You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kannadi Thundugal - Episode 12

Quote

12

நாம் கடந்து வரும் சூழ்நிலைகள் நமக்கான அனுபவங்களைத் தோற்றுவிக்கின்றன. அனுபவங்கள் நமது கண்ணோட்டங்களைப் புதுப்பிக்கின்றன. கண்ணோட்டங்கள் முந்தைய நமது கருத்துக்களை மாற்றுகின்றன.

பிரமாண்டமான அந்த ஜவுளிக் கடையின் வாசலில் சென்று நின்றது அந்த வெள்ளை நிற கார். அதனைத் தொடர்ந்து வந்த மற்றொரு காரும் அதன் பின்னோடு சென்று நின்றது.

பின்னே வந்து காரில் தீபிகாவும் அவள் பெற்றோர்களும் இறங்க, முன்னே நின்ற காரில் கிருபாகரனும் அவன் பெற்றோர்களும் இறங்கினர்.

அவர்கள் எல்லோரும் அந்தக் கடைக்குள் படையெடுக்க, அந்தக் கடையின் உரிமையாளரே வாசலில் நின்று வரவேற்றார்.

சண்முகத்திற்கு அந்தக் கடையின் உரிமையாளர் பல ஆண்டு பழக்கம்.

“வாங்க சண்முகம் எப்படி இருக்கீங்க...? கடைப் பக்கமே ரொம்ப நாளா  காணோம்?” என்று சண்முகத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர் விசாரிக்க,

“அதான் இப்போ நல்ல சேதியோட வந்துட்டேன் இல்ல” என்று பெருமையாகச் சொன்ன சண்முகம் தங்கை மற்றும் தங்கை கணவனை அவருக்கு அறிமுகப்படுத்திவிட்டு,

“தோ இதான் என் மருமக” என்று சொல்லி தீபிகாவைக் காண்பிக்க,

“பொண்ணு அம்சமா இருக்கு பா... ஜோடி பொருத்தமும் சூப்பர்” என்றார் அந்தக் கடையின் உரிமையாளர்.

“சரி சரி இங்கேயே நின்னு பேசிட்டு இருந்தா எப்படி... உள்ளே போங்க... உங்களுக்காகப் புதுசா வந்த ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ் எல்லாம் எடுத்து வைக்க சொல்லி இருக்கேன்” என்று விட்டுக் கடைப் பணியாளர்களை அழைத்து அவர்களைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்ளவும் சொன்னார்.

அங்கே அவர்களுக்கு இராஜபோக உபசாரம் நிகழ்ந்தது. பட்டு புடவை செக்ஷனுக்குள் நுழைந்ததும் பெண்கள் புடவைகள் பார்ப்பதில் மும்முரமாகிவிட, தீபிகா மட்டும் ஒரு மாதிரி ஒட்டுதலே இல்லாமல் நின்றிருந்தாள்.

இப்போதும் கூட அவளுக்கு இந்தக் கல்யாணத்தில் தனக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று குழப்பமாக இருந்தது.

அன்று கோவிலில் இருந்து வந்ததும் ராஜேஸ்வரி, “பழசை எல்லாம் மறந்துட்டு மாமா இப்போ திரும்பவும் உன்னை கிருபாவுக்குக் கேட்குறாங்க... அவனும் இப்போ வரைக்கும் உன்னைத் தவிர வேறெந்தப் பொண்ணையும் கட்ட மாட்டேன்னு பிடிவாதமா இருக்கானாம்” என்று சொன்ன நொடி அவளுக்கு ஷாக்கடித்ததுப் போலிருந்தது.

அவளுக்குத் திரும்பியும் எல்லாம் ஆரம்பத்த இடத்திலிருந்து தொடங்குவது போல் ஒரு பிரமை உண்டானது. அதுவும் சற்று முன்புதான் சத்யாவிடம் மனம் திறந்து பேசினாள். அதற்குள் எல்லாம் தலைகீழாக மாறுகிறது.

அவள் என்ன சொல்வதென்று புரியாமல் அதிர்ச்சியில் நிற்க ராஜேஸ்வரி மேலும் தொடர்ந்தார். “எங்கேயோ வெளியே இருந்த வர மாப்பிளையை விட உன்னைப் பத்தி எல்லா தெரிஞ்ச கிருபாவையே நீ கட்டிக்கிட்டா எங்களுக்கும் நிம்மதியா இருக்கும்”

அவள் அப்போதும் ஒன்றும் பேசாமல் நிற்க, “ஏதாவது பேசுடி... ஆனா அபசகுனமா கல்யாணம் வேண்டாம்னு மட்டும் சொல்லிடாத” என்று ராஜேஸ்வரி சொன்னதைக் கேட்டவளுக்குப் பைத்தியம் பிடிக்காத குறைதான்.

அப்போது பாலாஜி நிதானமாக மகளை ஏறிட்டுப் பார்த்து, “போன முறைதான் எங்களுக்குத் தீராத அவமானத்தைத் தேடி வைச்சிட்டுப் போயிட்ட...  இப்பயாச்சும் ஒரு மகளா எங்களுக்கு மதிப்ப தேடிக் கொடு தீபா... கிருபாவைக் கல்யாணம் பண்ணிக்கோ” என்று கூற, அந்தக் கணமே அவளைக் குற்றவுணர்வு தாக்கியது.

தான் இன்று சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அவர்கள்தான் காரணம். ஒரு வேளை அவர்கள் தன்னை மீண்டும் வீட்டில் சேர்த்துக் கொள்ளாமல் போயிருந்தால் எங்கேயாவது தெருவில் நின்றிருப்போம் அல்லது செத்துக் கூடப் போயிருப்போம். 

அவளுக்கு மீண்டுமொரு வாழ்க்கை கொடுத்த அவர்களுக்காகத் தன் மனதையும் விருப்பத்தையும் மாற்றிக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை என்று தீர்க்கமாக யோசித்து முடிவெடுத்துவிட்டுப் பேசினாள். 

“நீங்க இரண்டு பேரும் இல்லனா இன்னைக்கு நான் கௌரவமா இருந்திருக்க முடியாது... எனக்குன்னு ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி இருக்கவும் முடியாது... எல்லாமே உங்களாலதான்... நீங்க அன்னைக்கு எனக்குக் கொடுத்த ஆதரவாலதான் சுயமரியாதையோட இன்னைக்கு நான் வாழவும் நீங்கதான் காரணம்... அதை நான் மறக்க மாட்டேன்... எப்பவும் மறக்க மாட்டேன்...  நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்... நான் கிருபாவைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று அவள் அப்போதைய மனநிலையில் கிருபாவைத் திருமணம் செய்ய சம்மதம் சொல்லிவிட்டாள்.

ஆனால் அடுத்த நாள் அலுவலகத்தில் ரோஜா பூங்கொத்துடன் வந்து நின்ற சத்யாவை எதிர்கொண்ட போது அவள் நொந்தே போய்விட்டாள். காதலுடன் பார்த்த அவன் விழிகளைச் சந்திக்க முடியாமல் குற்றவுணர்வில் தவித்துப் போனாள்.

விதி ஏன் தன் வாழ்வில் இப்படி எல்லாம் விளையாடுகிறது என்று கழிவறைக்குச் சென்று வெகுநேரம் அழுது தீர்த்தவளுக்கு அதன் பின்தான் கொஞ்சம் தெளிவும் தைரியமும் வந்தது.

முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள் சத்யாவிடம் நேரடியாக வந்து, “கொஞ்சம் பேசணும் சத்யா” என்று அவனைத் தனியாக அழைத்து விஷயத்தை விவரமாக உரைத்தாள்.

அந்த நொடியே இருண்டு போன அவன் முகத்தைக் கண்ணீருடன் கண்டவள், “எனக்கு வேறு வழி தெரியல சத்யா... ஐம் எக்ஸ்டிரிமிலி சாரி” என்று மன்னிப்பு கோர, அவன் எதுவும் பேசாமல் சிலையாக நின்றுவிட்டான்.

அவள் கவலையுடன் அவன் முகத்தையே பார்த்திருக்க அந்தக் கணம் ஓர் இறுக்கமான மௌனம் அவர்களுக்கு இடையில் சஞ்சரித்தது. 

தன் யோசனைகளிலிருந்து மீண்ட சத்யா அவளை நிமிர்ந்து பார்த்து, “எனக்கு உன் நிலைமை புரியுது தீப்ஸ்... விடு... கொஞ்ச நாள் எல்லாம் மறந்து போயிடும்... அன் இப்பவும் எப்பவும் நாம நல்ல ஃபிரண்ட்ஸ்தான்... அது எப்பவும் மாறாது” என்றவன் இயல்பாகப் பேசினாலும் அவன் விழிகளைச் சந்தித்தவளுக்கு ஆழமான அவன் மனதின் வலியை உணர முடிந்தது. ஆனால் இந்த விஷயத்தில் இனி அவளால் செய்ய முடிந்தது ஒன்றும் இல்லை.

இருவரும் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களை விழுங்கிக் கொண்டு சகஜமாக இருக்க முயன்றனர். அவளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மனதைத் தேற்றிக் கொண்டு நடக்கப் போகும் திருமணத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள ஆயத்தமானாள்.

திருமணத்திற்கு ஜவுளி எடுக்கப் புறப்பட்ட போது கூட சகஜமாக  இருக்க வேண்டுமென்று எண்ணித்தான் புறப்பட்டாள். ஆனால் அங்கே வந்து நின்றதும் மனம் என்னவோ ஒத்துழைக்க மறுத்தது. இயல்பாக இருக்க முடியாமல் தவித்தது.

அவள் மனநிலையை உணராத சங்கரியும் ராஜேஸ்வரியும்  ஆளுக்கொரு புடவையை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு,

‘இதுல டிசைன் நல்லா இருக்கு இல்ல... அதுல பார்டர் எடுப்பா அழகா இருக்கு இல்ல’ என்று கேட்டு அவளைக் குழப்பிக் கொண்டிருந்தனர்.

இறுதியாக அவர்கள் எடுத்ததில் கொஞ்சம் அவளுக்குப் பிடித்த மாதிரி இருந்த சிவப்பு நிறப் பட்டுப் புடவை ஒன்றை அவள் தேர்ந்தெடுத்தாள். இத்தனை நேரம் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கிருபா அருகே வந்து நின்று,

“இந்த ரெட் வேண்டாம் அத்தை... ஒரு மாதிரி டார்க் ஷேட்டா இருக்கு” என்றான்.

“அப்படியா?” என்று ராஜேஸ்வரி யோசிக்க சங்கரி உடனே மகனிடம், “அப்போ நீயே இதுல எந்தப் புடவை நல்லா இருக்குன்னு சொல்லு” என்றார்.

அவன் அந்தப் புடவைகளில் கையை விட்டுப் பளிச்சென்று இருந்த ஆரஞ்சு நிறப் புடவையை எடுத்துக் காட்டி, “இது தீபாவுக்கு நல்லா இருக்கும்” என,

ராஜேஸ்வரியும், “இது கூட நல்லாத்தான் இருக்கு... நீ என்ன சொல்ற தீபா” என்று கேட்க, அவள் அந்தப் புடவையைப் பார்த்தாள். அவளுக்கு அது ஒன்றும் அந்தளவுக்குப் பிடிக்கவில்லை.

என்ன சொல்வதென்ற குழப்பத்துடன் கிருபாவை நிமிர்ந்து பார்க்க அவன் விழிகள் ஆவலாக அவளை நோக்கின. அவனுக்கு அந்தப் புடவை ரொம்பவும் பிடித்திருக்கிறது என்பது புரிந்தது.

உடனே அவளும் சம்மதமாகத் தலையசைத்து, “எனக்கும் பிடிச்சிருக்கு... இந்தப் புடவையே எடுத்துக்கலாம்” என, அவன் முகத்தில் அப்படியொரு பிரகாசம்.

அதன் பின் எல்லோருக்கும் துணிமணிகள் எடுத்துவிட்டு அவர்கள் கடையை விட்டு வெளியே வரும் போது இருள் சூழக் காத்திருந்தது.

அதன் பின் அவர்கள் அருகே இருந்த கடையில் காபி டிஃபன் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும் போது கிருபா தன் தந்தையிடம் ஏதோ இரகசியமாக உரைத்தான்.

“சரி நான் கேட்குறேன்” என்றவர் பாலாஜியிடமும் ராஜேஸ்வரியிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டு,     

“அவனே தீபாவைக் கொண்டு வந்து வீட்டுல விட்டிருவான்... நாம எல்லாம்  பெரிய கார்ல போயிடுவோம்” என, அவர்களுக்கு அதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. சரியென்றனர்.

அவர்கள் கார் நிறுத்தத்திற்குத் திரும்பியதும், “பார்த்து அழைச்சிட்டுப் போயிட்டு வா” என்று சண்முகம் கிருபாவிடம் சொல்ல, “சரிப்பா” என்றவன் தீபாவைப் பார்த்தபடி காரின் முன் கதவைத் திறந்தான்.

எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அவள் முன்னிருக்கையில் அமர, அவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டான். அங்கிருந்து கார் நகரும் வரை அமைதியாக வந்தவள், “எங்க போறோம் கிருபா?” என்று அவன் புறம் திரும்பி கேட்க,

“நகை கடைக்கு” என்றான்.

“நகை கடைக்கு எதுக்கு நம்ம மட்டும் தனியா போகனும்?”

“அது... நான் ரொம்ப முன்னாடி உனக்கு கிஃப்ட் பண்ணனும்னு ஒரு வளையல் வாங்கி வைச்சிருந்தேன்... இப்போ அது உனக்கு சூட் ஆகாதுன்னு நினைக்கிறேன்... அதான் கொண்டு போய் மாத்திடலாம்னு” என்றவன் சொல்ல,

“எங்கே அந்த வளையல்?” என்று கேட்டாள்.

அவன் தன் முன்னே வைத்திருந்த பையை அவளிடம் எடுத்து கொடுத்தான். அதற்குள்ளிருந்த பெட்டியில் ஒரு ஜோடி தங்க வளையல் இருந்தது.

அவற்றைப் பார்த்தவள், “எப்போ இந்த வளையலை வாங்குன?” என்று வினவவும் அவன் தயக்கத்துடன் அவளைப் பார்த்துவிட்டு, “நமக்கு கோவில நிச்சயம் ஆனதும் வாங்கி வைச்சேன்” என, அவளுக்கு தொண்டையை அடைத்தது.

அவள் மெல்லிய குரலில்,  “சாரி கிருபா... அப்போ நான் செஞ்சது... உனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு எனக்குப் புரியுது” என்றவள் கூற,  

“அதெல்லாம் இப்போ பேச வேண்டாமே” என்றவன் பதில் கூறிவிட்டு அமைதியானான். 

அவள் அந்த வளையலைப் பார்த்துக் கொண்டே வர, “கடை வந்திடுச்சு தீபா” என்றவன் காரை நிறுத்திவிட்டு, “வா போலாம்” என்றவன் அழைக்க அவள் இறங்காமல்,

“இந்த வளையலை மாத்த வேண்டாம் கிருபா” என்றாள்.

அவன் உடனே, “அது பழைய மாடல்... நம்ம புது டிசைன்ல மாத்தி வாங்கிக்கலாம்” என்று சொல்ல,

“எனக்காக நீ ஆசையா வாங்கின முதல் நகை இது... இதை மாத்த வேண்டாம்... இருக்கட்டும்... நான் போட்டுக்கிறேன்” என்றவள் சொல்லவும் அவளை ஆச்சரியமாக நோக்கியவன்,  

“எதுக்கும்ப் போட்டுப் பாரு தீபா... கைக்குப் பத்துதான்னு” என்று சொல்ல, அவள் அந்த வளையலைத் தன் கைகளில் அணிந்து கொண்டாள். கொஞ்சம் சிறியதாக இருந்தாலும் அந்த வளையல்கள் அவள் கைகளில் பாந்தமாகப் பொருந்தின.

அவள் தன் கைகளிலிருந்த வளையலைப் பார்த்துவிட்டு, “நல்லா இருக்கு கிருபா... நைஸ் செலெக்ஷன்” என்றதும் அவன் அவளை ஆழமாகப் பார்த்து,

“அப்ப மாத்த வேண்டாங்குறியா?” என்று கேட்டான்.

“உஹும் வேண்டாம்” என்றவள் இன்முகத்துடன் கூற அவன் விழிகள் அவளை வாஞ்சையுடன் நோக்கின.

“அப்படினா இந்த வளையல் உன் கையிலயே இருக்கட்டும்... எப்பவும் கழட்டாதே” என்றவன் சொல்ல, அவளும் சம்மதமாகத் தலையசைத்தாள்.  

அதன் பின் அங்கிருந்து காரை நகர்த்தியவன் எதுவும் பேசாமல் வந்தாலும் அவன் பார்வை மட்டும் அவ்வப்போது அவளை ஆசையாகத் தழுவிக் கொண்டு வந்தன.

கார் வீட்டு வாசலில் நிற்க அவள் இறங்கிக் கொள்ளப் போகவும் அவன் கரம் அவளின் வளைக்கரத்தைப் பற்றிக் கொள்ள, அவள் துணுக்குற்று அவனைப் பார்த்தாள். 

அவன் அடுக்காய் இருந்த கண்ணாடி வளைகளுடன் சிணுங்கிக் கொண்டிருந்த தங்க வளையலை மிருதுவாகத் தொட்டுப் பார்த்தபடி அவள் கைவிரல்களை வருட, அவள் முகம் சிவந்தது.

“கிருபா... வீடு வந்திருச்சு... அம்மா வெளியே வந்துருவாங்க” என்று அவள் தயக்கத்துடன் சொல்லவும் அவன் அவள் கரத்தை விடுவித்தான். 

இருவரும் இறங்கி உள்ளே வர அவர்கள் பெற்றோர்கள் முகப்பறையில் அமர்ந்திருந்தனர். ஒரு பக்கம் சங்கரியும் ராஜேஸ்வரியும்  வாங்கிய ஜவுளிகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்க, மற்றோரு பக்கம் பாலாஜியும் சண்முகமும் திருமண ஏற்பாட்டைப் பற்றி மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

தீபிகா அவர்களைக் கடந்து தன் அறைக்குள் சென்றுவிட, கிருபாகரன் தன் பெற்றோர்களுடன் அமர்ந்து கொண்டான். ஆனால்  அவன் விழிகள் ஏக்கத்துடன் மூடிய அவளின் அறைக் கதவையே பார்த்திருந்தன.

“சரி நேரமாச்சு கிளம்புறோம்” என்று சண்முகம் கிளம்ப எத்தனிக்க அவனுக்குப் படபடப்பானது. அவள் வெளியே வரமாட்டாளா அவளைப் பார்த்துவிட மாட்டாமோ என்று ஏங்க,

ராஜேஸ்வரி அவளின் அறைக் கதவைத் தட்டி, “மாமா அத்தை எல்லாம் கிளம்புறாங்க தீபா” என்று சொல்ல,

“தோ வர்றேன் ம்மா” என்று அவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.

“போயிட்டு வர்றேன் தீபா” என்றவர்கள் அவளிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப, “சரிங்க மாமா சரிங்க மாமி” என்றவள் சொல்லிக் கொண்டே கிருபாவை நோக்க அவன் அவளையே விழுங்கிவிடுவது போலப் பார்த்தான்.

இரு பக்கம் நின்ற பெற்றோர்களுக்குமே அவன் பார்வை சங்கடத்தைத் தோற்றுவிக்க, “கிருபா” என்று சண்முகம் அவன் கையை அழுத்தவும் சூழ்நிலையை உணர்ந்தவன்,

“வர்றேன் அத்தை வர்றேன் மாமா... தீபா வர்றேன்” என்று அவன் பார்வை மீண்டும் அவளிடம் வந்து தயங்கி நிற்க, அவள் அவனுக்குத் தலையசைத்து விடைக் கொடுத்தாள்.

அவளைக் கிறக்கத்துடன் பார்த்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்த பிறகும் மறுமுறை, “வர்றேன் தீபா” என்று கூற,

“எத்தனை தடவைடா சொல்லுவா?” என்று பின்னோடு அமர்ந்திருந்த சங்கரி சலித்துக் கொள்ள,

“நான் எத்தன தடவை வேணா சொல்லுவேன்... உனக்கு என்னம்மா பிரச்சனை” என்று அவரிடம் சிடுசிடுத்தவன், மீண்டும் அவளைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டுதான் காரை நகர்த்தினான். 

கிருபாவின் இந்தச் சிரிப்பும் வழிசலும் அவளுக்கு ஒன்றும் புதிதல்ல. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பல ஆண்டுகள் கழித்து இன்று பழைய கிருபாவைப் பார்க்கிறாள். அரும்பு மீசை முளைத்த கிருபா.

 இதே போன்றதொரு சிரிப்புடன் எங்கே அவளைச் சந்தித்தாலும் ஒரு சாக்லேட்டுடன் வந்து நிற்பான். அவனுக்கும் அவளுக்கும் மூன்று வயதுதான் வித்தியாசம். அவளுக்குத் தெரிந்த வரை அவளுடைய பதினைந்து வயதிலிருந்து அவன் இப்படிதான் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

“நந்துவுக்கு சாக்லேட்டு” என்றவள் தங்கைக்குக் கேட்டால், “அவளுக்கு நான் அப்புறம் வாங்கி தர்றேன்... இது உனக்கு மட்டும்தான்” என்று பிரத்தியேகமாக அவளுக்கு மட்டும் என்று சொல்லும் போது அவன் கண்களில் ஒரு கிறக்கம் தெரியும். ஆனால் அப்போது அதெல்லாம் அவளுக்குப் பெரிதாகப் புரியவில்லை.

நாளடைவில் புரிந்து கொண்டாள். அவளிடம் பேசும் போதும் நிற்கும் போதும் நடக்கும் போதும் அவளை மிதமாகத் தொட்டும் தொடாமலும்  உரசிச் செல்லும் அவன் தோள்கள். கிடைக்கும் சந்தரப்பங்களில் எல்லாம் மூச்சுக் காற்றுத் தீண்டுமளவுக்கு அவளை நெருங்கி நிற்கும் அவன் தேகம். சிறு வயதிலிருந்து பேசிப் பழகிய மாமன் மகன் என்ற உணர்வில் அவள் அவற்றை எல்லாம் இயல்பாகக் கடந்துவிட்டிருந்தாள்.

ஆனால் அவளுக்குப் பதினேழு வயதிருக்கும் போது பெரியம்மா பெண்ணின் திருமணத்தில் பின்னோடு நின்று அவன் உரசிய விதம் மிகவும் விரசமாக இருந்தது. அவளுக்கு அது பிடிக்கவில்லை.

அதற்குப் பிறகு விசேஷம் விழாக்கள் குடும்ப சந்திப்பு என்று எதிலும் அவன் இருக்கும் பக்கமே செல்லாமல் தவிர்த்தாள். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அந்தச் சம்பவத்திற்கு பிறகுதான் அவனிடமிருந்து அவள் விலகியது.

அறைக்குள் வந்து உடைகளை மாற்றிக் கொண்டே தீபிகா  அவனுடனான பழைய நாட்களை மனதிற்குள் அலசி ஆராய்ந்து பார்த்தாள். அப்போதைய கிருபாவின் நடவடிக்கைகள் எல்லாம் அவனின் பருவக் கோளாறுகள் என்று புரிந்தது. ஆனால் அவன் தன் மீது கொண்ட விருப்பம் உண்மைதான்.

இல்லையென்றால் இத்தனைக்குப் பிறகும் அவன் தன்னை மட்டுமே திருமணம் செய்ய வேண்டுமென்று பிடிவாதமாக நிற்பானா? என்று எண்ணியவளுக்குள் அவன் மீதாகச் சிறியளவிளான நேசம் எட்டிப் பார்த்தது.

படுக்கையில் அமர்ந்து கொண்டு தன் கரத்திலிருந்த வளையலை அசைத்துப் பார்த்தவள், இனி இவனுடன்தான் தன் வாழ்க்கை என்பதை ஆழமாகத் தன் மனதில் நிறுத்திக் கொண்டாள்.

akila.l has reacted to this post.
akila.l
Quote

Super ma 

You cannot copy content