You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanam@ - Episode 14

Quote

14

“ஏன் ஆனந்த்... அர்ச்சனாவுக்கு நீ பண்ணது நியாயம்னு நினைக்குறியா?”

சதுரங்கப் பலகையில் தன்னுடைய குதிரையை முன்னே நகர்த்தி வைத்தபடி அவள் கேட்க அவன் கவனம் சடாரென்று ஆட்டத்திலிருந்து வெளியே வந்திருந்தது.

அவளைக் கடுப்புடன் பார்த்தவன், “பொண்ணுங்க எல்லாம் ஒரு விஷயம் கிடைச்சுட்டா விட மாட்டீங்க இல்ல… திரும்பத் திரும்ப அதபத்தியே பேசிக் குத்திக் காட்டுவீங்க” என,

“குத்திக் காட்டுறதுக்காக ஒன்னும் கேட்கல” என்றவள் கூற,  

“அர்ச்சனா விஷயம் முடிஞ்சு போச்சு... திரும்பவும் எதுக்கு?” அவன் எரிச்சலுடன் மொழிய, 

“சும்மா நீ என்ன யோசிக்குறன்னு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்... உனக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லன்னு தோனுச்சுனா விட்டுடு…சொல்லாதே” என்றாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன் பின்னர் பெருமூச்செறிந்து அவளுக்குப் பதில் கூறினான். “நான் அர்ச்சனாவுக்கு அநியாயம் பண்ணனும்னு பண்ணல... சில நேரங்களில் நம்ம பிரயாரிட்டி மாறி போகும் போது சில வார்த்தைகளைக் காப்பாத்த முடியாம போயிடுது... அவ்வளவுதான்” என்று பதிலளித்த கையோடு தன் இராணியை நகர்த்தி வைத்தான்.    

 “நீ இங்க பிரியாரிட்டினு சொன்னது மணி... இல்லையா?” என்றவள் அடுத்த கேள்வி கேட்டபடி தன்னுடைய அடுத்த நகர்வை செய்ய, 

அவளைக் கூர்மையாகப் பார்த்துவிட்டு பின், “உன் கூட வாழ ஆரம்பிச்ச பிறகு... அந்த பிரியாரிட்டியும் கீழே போயிட்டதா உணர்றேன்” என்றான்.

அவன் சொன்னதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள் மனதிற்குள் குத்திக் கொண்டிருக்கும் விஷயம் உண்மையாக இருப்பின் அவன் மீதான நற்மதிப்பு அவளுக்கு அறவே போய்விடலாம் என்று அவள் யோசிக்கும் போதே,

“என்னாச்சு ரெஜி... விளையாடு” என்று தோளைத் தொட்டான். அவள் தன் மன எண்ணங்களைக் காட்டிக் கொள்ள விரும்பாமல் அவசரத்தில் இராணிக்கு அரணாக இருந்த மந்திரியை இருந்த இடத்தை விட்டு நகர்த்தி வைத்துவிட,

“என்ன பன்றன்னு தெரிஞ்சுதான் பண்றியா?” என்றான். அப்போதுதான் அவள் தான் அவசரத்தில் தவறான காயை நகர்த்திவிட்டதை உணர்ந்தாள்.

அவனோ அவளுடைய இராணியை ஆட்டத்திலிருந்து தூக்கிவிட்டு “இப்போ உன் இராணி என் கைல... பவர் ஃபுல் காயை இழுந்துட்டியே” என்று நக்கலாக ஒரு சிரிப்புச் சிரித்தான்.  

அவள் தலையைப் பிடித்துக் கொள்ள, “அதுக்குதான் கேமை மட்டும் விளையாடணும்கிறது” என, அவள் அடுத்த நகர்வை செய்தாள்.

அடுத்த இரண்டு நகர்வுகளில், “செக்” என்று கூறி தன் குதிரையை முன்னே வைத்துவிட்டு,  “என் பவர் இராணி மட்டும்தானு உனக்கு யார் சொன்னது ஆனந்த்” என்றாள்.

“குட் மூவ்... பட் நாட் கிரேட்” என்றவன் அடுத்தடுத்த நகர்வில் அவளைத் திணறடித்து ஆட்டத்தை முடித்துவிட்டான். 

“வாவ்... யூ வொன்” என்றவள் புன்னகையுடன் அவனுக்கு கைக் கொடுத்தாள். அவனும் பெருமிதமாக அவள் கையைப் பிடித்துக் குலுக்கவும்,

“மதி என்கிட்ட சொன்ன ஒரு விஷயம் இப்போ ஞாபகம் வருது”  என்றாள்.

அவளை ஆர்வமாக நிமிர்ந்து பார்த்து, “என்ன சொன்னான்” என்றான்.

“சொன்னா…னா?” என்றவள் கேட்ட நொடி,

“இல்ல வாய் தவறி... ஆமா மதி என்ன சொன்னா?” என்றவன் தன் வார்த்தையைத் திருத்திக் கொள்ள, 

“நீ எந்த கேம் விளையாடினாலும் எனக்கு டஃப் கொடுப்பன்னு சொன்னா... ஷி இஸ் ரைட்” என்றாள். 

எந்தப் பதிலும் பேசாமல் அமைதியாக இருந்தவன் பின் எதையோ யோசித்துவிட்டு, “ஆ... இப்பதான் ஞாபகம் வந்துச்சு... எனக்கு ஒரு முக்கியமான கால் பேசணும்” என,

“ஓகே” என்றவள் சொல்ல, அவன் அவசரமாக எழுந்து சென்றுவிட, அவள் பார்வை அந்தச் சதுரங்கப் பலகையின் மீது விழுந்தது.

தன்னுடைய அலட்சியம்தான் இந்த ஆட்டத்தில் தான் தோற்றுப் போக காரணம்.  அது எதனால்? கவனக் குறைவாலா அல்லது அவளுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பத்தாலா? அதேநேரம் ஆனந்தின் பக்கக் காய்களைப் பார்த்தவளுக்கு அவனின் ஆட்டத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை. 

அவன் திறமையான ஆட்டக்காரன்தான். அவனுடைய இந்தத் திறமையும் புத்திசாலித்தனமும் விளையாட்டிற்கும் வியாபாரத்திற்கு போதுமானதாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கைக்குப் போதுமா?

திறமை, புத்திசாலித்தனம், சாமர்த்தியம் இதை எல்லாம் மிஞ்சிய ஒரு விஷயம் இருக்கிறது. அதுதான் அறம். 

அறமற்ற மனிதனிடம் உண்மையான அன்பும் இருக்க முடியாது. ஆனந்திடம் அந்த அறம் இருக்கிறதா? 

இந்தக் கேள்விதான் சமீபமாக அவள் மூளையை ரொம்பவும் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி. 

ஒரு வகையில் அந்தப் புகைப்பட விஷயத்தில் இதுவரையில் எந்தவொரு தெளிவான முடிவிற்கும் அவளால் வர முடியவில்லை.

இரண்டு நாள் முன்பு மீண்டும் சக்கர நாற்காலியில் வைத்திருந்த படத்தை அவள் எதேச்சையாகப் பார்க்க நேர்ந்த போது அவளுக்குத் தோன்றிய யூகம் அதீத அதிர்ச்சியை  உண்டாக்கி இருந்தது.

ஆனால் தன்னுடைய யூகம் மட்டும்தான். அது  தப்பாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தாள். அதேநேரம் தன்னுடைய யூகம் சரியா தவறா என்று தெரிந்து கொள்ளாமல் ஆனந்திடம் கேட்க வேண்டாமென்று நினைத்தாள்.

இன்னும் ஏதோ ஒரு நம்பிக்கை அவள் மனதினோரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது.

அவளிடமிருந்த படத்தை மீண்டும் உற்றுப் பார்த்தவள் தன் சந்தேகத்தை எப்படி ஊர்ஜிதப்படுத்துவது என்று பலமுறை யோசித்து பல வழிகளைச் சிந்தித்தவளுக்கு இறுதியாக அர்ச்சனாவைப் பற்றி ஆனந்த் சொன்னது நினைவுக்கு வந்தது.

அடுத்த நாள் அலுவலகம் கிளம்பிய ஆனந்த் ரெஜினாவைப் பள்ளியில் இறக்கிவிட்டு சென்றான். முந்தைய தினமே ஆனந்தன் செல்பேசியில் இருந்து அவனுக்குத் தெரியாமல் துழாவி எடுத்த அர்ச்சனாவின் செல்பேசி எண்ணை எடுத்தாள்.

அவளிடம் பேசுவதற்கே முதலில் தயக்கமாக இருந்தது. பின் எப்படியோ பேசிவிட வேண்டுமென்ற தீர்க்கமான எண்ணத்துடன் அவளுக்கு அழைத்து, “நான் ரெஜினா பேசுறேன்” என்றாள்.

முதலில் குழம்பியவள், “என்ன வேணும் உங்களுக்கு?” என்று கேட்க,

“ஒரு விஷயம் தெரியணும்” என்றதும் அவள் சிரித்துவிட்டு, “நான் சொன்னதெல்லாம் பொய்னு உங்க ஹஸ்பென்ட் சொல்றாரா?” என்று கேட்டு எள்ளலாகச் சிரித்தாள்.  

“இல்ல... ஒத்துக்கிட்டாரு” என்றதும் அர்ச்சனாவின் சிரிப்பு அடங்கிவிட்டது. 

ரெஜினா மேலும், “நான் இப்போ கேட்க போறது அத பத்தி இல்ல” என்றாள்.

“அப்புறம்?” என்றவள் யோசிக்க ரெஜினா தன் சந்தேகத்தைக் கேட்க, அர்ச்சனா குழம்பி விட்டுப் பின் அவள் கேள்விக்குப் பதிலளித்தாள். கிட்டத்தட்ட அவள் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்திவிட்டாள். 

“தேங்க்ஸ்” என்று அர்ச்சனாவின் அழைப்பைத் துண்டித்துவிட்ட மறுகணம் ரெஜினாவிற்கு ஆனந்தன் மீதிருந்த நம்பிக்கையும் காதலும் மொத்தமாகத் துண்டிக்கப்பட்ட உணர்வு. நெஞ்சு கூடு உலர்ந்து போனது.

மனதின் வேதனை உடலையும் சேர்த்துப் பாதித்தது. தலை சுழன்றது. மேஜை மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்தியவளுக்கு என்னவோ இன்னும் அதிகமாக தலை சுழன்ற உணர்வு.

காற்று இல்லாமல் அறைக்குள் மூச்சு முட்டியது போல உணர்ந்தாள். அவள் தன் சக்கர நாற்காலியை நகர்த்தி அறையை விட்டு வரவும் வெளியே அமர்ந்திருந்த அலுவலக பெண் பதட்டத்துடன் எழுந்து, “என்ன மேடம்? என்னாச்சு?” என்று விசாரிக்க,

“ஒன்னும் இல்ல... ஒரு மாதிரி மயக்கமா இருந்துச்சு... அதான்” என்றாள்.

“சாப்பிடீங்களா மேடம்... ஜூஸ் ஏதாவது குடிக்கிறீங்களா?”

“இல்ல அதெல்லாம் வேண்டாம்... நீ போய் வேலைய பாரு” என்றவள் மீண்டும் அறைக்குத் திரும்பி, தன் செல்பேசி எடுத்து வைத்துக் கொண்டு தயங்கினாள். பின்னர் உறுதியாக சொல்லிவிடுவது என்ற எண்ணத்துடன் தன் தந்தைக்கு அழைத்தாள்.

“சொல்லு ரெஜிமா”

“டேடி உங்களை நான் பார்க்கணும்… கொஞ்சம் பேசணும்” என்றவள் சொல்ல, 

“இப்போவா?” என்றவர் கேட்க,

“ஆமா டேடி வர முடியுமா?” என்று கேட்டதும் அவர் பதட்டத்துடன்,

“ஏதாவது பிரச்சனையா என்ன?” என்று கேட்க,

“டேட் பேசணும்... வரீங்களா இல்லையா?” என்றாள்.

“இதோ வந்துட்டேன்” என்றவர் அழைப்பைத் துண்டித்துவிட்டு தன் தந்தைக்காகக் காத்திருந்த போது திடீரென்று நிக் அவள் கண் முன்னே வந்து நின்றான். அவள் பதட்டமடையும் போதும் கவலையுறும் போதும் இயல்பாகவே அவன் பிரசன்னம் நிகழ்ந்துவிடுகிறது.  

நிக் அவள் எதிரே கைக் கட்டி நின்று கொண்டு, “நான் அப்பவே சொன்னேன் உன்கிட்ட... அவன் உனக்கு தகுதியானவன் இல்லனு… அவன் சரியான ஃபிராடு… ஏமாத்துக்காரன்” என்று ஆரம்பத்தில் சொன்ன தன் வாதத்தை இப்போது உறுதியுடன் பேசினான். 

ஆனால் அவளால் அப்படி ஒரேடியாக ஆனந்தனை நிராகரிக்க முடியவில்லை. ஏமாற்றிவிட்டான் என்று தூக்கிப் போட முடியவில்லை. ஆனால் அவள் மனதின் தவிப்பு நிக்கிற்குப் புரியவில்லை. அவன் திரும்பத் திரும்ப தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான்.

ஆனந்தை மிக மோசமாகப் பழித்துப் பேசினான். அவளால் தாங்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் பெருகிற்று.

“நிக் ப்ளீஸ்… ஸ்டாப்” என்றவள் கெஞ்சிக் கதறிய போது எதிரே நின்றவன் மறைந்துவிட்டான். திடீரென்று அவளைச் சுற்றிலும் இருள் சூழ்ந்துவிட்டது. 

அவள் கண் விழித்த போது நிக்கின் இரத்தம் வற்றி உறைந்து போன முகம் மிக அருகாமையில் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ந்து, “நிக்” என்று கத்திக் கொண்டே எழுந்தாள். 

 அப்போது ஒரு பெண் அவள் அருகே வந்து, “என்னாச்சு மேடம்” என்று விட்டு, 

“ஏதாச்சும் பார்த்து பயந்துட்டீங்களா என்ன?” என்று அக்கறையாக விசாரித்துக் கொண்டே ஆதரவாக அவள் கரத்தைப் பற்றினாள்.

அந்தப் பெண்ணை யாரென்று அவளுக்குத் தெரியவில்லை. சட்டென்று சுற்றிப் பார்த்தவள் அது மருத்துவமனை என்றும் அருகே நிற்கும் பெண் செவிலியர் என்றும் புரிய வந்தது.

சட்டென்று அவள் முன்னே வந்து நின்ற மற்றொரு வயதான பெண்மணியைப் பார்த்தார். அவர் அவளுடைய பிரத்தேயக மருத்துவர். என்ன நடந்தது என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுப் பொறுமையாக விசாரிக்கும் போதுதான் அவளுக்குத் தான் மயங்கி விழுந்ததும் அதனால் தான் மருத்துவமனைக்கு வந்த காரணமும் தெரிய வந்தது. 

அந்த மருத்துவரோ அவளிடம் பேசிக் கொண்டே தன் கையிலிருந்த காகித உரையைப் பிரித்துப் பார்த்துவிட்டு, “ஐ கெஸ் ஸோ... டெஸ்ட் பாஸிட்டிவ்” என,

“என்ன டெஸ்ட் டாக்டர்?” என்றவள் வினவ,

“யூர் பிரக்னன்ஸி டெஸ்ட்... யூ ஆர் பிரக்னன்ட் ரெஜினா... கங்கிராஜூலேஷன்ஸ்” என்றவர் சொன்ன போது அவள் உறைந்து போனாள். அவள் தலையில் இடியே விழுந்துவிட்டது போலிருந்தது.

அவள் உடலின் மொத்த குருதியும் வேகமாகப் பாய்வது போன்ற விசித்திரமான உணர்வு ஏற்பட்டது.

சந்தோஷப்பட வேண்டிய விஷயத்திற்கு தான் இந்தளவு அதிர்ச்சியடைவது அவளுக்கே வேதனையாக இருந்தது. பல நேரங்களில் சூழ்நிலைகள்தான நம்முடைய சந்தோஷத்தையும் துக்கத்தையும் தீர்மானிக்கின்றன.

இக்கட்டான சூழ்நிலையில் ஏற்படுகின்ற சந்தோஷங்கள் மதிப்பற்றதாகவே போகின்றன. 

இன்னும் அவளின் குழப்பம் அதிகரிக்க அவள் திகைப்புடன் அமர்ந்திருந்தாள். அப்போது வெளியே சென்ற அப்பெண் மருத்துவர் வெளியே நின்றிருந்த ஜஸ்டினிடமும் ஆனந்தனிடமும் அந்தத் தகவலை உரைத்திருந்தார்.

அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் உள்ளே வர ஜஸ்டின் மகளை ஆனந்த கண்ணீருடன் நோக்க ஆனந்தன் உற்சாகத்துடன் அவளைக் கட்டிக் கொண்டு, “லவ் யூ ரெஜி” என்றான். 

ஆனந்தனின் அணைப்பும் சந்தோஷமும் அவளை இன்னும் அதிகமாகக் கோபப்படுத்தியது. அவனை உதறித் தள்ள வேண்டும் போல வெறுப்பும் கசப்பும் மனம் முழுக்க பரவி கிடந்தது.

‘இவன் எல்லாம் ஒரு மனுஷனா?’ என்று மனதிற்குள் திட்டித் தீர்த்தாள். அவள் தேகத்தை அணைத்திருந்த அவன் கரத்தை இழுத்து உதறித் தள்ளி விட வேண்டுமென்று தீவிரமாக எண்ணினாலும் அவளால் முடியவில்லை. 

பின்னோடு நின்ற தந்தையின் கண்களிலிருந்து அளவில்லா நெகிழ்ச்சியும் பூரிப்பும் அவள் நினைத்ததைச் செய்ய விடாமல் அப்போதைக்குத் தடுத்திருந்தது.

இனி என்ன செய்வது என்ற தடுமாற்றமும் பயமும் அவளுக்குள் உருவாகி இருந்தது.  

மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு வீடு வந்து சேரும் வரை அவள் பெரிதாக எதுவும் பேசவில்லை. தன் உணர்வுகளையும் காட்டவில்லை. அதேநேரம் ஆனந்தன் அந்த சந்தோஷமான செய்தியைத் தன் வீட்டினரிடம் சொல்லி இருந்தான். விஷயத்தைக் கேட்டதும் அவர்களுக்குத் தலை கால் புரியவில்லை.

வினோதினியும் அங்கே வீட்டில் இருந்ததால் உடனடியாக அவர்கள் அனைவரும் புறப்பட்டு வந்து ரெஜினாவை பார்ப்பதாகச் சொன்னார்கள்.

அவன் வீட்டை அடைந்ததும் ஜஸ்டின் மகளுடன் அமர்ந்து தனக்குப் பேர பிள்ளை பிறக்கப் போகும் இன்பமயமான உணர்வைப் பகிர்ந்து பூரித்துக் கொண்டிருந்தார்.

அவர் பேசப் பேச ரெஜினாவின் உள்ளத்தவிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஏனோ தந்தையின் மகிழ்ச்சியை அத்தனை சீக்கிரத்தில் உடைத்து நொறுக்க அவளுக்கு மனம் வரவில்லை. மௌனமாகவே இருந்தாள்.

“என்னம்மா… டயர்டா இருக்கியா... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குறியா?” என்று அவர் அக்கறையாக வினவ,

“என்ன ரெஜி ரெஸ்ட் எடுக்கப் போறியா?” என்று ஆனந்தனும் சேர்ந்து கேட்க அவள் அவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. 

“வேணா பா” என்றவள் தன் தந்தைக்கும் மட்டும் பதில் சொன்னாள். ஆனந்தனின் முகம் வாடியது.  

மருத்துவமனையிலிருந்தே அவள் தன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். அவள் ஏதோ உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறால் என்பதால் ஆரம்பத்தில் அவளது அந்த மௌனம் பெரிதாகப் பாதிக்கவில்லை. இப்போது உண்மையில் அவளிடம் ஏதோ சரி இல்லை என்று தோன்றியது.

என்ன ஏதென்று அவளிடம் விசாரிப்பதற்குக் கூட முடியாமல் அங்கே ஜஸ்டின் அமர்ந்திருந்தார். இந்த நிலையில் தன் பெற்றோர்கள் வீட்டிற்கு வருவதாகச் சொன்னதை எண்ணி அவனுக்குக் கவலையும் குழப்பமும் உண்டானது.

ரெஜினாவின் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை குழந்தை பெற்றுக் கொள்ள அவளுக்கு விருப்பம் இல்லையோ? அவளிடம் கேட்டுவிட்டு வீட்டிற்குத் தகவல் சொல்லி இருக்க வேண்டுமோ? அவசரப்பட்டு விட்டோமோ என்று எல்லாம் யோசித்து கவலையுற்றான்.

ஆனால் அந்தத் தகவலை அத்தனை பரபரப்புடன் அவன் சொன்னதற்கு காரணம் இருந்தது. திருமணத்திற்கு முன்பு ரெஜினாவிற்கு குழந்தை பிறக்குமா என்று கேட்டவர்களுக்குப் பதிலடிக் கொடுக்க வேண்டுமென்ற உற்சாகத்தில்தான் விஷயம் தெரிந்ததும் சொல்லிவிட்டான். ஆனால் அவர்கள் உடனடியாகப் புறப்பட்டு வருவதாகச் சொல்வார்கள் என்று அவனுமே நினைக்கவில்லை.    

ரெஜினாவின் முகத்திலிருந்த உணர்வுகளை அவன் அளந்து கொண்டிருக்கும் போதே அவனுடைய பெற்றோர்களும் தங்கையும் தங்கை கணவனும் வந்துவிட்டனர். 

அவர்களைப் பார்த்ததும் முதல் ஆளாக ஜஸ்டின் எழுந்து சென்று அவர்களுக்கு முகமன் கூறி வரவேற்க ஆனந்தன், “வாங்க பா வாங்க ம்மா... வினோ... பாலா” என்று எல்லோரையும் வரவேற்றுவிட்டு தங்கை மகனையும் ஆசையாகக் கைகளில் வாங்கிக் கொண்டான்.

பானுமதி நேராக மருமகளிடம் வந்தார். அன்று சரியாக முகம் கொடுத்துக் கூடப் பேசாதவர் இன்று அவளை அன்புடன் நெருங்கி, “ரொம்ப சந்தோஷமா இருக்கு மா… ஆனந்து விஷயத்தை ஃபோன் பண்ணி சொன்னதும் எங்களுக்கு தலை கால் புரியல… அதான் உடனே உன்னைப் பார்க்கணும்னு ஓடி வந்துட்டேன்” என்று சந்தோஷமாக உரையாடிக் கொண்டே தன் பையில் கொண்டு வந்திருந்த காகிதத்தைத் திறந்து,

‘எப்பா கருப்பா… நல்லபடியா புள்ள பிறக்கணும்’ என்று மனதிற்குள் ஜபித்துவிட்டு,   

“எங்க குலசாமி கோவில் பிரசாதம்” என்று சொல்லி ரெஜினா நெற்றியில் அந்த விபூதியை வைக்கப் போக கடுப்பில் இருந்தவள் அந்த நொடியே அவர் கரத்தைத் தட்டிவிட்டாள். 

அந்த விபூதி பொட்டலம் கீழே விழுந்து சிதறியது.  அவளின் இந்த மூர்க்கமான செய்கையைப் பார்த்த அங்கிருந்த எல்லோரும் அதிர்ந்தனர்.

kothai.suresh and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
kothai.sureshbhavanya lakshmi.nagarajan
Quote

Reginavukku enna kuzhappan and edhanaal ivvalavu kobam? Photovil irundhadu yaar?

Quote

Super ma 

You cannot copy content