You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kannadi thundugal - Episode 18

Quote

18

இரவு பத்து மணிக்கு வீட்டிற்குத் திரும்பிய கிருபா இயலாமையுடன் தரையில் படுத்துக் கிடந்த மனைவியைத் தொட்டு உலுக்கினான். அவள் அப்படியே அசையாமல் படுத்துக் கிடந்தாள். கண்களில் கண்ணீர் காய்ந்து கன்னங்களில் ஒட்டிக் கொண்டிருந்தது. 

“தீபா தீபா” விழித்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் விழிகளைத் திறக்கவில்லை. ஏன் திறக்க வேண்டுமென்று ஒரு பிடிவாதம்.

அவனும் பிடிவாதக்காரன். அவளை விடுவதாக இல்லை. “எழுந்திருடி” என்றவன் அவளைக் கட்டாயப்படுத்தி எழுப்பி, “தீபா வா” என்று முடிந்தும் முடியாமலும் கிடந்தவளை வாசலுக்கு இழுத்துக் கொண்டு போய் நிறுத்தினான்.

“நீ ஆசைப்பட்ட அதே பைக் அதே கலர்” என்று அவன் காட்ட. அவள் புரியாமல் விழிகளை விரித்துப் பார்த்தாள். அவள் விரும்பி வாங்கிய அதே இரக பைக் மாலைடன் வாசலில் நின்றது.

அந்த நொடி ‘இவன் என்ன பைத்தியமா?’ என்றுதான் அவளுக்குத் தோன்றியது. தெரியாமல் இவனிடம் வந்து மாட்டிக் கொண்டுவிட்டோம் போலவே என்று யோசித்திருக்கும் போது அவளைப் பின்னிருந்து இடையோடு அணைத்துக் கொண்டவன்,

“நீ நாளைக்கு ஆஃபிஸ்க்கு பைக்ல போ... சரியா?” என்று அவள் கன்னத்தோடு கன்னம் வைத்துச் சொல்ல அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. ‘சை’ என்று அவன் கையை உதறித் தள்ளிவிட்டு வீட்டினுள் வந்து சோஃபாவில் அமர்ந்து கொள்ள,

அவனும் அவள் அருகே வந்து அமர்ந்து கொண்டு, “இன்னும் என் மேல கோபமா? நான்தான் உனக்கு பிடிச்ச அதே பைக்கை வாங்கிக் கொடுத்துட்டேன் இல்ல” என, அவளுக்கு எரிச்சல் மூண்டது.

“ஒரு இலட்ச ரூபா பைக்கை ஈஸியா கொளுத்திப் போட்டு... புதுசு வாங்கிட்டு வந்துட்டேன் சொல்ற... உன்னை எல்லாம் என்ன சொல்றது? உனக்குப் பணத்தோட மதிப்பும் தெரியல... உணர்வுகளோட மதிப்பும் தெரியல” என்றவள் காட்டமாகப் பேச அவளை நிதானமாக ஏறயிறங்கப் பார்த்தவன்,

“உனக்கு ரொம்ப தெரியுமா?” என்று கேட்டான்.

“என்ன?” என்றவள் அவனை முறைத்துப் பார்க்க,

“இல்ல உனக்கு மட்டும் உணர்வுகளோட மதிப்பு ரொம்ப தெரியுமான்னு கேட்டேன்... அம்மா, அப்பா, கூடப் பிறந்தவன்னு.... எல்லோரையும் தூக்கிப் போட்டுட்டு எவன் கூடவோ ஓடிப் போனவதானே நீ”

”அப்போ நீ யாரோட உணர்வுகளையாவது யோசிச்சியா இல்ல  மதிச்சியா... அவங்க அவமானப்படுவாங்க... அசிங்கப்படுவாங்கனு கவலைப்பட்டியா... அந்த நிமிஷம் உன் ஆசைதான் முக்கியம் உன் விருப்பம்தான் முக்கியம்னு விட்டுட்டு ஓடிப் போகல... நீ நினைச்சதைச் சாதிச்சுக்கல” என்று அவன் தேய்ந்த ரெக்கார்ட் போல அதே கதையைப் பேச, அவளுக்குச் சலித்துப் போனது. அப்படியே அவள் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

‘ஓடிப் போயிட்டா... ஓடிப் போயிட்டா... ஓடிப் போயிட்டா’

இப்படி பேசிப் பேசியே தன்னைக் கொல்வது என்று முடிவு கட்டி வைத்திருக்கிறான் போல. இவன் சாகிறானோ இல்லையோ தன்னைச் சாகடிக்காமல் விடமாட்டான். சாகும் வரை விடமாட்டான். இவனிடம் சிக்கிச் சின்னாபின்னாமாக வேண்டுமென்று தன் தலையில் எழுதித் தொலைத்திருக்கிறதோ என்னவோ என்று அவள் எண்ணிக் கடுப்பாகும் போதே அவன் சாதாரணமாக,  

“டிஃபன் வாங்கிட்டு வந்திருக்கேன்... சாப்பிடு” என்று இரண்டு பொட்டலத்தை எடுத்து அங்கிருந்த மேஜை மீது வைத்தான்.  

அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. “அதெப்படி கிருபா...  நீ பேசுறதை எல்லாம் பேசிட்டு... சாப்பாடு கொண்டாந்து வைச்சு என்னைத் தின்னும்ப... நான் திங்கணுமா? அப்படி ஒன்னும் நான் மானங்கெட்டுப் போயிடல” என்றவள் அங்கிருந்து எழுந்துச் செல்லப் பார்க்க,

“காலைல இருந்து எதுவும் சாப்பிடாம இருக்கன்னுதான் வாங்கிட்டு வந்தேன்... சும்மா சண்டையை வளர்க்காம... சாப்பிடு” என்று அவள் கையைப் பிடித்தான்.  

“கையை விடு... கையை விடப் போறியா இல்லயா? ” என்று முரண்டியவள், “ஒரு நாள் சாப்பிடாம நான் செத்ததெல்லாம் போயிட மாட்டேன்... கவலைப்படாதே... நீ டார்ச்சர் பண்றதுக்காகவாச்சும்... நான் உயிரோட இருப்பேன்... அப்பத்தான் நீ டார்ச்சர் பண்ணி.... நீ டார்ச்சர் பண்ணி என்னைச் சாகடிக்கலாம்” என்றவள் சொன்ன நொடி அவனும் கோபமானான்.  

“சாப்பிடலன்னா போடி” என்று அவன் அந்தப் பொட்டலங்களைத் தூக்கி விசறியடித்துவிட,

அவன் செய்கையில் மிரண்டு விழித்தவள் அதன் பின் அவன் எதையோ செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டு அமைதியாக வந்து அறையில் படுத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீர் வழிந்தபடியே இருந்தன. தலையணையை இறுக்கமாக அணைத்துப் பிடித்துக் கொண்டு அவள் அழுது கொண்டிருந்தாள்.

மனம் சோர்ந்து உடலும் சோர்ந்து கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்த சமயம் பார்த்து அருகே வந்து படுத்தவன் அவள் இடையின் மீது கைகளைச் சுற்றிப் போடவும், ‘சை என்ன மனுஷன் இவன்’ என்று அவளுக்கு அப்படியொரு வெறுப்பு உண்டானது.

“சீ கையை எடு” என்று எரிச்சலுடன் கத்தி அவன் கையைத் தள்ளினாள். ஆனால் இறுக்கமாக அணைத்திருந்த அவன் கரத்தை அவளால் விலக்கித் தள்ள முடியவில்லை.

“இப்போ கையை எடுக்கப் போறியா இல்லையா?” என்றவள் கோபமாகக் கத்தியும் அவன் அசரவில்லை. “என்னால முடியல எடுடா” என்று அவள் அழுது அரற்றியும் பார்த்துவிட்டாள். அவன் தன் கரத்தை எடுப்பதாக இல்லை. 

அவள் குரலைத் தாழ்த்தி, “கிருபா ப்ளீஸ் கையை எடு” என்று தன் உணர்வெல்லாம் வடிந்து கெஞ்ச, அவன் இன்னும் இறுக்கமாக அவள் காதோரம் நெருங்கி, “சாரி தீபா” என்றான்.

 ‘செய்றதெல்லாம் செஞ்சுட்டு சாரி கேட்டுச் சாவடிக்கிறான்... சை!’ என்றவள் எண்ணிக் கொண்டு முகம் சுழிக்க,

அவன் தொடர்ந்து, “நான் செஞ்சதெல்லாம் தப்புதான் தீபா... பெரிய தப்பு... அப்படி செஞ்சிருக்கக் கூடாது... எனக்கு இப்போ புரியுது... ஆனா நேத்து நைட்டெல்லாம் எனக்குத் தூக்கமே வரல தெரியுமா?”

”நானும் என் கோபத்தை கன்ட்ரோல் பண்ணிடனும்னுதான் நினைச்சேன்... ஆனா என்னால முடியல... என்னைக் கேட்காம எப்படி நீ  அந்த பைக்கை வாங்கலாம்னு ஒரு கோபம்... வெறி...”

”அதுவும் காலையில எழுந்து அந்த பைக்கை வாசலில நிற்குறதைப் பார்த்ததும் வந்த வெறில கெரோசீனை ஊத்திக் கொளுத்திட்டேன்டி... அப்ப வரைக்கும் கூட நான் செய்றது தப்புன்னு எனக்குச் சத்தியமா புரியல” என்று இரக்கமாகப் பேசியதை அவள் வேறு வழியில்லாமல் அமைதியாகக் கேட்டிருக்க, அவன் சட்டென்று அவளைத் தன் புறம் திருப்பிவிட்டு,

“நீ என்னை கேட்காம அந்த பைக்கை வாங்கி இருக்கக் கூடாதுதானே?” என்றதும் அவளுக்குள் அடங்கி இருந்த கோபமெல்லாம் மீண்டும் சீறிக் கொண்டு எழுந்தது.

‘இவனை’ என்று கோபமும் எரிச்சலும் தாண்டிய ஒரு உணர்வு ஏற்பட்டது. அதுவும் அவன் நெருக்கத்திலும் அணைப்பிலும் அவளுக்கு மூச்சு முட்டியது. அந்த உணர்வுகளை மெல்ல விழுங்கிக் கொண்டவள்  நெருக்கமாக இருந்த அவன் முகத்தைப் பார்த்து, “எனக்காக நீ ஒன்னு செய்ய முடியுமா கிருபா?” என்று பொறுமையாகக் கேட்க,

“என்ன தீபா?” என்றவன் ஆர்வமாக அவள் முகம் பார்த்தான். 

“நெக்ஸ்ட் டைம் உனக்கு இந்த மாதிரி கண்ட்ரோல் பண்ண முடியாதளவுக்குக் கோபமோ வெறியோ வந்தா... ப்ளீஸ் பைக் மாதிரி ஏதாச்சும் பொருளை எல்லாம் கொளுத்திக் காசை வீணாடிக்காதே... அதுக்குப் பதிலா என்னைக் கொளுத்திடு” என்று நிறுத்தி நிதானமாகச்  சொல்ல அவன் பதறிக் கொண்டு, “தீபா” என்றான்.

“சீரியஸாதான் சொல்றேன்... ப்ளீஸ் டூ இட்... உன் கோபமும் அடங்கும்...  நானும் நிம்மதியா போய் சேர்ந்திடுவேன்” என்றவள் சொன்ன நொடி,

“ஏன் டி இப்படி எல்லாம் பேசுற?” என்றவன் குரல் உயர்ந்தது.   

“ஓ... நான் பேசவே கூடாது... ஆனா நீ மட்டும்... கெரோசீனை ஊத்திக் கொளுத்திக்குவேன்னு மிரட்ட எல்லாம் செய்யலாம்... என்னடா உன் லாஜிக்கு?” என்றதும் அவன் கடுப்புடன் எழுந்து அமர்ந்து கொண்டு,

“நீதானடி வீட்டை விட்டுப் போறன்னு குதிச்ச... நீ அப்படி போகாம இருந்திருந்தா நான் அந்த மாதிரி செஞ்சிருக்க மாட்டேன்” என்று ஆவேசமாகக் கூற,

“நீ என்ன வேணா செய்வ... ஆனா நான் அதெல்லாம் பொறுத்துக்கிட்டு உன் கூடக் குடும்பம் நடத்துணுமா...? அப்படி என்னடா எனக்குத் தலையெழுத்து?” என்று அவளும் எழுந்தமர்ந்து சீறலாகப் பேசினாள்.  

“நீ எவன் கூடவோ ஓடிப் போயிட்டு வந்த பிறகும் நான் உன் கூடக் குடும்பம் நடத்தல... நான் உன்னை ஏத்துக்கல” என்றவன் சொன்னதைக் கேட்டவளுக்கு அப்போது சிரிப்பு வந்துவிட்டது. சத்தமாகச் சிரித்து விட்டவள், “நல்லா சொன்ன” என்று கையைத் தட்டிச் சிரித்துக் கொண்டே,

“நீ இப்படிதான் சொல்லுவேன்னு நினைச்சேன்... நான் நினைச்ச மாதிரியே சொல்லிட்ட... ஆனா இதுல எனக்கு ஒரு விஷயம் புரியல... நான் எப்பயாச்சும் உன் காலில வந்து விழுந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு உன்கிட்ட கெஞ்சுனேனா... இல்ல எனக்கு வாழ்க்கைக் கொடுன்னு கேட்டேனா... கேட்கலயே... அப்புறம் ஏன் நீ இப்படி எல்லாம் லூசுத்தனமா பேசிட்டு இருக்க?” என்று கேட்டு வைக்க அவன் கண்கள் உஷ்ணமாகத் தகித்தன. அவளை எரித்துவிடுவது போல அவன் பார்த்து வைக்கவும்,

“இதைச் சொன்னதுக்கே இவ்வளவு கோபம் வருதா கிருபா உனக்கு? அப்போ நான் உன்னை வெறுப்பேத்த இன்னொரு விஷயம் சொல்றேன் கேட்குறியா?” என்றவள் அவனைப் பார்த்து ஒரு ஏளன நகைப்புடன்,

“நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்றதுக்கு முன்னாடியே ஒருத்தன்... என் பாஸ்ட் எல்லாம் தெரிஞ்சும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க தயாரா இருந்தான்... என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான்.”

”அவன் ஒன்னும் உன்னை மாதிரி இல்ல... ஜென்யூனா என்னைக் காதலிச்சு சொன்னான்... நான்தான் முட்டாளாட்டும் உன்னைக் கல்யாணம் பண்ணித் தொலைச்சேன்... சத்தியமா அப்ப கூட உன்னை விருப்பப்பட்டு எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்கல... எங்க அம்மா அப்பா மூஞ்சிக்காகப் போனாப் போகுதுன்னுதான் உன்னைக் கல்யாணம் பண்ணேன்” என்றவள் சொன்ன நொடி கிருபாவின் கோபம் எகிறியது. அவள் கன்னம் பெயர்ந்துவிடுமளவுக்கு ஒரு அறைக் கொடுத்து,

“என்னடி விட்டா பேசிட்டே போற” என்று அவள் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்தான். அவளுக்கு வலித்தது.

இருந்தும் அவன் கண்களை நேராகப் பார்த்து, “பொம்பளைங்கள அடிக்கிறது ஆம்பளத்தனம் இல்லன்னு ஆயா சொன்னது மறந்து போச்சா கிருபா?” என, அவன் விழிகளில் அனல் பறந்தது.

அவன் அப்போதும் அவள் தலையை முடியை விடாமல், “யாருடி அவன்?” என்று கேட்க,

“பேர் எல்லாம் எதுக்கு...? அவன் பார்க்க உன்னை விட அழகா ஹேண்ட்ஸம்மா இருப்பான்” என்றவள் சொன்னதுதான் தாமதம். மீண்டும் அவள் கன்னத்தில் அறைய,

“நீ ஆம்பளயே இல்லன்னு திரும்பத் திரும்ப நிரூபிக்குற” என்றவள் சொன்னதில் அவளைப் படுக்கையை விட்டு உதைத்துக் கீழே தள்ளிவிட்டான். விழுந்த வேகத்தில், “அம்மா” என்று அலற அவன் பாட்டுக்கு எழுந்து தன் சட்டையை அணிந்து கொண்டு அறைக் கதவைத் திறந்து வெளியே செல்ல எத்தனிக்க,

“கொளுத்திக்கப் போறியா கிருபா?” என்று அவள் கேட்ட தொனியில் நின்று அவள் புறம் திரும்பி முறைத்தான். கட்டுப்படுத்த இயலாத கோபம் அவன் கண்களில்.

அவள் நிதானமாக எழுந்து கொண்டே, “இல்ல... இந்தத் தடவை கொளுத்திக்கப் போறன்னா நான் சத்தியமா உன்னைத் தடுக்க மாட்டேன்... நீ செஞ்சுக்கோ... ஆனா ஒன்னு மட்டும் மனசுல வைச்சுக்கோ... நீ கொளுத்திக்கிட்டா உன்னையே நினைச்சு நான் உருகிட்டு எல்லாம் இருக்க மாட்டேன்... நிம்மதியா வேறொரு கல்யாணம் பண்ணிக்குவேன்” என்று சொன்னதில் அவன் கண்கள் தீயாக எரிந்தன.

“சீ நீயெல்லாம் ஒரு பொம்பளையா?” என்றவன் அசூயை உணர்வுடன் அவளைப் பார்த்துவிட்டுப் படாரென்று கதவை அடித்துச் சாற்றி மூடிவிட்டு வெளியேறிவிட, அவள் உதட்டைப் பிதுக்கினாள்.

‘இவங்க எல்லாம் ஆம்பளையா இருக்கும் போது நானெல்லாம் பொம்பளையா இருக்கக் கூடாதா’  என்று எண்ணியவள் எழுந்து கதவைத் திறந்து வாயிலுக்கு வந்து பார்த்தாள்.

பைக்கைக் கூட எடுக்கவில்லை. அவன் பாட்டுக்குத் தூரமாக எங்கேயோ நடந்து போய் கொண்டிருந்தான். அவள் பேசிய பேச்சிற்குச் சத்தியமா சாக மாட்டான் என்று தோன்றியது.

ஒரு வேளை அவன் அப்படி செய்துவிட்டால் நிச்சயம் அதனை அவளால் தடுக்கவும் முடியாது. அது அவன் தேடிக் கொண்ட விதி என்றவள் கதவை மூடிவிட்டுப் படுக்கையில் வந்து படுத்துக் கொண்டாள்.

அடி வாங்கிய கன்னம் எரிந்தது. இதுவரையில் அவன் இப்படி தன்னை அடித்ததில்லை என்ற எண்ணம் தோன்றியது. எதிரே இருந்த சுவரில் அவர்கள் தேனிலவில் எடுத்தச் சிறிய புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அதனை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தவளுக்கு,

‘அவன்தான் சைக்கோ மாதிரி நடந்துக்கிறான்னா... ஏன் நானும் அவன்கிட்ட இந்தளவு சைக்கோத்தனமாகப் பேசித் தொலைச்சேன்’ என்று இப்போது அவளுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.

ஒரு வகையில் இப்படி எல்லாம் பேசினால் அவனாகவே தன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவான் என்றுதான் முடிந்த மட்டும் அவனை வெறுப்பேற்றிப் பார்த்தாள். ஆனால் நேருக்கு மாறாக அவன் கிளம்பி வெளியே சென்றுவிட்டான்.

‘எங்கே போய் தொலைத்திருப்பான்... திரும்பி வருவானா மாட்டானா?’ இப்படி அவள் மனதில் ஓடிய சிந்தனைகளையும் அவளுக்கு ஏற்பட்டப் படபடப்பையும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

‘கண்டபடி பேசிட்டோம்... இப்போ டென்ஷனாகி என்ன பண்றது?’ என்றவள் வெளியே வந்து தண்ணீரை அருந்திவிட்டு சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். அவளுக்குப் பதட்டமானது.

‘எங்கே போயிருப்பான்...? எப்போது வருவான்?’ என்று யோசித்துக் கொண்டே அவள் உறங்கியும் போய்விட்டாள்.

செல்பேசியில் அலாரம் அடிக்கும் சத்தம் கேட்கவும் அவளுக்கு விழிப்புத் தட்டியது. அவன் வந்திருப்பானா என்று பார்த்தாள். வரவில்லை.

அவன் தன் செல்பேசியைக் கூட எடுத்துவிட்டுப் போகவில்லை என்பதைக் கண்டவளுக்கு என்னவோ மனதைப் பிசைந்தது. உடனடியாகக் குளியலறைச் சென்று அவசர அவசரமாக ஒரு குளியலைப் போட்டு சுடிதாரை மாட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

அவன் வாங்கி வந்த புது பைக் வாசலில் நின்றது. அதனை எடுத்துக் கொண்டு போகலாம் என்ற எண்ணம் தோன்றவும் சாவியைத் தேடிப் பார்த்தாள். எங்கே தேடியும் அதன் சாவி அவளுக்குக் கிடைக்கவில்லை.

‘அவசரத்துக்குக் கூட அவன் வாங்குன பொருள் நமக்கு உதவ மாட்டேங்குது’ என்றவள் அதன் பின் தேடி நேரத்தை வீணாக்காமல் தன்னுடைய செல்பேசியையும் பர்ஸையும் எடுத்துக் கொண்டு வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு ஊருக்குள் சென்றாள்.

வானம் அப்போதுதான் வெளுக்கத் தொடங்கியிருந்தது.

அவன் தன் வீட்டிற்குதான் போயிருப்பான் என்ற எண்ணம் தோன்ற, ‘மாமாவுக்கு ஃபோன் பண்ணிக் கேட்கலாமா’ என யோசித்தாள். ஆனால் அவரிடம் பேச அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

‘என்ன செய்வது? என்ன செய்வது?’ என்று யோசித்தபடியே  சாலையில் நடந்தவளுக்குச் சட்டென்று தங்கத்தின் நினைவு வந்தது. நடந்து செல்லும் வழியில்தான் அவள் வீடும் இருந்தது.

சிறியளவில் ஒற்றையாக நின்றிருந்த கல் வீடு. அதைச் சுற்றிலும் ஒரு முள்வேலி. சிலமுறைகள் பார்த்திருக்கிறாள் ஒழிய உள்ளே சென்றதில்லை. முள்வேலியுடன் இணைந்திருந்த சிறிய மரக்கதவைத் திறந்து உள்ளே வந்தாள்.

வாசல் முழுக்க ரோஜா செடிகளும் நிறைய வண்ணப் பூச்செடிகளும் அழகாக மொட்டுவிட்டிருந்தன. காலை நேரக் கதிரவனின் ஒளியை எதிர்பார்த்து அவைப் பூக்கக் காத்திருந்தன. வேறு சமயமாக இருந்தால் அவற்றை எல்லாம் நின்று அவள் இரசித்திருக்கக் கூடும். ஆனால் இப்போது அவளால் அதில் இலயிக்க முடியவில்லை.

 நேராக சென்று கதவருகே நின்றுவிட்டவளுக்குத் தட்டலாமா என்று தயக்கம் எட்டிப் பார்த்தது. அவளிடம் இப்போது என்ன சொல்வது? கிருபாவைக் காணவில்லை என்றா? அப்படி சொன்னால் அவள் என்ன நினைத்துக் கொள்வாள்?

இப்படி பலமாதிரியான மனதில் எழுந்த தவிப்புகளை ஒதுக்கிவிட்டவள், ‘சரி அவ என்ன கேட்டாலும் பார்த்துக்கலாம்... இப்போதைக்கு கிருபா எங்க இருக்கான்னு தெரியணும்?’ என்று எண்ணி அவள் கதவைத் தட்டவும், உள்ளே அரவம் கேட்டது.

ஆனால் கதவு திறக்கப்படவில்லை. “தங்கம்... நான் தீபா வந்திருக்கேன்” என்றவள் குரல் கொடுத்தப் போதும் சத்தமில்லாமல் கிடந்தது.

உள்ளே இருக்காளா இல்லையா? ஒரு வேளை புற வாசலில் இருப்பாளோ என்ற எண்ணத்துடன் வீட்டின் பின்பக்கமாக நடந்தாள். பின்பக்க வாசலும் மூடிக் கிடந்தன. ஒரு வேளை அவள் கிளம்பி வேலைக்குப் போயிருப்பாளோ என்று யோசித்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இப்போது இந்த ஊரில் யாரிடம் போய் உதவிக் கேட்பது என்ற அயர்ச்சியுடன் அவ்விடத்தைக் கடக்க எண்ணியவள் அதிர்ந்து நின்றுவிட்டாள். பின்வாயிலின் ஓரத்தில் கிருபாவின் செருப்பு கிடந்தது.

அவள் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது. ‘இல்ல அப்படி எல்லாம் இருக்காது’ என்று எண்ணியபடி அவசரமாகச் சென்று பின் கதவைத் தட்டினாள்.

“தங்கம்... தங்கம்” என்று அழைக்க உள்ளே நடமாட்டம் தெரிந்தது. ஆனால் கதவு திறக்கப்படவில்லை. 

“தங்கம் கதவைத் திற” என்று இம்முறை பலமாகத் தட்டியவள், “தங்கம்ம்ம்ம்ம்” என்று சத்தமிட்டுக் கத்தினாள். அடுத்தச் சில கணத்தில் கதவு திறக்கப்பட்டது.

தங்கம் பயந்து நடுங்கி ஒடுங்கி அவள் முன்னே நின்றிருக்க மருண்டு விழித்த அவள் பார்வையே ஏதோ தப்பாக நடந்திருப்பதாகச் சொன்னது.

“கிருபா இங்க இருக்கானா?” என்றவள் நேரடியாகக் கேட்டுவிட தங்கம் தரையில் அமர்ந்து தலையிலடித்துக் கொண்டு அழத் தொடங்கிவிட்டாள்.

“என்னாச்சு தங்கம்?” என்று கேட்டவளுக்குப் பயத்துடன் உள்ளே வந்து எட்டிப் பார்த்தாள். ஒற்றை அறை மட்டுமே இருந்த அந்த வீட்டின் வலது புற ஓரமாக இருந்த கட்டிலில் கிருபா படுத்திருந்ததைப் பார்த்தாள்.

அவன் படுத்திருந்த கோலத்தைப் பார்த்தவளின் இதயமோ ஒரு நொடி நின்றே போய்விட்டது.

அங்கே... அக்கணம்... பெண்ணவள் சில்லுச் சில்லாக உடைந்திருந்தாள்.

Quote

Super ma 

<p>You cannot copy content</p> <p> </p>