You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

IruMunaikathi - Episode 33

Quote

33

விதைத்த வினை

ஜன்னல் திரைசீலைகள் யாவும் மூடி வைக்கப்பட்டிருந்ததால் அந்த அறை முழுக்க மங்கலான வெளிச்சமே சூழ்ந்திருந்தது. வெளியிருந்து வெளிச்சம் உள்ளே நுழைவதற்கான வாய்ப்பே இல்லை.

அறையின் நடுநாயகமாக இருந்த சோஃபாவின் மீது கம்பீரமாய் கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தார் சம்யுக்தா ராய்.

கச்சிதமான தேகத்தில் தன் உடல் வாகுக்கு ஏற்றார் போல் கழுத்தை ஒட்டிய பிளவுஸ் அணிந்து கொண்டு காட்டனில் வெள்ளையும் கருப்புமாய் ஒரு புடவை அணிந்திருந்தார். அதோடு தலையை ஏற்றி வாரி கொண்டையிட்டிருந்த விதத்தில் ஓர் அரசியல் பெண்மணிக்கே உரிய மிடுக்குத் தெரிந்தது.

வெண்மையான தோலும் முதிர்ச்சியோடு லேசான நெற்றி சுருக்கங்களும் சிறியதாய் ஒரு கருப்பு நிறப் பொட்டும் வைத்திருந்தார். கையில் மின்னும் ஒரு வாட்சும் மோதிரத்தையும் தவிர பெரிதாய் எந்தவித அணிகலனும் அணிந்திருக்கவில்லை.

இவையெல்லாம் தாண்டி அப்போது சம்யுக்தாவின் தோற்றத்தில் தனிதத்துவமாய் தெரிந்தது கொதிகலனாய் இருந்த அவரின் சுடும் பார்வை. கோபத்தின் உச்சம். எப்போதும் மக்கள் முன்னிலையில் சாந்தசொரூபமாய் இருக்கும் அந்த விழிகளின் மாற்று பரிமாணம் அது.

அந்த விழிகள் தாக்கி நின்றது சைத்தன்யாவைதான். அவர் முகத்திலும் அதே அளவுக்காய் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அவர்களின் உரையாடல் ஹிந்தியில் காரசாரமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது.

“இப்ப எனக்கு முடிவு தெரிஞ்சாகணும்” என்று சைத்தன்யா சம்யுக்தாவைப் பார்க்க, “சீ” என்பது போல் அசூயையாய் ஒரு பார்வை பார்த்தார்.

“இந்த முறைக்கிற வேலையெல்லாம் வேண்டாம்... உன் பொண்ணு அமிர்தாவை என் பையனுக்குக் கட்டிக் கொடுக்கிற... அவ்வளவுதான்” என்று அவர் முடிவாய் சொன்னார்.

“எப்படி இப்படி கேவலமா உன்னால கேட்க முடியுது... உனக்கும் எனக்கும் ரிலேஷேன்ஷிப் இருக்கும் போது... அதெப்படி என் பொண்ணைப் போய் உன் பையனுக்கு” என்று மென்று விழுங்கி அந்த வார்த்தைகளை உரைத்தார்.

“அதெல்லாம் யாருக்குத் தெரிய போகுது... பேசாம நான் சொல்றதுக்கு ஒழுங்கா ஒத்துக்கோ” என்று சைத்தன்யா மிரட்டலாய் சொல்ல சம்யுக்தாவின் கோபம் கனலாய் ஏறிக் கொண்டிருந்தது.

அமிர்தா மட்டுமே சம்யுக்தாவின் ஒரே வாரிசு. அதேநேரம் அவளே அவரின் நேரடியான அரசியல் வாரிசாகவும் இருக்க முடியும். சைத்தன்யாவின் திட்டமும் அதுதான். அமிர்தாவை அவர் மகனுக்குத் திருமணம் செய்துவிட்டால் சம்யுக்தாவிற்குப் பிறகு இந்நாட்டின் அரசியல் அதிகாரத்தை தன் மகன் கைப்பற்றிவிடலாம். இதில் ஒழுக்க மீறல்கள் விதி மீறல்கள் என்று வேறெதுவும் அவர் கண்களுக்குத் தெரியவில்லை.

ஒரு மாதம் முன்பாகவே தன் எண்ணத்தை சைத்தன்யா சம்யுக்தாவிடம் சொல்லிவிட, அவர் முடியவே முடியாது என மறுத்துவிட்டார். அவர்களுக்கு இடையிலான முதல் விரிசல் அது. அப்போதுதான் அந்தச் சிலை அவர்கள் கைக்கும் வந்திருந்தது. அதன் பின் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை சண்டை என்று பெரிய கருத்து மோதல்கள் உண்டானது.

அந்த நிலையில்தான் அரசல்புரசலாய் அமிர்தா அதே கட்சியில் இருக்கும் வி.வி.கே. ஆதித்தயா என்பவனைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவ ஆரம்பித்தது.

அந்த நொடி சைத்தன்யாவிற்குத் தன்னுடைய கனவு கோட்டையைத் தகர்ந்துவிடுமோ என்ற பயம் உண்டாக, அவர் குரூரமாய் யோசிக்கத் தொடங்கினார். அவரின் வஞ்சகப் புத்தி சம்யுக்தாவைக் குறி வைக்கத் தொடங்கியது.

மீண்டும் சம்யுக்தாவிற்கு தன் கைப்பேசி மூலமாக அழைத்து, “உடனே என் பையனுக்கு உன் பொண்ணைக் கட்டி வைக்கிறதா அறிவிப்புக் கொடு” என்றார். அன்று சம்யுக்தா அவரைக் காரசாரமாய் கடிந்து கொண்டார். அவர்களுக்கு இடையிலான மோதல் மேலும் எரிமலையாய் வெடித்து சிதறியது.

சைத்தன்யா சம்யுக்தாவிடம் அனுமதி கேட்கவில்லை. அவர் செய்தே ஆக வேண்டும் என்று மிரட்ட அப்போது ஆதியைதான் தன் மகளுக்குத் திருமணம் செய்விக்கப் போகிறேன் என்று முடிவாகச் சொல்லிவிட்டார். அந்தக் கொந்தளிப்பில்தான் சைத்தன்யா உடனடியாக டில்லி வந்து இறங்கியது.

அவர்களுக்கு இடையில் கருத்து மோதல் அதிகரிக்க சம்யுக்தா, “நான் என் பொண்ணை உன் பையனுக்குக் கட்டிக் கொடுக்கமாட்டேன்... இதுக்கு மேல இந்த விஷயத்தைப் பேசுனா... அப்புறம் உன் பேர் புகழ் எல்லாத்தையும் ஒன்னுமில்லாம பண்ணி உன்னை ஜெயிலில் கலி திங்க விட்டுடுவேன்... ஜாக்கிரதை” என்றவர் எச்சரிக்கை விடுக்க, சைத்தன்யாவின் கோபம் பன்மடங்கானது.

“என்னாலதான் நீ இந்த நிலையில இருக்கன்னு மறந்துட்டுப் பேசுற சம்யு!”

“நீதான் என் தயவில வாழ்ந்துட்டு இருக்க... நான் மட்டும் இல்லன்னா உன் நிலைமையை யோசிச்சு பாரு”

சம்யுக்தாவை எரிப்பது போல் பார்த்த சைத்தன்யா, ‘உன் சம்மதம் இல்லாமலே நான் நினைச்சதை நடத்திக் காட்டுறேன்... ஆனா அதைப் பார்க்க நீ உயிரோட இருக்க மாட்ட’ என்று வஞ்சமாய் எண்ணிக் கொள்ள,

சம்யுக்தா அவரை அலட்சியமாய் பார்த்து, “ஒழுங்கா ஊர் போய் சேர்ந்திரு... இனிமே நீ என் கண்ணில பட்டா அப்புறம் நான் என் பவரை யூஸ் பண்ண வேண்டி வரும்... அப்புறம் நீ என்ன ஆவேனே தெரியாது” என்றார்.

சைத்தன்யா தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து இந்த விஷயத்தைப் பொறுமையாகக் கையாள எண்ணி, “சரி நான் போறேன்... ஆனா எனக்கு அந்தச் சிலை வேணும்” என்று கேட்க,

அப்போது சம்யுக்தா, “எந்தச் சிலை?” அலட்சியமாய் கேட்க சைதன்யாவின் முகம் இருளடர்ந்து போனது.

அதற்கு மேல் சம்யுக்தா அங்கே நிற்கவில்லை. அவர் அந்த அறையை விட்டு அகன்று விட, சைத்தன்யா இதைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அதிர்ச்சி மற்றும் வெறி ஏகபோகமாய் தலைக்கேறியது. நல்லவனின் கோபம் நன்மையில் முடியும். ஆனால் தீயவனின் கோபம் பெரும் தீமையில்தான் முடியும். ஒரு மோசமான விளைவிற்கு அவர் கோபம் வழிவகுத்துக் கொண்டிருந்தது.

சைத்தன்யாவும் சம்யுக்தாவும் ஒரே கல்லூரியில் ஒரே பிரிவில் படித்துக் கொண்டிருந்த போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இதைத் தெரிந்து கொண்ட சம்யுக்தாவின் தந்தை சத்யா ராய் உடனடியாக தன் குடும்பம் மற்றும் அரசியல் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி சொந்தத்திலேயே அவருக்கு மணமுடித்து வைத்தார்.

சைத்தன்யாவிற்கு இது பெரிய ஏமாற்றமாக இல்லை. கிடைத்தால் லாபம் என்றளவிலேயே சம்யுக்தாவைக் காதலித்தார். இது ஒருபுறமிருக்க சைத்தன்யாவின் தந்தை வெகுகாலமாய் டில்லியில் பழமையான கலைநயப் பொருட்கள் விற்கும் சிறு கடை ஒன்றை நடத்தி வந்தார். படிப்பை முடித்த சைத்தன்யா அதைப் பார்த்துக் கொள்ள தொடங்கினார். கூடவே பழமையான பொருட்களைக் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபடத் தொடங்கினார். இதற்கிடையில் அவருக்குத் திருமணமாகி மகனும் பிறந்தான்.

மேற்கு வங்காளத்தின் அருகே 2500 ஆண்டு காலப் பழமையான நகரம் ஒன்று தொல்லியல் ஆராய்ச்சி மூலமாய் கண்டறியப்பட்டது. அங்கே தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி ஒரு சில வருடங்களில் கைவிடப்பட்டது. அப்போது கிடைக்கப் பெற்ற அரிய சுடுமண் பொருட்கள் சிலவற்றை சட்ட விரோதமாக விற்பனை செய்யத் தொடங்கினான் சைத்தன்யா. அதில் அவனுக்குக் கிடைத்த லாபம் மற்றும் புகழ் ஒரு போதையாக மாறியது.

இதையே அவன் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கும் போது சைத்தன்யாவின் தந்தை போலீசாரிடம் பிடிப்பட்டார். அவரைக் காப்பாற்ற வேண்டி சம்யுக்தாவின் உதவியை நாடினான். அங்கிருந்து மீண்டும் அவர்களின் தொடர்பு உருவானது. சம்யுக்தாவிற்கு மோகன் ராயுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைத் திருப்திகரமாக இல்லை. மோகனுக்கு மக்கள் சேவை மற்றும் அரசியலே குறிக்கோள்.

சம்யுக்தாவின் திருமண வாழ்கையில் உண்டான அந்த ஏமாற்றம் சைத்தன்யாவிற்கு சாதகமானது. அதன் பின் இருவரும் நெருக்கமாய் பழகத் தொடங்கிய நாட்களில் சம்யுக்தாவின் மனதில் பேராசையை விதைத்து சைத்தன்யா அவனுக்கு சாதகமாய் சில செயல்களைச் செய்ய தூண்டினான். இந்திய அரசாங்கத்தை ஆளும் பெரும் வாய்ப்பு சம்யுக்தாவின் கையிலிருப்பதாகச் சுட்டிக் காட்டியவன், அவரின் அண்ணன் மற்றும் கணவனை ஒழித்துக் கட்டிவிட்டால் அடுத்த வாரிசு அவர்தான் என்றும் அவளை மூளைச்சலவை செய்தான்.

அவளுக்கும் அந்த எண்ணம் ஆழமாய் வேரூன்றியது. இருவரும் அந்த சந்தரப்பதிற்காகக் காத்திருந்தனர். அப்போதுதான் அவள் கணவன் மோகன் ராயும் தமையன் அரவிந்த் ராயும் ஒன்றாய் விமானத்தில் செல்லும் ஒரு சூழ்நிலை ஏற்ப்பட்டது.

அந்த வாய்ப்பை வெகு சாமர்த்தியமாக இருவரும் பயன்படுத்திக் கொண்டு காய்களை நகர்த்தினர். அவர்கள் எண்ணியது நடந்தேறியது. மோகனும் அரவிந்த் ராயும் சென்ற விமானம் வெடித்துச் சிதறியது. விசாரணையில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என்று மக்களிடம் நம்ப வைக்கபட்டது.

அவர்கள் இறந்து ஒரு வருடம் கழித்து தன்னுடைய 31 வயதில் கட்சித் தலைமையை ஏற்ற சம்யுக்தா, அவர்கள் கட்சியாளர்கள் ஆதரவில் பதவி ஏற்றார். ஆனால் ஒரு வருடத்தில் அவரின் ஆட்சிக் கலைக்கப்பட்டு வேறு கட்சி ஆட்சி அமைத்தது.

சைத்தன்யா அப்போதிலிருந்தே சம்யுக்தாவின் கட்சி அதிகாரங்களை வைத்து தன் கடத்தல் தொழிலை உலகம் முழுக்க விரிவாக்கம் செய்தான். நியூயார்க்கில் ஒரு பெரிய ஆர்ட் கேலரியைத் திறந்தான். அந்த சமயத்தில்தான் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு சம்யுக்தாவிற்கு கிட்டியது.

அவர்கள் இருவரின் ஆட்டமும் அங்கிருந்து தொடங்கியது. சைத்தன்யா தொல்லியல் பொருள் கடத்தல் தொழிலில் பெரும் ஜாம்பவனாய் மாறத் தொடங்கினான். அதேநேரம் பல கேலரிக்கு தானே முன்வந்து சில பழமையானப் பொருட்களை தானமாய் தந்து உலகம் முழுக்க தன் பெயரையும் பெருமையையும் நிலைநாட்டிக் கொண்டான்.

அதோடு உலகிலேயே அதிக விலைப் போகும் ஆயிரம் வருடங்கள் முந்தைய சோழர் காலத்தின் செப்புச் சிலைகளை அதிகமாக ஏற்றுமதி செய்ய தொடங்கினான்.

தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருந்த சிலைத் தடுப்புப் பிரிவு சம்யுக்தா ஆட்சியில் மொத்தமாய் செயல்படாமல் நின்றது. சைதன்யாவிற்கு அப்போதுதான் கமலகண்ணனின் தொடர்பு கிடைத்தது. ஏற்கனவே சிறியளவில் சில கடத்தலில் ஈடுப்படிருந்த கமலகண்ணன் கூட்டுச் சேர்ந்து பூட்டி வைத்து இயங்காமல் போன பழங்காலக் கோவில்களில் இருந்தச் செப்புச் சிலைகளை சைத்தன்யாவிற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கினான்.

சுங்கத் துறைகளில் பல அதிகாரிகளை தன் கைவசம் வைத்துக் கொண்டு அவர்கள் மூலமாகப் பழங்காலச் சிலைகளை ஏற்றுமதி செய்தான். 500 மற்றும் 600 ரூபாய் பெறுமானம் உள்ள புதிதாய் செய்யப்பட்ட சிலைகள் என ரசீதுகள் தயாரித்து சமர்ப்பித்தான். அதோடு எஸ்பிஜி பாதுகாப்பின் கீழ் எந்த இந்திய தலைமை அதிகாரிகளுக்குப் பெட்டி உள்ளிட்ட எந்தப் பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படமாட்டாது என்ற விதிமுறையைத் தனக்கு சாதகமாகப் பயன்ப்படுத்திக் கொண்டார் சம்யுக்தா.

இதற்கிடையில் சம்யுக்தாவே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற சிலைகளை ஏற்றுமதி செய்வது அவர்களுக்கு இன்னும் சுலபமானது. கிட்டத்தட்ட பத்து வருடகாலமாய் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பல்லாயிரம் கோடிகள் மதிப்பிலான தமிழ்நாட்டின் பழங்காலப் பொக்கிஷங்கள் வேற்று நாடுகளுக்கு எந்தவித தங்குதடைமின்றி ஏற்றுமதி செய்யப்பட்டன!

ஆனால் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீருவான் என்ற பழமொழியை இவர்கள் மறந்துவிடுகிறார்கள் போலும்.

சைத்தன்யா வந்த சில மணிநேரங்களிலேயே தமிழச்சி தன்னுடைய குழுவுடன் டில்லி வந்தடைந்தாள். சைத்தன்யாவை கைது செய்வதை முடிந்தளவு ரகசியமாய் செயல்படுத்த எண்ணினாள்.

சிம்மாவும் அவளுடன் வந்தாலும் இருவரும் ஒன்றாக வந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை. இருவரும் சேர்ந்தே தங்கள் திட்டங்களைத் தீட்டினர்.

“சைத்தன்யாவை அரெஸ்ட் பண்றதுல மட்டும் அவசரம் காட்டாம... அவன் அந்தச் சிலையை வெளிக் கொண்டு வருவானான்னு க்ளோஸா வாட்ச் பண்ணிக் கையும் களவுமாய் பிடிக்கப் பாரு” என்ற சிம்மா சொன்ன யோசனை தமிழச்சிக்கும் சரியென்று தோன்றியது.

சைத்தன்யா தங்கியிருந்த இடத்தில் தன் ஆட்கள் மூலமாக அவரைக் கண்காணிக்க வைத்தாள். சிம்மாவும் அவளுக்கு உறுதுணையாய் நின்றான். இரைக்காகக் காத்திருக்கும் கொக்கு போல சரியான வாய்ப்புக்காக இருவரும் காத்திருந்தனர்.

அதேநேரம் விக்ரமும் டில்லிக்கு வந்திருந்தான். அவன் வந்ததுமே அலைபேசி மூலமாக அமிர்தாவை அழைத்துப் பேசினான்.

“நான் உன்னைப் பார்க்கணும்” என்றவன் சொல்ல அவளுக்கு குதூகலமானது.

“ஓ எஸ்!... ஆனா எங்க” என்று அவள் கேட்க, “இந்த மாறி டைம்ல வெளியே மீட் பண்றது சரியா வராது” என்றான்.

“அப்போ வீட்டுக்கே வந்திருங்க” என்றவள் சொல்லவும், “ஆனா அந்த செக்கிங் நினைச்சாதான் எனக்கு கடுப்பாகுது” என்றான்.

“நீங்க வந்துட்டு கால் பண்ணுங்க... நான் பார்த்துக்கிறேன்” என்றாள். அவனும் அதே போல் அங்கே சென்றதும் அவளுக்கு அங்கிருந்த ஓர் அதிகாரி மூலமாக அவனைத் தன்னுடைய ஸ்பஷல் கெஸ்ட் என்று சொல்லி அழைத்து வரச் சொன்னாள். அப்படியிருந்தும் ஒரு சில ஃபார்மல் செக்-அப்களை அவன் கடந்து வரவே நேரிட்டது.

விக்ரம் அமிர்தா அறைக்குள் நுழைந்ததும் அவளிடம் முக்கியமாகப் பேச வேண்டும் என்று அறைக் கதவை மூடிவிட்டு உள்ளே அழைத்து வந்தான்.

“என்ன ஆதி... பதட்டமா இருக்கீங்க”

“நான் அப்பவே சொன்னேன் இல்ல... இதெல்லாம் வேண்டாம்... பிரச்சனைன்னு... கேட்டியா?” அவன் பரபரப்பாய் சொல்ல,

“என்ன பிரச்சனை? எனக்கு புரியல” என்றாள்.

“உங்க அம்மா உன்கிட்ட உன் காதலுக்கு சம்மதிக்கிறேனு சொன்னதெல்லாம் பொய்... எலெக்ஷன் முடிஞ்சதும் என்னைப் போட்டுத் தள்றதுக்கு ப்ளான் பண்ணி இருக்காங்க... போச்சு... என் வாழ்க்கையே போச்சு... இதுக்காகவா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு அரசயலில் மேல வந்தேன்” என்றவன் வேதனையோடு சொல்ல அமிர்தா அதிர்ச்சி நீங்கமால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இல்ல... அவங்க என்கிட்ட”

“உன்கிட்ட அப்படிதான் சொல்லுவாங்க... ஆனா உடனே சம்மதிசாங்க பார்த்தியா... அங்கேயே நீ சந்தேகபட்டிருக்கணும்”

“அப்படியெல்லாம் இருக்காது... ஏதோ தப்பு... இல்ல... நானே அம்மாகிட்ட” என்றதும்,

“அதுக்கு இப்பவே ஒரு கத்தியை எடுத்து என்னைக் குத்திக் கொன்னுடு... அவங்க செய்றதுக்கு முன்னாடி நீயே அதை செஞ்சிடு” என்றவன் சொல்ல அவள் பதறி, “என்ன ஆதி... இப்படியெல்லாம் பேசுறீங்க... நான் உங்களை லவ் பண்றேன்னு தெரியுமா?” என்று கேட்டாள்.

“நீ உண்மையிலேயே என்னை லவ் பண்றேன்னா என்னை விட்டுடு ப்ளீஸ்...” என்றான்.

சில நொடிகள் அவள் தீவிரமாக யோசித்து கொண்டு நிற்க, விக்ரம் அதுதான் சந்தர்ப்பம் என்று அந்த அறையிலிருந்த ரகசிய கதவின் புறம் வந்து நின்றான். இன்னும் அந்த உடைந்த கண்ணாடிகள் சரி செய்யபடாதது அவனுக்கு நல்லதாய் போயிற்று. அந்த அறை கதவின் துவாரம் வழியாக அதனை ஊன்றி கவனித்தான்.

இம்முறை அந்தச் சிலையின் முழுத் தோற்றமும் தெள்ளத்தெளிவாய் அவனுக்குத் தெரிந்தது. அதற்குள் அமிர்தா அவன் அருகில் வரச் சட்டென்று அவன் சுதாரித்துக் கொண்டு அவள் புறம் தன் பார்வையைப் பதிக்க, “நான் ஒரு ஐடியா சொல்றேன்” என்றாள் அவள்.

அவன் என்னவென்று புரியாமல் பார்க்க, “நாம பப்ளிக்கா மேரேஜ் பண்ணிப்போம்... அப்போ அவங்களால ஒன்னும் பண்ண முடியாது... அவங்க அரசியல் பெயரைக் காப்பாற்றிக்கவாச்சும்... அவங்க ஒத்துகிட்டுதான் ஆகணும்”

“அப்படியே ஒத்துக்கிட்டாலும் என் பொண்டாட்டி என்னை உயிரோட விடமாட்டா... கன் எடுத்து என் நெற்றிப் பொட்டிலையே வைச்சுச் சுட்டுட்டுப் போயிட்டே இருப்பா... அப்புறம் நீ என் கழுத்தில மாலை போட முடியாது... மலர் வளையம்தான் வைக்கணும்”

அமிர்தாவின் முகத்தில் கோபமேற, “ஓ! அவ்வளவு தைரியமா அவளுக்கு” என்று கேட்க,

“பின்ன இல்லாம... நீ யாருன்னு தெரிஞ்சும் உன்னையே உள்ள வைக்கப் பார்த்தாளே... என்னைக் கொல்றது அவளுக்கு ஒரு மேட்டரா... அவளுக்கா அவ்வளவு தைரியமான்னு கேட்குற... மறந்துட்டியா... உன் கன்னத்தில அவ அடிச்ச அடியைக் கூடவா மறந்துட்ட” என்றதும் அவள் முகம் சிவந்தது.

“எதையும் நான் மறக்கல... அவளை இல்லாமலே பண்ணிட்டா நமக்கு தொல்லையே இல்லயில்ல” என்று அமிர்தா சொல்ல, விக்ரமின் விழிகள் ஒரு நொடி கோபத்தில் சிவந்து பின் இயல்பு நிலைக்கு மாறியது.

“நீ நினைக்குற மாறி எல்லாம் எதையும் உடனே செய்ய கூடாது... எலெக்ஷன் டைம்... கொஞ்சம் பொறுமையாதான் இருக்கணும்” என்றவன் சொல்லிக் கொண்டே, “ஸ்ஸ்ஸ் ஆ” என்று வலியால் தன் வலது கரத்தை உதறினான்.

“என்னாச்சு ஆதி?” என்றவள் பதற அவன் விரலில் இரத்தம் வடிந்தது.

“எப்படி?” என்றவள் பார்க்கும் போதுதான் அவன் அந்த உடைந்த கதவின் கண்ணாடியில் கரம் பதித்தது தெரிய வந்தது.

“கதவு கண்ணாடி உடைஞ்சிருக்கே... அங்கே ஏன் கையை வைச்சீங்க” என்றவள் கேட்கவும், “ஜஸ்ட் சும்மா ஒரு சப்போர்ட்க்காக” என்றான். அவன் தெரிந்தே அங்கே கை வைத்திருப்பான் என்று அவள் யுகித்திருக்கமாட்டாள்.

மருந்து பெட்டியை எடுத்து வந்தவளிடம் அப்போதுதான் அந்தச் சிலையைப் பார்த்தவன் போல, “இதென்ன பூஜை ரூமா... சாமி சிலை இருக்கு” என்று போட்டு வாங்க,

“அம்மாவுக்கு இந்த மாதிரி ஆன்டிக் கலக்ஷன் பண்றது ரொம்ப பிடிக்கும்... அப்பப்ப இந்த மாதிரி வாங்குவாங்க... ஃபிரென்ஸ்ல அம்மாவுக்கு சொந்தமான ஒரு ஆர்ட் கேலரி இருக்கு...” என்று சொல்லிக் கொண்டே அவன் விரல் காயத்திற்கு மருந்திட்டாள்.

“ஆர்ட் கேலரியா... அதுவும் ஃபிரான்ஸ்லயா?!!”

“இந்த விஷயம் யாருக்கும் தெரியாது... அம்மாவோட ஃப்ரெண்ட் எல்லாத்தையும் பார்த்துக்கிறாங்க... இந்த மாறியான கலக்ஷன் அங்கேதான் போகும்”

‘எங்க ஊர் கடவுள்... உங்களுக்கு கலக்ஷன்ஸாடி?’ என்று மனதில் அவளைத் திட்டியவன் தயங்கித் தயங்கி, “அந்தச் சிலையைக் கிட்ட போய் பார்க்கலாமா? நடராஜர் சிலைன்னா எங்க ஊர்ல அவ்வளவு மதிப்பு... சக்தி” என்று நடராஜர் சிலையின் சிறப்புகளைக் குறித்து அவன் விளக்க அவளுக்கே அதன் மீது ஆர்வம் பிறந்தது.

அதுதான் விக்ரம். பேசிப் பேசியே எதிரே இருப்பவரின் மனநிலையைத் தனக்கு சாதகமாய் மாற்றும் திறன் உடையவன்.

முதலில் அவள் பயந்து மறுத்தாலும் அவன் கேட்ட ஒரு காரணத்திற்காக அந்த அறைக் கதவின் சாவியை ஒளித்து மறைத்து எடுத்து வந்து அந்த அறைக் கதவைத் திறந்துவிட்டாள்.

உள்ளே சென்றதும் விக்ரம் அந்தச் சிலையைச் சுற்றும் முற்றும் பார்த்தவன் ரொம்பவும் பக்திமானாக கண்களை மூடி வணங்கிவிட்டு அதே வழிமுறையை அவளையும் பின்பற்ற சொன்னான்.

“நம்ம நினைச்சதெல்லாம் நடக்கும்... சக்தி வாய்ந்த கடவுள்... நீயும் கும்பிட்டுக்கோ” என்று சொல்ல அவளும் அவன் சொல்வது போலவே பின்பற்றினான். கடவளின் பெயரால் ஏமாற்றுவதுதானே இன்று உலகப் பிரசித்தமான டெக்னிக்!

அந்த டெக்னிக்கையே அவளிடம் உபயோகித்தான். அவளும் அவன் சொன்னதை அப்படியே நம்பி விழிமூடி பக்தியாக இறைவனை வேண்ட, அந்த சில விநாடிகள் அவன் நினைத்ததை செய்ய அவனுக்குப் போதுமானது.

தன் வேலையை முடித்த மாத்திரத்தில் அவன் புறப்பட தயாராக, அவளுக்குதான் அவனை அனுப்பி வைக்க மனமே இல்லை.

“நான் இங்க வந்ததுக்கே எனக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியல... இருந்தாலும் உனக்காகதான் வந்தேன்” என்று பொய் பொய்யாக அளந்தவன் வாசலில் சைரன் சத்தம் கேட்டு அப்படியே அதிர்ச்சியில் நின்றான்.

அதேநேரம் சம்யுக்தா வேக வேகமாக உள்ளே நுழைய விக்ரமிற்கு உள்ளே தடதடத்தது. சம்யுக்தாவிற்கு அவனைப் பார்த்ததும் அதிர்ச்சி. சில நொடிகள் அவனைப் புரியாமல் பார்த்து கொண்டே அவர் நிற்க, அந்த நேர இடைவெளி போதுமானது விக்ரமிற்கு. அவன் பின்னோடு வந்த அமிர்தா அஞ்சி நிற்க, அவளை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு தானே நிலைமையை சமாளிக்க முன்வந்தான்.

“உங்க கிட்ட ரொம்ப முக்கியமா பேசணும்... அதான் அமிர்தா மூலமா அபாய்ன்மன்ட் வாங்கி உங்க வீட்டிலேயே சந்திக்க வந்தேன்... ரொம்ப முக்கியமான விஷயம்” என்று அழுத்தி அதேநேரம் ரகசியமாய் சொல்ல, அப்படி என்ன சொல்லப் போகிறான் என்ற எண்ணத்தோடு அவனை தன் அலுவலக அறைக்குள் அழைத்து சென்றார்.

சம்யுக்தா கைக்கட்டி கொண்டு அவனை ஆழ்ந்து ஒரு பார்த்து என்னவென்று கேட்க உள்ளுக்குள் பயஉணர்வு பற்றிக் கொண்டது. இருந்தாலும் அவன் திடமாய் நின்று, “அது... ஆளுங்கட்சியும் அந்த தே கு கா கட்சியும் சேர்ந்து உங்களைப் பெரிசா மாட்டி விட ப்ளான் பண்றாங்க” என்றான்.

“என்னையா... அவனுங்களா?” என்று அலட்சியமாய் அதேநேரம் கர்வமாய் அவர் சிரிக்க,

“ஆமா மாதாஜி... எங்க ஊர்ல இருக்க கோவில் சிலை எல்லாம் உங்க ஆட்சியில்தான் திருடுப் போயிருக்காம்... அதுக்கு நீங்களும் உடந்தைன்னு” என்று அவன் சொல்ல சம்யுக்தாவின் முகம் மாறியது.

சிரமப்பட்டு தன் எண்ணத்தை மறைத்துக் கொண்டவர், “இந்த மாதிரி பொய்யான ஏதாவது ஒரு விஷயத்தைப் பரப்பிட்டுதான் இருப்பாங்க... அதுக்கெல்லாம் பயப்பட முடியுமா? ஒரு அரசியல் தலைவன் மேல எவ்வளவு பெரிய ஊழல் நிரூபணமே ஆனா கூட இந்த மக்கள் ஓட்டுப் போடுவாங்க... அவங்களுக்கு வேற ஆப்ஷனே இல்ல” என்று மீண்டும் அவர் அலட்சியமாய் பதில் சொல்ல,

“கரெக்ட்தான் மாதாஜி... ஆனா எலெக்ஷன் நேரத்துல இப்படி ஒரு வதந்தி பரவினா நமக்கு அது பெரிய பின்னடைவு” என்றான்.

அவன் சொன்னதில் ஆழ்ந்த உண்மை இருக்குமோ என்ற எண்ணம் மனதில் தோன்ற ஒரு வேளை இந்தப் பதவி போய்விட்டால் என்று மனதில் ஓர் எண்ணம் எழுந்தது. விக்ரமை அனுப்பிவிட்டு அடுத்த நொடியே தன் செகரட்ரியை அழைத்து சில முக்கியமான ஏற்பாடுகளை மேற்கொள்ள சொன்னார்.

எப்படியாவது அந்தச் சிலையை ஃபிரான்ஸ் கொண்டு சேர்க்க முடிவெடுத்தார். பதவி போய்விட்டால் பின் இந்தச் சலுகைப் போய்விடுமே!

இங்கே சம்யுக்தா தீட்டிய திட்டத்திற்கு எதிர்மறையாய் ஒரு திட்டத்தை வகுத்தார் சைத்தன்யா. அவரின் விசுவாசிகளாக முக்கியப் பதவியில் அமர்த்தியிருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் மூலமாக தன் திட்டத்தைச் செயல்படுத்த பணித்தவர், அடுத்த நாள் நியூயார்க் பறந்துவிட விமான நிலையம் வந்தார்.

அங்கேயே தமிழச்சி குழு அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தது. சைத்தன்யா இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

சட்டத்தையும் மக்களையும் இந்த உலகையும் கூட ஒருவன் ஏமாற்றலாம். ஆனால் அவனவன் விதைத்ததை அதற்கான காலம் வரும் போது அவனவன் அறுவடை செய்தே ஆக வேண்டும்.

You cannot copy content