம்.

விக்ரம் அந்தளவுக்கு சம்யுக்தாவின் நம்பிக்கையைப் பெற்ற காரணத்தாலேயே அன்று ரகசியமாய் அமிர்தாவை அழைத்து வரவும் அனுப்பப்பட்டான். ஆனால் எப்போதும் இல்லாமல் இன்று ஏன் அவர் தன்னை வீட்டிற்கே சந்திக்க வர சொன்னார் என்ற குழப்பத்தோடு அங்கே அவனுக்கு நடந்த சோதனைகளை எல்லாம் சற்றுக் கடுப்போடே எதிர்கொண்டான்.

அதுவும் அங்கிருந்த பாதுக்காப்பு அதிகாரிகள் அவனை இப்படியும் அப்படியுமாய் புதுப்புது சோதிக்கும் யுக்திகளை எல்லாம் அவன் மீது சோதித்துக் கற்றுக் கொண்டிருகின்றனரோ என்று தோன்றியது.

கண்ணாமூச்சி விளையாடும் போது கண்ணைக் கட்டி சிலமுறை இடவலமும் சிலமுறை வலஇடமும் சுற்றிவிடுவார்களே, அப்படித்தான் அவனையும் சுற்றலில் விட்டுக் கடைசியாய் அவனை வீட்டிற்குள் அனுமதித்தார்கள்.

சம்யுக்தாவைக் கட்சி அலுவலகத்தில் சந்திக்க சென்ற போதெல்லாம் கூட இத்தனை கெடுபிடிகள் இல்லையே என்று எண்ணிக் கொண்டவனுக்கு இப்போது தலைத் தாறுமாறாய் சுற்றிச் சுழன்றது.

பின் சுழலாமல் என்ன செய்யும்? காலையில் எதோ ஒரு வீம்பில் சாப்பிடாமல் புறப்பட்டவன் அவசர அவசரமாய் விமான நிலையத்துக்கு வர, அங்கே சில பத்திரிக்கைகளின் படையெடுப்புகள் அவனைச் சிக்கிச் சின்னாபின்னமாக்கின.

எப்படியோ அவற்றை எல்லாம் கடந்து விமானம் ஏறி டில்லியில் வந்து இறங்கினான். இறங்கிய கையோடு அவர்கள் தங்கும் இடம் போய் சேர அங்கே விரைவாய் வந்த பிரதமரின் குடியிருப்பில் வேலை செய்யும் அலுவலர் அவனை அழைத்துக் கொண்டு... என்று சொல்ல முடியாது. இழுத்துக் கொண்டு போய்விட்டார்.

மனோகரனுக்கு உள்ளூர பற்றி எரிய காது வழியாய் இரயில் இன்ஜின் கணக்காய் புகை வந்து கொண்டிருந்தது. அதென்ன அவனுக்குத் தனிப்பட்ட உரிமை மற்றும் சந்திப்பு.

அப்போது அவர் உடன் இருந்த எடுபிடிகள், “டிவில சொல்றதை எல்லாம் நீங்க கேட்கலையா தலைவா? அந்த அமிர்தா பொண்ணுக்கும் இவனுக்கும்” என்று அவர்கள் குரல் அடித்தொண்டையில் இறங்கிவிட,

“லூசு மாதிரி உளாறதே... பத்திரிக்கைக்காரனுங்க விட்டா ஒபாமா பொண்ணுக்கும் ஒசாமா பின் லேடனுக்கும் தொடர்புன்னு கூட எழுதுவானுங்க” என்றார்.

அதென்னவோ உண்மை. அமிர்தா செய்த சில ட்வீட்களுக்கு விக்ரமை அவளின் காதலனாகவே மாற்றிவிட்ட பத்திரிக்கைகளின் புத்திக்கூர்மை அலாதியானது.

இப்படியாக விக்ரம் பற்றி இவர்கள் விவாதம் மேற்கொண்டிருக்க அங்கே அவன் எதற்காக, யாருக்காக அழைத்து வரப்பட்டோம் என்று தெரியாமலே அலைக்கழிக்கப்பட்டான். இத்தனை ஆர்பாட்டத்தில் அவன் எங்கே சாப்பிட்டான். பசி மயக்கத்தில் பார்க்கும் இடமெல்லாம் மங்கி ஒரே நிறமாய் தெரிந்தது.

இந்நிலையில் அவன் உள்ளே அனுமதிக்கப்பட்டு விட, கடைசி கட்ட சோதனையில் அவன் செல்பேசியை கேட்கும் போது அமிர்தா கோபமாய், “போதும்... அவரை அனுப்புங்க” என்று அவள் மொழியில் உரைத்து அந்த அதிகாரிகளைக் காட்டமாய் முறைக்க, “மேடம்” என்று தயங்கியவர்களிடம் மீண்டும் கறாராய் ஒரு பார்வை பார்த்து மிரட்டினாள்.

அப்போதே விக்ரமிற்குத் தான் அமிர்தாவைப் பார்க்க அழைத்துவரப்பட்டோம் என்று புரிந்தது. ‘இவளைப் பார்க்கவா நம்மளை இப்படி டார்ச்சர் பண்ணானுங்க’ என்று விக்ரம் அந்த நொடி கடுப்பின் உச்சத்திற்குச் சென்றிருந்தான்.

அவளோ புன்னகை வழிய, “கம் ஆதி!” என்று அவன் கரத்தைப் பிடிக்க, அப்போது அங்கே இருந்து செல்லாமல் நின்றிருந்த பாதுக்காப்பு அதிகாரிகளைப் பார்த்து அவன் துணுக்குற்றான். ஆனால் அவள் அதைக் குறித்தெல்லாம் கவலைக் கொள்ளவில்லை. நேராய் அவனை அவள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அவனுக்கு அவள் செயல் மேலும் கடுப்பாக்க, ‘செஞ்சதெல்லாம் பத்தாதுன்னு இவ திரும்பியும் தேரை இழுத்து தெருவுல வுட்ருவா போலயே?’ என்று எண்ணிக் கொண்டே அரை மயக்கத்தில் அவன் அவள் அறைக்கு இழுத்துச் செல்லப்பட்டான்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன விஷயம்?” என்று அவன் தடுமாற்றத்தோடு கேட்க, அவளோ அவசரமாய் அறைக்கதவைத் தாளிட்டாள்.

“அமிர்தா ப்ளீஸ்... கதவைத் திறங்க... யாராச்சும் பார்த்தா... தப்பா நினைப்பாங்க... ஏற்கனவே பத்திரிக்கையில எல்லாம் கண்ட மேனிக்கு எழுதிட்டு இருக்காங்க... நீங்க கூப்பிட்ட விஷயத்தைச் சொல்லுங்க... நான் கிளம்பறேன்” என்றவன் அவள் விட்டால் போதும் ஓடிவிடலாம் என்ற நிலைமையில் இருந்தான்.

ஆனால் அவளோ அவனை விடும் நிலைமையில் இல்லை.

“அதெல்லாம் பரவாயில்ல... நான் உங்ககிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும்” என்று உரைக்க,

‘உனக்குப் பரவாயில்ல... ஆனா எனக்கு... ஐயோ! ஏற்கனவே ஒருத்தி கடுப்புல என்னை காய்ச்சிட்டிருக்கா?’ என்றவன் மனதிற்குள் புலம்ப அமிர்தா அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனோ அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல், “சரி விஷயத்தை சொல்லுங்க அமிர்தா!” என்று கேட்க,

அவளோ கிறக்கமாய் அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள விக்ரம் அதிர்ந்து, “அமிர்தா என்ன இதெல்லாம்” என்றவள் கரத்தைப் பிரித்துவிட முயல, “எத்தனை ட்வீட் பண்ணேன் நான் உங்களுக்காக... ம்ம்கும்... பத்திரிக்கைகாரங்களுக்குப் புரிஞ்சது கூட உங்களுக்குப் புரியலையா ஆதி!” என்று அவள் குழைவாய் கேட்க அவனால் முடியவில்லை.

அவளை இழுத்துத் தள்ள முற்பட்டவன் அவள் செய்த சேட்டையில் படுக்கையில் விழ அவளும் அதுதான் வாய்ப்பு என்று அவன் மீதே விழுந்தாள்.

‘அடிப்பாவி!’ என்று வாய்க்குள் முனகியவன், “எழுந்துறீங்க அமிர்தா? இதெல்லாம் சரியில்ல” என்று சொல்ல அவள் காதில் அவன் சொன்னதெல்லாம் ஏறவில்லை. மோகநிலையில் அவனை மேலும் நெருங்கி, “நம்ம ஃப்ர்ஸ்ட் மீட்லயே உங்களை எனக்குப் பிடிச்சுப் போச்சு” என்று தொடங்கியவள் பிளா... பிளா... பிளா என்று அவள் காதல் வசனத்தை நீட்டி முழக்க, ஏற்கனவே சோர்வின் உச்சத்தில் இருந்தவன் அந்த பஞ்சணையில் முடியாமல் கிட்டத்தட்ட மயக்கநிலைக்குப் போய் கொண்டிருந்தான்.

‘விட்டா இவ நம்மள கற்பழிச்சிடுவா போலயே... என்னடா விக்ரம் உன் கண்ணியத்துக்கு வந்த சோதனை’ என்றவன் சிரமப்பட்டு தன் சுயநினைவை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க, அவள் பேசிய வார்த்தைகள் யாவும் ஒன்றும் பாதியுமாகத்தான் அவன் செவிகளில் விழுந்து துளைத்தது. அதுவும் படுநாராசமாக!

“உனக்காக நான் எது வேணா செய்வேன் ஆதி!” என்று மிச்சம் மீதியாய் அவள் பேசியது காதில் விழ மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு,

“அப்படின்னா ப்ளீஸ்... ஒரு டம்ளர் ஜூஸ் ஆர்டர் பண்ணும்மா... எனக்கு கண்ணை இருட்டுது... காலையில் இருந்து சாப்பிடல” என்று வெட்கத்தை விட்டு தனக்கு வேண்டியதைக் கேட்டுவிட்டான்.

அவனை வித்தியாசமாய் பார்த்து அவள் புருவத்தை நெறிக்க விக்ரம் அவள் முகத்தைப் பார்த்து, “எது செய்றதா இருந்தாலும் கொஞ்சம் தெம்பு வேணும்ல” என்று சொல்ல அவளுக்கு இந்த வார்த்தை நன்றாய் எட்டியது போல!

பட்டென அவன் மீதிருந்து எழுந்து ஜூஸ் எடுத்து வர சொல்லித் தகவல் அனுப்ப, ‘தப்பிச்சேன்டா சாமி... பூரிக் கட்டை மாதிரி... இப்படி மேல ஏறி திரட்டிட்டாளே... பாவி!’ என்றவன் உள்ளுக்குள் ஆவேச நிலையில் இருந்தாலும் உடம்புக்கு அப்போதைக்கு அதனைக் காட்டுமளுவுக்கான தெம்பு இல்லை.

பசியில் அடைத்திருந்த காதிரண்டையும் இறுக மூடிக் கொண்டு தியான நிலைக்குப் போயிருந்தான்.

அவளோ அவன் அருகில் அமர்ந்து, “என்னாச்சு ஆதி? என்ன பண்ணுது?” என்று அவனைச் சுற்றிச் சுற்றி வர, ‘அட ராமா! இவ பண்ற டார்ச்சருக்கு எனக்கு வாந்தி வந்திரும் போலயே’ என்று மனதில் பொருமிக் கொண்டிருக்கும் போது ஒரு பெரிய தட்டில் சில உணவு பதார்த்தங்களோடு ஆரஞ்சு ஜூஸ் அவள் அறைக்கு வந்தது.

அத்தனை உணவுப் பண்டங்களையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டவன் அந்த ஜூஸையும் இறுதியாக அருந்தி முடிக்க, “போதுமா ஆதி? வேறெதாச்சும் வேணுமா?” என்று கேட்க அவன் வேண்டாம் என்பது போல் தலையசைக்க, அவன் கை அலம்பிக் கொள்ள உதவியவள் டிஷ்யூ ஒன்றையும் அவனிடம் நீட்டினாள்.

கொஞ்சம் நேரத்திற்கு முன்னதாக ஐட்டம் டேன்ஸர் ரேஞ்சுக்கு அவள் செய்த சேட்டையும், இப்போது அன்னை தெரசா லெவலுக்குக் காட்டிய அக்கறையும் பார்த்து அவனுக்கு எரிச்சலானது.

“ஆதி!” என்றவள் பேச ஆரம்பிக்க,

“அமிர்தா... நீங்க ஏதோ குழப்பத்துல இருக்கீங்க... எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயம் உங்களுக்குத் தெரியும்” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, “அதான் நேத்து டிவில உங்களுக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லன்னு உங்க வொய்ஃப்... சாரி சாரி உங்க எக்ஸ் வொய்ஃப் அறிவிச்சிட்டாங்களே!... அதுவும் நீங்க யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பரவாயில்லன்னு” என்று சொல்லி குத்தலாய் அவனைப் பார்த்தாள்.

‘எல்லாம் அவளால... அவளை’ என்று மனதிற்குள் தமிழச்சியின் மீது கோபம் கொண்டவன் அதேநேரம் அமிர்தாவைப் பார்த்து,

“ஆமா சொன்னாதான்... அதுக்காக எங்க உறவு இல்லன்னு ஆயிடுமா அமிர்தா... என்னால அவளைத் தவிர வேறொரு பொண்ணை நினைச்சுப் பார்க்கக் கூட முடியாது... ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட்” என்று சொல்ல அந்த வார்த்தை அவளுக்கு அவன் மீதான ஈர்ப்பையும் மரியாதையையும் இன்னும் அதிகமாக்கிற்று. அந்த நொடி விக்ரம் அறையை விட்டு வெளியேறிட கதவைத் திறக்கச் சென்றான்.

அதற்குள் அவன் முன்னே வந்து கதவை அடைத்தபடி நின்றவள், “அவளை விட நான் அழகா இல்லையா ஆதி?” என்று கேட்க, அப்போதே அவன் பார்வைக்கு அவள் முகமும் உடையும் தென்ப்பட்டது.

நாகரிகம் என்ற பெயரில் கிழிசலாய் கழுத்துக்குக் கீழே இறங்கும் ஒரு இடுப்பளவிலான டாப்... முட்டிக்கும் மேலாய் ஒரு ஒன் பை போர்த் அளவுக்கு ஒரு உடை. வெறுப்பாய் மூச்சை இழுத்துக் கொண்டவனுக்குக் காலையில் பார்த்தத் தன் மனைவியின் முகம் முன்னேவர இயல்பாய் ஒரு புன்னகை உதட்டில் வந்து ஒட்டிக் கொண்டது.

‘அது அழகு... இதுக்குப் பேர் அழகா... இதுல அவ கூட கம்பேரிஸன் வேற... ஏரோப்ளேனே வைச்சாலும் இவ என் பொண்டாட்டிக் காலைக் கூடத் தொட முடியாது’ என்று மனதில் குமுறியவனுக்கு வார்த்தைகளாய் இவற்றையெல்லாம் கொட்ட வேண்டும் என்று இருந்தாலும் அது முடியவில்லை.

இயலாமையோடு மௌன நிலையில் இருந்தவனிடம் அவள் மேலும், “நல்லா யோசிங்க ஆதி! அப்பதான் புரியும்... அந்த தமிழச்சி என் கால் தூசுக் கூடப் பெறமாட்டான்னு” என்று சொல்லவும், “அமிர்தா...” என்றவன் அதற்கு மேல கட்டுப்படுத்த முடியாமல் கோபமாய் கத்திவிட்டான்.

அவள் சிரித்துக் கொண்டே, “ஏன் டென்ஷன்? நான் சொல்றதை யோசிச்சுப் பாருங்க... அமிர்தா ஆதி... எவ்வளவு பொருத்தமா இருக்கு... தமிழச்சி... அந்தப் பேரே நல்லா இல்ல... உவேக்... ஓமட்டிட்டு வருது” என்று அவள் பேசிக் கொண்டே போக விக்ரம் சீற்றத்தோடு, “வாயை மூடுறி... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன... கன்னம் பழுத்திரும்... சொல்லிட்டேன்” என்றவன் அவளைக் கதவை விட்டு இழுத்துத் தள்ளிவிட்டுத் தாழ்ப்பாளைத் திறந்து வெளியேறப் போக, ஏதோ பெரிதாய் உடையும் சத்தம்.

அவன் தடைப்பட்டு மீண்டும் திரும்ப அவள் பழம் வெட்டும் கத்தியை தன் கை நரம்புக்கு நேராய் வைத்துக் கொண்டு, “இப்போ நீ போன... நான் உயிரோட இருக்க மாட்டேன்... என் கையை வெட்டிப்பேன்” என்று சத்தமிட, அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

அவள் மீது லேசாய் கீறல் விழுந்தாலும் தன்னிலை அவ்வளவுதான் என்று பதறியவன், “கத்தியைக் கீழ போடு அமிர்தா!” என்று பல்லைக் கடித்து சன்னமாய் உரைத்துக் கொண்டே அவளை நெருங்கினான்.

“கிட்ட வந்த... வெட்டிப்பேன்” என்றவள் அடமாய் சொல்ல அப்போது கேட்ட பூட்ஸ் சத்தம் அவனின் இதயத் துடிப்பை ஏற்ற, “கீழ போடு... கீழ போடு... ஆஃபீசர்ஸ் வராங்க” என்றவன் குரலைத் தாழ்த்தி மெல்லமாய் சொல்ல அவளையும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

அந்த நொடி கத்தியைப் பிடுங்கி அவன் படுக்கை மீது வீசிவிட அந்த அதிகாரிகள் வாசல்புறம் வந்து, “மேடம் என்னாச்சு? ஏதோ சத்தம் கேட்டுச்சு” என்று விசாரிக்க, அவள் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள்.

அந்த நிலைமையை சமாளிக்க எண்ணிக் கீழே விழுந்த பூஜாடியைக் காண்பித்து, அவர்களுக்கு விளக்க அந்த நொடி விக்ரமுக்கு உயிர் போய் உயிர் வந்திருந்தது.

விக்ரம் அப்படியே அந்த அறையின் பின்னோடு நகரக் காலில் ஏதோ தட்டுப்பட்டது. உடைந்த பூஜாடியின் துண்டுகள் அங்கேயும் சிதறிக் கிடக்கிறதோ என்று பார்த்தவனுக்கு அவை வேறெதோ கண்ணாடித் துண்டுகள் என்றுப்பட்டது. அதனைக் குழப்பமாய் பார்த்தவன் நீண்டு தொங்கிக்கொண்டிருந்த திரைச்சீலையை விளக்க அது வேறொரு அறையின் கதவு.

கதவின் மேல்புறக் கண்ணாடி உடைந்து கிடந்தது. அவன் இன்னும் கொஞ்சம் திரைச்சீலையை விலக்கிப் பார்க்க, அவன் கண்ணைப் பறிக்குமளவுக்காய் ஒரு மின்னல் வெட்டும் வெளிச்சம்.

அப்படி ஒரு வெளிச்சம் அங்கே உருவானதா அல்லது அது தன் பிரமையா என்று புரியாமல் திகைத்தவன் மேலும் அந்தக் கதவின் உடைந்த துவாரம் வழி உற்றுப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஏதோ மின்னிய உணர்வு!

அவன் விழிகள் அது என்னவென்று இன்னும் ஆழமாய் பார்க்க, பாதி மூடியும் மூடாமலும் இருந்த அந்த வடிவத்தைப் பார்த்து அவன் உடல் சட்டென்று சிலிர்த்துக் கொண்டது.

‘நீயே நான்... நானே நீ...

உன்னுள் நானிருக்க...

நீ எதைத் தேடுகிறாய்?...

நான் எனக்காக எதுவும் செய்வதில்லை...

ஆனாலும் அனைத்துமாய் நான் இருக்கிறேன்’ என்று முதலும் முடிவும் இல்லாத பரம்பொருள் தத்துவத்தை நடனக் கோலத்தில் உணர்த்திக் கொண்டிருந்தான் அந்த ஆடலரசன் நடராஜன்!

அவனிருக்கும் இடத்தை அவனேயன்றி வேறு யார் காட்டிக் கொடுக்க முடியும்? ஆயிரம் அடுக்குப் பாதுக்காப்புகள் போட்டாலும் அந்த அம்பலத்தரசன் முடிவெடுத்துவிட்டால் யார் அவனை மறைக்க இயலும்? தரிசனம் தரவேண்டும் என்று யாதுமானவன் உருத்தறித்தால் யார் அதைத் தடுக்க இயலும்?

You cannot copy content