You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

IrumunaiKathi - Episode 26

Quote

26

திட்டம்

தமழச்சியின் முகம் வெளிறி போக மூச்சுக் காற்றுத் தொண்டைக் குழிக்குள் நின்று விழிகள் இருட்டிக் கொண்டு வர சடசடவென ஒரு சத்தம். தூணின் மேல் தொங்கிக் கொண்டிருந்த சில வௌவால்கள் தம் சிறகுகளைப் படபடத்துக் கொண்டு அங்கிருந்தவர்களின் கவனத்தைத் திசைத் திருப்பியது.

அதே சமயம் தமிழச்சியின் கழுத்தைப் பற்றியிருந்தவன் மேல் ஒரு வௌவால் விழுந்து தம் சிறகுகளைப் படபடக்க, அவன் திடுக்கிட்டு தன் பிடியின் இறுக்கத்தைத் தளர்த்தி தமிழச்சியை விட்டு விலகி வந்தான்.

அங்கிருந்த எல்லோருமே அந்தக் காட்சியைப் பார்த்தபடி ஸ்தம்பித்து நிற்க, சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு அவர்கள் சுதாரிப்பதற்கு முன் இவான் உள்ளே வந்து அவர்கள் எல்லோர் மீதும் தன் தாக்குதலை நடத்தினான்.

தமிழச்சி அப்போதுதான் உள்ளே அடைப்பட்டிருந்தை மூச்சை இருமிக் கொண்டே வெளியிழுத்து விட்டாள். நடந்தது எதையும் அவள் சரியாக உணரவில்லை. ஆனால் அவள் விழி திறந்து பார்க்கும் போது எல்லோரும் தரையில் வீழ்ந்து கிடக்க, இவான் தமிழச்சியின் அருகே வந்து அவள் கட்டை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருந்தான்.

“ஆர் யு ஓகே?” என்று அவன் கனிவாய் கேட்க, “யா” என்று அவள் தலையை அசைத்துக் கொண்டே வீழ்ந்து கிடப்பவர்களைப் பார்த்தாள். இப்போதைக்கு அவர்கள் எழுந்திருக்க முடியாது. அந்தளவுக்காய் காயம்பட்டு முனங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவள் ஏதோ நினைவு வந்தவளாய், “வெளியே மூணு பேர்” என்று அவள் சொல்லும் போதே அவர்கள் கதையையும் முடிந்துவிட்டது என்று இவான் செய்கையில் காட்ட அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.

அவர்களிடம் சிக்குவதற்கு முன்னதாக தமிழச்சி இவானின் பாதத் தடங்களைப் பார்த்து கொண்டே அந்த மணல்வெளியில் நடந்து வந்தாள். அப்போது யாரோ அவளைப் பின்தொடர்வது போன்ற பிரமை உண்டானது.

அதேநேரம் அவள் தூரமாய் நின்றிருந்த இவானைப் பார்த்துவிட்டாள். அவனும் இவளைப் பார்த்து கையசைத்தான். இவான் அந்த நொடி பதட்டமாகிப் பின்னிருந்து யாரோ அவளைத் தாக்க வருவதாக சமிஞ்சை மொழியில் உணர்த்த, அவளுக்கும் அது தெரிந்தது.

அவள் இவானிடம் தன்னை நெருங்கி வர வேண்டாம் என சைகை மொழியில் சொல்லும் போதே அவளை சிலர் கட்டித் தூக்கிக் கொண்டு சென்றனர்.

அவர்கள் கூட்டத்தை மொத்தமாய் வளைத்துப் பிடிக்கவும் அவர்கள் எண்ணத்தைத் தெரிந்து கொள்ளவும் அவள் அவர்களுடன் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் சிக்கிக் கொண்டாள்.

இவானும் அவள் எண்ணத்தைப் புரிந்து கொண்டு அங்கிருந்த மண்டபத்தில் மறைந்து அவளை எங்கே அழைத்து செல்கிறார்கள் என்பதைக் கவனித்து பின்தொடர்ந்தான்.

அந்த முகம் தெரியாத நபர்கள் தமிழச்சியை அருகிலிருந்த அரண்மனையின் சமையல் மண்டப்பதிற்கு அழைத்து சென்று, அவர்கள் ஆட்களில் ஒருவனை வாசலில் பாதுக்காப்பிற்காக நிறுத்தினர். அவன் கதையை அப்போதே இவான் முடித்துவிட்டான். ஆதலாலேயே உள்ளிருந்து அவர்கள் வாசலில் நின்றவனுக்குப் பேசியில் அழைக்கும் போது பதிலில்லாமல் போனது.

அதன் பின்னர் அந்தக் கூட்டத்தின் தலைவன் தமிழச்சி சொன்னது போல போலீஸ் அந்த இடத்தைச் சூழ்ந்திருக்கின்றனரா என்று சோதிக்க மூவரை வெளியே அனுப்பியிருக்க, இவான் அவர்களையும் துவம்சம் செய்துவிட்டு உள்ளே நுழைய சற்று தாமதமானது. அந்த நொடி தமிழச்சி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தாள். நல்ல வேளையாக ஏதோ ஒரு சக்தி அதிர்ஷ்டவசமாய் அவளைக் காப்பாற்றிவிட்டது.

தமிழச்சி ஒருவாறு இயல்பு நிலைக்குத் திரும்பி, அவளைக் கட்டி வைத்த கயிற்றினால் அந்தக் கூட்டத்தின் தலைவனையும் குமாரையும் பிணைத்தபடி, “யாருடா உங்களை அனுப்பினது?” என்று கேட்க, அவர்களோ பதில் சொல்லும் நிலையிலில்லை.

காயம்பட்டு அடிவாங்கி முகமெல்லாம் வீங்கிய நிலையில் இருந்தனர். அவளுக்குக் கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது.

“என்ன தைரியம் இருந்தா இராஜராஜேஸ்வரி கிரீடத்தைத் தூக்கி இருப்ப நீ” என்ற கேட்டு குமார் முகத்தில் கன்னம் கன்னமாய் அறைந்து வைத்தாள். அவனோ வலியோடு அழத் தொடங்கியிருந்தான்.

இவான் அப்போது அவள் கரத்தைப் பற்றி ஓரமாய் அழைத்து, “திஸ் பிளேஸ் இஸ் நாட் சேஃப்... நம்ம அடுத்து என்ன செய்றதுன்னு பார்க்கணும்...” என்று சொல்ல அவளும் அவன் சொன்னதை ஆமோதித்தாள். அப்போது அந்த இடத்தில் ஒரு கைப்பேசியின் அழைப்பு கேட்க அது யாருடையது என்று தன் செவிகளைத் தீட்டிக் கேட்டவளுக்கு அது குமாருடையது என்று புரிந்தது.

அந்த நொடி இவானை அவள் ஆராய்வாய் பார்த்துவிட்டு வேகமாய் குமாரைக் கட்டிபோட்ட இடத்திற்கு வந்து, “எவனாச்சும் சத்தம் போட்டீங்க கொன்றுவன்” என்று மிரட்ட இவானும் அவள் அருகமையில் வந்து தன் பார்வையாலேயே அவர்களை மிரட்டி வைத்தான். எல்லோரும் கப்சிப்பென்று இருந்தனர்.

தமிழச்சி குமாரின் பேசியை எடுத்தபடி அவன் முகத்தைப் பார்க்க அவன் அழுதுவடிந்து கொண்டிருந்தான். “சீ அழாதே” என்று அவனைத் திட்டிவிட்டு அவன் பேசியில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்தபடி அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“ஹலோ குமார்... ஆட்கள் வந்தாங்களா?” என்று கேட்க, எதிர்புறத்தில் கேட்ட குரல் அவளுக்கு ரொம்பவும் பரிட்சயமாய் தோன்றியது. அந்த குரல் யாருடையது என்று ஒருவாறு யூகித்தவள் ஸ்பீக்கரை ஆன் செய்து

குமாரின் அருகில் பேசியைக் கொண்டு சென்று, எதிர்புறத்தில் பேசுபவன் சொல்லும் எல்லாவற்றிருக்கும் ஆமாம் சாமி போட சொன்னாள். அவனும் பயத்தில் அவ்விதமே செய்தான்.

“கிரீடத்தைப் பத்தி அவ சொல்லலன்னாலும் பரவாயில்ல... அவளைத் தீர்த்திடுங்க” என்று சொல்லி அவன் தன் பேசி உரையாடலை முடித்த நிலையில் அவள் விழிகளில் அத்தனை ஆக்ரோஷம்!

‘மவனே! உன்னை நேர்ல வந்து பார்த்துகிறேன்டா’ என்று அவள் மனதிற்குள் சூளுரைத்துவிட்டு அந்தப் பேசியின் மூலமாகவே தன் சித்தப்பா ரகுவிற்கு அழைப்பு விடுக்க, “ஹலோ” என்று அவர் சொல் ஆரம்பித்த மறுகணமே நடந்த விவரங்களைச் சுருக்கமாய் சொல்லி, “இங்க உடனே வர முடியுமா சித்தப்பா... விஷயம் ரொம்ப கான்ஃபிடென்ஷியலா இருக்கட்டும்” என்றாள்.

“பேசி முடிச்சிட்டியா... சரி இப்போ நான் சொல்ற விஷயத்தை கேளு” என்று அவர் சொல்ல, “என்ன சித்தப்பா?” என்று அவள் கேள்வியாய் நிறுத்தினாள்.

“அம்மாவுக்கு நினைவு திரும்பிடுச்சு... இப்பத்தான் அண்ணன் கால் பண்ணிச் சொன்னாரு... நீ ஃபோன் எடுக்கலன்னு உன்னைப் பத்தி விசாரிக்க சொன்னாரு... அதான் நான் நம்ம கோவிலுக்கு வந்தேன்... இன்னும் டென் மினிட்ஸ்ல அங்கே இருப்பேன்” என்று அவர் முடிக்கும் போதே அவள் முகத்தில் ஈயாடவில்லை. இன்ப அதிர்ச்சி!

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத வந்த அந்தச் செய்தி அவளை அப்படியே ஸ்தம்பிக்க செய்திட அதற்குப் பிறகு ரகு சொன்ன வார்த்தைகள் எதுவும் அவள் செவியில் விழவில்லை. விழியில் மட்டும் ஆனந்த கண்ணீர் பெருக இவான் பதட்டத்தோடு, “தமிழச்சி வாட்?” என்று வினவும் போதே அவள் உணர்வு பெற்றாள். அவள் அவனிடம் கையசைத்து அமைதி காக்க சொல்லிவிட்டு தன் கைப்பேசி உரையாடலைத் தொடர்ந்தாள்.

“இது எப்போ சித்தப்பா?” என்று அவள் கண்ணீர் மல்க கேட்க, “இப்போதான் அண்ணா கிட்ட இருந்து ஃபோன்... நீ வேற ஃபோனை எடுக்கலன்னு அவர் டென்ஷன் ஆயிட்டாரு”

“அது என் ஃபோன் கார்லயே வைச்சிட்டேன்... நான் அப்பாகிட்ட பேசுறேன்... எனக்கு... இப்போ உடனே... அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு”

“சரி சரி... நான் பக்கத்தில வந்துட்டேன்... நீ ஃபோனை வை... நான் வர்றேன்” என்று ரகு தெரிவிக்க, அவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு இவானிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டாள்.

அவன் முகத்திலும் சந்தோஷம் பிரதிபலிக்க, “சிம்மா கிட்ட இதை பத்தி சொல்லணும்” என்றான். “ஆமா... ஆமா... அவனுக்கு ரொம்பதான் அக்கறை” என்று சலித்துக் கொண்டவள் மேலும்,

“அவனைப் பத்தி விடுங்க இவான்... அப்புறம் பேசிக்கலாம்... இப்போ என் சித்தப்பா வராரு இங்கே... அவர் காஞ்சிபுரம் டீஎஸ்பி...” என்று அவள் சொல்லி கொண்டே வெளியே எட்டிப் பார்த்து, “அனேகமா அவர் வந்திருப்பாரு” என்றாள்.

இவான் யோசனையோடு, “என்னைப் பத்தி அவர்கிட்ட சொன்னீங்களா?” என்று கேட்டுத் தயங்கி நின்றான்.

“இல்ல... வரட்டும்” என்றவள் சொல்லும் போதே அவன் மறுப்பாய் தலையசைத்து, “தமிழச்சி வேண்டாம்... என்னைப் பத்தி எந்தத் தகவலும் யாருக்கும் தெரிய வேண்டாம்... சீக்ரெட்டா இருக்கட்டும்” என்று உரைக்க,

“இல்ல... இவான்... ரகு என் சித்தப்பா” என்று அவள் எதோ சொல்ல வர, “நோ ப்ளீஸ்” என்று அவன் திட்டவட்டமாய் மறுத்தான்.

அவள் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. “உங்க சித்தப்பா வரதுக்கு முன்னாடி நான் புறப்படுறேன்... அன் கமலகண்ணன் பத்தின டீடைல்ஸ்... மத்த டீடைல்ஸ் எல்லாம் நாம அப்புறம் பேசிக்கலாம்” என்று புறப்படும் அவசரத்தில் சொல்லிக் கொண்டே வெளியேறியவன் மீண்டும் அவள் புறம் திரும்பி வந்து,

“கிரீடம் மீன் கிரௌன்... ரைட்” என்று சந்தேகமாய் கேட்டான். அவள் எதற்கு கேட்கிறான் என்று புரியாமல் ஆம் என்று தலையசைத்தாள். இதே சந்தேகத்தை அவன் அம்மாவின் அறையைப் பார்க்கும் போது கேட்டது நினைவுக்கு வர அவள் அடுத்தக் கேள்வி கேட்கும் முன்னரே,

“அந்த கிரௌன்... என்கிட்டதான் சேஃபா இருக்கு... யு டோன்ட் வொரி... நான் அத பத்தின விவரங்களையும் உங்களுக்கு அப்புறமா சொல்றேன்” என்று சொல்லி முடிக்கும் போதே ரகு வரும் அரவம் கேட்க, “ஓகே ஓகே ஐம் லீவிங்... வீ இல் டாக் லேட்டர் அபௌட் திஸ்” என்று பரபரப்பாய் சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டான்.

தமிழச்சி கடைசியாய் அவன் சொன்ன தகவலை கேட்டு சந்தோஷம் அடைவதா அல்லது குழப்பம் கொள்வதா என்று புரியாமல் விழித்தாள். அவள் இப்படி யோசித்தபடி நின்றிருக்கும் போதே ரகு உள்ளே நுழைந்து அங்கே அடிப்பட்டு கிடந்தவர்களையும் கயிற்றால் கட்டிப் போடப்பாட்ட இரு நபர்களையும் பார்த்தார். அதில் ஒருவன் குமார் என்பது அவருக்குத் தெரிந்தது.

மற்ற விவரங்களை அவர் தமிழச்சியிடம் கேட்க அவள் நடந்த விவரங்களை உரைத்தாள். இவானைத் தவிர்த்து!

You cannot copy content