You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Irumunaikathi - Episode 6

Quote

6

இவான் ஸ்மித்

“உனக்கு எதுவும் ஆகாது தமிழ்... உன் மனோதிடத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்ல... நீ மீண்டு வருவ... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்று ஆதி தன் தோழியின் கரத்தைப் பற்றி அழுத்தமாக உரைத்தாள்.

டாக்டர் கொடுத்தக் கெடு முடிவடைந்த நிலையில் செந்தமிழை மீண்டும் மருத்துவர்கள் சோதித்துப் பார்த்துவிட்டு, “அவங்க இப்போ கோமா ஸ்டேஜுக்குப் போயிட்டாங்க... எப்போ ரிகவர் ஆவாங்கன்னு சொல்றது கஷ்டம்” என்று சொல்ல அதனைக் கேட்ட எல்லோருக்குமே பேரதிர்ச்சி!

சிகிச்சை அறையில் தமிழைப் பார்த்தவிட்டு திரும்பிய ஆதியும் விஷ்வாவும் வீரேந்திரனுக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருந்தனர். அதேநேரம் விக்ரம் அறைக்குள் சென்று சுயநினைவு இழந்த நிலையிலிருந்த செந்தமிழின் கரத்தைப் பிடித்துக் கொண்டு,

“உங்களுக்கு எதுவும் ஆகாது ஆண்ட்டி... அம்மா சொன்ன மாதிரி நீங்க சீக்கிரமே க்யூர் ஆயிடுவீங்க... எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு” என்றான்.

இதை அறைவாசலில் நின்றிருந்த தமிழச்சி கவனிக்க, விக்ரம் அவளைப் பார்த்த மறுகணமே அவளைக் கவனியாதவன் போல அறையை விட்டு வெளியேறிவிட்டான். அவளைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விட அவளிடம் தான் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வே அவனிடத்தில் மேலோங்கி இருந்ததை அவள் பார்வை ஒருவாறு குறித்துக் கொண்டது.

அப்போது ஆதி வீரிடம், “நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க... உங்கப் பொண்டாட்டியால ரொம்ப நாளைக்கு இப்படி படுத்திருக்க முடியாது... அதுவும் உங்க கூட சண்டைப் போடாம அவளால இருக்கவே முடியாது” என்றார். இதைக் கேட்டு வீரின் முகத்தில மெல்லிய கோடாய் புன்னகை அரும்பியது.

இறுதியாய் ஆதியும் விஷ்வாவும் வீரிடம் விடைபெற்றுக் கொண்டு மருத்துவமனையில் இருந்து புறப்பட, விக்ரமும் அவர்களோடு கிளம்பினான்.

அப்போது வீர், “விக்ரம்” என்றழைக்க அவனுக்கு கிலிப் பற்றிக்கொண்டது. இயல்பாகவே வீரைக் கண்டால் அவனுக்குக் கொஞ்சம் பயம்தான். ஆதலாலேயே அவரிடம் அவன் அதிகமாகப் பேச்சு வைத்துக் கொள்ளமாட்டான்.

வீரேந்திரனும் விக்ரமோடு அதிகம் பேச முற்பட்டதில்லை. இப்போது அவர் அழைக்கவும், அவனுக்கு உள்ளுர நடுக்கம் உண்டானாலும் அதனைக் காட்டிக் கொள்ளாமல், “சொல்லுங்க அங்கிள்!” என்று கேட்டான்.

“சிம்மா இப்போ எங்க இருக்கான்?” என்று அவர் கேட்க விக்ரமின் மனம் லேசாய் தடதடத்தது. ‘தெரியுமா?’ என்று கேட்காமல் அவர் நேரடியாய் எங்கே என்று வினவியதை வைத்தே அவர் தனக்கு சிம்மா இருக்கும் இடம் தெரிந்திருக்க கூடும் என்பதைக் கணித்துவிட்டார் என்பது அவனுக்குப் புரிந்து போனது.

இருந்தாலும் நண்பனிடம் கொடுத்த வாக்கை எப்படி மீறுவது.

“சாரி அங்கிள்! எனக்குத் தெரியாது... அப்படி தெரிஞ்சா நானே உங்ககிட்ட சொல்றேன்” என்றவன் மேலே அந்தப் பேச்சை வளர்க்காமல், “நான் கிளம்பறேன் அங்கிள்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விரைந்தான்.

வீரேந்திரனுக்கு விக்ரம் பொய்தான் சொல்கிறான் என்பது தெள்ளத்தெளிவாய் தெரிந்தாலும் அவன் ஏன் அப்படிச் சொல்கிறான் என்ற கேள்வியும்... அம்மா இந்த நிலையில் இருப்பது தெரிந்தும் சிம்மா ஏன் வரவில்லை என்பதும்தான் அவரை நம்பமுடியாத அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

*

தமிழ்நாட்டில் இயங்கும் சுதந்திர பாரத் கட்சி அலுவலகம்! தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு மனோகரன் அறை...

இருக்கையில் அமர்ந்திருந்த மனோகரனின் முகம் கடுகடுத்துக் கொண்டிருந்தது. கட்சிக் கூட்டம் நடந்த அன்றே மனோகரன் விக்ரமை சந்தித்துப் பேச அழைத்திருக்க, அவனோ சாவகாசமாய் இரண்டு நாள் கழித்து வந்து சந்திக்க வந்திருந்தான். ஏற்கனவே அவனுக்கு சீட் கொடுத்ததில் அவருக்கு உடன்பாடில்லை.

அதோடு இந்த அவமதிப்பு வேறு... இந்த எல்லாக் காரணங்களையும் மனதில் கொண்டு அவர் விக்ரமிடம் எரிமலை கணக்காய் கொதித்துக் கொண்டிருந்தார்.

போதாகுறைக்கு மனோகரனின் அல்லக்கை நொள்ளக்கை மற்றும் எல்லா கையுமாக இருக்கும் தாமு விக்ரமை நிற்க வைத்து கோபமாய் கடிந்து கொண்டிருந்தான். ஆனால் விக்ரமோ தாமுவின் வசைகளுக்கு சிறு சலனம் கூட இல்லாமல் சிரித்த முகமாகவே நின்றிருந்தான். எல்லாம் சிறு வயதிலிருந்து அவன் அம்மா ஆதி கொடுத்த ட்ரெயினிங்தான்.

விக்ரமின் இந்த அலட்சியமான நடவடிக்கையைப் பார்த்து மனோகரனுக்கு தாறுமாறாய் பிபி ஏற, அவர் அதனைச் சீராக்க மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொண்டார்.

விக்ரம் உடனே, “நீங்க இப்படி சத்தமா பேசுனதாலதான் ஐயாவுக்கு பிபி ஏறிடுச்சு... இப்படியே போனா ஐயா சி.எம் ஆகறதுக்கு முன்னாடி சீக்கிரம் மேல போயிடுவாரு... அதனால இனிமே ஐயா பக்கத்தில வால்யுமை கொஞ்சம் குறைச்சு பேசுங்க ண்ணே!” என்று தனக்கே உரிய நக்கல் பாணியில் தாமுவுக்கு அறிவுரை சொல்ல,

“டே!” என்று தாமு கத்த ஆரம்பிக்க, “சும்மா இரேன் டா... அவன்தான் எதுக்கும் மசிய மாட்டேங்குறான் இல்ல” என்று அவனை அடக்கினார் மனோகரன்!

தாமு அதிர்ந்து போனான். விட்டால் தனக்கும், இல்லாத இரத்தக் கொதிப்பை இவன் வரவழைத்துவிடுவான் போலவே!

விக்ரம் அப்போதும் எதுவுமே நடக்காதவன் போல, “அப்போ நான் கிளம்பட்டுமா ஐயா?” என்று படு பவ்யமாகக் கேட்க,

அவனைக் கோபமாய் முறைத்தவர், “என்ன தம்பி! மேலிடத்துல இருந்து சிபாரிசு சீட்டு வாங்கிட்டோம்ங்குற திமிரா? இத பாரு... டெல்லில உனக்கு பெருசா சப்போர்ட் இருக்கலாம்... ஆனா இங்க எல்லாம் நான்தான்... என் ஆதரவு இல்லாம நீ இங்க ஒரு ஆணியும் புடுங்க முடியாது” என்றார்.

“ஆணிய புடுங்க கூட உங்க ஆதரவு வேணும்ங்களா ஐயா!” என்று விக்ரம் அதே பவ்யத்தோடு வினவ, “என்னடா திமிரா?!” என்று மனோகரன் சத்தமிட,

“ஐயா! கத்தாதீங்க... திரும்பியும் பிபி எகிறிடப் போகுது... அப்புறம் பிரச்சாரத்துக்குப் போற நேரத்துல ஹாஸ்பிடல்ல போய் படுத்திற போறீங்க” என்றான்.

“அடிங்க ஓவரா பேசற... உன்னை நேரடியா மார்ச்சுவரிக்கு அனுப்பிடுவேன் பாத்துக்கோ” என்று தாமு கொதிப்போடு மிரட்ட விக்ரம் தன் புன்னகை மாறாமல், “டென்ஷன் ஆகாதீங்க ண்ணா... ஒரு முக்கியமான விஷயம் ஐயா கிட்ட சொல்லிடறேன்... அப்புறம் யார் எங்க போறதுன்னு முடிவு பண்ணிக்கலாம்” என்றான்.

மனோகரன் உடனே தாமுவைக் கையமர்த்திவிட்டு, “என்ன விஷயம்?” என்று விக்ரமைப் பார்த்துக் கேட்க,

“இல்லங்க ஐயா! போன தடவை ஓட்டுக்கு தலைக்கு இரண்டாயிரம் குடுத்ததா தலைமையில சொல்லிட்டுக் கட்சி நிதில பாதியை உங்க பாக்கெட்ல போட்டுட்ட்ட்... டீங்கன்னு” என்று அவன் இழுத்தபடி சொல்ல அவர் அதிர்ந்து நின்றார்.

“ஐயோ! இது என் சந்தேகம் இல்லைங்கய்யா... மேல மாதாஜிக்க்க்க்க்கு” என்றதும் அவர் ஆணிவேரே ஆடியது.

“என்னடா போட்டு வாங்குறியா?” என்றவர் முறைப்பாய் அவன் சட்டையைப் பிடிக்க, “ஐயா! பிபி ஏறிடுச்சுன்னா பிரச்சாரத்துக்குப் போக முடியாது” என்றதும் அவர் முகம் மேலும் கடுகடுக்க,

“சும்மா கண்டமேனிக்கு யோசிக்காதீங்க... நான் ஒன்னும் மாதாஜிகிட்ட போட்டுக் கொடுக்கல... உங்கப் பக்கத்துல இருக்க எவனோதான் போட்டுக் கொடுத்திருக்கான்... இந்தத் தடவை எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க” என்றவன் எச்சரிக்கை தொனியில் குரலைத் தாழ்த்திச் சொல்ல, அவருக்குக் கதிகலங்கிப் போனது.

அதுவுமில்லாமல் விக்ரமுக்கு டெல்லிவரை பவர் இருக்கிறது என்பதை அவர் ஏற்கனவே அறிந்து கொண்டார். ஆதலால் இப்போது அவன் சொல்லும் விஷயத்தை அவரால் அசட்டையாய் விட முடியவில்லை. அவன் சொன்னது உண்மையானாலும் பொய்யானாலும் அது ஏதோ ஒரு வகையில் அவருக்கு ஆபத்துதான். ஆதலால் ஆழமாய் சிந்தித்தவர் விக்ரமை அருகில் அழைத்து, “நீ வீட்டுக்கு வா தம்பி... எல்லாம் விவரமா பேசிக்கலாம்” என்றார். இதற்குப் பெயர்தான் அரசியல் சாணக்கியத்தனம்.

விக்ரம் சூசகமாய் சிரித்து தலையசைத்ததோடு அல்லாமல் தாமுவைப் பார்த்து வேண்டுமென்றே நக்கலாகச் சிரித்துவிட்டுச் செல்ல... அவனுக்குக் கோபம் ஏகபோகமாய் ஏறியது.

அரசியல் சூட்சுமம் எல்லாம் விக்ரமுக்குத் தண்ணிபட்ட பாடு. ஆனால் வீட்டையும் மனைவியும் சமாளிப்பதுதான் அவனுக்கு பெரும்பாடு. அப்படியாக அவனுக்கு அந்த நொடி வீட்டில் ஒரு சர்வதேச பிரச்சனை காத்திருந்தது.

அவன் வீட்டிற்குள் நுழைய அப்போது ஓர் அயல்நாட்டினன் அவன் பெற்றோரிடம் ரொம்பவும் தெரிந்தவன் போல பேசிக் கொண்டிருந்தான்.

‘யாராக இருக்கும்?’ என்ற குழப்பத்தோடு விக்ரம் அவன் முன்னே வந்து நின்றான்.

விக்ரமுக்கு அவன் நண்பன் சொன்னது மறந்திருக்கலாம். ஆனால் வாசகர்கள் மறந்திருக்க முடியாது. அவன்தான் தஞ்சைப் பெரிய கோவிலில் நாம் சந்தித்த வெளிநாட்டு நண்பன் இவான் ஸ்மித்!

விக்ரம் அவனைக் கூர்ந்து பார்த்து, ‘யாரிந்த ஒயிட் ஒட்டகம்... ஓவரா வளர்ந்திருக்கான்... ஒருவேளை அம்மாவைப் பார்க்க வந்திருப்பானோ?!’ என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே இவான் விக்ரமை ரொம்பவும் தெரிந்தவன் போல அவனைக் கட்டியணைத்துக் கொண்டு,

“ஹாய் விக்கி!” என்றான். அவனுக்கும் ஒன்றுமே விளங்கவில்லை. அதிர்ச்சியில் சில நொடிகள் அப்படியே நின்றவன் அவன் விக்கி என்றழைத்த விதத்தை வைத்தே அவன்தான் சிம்மா அனுப்பிய ஆள் என்று அறிந்து கொண்டான்.

ஆனால் அவன் பெயரென்ன என்று விக்ரம் மூளையைக் கசக்கி யோசிக்க... அப்போது ஆதி இவானிடம் ஆங்கிலத்தில், “நீ விக்ரமோடவே அவன் ரூம்ல தங்கிக்க இவான்... ஒன்னும் பிரச்சனையில்ல” என்றார்.

விக்ரமிற்கு நடப்பதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியாகதான் இருந்தது.

‘இந்த இவான் நமக்கு மேல ஜகஜால கில்லாடியா இருப்பான் போல... அம்மாகிட்டேயே அப்ரூவல் வாங்கிட்டான்’ என்று அவன் மைன்ட் வாய்சில் நின்ற இடத்தில் அப்படியே யோசித்துக் கொண்டிருக்கும் போதே இவான் அவன் அறைக்குள் ஐக்கியம் ஆகிவிட சென்றுவிட்டான்.

விக்ரம் அதை உணர்ந்து அறைக்குள் விரையவும், இவான் அந்த அறையை அளவெடுத்தப்படி பார்த்துக் கொண்டிருந்தான்.

“மிஸ்டர் ஸ்மித்” என்று விக்ரம் அழைக்க,

“கால் மீ இவான்!” என்றான்.

“டூ யூ ஸ்பீக் தமிழ்?” என்று விக்ரம் கேட்க,

“நோ” என்றவன் விக்ரமின் புறம் திரும்பி, “யூ வில் ஸ்பீக் இங்கிலீஷ்... ரைட்” என்று அவன் தன் கேள்வியைச் சொல்லி தானே பதிலுரைத்தும் கொண்டான்.

விக்ரமுக்கு ஏனோ அவனை உடன் தங்க வைத்துக் கொள்ள துளியும் விருப்பமில்லை. இருப்பினும் தன் உயிர் நண்பன் சிம்மா சொன்ன வார்த்தைக்கு அவனால் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை. இன்னொரு புறம் இவானுக்கும் சிம்மாவுக்கும் எப்படி தொடர்பு என்று யோசித்தவன்,

“ஃபார் வாட் பர்பஸ் யூ வான்ட் டூ ஸ்டே இன் சென்னை? (என்ன காரணத்திற்காக நீ சென்னையில் தங்க இருக்கிறாய்?)” என்று அவன் வினவ, இவான் அவன் கேள்விக்குத் தொடர்ச்சியாய் ஆங்கிலத்தில் பதிலளித்தான். (இவான் பேசும் நீண்ட வசனங்கள் மற்றும் முக்கியமான வசனங்கள் புரிதலுக்காக வேண்டி தமிழில் கொடுக்கப்படும்) அவன் சொன்னதாவது,

“நான் தமிழர்களோட கோவில்களையும் அதோட தொன்மையான வரலாற்றையும் சிற்பக்கலையையும் ஆராய்ச்சி செஞ்சு எங்க மொழியில் ஒரு புத்தகம் எழுதலாம்னு வந்திருக்கேன்” என்க,

விக்ரமுக்கு இப்போது புரிந்தது. எப்படி தன் அம்மாவிற்கு இவானைப் பிடித்திருக்கக்கூடும் என்று!

விக்ரம் சிந்தனையில் இருக்கும் போதே இவான் தன் உரையைத் தொடர்ந்தான், “எனக்கு இன்னும் ஒரு ஆசை... அழகான ஒரு தமிழ் பெண்ணாகப் பார்த்து திருமணம் பண்ணிக்கணும்”

விக்ரம் புருவங்கள் நெறிய அவனைப் பார்க்கும் போதே இவான் அடுத்தப் படிநிலைக்கு போய், “விக்கி... டூ யூ ஹவ் சிஸ்டர்ஸ்?” என்று கேட்டு வைக்க,

‘அடப்பாவி! அடி மடியில கை வைக்கிறானே’ என்று கடுப்பான விக்ரம்,

“நோ சிஸ்டர்ஸ்... ஒன்லி மதர் அன் ஃபாதர்” என்றவன், “என் ஒருத்தனை வைச்சு சமாளிக்கவே அவங்களால முடியலயாம்... இதுல அடிஷ்னல் வேற” என்று முனகினான்.

இவானின் விழிகள் அப்போது அந்த அறையிலிருந்த தமிழச்சியின் புகைப்படத்தின் மீது நிலைக்கொண்டுவிட, விக்ரமிற்குப் பகீரென்றது.

“ஐ ஹவ் சீன் திஸ் கேர்ள் சம்வேர்” என்று இவான் சொல்லிவிட்டு யோசிக்க,

“நோ சான்ஸ்... ஷி இஸ் மை வொய்ஃப் தமிழச்சி” என்றான் அழுத்தமாக!

“ஓ ரைட்! சிம்மாஸ் சிஸ்டர்” என்று இவான் குதூகலமாய் கேட்க, எல்லாம் தெரிந்துதான் இவன் கேட்கிறானா என்றவன் அவனை ஏறயிறங்கப் பார்த்தபடி, சிம்மாவின் தங்கைதான் தன்னுடைய மனைவி என்று அழுத்தம் திருத்தமாய் அவனுக்கு அப்போது தெரிவித்தான்.

“ஐ நோ... நீங்க ரெண்டு பேரும் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்க்ல இப்போ பிரிஞ்சிருக்கிறீங்க... அதுவும் எனக்குத் தெரியும்” என்ற இவான் மேலும், “டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டீங்களா?” என்று தடாலடியாய் அடுத்த கேள்வியைக் கேட்க விக்ரம் அப்படியே ஆடிப் போய்விட்டான்.

பின் ஒருவாறு தன்னிலை மீட்டுக் கொண்டவன், “தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்” என்று கூறி நீ வந்த வேலையை மட்டும் பாரு என்று காரசாரமாய் சொல்லிவிட்டு அகன்றான்.

இவான் அப்போதும் தன் புன்னகை மாறாமல் நின்றான். விக்ரமுக்குத் தெரியாது. அவன் வந்த வேலையே தமிழச்சியை சந்திக்க வேண்டும் என்பதற்காகதான்.

விக்ரம் அங்கிருந்த அவளின் ஒரு புகைப்படத்தை மறைத்து வைத்துவிட்டான். எனினும் அவன் அந்த அறை முழுக்கவும் அவளின் வெவ்வேறு வயதுடைய புகைப்படங்களால் நிறைத்திருக்கிறான் என்பதை கவனிக்க மறந்தான். அதெல்லாம் இவானின் பார்வையில் எப்போதோ அகப்பட்டுவிட்டது. அதோடு அவர்களின் திருமண புகைப்படமும் இவானின் கூரிய விழிகளிலிருந்து தப்பவில்லை.

கொஞ்ச நேரம் அந்தப் புகைப்படங்களைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தவன் பின் தன் பேகை திறந்து ஒரு துண்டையும் ஷார்ட்சையும் எடுத்துக்கொண்டு அந்த அறையுடன் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

சரியாய் அந்தச் சமயம் தெருமுனையில் தன் காரில் காத்திருந்த தமிழச்சி, விக்ரம் வெளியேறுவதைப் பார்த்துவிட்டு அதிரடியாய் உள்ளே நுழைந்தாள்.

அவளின் வலது கைத் தோளோடு ஒரு பெல்டால் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்க, அந்தக் காயமெல்லாம் அப்போது அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. வீட்டின் முகப்பறையில் யாரும் இல்லை என்பதைக் கண்டவள் அதனால் ஒன்றும் பாதகம் இல்லை என்று எண்ணி விரைவாய் தன் கணவன் அறைக்குள் நுழைந்தாள். அவள் அவசரமாய் எதையோ தேடிக் கொண்டிருக்க, அப்போது மேஜை மீதிருந்த ஒரு கைப்பேசி அவள் கண்ணில் பட்டது.

‘இது யாரோட ஃபோன்... ரொம்ப காஸ்ட்லி மாடலா இருக்கு... இது விக்ரம் வைச்சிருக்க பிரான்ட் இல்லையே... ஃபிராடு... சீக்ரட்டா பேச இன்னொரு ஃபோன் வைச்சிருக்கான் போல... அண்ணா கிட்ட இதுல இருந்துதான் பேசுவானோ!’ என்ற எண்ணத்தோடு அந்தப் பேசியைக் கையிலெடுத்து அவள் இயக்க, தஞ்சை இராஜ கோபுரம் மிளிர்ந்தது அதன் திரையில்!

அதனை அதிசயித்துப் பார்த்தவளுக்கு அந்தப் பேசியை மேலும் இயக்க முடியவில்லை. அது தன் உரிமையாளனின் கைரேகை இல்லாமல் வேலை செய்ய மாட்டேன் என்று அடம்பிடிக்க,

அவள் உடனடியாக அந்தப் பேசியின் பின் உரையைப் பிரித்து அதன் சிம் கார்டை எடுக்க முயன்று கொண்டிருக்கும் போது குளியலறைக் கதவு திறக்கப்பட்டது.

‘விக்ரம்தான் வெளியே போயிட்டானே... இது யாரு?!’ என்று யோசனையுடன் அவள் திரும்ப இவான் குளித்து முடித்துவிட்டு துண்டால் தலையைத் துவட்டிக் கொண்டே வந்தான்.

இவான் அவளைப் பார்த்த அதே சமயத்தில்... இவளும் அவனைப் பார்த்தாள். வித்தியாசமான அந்த இருவிழிகளும் ஒன்றோடு ஒன்று முதல்முறையாய் சந்தித்துக் கொண்டன.

You cannot copy content