You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Irumunaikathi - Intro

Quote

முகவுரை

 

          வணக்கம். நான் உங்கள் மோனிஷா. பலதரப்பட்ட கதைமாந்தர்கள் வடிவில் நான் உங்களைச் சந்தித்திருக்கிறேன்.

          முதல் முறையாக நான்… நானாகவே எழுத்து வடிவில் உங்களிடம் பேச வந்திருக்கிறேன்.

          தொடர்ந்து என்னுடைய நாவலைப் படித்து ஊக்குவிக்கும் வாசக தோழமைகளுக்கும் புத்தகமாகப் பதிப்பிக்கும் பிரியா நிலையம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைச் சொல்லிக் கொண்டு என் முகவுரையைத் தொடங்குகிறேன்.

          எதற்காக இந்த முகவுரை என்று கேட்டால்… பதினாறாவது புத்தகமாக வெளியாகி இருக்கும் ‘இருமுனை கத்தி’  என்ற இந்நாவலுக்காகதான்.

          அப்படி என்ன இந்த நாவலுக்கு முகவுரை எழுதுமளவுக்குச் சிறப்பு என்றால் இக்கதை நான் எழுதிய ‘ஆதியே அந்தமாய்’ மற்றும் ‘வாடி என் தமிழச்சி’ என்ற இரண்டு நாவல்களின் கதாபாத்திரங்களை இணைக்கும் ஒரு களமாக இருமுனைகத்தி வடிவம் பெற்றிருக்கிறது.

          ஆதியே அந்தமாய்… தந்தையின் கொலைக்குப் பின்னணியில் இருக்கும் மர்மத்தைத் தேடிச் செல்லும் ஆதிபரமேஸ்வரி… அப்படியான அவளின் தேடலில் கண்டறியும் பழமையான கோயில் மற்றும் சிலையின் ரகசியம் என்று முடிகிறது அந்தக் கதை.

          வாடி என் தமிழச்சி… நாயகி செந்தமிழ் ஒரு இராஜ குடும்ப வாரிசு. அவர்கள் குடும்பத்திற்குச் சொந்தமான அரண்மனை மற்றும் அவர்களின் பொக்கிஷங்களைப் பாதுகாக்க செந்தமிழ் மற்றும் வீரேந்திரன் என்ன செய்கிறார்கள் என்பதே அதன் கதை.

‘இருமுனைகத்தி’ இந்த இரண்டு நாவல்களின் கதை மாந்தர்களை ஒரு கோட்டில் இணைத்து கதையின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது. நம்முடைய கோயில் பொக்கிஷங்கள் மற்றும் சிலைகளைத் திருடுவது குறித்து ஒரு விரிவான பார்வையை விறுவிறுப்பான கதைக்களத்தின் மூலம் விவரிக்கிறது.

          ஆதிபரமேஸ்வரி-விஷ்வாவின் புதல்வன் விக்ரமாதித்யா மற்றும் வீர்-செந்தமிழ் மகன் சிம்மபூபதி மகள் தமிழச்சியை வைத்து கற்பனையாக இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. ஆனாலும் இது அந்நாவல்களின் சம்பவங்களின் தொடர்ச்சி இல்லை. இது ஒரு தனிப்பெரும் கதைக்களத்தில் சுழல்கிறது. ஆதலால் நீங்கள் ‘வாடி என் தமிழச்சி’ மற்றும் ‘ஆதியே அந்தமாய்’ படிக்காவிட்டாலும் இந்த நாவலைப் படிக்கலாம்.

          மேலும் இந்நாவலில் குறிப்பிடப்பட்ட இடங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே! ஆனால் கதையில் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் யாவும் ‘சிலைத் திருடன்’ அல்லது ‘Idol of theft’ எஸ். விஜயகுமார் ஆங்கிலத்தில் எழுதிய மொழிப்பெயர்க்கப்பட்ட நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.

விருத்தாச்சலத்தில் பிறந்து வளர்ந்த விஜயகுமார் தற்போது சிங்கப்பூர் வாழ் தமிழன். சிலைத் திருட்டை ஒழிப்பதில் அவருடைய பங்கு மிக அதிகம். Poetryinstone என்ற பெயரில் அவர் நடத்திக் கொண்டிருக்கும் இணையத்தளம் மற்றும் முகநூல் குழு சிலைக் கடத்தலை ஒழிக்க முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட துணிச்சல் மிக்க நிஜ நாயகன் எஸ். விஜயகுமார் அவர்களுக்கு இந்தக் கதை சமர்ப்பணம்.

இந்தக் கதையை எழுத முதல் வித்திட்ட மரியாதைக்குரிய எழுத்தாளர் லக்ஷ்மி கணபதி அவர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றிகள்.

          இறுதியாக ஆதியே அந்தமாய் மற்றும் வாடி என் தமிழச்சியின் தொடர்ச்சியில் முப்பது ஆண்டு  நீட்சியில் இந்நாவலின் நிகழ்வுகள் அமைந்திருந்த போதும் இரு காலக்கட்டத்திலும் செல்பேசி உபயோகம் காட்டப்பட்டுள்ளது இக்கதையின் மிகப் பெரிய கருத்துப் பிழை என்றே கொள்ளலாம். ஆனாலும் கற்பனைகளுக்கு வரையறைகளையும் எல்லைகளையும் சில நேரங்களில் வைக்க முடியாது. முடிவதுமில்லை. அந்தப் பிழையை மட்டும் வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்.

          விறுவிறுப்பான மற்றும் சுவாரசியத்திற்காகத் தவிர்க்க முடியாமல் அவ்வாறாக அமைந்துவிட்டது.

          மற்றபடி எதார்த்தமான வாழ்வியலுடன் இந்நாவலைப் படித்து மகிழுங்கள்.

Rathi has reacted to this post.
Rathi

You cannot copy content