You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Forum breadcrumbs - You are here:ForumBhagya Novels: Kadhal SiraiKadhal sirai - 2

Kadhal sirai - 2

Quote

அந்த குறும்படம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. யூடியூப் ரசிகர்கள் தங்களது ஆதரவை குவித்தனர். படம் வெளியிட்ட கொஞ்ச நாட்களிலேயே அதிகபடியான ரசிகர்களை கவர்ந்தது. இன்னும் இரண்டே நாட்களில் யாருக்கு அந்த அவரார்ட் என்று விவரம் தெரிந்துவிடும்.

கதிரிற்கு அதைபற்றின கனவுகள் அதிகபடியாக இருந்தன.. சொன்னப்படியே ஷில்பாவிற்கு 5000 பேமண்டு தந்துவிட்டான். அதை மலர்ச்சியோடு வாங்கிக்கொண்டு

"ரொம்ப தாங்க்ஸ் கதிர்" என்று சொன்னவுடன் புன்னகையித்தபடி

"ப்ரண்ட்ஸ் கிட்ட யாராவது தாங்க்ஸ் சொல்லுவாங்களா ஷில்பா" என்று நட்புணர்வுடன் கூற ஒருநிமிடம் ஷில்பா கலங்கியே போனாள்.

"எங்களை பாக்குறவங்க எல்லாம் கேலி பண்ணி சிரிக்கிறப்போ மனசுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கும். இப்படி இருக்கிறது எங்கள் தப்பா? இல்லை எங்களை இப்படி படைச்ச இறைவன் மேல தப்பானு தெரியல கதிர். ஆனால் இன்று நீ நட்பா பேசுறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றவுடன்.

"இங்கே பாரு ஷில்பா கேலி செய்றதுக்கு மனிஷனுக்கு கற்றாத்தரனும். எல்லாம் கொழுப்பு. மத்தவங்களை பார்த்து கேலி பண்ணி சிரிக்கிறதுல அப்படி ஒரு சந்தோஷம் போலருக்கு. அதை விடு , இன்னைல இருந்து நான் உனக்கு ஒரு நல்ல ப்ரண்டு" என்று கைகொடுத்தான். சற்று நேரத்தில் விடைப்பெற்று சென்றான்.

நேரே ஷோரூம் வாசலில் வந்து இறங்கினான். புதிதாய் வந்த துணிமணிகள் லோடுகளை பார்த்தபடியே உள்ளே நுழைந்தான்.

"என்ன ஸ்டாக் எல்லாம் வந்துருக்கு போலருக்கு. அவங்களுக்கு தரவேண்டிய பேமண்டு செட்டில் பண்ணி அனுப்புங்க" என்று கணக்காளரிடம் கட்டளையிட்டான் கதிர். இதை தூரத்தில் இருந்து பார்த்த விருதாச்சலம்..

"நம்ப பையன் எப்படியோ இந்த பிஸினஸ் கத்துக்கிட்டான். நமக்கப்றம் தொழிலை கட்டிகாப்பாத்துவானு இப்பதான் நம்பிக்கையே வந்துருக்கு" என்று தனக்குள் நொடித்துக்கொண்டு தன் வேலையை கவனிக்கலானார்.

"ட்ரிங்... ட்ரிங்" என்று அழைப்பு மணி ஒலித்தது அதை எடுத்து விருதாச்சலம் பேசினார்.

"ஏய் வாண்டு உனக்கு விடுமுறை விட்டாச்சா எப்ப கிளம்பி சென்னைக்கு வரப்போற" என்று வினவினார் தன்னுடைய வளர்ப்பு மகள் "காயத்ரியை"...

"பா, விடுமுறையா?எனக்கு இந்த வருஷத்தோட படிப்பு முடியபோகுது. வரேன்பா கொஞ்சம் ஷாப்பிங் வேலை எல்லாம் இருக்கிறது. அதெல்லாம் முடிச்சிட்டு வரேன் நாளை மறுநாள்" என்றவுடன்.

"சரி டா மா,உன் வேலை எல்லாம் முடிச்சிட்டு பொறுமையாவே வா" என்று போனை வைத்தார். காயத்ரி அந்த பிருந்தாவனம் இல்லத்தின் செல்லப்பிள்ளை,அவளுடைய பெற்றோர் அவளுக்கு இரண்டு வயது இருக்கும் போதே விபத்தில் இறந்துவிட்ட நிலையில் விருதாச்சலம் இங்கே அழைத்து வந்து வளர்க்க துவங்கினார்.  காயத்ரியின் தந்தை விருதாச்சலத்தின் நெருங்கிய நண்பர்.

ஆனால் இதே வீட்டில் வளர்ந்ததால் கதிர் மற்றும் காயத்ரி இருவரும் அண்ணன் தங்கையாகவே பழகினர். காயத்ரி என்றாலே அவனுக்கு உயிர். ஆனால் கவியரசியிற்கு இவள் மேல் அப்படி ஒரு பொறாமை. எல்லாரும் இவளை தலைமேல் தூக்கி வைத்து உறவாடுறாங்க என்று.ஆனால் பெற்றோரை இழந்தவள் என்ற கரிசனத்தால் தான் இவளுக்கு அதிக அன்பு செலுத்துகிறார்கள் என்று கவியரசியிற்கு புரிவதில்லை.

அப்போது விவரம் தெரியாத வயது என்பதால் விருதாச்சலத்தையும் அகிலாண்டேஷ்வரியையும் தனது சொந்த பெற்றோராகவே கருதினாள் காயத்ரி. தான் வளர்ப்பு மகள் என்பது விவரம் தெரிந்த நாட்களில் புரிந்தது. ஆனாலும் பெற்றோர் இழந்த கவலை அவளை பாதிக்கவில்லை. நல்ல இடம்,உடுக்க உடை ,உணவு, உறவாட உறவு என்று அனைத்தும் அவளுக்கு கிட்டிவிட்டதால் அவளுக்கு பெரிதாக தெரியவில்லை அந்த இழப்பு.

இதோ வந்துவிட்டாள் வீட்டின் செல்லப்பிள்ளை...

"அம்மா",என்று ஓடி வந்து கட்டியணைத்தாள் அகிலாண்டேஷ்வரியை . எல்லோரும் இன்முகத்துடன் வரவேற்றனர்.

"என்னத்தா படிப்பு முடிஞ்சதா? ஹாஸ்டல் எல்லாம் காலி பண்ணியாச்சா" என்று சண்முகம் தாத்தா வினவ...

"ம்ம்ம் தாத்தா இனிமே இங்கேதான் இருக்கப்போறேன். கோவைக்கு பை பை" என்று புன்னகையித்தபடி கவியரசியை கண்டாள்.

"ஏய் கவி எப்படி போது உன் ஸ்டடிஸ் எல்லாம். இனி எதாவது டவுட்னா நானே உனக்கு சொல்லித்தரேன்" என்றவுடன்..

"ஒன்னும் அவசியம் இல்லை நான் பாத்துக்குறேன்" என்று முகம் திருப்பிக்கொள்ள...

"ஏய் அவளை பத்தி உனக்கு தெரியாதா விடு" என்று கதிர் சொல்ல...

"அய்யோ அண்ணே மறந்தே போயிட்டேன். இந்தா உனக்கு ஷர்ட் வாங்கிட்டு வந்தேன் கரெக்டா இருக்கா பாரு. எதாவது ஆல்ட்ரேஷனா நம்ப அருந்ததி கிட்ட குடு பண்ணி தருவாங்க" என்றதும் புன்முறுவலித்தாள் அருந்ததி.

"சரி சரி நான் போட்டு பாக்குறேன்" என்று தன் அறைக்குள் சென்றான்.

மற்றவர்களுக்கு வாங்கிட்டு வந்த பொருட்களை எல்லாம் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்தாள் காயத்ரி. படுக்கையில் சாய்ந்தவள்..

"ப்பா என்ன ஒரு நிம்மதி, சொந்த ஊரில் குடும்பத்தினருடன் இருப்பதே தனி சுகம். போதும் எம்.எஸ்.ஸி மேதமேடிக்ஸ் படிச்சது. இனி படிப்புக்கு ஒரு கும்பிடு" என்றபடி மேலிருக்கும் மின்விசிறியை வெறித்து நோக்கினாள்.

அவளுடைய கைப்பேசியில் வாட்ஸ்அப் மெஸேஜ் பாப்பப் ஆனதை கண்டாள் எடுத்து பார்க்க...

"காயு...ஹேவ் யூ ரீச்டு" என்று குறுஞ்செய்தி வந்திருந்தது பிரவினிடமிருந்து.

"எஸ்... ஐயம் அட் மை ஹோம் நவ்"என்று பதிலுரைத்தாள்.

சிறிதுநேரம் அவனுடன் குறுஞ்செய்தி மூலம் உரையாடினாள். பிரவின் இவளுடைய உயிருக்கு உயிரான காதலன். கோவையில் இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் பயின்றனர். தற்போது அவனும் அவனுடைய வீட்டில் இருக்கிறான்.

இன்னும் இவர்களுடைய காதல் பற்றி யாருக்கும் தெரியாது. சிலநாட்கள் தெரியவும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தனர். குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருந்த காயத்ரியிற்கு அவனுடைய காதல் பகிர்தல் அவளுக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது. இனி இருவரும் எப்போது சந்திப்பார்களோ விதியிற்கே வெளிச்சம்...

கவியரசியை விட இரண்டு வயது மூத்தவள் நம் காயத்ரி. இவள் ஆசைப்படதால் தான் முதுகலை பட்டம் படிக்க அனுப்பி வைத்தனர். ஆனால் இவள் காதல் கொண்டது தெரிய வந்தால் வீட்டில் பிரளயமே வெடித்துவிடும். முக்கியமாக கவியரசியிற்கு தெரிந்தால் நிச்சயம் போட்டுக்கொடுப்பாள். இதை அவர்களுக்கு தெரியாமல் காயத்ரி எப்படி கட்டிகாக்க போகிறாளோ தெரியவில்லை.

சற்று நேரத்தில் அசதியில் உறங்கியும் போனாள். உடை தனக்கு பொறுத்தமானதாய் இருக்கிறது என்பதை அவளிடம் தெரிவிக்க கதிர் அறைக்கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

"ஓ ..தூங்கிட்டியா?" என்றபடி அவள் தலையை வருடிவிட்டு வெளியே வந்தான்.

"எதாவது ஆல்ட்ரேஷன் பண்ணணுமா" என்று எதிரில் வந்து நின்றாள் அருந்ததி.

"இல்லை அருந்ததி எல்லாம் சரியாக இருக்கு" என்று இடத்தை விட்டு அகன்றான். அவன் அகன்றதும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சூரியன் மெல்ல அஸ்தமிக்க துவங்கியது. வீட்டிற்கு தரகர் வந்தார்.

"சண்முகம் ஐயா வணக்கம். இதோ நீங்க கேட்ட மாதிரி உங்கள் பேத்திக்கு ஏற்ற பையன் ஜாதகமும் போட்டோவும் எடுத்துட்டு வந்துருக்கேன்" என்றதும் எல்லாம் திருதிருவென விழித்தனர்.

"என்ன பாக்குறீங்க எல்லாரும். நம்ம அருந்ததியிற்கு தான் மாப்பிள்ளையை பார்க்கலாம்னு. வயசு 24 ஆயிடுச்சு. சட்டுபுட்டுனு முடிக்க வேண்டாமா" என்று சண்முகம் தாத்தா உரைக்க

சந்திரலேகா முகத்திலும் துரைசாமி முகத்திலும் சிரிப்பு எட்டிப்பார்த்தது. தங்களுக்கு இருக்கும் ஓர் கடமை முடியப்போகும் சந்தோஷம்.

"அப்படியே ஆகட்டும் பா" நீங்களே நல்ல மாப்பிள்ளையா பாருங்க...

"ம்ம்ம் அதுக்கு தானே தரகரை வரச்சொல்லியிருக்கேன்" என்றபடி எல்லா புகைப்படத்தையும் அலசி ஆராய்ந்தனர் வீட்டில் உள்ள பெரியவர்கள்.

ஆனால் அருந்ததியிற்கு சுத்தமாக உடன்பாடில்லை. இந்த வீட்டை விட்டு செல்லவோ ,தெரியாத ஒரு நபரை திருமணம் செய்து கொள்வதில்லோ அவளுக்கு உடன்பாடில்லை. ஆனால் இதை தைரியமாக பெரியவர்களிடம் தெரிவிக்க முடியவில்லை.

"இதோ இந்த பையன் சூப்பர். இன்ஜினியரிங் படிச்சிட்டு நல்ல வேலைல இருக்கான்." என்று ஒரு சம்மதத்தை முடிவு செய்தனர்.

"என்ன சந்திரலேகா...இந்த மாப்பிள்ளையை அருந்ததியிற்கு பேசி முடிப்போமா? பொண்ணு பார்க்க வீட்டுக்கு வரச்சொல்வோமா" என்று சண்முகம் வினவியவுடன்.

"எல்லாம் சரிதான் பா, இந்த பையனையே முடிவு பண்ணிக்கலாம்"

"அது சரி மாமா,எதுக்கும் உங்கள் பேத்தி கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க" என்று அகிலாண்டேஷ்வரி சொன்னவுடனே...

"அட சும்மா இருங்கள் அண்ணி அவளை என்ன கேட்டுகிட்டு. நம்ப நல்லது தானே பண்ணுவோம்" என்று சந்திரலேகா சொல்லவே அமைதியாகினார் அகிலாண்டேஷ்வரி.

"அத்தை நீங்க எந்த காலத்துல இருக்கிங்க. இன்னும் பொண்ணோட விருப்பம் கேக்காமல் தான் மாப்பிள்ளை பார்ப்பிங்களா? என்னதான் இருந்தாலும் வாழப்போறது அருந்ததி தானே அவளை ஒரு வார்த்தை கேளுங்க" என்று கதிர் சொன்னதை கேட்டு எல்லோரும் யோசித்தனர்.

"கதிர், ரொம்ப தாங்க்ஸ்" என்றாள் அருந்ததி...

"ஏய் இதுல என்ன இருக்கிறது. இது உன் உரிமை. இதையெல்லாம் நீ விட்டுக்கொடுக்காத...உன் மனசுல இருக்கிறதை வெளிப்படையாக சொல்லிடு" என்றதும்.

"சொல்லணும் தான் ஆசை ஆனால்"..

"என்ன ஆனால்"

"ஒன்னுமில்லை மாமா.." என்றபடி ஒப்புக்கு அந்த புகைப்படத்தை வாங்கி பார்த்துவிட்டு "நான் இந்த மாப்பிள்ளையை கட்டிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்தாள்.

உண்மையில் அவள் மனதில் என்னதான் இருக்கிறது பார்ப்போம்.

You cannot copy content