You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kannadi Thundugal - Episode 15

Quote

15

வாழ்க்கையில் துரத்தப்பட்டு ஓடிக் கொண்டே இருப்பவர்கள் சிலருக்கு விதிவசத்தால் தேடிக் கண்டடைந்து அடைக்கலமாகப் புகும் இடமும் கூட எதிர் கூடாரமாகிவிடுவதுதான் வேதனை

சங்கரி சமையலறையிலிருந்து இட்லிகளைச் சூடாக எடுத்து வந்து ஹாட்பேக்கில் நிரப்ப, பாலாஜிக்கும் சண்முகத்திற்கும் காலை உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.

நந்திகா செல்பேசியில் பேசியபடி அறையிலிருந்த தன் பையை எடுத்துக் கொண்டு வெளியே வர, “நந்து... நீயும் வா சாப்பிட” என்று அழைத்தார்.

“ஆன்... தோ வர்றேன் மா” என்று உணவு மேஜையில் அமர்ந்து கொள்ள, அவளுக்கும் ராஜேஸ்வரி இட்லிகளை எடுத்து வைக்கவும்,  

“நீயும் சாப்பிடு ராஜி” என்றார் சங்கரி.

“இருக்கட்டும் அண்ணி”

“நான்தான் பரிமாறேன் இல்ல... நீயும் உட்கார்ந்து சாப்பிடு” என்று சங்கரி கட்டாயப்படுத்தவும் ராஜேஸ்வரி அமர்ந்து கொள்ள,

“அம்மா இப்போ கிளம்பிடுவோம் இல்ல” என்று தன் அம்மாவிடம் இரகசியமாக கேட்ட நந்து மேலும், “காலைல இருந்து பிரதீப் நாலு தடவை ஃபோன் பண்ணிட்டாரு... எப்போ வீட்டுக்கு வருவன்னு கேட்டு” என்றாள்.

“தீபாவும் கிருபாவும் கிளம்பி வர வேண்டாமா? அவங்கள மறுவீடு  அழைச்சிட்டுப் போகணும் இல்ல” என்று சொல்ல, அவள் முகம் சுருங்கிப் போனது. அவர்கள் இருவரும் அறையை விட்டு இன்னும் வெளியே வராததில் கடுப்பான நந்திகா,

“இன்னும் என்னத்தான் பண்ணுவாங்களோ ரூம்ல” என்று முனங்கவும்,

“என்னடி பேச்சு இதெல்லாம்?” என்று ராஜேஸ்வரி மகளைக் கண்டிப்புடன் பார்த்தார். அவள் தலையை குனிந்து கொண்டு அமைதியாக இட்லியை விழுங்க, அதற்குள் வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக கீழே இறங்கி வந்தான் கிருபா.

நிமிர்ந்து பார்த்து ஆச்சரியமுற்ற நந்து, “எங்க மாமா உங்க முகத்துல இருந்த தாடியைக் காணோம்” என்று கேட்கவும் எல்லோரும் அவனைத் திரும்பி நோக்க, அவர்கள் பார்வையிலும் அதே கேள்வி இருந்தது.

அவன் புன்னகையுடன், “தீபா பிடிக்கலன்டா... அதான் எடுத்துட்டேன்” என்றான்.  

“ஓஓஓ” என்று கேட்டுச் சிரித்த நந்திகா, “சும்மா சொல்லக் கூடாது மாமா... இந்த லுக் கூட உங்களுக்கு செமையா இருக்கு... செம ஸ்மார்ட்டா தெரியுறீங்க” என்று பாராட்டினாள். மற்றவர்கள் பார்வையிலும் அதே அளவுக்கு மெச்சுதலும் ஆச்சரியமும் இருந்தது.

ஆனால் சங்கரியின் முகம் சுணங்கியது. “தாடி எல்லாம் வைச்சு இருக்கும் போது பெரிய மனுஷன் மாதிரி தெரிவ... இப்போ பார்க்க என்னவோ சின்னப் பையனாட்டுமா இருக்கு” என்று மகனிடம் தன் எண்ணத்தைக் கூற,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல... இப்பவும் பார்க்கக் கம்பீரமாதான் இருக்கான்” என்று மகனுக்காக முட்டுக் கொடுத்த கணவனைப் பார்த்து நொடித்துக் கொண்டார் சங்கரி.

மனைவியின் முகத்தில் தெரிந்த கடுப்பைப் பார்த்து அந்தப் பேச்சை அதோடு நிறுத்திய சண்முகம் உணவு முடித்து எழுந்து கைக் கழுவிக் கொள்ள, “கிருபா... சாப்பிட வா” என்று சங்கரி மகனுக்குத் தட்டை எடுத்து வைத்தார்.

“தீபாவும் வரட்டும் மா” என்றவன் ஒய்யாரமாக சோஃபாவில் சாய்ந்து கொண்டு நாளிதழைப் புரட்டினான். மீண்டும் எல்லோர் முகத்திலும் வியப்பின் சாயல். ஆனால் சங்கரிக்கு எரிச்சலானது.

எல்லோரும் உணவருந்தி கொண்டு எழுந்து கொள்ளவும் சாப்பிட அமர்ந்த சங்கரி மகனைத் திரும்பிப் பார்த்து,

“அவ எப்போ வருவாளோ... நீ வா... வந்து சாப்பிடு” என்று மீண்டும் அழைத்தார்.

“வந்திருவாமா... நீங்க சாப்பிடுங்க” என்றவன் இருந்த இடத்திலிருந்து அசையவில்லை.  

எல்லோர் முன்பும் தன் கடுப்பைக் காட்டிவிடக் கூடாது என்று சங்கரி தலையைக் குனிந்து கொண்டு இட்லியைப் பிய்த்துக் கொண்டிருக்க, தீபிகா தயாராகிக் கீழே வந்தாள்.

குங்கும சிவப்பில் பின்னிய கோடுகளுடன் கூடிய அழகான கரும்பச்சை சரிகை முந்தானை அவள் தோளில் தவழ்ந்து சரிந்திருந்தது. எளிய ஒப்பனையிலும் அவள் முகம் பளிச்சிட தமக்கையைப் பார்த்த நந்திகா உடனே,

“இப்பதான் உன் மேக் அப் எல்லாம் முடிஞ்சுதா க்கா” என்று கேலிச் செய்தாள்.

“மேக் அப் எல்லாம் போடலடி... புடவைக் கட்டதான் லேட்டாகிடுச்சு” என்று பதிலுரைக்க,

“மாமா உனக்காக எவ்வளவு நேரமா சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருக்காரு தெரியுமா?” என்று நந்து வருத்தமாகக் கூறுவது போல தமக்கையை எள்ளல் செய்து நகைத்தாள்.  

“எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாரா?” என்றவள் சோஃபாவில் அமர்ந்திருப்பவனைப் பார்த்து, “ஏன் கிருபா... நீ சாப்பிட வேண்டியதுதானே” என்று கேட்டாள்.

“நீ வருவன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்றவன் தன் கையிலிருந்த நாளிதழை மடித்து வைத்துவிட்டு எழுந்து அவளை நெருங்கி  வந்து தோள்களை உரசியபடி நின்று, “அம்சமா இருக்கடி நீ” என்று காதோரம் கிசுகிசுக்க, “என்ன கிருபா நீ” என்று அவனை விட்டு அவசரமாகத் தள்ளி வந்தாள்.

 அதோடு மற்றவர்கள் பார்வை தங்களைப் பார்த்துவிட்டதா என்று சுற்றும் முற்றும் அவள் கவனிக்கும் போதே, “யாரும் பார்க்கல” என்று அவன் அருகில் வந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு எதுவும் தெரியாதது போல சாப்பாடு மேஜையில் சென்று அமர்ந்து கொண்டான்.

“கடவுளே” என்று கடுப்படித்துக் கொண்டே அவளும் வந்து அவன் அருகே அமர, ராஜேஸ்வரி அவர்கள் நெருக்கத்தில் இடைபுக வேண்டாமென்று பரிமாறச் செல்லவில்லை. தீபிகா ஹாட்பேக்கைத் திறந்த போது அதில் இட்லிகளே இல்லை. 

“உள்ள கிச்சன்ல இருக்குமா... கொஞ்சம் எடுத்துட்டு வந்துடுறியா” என்று சங்கரி சட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே சொல்ல,

“சரிங்க மாமி” என்றவள் எழுந்து செல்வதற்கு முன், “இரு நான் போறேன்” என்று கிருபா முந்திக் கொண்டு ஹாட்பேக்கை எடுத்தபடி சமையலறைக்குள் செல்ல,

“கிருபா இரு... நான் போறேன்” என்று அவனை முந்தியடித்துக் கொண்டு அவள் செல்ல, ‘விளங்கிடும்’ என்று சங்கரி தலையிலடித்துக் கொண்டார்.

சமையலறைக்குள் சென்ற கணவனின் முன்னே சென்று நின்ற தீபிகா, “கிருபா... இப்போ எதுக்கு ஹாட்பேக்கை தூக்கிட்டு வந்த... நான் எடுத்துட்டு வரமாட்டேனா... மாமி என்ன நினைப்பாங்க... இப்படி கொடு” என்று அவள் படபடவெனப் பேசிக் கொண்டு அவன் கையிலிருந்த ஹாட்பேக்கை வாங்க எத்தனிக்கும் போது, அவன் பார்வை விவகாரமாக அவளைப் பார்த்தது.

அவன் பார்வையின் பொருள் உணர்ந்தவள், “கிருபா நீ ஒழுங்கா போ” என்று சொல்லு போதே அவளை நெருங்கி உதட்டில் முத்தமிட முயன்றான்.  

“யாராச்சும் வர போறாங்க... விடு” என்று சிரமப்பட்டு அவன் கரத்தைப் பிரித்துத் தள்ளிவிடும் போது, சங்கரி அங்கே வந்துவிட்டிருந்தார். 

“சுட்டு வைச்ச இட்லியை எடுத்துட்டுப் போக இம்புட்டு நேரமா?” என்றவர் அவர்களைப் பார்த்து கேட்கவும், இருவர் முகத்திலும் அசடு வழிந்தது.

“அதான் மாமி... எடுத்துட்டு இருக்கேன்” என்று தீபா பதில் சொல்லிக் கொண்டே , “நீ போ... நான் எடுத்துட்டு வரேன்” என்று அவனைத் துரத்தி விட்டாள்.

அவன் ஏக்கமாகப் பார்த்துக் கொண்டே நகர, அவள் இட்லிகளை எடுத்து நிரப்பிக் கொண்டிருந்தாள்.

“ஆமா... பிடிக்கலன்னு என் பையனோட தாடியை எடுக்கச் சொன்னியாம்” என்று அப்போது சங்கரி கண்டிக்கும் தொனியில் அவளிடம் கேட்கவும்,

“பிடிக்கலன்னு எல்லாம் சொல்லல மாமி” என்று அவள் அடுத்து என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறினாள்.

காலையில் முத்தம் கொடுக்கும் போது, ‘உன் தாடி ரொம்ப குத்துது கிருபா’ என்று அவள் சாதாரணமாகச் சொல்லித் தொலைக்க, அவனோ உடனடியாகச் சென்று தன் தாடியை மொத்தமாக மழித்துவிட்டு வந்து, “இப்போ குத்தாதுடி” என்று அணைத்து முத்தமிட்டு அவளை அதிரச் செய்தான். அதை எப்படி அவரிடம் சொல்வது என்று புரியாமல் அவள் விழிக்க,

“சரி சரி... சீக்கிரம் சாப்பிட்டுக் கிளம்புங்க... இராகு காலத்துக்கு முன்னாடி போய் சேரணும்” என்று கூற அவள் தப்பித்தோன் பிழைத்தோம் என்று அவசரமாக இட்லியை எடுத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டாள்.

கிருபாவும் தீபாவும் அமர்ந்து சாப்பிட்டு முடித்துப் புறப்பட ஆயத்தமாகினர். அதற்குள் நந்து தமக்கையைத் தனியாக அழைத்து வந்து, “உன் முகத்துல இருக்க பிரைட்னஸ பார்த்த பிறகும் நான் இந்த கேள்வியைக் கேட்கக் கூடாது... இருந்தாலும் அம்மா கேட்க சொன்னாங்க” என்று இழுக்க,

“நீ எதுவும் கேட்க வேண்டாம்... நானே சொல்றேன்” என்ற தீபிகா மென்னகையுடன், “கிருபா என்கிட்ட நல்லபடியா நடந்துக்கிட்டாரு... நானும் கிருபாவும் சந்தோஷமா எங்க வாழ்க்கையைத் தொடங்கி இருக்கோம்” என்று அவர்கள் கேள்விக்கான பதிலை அவளே கூறிவிட்டாள்.  

நந்திகா தமக்கையின் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு, “உன் முகத்தைப் பார்த்ததுமே எனக்கு அது புரிஞ்சிடுச்சு க்கா...  அதுவும் மாமா நீ வந்தாதான் சாப்பிடுவேன்னு பிடிவாதமா உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததுமே மாமா உன்னை எப்பவும் விட்டுக் கொடுக்கவே மாட்டாருன்னு புரிஞ்சிக்கிட்டேன்... எனக்கு பெர்ஸனலா ரொம்ப ஹாப்பி” என்று கண்கள் கலங்க கூற, தீபாவின் கண்களும் கலங்கின.

அப்போது தங்கையை அணைத்துக் கொண்டவள் முகத்தில் உண்மையில் அத்தனை நேரம் இருந்த பிரகாசம் இல்லை. எல்லோர் முன்பாகவும் தன்னுடைய மனக்குழப்பத்தைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று மறைத்துவிட்டிருந்த அவளுக்கு நேற்றைய இரவு நினைவிலோடியது.

பூக்களால் அலங்கரிக்கபட்ட அந்த முதலிரவு அறையில் வீசிய சுகந்தமான வாசமும் மென்மையான அமைதியும் அவளுக்கு ஒருவித கலவையான உணர்வை உருவாக்கியிருந்தது.

என்னதான் ஆண்டுகள் கடந்துவிட்டாலும் இதே போன்றதொரு அனுபவமும் அது ஏற்படுத்திய வலிகளையும் அவளால் அந்த நொடி கடந்து வராமல் இருக்க முடியவில்லை. இருந்தாலும் அந்த நினைப்பை ஒதுக்கிவிட்டு கிருபாவுடன் இணக்கமாகப் பழகவும் அவனிடம் மனம் விட்டு பேசவும் நினைத்தாள்.

அவள் பேச முயன்ற போது அவன் அவசர அவசரமாக அவள் முகத்தருகே நெருங்கி முத்தமிட்டிருந்தான். அந்த முத்தத்திற்குப் பின் அவளால் பேசவே முடியவில்லை.

ஆனால் அவன் பேசினான். “நான் எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா உன்னை? நீதான் என்னை புரிஞ்சிக்காம போயிட்ட” என்றான்.

 அவள் அதிர்ச்சியுடன் நிமிர, “என்னை நீ ரொம்ப காக்க வைச்சிட்ட” என்றவன் மீண்டும் அவள் இதழ்களில் முத்தமிட்டிருந்தான்.

அவனுடைய முத்தத்தை மீறி அவளால் பேச முடியவில்லை. ஆனால் அவன் பேசினான். அவன் மட்டும் பேசினான். ‘என்னை நீ ஏமாத்திட்ட... என் காதலை நீ புரிஞ்சிக்கல’ என்று தொடர்ச்சியாக தன் காதலைப் பற்றி அவளிடம் சொல்லிக் கொண்டே அவள் தேகத்தை  ஆக்கிரமித்துக் கொண்டான்.

அவனுடைய அணைப்பும் தொடுகையும் அவளது உடலையும் உணர்வுகளையும் கரைத்தாலும் அதனுடன் இணைந்த அவனுடைய காதல் வசனங்கள் சுருக்கென்று ஊசிப் போலத் தைத்துக் கொண்டே இருந்தன.

இரவு முழுக்கவும் அவள் இருவேறு உணர்வுகளுக்கு இடையில் சிக்கித் தவித்தாள். சில வலிகளும் காயங்களும் யார் பார்வைக்கும் தெரியாது. காயப்பட்டவர்களாலேயே அதனைச் சரியாக உணர முடியாது.

அவள் நிலையும் அப்படிதான் இருந்தது. உணர்ந்தும் உணராமலும் இரவெல்லாம் அவன் பேசிய வார்த்தைகளின் நோக்கம் புரியாமல் இப்போது வரை யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தாள். அதேநேரம் யாரிடமும் தன் மனநிலையைக் காட்டாமல் அவள் மறைத்துக் கொண்டாள்.

அந்தச் சமயம் அவர்கள் மறுவீடு செல்வதற்கான ஆயத்த வேலைகள் நடந்தேறிக் கொண்டிருக்க கிருபா பாலாஜியிடம், “மாமா நீங்க அத்தை நந்து எல்லாம் கூட்டிட்டு டிரைவர் கூட இந்த கார்ல போயிடுங்க... நாங்க இரண்டு பேரும் பின்னாடி வேற கார்ல வர்றோம்” என்று தெரிவிக்க,

“ஏன் டா இந்த கார்லயே நீயே போயிடுறதுதானே” என்று சண்முகம் மகனிடம் சொல்ல, 

“இல்லபா... எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு... இடையில அதை எல்லாம் முடிச்சிட்டுதான் போகணும்” என்று பதிலுரைக்க,

 “ஆகட்டும் மாப்பிளை... நீங்க வாங்க... நாங்க முன்னாடி போறோம்” என்று விட்டு பாலாஜி முன்னே நின்ற காரில் ஓட்டுனருடன் மனைவி மகளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

அவர்கள் சென்ற சில நிமிடங்கள் கழித்து கிருபாவும் தீபாவும் தனி காரில் புறப்பட, “வேலை எல்லாம் முடிச்சிட்டு இராகு காலத்துக்கு முன்னாடி போயிடுங்க” என்று சண்முகம் மகனை வழியனுப்பினார்.

  அவர்கள் செல்வதைப் பார்த்தபடி நின்ற சங்கரி கணவனிடம், “பொண்டாட்டி ஆகுறதுக்கு முன்னாடியே இவ மேல பைத்தியமா கிடந்தான் உங்க பையன்... இப்ப என்னடானா சுத்தமா முத்திடுச்சு” என்று உதட்டைச் சுழிக்க,

“சும்மா ஏதாவது சொல்லாத... புதுசா கல்யாணம் ஆனவங்க இல்ல... அப்படிதான் இருப்பாங்க” என்றார்.

“நமக்குப் புதுசா கல்யாண ஆகும் போது நீங்க இப்படியா இருந்தீங்க? அப்பவும் உங்க அம்மா சொல்றதுதான் வேத வாக்குன்னு அவங்க முந்தானையைப் பிடிச்சு சுத்திக்கிட்டு இல்ல” என்று இதுதான் சாக்கு என்று கணவனை வார,

“உன் கூட சரசம் பண்ணிட்டு இருக்க எனக்கு நேரம் இல்லடி... நானும் கட்சி ஆஃபீஸ் கிளம்பணும்” என்றவர் விட்டால் போதுமென்று நழுவிவிட்டார்.

அதேநேரம் கிருபாவின் கார் அவர்கள் ஊர் எல்லையை நோக்கிச் செல்ல அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்த தீபாவின் விழிகளில் மீண்டும் அவர்கள் படம் போட்டு அந்த வரவேற்பு பலகை கண்ணில் பட்டது.

அவள் உடனே கிருபாவின் புறம் திரும்பி, “கிருபா... முதல இந்த ஃப்ளக்ஸ் போர்டைக் கழட்டச் சொல்லு” என்றாள்.

“எந்த போர்டு?” என்றவன் புரியாமல் பார்க்க,

“அதோ... அதுதான்... நல்லாவே இல்ல... அசிங்கமா இருக்கு... ப்ரீவெடிங் ஷூட்ல எடுத்த ஃபோட்டோ எல்லாமா ஃப்ளக்ஸ் போர்ட்ல போடக் கொடுப்பாங்களா? பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க? வந்த அன்னைக்குப் பார்த்தப் போதே எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு... தெரியுமா?” என்றவள் எதார்த்தமாகத் தன் மனதில் பட்டதைச் சொல்ல அவன் அமைதியாக இருந்தான்.

“என்ன சைலன்டா வர... நான் சொல்றது உனக்குப் புரியுதா இல்லையா?” என்றவள் கேட்ட நொடி அவன் உதடுகள் ஏளனமாக வளைந்தன.

“இப்போ எதுக்கு கிண்டலா சிரிக்குற?” என்றவள் முகம் கடுகடுக்க,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல... நான் அந்த போர்டைக் கழட்ட சொல்றேன்?” என்றான் உடனே.

“இப்போ எதுக்கு ஒரு மாதிரி கிண்டலா சிரிச்ச? அதைச் சொல்லு முதல” என்றவள் அழுத்திக் கேட்கவும், அவன் கொஞ்சம் தாமதித்துவிட்டு பின் தான் நினைத்ததைச் சொன்னான்.

“இல்ல... ஒரு சாதாரண ஃபோட்டோக்காக... அசிங்கமா இருக்கு... மத்தவங்க என்ன நினைப்பாங்கனு பேசுற நீ.... எவன் கூடவோ ஓடிப் போகும் போது... அசிங்கமா இருக்கும்னோ இல்ல மத்தவங்க என்ன  நினைப்பாங்கனோ யோசிக்கவே இல்லையா?” என்று கேட்கவும் அவள் அதிர்ந்து விட்டாள்.

யார் யாரோ இப்படி என்னவெல்லாமோ வார்த்தைகள் சொல்லி அவளை அசிங்கப்படுத்தியதை எல்லாம் அவள் கேட்டும் கடந்தும் வந்திருக்கிறாள். ஆனால் இப்போது அவளைக் கட்டியவனும் அதேபோன்றதொரு குத்தலான வார்த்தைகளைச் சொல்லும் போது அதனை எப்படி எதிர்கொள்வது என்று அவளுக்கு உண்மையிலேயே புரியவில்லை.     

அதிர்ச்சி என்ற வார்த்தைக்கு எல்லாம் அப்பாற்பட்ட நிலையில் அவள் உணர்வுகள் உறைந்துவிட்டிருந்தன.

Quote

Super ma 

You cannot copy content