You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kannadi Thundugal - Episode 11

Quote

11

நாம் போடும் திட்டங்கள் நம்முடைய விருப்பங்கள், இது எதையும் விதி பொருட்படுத்துவதில்லை. அது பாட்டுக்கும் ஒரு பாதையை வடிவமைத்து நம்மை அதில் இழுத்துக் கொண்டு செல்லும்.

மஞ்சள் சரிகையில் மின்னிய அந்த மெல்லிய இரகப் பட்டுப் புடவையை அழகாய் கொசுவம் வைத்து ஏற்றி முன்புறம் சொருகினாள். பின்பு அந்த மடிப்புகளைக் கனகச்சிதமாக அடுக்கிப் பின் செய்துவிட்டு, முந்தானை மடிப்புகளைத் தோள் மீது சரித்து அவற்றையும் அழகாகப் பின் செய்தாள்.

அதன் பின் இரண்டு மூன்று முறைகள் அப்படியும் இப்படியும் திருப்பி முன்னும் பின்னுமாகக் கொஞ்சம் ஏற்றி இறக்கி மடிப்புகளை அழுத்தி சரி செய்த பின்தான் தீபிகாவிற்குத் திருப்தி ஏற்பட்டது.

அதன் பின்பு புடவையில் ஆங்காங்கே மின்னிய சிவப்பு நிறத்தில்  கல் வைத்த தங்க நெக்லஸ் ஒன்றைக் கழுத்தில் அணிந்தவள் களைந்திருந்த முடியைத் திருத்தி வாரி இருபுறமும் சிறு கற்றை முடிகளை இடையில் முடிந்து விரித்துவிட்டாள். முகப்பூச்சுகள் மற்றும்  உதட்டுச் சாயத்தை இதழ்களில் அளவாகப் பூசியவள் இறுதியாக நெற்றியில் தங்க நிறப் பொட்டை ஒட்டித் தன் ஒப்பனையை முடித்துக் கொண்டாள்.

“தீபா முடிஞ்சுதா... டைமாச்சு?” என்று அம்மாவின் குரல் கேட்ட பிறகும் அவள் கண்ணாடியை உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றாள். சிறு வயதிலிருந்தே அழகாக அலங்கரித்து கொள்வதில் ஓர் அலாதியான விருப்பம் அவளுக்கு.

ஆனால் விவேக்கைத் திருமணம் செய்த பிறகு அவள் வாழக்கையே தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டதில் அழகின் மீதான ஆர்வமும் ஆசையும் அவளுக்குக் குன்றிவிட்டது.

ஜெர்மனிக்குச் சென்ற பிறகு மீண்டும் இந்த ஆடை அலங்காரங்கள் மீதெல்லாம் அவளுக்கு ஆர்வம் பிறந்தது. கண்கொட்டாமல் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்து இரசித்திருக்கும் போது ராஜேஸ்வரி அபஸ்வரமாக,

“தீபா கதவைத் திற... நேரமாவுதுடி... இன்னுமா டிரஸ் பண்ணிட்டு இருக்க?” என்று கதவைத் தட்டிக் கத்திக் கூப்பாடு போடவும் அவள் மோன நிலை களைந்தது.

 “கத்தாதே ம்மா தோ வர்றேன்” என்று கடுப்படித்துக் கொண்டே அவள் கதவைத் திறக்க,

“உங்க அப்பா நாலு தடவை ஃபோன் போட்டாரு... கிளம்பிட்டீங்களா கிளம்பிட்டீங்களான்னு” என்று எரிச்சல்ப்பட,

அவள் தங்க நிற ஸ்டேப் வாட்சை எடுத்து கைகளில் கட்டிக் கொண்டே, “ரெடிதான் ம்மா கிளம்பலாம்” என்றாள்.

“இரு இரு பூ வைச்சுக்கோ” என்று ராஜேஸ்வரி உள்ளே ஓடிச் சென்று மல்லி சரத்தை எடுத்து வந்து விரிந்திருந்த அவள் கூந்தலில் சூட்டிவிட்டார்.

அவள் புன்னகையுடன், “ஓகே வா மா” என்று கேட்க,

மகளைப் பூரணமாக மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவர். “புடவைல இலட்சணமா இருக்க தீபா நீ” என்ற சொல்லி திருஷ்டி கழித்துவிட்டு, “உன் ஜாதகம் இப்போ நல்ல உச்சத்துல இருக்குன்னு ஜோசியர் சொன்னது சரிதான் போல... இப்பவே உனக்குப் பார்த்து முடிச்சாதான்” என, அத்தனை நேரம் அவள் முகத்திலிருந்த பிரகாசம் எல்லாம் பட்டென்று அணைந்துவிட்டது.

“ம்மா திரும்பியுமா...  நான்தான் கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்னேன் இல்ல”

“ஏற்கனவே நீ வாழ்க்கைல உருவாக்கி வைச்சிருக்க சிக்கல் போதாது... இதுல கொஞ்ச நாள் போகட்டும்னு நீ காலத்தைக் கடத்திட்டே போனா இந்த அழகெல்லாம் போயிடும்... அதுவும் இப்பவே உன் உடம்பு முதிர்ச்சியா முழு பொம்பளை மாதிரி தெரிய ஆரம்பிச்சிடுச்சு...  இதுக்கு அப்புறமும் விட்டா கெழவி மாதிரி ஆகிடுவ”  என்றவர் எங்கே சுற்றி எப்படி வந்தாலும் திருமண விஷயத்தில் முடிப்பதில் தெளிவாக இருந்தார்.

இதற்கு மேல் இவரிடம் பேச்சுக் கொடுக்கக் கூடாது என்று அவள் தன் பர்ஸையும் கைப்பேசியையும் எடுத்துக் கொண்டு வாயிலுக்கு வெளியே வர, ராஜேஸ்வரி கதவைப் பூட்டிவிட்டுக் கணவருக்கு அழைத்தார்.

“நாங்க ரெடியா இருக்கோங்க” என்று அவர் சொன்ன சில நிமிடங்களில் பிரமாண்டமான வெள்ளை நிற கார் வந்து வாசலில் நின்றது.

கார் வரும் போதே அதன் மேலிருந்த கட்சிச் சின்னத்தைப் பார்த்த தீபிகா, ‘இது சண்முகம் மாமாவோட காராச்சே’ என்று துணுக்குற்று,

 அம்மாவின் புறம் திரும்பி, “என்னம்மா... வேன் வருன்னுதானே சொன்ன?” என்று கேட்க,

“தெரியலடி... என்கிட்டயும் வேன் வருன்னுதான் சொன்னாரு உங்க அப்பா” என்று சொல்லவும் அவளுக்குத் தான் ஏன்தான் கிளம்பினோம் என்று ஆகிவிட்டது.

காலையில் அவள் அம்மா, “கங்காதரன் பையன் காது குத்து ஃபங்கஷனுக்குப் போறோம்... நீ வர்றியா?” என்று கேட்ட போது வரவில்லை என்றுதான் சொன்னாள். அதுவும் அவள் இப்படி குடும்ப விழாக்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வெகுநாட்களாகிவிட்டன.

ஆனால் என்றும் இல்லாத திருநாளாக அம்மா மாஞ்சி மாஞ்சி, “நம்ம ஊர் குலசாமி கோவிலதான் நடக்குது... வாடி போயிட்டு வரலாம்... அப்படியே நம்ம குடும்பத்துக்காகவும் ஒரு பூசையைப் போட்டுட்டா... மனசுக்கு நிம்மதியா இருக்கும்” என்று சொல்லவும், அவளும் சரியென்று கிளம்பிவிட்டாள்.

இப்போது இப்படியொரு இக்கட்டில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்று தெரிந்தால் அப்போதே வராமல் தவிர்த்திருப்பாள்.

அதுவும் கிருபாகரன் ஓட்டுனர் இருக்கையில் அம்ர்ந்திருப்பதைப் பார்த்த நொடி, ‘ஏதாவது காரணம் சொல்லிப் போகாம நின்னுடலாமா?’ என்ற எண்ணம் தோன்றியது.

அவள் இப்படி யோசிக்கும் போதே பின்னிருக்கைக் கதவைத் திறந்த சங்கரி, “வா ராஜி... வா தீபா” என்று அழைக்கவும், ராஜேஸ்வரி கூப்பிட்டதே போதும் என்று உள்ளே ஏறி அமர்ந்துவிட்டார்.

ஆனால் அவளுக்கு அந்த காரில் ஏறக் கொஞ்சமும் விருப்பமில்லை.

அவள் தயங்கித் தயங்கி நிற்க, “தீபா டைமாவது ஏறு” என்று முன்னிருக்கையிலிருந்து பாலாஜி குரல் கொடுக்க,

“நான் வேன்ல வரேன் பா” என்றாள்.

“வேன் புல்லாகி கோவிலுக்குக் கிளம்பிடுச்சு” என்று கிருபாகரனிடமிருந்து பதில் வரவும் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் அவள் ஏறி அமர்ந்துவிட்டாள்.

கார் கிளம்பியதும், “எப்போ ம்மா ஊர்ல இருந்து வந்த... எப்படி இருக்க?” என்று சங்கரி அக்கறையாக விசாரிக்கவும் அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

‘நம்ம குடும்ப மானத்தை வாங்குன ஓடுகாலி இவ... அதுவும் என் புள்ளய வேண்டாம்னு சொல்லிட்டு ஓடிப்போனச் சிறுக்கி... யார கேட்டு இவள வீட்டுல சேர்த்து வைச்சுட்டு இருக்க...? இவள வீட்டை விட்டு அடிச்சு துரத்து’ என்று பேசிய இதே வாய்தான் இப்போது, ‘எப்படி இருக்க?’ என்று பாசமாக விசாரிக்கிறது.

அதுவும் அவள் அம்மா அப்பா வெளியே அனுப்ப தயங்கவும், ‘அவள வெளியே அனுப்ப முடியாதுனா... இனிமே நமக்குள்ள எந்த உறவும் கிடையாது’ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட,

தாய்மாமன் சண்முகமோ மனைவியைப் பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்.

“என்ன அண்ணே! அண்ணி இப்படி பேசுது... நீயும் சும்மா நிற்குற” என்று ராஜேஸ்வரி கண்ணீர் வடித்துக் கெஞ்ச,

“உங்க அண்ணி சொன்னதுதான் சரி... உனக்கு என் உறவு வேணுமா? அவ உறவு வேணுமா?” என்று அவரும் அப்போது அதேதான் சொன்னார். ராஜேஸ்வரிக்கு மனம் அல்லாடியது.  

ஆனால் பாலாஜி இடையில் வந்து, “நாங்களும் இல்லனா செத்துப் போயிடுவேன்னு நிக்கிற புள்ளைய எப்படி திருப்பி அனுப்பிவிடுறது?” என்றதும் அவர்கள் முகம் சுருங்கிவிட்டது.

“அப்படினா எங்க உறவு வேண்டாங்குறீங்க?” என்று உறவை அறத்துவிடுவதில் குறியாக இருந்த சங்கரி,

“பார்த்தீங்க இல்ல... இதுக்கு அப்புறமும் சொரண கெட்டு இங்க நிற்கணுமா நாம? வாங்க போலாம்” என்று மாமாவை இழுத்துக் கொண்டு விறுவிறுவென்று வெளியேறிவிட்டார்.

ராஜேஸ்வரியால் தாங்க முடியவில்லை. அவருக்கு அண்ணன் உறவுதான் எல்லாவற்றிற்கும் மேல். அப்படி இருக்க அத்தகைய அண்ணன் உறவை இழக்க நேரிட்டதில் அவருடைய கோபமும் வெறுப்பும் திரும்பியது தீபிகாவின் மேல்தான்.

அந்த வெறுப்பும் கோபமும் வெகுநாட்கள் வரை அவருக்குத் தீரவே இல்லை. ‘என் அண்ணனை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டியேடி பாவி’ என்று கிடைக்கும் சந்தரப்பத்தில் எல்லாம் சொல்லிக் காட்டினார்.

விவேக் வீட்டில் கேட்ட வசைகளை விட அம்மாவிடம் வாங்கிய பேச்சுக்கள்தான் அதிகம். சில வார்த்தைகளைக் கேட்கும் போது செத்தே போய்விடலாம் என்று தோன்றும். ஆனால் அவளுக்குள் இருந்த மன உறுதிதான் அவற்றை எல்லாம் கடந்து வர வைத்தது.

இருப்பினும் அவளால் நடந்த எதையும் மறக்க முடியவில்லை. அதுவும் சங்கரி பேசிய வார்த்தைகள் ஆறாத வடுவாக இன்னும் அவளுக்குள் உறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவர்கள் மறந்துவிட்டார்கள்.

நந்திகா திருமணத்தின் போது ஓரளவுக்கு அண்ணனும் தங்கையும் இராசியாகிவிட்டதாக கேள்விப்பட்டாள். இருப்பினும் அவள் அத்தை இத்தனை சகஜமாக அவளிடம் பேசுவதைதான் அவளால் நம்ப முடியவில்லை.

அவரின் கேள்விக்குச் சாதாரணமாகப் பதில் சொல்லிவிட்டு அவள் ஜன்னல் புறம் பார்வையைத் திருப்பி கொள்ள, ராஜியும் சங்கரியும்தான் கதை கதையாக அளந்து கொண்டு வந்தனர்.

ஆனால் அவளோ நெருப்பின் மீது அமர்ந்திருப்பது போன்ற உணர்வில் இருந்தாள். ஏதோவொரு  இனம் புரியாத பயம் அவள் நெஞ்சை அழுத்திப் பிடித்தது.

அதுவும் அன்று கடையில் கிருபாவைப் பார்த்துவிட்டு வந்த பின் எதார்த்தமாக விசாரிப்பது போல நந்திகாவிடம் அவனைப் பற்றி விசாரித்தாள்.

“கிருபா மாமாதான் இப்போ அவங்க ஊர் பிரசிடென்ட்டு... எட்டு மாசத்துக்கு முன்னாடி வந்த பஞ்சாயத்து எலெக்ஷன்ல நின்னு ஜெய்ச்சிட்டாரு” என்று சொல்ல அவன் வந்து நின்ற தோரணையை நினைவுப்படுத்திப் பார்த்தாள். மிடுக்கான தோற்றமும் மீசை தாடிக்குள் ஒளிந்திருந்த முகமும் என்று அவன் அடையாளம் தெரியாதளவுக்கு மாறிவிட்டதால்தான் அவளால் பார்த்தவுடனே கண்டுபிடிக்க முடியவில்லை. 

அவள் மீண்டும், “கிருபாக்குக் கல்யாணம் ஆகிடுச்சு இல்ல” என்று கேட்க, 

“இல்லையே” என்று நந்திகா சொல்ல அவள் அதிர்ச்சியுடன்,

“இன்னுமா கல்யாணம் ஆகல?” என்றாள்.

“ஆகலக்கா... நீ ஓடிப் போனதும் கிருபா மாமாவுக்கு என்னைக் கட்டி வைக்குறதுக்குப் பேசுனாங்க... கிருபா மாமாதான் வேணாம்ட்டாரு... அப்புறம் கூட யாரோ ஒரு பொண்ணு கூட நிச்சயம் பண்ணதா சொன்னாங்க... ஆனா அதுவும் ஏற்பாடு பண்ணதோட நின்னு போயிடுச்சுனு அம்மா சொல்லிட்டு இருந்தாங்க” என்று அவள் விவரமாகச் சொல்ல, தீபிகாவால் இயல்பாக அந்தச் செய்தியைக் கடக்க முடியவில்லை.

அவன் நல்லபடியாகத் திருமணம் செய்து குழந்தை குட்டி என்று இருக்கிறான் என்று கேள்விப்பட்டிருந்தால் அவளுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் நடந்த இரண்டாவது நிச்சயமும் நின்று அவன் ஒற்றையில் நிற்பது அவளின் குற்றவுணர்வை மேலும் அதிகப்படுத்திவிட்டது. அதோடு மனதில் தன் மீது வஞ்சமும் கோபமும் வைத்துக் கொண்டிருப்பானோ என்ற பயம் வேறு உண்டானது.

இத்தகைய மனநிலையுடன் இருந்தவள் கோவில் வரும் வரை இப்படி அப்படி கூடத் திரும்பவில்லை. கோவிலில் கார் நின்றதும் முதல் ஆளாகக் கீழே இறங்கிச் சென்றுவிட்டாள்.

கோவில் உள்ளே நடந்தவளுக்கு இதே இடத்தில் கிருபாவுக்கும் அவளுக்கும் அவசரம் அவசரமாக நடந்தேறிய நிச்சயதார்த்தம் ஞாபகத்திற்கு வந்தது. 

‘இது வேறயா?’ என்றவள் கடுப்பில் நிற்கும் போதே,

“தீபிகாவா அது... பார்த்தே ரொம்ப நாளாச்சு” என்று ராதிகா சித்தி அவளை அடையாளம் கண்டுகொண்டு பேச, அவளும் அவரிடம் இயல்பாகப் பேசினாள். அதன் பின் சொந்தகாரர்கள் ஒவ்வொருவராக அவளைக் குசலம் விசாரித்தனர்.

அவர்கள் எல்லாம் இயல்பாகப் பேசுவது போலத் தெரிந்தாலும் அவர்கள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும்.

அவர்களிடம் எல்லாம் சாதாரணமாகப் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தவள் கோவிலின் பின்புறம் வர, அங்கே கங்காதரன் மாமாவின் மகனுக்கு மொட்டை அடித்துக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்றவள் மெல்ல நடந்து வந்து அவர்கள் யார் பார்வையும் படாத இடத்தில் சில பல செல்ஃபிகளை க்ளிக் செய்தாள்.

அந்த கிளிக்கில் அழகானதாகப் பார்த்து தன் வாட்ஸப் ஸ்டேஸில் வைக்க, அதனைப் பார்த்த நொடி அவள் தங்கை, “அக்கா ஃபோட்டோ சூப்பரா இருக்கு க்கா” என்று அழைத்தாள்.

“தேங்க்ஸ் நந்து” என்றவள் மேலும், “நீ ஏன் கோவிலுக்கு வரல” என்று கேட்டு வைக்க,

“எங்க க்கா வர்றது... வீட்டுல ஒரே பிரச்சனை” என்று ஆரம்பித்து அவள் தன் குடும்பப் புலம்பலைச் சொல்லி முடிப்பதற்குள் தீபிகாவிற்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.

“சரிடி ஃபோனை வைச்சுடுறேன்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு நிம்மதி பெருமூச்சுவிட்டவள் அப்போதுதான் சத்யா அனுப்பிய குறுந்தகவலைப் பார்த்தாள்.

‘ஸாரில... நீ ரொம்ப அழகா இருக்க தீப்ஸ்’

அவள் முகம் மலர்ந்தது. மறுகணம் நன்றி எனத் தட்டச்சு செய்து அவள் பதில் அனுப்ப,

‘எங்க ஏதாவது ஃபங்கஷன்ல இருக்கியா?’ என்றவன் கேட்க அவள் மீண்டும் பதில் அனுப்ப என்று அவர்கள் உரையாடல் தொடர்ந்து நீள. தங்களை அறியாமலே அவர்கள் தங்களின் நட்பு என்ற எல்லைக் கோட்டை அழித்துக் கொண்டிருந்தனர்.

‘நான் நம்ம ஜெர்மனி லைஃபை ரொம்ப மிஸ் பண்றேன் தீப்ஸ்’

‘ம்ம்ம்... நானும் மிஸ் பண்றேன்’

‘அங்கிருந்த சின்னச் சின்ன சுதந்திரம் கூட இங்க இல்லைன்னு தோனுதுயா’

‘ஏன் அப்படி சொல்ற?’

‘எங்கே போற என்ன பண்றன்னு ... எதுக்கு எடுத்தாலும் கேள்வி... அட்வைஸ்... இதுல கல்யாணம் பண்ணிக்கோ பொண்ணு பார்க்க வான்னு கடுப்பேத்துறாங்க’

‘சேம் ஃபீலிங்... எனக்கும் இதெல்லாம் நடக்குது’

‘சீரியஸாவா’

‘ம்ம்ம்’   

‘அப்போ நாம ஒன்னு பண்ணலாமா?’

‘என்ன?’

‘ஓடிப் போயிடலாம்... எங்கயாச்சும் தூரமா... இவங்க யார் கண்ணுலயும் படாம’ என்றவன் அனுப்பியதைப் பார்த்ததும் அவள் அதிர்ந்தாள். அதன் பின் அவள் பதில் அனுப்பாமல் போகவும்,

‘நான் சும்மா ஜாலியாதான் சொன்னேன்... டோன்ட் டேக் இட் சீரியஸ்’ என்று அவன் அனுப்ப, அவள் அதற்குப் பிறகும் பதில் அனுப்பவில்லை. ‘தீப்ஸ் சாரி’ என்று பல சாரிகளை அவன் வரிசைக் கட்டி அனுப்பிய பிறகு அவள் பதில் எழுதினாள்.

‘ஓடி எல்லாம் போக வேண்டாம்... நம்ம பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம்’

அதனைப் பார்த்த நொடி அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. உடனடியாக அவள் அலைபேசிக்கு அழைக்க அவளும் எடுத்துப் பேசினாள்.

 “நீ நிஜமா சொல்றியா தீப்ஸ்? நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” அதீத உற்சாகத்தில் ஒலித்தது அவன் குரல்.

 “ரொம்ப சந்தோஷப்படாதே சத்யா... என் லைஃப்ல ஒரு மோசமான பாஸ்ட் இருக்கு... அதை நான் உன்கிட்ட சொன்னப் பிறகு நம்ம கல்யாணத்தைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்” அவள் நிதானத்துடன் பேச,  சிறிய அமைதிக்குப் பின் அவன் பதில் பேசினான்.

“நீ எதுவும் சொல்ல வேண்டியதில்லை தீபஸ்... எனக்கு உன் பாஸ்ட் தெரியும்”

அவள் அதிர அவன் மேலும், “உண்மையைச் சொல்லணும்னா உன் பாஸ்ட்டை நான் தெரிஞ்சிகிட்ட பிறகுதான் உன் மேல ரொம்ப இம்பிரஸ் ஆனேன்” என,

“உனக்கு எப்படி சத்யா?” என்றவள் குழப்பத்துடன் கேட்டாள்.

“எங்க அண்ணி சொன்னாங்க”

“உங்க அண்ணியா?”

“ம்ம்ம்... ஆமா... ஆக்சுவலி அவங்க உன்னோட காலேஜ் மெட்... வேற டிபார்ட்மென்ட்... ஃபேஸ்புக்ல நம்ம டீம் ஃபோட்டோஸ் எல்லாம் ஷேர் பண்ணி இருந்தேன் இல்ல... அதுல உன்னைப் பார்த்துட்டு எதார்த்தமா உன்னைப் பத்தி சொன்னாங்க... உன் வாழ்க்கைல நடந்த மோசமான விஷயங்களை... பிரச்சனைகளை...”

” ஆனா இத்தனையும் கடந்து நீ ஜெயிச்ச விதத்தைக் கேட்ட போது நான் ஸ்டன்னாயிட்டேன்...  யூ ஆர் சச் அ ஸ்ட்ராங் போல்ட் வுமன்” என்றவன் அவளைப் பாராட்டிச் சொன்ன வார்த்தைகள் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதேநேரம் அவன் தன்னுடைய கடந்த காலத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது அவள் மனதிற்கு பெரும் ஆறுதலாக இருந்தது. கண்களிலினோரம் ஈரம் கசிந்தது.  

அப்போது, “தீபா” என்ற அம்மாவின் குரல் அதட்டலாக ஒலிக்கவும்  அவள் அவசரமாகத் தன் கண்களின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“எல்லோரும் சாமி கும்பிட போயிட்டாங்க... நீ இங்க தனியா நின்னுட்டு என்னடி பண்ற?”

“ஒரு முக்கியமான கால்... பேசிட்டு வந்துடுறேன்மா” என்றாள்.

“லீவ் நாள கூட என்னடி முக்கியமான காலு... நீ இப்படி ஃபோன் பேசிட்டுத் தனியா நிற்குறதைப் பார்த்தா நம்ம சொந்தகாரங்க எல்லாம் என்னடி நினைப்பாங்க...? ஏற்கனவே பேர கெடுத்து வைச்சது போதாதுன்னு... இப்படி எல்லாம் ஏதாவது பண்ணி எங்க மானத்தை வாங்கு... ஒழுங்கா அந்த ஃபோனை கட் பண்ணிட்டு வா” என்றவர் பாட்டுக்கு வசைமாறிப் பொழிந்துவிட்டு முன்னே செல்ல,

“சாரி சத்யா... அம்மா சாமி கும்பிட கூப்பிடுறாங்க... நான் போகணும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“இன்னுமாடி ஃபோன் பேசிட்டு நிற்குற” என்று மீண்டும் ராஜேஸ்வரி திரும்பி பார்த்து அதட்ட,

“தோ தோ வந்துட்டேன் ம்மா” என்று அவருக்குப் பதில் கூறிக் கொண்டே, “ஐ ல் கால் யூ லேட்டர்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்து அம்மாவின் பின்னே ஓடினாள்.

“சாமிக்கு அபிஷேகம் நடக்குது... உள்ளே போய் பாரு” என்று மகளைத் துரத்தாதக் குறையாக உள்ளே அனுப்பி வைத்தார்.

அந்தச் சின்னக் கோபுரத்தில் சாமியைத் தரிசிக்கும் ஆவலில் எல்லோருமாக இடத்தை அடைத்தபடி நிற்க தீபிகா கிடைத்த இடத்தில் சென்று ஒண்டிக் கொண்டாள். ஆனால் அவள் யாரைப் பார்க்கவும் பேசவும் தயங்கினாலோ தன்னை அறியாமலே அவன் பக்கத்தில் சென்று நின்றுவிட்டிருந்தாள்.

அவளைத் தவிர அவர்கள் உறவினர்கள் எல்லோரும் அந்த காட்சியைக் கவனித்தனர். தாமதமாக வந்த சண்முகம் தன் மகன் தீபிகாவுடன் ஜோடியாக நிற்பதைப் பார்த்து அதிர்ந்து விட்டபோதும் அப்போது மூளைக்குள் ஒரு யோசனை மின்னலடித்தது.

அவர் உடனே தங்கையை அருகில் அழைத்து அவர்களைக் காண்பித்து காதோடு காதாகப் பேசிய இரகசியம் அங்கிருந்த யாருக்கும் கேட்காவிட்டாலும் அவர்கள் எல்லோருக்கும் புரிந்துவிட்டது.

ஆனால் இது ஏதும் அறியாமல் தீபிகா கர்ப்பகிரகத்திற்குள் பாலாபிஷேகத்தில் நனைந்து கொண்டிருந்த அம்மனை மனமுருகித் தரிசித்திருந்தாள். சத்யாவை எண்ணி உள்ளுர அவளும் சந்தோஷ தூரலில் நனைந்திருந்தாள்.

Quote

Super ma 

You cannot copy content