You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanam@ - Final Episode

Quote

17 

ரெஜினாவின் அறக்கட்டளை இயங்கத் தொடங்கி ஒரு வருட காலம் முடிந்திருந்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கை திருநம்பிகள் போன்றவர்களின் கல்விகளுக்கான உதவிகள் மற்றும் வாழ்வாதார தேவைகளுக்கு வேலைகளும் வாய்ப்புகளும் உருவாக்கி தரப்பட்டன.  

அந்த அறக்கட்டளையின் முழு நிர்வாகத்தை ரெஜினா கவனித்துக் கொண்டிருந்த சமயம் அஹானாவும் பிறந்து ஆறு மாத காலம் ஓடிவிட்டிருந்தது.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு… 

மதி இரண்டு பெட்டிகளில் தன்னுடைய  துணிமணிகளையும், தேவையானப் பொருள்களையும் அடுக்கி எடுத்து வைத்து மூடினாள்.  

 “இதோ உன் பாஸ்போர்ட், விசா… அப்புறம் டிக்கெட்ஸ்” என்று ரெஜினா அவற்றை எல்லாம் சோதித்துப் பார்த்துவிட்டு மதியிடம் கொடுக்க, 

அதனையும் வாங்கி தன் தோள் பையில் வைத்து மூடினாள்.

“எல்லாம் எடுத்துட்ட இல்ல… லிஸ்ட்டை செக் பண்ணிட்டியா?” 

“பார்க்குறேன் அண்ணி” என்றவள் அந்த செக் லிஸ்ட்டை எடுக்க, 

“இப்படி கொடு… நான் பார்க்கிறேன்” என, 

அதனை ரெஜினாவிடம் கொடுத்தாள். அனைத்தையும் நிதானமாகச் சோதித்து ஒவ்வொன்றாக டிக் செய்தவள், 

“ம்ம்ம் எல்லாம் எடுத்து வைச்சுட்டோம்… சரி… காலைல சீக்கிரமா கிளம்பணும்… படுத்துக்கோ” என்றாள். 

மதியின் முகத்தில் படர்ந்த மெல்லிய பயவுணர்வைக் கவனித்த ரெஜினா அவள் கையை அழுத்தி, “இவ்வளவு தூரம் வந்த பிறகு என்ன தயக்கம் உனக்கு… போயிட்டு வா… நீ ஆசைப்பட்டப் படிப்பைப் படிச்சிட்டு வா” என்றாள்.

“பயமா இருக்கு… முடியுமான்னு தெரியல” என்றவள் அவநம்பிக்கையுடன் சொன்னதைக் கேட்டு, 

“உன்னால முடியலன்னா வேற யாரால முடியும் மதி… நம்பிக்கையா போயிட்டு வா… உன்னுடைய வெற்றி உன்னைப் போன்ற ஒவ்வொருத்தருக்குமான நம்பிக்கை மதி…  உன்னை ஒதுக்குன சமுதாயத்துக்கு நீ புகட்ட போற பாடம்.”

”ஒரு தடவ நீ உங்க அண்ணன்கிட்ட ஏதோ வாழ தகுதியற்ற ஜீவனெல்லாம் சொன்னதா சொல்லி வருத்தப்பட்டாரு… எனக்குப் புரியல… இந்த உலகத்துல நீ எப்படி வாழத் தகுதியற்ற ஜீவனா ஆக முடியும்?”

”இங்க கொலை செய்றவன் கொள்ளை அடிக்கிறவன்… ஏன் பச்ச குழந்தையைப் பாலியல் வன்புணர்வு செய்ற வக்கிரம் பிடிச்சவன் எல்லாம் வாழ்ந்துட்டு இருக்கான்.”

”அவனுக்கு எல்லாம் கூட குடும்பம், குட்டி எல்லாம்  இருக்கு… அப்படி மனுஷனா இருக்க தகுதியே இல்லாத பிறப்புங்க எல்லாம் வாழ்ந்துட்டு இருக்கும் போது நீ எந்தவிதத்துல வாழத் தகுதி இல்லாதவன்னு சொல்லிக்குற?” 

”உனக்கு இந்த உலகத்துல வாழ எல்லா தகுதியும் இருக்கு மதி…  எல்லோரையும் போல சந்தோஷமா வாழுறதுக்கான உரிமையும் இருக்கு. பிறப்பொக்கும் எல்லா உயர்க்கும்… திருவள்ளுவர் பிறப்பால் இங்க எல்லா உயிரும் சமம்னு பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடியே சொல்லிட்டுப் போயிட்டாரு.” 

”முதல நீ உன்னை நம்பு… உன்னுடைய தகுதியை நீ புரிஞ்சுக்கோ… இங்க உன்னைப் போல இருக்க பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு உனக்குக் கிடைச்சிருக்கு… அதை நீ பயன்படுத்தி இன்னும் இன்னும் உன் தகுதியை உயர்த்திக்கணும்.” 

”உன் தகுதியை நீ உயர்த்திக்க உயர்த்திக்க உன்னைக் கீழா பார்த்தவன் எல்லாம் மேல பார்ப்பான்…பார்க்கக் வைக்கணும் மதி… தட்ஸ் தி ஸ்பிரிட்” என்று பேசி முடிக்கும் போது மதி, 

“எஸ் அண்ணி… கண்டிப்பா… நிச்சயம் என் தகுதிய நான் உயர்த்திப்பேன்” என்று சொல்லி அவள் கழுத்தை அன்புடன் கட்டிக் கொண்டாள். 

அப்போது அங்கே வந்த ஆனந்தன், “உங்க மோட்டிவேஷனல் ஸ்பீச் முடிஞ்சிடுச்சுனா நான் உள்ள வரலாமா.” என்று கேட்க, 

ரெஜி அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

அவன் கைகளில் இருந்த அஹானா பளிச்சென்று பிரகாசமாக தன் பொக்கை வாய் திறந்து சிரித்தாள். அப்படியே ரெஜினாவின் நிறத்தில் அவளின் துறுதுறுவிழிகளோடும் புன்னகை இளவரசியாக பிறந்திருந்தாள் அஹானா.   

“இன்னும் நீங்க அஹாவைத் தூங்க வைக்கலயா ஆனந்த்?” என்று ரெஜினா முறைப்புடன் கேட்க, 

“அவ எங்க… தூங்குனாதானே… பாரு எப்படி பிரைட்டா சிரிச்சிட்டு இருக்கான்னு” என்று சொன்ன கணவனை மேலும் கடுப்புடன் பார்த்து, 

“பொண்ண தூங்க வைக்க முடியல… மோடிவேஷனல் ஸ்பீச் கொடுக்குறன்னு என்னைக் கிண்டல் பண்ண மட்டும் முடியுது.” 

“யாரு இப்போ கிண்டல் பண்ணா… உண்மையிலேயே செம ஸ்பீச்… நெக்ஸ்ட் டைம் இதே போல ஒரு ஸ்பீச் நீ நம்ம காலேஜ் பசங்களுக்காகக் கொடுக்கணும்.” என,

“உன்னை…” என்றவள் அவன் மீது தூக்கி அடிக்க ஏதாவது பொருள் கிடைக்கிறதா என்று தேடினாள்.

இவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்த அந்தச் சிறிய இடைவெளியில் அஹானா வசதியாக மதியிடம் தாவிவிட்டாள்.

பிறந்ததிலிருந்து அஹானாவைப் பார்த்துக் கொண்டதெல்லாம் மதிதான். அஹானாவை மடியில் போட்டுக் கொஞ்சும் போதும், தூங்க வைக்கும் போதும் தனக்குள் இருந்த பெண்மையை முழுமையாக அவள் உணரப் பெற்றாள். அதன் அடுத்த நிலையான தாய்மை உணர்வைப் பெற்று விட்ட பூரிப்பு உணர்வில் திளைத்தாள்.

உண்மையில் அஹானாவை விட்டு எப்படி பிரிந்து போகப் போகிறோம். அவளை விட்டு எப்படி இருக்கப் போகிறோம் என்றுதான் ரொம்பவும் கவலையாக இருந்தது.

மதியின் உணர்வை அவள் முகம் பார்த்துப் படித்திருந்த ரெஜினா, “இன்னைக்கு வேணா அஹானாவை உன் கூடப் படுக்க வைச்சுக்கோ.” என, 

“தேங்க்ஸ் அண்ணி… நானே உங்ககிட்ட எப்படி கேட்குறதுனு நினைச்சேன்.” 

“உனக்கு அவளைப் பிரியறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும்… என்னைக் கேட்டா அவளுக்கு இன்னும் கஷ்டமா இருக்கும்… இனி நான் எப்படி அவளைச் சாமளிக்க போறேன்னு தெரியல” என,

“நான் அதுக்குதான் இன்னும் ஒரு வருஷம் கழிச்சுப் போறேன்னு சொன்னேன்” என்றாள் மதி.

“அத பத்தி நிறைய நாம பேசிட்டும்… நீ நாளைக்குக் கிளம்பித்தான் ஆகணும்” என்று உறுதியாகச் சொன்ன ரெஜினா, 

“சரி நீ அவளைப் படுக்க வைச்சுட்டு நீயும் சீக்கிரம் படு” என்று விட்டு ரெஜினா அறையை விட்டு வெளியே வர அவள் பின்னோடு ஆனந்தன் வந்தான்.

மின்தூக்கியில் ஏறி இறங்கிய சமயம் ஆனந்தனை ஒரு மாதிரியாகத் திரும்பிப் பார்த்து வைக்க, “என்னாச்சு? ஏன் அப்படி பார்க்குற?” என்று கேட்க, 

“சார் இப்பெல்லாம் உங்க பொண்ணத்தான் ரொம்ப அதிகமா தூக்குறீங்க… என்னைத் தூக்குறதே இல்ல” என, 

“அதுக்கு என்ன பன்றது பேபி…? நீ இப்போ எல்லாம் கொஞ்சம் வெயிட்டு கூடிட்ட” என்று கேலி புன்னகையுடன் கூற  அவள் முகம் கடுகடுத்தது. 

“எது…? வெயிட்டு கூடிட்டனா?” என்றவள் அறை வாசலில் அப்படியே தன் சக்கர நாற்காலியை நிறுத்தி விட்டு, “இப்படி நீ சொன்னதுக்காகவே இப்போ என்னைத் தூக்கணும்… இல்லனா ரூமுக்குள்ள வரமாட்டேன்” என்றாள் பிடிவாதமாக முறைத்து கொண்டே!

“உனக்கே அநியாயமா இல்லையா… ஓரடி தாண்டி வந்தா ரூம் வர போது.”  

“கல்யாணம் ஆன புதுசல வேணா வேணானு நான் கதறுனாலும் கேட்காம தூக்கிக்குவ… நானே கேட்டாலும் இப்போ எல்லாம்  சமாளிக்குற.” என்று முறைக்க, 

“ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்ல பேபி.” என்றவன் அவளைக் கைகளில் தூக்கிக் கொண்டு அறைக்குள் போக எத்தனிக்க, 

“எங்கே நேரா ரூமுக்குள்ள போற… கிச்சன்குள்ள போய் திரும்பி டைனிங் ஹால் உள்ள வந்து அப்புறமா ஹாலுக்குள்ள நுழைஞ்சு ரூமுக்குள்ள போகணும்” என்றாள்.

“நீ பண்றது அநியாயம்டி” என்றவன் கூற, 

“இந்தக் கதையே வேண்டாம்… ஒழுங்கா சுத்தி வா” என்றவள் அதிகாரமாகச் சொல்ல, அவள் சொன்னது போலவே சமையலறைக்குள் புகுந்து உணவு மேஜையைத் தாண்டி வந்து முகப்பறையில் ஒரு வட்டமிட்டு அவன் அறைக்குள் நுழைய, 

“தட்ஸ் குட்… இப்போ இறக்கி விடு” என்றாள்.

“நல்ல கதையா இருக்கே… சுத்தி வந்ததுக்கு பேட்டா கொடுமா.”

“பேட்டாவும் கிடையாது பாட்டாவும் கிடையாது… ஒழுங்கா இறக்கி விடு.” என்றவள் சொல்ல, 

“அப்போ அவ்வளவுதானா பேபி?” என்றவன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, 

“போனா போகுது… புழைச்சுப் போ” என்றவள் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் பதிக்க போகவும் அவன் தம் இதழ்களைத் திருப்பி அந்த முத்தத்தைத் திசை மாற்றிவிட்டான்.

இறுக்கமாக அவள் இடையினைப் பற்றி அந்த இதழ் முத்தத்தை நீடித்தவன் தன்னுடைய முத்தத்தைத் தொடர்ந்தபடியே படுக்கையில் அமர்ந்து அவளைத் தன் மடியில் கிடத்திக் கொண்டான். 

அவள் கரங்களும் அவனைத் தன் தேகத்துடன் இறுகப் பிணைத்துக் கொள்ள, அவன் இதழ்கள் மோகத்துடன் அவள் உடலெங்கும் பதிந்தன. அவளைக் கிறங்கடித்தன.

வெகு நாளைக்குப் பிறகு ஒரு முழுமையான கூடலில் பிணைந்தவர்களின் உறவு புதுப்புது எல்லைகளைத் தொட்டன.  காதலும் காமமும் செறிய தங்கள் உறவுகளையும் உணர்வுகளையும் புதுப்பித்துக் கொண்டனர். 

ஆனந்தன் இல்லாத உலகத்தை ரெஜினாவும், ரெஜினா இல்லாத வாழ்க்கையை இனி ஆனந்தனும் கனவிலும் கூட கற்பனை செய்து பார்க்க முடியாதளவுக்கு உடலாலும் உள்ளத்தாலும் அவர்கள் ஒன்றெனக் கலந்து விட்டிருந்தனர். 

சூரியனின் பொற்கிரணங்கள் அழகாய் மேகங்களிலிருந்து எட்டி வெளியே தலைக்காட்ட அடுத்த நாள் விடியல் அந்த உதயத்துடன் புதிதாகத் தொடங்கியது. 

கார் ஓட்டுநர் மதியின் பெட்டிகளை அவள் அறையிலிருந்து இறக்கி எடுத்துச் செல்ல, மதி கண்ணீருடன் அஹானாவின் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு ரெஜினாவின் கைகளில் தந்தாள்.

தன் கைப்பேசி எடுத்துப் பேசிக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்த ஆனந்தன், “மதி போலாமா… பாஸ்போட், விசா எல்லாம் எடுத்து வைச்சுக்கிட்டியா?” என்று கேட்க, 

“அது எல்லாமே நைட்டே செக் பண்ணி அண்ணி எடுத்து வைச்சுட்டாங்க” என்றாள்.

“சரி அப்போ கிளம்புவோமா?” என்று ஆனந்தன் கேட்க, 

“பை அஹா… ஐ மிஸ் யூ” என்று கண்ணீருடன் சொன்னவள் ரெஜியின் கழுத்தை இறுகத் தழுவிக் கொள்ள, ரெஜினாவின் பார்வை வெளிவாசலில் இருந்தது.  

“போயிட்டு வரேன் அண்ணி” என்று சொல்லி வாசலைக் கடக்கும் போது, வாயிலில் ஒரு கார் வந்து நின்றது. 

ரெஜினா அந்த காரைப் பார்த்தும் நிம்மதியாக மூச்சை இழுத்துவிட்டாள். ஆனால் மதியும் ஆனந்தனும், “யார் வரா?” என்று குழம்பி நிற்க, காரிலிருந்து பானுமதியும் வினோவும் இறங்கி வந்தனர்.

ஆனந்தன் திரும்பி ரெஜினாவைப் பார்த்தான். “நான் அவங்களுக்கு ஃபோன் பண்ணலயே… நீ பண்ணியா?” என்று கேட்க, 

“ஆமாம் பண்ணேன்” என,

“ஏன்?” என்றவன் முறைக்க, 

“உங்க அப்பாவோட கோபத்துக்காக நீ உங்க அம்மாவைத் தண்டிக்குறது நியாயம் இல்ல ஆனந்த்… நானும் அவங்கள முதல தப்பாதான் நினைச்சேன்… ஆனா அவங்க மோசமானவங்க இல்ல… தனிச்சு எதுவும் செய்ய முடியாத இயலாமைல மாட்டிக்கிட்டவங்க.” 

”அவங்களுக்கு மதியைப் பார்க்க எல்லா உரிமையும் இருக்கு… அதேபோல மதிக்கு அம்மா பாசம் கிடைக்குறதை நாம ஏன் தடுக்கணும் சொல்லுங்க?” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பானுமதியும் வினோவும் அவர்களை நெருங்கி வந்திருந்தனர். 

“ம்மா” என்று மதியின் ஒரு அழைப்பில் கரைந்து போன பானு மகளைக் கட்டியணைத்துக் கொண்டார். ஆம் மகளை. மதியை தன் மகளாக முழுமையாக ஏற்றுக் கட்டிக்கொண்டார்.

வினோ கண்ணீருடன் அந்தக் காட்சியைப் பார்த்திருந்தாள். ஒரு வாரம் முன்பு ரெஜி அவளிடம் பேசாமல் போயிருந்தால் இதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. 

ரெஜினா சொல்லித்தான் அவள் தன் அம்மாவை அழைத்து வந்திருந்தாள். ஆனால் வீட்டில் யாருக்கும் தெரியாமல்.

 அப்பா அவள் கணவன் யாரும் இத்தகைய மாற்றங்களை ஏற்கும் மனநிலையில் இல்லை என்ற போதும் மாற்றத்திற்கான முதல் அடியை அவர்கள் இருவரும் எடுத்து வைப்பதற்கு இம்முறை தைரியமாக முடிவெடுத்து மதியின் அந்த முன்னேற்ற பயணத்திற்கு வழியனுப்பி வைக்க, அங்கே வந்திருந்தனர்.

பானுமதி வெளிநாடு சென்று படிக்க போகும் தன் மகளை மனதார ஆசீர்வாதம் செய்து கையோடு எடுத்து வந்திருந்த  குலசாமி விபூதியைப் பூசிவிட்டுப் பின் அந்தக் காலை வேளையிலும் இரம்மியமாகச் சிரித்து விளையாடும் பேத்தி நெற்றியிலும் பூசப் போனார்.

ஆனால் அவர் கை அப்படியே நின்று விட்டு ரெஜினாவைப் பார்க்க, “வைச்சு விடுங்க அத்தை” என்றாள்.

அவர் அஹானாவிற்கு வைத்ததும் ரெஜி தன் நெற்றியைக் காண்பித்து வைக்கச் சொன்னாள். நெகிழ்ச்சியும் கண்ணீருமாக மருமகள் நெற்றியிலும் வைத்து விட்டவர் அவள் தலையைத் தொட்டு, “நீ நல்லா இருக்கணும்” என்று மனதார ஆசிர்வதித்தார்.

மதிக்கு விமான நிலையத்திற்குச் செல்ல நேரமாகிவிட்டதால் அவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிட்டு, அவளும் ஆனந்தனும் புறப்பட்டனர். 

அவர்களை வழியனுப்பியதும் அஹனாவை வாங்கிக் கொண்ட வினோ, “நான்தான்டி உங்க அத்தை” என்று கொஞ்ச ஆரம்பிக்க, 

“வாங்க… உள்ள வாங்க” என்று அவர்களை உள்ளே அழைத்துச் சென்று உபசரித்தாள் ரெஜினா. 

அதேநேரம் விமான நிலையத்தில் காத்திருந்த ஜஸ்டினும் ஆனந்தனுடன் இணைந்து கொண்டு மதி புறப்படுவதற்கான அனைத்து விதமான விதிமுறைகளுக்கும் உடனிருந்து உதவினர்.

மதி போர்டிங் பாஸ் வாங்கி உள்ளே செல்லும் வரை பார்த்திருந்து மதியைக் கண்ணீருடன் ஆனந்தன் வழியனுப்பிவிட்டுத் திரும்பினான்.

அதன் பின் தனியாகத் தன் பயணத்திற்கு ஆயத்தமான மதி விமானத்தில் ஏறினாள். 

அந்த விமானம் வானை நோக்கி தம் கம்பீரமான சிறகுகளுடன் காற்றைக் கிழித்து மேலே மேலே உயர்ந்து பறக்கத் தொடங்கியது.

ஒரு வருடத்திற்கு முன்பு பெண்களின் இலவசப் பேருந்தில் ஏறிய போது திருநங்கை என்ற அடையாள அட்டை இல்லாமல் இறக்கி விட பட்டாள்.

இன்று விமானம் ஏறி நாடு விட்டு நாடு செல்கிறாள். பிறப்பு நிறம், வயது, பாலினம் என்று எந்தப் பேதமும் பாராபட்சமும் பார்க்காத அமெரிக்காவின் வர்ஜின்யா மாகாணத்தில் உள்ள வர்ஜீனியா  பல்கலைகழகத்தில் தன்னுடைய விருப்ப படிப்பான பயோ மெடிக்கல் எஞ்சினியரிங் சேர்ந்து படிக்கச் செல்கிறாள்.

இதுவரையில் நடந்தது அத்தனையும் ஒரு மோசமான வலி நிறைந்த கனவு போல இருந்தது. இன்று நடப்பதை எல்லாம் நிஜம் என்று நம்புவதற்குக் கூட அவளுக்குக் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் உண்மையில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அவள் கொஞ்சமும் எதிர்பார்த்திராத நல்ல மாற்றம்.

விமானம் உயரமாகப் பறக்கப் பறக்கப் பெரும் மாநகரங்களும் சிறு புள்ளிகளாகத் தெரிவது போல அவள் அனுபவித்த கஷ்டங்களும் துயரங்களும் கடந்து வந்த போராட்டங்களும் புள்ளிகளாக மாறித் தெரிகின்றன.  

‘Life was always a matter of waiting for the right moment to act’ என்று எப்போதும் அவள் மனதில் தோன்றும் ஆங்கில எழுத்தாளர் பவுலோ கோய்லோ (paul coelho) வரிகள் நினைவு வந்த அதேநேரம் ரெஜினாவின் வார்த்தைகளும் நினைவு வந்தன. அவள் சொன்னது போல இது அவள் செயல்பட வேண்டிய சரியான நேரம். தன்னை நிரூபிக்க வேண்டிய நேரம். அவளது ஒரு வெற்றி பெரிய மாற்றங்களை இங்கே கொண்டு வர முடியும். புரட்சிகளை ஏற்படுத்த முடியும். 

அதற்குத் துணிச்சலுடன் அவள் இன்று இயங்க வேண்டியது அவசியம்.

இனி அவள் செய்ய வேண்டியது எல்லாம் தான் இதுவரை கடந்து வந்த அவமானங்கள் இனி கடக்கப் போகும் அவமதிப்புகள், உணர்ச்சிப் போராட்டங்கள் என அத்தனையும் கிழித்துக் கொண்டு இந்த விமானம் போல மேலே மேலே பறப்பது. 

அப்போது அத்தனையும் வெறும் புள்ளிகள் ஆகிவிடும். 

இங்கே பாலின அடையாளம் என்பது ஒருவர் தன்னை எவ்வாறு உணர்கிறார் என்பதுதான். ஒருவருக்குப் பிறப்பின் வழி அது உயிரியலாகவே அமையலாம் அல்லது வேறுபடலாம். 

***************நிறைவு************

vanitha16, kothai.suresh and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16kothai.sureshbhavanya lakshmi.nagarajan
Quote

A very good message and Your way of story telling is awesome as always Monisha...

monisha has reacted to this post.
monisha
Quote

Excellent story and congrats to you Moni sis. Justin and Regina character really super. Anand, Banumathy and Vino ivargalin mattramum super. Why moni sis indha kadhai short storya mudithu vitteergal? But short and sweet story with good message to our society.

monisha has reacted to this post.
monisha
Quote

super story moni

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from Guest on February 4, 2024, 5:10 PM

super story moni

thank you ma 

 

Quote

Nice story 👍

monisha has reacted to this post.
monisha
Quote

Semma story really superb 

monisha has reacted to this post.
monisha
Quote

Also, I was on progesterone 100mg for first 14 weeks of pregnancy I had a small hemorrhage between the sacs and spotted very little but quite frequently best site to buy priligy canada ER81 and ERM appear to be targets of the Ras Raf MEK ERK signaling cascade, whereas Spi B is phosphorylated by ERKs and JNK

Quote

Production of 18 oxo cortisol in subtypes of primary aldosteronism 1mg finasteride price

You cannot copy content