You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

IrumunaiKathi - Episode 7

Quote

7

 

கற்சிற்பங்கள்

“யாருடா இந்த வெள்ளைக்காரன்?” என்று யோசித்தவள், “நம்ம ஏதாச்சும் வீடு கீடு மாறி வந்துட்டோமோ?” என்று அவள் குழப்பமாய் அந்த அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள். அந்த சிலநொடி தாமதத்தில் இவான் அவளை நெருங்கி வந்திருந்தான்.

அவள் துணுக்குற்று விலகிச் செல்லும் முன் அவன் கரம் அவளின் முகத்திலிருந்த காயங்கள் மீது தடவிய அதே சமயம், அவள் வலது கையிலிருந்த கட்டையும் பார்த்து, “வாட் ஹேப்பண்ட் டார்லிங்?” என்று பரிவோடும் கனிவோடும் விசாரிக்க, அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

அவன் கரத்தைத் தட்டிவிட்டுப் பின்னோடு வந்தவள், “ஹூ ஆர் யூ மிஸ்டர்?” என்று சற்றே காட்டமாய் கேட்க, அவன் கவனம் அவள் காயத்தின் மீதே நிலைகொண்டிருந்தது. அவன் மனமெல்லாம் அவளுக்கு எப்படி இந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கியது.

தமிழச்சி அவன் சிந்தனையைக் கலைக்கும் விதமாய் சொடக்கிட்டு, “ஹலோ மிஸ்டர்... அன்சர் மீ... ஹூ ஆர் யூ?” என்று அதிகாரமாய் கேட்க, அவன் பார்வை அந்த நிலையிலுமான அவளின் கம்பீரத்தைக் கண்டு ரசிக்கலானது.

அவளைப் பார்த்த மாத்திரத்தில் இவானின் விழிகள் அவளை அடையாளம் கண்டுகொண்டன. சற்று முன்தான் அவளை ஆசைதீர நிழற்படமாய் ரசித்தான். அவளே இப்போது உயிரும் உருவமுமாய் தன் கண்முன்னே நிற்க, அவனுக்குள் தளும்பிய உணர்வுகளுக்கு வார்த்தைகள் இல்லை. எந்த மொழி நாடு கலாச்சாரமாய் இருந்தாலும் உள்ளத்தின் உணர்வுகளில் மாறுபாடுகள் இல்லை அல்லவா?

அவனின் அந்த மௌனம் அவளுக்குக் கோபத்தை மூட்ட, “கான்ட் யு ஹியர் மீ? ஆர் யு டெஃப்? ஒய் ஆர் யூ ஸ்டேயிங் இன் விக்ரம்ஸ் ரூம்... ஹூ ஆர் யூ டு விக்ரம்?” (நான் கேட்கறது உங்க காதுல விழல... உங்களுக்கு என்ன காது கேட்காதா... எதுக்கு நீங்க விக்ரம் ரூம்ல தங்கியிருக்கீங்க... நீங்க யாரு விக்ரமுக்கு?) என்று அவள் அடுக்கடுக்காய் அவனிடம் கேள்விகளைத் தொடுக்க,

“ஃப்ர்ஸ்ட் ஹூ ஆர் யு டு விக்ரம்?” (நீ யாரு விக்ரமுக்கு?) என்று அதே கேள்வியை அவளிடம் திருப்பி வினவினான். அவள் முகம் இருளடர்ந்து போனது.

அதற்குப் பிறகு அவன் வரிசையாய் ஆங்கிலத்தில், “ஆமா யாரைக் கேட்டு நீ உள்ள நுழைஞ்ச?” என்றவன் அந்த நொடிதான் அவள் கையிலிருந்த தன் கைபேசியைக் கவனித்தான்.

பின் அவன் மேலும் அதிர்ச்சியாகி, “ஆமா! யாரோட அனுமதியோட நீ என் செல்போனைக் கையிலெடுத்த? அதை ஓபன் பண்ண வேற ட்ரை பண்ணியிருக்க” என்று கேட்க,

‘ச்சே! இது இவனோடதா... இப்படி பல்பு வாங்கிட்டியே தமிழச்சி’ என்று அவள் தன் தவறை உணர்ந்து அவன் பேசியை நீட்டினாள். தான் வாங்கிய பல்பை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அதே கெத்தோடு!

அவன் மெல்லிய புன்னகையோடு, “(ஆங்கிலத்தில்) இன்னும் நீ என் கேள்விக்குப் பதில் சொல்லல... நீ யாரு விக்ரமுக்கு?” என்று கேட்கவும் அவளுக்கு கோபம் சரசரவென ஏற அவனுக்கு உடனடியாக பதில் கொடுக்க எண்ணி,

“நான் விக்ரமோட...” என்று அவள் தன் வாக்கியத்தை முடிப்பதற்கு முன்னதாக அவன் குறிக்கிட்டு, “யா யா... நவ் ஐ காட் இட்... யு ஆர் எக்ஸ்-வொய்ஃப் ஆஃப் விக்ரம் ரைட்?” என்று கேட்டான்.

அந்த வார்த்தையைக் கேட்டதுமே அவளின் கோபம் சரசரவென இறங்கி சொல்லவொண்ணா வேதனை பெருகியது.

“எக்ஸ்-வொய்ஃப்” என்று தானே சொல்லிக் கொண்டவளுக்கு உயிரின் ஆழம் வரை வலித்தது. கண்ணீர் அவள் விழிகளை நிரப்பியது.

‘அதுக்குள்ள நான் உனக்கு எக்ஸ்-வொய்ஃப் ஆகிட்டேனா விக்ரம்?!’ என்று எண்ணிக் கொண்டு அவள் கோபமாய் அந்த அறையை விட்டுத் திரும்பி நடந்தாள்.

அப்போது அறை வாயிலை நோக்கி வந்த விக்ரம் தமிழச்சியை அங்கே எதிர்பார்க்கவில்லை. கோபம் இருந்தாலும் அந்த நொடி அவனுக்குள் காதல் ஊற்றுப் பெருகியது. ஆனால் அந்த சந்தோஷத்தை அவள் ஒரு நொடியில் உடைத்தாள்.

“ச்சே!” என்று அவனை அருவருக்கத்தக்க பார்வை பார்த்துவிட்டு போக விக்ரமுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அப்போது அவள் பின்னோடு அரைகுறை ஆடையோடு நின்றிருந்த இவானைப் பார்த்து அதிர்ந்து, “இவன் என்ன இப்படி நிற்கிறான்... ச்சே! இந்த மூளை ஏன் கண்டமேனிக்கு யோசிக்குது” என்று தன் எண்ணங்களுக்கு கடிவாளமிட்டவன், இவானைக் கோபமாய் முறைத்துவிட்டு தன் மனைவி பின்னோடு விரைந்தான்.

விக்ரம் அவள் கரத்தைப் பற்றவும், “என் கையை விடுறா பொறுக்கி ராஸ்கல்” என்று அவள் ஆவேசமாக அவன் பிடியை உதறினாள்.

அவள் விழியிலிருந்த நீரைப் பார்த்தவன், “என்னடி ஆச்சு?” என்று இறங்கிய குரலில் கேட்க,

“நொன்னடி ஆச்சு... யாருடா அந்த வெள்ளைக்காரன்?” என்று விசாரிக்க,

“ஃப்ரெண்டு” என்று விக்ரம் தயக்கத்தோடு கூற அவள் அவனை நம்பாத பார்வை பார்த்து, “ஃப்ரெண்டு... அதுவும் வெளிநாட்டுக்காரன்... என்ன? என் காதுல பூச்சுத்துறியா?” என்றவள் வினவ அவனுக்கு ஷாக்கடித்தது போல் இருந்தது.

அதற்குள்ளாக அவள் யோசித்துவிட்டு, “உண்மையைச் சொல்லு... உன் மாதாஜி அனுப்பின ஆளா இவன்” என்று கேட்டுவிட அவன் தலையிலடித்துக் கொண்டான்.

‘உன் பாசமலர் அனுப்பின ஆளு’ என்று உதடு வரை வந்த வார்த்தையைச் சொல்லாமல், “உன்னை யாருடி இங்க வரச் சொன்னது?” என்று கேட்டான்.

“நான் ஒன்னும் உன் மூஞ்சிய பார்க்க வரல... ஆண்ட்டியையும் அங்கிளையும் பார்க்கத்தான் வந்தேன்... ஹ்ம்... உனக்கு வேணா நான் இப்போ எக்ஸ்- வொய்ஃப் ஆகியிருக்கலாம்... ஆனா அவங்களுக்கு நான் எப்பவும் மகதான்” என்றவள் அழுத்தமாய் உரைக்க விக்ரம் அதிர்ந்தான்.

“எக்ஸ்- வொய்ஃபா?” என்றவன் கேட்டபடி ஸ்தம்பித்து நிற்க, அவள் முன்னேறி நடந்து செல்ல அப்போது அவர்களின் பேச்சுக் குரல் கேட்டுப் பதறிக் கொண்டு ஓடி வந்த விஷ்வாவும் ஆதியும் அவள் கோபித்துக் கொண்டு செல்வதைப் பார்த்து, “தமிழச்சி” என்றழைக்க,

“சாரி ஆண்ட்டி... நான் அப்புறம் வரேன்” என்று திரும்பிப் பாராமலே உரைத்தாள்.

விக்ரம் கோபமாக, “வராதே... அப்படியே போயிரு” என்றான்.

அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள், “வர மாட்டேன்... வரவே மாட்டேன்” என்க, “அதேதான் நானும் சொல்றேன் போடி” என்றவன் கொந்தளிப்போடு, “எக்ஸ்-வொய்ஃபாமே... எக்ஸ்-வொய்ஃப்” என்று புலம்பிக் கொண்டான்.

அவன் திரும்பி வேகமாய் வீட்டிற்குள் நுழைய ஆதி அவன் பின்னோடு வந்து, “என்னடா நினைச்சுகிட்டிருக்க உன் மனசுல... வீட்டுக்கு வந்தப் பொண்ணுகிட்ட இப்படியா நடந்துப்பாங்க” என்று கேட்டார்.

விஷ்வாவும் தன் பங்குக்கு, “நீ செஞ்சது ரொம்ப பெரிய தப்பு விக்ரம்” என்று சொல்ல,

“ஆமா... உங்களுக்கு உங்க மருமக பண்றதுதான் சரி... நான் எது செஞ்சாலும் தப்புதான்... என் ஃபீலிங்ஸுக்கு இந்த வீட்ல மதிப்பே கிடையாது” என்று அவன் பொரிந்து தள்ளிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

விஷ்வாவிற்கு இதே வார்த்தைகளை ஒரு முறை தன் அம்மா அப்பாவிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. வாழ்க்கை ஒரு வட்டம்தானே. எல்லோருக்கும் அவரவர்கள் வார்த்தை ஒரு நாள் திரும்பிவரும்.

ஆதி அப்போது வருத்ததோடு, “என்ன விஷ்வா இது?... இவங்க ரெண்டு பேரும் இப்படி சண்டைப் போட்டுக்கறாங்க!” என்று கேட்க,

“நம்ம போட்டுக்காத சண்டையா ஆதி?” என்றார்.

“அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி”

“அதுக்கப்புறம் நாம சண்டையே போட்டுக்கலையா?!” என்றவர் கூர்மையாய் தன் மனைவியைப் பார்க்க,

“பிரியிறளவுக்கு போட்டுகிட்டோமா?” என்று கேட்டு ஆதி ஆழமாய் ஒரு பார்வை பார்த்தார்.

“நம்ம ஜெனரேஷன் வேற... அவங்க ஜெனரேஷன் வேற ஆதி... அவங்களுக்கு காதலையும் கடமையும் பிரிச்சுப் பார்க்கத் தெரியல... அதுவுமில்லாம... சண்டைப் பெருசாகும் போது நீ யூஸ் பண்ற டெக்னிக் உன் மருமகளுக்குத் தெரியலயே!” என்றார்.

“என்ன டெக்னிக்?” என்று ஆதி புரியமால் பார்க்க,

“அதான்... உளவியல் முத்தம்” என்று விஷ்வா ஆதியிடம் குரலைத் தாழ்த்திச் சொல்ல, “ஐயோ! விஷ்வ்வ்வ்வ்வா” என்று ஆதி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கணவனை முறைத்துப் பார்க்க முயன்றார். ஆனால் அது முடியாமல் அவர் உதட்டில் அடக்கபட்ட புன்னகை வெளிவந்து எட்டிப் பார்த்தது.

வயதானது அவர்கள் தேகத்திற்குதானே. அவர்களின் காதல் இன்னும் அதேஅளவுக்கு இளமையாய் பசுமையாய் இருந்தது.

ஆனால் அவர்கள் இந்த சம்பாஷணைகளில் கோபமாய் உள்ளே போன தங்கள் மகனை மறந்துவிட்டனர். அவன் உள்ளே சென்று படுக்கையில் தாங்க முடியா வேதனையோடு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து கொள்ள, “எனி ப்ராப்ளம்?” என்று இவான் எதுவும் தெரியாதவன் போல வினவினான்.

விக்ரம் அவனை நிமிர்ந்து பார்த்து, “வாட் டிட் யூ டோல்ட் டு மை வொய்ப்?” என்று கேட்க, இவான் உடனே நடந்தவற்றை விவரமாக உரைத்தான். அவள் அறையைத் தேடியது. இவன் கைப்பேசியை எடுத்து திறக்க முயன்றது என்று தேவையானவற்றை மட்டும்!

இதனைக் கேட்ட விக்ரமின் கோபம் அதிகரித்தது. “கேடி! என் ரூமை சர்ச் பண்ண வந்திருக்காளா? அம்மா அப்பாவ பார்க்க வந்தேன்னு இதுல பொய் வேற” என்றவன் இவான் முன்னிலையிலேயே அவளை வார்த்தைகளால் கடித்துத் துப்ப, அவன் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இவானின் மனமெல்லாம் அப்போது நேருக்குநேராய் கண்டுவிட்ட தமிழச்சியின் துருதுருப்பான விழிகளில் மையல் கொண்டது.

ஆனால் அந்த விழிகளோ இப்போது கண்ணீரில் முழ்கிக் கரையேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. எந்த யுகப் பெண்ணாக இருந்தாலும் அவள் எத்தகைய துணிச்சல்காரியாக இருந்தாலும் கணவன் என்ற ஒரு உறவு போதும், அவர்களைப் பலவீனப்படுத்த. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியாது. அது அப்படிதான்!

அதுவும் அவள் விக்ரமை உயிருக்கு உயிராய் நேசிக்கிறாள். பிரியப் போகிறோம்… பிரிந்து விட்டோம் என்று சொன்னாலும் அவையெல்லாம் வெறும் கோபத்தில் வெளிவந்த வார்த்தைகள்தாம்.

அவள் விக்ரம் அறைக்கு வந்ததே அவன் லேப்டாப்பைத் தேடித்தான். அவன் அதன் மூலமாக அடிக்கடி வெளிநாட்டிற்கு தொடர்பு கொள்கிறான் என்ற விவரத்தை சேகரித்தவள் எப்படியாவது தன் தமையனைத் தொடர்பு கொண்டுவிட முடியுமா என்ற எண்ணத்தோடு வந்தாள். ஆனால் அவள் வந்த காரியம் ஒன்றும் நடவாமல் போனது.

சோர்வோடும் வேதனையோடும் தன் வீட்டின் வாசலை அடைந்தவள் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

அங்கே முகப்பறையில் ரவி வீருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, “மாமா” என்று விளிக்கவும், “தமிழச்சி” என்று சொல்லி ரவி எழுந்து வந்து தன் தமக்கையின் மகளை ஆரத்தழுவிக் கொண்டார்.

“எப்போ வந்தீங்க மாமா?”

“இப்பதான்... முன்னாடியே வந்திருப்பேன்... ஆனா அதுக்குள்ள கொஞ்சம் பிரச்சனையாயிடுச்சு” என்று தவிப்போடு சொன்னவர் தமிழச்சியின் முகத்திலிருந்த காயத்தைப் பார்த்து, “என்னடா இப்படி அடிப்பட்டிருக்கு?” என்று வேதனை கொண்டு கண்ணீர் உகுத்தார்.

“சரியாயிடுச்சு மாமா... கிட்டத்தட்ட ஆறிடுச்சு” என்று அவள் சமாதானம் உரைக்க ரவி மீண்டும் பாசமாய் தமிழச்சியை அணைத்துக் கொள்ள அந்த சம்பாஷணைகளை வீரேந்திரன் ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தார். அதேநேரம் கொஞ்சம் வியப்பாகவும்!

ரவி தன் தமக்கையிடம் காட்டிய வஞ்சம் கோபம் எல்லாவற்றிர்க்கும் நேர்மாறாய் அவரின் மகளின் மீது உயிரையே வைத்திருந்தார். தமிழச்சி அவருக்கு அதீத செல்லம். அதுதான் பார்த்ததுமே இருவரும் அந்தளவுக்குத் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ள வீரேந்திரனுக்கு எப்போதும் ரவியின் இந்த அபரிமிதமான மாற்றம் ஆச்சர்யம்தான்.

ரவி செய்த துரோகத்தை முற்றிலுமாய் மன்னித்து மறந்து அவரை இந்தளவுக்கு மாற்றியதில் பெரும்பங்கு தமிழுக்குதான். தன் மனைவியால் மட்டுமே இப்படியான அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று வீரேந்திரன் பழைய நினைவுகளை அசைபோட, அப்போது தமிழச்சி தன் மாமன் குடும்பத்தோடு ஐக்கியமாகி இருந்தாள்.

ரவியின் மனைவி அருந்ததி மற்றும் அவர்களின் ஒரே மகள் மதியழகி! பெயருக்கு ஏற்றார் போல் அவள் அழகிதான். அதுவும் நடன அழகி. அவள் அம்மா அருந்ததியின் வழியில் நடனம் பயின்றவள் அதையே அவள் தொழிலாகவும் மாற்றிக் கொண்டாள். பரதத்தின் வழிவந்த எல்லா வகையான நடனங்களையும் திறம்பட கற்றுத் தேர்ந்தவள் மும்பையில் ஒரு பெரிய நடனப் பள்ளியை நடத்தி வருகிறாள். ஆனால் மதியழகி இப்போது அங்கு இல்லை.

“ஆமா… அழகி எங்கே?” என்று தமிழச்சி கேட்க,

“அவங்க அத்தை ரூம்ல இருக்கா” என்றார் ரவியின் மனைவி அருந்ததி!

“நீங்க அம்மாகிட்ட பேசுனீங்களா மாமா?” என்று தமிழச்சி தன் சோகத்தை விழுங்கிக் கொண்டு கேட்க,

“முடியலடா... எங்க அக்காவை நான் கெத்தா பார்த்தே பழகிட்டேன்... இப்படி என்னால” என்று ரவி பேச முடியாமல் வருந்த வீரேந்திரனும் தமிழச்சியும் அவரைத் தேற்றும் நிலை உருவானது.

“உங்களவுக்கு எனக்குத் தைரியம் இல்ல மாமா... எங்க அக்காவை என்னால அப்படிப் பார்க்க முடியாது” என்று ரவி வீரிடம் சொல்ல தமிழச்சிக்கும் வேதனை தொண்டையை அடைத்தது. அங்கே இருக்க முடியாமல், “நான் போய் அழகிகிட்ட பேசிட்டு வரேன்” என்று எழுந்து சென்று விட்டாள்.

வீரேந்திரன் தன் மனைவியை வீட்டிலேயே வைத்துப் பார்த்துக் கொள்வதாக சொல்லி மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்துவிட்டார். அதற்கான எல்லா மருத்துவ உபகரணங்கள் மற்றும் செவிலியர்கள் என அனைத்து வசதிகளையும் வீட்டிலேயே செய்திருந்தார். மதியழகி அந்த அறையில் தன் அத்தையின் கரத்தைப் பற்றி கண்ணீர் விடவும்,

“அழகி ப்ளீஸ்... அம்மா முன்னாடி அழாதே... அது அவங்களுக்குப் பிடிக்காது” என்று தன் மாமன் மகளிடம் தமிழச்சிக் கூற, அழகி வேதனையோடு ஓடிவந்து தமிழச்சியைக் கட்டிக் கொண்டாள். மதியழகி தமிழச்சியை விட இரண்டு வந்து இளையவள் எனினும் இருவரும் தோழிகள் போலதான்.

இருவருக்குமே அந்த நொடி அழுகை வர தமிழச்சி மதியை தன் தாயின் அறையை விட்டு வெளியே அழைத்து வந்துவிட்டாள். ஒருவாறு இருவரும் சமாதான நிலையை எட்டிவிட, அழகியின் விழிகள் எதையோ அல்லது யாரையோ ஆவலாய் தேடிக் கொண்டிருந்தது.

அதனைக் கண்டுகொண்ட தமிழச்சி, “ஏதாச்சும் வேணுமா?” என்று கேட்க, அவளோ கேட்கலாமா வேண்டாமா என்ற தவிப்போடு அவளைப் பார்த்தாள்.

அப்போது, “அழகி!!” என்று ஓர் ஆணின் குரல் அழைக்க,

அவள் சற்றே எதிர்பார்ப்போடு திரும்ப நோக்க, அங்கே முகில் நின்றிருந்தான். அவள் முகம் ஏமாற்றமாய் மாறியது. முகிலின் குரலில் அவள் வேறொரு குரலின் சாயலை உணர்ந்தாள். அதுவே அவள் ஏமாற்றத்திற்குக் காரணம்.

மதியழகியின் மனம் அப்போது அந்தக் குரலில் இன்னும் கம்பீரம் இருக்குமே! அதுவும் அவர் தன்னை மதி என்றுதானே அழைப்பார் என்று எண்ணிக் கொண்டது.

முகில். ரகு தேவியின் ஒரே மகன். அவன் அப்பா ரகு தற்போது டிஎஸ்பியாக இருக்க, அவனுக்கு ஏனோ போலீஸ் வேலையில் நாட்டமில்லை. அவன் தன் பெரியம்மாவைப் பின்தொடர்ந்து ஊடகவியல் பயின்றான். ஆதி செந்தமிழ் நடத்திக் கொண்டிருக்கும் வீரதமிழச்சி பத்திரிக்கையில் சப்-எடிட்டர் பதவியில் இருக்கிறான். அவனுக்கும் தமிழச்சிக்கும் ஒரே வயது. இருவரும் ரகு செந்தமிழ் போல நெருங்கிய நண்பர்கள்.

முகில் அவர்கள் அருகில் வந்ததும், “எப்போ வந்தீங்க?” என்று மதியழகியைப் பார்த்து வினவ, “இப்பதான்” என்றவள் தான் வந்த விவரங்களை அவனிடம் கூற அதனைக் கேட்டுக் கொண்டவன் தமிழச்சியின் புறம் பார்வையைத் திருப்பி,

“சரி... பெரியம்மா எப்படி இருக்காங்க?” என்று கேட்டான்.

“ஹ்ம்ம்” என்று தமிழச்சியின் முகம் தொங்கிப் போக, அவன் முகத்திலும் சோகம் ஊற்றெடுத்தது. அவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்தால் அந்த வீடே அதகளப்படும். ஆனால் இன்று மூவருக்குமே அதிகம் பேச வார்த்தைகள் இல்லை. அவர்கள் மௌனமாக இருக்க,

“ஆமா... சிம்மா அண்ணா எங்கதான் போனாரு?” என்று மதியழகியின் மனதில் ஒளிந்துகொண்டிருந்த கேள்வியை முகில் வெளிப்படையாகக் கேட்டான்.

“தொலைஞ்சு போயிட்டான்” என்று தமிழச்சி அதீத வெறுப்போடு சொல்ல, “என்னடி இப்படி சொல்ற?” என்று முகில் கேட்க மதியழகி புரியாமல் விழித்தாள்.

“பின்ன வேறெப்படி சொல்றது... சார் வீட்ல இருந்து கிளம்பிப் போய் மூணு வாரத்துக்கு மேல இருக்கும்... எப்பவும் போல ஏதாச்சும் கோவில் ஆராய்ச்சின்னு போயிருக்கான்னு நினைச்சோம்... இப்ப என்னடான்னா ஃபோன் மெசேஜ்னு எதுவும் இல்ல... அவன் பாஸ்போர்ட் வேற மிஸ்ஸிங்... அம்மா அக்கௌண்ட்ல இருந்து அண்ணா அக்கௌண்ட்டுக்கு நிறைய பணம் வேற டிரான்ஸ்ஃபர் ஆகியிருக்கு” என்று தமிழச்சி சொல்லிக் கொண்டே போக மதியழகி பதட்டத்தோடு,

“அத்தைக்கு இப்படி ஆகியிருக்குற விஷயம்... அப்போ அவருக்குத் தெரியாதா?” என்று கேட்டாள்.

“எனக்கும் தெரியல அழகி... ஒரே குழப்பமா இருக்கு” என்று தமிழச்சி சொல்ல,

“அண்ணா எங்கதான் போயிருப்பாரு?!” என்று முகில் யோசனையோடு நின்றான்.

“எங்க போனானோ... அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்” என்றாள் தமிழச்சி.

அந்தக் கடவுளர்களுக்கே வெளிச்சம் இல்லாத போது அவர்களுக்கு எப்படித் தெரிந்திருக்கும்?!

அந்த விசாலமான குடோன் இருள் கவ்விக் கிடக்க, அங்கே நின்றிருந்த இருவர் ஏதோ புரியாத மொழியில் பேசிக் கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் கழித்து அவர்கள் பேச்சு வார்த்தை முடிந்தது. அப்போது அவர்களில் ஒருவன் சிறு டார்ச் எடுத்து அந்த இடத்தில் ஒளி பரப்ப, அந்தக் கட்சியைக் காணக் கண்கள் கோடி வேண்டும். எல்லாமே கலைநுட்பம் பொருந்திய கற்சிற்பங்கள்.

அபிடேக ஆராதனைகளோடு மங்கள மணியோசையுடன் கோவில்களில் இருக்க வேண்டிய இறைவடிவங்கள் அந்த இருளடர்ந்த குடோனுக்குள் அடைபட்டுக் கிடந்தன.

அந்த நபர் அந்தச் சிற்பங்களில் இருந்து தீட்சண்யமான அழகோடு தெளிவுற செதுக்கப்பட்டிருந்த பெண் சிலையைக் கையிலெடுத்தான். தன் ஒற்றைக் காலை மடித்தபடி கம்பீரமாய் நிமிர்ந்து அமர்ந்திருந்த அந்தப் பெண் சிலைக்கு அவர்கள் தன்னை விலைபேசி விற்கிறார்கள் என்று தெரிந்தால் நிச்சயம் தன் கூர்வாள் கொண்டு அவர்கள் தலையைக் கொய்துவிடும். ஆனால் அதற்கு வழியில்லாமல் ஆயுதம் ஏந்தியிருந்த கரம் முறிந்திருந்தது.

அந்தச் சிலை மட்டுமல்ல. அங்கிருந்த ஒவ்வொரு சிலைக்கும் அது போன்ற சில குறைபாடுகள் இருந்தன. அவையெல்லாம் படைக்கும் போது அப்படி குறையுடன் படைக்கப் படவில்லை. அதனைப் படைத்த சிற்பி பார்த்துப் பார்த்து தன் உளிகளால் அவற்றுக்கு வடிவம் கொடுத்திருக்க, கடத்தல்காரர்கள் அச்சிலைகள் வசித்திருந்த கோவில்களிலிருந்து வலிக்க வலிக்க கடப்பாரையால் அவர்களைப் பெயர்த்து எடுத்ததினால் வந்த குறைபாடுகள்தாம் அவை!

அங்கிருந்த நபர் அந்தப் பெண் சிலையைத் தன் கரத்தில் ஏந்த அவனின் கவனக்குறைவால் பின்னிருந்த ஒரு சிலை சாய அதன் பின்னோடிருந்த மற்ற சிலைகளும் சாய முற்பட அந்த நபருக்கு அவற்றைக் குறித்து கவலையில்லை.

பிறகு வந்து சரி செய்து கொள்ளலாம் என்று அவர் திரும்பி நடக்க, சாய்ந்த சிலைகளைத் தரையில் விழவிடாமல் அப்போது ஒரு வலிய கரம் ஆபத்பாந்தவனாய் தாங்கிக்கொண்டது. ஒன்றன் பின் ஒன்றாய் சரிந்த கற்சிலைகளைத் தாங்குவது அத்தனை சாதாரணமான காரியமல்ல. எனினும் அந்தக் கரங்கள் அவற்றைத் தாங்கி நிறுத்தியது எனில் அது நிச்சயம் திடமான புஜங்களைக் கொண்ட கரமாகதான் இருக்க முடியும். கடவுளர்களையே காப்பாற்றிய அந்த அசகாய சூரன் வேறுயாருமல்ல.

ராஜசிம்மனின் வழித்தோன்றல். சிம்மவர்மனின் பெயர் சொல்லும் பெயரன். வீரேந்திரபூபதியின் காதலின் ஆதாரமாகச் செந்தமிழின் கருவில் வீழ்ந்த முதல் உயிர்த்துளி. சிம்மபூபதி!

You cannot copy content