You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Forum breadcrumbs - You are here:ForumBhagya Novels: Kadhal SiraiKadhal Sirai - 1

Kadhal Sirai - 1

Quote

அன்று பரவலாக மழை பெய்துக்கொண்டிருந்தது. அது நவம்பர் மாத மழை என்பதால் போதும் என்ற அளவு கொட்டித்தீர்த்தது. தனது இருசக்கர வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு மழை நிற்கும் வரை ஒரு தேநீர் கடை வாசலில் தஞ்சம் அடைந்தான் கதிர் என்கிற கதிர்வேலன்.

அவன் அங்கு நின்றுக்கொண்டு இருக்கும் போதே அவனுடைய அழைப்பேசி மணி ஒலித்தது. ஈரமாக இருக்கும் தன் கைகளை சட்டையில் துடைத்துக்கொண்டு தனது கைப்பேசியை காதில் வைத்தப்படி..

"சொல்லுங்கள் மா, இதோ மழை விட்டவுடனே வந்துடுறேன்" என்றதும்.

"உனக்கு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் கதிர் வெளியே போகுறப்போ கார் எடுத்துட்டு போனு நீ கேக்கவே மாட்டேங்குற, இப்ப பார் மழையில் நனைஞ்சிக்கிட்டு" என்று வசைப்பாட ஆரம்பித்த தன் அம்மாவை சமாதானம் செய்துவிட்டு அழைப்பை துண்டித்தான். எதர்ச்சையாக திரும்பி பார்க்க...

அங்கு நீலநிற சுடிதாரில் ஒருப்பெண் மழையில் நனைந்துக்கொண்டிருப்பதை உணர்ந்தான். இவ்வளவு கொட்டும் மழையில் இப்படி கவலையே இல்லாமல் நனைந்துட்டு நிக்கிறாங்க என்று ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் மழை ஓய்ந்ததும் தனது இருசக்கர வாகனத்தை கிளப்பியவாறு அந்த பெண்ணை பார்த்தவாறு புறப்பட்டான்.

தனது வீட்டை வந்தடைந்ததும் பைக்கை நிப்பாட்டி சாவியை லாவகமாக எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். எப்போதும் போல அந்த பிருந்தாவனம் இல்லத்தில் கலகலபேச்சுக்கள் ஓடிக்கொண்டிருந்தன..

சண்முகம் தாத்தா அவனை நிறுத்தி "டேய் கதிர் உனக்குனு ஒரு கார் வாங்கி கொடுத்தா அதை பயன்படுத்தாமல் ஏண்டா இப்படி பைக்ல திறியிற" என்று வினவியதும் தாத்தாவின் அருகில் அமர்ந்தவன்.

"தாத்தா... ஆயிரம் தான் இருந்தாலும் பைக்ல போற சந்தோஷமே தனி தான். எனக்கு பைக்ல போக பிடிச்சிருக்கு" என்று சொன்னவுடன்.

"சரி அது போகட்டும் நாளைல இருந்து நம்ப டெக்ஸ்டைல் ஷோரூம்க்கு நீ தான் எல்லாம் புரியுதா. உங்கள் அப்பாவுக்கு வயசு ஆகுதுல எல்லா பொறுப்பும் தனியா பார்க்க முடியாது. இன்னொரு கிளை வேற திறந்திருக்கிறோம்ல அது வேற பார்க்கணும். அதனால மைலாப்பூரில் இருக்கும் ஷோரூம் உன்னோட பொறுப்பு இனிமே" என்றதும்.

'ப்ச்ச் இவங்க வேற நானே சக்ஸஸ்புல்லா அந்த ஷார்ட் ஃபிலிம் எடுத்து முடிக்கணும்னு பாக்குறேன் இவங்க என்னடானா..என் கனவு என் ஆசை இதையெல்லாம் எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க.' என்று சப்புக்கொட்டிவிட்டு தன் அறையை நோக்கி நடக்க அவன் தந்தை விருதாச்சலம்...

"டேய் தாத்தா சொன்னது கேட்டியா நாளைல இருந்து ஒழுங்காக வா" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். டிப்ளமோ இன் ஃபிலிம் டெக்னாலஜி முடித்த கதிரிற்கு சினிமா தான் கனவு. அது தான் எல்லாம். ஆனால் என்ன செய்வது வீட்டில் உள்ள பெரியவர்களின் தொந்தரவு ஒருபக்கம்.

அவர்கள் சொல்லியபடி கேட்டுத்தானே ஆகணும். பிருந்தாவனம் இல்லத்தில் சண்முகம் தாத்தா, அப்பா விருதாச்சலம் அம்மா அகிலாண்டேஷ்வரி , தங்கை கவியரசி மற்றும் அத்தை சந்திரலேகா ,மாமா துரைசாமி , மற்றும் அத்தை மகள் அருந்ததி என்று இத்தனை பெரிய கூட்டுக்குடும்பம் நடுவே வாழும் கொடுப்பனை நம் கதிரிற்கு இருக்கிறது என்றாலும் அவனுடைய லட்சியத்திற்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை என்ற வருத்தம் தான்.

துரைசாமி வீட்டோடு மருமகன் என்பதால் அவரும் விருதாச்சலத்தோடு டெக்ஸ்டைல் தொழிலை பார்த்துக்கொண்டிருக்கிறார். பரம்பரையாய் சண்முகம் தாத்தா காலத்திலிருந்து இந்த தொழில் நடந்துக்கொண்டு வருகிறது.

அகிலாண்டேஷ்வரியும் சந்திரலேகாவும் வீட்டு பொறுப்புகளை கவனித்து வருகின்றனர். கவியரசி கல்லூரி மாணவி. வீட்டில் எல்லோரும் சொன்னப்படி பி.எஸ்.ஸி மேதமேடிக்ஸ் எடுத்து படித்து வருகிறாள். அவளுக்கென்று பெரியதாக கனவு ஏதும் கிடையாது வீட்டில் என்ன சொல்கிறார்களோ அதை செய்வாள். அருந்ததியிற்கு பெரியதாக படிப்பு ஏதும் ஏறவேயில்லை. அதனால் டெய்லரிங் கற்றுக்கொண்டு வீட்டில் துணிகளை வைத்து தைத்துக்கொண்டிருப்பாள்.

அகிலாண்டேஷ்வரிக்கு அருந்ததி தைத்துக்கொடுக்கும் ப்ளவுஸ் தான் மிகவும் பிடிக்கும். கவியரசி போடும் சுடிதார் கூட இவள் தைப்பது தான். மிகவும் எளிமையான கனவுகள் கொண்ட இக்குடும்பத்தில் கதிர் சற்று வித்தியாசமானவன் தான். என்னதான் பெரியவர்கள் சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் அதை அந்த அளவு விரும்பாதவன். தனக்கென ஓர் லட்சியத்தை சுமந்துக்கொண்டு அதில் வெற்றிக்காண துடிப்பவன்.

தன் அறையில் அமர்ந்தப்படி தான் எடுக்கப்போகும் புது ஷார்ட் ஃபிலிம்க்கு கதாநாயகி தேர்ந்தெடுப்பதில் குழப்பம் அடைந்தான்.

"ப்ச்ச் இந்த ஸ்கிரிப்ட்க்கு யாருமே செட் ஆகலையே " என்று யோசிக்க துவங்கியபோது தான் அந்த நீலநிற சுடிதார் போட்ட பெண்ணின் நியாபகம் வந்தது.

'ஆமால அந்த பொண்ணு செட் ஆகும்ல ஆனால் இப்ப அந்த பொண்ணை எங்க தேடுறது' என்றபடி ஆடிஷன்காக அனுப்பப்பட்ட கதாநாயகிகள் புகைப்படங்களை நோட்டமிட்டான்.

' ஏய் இந்த பொண்ணு ஆடிஷனுக்கு போட்டோ அனுப்பியிருக்கா' என்று ஆச்சரியத்தோடு பார்த்தவன் அதில் குறிப்பிட்டிருந்த எண்ணை எடுத்து டயல் செய்தான்.

அவள் எடுக்கவில்லை. ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான் பதில் விலுக்கென்று வந்தது

"ஹலோ கால் பண்ணா எடுக்க மாட்டிங்களா" என்று அவன் மெஸேஜ் அனுப்ப ..

"நான் பேசினால் நீங்க கண்டிப்பாக ரிஜக்ட் பண்ணிடுவீங்க நான் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிறும். இங்கே பாருங்க நடிப்பு அப்டிங்கிறது என் கனவு உங்கள் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நான் சந்தோஷப்படுவேன் " என்று பதில் அனுப்பி வைக்க..

"ஏங்க இப்பதான் மனசுல நீங்க என் படத்தில் நடிச்சா நல்லாருக்கும்னு நினைச்சிட்டே இருந்தேன். மழையில் நீங்க எதார்த்தமாக நனைந்ததை நான் கவனிச்சேன். ஏதோ ஒன்று தோன்றியது. ஸ்கிரின்ப்ளே பண்ணி பாக்குறப்ப என் படத்தின் ஹிரோயின் கேரக்டருக்கு நீங்க செட் ஆவிங்க ..பட் ஏன் பேச தயங்குறீங்க. ப்ளீஸ் கால் அட்டண்டு பண்ணுங்க" என்று கதிர் கெஞ்சியதும் அழைப்பை எடுத்தாள்.

"அவன் ஹலோ " என்றதும் எதிர்முனையில் அழுகிற சத்தம் கேட்டது...

"எக்ஸ்கியூஸ் மீ என்ன ஆச்சு " என்றதும்.

"மிஸ்டர் கதிர் நான்.... நான்... ஒரு திருநங்கை ,நீங்க எதனால என்னை ஹிரோயினா நடிக்க வைக்க ஆசப்படுறீங்கனு எனக்கு தெரியாது ஆனால் எனக்கு நடிக்கணும்னு ரொம்ப ஆசை. உனக்கெல்லாம் கதாநாயகி கேரக்டர் தேவையா அப்படினு சிலர் கேக்கலாம்.. ஆனால் வேற வழி தெரியல கையில் இருந்த பணம் எல்லாம் செலவு ஆயிடுச்சு. எனக்குனு குடும்பம் யாருமில்லை. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தா கொஞ்சம் பணம் கிடைக்குமில்லையா அது வச்சு நான் கொஞ்ச நாள் ஓட்டிடுவேன். எனக்குனு யாருங்க வேலை கொடுப்பாங்க. அதான் வேற வழியில்லாமல் உங்கள் படத்தோட ஆடிஷனுக்கு என் போட்டோவை அனுப்பி வச்சன் சார்" என்றதும் ஒரு நிமிடம் கதிர் கலங்கியே போனான். துர்க்கம் தொண்டையை அடைத்தது.

"சரி எதுக்கும் கவலை படாதிங்க மா. இந்த படத்தில் நான் நினைச்ச மாதிரி நீங்க தான் ஹிரோயின். " என்று சொல்லிவிட்டு போனை வைத்து எதையோ சிந்தித்தான்.

இந்த சமுதாயத்தில் எத்தனையோ பேரு குடும்பத்தினரால் கைவிடபட்டு ஒருவேளை உணவுக்காக எவ்வளவு கஷ்டப்படுறாங்க முக்கியமா திருநங்கைகள். அவங்களையும் மதிச்சு காலேஜ்ல படிக்க சீட் தரலாமே அலுவலகத்தில் வேலை தரலாமே. இப்படி இருந்தால் அவர்கள் ஏன் கஷ்டப்படபோகிறார்கள்.

எதுவாகினும் சரி அவங்களுக்கு இந்த படத்தில் நான் வாய்ப்பு தரேன். ஆங் அவங்க பேரு என்னமோ சொன்னாங்களே ஆங் ஷில்பா...
கண்டிப்பாக ஷில்பா தான் இந்த படத்துக்கு கதாநாயகி. ஆனால் இதை எப்படி நம்ப டீம் ஏத்துப்பாங்க தெரியலையே ஆனால் அதுக்காக இவங்களை விட்டுக்கொடுக்க முடியாது. பாவம் ஷில்பா இவங்களுக்கு இதுமூலமாக வாழ்க்கை முன்னேற்றம் அடைந்தால் போதும். என்று நினைத்தவாறு லேப்டாப்பில் தனது ஸ்கிரிப்டை வாசித்துக்கொண்டிருந்தான்.

அறைக்கதவை திறந்து அகிலாண்டேஷ்வரி உள்ளே நுழைந்தார்.
"கதிர் இந்தா டீ சாப்பிடு ரொம்ப களைப்பா இருக்க பாரு" என்று கொடுக்க அதை வாங்கி பருகினான்.

உண்மையில் அவனுக்கு இருந்த களைப்பு இதெல்லாம் பறந்தே போயிற்று. அம்மாவும் பிள்ளையும் சிறிது நேரம் உரையாடினர். பிறகு தன் ஸ்கிரிப்டில் ஷில்பாவிற்கு தகுந்த மாதிரி சில மாற்றங்களை செய்தான். அவன் நினைத்த கதைக்கும் தற்போதைய எழுத்தும் மாறுபற்று இருந்தது. ஷில்பா நடிக்க போவதை தனது டீமிடம் சொல்லவே செய்தான். ஆரம்பத்தில் நிரகாரித்தாலும் பிறகு புரிதலோடு ஒப்புக்கொண்டனர்.

நாட்கள் நகர ஷில்பா இவர்களுடன் ஒன்றிவிட்டார். படபிடிப்பு துவங்கியது. வேறு வேறு லொகேஷனில் குறும்படம் வெற்றிகரமாக எடுக்கப்பட்டது. அவ்வப்போது தனது டெக்ஸ்டைல் ஷோரூம் சென்று மேல்பார்வையிடவும் செய்தான் கதிர். இரண்டையும் பேலன்ஸ் செய்வது கடினம் தான் என்றாலும் என்ன செய்ய முடியும். ஒருபக்கம் குறும்படம் லட்சியம் இன்னொரு பக்கம் குடும்பத்தினர் சொல்வது போல பிஸினஸ் மேற்பார்வை.. ஆனால் மனதளவில் உற்சாகமாக இருந்தான் கதிர்.

அவனுடைய குறும்படம் அவார்டு பங்கஷனுக்கு அனுப்பப்பட்டது. சிறந்த குறும்படத்திற்கான பங்கஷன் தான் அது. யார் வெற்றியாளரோ அவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு தொகை என மீடியா அறிவித்திருந்தது. இந்த நல்ல வாய்ப்பிற்காக தான் இவ்வளவு சிரமம் கொண்டு படம் எடுத்தான் கதிர்.

இவனுடைய படம் வெற்றியடையுமா ? கதாநாயகன் கதிர் வெற்றியாளரா பொறுத்திருந்து பார்ப்போம்.

You cannot copy content