You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanm@ - Episode 5

Quote

5

ஒரகடத்தில் உள்ள அனைத்து விதமான வசதிகளும் கொண்ட ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்திலிருந்த பல கார்களுக்கு இடையில் தன்னுடைய ஐ டென் காரை நிறுத்தினான் ஆனந்த். இரவு பன்னிரண்டு மணிக்கும் மேலாகிவிட்டதால் பெரிதாக நடமாட்டங்கள் இல்லை.

மின்தூக்கியில் ஏறி ஐந்தாவது மாடியில் இறங்கி தன் குடியிருப்பிற்கு வந்து அழைப்பு மணியை அடிக்கும் போதே வெளியே இருந்த தங்கையின் தங்க நிறச் செருப்பைப் பார்த்தான்.

“வா அண்ணா” என்ற புன்னகை முகமாக அழைத்துக் கொண்டே கிரில் கேட்டின் பூட்டைத் திறந்தாள் வினோதினி. 

“எப்படி இருக்க வினோ... எப்போ வந்த? பாலாவும் வந்திருக்காரா?” என்ற விசாரிப்புடன் தன் ஷுக்களைக் கழற்றி ஸ்டாண்டில் வைத்துவிட்டு உள்ளே வந்தான்.

“இல்ல ண்ணா... நான் மட்டும்தான் வந்தேன்... அவர் சனிக்கிழமை வர்றேன்னு சொன்னாரு... ஆமா... நீ என்ன அண்ணா இன்னைக்கு இவ்வளவு லேட்டு.”

“மதுராந்தகம்ல ஒரு புது ப்ரொஜெக்ட் வினோ... வேலையை முடிச்சிட்டுக் கிளம்பவே லேட்டாகிடுச்சு” என்று கூற,

“சரி அண்ணா... நீ குளிச்சிட்டு, சாப்பிட வா” என்று அழைத்தாள்.

“லேட்டாகிடுச்சு... நான் சாப்பிட்டேன்” என்று கூறிக் கொண்டே தன் அறைக்குள் போக அவள் கோபமாக எட்டிப் பார்த்து,

“சாப்பிட்டேன்னு ஒரு வார்த்தை ஃபோன் பண்ணக் கூடாதா? அம்மா நீ சாப்பிட வருவன்னு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.” என்று கொஞ்சம் உயர்த்தலான குரலில் கேட்டாள்.

அவன் எதுவும் சொல்லவில்லை. அவளைத் திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டுக் கழிவறைக்குள் சென்றுவிட்டான்.

அவன் அலுவலகத்தை விட்டுக் கிளம்பும் தருவாயில் ஜஸ்டின், ‘நான் நாளைக்கு வந்து உங்க வீட்டுல கல்யாணத்தைப் பத்திப் பேசுறேன்’ என்று சொன்னது மனதை நெருடியது.

இரண்டு நாளாக வீட்டில் அம்மா அப்பா இருவரும் அவனிடம் சரியாகப் பேசுவதில்லை. ரெஜினாவை திருமணம் செய்வதைப் பற்றிப் பேசியதிலிருந்து அழுகை, கோபம், அறிவுரைகள் அவற்றை எல்லாம் தொடர்ந்து இப்போது பேசாமல் இருக்கும் யுக்தியைக் கடைப்பிடிக்கிறார்கள்.

அவர்களின் பிடிவாதத்திற்கு அவனும் ஈடுகொடுக்கும் விதமாக அவர்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டான். இப்போது வினோதினி வந்திருப்பதும் இந்தத் திருமண விஷயத்திற்குப் பஞ்சாயத்துச் செய்யத்தான்.

இது பற்றிப் பேசி அவன் ஒரு மாதிரி களைத்துப் போய்விட்டான். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு ரெஜினாவிடம் பேசியதைப் பற்றி எண்ணிய போது உதட்டில் இலகுவாக ஒரு புன்னகை மலர்ந்தது.

அவர்களுக்கு இடையிலான நடந்த அந்தப் பேச்சு வார்த்தைக்கு முன்பு வரை அவளை அவனுக்குப் பிடிக்காது. பிடிக்கவே பிடிக்காது. அவன் வேலைக்குச் சேர்ந்த புதிதில் அலுவலகத்தில்தான் முதல் முறை பார்த்தான்.

பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது பருவ பெண்ணாக. அவள் உடை, நடை, பேச்சு அத்தனையிலும் அதீத பணக்காரத்தனம் தெரியும்.

அவன் வேலைக்கு சேர்ந்த புதிதில் முதல் முதலாக அவளை அப்படித்தான் சந்தித்தான்.

ஜஸ்டினின் அலுவலக அறை கதவருகே அவன் வெளியே செல்ல எத்தனிக்கும் போது அவள் அநாகரிகமாகக் கதவைத் தள்ளிக் கொண்டு வந்த விதத்தில் அவன் கையிலிருந்த கோப்பும் அதிலிருந்த தாள்களும் கீழே கொட்டிவிட்டன.

“ஓ சாரி” என்று அதனைப் பெரிதாகப் பொருத்தப்படுத்தாமல் அவள் அவனை அவசரமாகக் கடந்து சென்றாள். அவனுக்குக் கோபமாக வந்தது.  

அவன் கீழிருந்து காகிதங்களை எடுத்துக் கொண்டிருக்க, “டேடி ஐ பாட் தி டிக்கெட்ஸ்.” என்று உற்சாகத்துடன் கூறிக் கொண்டிருக்க அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

சுருள் சுருளான முடி அவளது பாதி முகத்தை மறைத்திருந்தது. மீதி பாதியில் ஒட்டிய கன்னங்களும் செழிப்பான உதடுகளும் வெளியே தெரிந்தன. அதேநேரம் அதிக முதிர்ச்சி இல்லாத உடல். அவன் அந்தக் காகிதங்களை எடுத்துச் செல்லும் போது,

“ஓ.. ரெஜி... உன்னை யாரு கார் ஓட்டிட்டு வரச் சொன்னது.” என்று ஜஸ்டின் பதட்டத்துடன் கேட்க,

“டேடி நான் ட்ரைவிங் கத்துக்கிட்டேன்.” என்றவள் கூற,

“இந்த டிராஃபிக்ல நீ ஓட்டிட்டு வந்திருக்கக் கூடாது.” என்று மீண்டும் கண்டிப்புடன் அவர் குரல் ஒலிக்க,

“இட்ஸ் த்ரில்லிங் டேடி.” என்றாள் உற்ச்காத்துடன்.

அவர்கள் சம்பாஷணைகள் முடிவதற்கு முன்பாக அவன் அறையை விட்டு வந்துவிட்டான்.

அன்று வேலையை முடித்து போகும் போது அவனுடைய புத்தம் புது பைக் இடித்துத் தள்ளப்பட்டிருந்தது. கண்ணாடி லைட்கள் எல்லாம் உடைந்திருந்தன.

காவலாளி அவன் பைக்கை இடித்தது பாஸின் கார் என்றும் ஜஸ்டினின் மகள் ரெஜினா ஓட்டி வந்த போது தெரியாமல் இடித்துத் தள்ளிவிட்டார் என்று தெரிவிக்க, அவனுக்கு இரத்தம் கொதித்தது.

அவன் சம்பளத்தைச் சேர்த்து வைத்து ஆசை ஆசையாக வாங்கியிருந்த பைக் அது. அதனை உடைத்துவிட்டுப் போய்விட்டாள் என்று அப்படியொரு கோபம் வந்தது.

அவள் பாஸின் மகளாக இல்லாமல் வேற யாராவதாக இருந்தால் உண்டு இல்லையென்று செய்திருப்பான். இப்போது அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அன்றே அவள் மீது அவனுக்கு ஒரு வித துவேஷம் ஏற்பட்டிருந்தது. ஜஸ்டினின் எளிமையும் நற்குணங்களும் அவளிடம் துளி கூட இல்லையென்று தோன்றியது. அதற்கு பிறகான ஒவ்வொரு சந்திப்பிலும் அவளைத் திமிர் பிடித்தவளாகத்தான் பார்த்தான். 

  தன்னைப் போன்ற நடுத்தரவர்க்க ஆணை, அவளைப் போன்ற பணக்கார பெண் கீழாகத்தான் பார்ப்பாள் என்ற எண்ணமும் அவனுக்குள் ஆழமாக இருந்தது.

ஆனால் மூன்று வருடம் முன்பாக அவளுக்கு விபத்து ஏற்பட்டுப் படுத்தப் படுக்கையாகக் கிடந்த செய்தியை அறிந்த போது உண்மையிலேயே அவனுக்குப் பரிதாபம் உண்டானது. அதேநேரம் அவளாகத்தான் இதை எல்லாம் இழுத்து விட்டுக் கொண்டால் என்ற அலட்சியமும் உண்டனாது.

அன்று அவள் சக்கர நாற்காலி விட்டுக் கீழே விழுந்திருந்தைப் பார்த்ததும் தூக்கியது கூட அந்தப் பச்சாதாப உணர்வில்தான். ஆனால் கொஞ்சமும் யோசிக்காமல் அவள் கன்னத்தில் அறைந்துவிட்டாள். அந்த நொடியே பதிலுக்கு அவளை அறைய வேண்டுமென்ற எழுந்த எண்ணத்தை மிகவும் பிராயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டான்.

ஜஸ்டினின் மீதான மரியாதை அவனைத் தடுத்துவிட்டது.

நடக்க முடியாமல் போன போதும் அவளுடைய பணக்காரத்தனமும் திமிரும் கொஞ்சமும் குறையவில்லை என்று எண்ணம் எழ, அன்றிலிருந்து அவளைப் பார்ப்பதைக் கூடத் தவிர்த்தான்.

வேலை விஷயமாக ஜஸ்டின் வீட்டிற்குச் சென்றால் கூட அவள் இருக்கும் திசைப் பக்கம் கூடப் போக மாட்டான். ஆனால் இன்று விதி அவனை இழுத்துக் கொண்டு போகும் திசையைப் பற்றி யோசிக்கும் போது விசித்திரமாக இருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக அவளுடனான உரையாடலைப் பற்றி யோசிக்கையில் பிடிக்கவில்லை என்று கருத்துக் கொஞ்சமாக மாறியிருப்பதாகத் தோன்றியது. ஆனால் திமிர் பிடித்தவள் என்று கருத்து மாறவில்லை. 

‘திமிரு பிடிச்சவ’ என்று சொல்லியவன் உதடுகள் மீண்டும் புன்னகையை உதிர்த்தன.

குளித்து முடித்துத்  துண்டை எடுத்துத் துடைத்து கைலியை அணிந்து கொண்டு படுக்கையில் வந்து விழுந்தான். கண்களை மூடினாலும் கடந்த இரண்டு நாட்களாகப் படுத்ததும் உறங்க முடியவில்லை.

மஞ்சள் நிற குர்தி அணிந்திருந்த ரெஜினாவும் வழுவழுப்பான அவள் கன்னங்களும் சுருள் முடிகளும் அவன் உறக்கத்தின் சில மணிநேரங்களை விழுங்கிக் கொண்டன.

‘ரெஜி... னா... ரெஜினா ஆனந்தன்...நைஸ்... நல்லாத்தான் இருக்கு... ம்ம்ம்... பார்க்க அழகாத்தான் இருக்கா... ஆனா சரியான திமிரு பிடிச்சவ...’ என்றவன் படுக்கையில் புரண்டு கொண்டே அவளைப் பற்றி யோசிக்கும் போது தங்கையின் மகன் ஷ்யாமின் அழுகுரல் கேட்டது.

 தூங்காமல் எப்போதும் போல அடம் பிடித்து அழுகிறான் என்று எண்ணிக் கொண்டவன் திரும்பி படுத்து உறங்க முற்பட்டான். ஆனால் அழுகுரலின் சத்தம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே போக அவன் பதட்டத்துடன் எழுந்து அமர்ந்து கொண்டான்.

கதவைத் திறந்து வெளியே வர, அவன் அம்மா பானுமதி குழந்தையைத் தூக்கி வைத்து சமாதானம் செய்து கொண்டிருக்க ஈஸ்வரன், “என்னடா கண்ணு பண்ணுது உனக்கு…? தாத்தா ஃபோன் தரவா…? பாப்பா பாட்டுப் போடவா?” பேரனிடம் பேச்சுக் கொடுத்து அவனது அழுகையைக் குறைக்க முயன்றார்.

  ஆனந்த் அங்கே வந்து நின்றதைப் பார்த்ததும் இருவரும் அவனைக் கண்டும் காணாதது போல முகத்தைத் திருப்பிக் கொள்ள அவன் உள்ளே சென்று தங்கையைத் தேடினான். வினோதினி ஏதோ நாட்டு மருந்தை அரைத்துக் கொண்டிருந்தாள்.

“வினோ... குழந்தைக்கு என்ன? ஏன் இப்படி அழுறான்?”

“வயித்து வலிக்குது போல... அது நாங்க வீட்டுக்கு வரும் போது ஹோட்டலில சாப்பிட்டோம்... அது ஏதாவது பண்ணி இருக்கும்... இந்த மருந்தை ஊத்துனா சரியா போயிடும்” என்று கூறி அரைத்த மருந்தை பாலாடையில் ஊற்றிக் கொண்டு வர,

“இல்ல ரொம்ப அழுறானே... ஹாஸ்பிட்டல் ஏதாவது போகணுமா?” என்று அவன் அக்கறையுடன் கேட்க,

“அதெல்லாம் வேண்டாம் அண்ணா.. மருந்து கொடுத்தா சரியாயிடும்.” என்றவள் மகனைக் கையில் வாங்கி, “ஷ்யாம் கண்ணா... குடிச்சிடுங்க” என்று மடியில் படுக்க வைத்து அவனை தாஜா செய்து கொஞ்சி கெஞ்சி அந்த மருந்தை கொடுக்க முயன்றாள்.

ஆனால் அந்த மருந்தைக் குடிப்பதற்குள் அவன் பெரும்  ஆர்ப்பட்டாமே செய்து கொண்டிருக்க, ஈஸ்வரன் பேரனை அசையாமல் பிடித்துக் கொண்டார்.

ஒரு வழியாக அவன் மருந்தைக் குடித்து முடிக்க மீண்டும், “அவ்வளவுதான்டா கண்ணா” என்று பானு குழந்தையை வினோவிடமிருந்து தூக்கிக் கொண்டார்.

குழந்தையின் அழுகை மெல்ல குறைந்துவிட ஆனந்தன் மீண்டும் தன் அறைக்குள் செல்லப் போக, “அண்ணா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் வினோதினி.

அவன் பார்வை தன் அம்மா அப்பாவைக் கவனிக்க, அவர்கள் இருவரும் அவனைக் கோபமாகப் பார்த்துவிட்டு ஷ்யாமைத் தூக்கிக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

அவளை அறைக்குள் வர சொல்லிவிட்டுப் படுக்கையில் சென்று அமர்ந்துவிட்டு,

“சொல்லு என்ன பேசணும்?” அங்கே ஓரமாக இருந்த ரூபிக்ஸ் க்யூபை கையில் எடுத்து அதனைத் திருப்ப தொடங்கிவிட்டான்.

அவன் எதிரே அமர்ந்தவள், “நீ உன் பாஸோட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்றியாம்... அதுவும் அந்தப் பொண்ணுக்கு கால் நடக்க முடியாதாம்.” என்று கேட்க,

“ஆமாம், சொன்னேன்.” என்றவன் அவளை நிமிர்ந்து பார்க்காமல் அதனைத் திருப்புவதில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.

“நீ எதுக்கு அண்ணா ஒரு ஹான்டிக்கேப்ட் பொண்ணை…” என்றவள் சொன்னதும் சரேலென்று அவளை நிமர்ந்து பார்த்து,

“ஹான்டிகேப்ட் இல்ல... பிஸிக்கிலி சேலஞ்ச்ட்னு சொல்லு” என்று அவள் வார்த்தையைத் திருத்தக் கடுப்பானவள்,

“ஏதோ ஒன்னு... நீ எதுக்கு அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்…? உனக்கு என்ன அவசியம்…? உன் பாஸ் உன்னை ஏதாவது கட்டாயப்படுத்துறாரா?” என்றவள் கேட்க அவன் மீண்டும் அந்த க்யூபைத் திருப்பிக் கொண்டே,

“அப்படி எல்லாம் இல்லை வினோ... அவர் கேட்டாரு... எனக்கும் ஓகேன்னு தோனுனதால நானும் சம்மதம் சொன்னேன்” என்றான்.

“ஓ... உனக்கு வேலைக் கொடுத்தது... படிக்க வைச்சது... இப்போ கார் கொடுத்தது... எல்லாம் அந்தப் பொண்ணை உன் தலையில கட்டத்தானா?” என்றவள் கோபமாகக் கேட்க,

“உளறாதே... மூணு வருஷம் முன்னாடிதான் ரெஜினாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி நடக்க முடியாம போச்சு... ஆனா ஜஸ்டின் சார்கிட்ட ஆறு வருஷமா நான் வேலை பார்க்கிறேன்” என்றான்.

“ஓ... ஒரு வேளை அவர் பொண்ணுக்கு இப்படியொரு ஆக்சிடென்ட் நடக்காம இருந்திருந்தா... அவர் அந்தப் பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறேன்னு சொல்வாரா?” என்று கேட்க, அவன் மிதமாக சிரித்தபடி தங்கையைப் பார்த்து,

“நிச்சயம் மாட்டாரு... ஏன்? அந்தப் பொண்ணே கூட  என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க மாட்டா.” என்றான்.

“உனக்கே தெரியுது இல்ல... அவங்க உன்னைப் பலியாடா ஆக்கப் பார்க்கிறாங்கனு” என்று சொன்ன வினோ மேலும்,

“நீ எதுக்கு நடக்க முடியாத பொண்ணைக் கட்டிக்கிட்டு காலம் பூரா கஷ்டப்படனும்…? பேசாம நீ அந்த வேலையை விட்டு வந்துடு... உனக்கு என்ன வேற வேலை கிடைக்காதா…? உன் திறமைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் இதை விட நல்ல வேலை கிடைககும்” என்றாள்.  

“கிடைக்கும்... ஆனா பல நூறு கோடி ரூபா மதிப்புள்ள வீடு, காலேஜ், ஸ்கூல்... அப்புறம் கன்ஸ்டிரக்ஷன் கம்பனி இதுக்கெல்லாம் முதலாளி ஆகுற வாய்ப்பு கிடைக்குமா…? அவரோட இவ்வளவு சொத்துக்கும் ரெஜினா மட்டும்தான் ஒரே வாரிசு... ஒரு வேளை நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா... அந்தச் சொத்துக்கெல்லாம நான்தான் உரிமையாளன்” என்று கூற,

“என்ன அண்ணா... வெறும் காசுக்காக கல்யாணம் பண்ணிக்கப் போறியா? சுயபுத்தியோடதான் பேசுறியா?” என்று அவள் அதிர்ச்சியுடன் கேட்க அவளை ஆழமாக பார்த்தவன்,

“நீ சுயபுத்தியோடதான் பாலாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.

“என் கல்யாணத்துக்கும் இதுக்கும் என்ன அண்ணா சம்பந்தம்?” என்று கேட்டு அவனைப் புரியாமல் பார்க்க,

“ஒரு வேளை பாலா சென்ட்ரல் கவர்மென்ட் எம்பிளாயியா  இல்லாம இருந்தா நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருப்பியா வினோ?” என்று கேட்டு ஆழமாக ஒரு பார்வை பார்த்தான்.   

அவள் உடனே, “அது தெரியல... ஆனா அவர் ஒரு ஹேண்டிகேப்டா?” என்றதும் ஆனந்த் அவளை முறைக்க,

“சரி பிஸிக்கலி சாலஞ்ச்டா மட்டும் பாலா இருந்தா நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேன்” என்று தெளிவாக தன் பதிலை உரைத்தாள்.

“அதென்னவோ உண்மைதான்... நீ ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்ட... ஏன்னா உனக்கு எந்தப் பொறுப்பும் இல்ல... அப்பாவோட கடனை எல்லாம் அடைக்க தேவையில்ல... இந்த ட்ரிப்ள் பெட் ரூம் ஃப்ளாட்டுக்கு நீ ஈ.எம்.ஐ. கட்ட வேண்டியது இல்ல.”

”கடனை எல்லாம் வாங்கி எந்த தங்கச்சிக்கும் பிரமாண்டமா கல்யாணம் பண்ணி வைக்கத் தேவை இல்ல... மாப்பிளைக்குப் பத்து சவரன்ல ப்ரேஸ்லெட், செயினு போட வேண்டியது இல்ல... தங்கச்சிக்கு அம்பது சவரன்ல நகைப் போட வேண்டியது இல்ல.”

”சீர் செனத்தைக்குப் பதிலா பத்து இலட்ச ரூபா மதிப்புள்ள புது கார் வாங்கித் தர வேண்டியது இல்ல... ஏன்னா” என்று நிறுத்தியவன் அவளைக் கூர்மையாகப் பார்த்து,

“இதெல்லாம் செய்ய உனக்கு அண்ணன் ஒருத்தன் நான் இருக்கேன்.”

”இதெல்லாம் இந்த வீட்டோட ஆண் வாரிசா என்னோட பொறுப்பு, என்னோட கடமை... வெறும் பொறுப்பும், கடமை மட்டும் இல்ல... கடன்.”

”இதெல்லாம் இதோட முடிய போறதும் இல்ல... இன்னும் உன் பையனுக்குப் பிறந்தநாள் வரும்... காதுகுத்து வரும் அதை எல்லாம் செய்யணும்…”

”அப்புறம் என் கல்யாணத்துக்கும் நான்தான் கடனை உடனை வாங்கிச் செலவு பண்ணி ஆகணும்... அப்புறம் குழந்தைக் குட்டினு காலம் பூரா நான் ஈ.எம்.ஐ. கட்டிக்கிட்டு ஒரு கடன்காரனா இருந்து செத்துப் போகணும்” என்றவன் குரலிலிருந்த அடக்கப்பட்ட சீற்றம் வினோதினியை அதிர்ச்சியாக்கியது.

அதேநேரம் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் ஆழமாகக் காயப்பட்டவள் முகம் சிவக்க, “சை... செஞ்சதை எல்லாம் சொல்லிக் காட்டிப் பேசுறியே நீயெல்லாம் ஒரு அண்ணனா? உன்கிட்ட போய் பேச வந்தேன் பாரு... என்னைச் சொல்லணும்” என்று கத்திவிட்டு உடனடியாக எழுந்து அவன் அறையை விட்டு வெளியேறினாள்.

தங்கை சென்றதைப் பொருட்படுத்தாமல் தன் கையிலிருந்த ரூபிக் க்யூபை பார்க்க, அதன் எல்லா பக்கங்களின் நிறங்களும் சீராக ஒரே மாதிரி இருந்தன.

அதனை ஓரமாக வைத்து விட்டு அமைதியாகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்கிப் போனான். காலையில் எழுந்து எப்போதும் போல அலுவலகத்திற்குத் தயாராகி வர, 

அவன் அம்மா பானுமதி, “ஏன் டா தங்கச்சிக்கிட்ட அப்படி பேசுன... கோச்சுக்கிட்டு காலங்கத்தால பிள்ளய தூக்கிட்டு அவங்க வீட்டுக்குப் போயிட்டா” என்று கடுப்பாக மகனிடம் கத்தினார்.

அவன் அவர் பேச்சைக் கேட்டும் கேட்காமல் உணவு மேஜையில் சாப்பிட அமர்ந்தான்.

“அம்மா கேட்டுட்டு இருக்கா... பதில் சொல்லாம நீபாட்டுக்குச் சாப்பிட உட்கார்ந்துட்டு இருக்க?” என்று அறைக்குள் இருந்து வந்த ஈஸ்வரன் மகனிடம் குரலை உயர்த்த,

“நேத்தெல்லாம் நான் பேசுனேனே நீங்க ஏதாவது பதிலுக்குப் பேசுனீங்களா? அப்புறம்.... நான் மட்டும் பேசணுமா?” என்று அவன் அலட்சியத்துடன் கூறிக் கொண்டே தட்டில் இட்லியை வைத்துச் சாப்பிடத் தொடங்கினான்.

இருவரின் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவனோ இட்லியை உண்டு கைக் கழுவிவிட்டு தன் பெற்றோரைப் பார்த்து, “ஜஸ்டின் சார் இன்னைக்கு சாயந்திரம் நம்ம வீட்டுக்கு வரன்னு சொல்லி இருக்காரு... என் கல்யாணம் விஷயமா பேச” என,

பானுமதி சீறலாக, “பணத்துக்காக அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற... பைத்தியமாடா நீ... காலம் பூரா காலில்லாத ஒரு பொண்ணோட உன்னால குடும்பம் நடத்த முடியுமாடா…? அப்படியே குடும்பம் நடத்துனா சந்தோஷமா இருக்க முடியுமாடா?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்க,

“நான் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருப்பேனா மாட்டேனாங்குறது எல்லாம் என் பிரச்சனை உங்க பிரச்சனை இல்ல... அதை நான் பார்த்துக்கிறேன்.”

”அப்புறம் பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிறேனா…? ஆமா... நான் மட்டும்தான் இங்க பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிறேனா என்ன…? நம்மூர்ல நடக்கிற எந்த கல்யாணத்துல மனசுப் பார்த்துப் பண்ணிக்கிறாங்க…? நல்ல படிப்பு, வேலை, சம்பளம், சொத்து, வீடு இதான்னே முதல பார்க்குறாங்க.”

”உங்க பொண்ணு கல்யாணத்துல மாப்பிளை வீட்டுல கார் கேட்கும் போது நீங்க அப்போ பணம், காரெல்லாம் கொடுத்து எங்க பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய அவசியம் இல்லன்னு சொல்லலயே ஏன்?”

”அவங்க கேட்டதும் தலையாட்டினீங்க இல்ல... எதுக்கு…? கல்யாணம் பண்ணிக்கப் போற இடத்துல உங்க பொண்ணு சந்தோஷமா சொகுசா வாழனும்ணுதானே?”

”அதுக்குதான் கார், நகை, வரதட்சனை எல்லாம் கொடுத்து இவ்வளவு செலவு பண்ணி வினோவுக்கு பாலாவை கல்யாணம் பண்ணி வைச்சீங்க.”

”எனக்கும் அதேதான்... நான் ரெஜினாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா... சந்தோஷமா, சொகுசா, ஆடம்பரமா வாழ முடியும்... நான் மட்டும் இல்ல... நீங்களும்தான்”

“என்னடா பேசுற…? நீ நடக்க முடியாத அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணா நம்ம சொந்தகாரங்க எல்லாம் என்ன பேசுவாங்க…? உனக்கும் ஏதோ குறை இருக்குன்னு சொல்ல மாட்டாங்களா... இதுல அந்தப் பொண்ணு...கிறிஸ்டின் வேற”

“அதானே” என்று அலட்சியமாக அவர்களை பார்த்து உதட்டை சுழித்தவன், “உங்களுக்குப் பெத்த பையனோட வாழ்கையைப் பத்தி எல்லாம் கவலை இருக்கப் போகுதா என்ன…? மதம், ஜாதி, ஸ்டேடட்ஸ், குடும்ப கௌரவம்... சொந்தகாரங்க என்ன சொல்லுவாங்க... இதான் உங்களோட பிரச்சனை... ஆனா எனக்கு அந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்ல.... பயமும் இல்ல.”

”ஏன்னா... சொந்தகாரனுங்க எல்லோருக்கும் பணத்துக்கு அப்புறம்தான் ஜாதி, மதம், கௌரவம் எல்லாம்... பணம் இருந்துட்டா மத்த எல்லாத்தையும் அவங்களே தூக்கிப் போட்டுட்டுப் போயிடுவாங்க... அதனால தேவை இல்லாம குழப்பிக்காதீங்க..”

”ஜஸ்டின் சார் வரும் போது எதுவும் ஏடாகுடமா பேசாம கல்யாணத்துக்குச் சம்மதம்னு சொல்லுங்க” என்று முடித்தான்.

“நாங்க சொல்ல மாட்டோம்டா... அந்த மனுஷன் வரட்டும் நாங்கப் பேசிக்கிறோம்”

“சரி பேசிக்கோங்க... ஆனா ஒன்னு... நீங்க சம்மதிக்கலனாலும் இந்தக் கல்யாணம் நடக்கும்... அதுக்கு அப்புறம்…” என்றவன் நிறுத்திச் சொன்ன வார்த்தையில் அவர்கள் இருவரின் முகமும் இருளடர்ந்து போனது.

 அதன் பிறகு அவன் தன் அலுவலகப் பையை மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

 “என்னங்க இப்படி பேசிட்டுப் போறான்?” என்ற பானுமதி தலையில் கை வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்து கொள்ள, ஈஸ்வரன் எதுவும் பேச முடியாமல் சோர்வுடன் நாற்காலியில் அமர்ந்தார்.

இரண்டு நாட்களாக வீட்டில் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காரசாரமான விவாதத்தில் ஆனந்தன் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க விழையவில்லை என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது.

அதற்கு மேல் அவனை எதிர்த்துக் கொண்டு தங்கள் கருத்துதான் முக்கியம் என்று பேச அவர்களுக்கும் வழி இல்லை. பானுமதிக்கும் அவருக்கும் பாட்டன் பூட்டன் சேர்த்து வைத்த சொத்துக்கள் என்று எதுவும் இல்லை.

மூன்று வருடம் முன்பு வரை வாடகை வீட்டில்தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர். இன்று அவர்கள் வசிக்கும் மூன்று படுக்கையறைகள் கொண்ட இந்த வீடும் இதன் வசதியும் அவர்களுடைய நிலைமைக்கு நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

அன்றாட வாழ்க்கைக்கே போராட்டமாக இருந்த நிலையில் பிள்ளைகளைப் படிக்க வைப்பது இன்னும் பெரிய சுமையாக இருந்தது.

அந்த வகையில் ஆனந்தன் திறமைசாலி. கல்லூரிக்குச் சென்றதுமே பகுதி நேர வேலைகளில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தான். விளையாட்டுப் போட்டிகளில் வென்று பரிசு தொகைகளைக் குடும்ப செலவுகளுக்குத் தந்திருக்கிறான்.

இளங்கலை முடித்ததும் ஜஸ்டின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அவர் உதவியுடன் படித்து இன்று குடும்பத்தின் நிலையை உயர்த்தி இருக்கிறான்.

இரண்டு வருடத்திற்கு முன்பாக ஈஸ்வரன் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது வலிப்பு வந்துவிட்டது. நல்ல வேளையாக எந்த விபத்தும் நிகழாமல் அன்று அவர் தப்பித்துக் கொண்ட போதும் அதன் பின் அவர் தன் ஓட்டுநர் வேலையைத் தொடர முடியாமல் போனது.

அன்றிலிருந்து அந்த வீட்டின் மொத்த பொறுப்பையும், பொருளாதார தேவைகளையும் பார்த்துக் கொள்வது ஆனந்தன்தான்.

தங்கையைப் படிக்க வைத்தது முந்தைய வருடம் அவளுக்குச் சீரும் சிறப்புமாகக் கல்யாணம் செய்து வைத்தது எல்லாம் அவன்தான். அவர்கள் வாழ்க்கை இப்போது முழுக்க முழுக்க அவனைச் சார்ந்திருப்பதால் அவர்கள் வீட்டிற்கு வந்து பேசிய ஜஸ்டினிடம் தங்கள் மறுப்பை அவர்களால் காட்ட முடியவில்லை. அவரிடம் மரியாதையும் அமைதியுமாகவும் பேசியவர்கள் வேறு வழி இல்லாமல் திருமணத்திற்குச் சம்மதம் என்று தெரிவித்தனர்.

ஜஸ்டினுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.

“உங்களை மாதிரி மனுஷங்களைப் பார்க்குறதே ஆச்சரியமா இருக்கு... ஆனந்தன்கிட்ட இருக்க அத்தனை நல்ல குணமும் பெருந்தன்மையும் நிச்சயம் உங்க கிட்ட இருந்துதான் வந்திருக்கணும்” என்று மனம் நெகிழ்ந்து அவர்கள் குடும்பத்தைப் புகழ்ந்து பேசிவிட்டு அகன்றார்.

shanbagavalli, Marli malkhan and 2 other users have reacted to this post.
shanbagavalliMarli malkhankothai.sureshbhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content