You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kannadi thundugal - Episode 19

Quote

19

அன்பான காதல் அழகான காதல் அறிவான காதல் அழுத்தமான காதல் என்று காதலில் பல வகையறாக்கள் உண்டு... ஆனால் வெறித்தனமான அதிகாரமான காதல் என்று ஒரு வகையறா இல்லை... ஒரு வேளை அப்படி இருந்தால் அதில் வெறியும் அதிகாரமும் மட்டுமே மிச்சம் இருக்கும்... காதல் எப்போதோ மடிந்து போயிருக்கும்

கட்டிய கணவனை வேறு எவளோ ஒருத்தியின் கட்டிலில்... அதுவும் போர்வைக்குள் வெற்று உடம்புடன் கிடந்த காட்சியைப் பார்த்த தீபிகாவின் விழிகளில் அனிச்சையாக நீர்த் துளிகள் சரிந்து கன்னங்களில் வழிந்தது.

 அவமானத்துடன் அசூயையுடனும் பார்வையைத் தழைத்துக் கொண்டவள் இதை... இந்த விஷயத்தை எப்படி ஜீரணித்துக் கொள்வது என்று புரியாமல் தவித்தாள். மனதால் வெந்து புழுங்கினாள்.  

 “சை! அசிங்கம்... கேவலம்” என்று அவள் தலையிலடித்துக் கொள்ள, சத்தம் வெளியே கேட்டுவிடப் போகிறதோ என்ற பயந்த தங்கம் அவசர அவசரமாக ஓடிச் சென்று பின் கதவைத் தாழிட்டுவிட்டு வந்து,

“என்னை மன்னிச்சிடுங்க க்கா” என்று அவள் கரத்தைப் பற்றிக் கொண்டாள். அவள் கரத்தை உதறித் தள்ளிய தீபிகா,

“சீ கையை விடு... இப்படியொரு கேவலத்தைப் பண்ணிட்டு என்கிட்ட மன்னிப்பு வேற கேட்குறியே...? உனக்கு அசிங்கமா இல்ல?”

”ஆமா... இப்போ எதுக்குடிக் கதவைச் சாத்தின... நீங்க செய்ற அசிங்கமெல்லாம் ஊர்ல யாருக்கும் தெரிஞ்சிரக் கூடாதுன்னா” என்று கோபமாக வெடித்தாள்.

“இல்ல அக்கா நான்” என்றவள் ஏதோ பேச எத்தனிக்க,

“எவடி உனக்கு அக்கா... அக்கான்னு கூப்பிட்டனா செருப்பு பிஞ்சிடும்... நான் ஒன்னும் உனக்கு அக்கா இல்ல நீயும் எனக்குத் தங்கச்சி எல்லாம் இல்ல... இந்த எழவைப் பார்க்குறதுக்கா நான் பதறித் துடிச்சு ஓடி வந்தேனா... சை கர்மம்...!!” என்று முகத்தைச் சுழித்தவள்,

“இந்த அசிங்கத்தை எல்லாம் என்னால பார்த்திட்டு இருக்க முடியாது” என்று உடனடியாக அங்கிருந்து செல்வதற்கு எத்தனித்துக் கதவைத் திறக்க முற்பட,

“அக்கா... என்னை மன்னிச்சிடுங்க க்கா... நான் எந்தத் தப்பும் செய்யல க்கா” என்று தங்கம் அவள் காலைப் பிடித்துக் கொண்டு கதற ஆரம்பித்துவிட்டாள்.

“ஏய் காலை விடுறி”  

“நம்புங்க க்கா... சத்தியமா நான் எந்தத் தப்பும் செய்யல... மாமாதான் திடீர்னு நட்டநடுநிசில வந்து கதவைத் தட்டினாங்க... நான் என்னவோ ஏதோன்னு பதறிப் போய்தான் கதவைத் திறந்தேன்... ஆனா மாமா குடிச்சிட்டு” என்றவள் வார்த்தைகள் அதற்கு மேல் அந்த வரியை நிரப்ப முடியாமல் அழுகையில் கரைய அப்படியே அதிர்ந்து நின்று அவளைக் குனிந்து பார்த்த தீபிகா,

“அப்போ நேத்து இராத்திரிதான் அவன் உன்னைத் தேடி வந்தான்... இதுக்கு முன்னாடி வந்ததே இல்லனு சொல்ல வர்றியா?” என்று உஷ்ண பார்வையுடன் கேட்டாள்.

“ஐயோ... அம்மா சத்தியமா இல்லக்கா” என்று தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதவளைக் கண்ட போது அவள் மனம் குழம்பியது. அவளின் அழுகையை அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

எதுவும் பேச முடியாத நிலையில் ஊமையாக நின்றவளின் பார்வை அப்போதுதான் அந்த அறையைச் சுற்றிலும் பார்வையிட்டது. அங்கிருந்த சொற்பப் பொருட்களும் ஒழுங்கற்ற நிலையில் களைந்து கிடந்தன. சுவரிலிருந்த தங்கத்தின் அம்மாவுடைய படம் தரையில் விழுந்து கண்ணாடிப் பெயர்ந்திருந்தது.

“அப்போ கிருபா நேத்து நைட் உன்கிட்ட த...ப்பா நடந்துக்கிட்டானா தங்கம்” திடமாகப் பேசினாலும் அவள் குரல் உடைந்தது.

“ஆமா க்கா... ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாங்க... தடுத்துப் பார்த்தேன்... என்னால ஒன்னும் பண்ண முடியல” என்றவள் அழுது கொண்டே பேசியதைக் கேட்டு,

‘சை! இவன் எல்லாம் மனுஷனா...’ என்ற எண்ணம் தோன்றிய அதேநேரம் நேற்று இரவு அவர்களுக்குள் நடந்த உரையாடல் அவள் நினைவுக்கு வரவும் அவளுக்குப் புரிந்து விட்டது.

தன் மீது காட்ட முடியாத கோபத்தையும் வெறியையும் ஒரு அப்பாவி பெண்ணின் மீது காட்டி இருக்கிறான். நேற்று உயிரில்லாதப் பொருளை எரித்துச் சாம்பலாக்கினான். இன்று உயிருள்ள ஒரு பெண்ணின் உணர்வுகளைக் கொன்றிருக்கிறான்.

தீபிகாவால் தாங்க முடியவில்லை. நடந்த அநியாயத்திற்கு அவன் கோபத்தைத் தூண்டிவிட்டவளாக அவளுமே காரணம் என்ற குற்றவுணர்வில் அப்படியே தலையில் கை வைத்துக் கொண்டபடி தரையில் சரிந்து அமர்ந்துவிட்டாள்.

அவள் வேதனை தங்கத்திற்குப் புரிந்தது. அருகே அமர்ந்து இவளும் அழத் தொடங்கிவிட, இதற்கு எல்லாம் காரணமானவோ புரண்டு படுத்தானே ஒழிய எழுந்திருக்கக் கூட இல்லை.

நேற்று அவன் படபடவென்று கதவைத் தட்டிய போது யாரென்று பயத்துடன் எட்டிப் பார்த்த தங்கத்திற்கு அவனைப் பார்த்து சந்தேகமே வரவில்லை. எதுவும் தப்பாக நடந்துவிடும் என்று அப்போதும் அவள் யோசிக்கக் கூட இல்லை.

இருவரும் வெவ்வேறு நிலையில் இருந்தாலும் ஒன்றாக வளர்ந்தவர்கள்தான். அதிகம் அவன் அவர்கள் குடும்பத்தார் யாரிடமும் பேச்சு வைத்துக் கொள்ளாவிட்டாலும் தினம் ஒரு முறையாவது அவன் இவளையும் இவள் அவனையும் பார்க்க நேரும்.

இந்தப் பார்வையளவிலான சந்திப்புகளிலேயே பருவப் பெண்ணாக அவன் மீது அவளுக்கு ஈர்ப்பை வளர்த்துவிட்டது. ஆனால் ஒரு நாள் கூட அதனை அவனிடம் அவள் வெளிப்படுத்திக் கொண்டதில்லை.  

தன் தகுதிக்கு இது நடக்காது என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். அதுவும் ஊரிலிருந்து தீபிகா விடுமுறைக்கு வந்து விட்டால் பைத்தியம் பிடித்தவன் போல இவன் அவளையேதான் பார்த்துக் கொண்டிருப்பான். அவளுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவள் பின்னேதான் சுற்றிக் கொண்டிருப்பான்.

ஒரு முறை தீபிகா குளிக்கும் போது அவன் கதவிடுக்கில் எட்டிப் பார்த்ததை இவள் பார்த்துவிட, “யார்கிட்டயாச்சும் சொன்ன மவளே உன்னைக் கொன்னுடுவேன் போடி” என்று துரத்திவிட்டான். 

அவளுக்கும் அந்த விஷயத்தை யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை. அதை அப்படியே விட்டு விட்டாள். ஆனால் உள்ளுர அவன் மீதிருந்த ஈர்ப்பெல்லாம் அப்போது காணாமல் போய்விட்டது.

அதற்குப் பிறகு அவளது அக்கா ஓடிப் போனது அம்மா உடல் நிலை சரியில்லாமல் இறந்து போனது என்று விதி அவளைத் துரத்தித் துரத்தி பந்தாடியதில் நொந்து போனவள் ஏதோ வாழ்க்கையை ஓட்ட வேண்டுமென்றுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இதற்கிடையில் தீபிகா ஓடிப் போனதும் கிருபா அவளைதான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடித்துத் தற்கொலை செய்யுமளவுக்குப் போனதும் அவன் தீபிகாவுக்காகக் குடித்துவிட்டுப் பைத்தியகாரனைப் போல் சுற்றிக் கொண்டிருந்ததும் அவள் அறிந்த கதைதான்.

ஆனால் சில ஆண்டுகளில் அதே கிருபா ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் அமர்ந்து அவளுக்குமே ஆச்சரியத்தைக் கொடுத்தான்.

அப்போது அவள் பார்த்த கிருபா புதிதாக இருந்தான். நிறைய மாறியிருந்தான். கம்பீரமான ஆண்மகனாகக் காட்சியளித்தான். வசீகரிக்கும் தோற்றத்தில் நின்றவனை ஒரு பெண்ணாகத் தூரத்தில் நின்று அவளுமே இரசித்திருக்கிறாள்.

எப்படி தீபிகாவுக்கு இவனைப் பிடிக்காமல் போனது என்று யோசித்திருக்கிறாள். ஆனால் எல்லாமே மனதளவில்தான்... மற்றபடி அவனிடம் அவள் பேசியது கூடக் கிடையாது. யாரிடமும் அவள் விருப்பத்தைத் தெரிவித்ததுமில்லை.

 இறுதியாக தீபிகாவை மணம் முடித்து வந்து நின்றான். அவளுக்கு அது ஏமாற்றமாக இல்லாவிட்டாலும் உள்ளுர வலித்தது. பிறகு அது அவளுக்கு மறந்தும் போனது.

ஆனால் அதன் பிறகு தீபிகா சங்கரியிடம் சண்டைப் போட்டுவிட்டு தனிக்குடித்தனம் சென்றதை அறிந்தாள். அது ஒன்றும் அத்தனை பெரிய விஷயமில்லை என்றாலும் எப்போதும் அவளை மிரட்டியும் கோபித்தும் கத்தியும் பார்த்த சங்கரி மனம் வெதும்பி அழுததைப் பார்க்க நேர்ந்த போது அவளுக்கு வருத்தமாக இருந்தது. அந்த நொடி தீபிகாவின் மீதிருந்த மதிப்பெல்லாம் போய்விட்டது.

மருமகளாக வந்த சில நாட்களில் குடும்பத்தை உடைத்துவிட்ட ஒரு வில்லியாகதான் தீபிகாவைப் பார்த்தாள். அவளைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அதேநேரம் தீபிகா மீது என்னதான் கோபம் இருந்தாலும் கிருபாவும் தீபாவும் எங்கே வந்தாலும் தம்பதிகளாக வந்து நிற்பதைப் பார்க்கும் போது அவளுக்குப் பொறாமையாக இருக்கும். குடும்ப வாழ்க்கையின் மீது ஏக்கம் பிறக்கும்.

திருமண வயதை எட்டிவிட்ட ஒரு பெண்ணின் மனவுணர்வுகள் அவளுக்குள் பொங்கித் தளும்பும். இத்தனை நாளாக அவள் பழகி இருந்த தனிமை அவளது உணர்வுகளைக் குத்திக் கிழிக்கும்.

இந்த நிலையில் இரண்டு மாதம் முன்பிலிருந்து சங்கரி ஏதாவது அசைவ உணவு சமைத்தால் மகனுக்காக டிஃபன் கேரியரில் போட்டு அவளிடம் கொடுத்துவிடுவாள். அவளும் அவன் அலுவலகத்திற்குச் சென்று தந்துவிட்டு வருவாள்.

எப்போதாவது அவனை அலுவலகத்தில் பார்க்க நேர்ந்தால், “சாப்பிட்டியா தங்கம்?” என்று விசாரிப்பான்.

“ம்ம்ம் சாப்பிட்டேன் மாமா” என்று விட்டுக் கடந்துவிடுவாள்.

அவன் இந்தளவுக்குப் பேசுவதே அவளுக்கு ஆச்சரியமாக இருக்கும். வீட்டில் இருந்த போது இப்படி கூட அவன் பேசியதில்லை என்று நினைத்துக் கொள்வாள்.

ஆனால் நேற்று மதியம் அவனுக்கு உணவு கொண்டு போன போது அலுவலகத்தில் யாருமே இல்லை. அவன் மட்டும் தனிமையில் அமர்ந்திருந்தான். அவன் முகமே சரியில்லை.

அவள் சாப்பாடு கொண்டு சென்று வைக்க, “உன்னை யாரு இப்போ சாப்பாடு எடுத்துட்டு வரச் சொன்னது... எடுத்துட்டுப் போ” என்று எரிந்து விழ, அவள் முகம் சுணங்கிவிட்டது.

“இல்ல மாமி மீன் குழம்பு வைச்சாங்க” என்றவள் சொல்லவும்,

“எடுத்துட்டுப் போன்னா போ” என்று மீண்டும் சத்தமிட்டுக் கத்த, ஏதோ பிரச்சனை என்று புரிந்தது. அவள் சாப்பாட்டுப் பையை எடுத்துக் கொண்டு திரும்பி நடக்கவும், “தங்கம் நில்லு” என்றான்.

அவள் அவன் புறம் திரும்ப, “நான் ரொம்ப மோசமானவனா தங்கம்? கெட்டவனா கொடுமைக்காரனா?” என்று கேட்டு வைக்க, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னாச்சு மாமா ஏன் இப்படி எல்லாம் கேட்குறீங்க?”

“இல்ல... நீ சொல்லு... நான் கெட்டவனா கொடுமைக்காரனா?” என்று மீண்டும் கேட்க,

“உங்களைப் போய் யார் மாமா அப்படி சொன்னது... நீங்க ரொம்ப நல்லவங்க... எவ்வளவோ ஊருக்காக நீங்க நல்லது செஞ்சி இருக்கீங்க... இந்த ஊர்ல இருக்கவங்க எல்லாம் உங்களைப் பத்திப் பெருமையா பேசி நான் எத்தனையோ தடவைக் கேட்டிருக்கேன்...”

“ஊர்ல இருக்கவங்க எல்லாம் பெருமையா பேசுறாங்க... ஆனா என் வீட்டுக்காரி என்னைக் கேவலமா பேசுறாளே”

“தீபா அக்காவா?”

“அவதான்... என் கூட அவளுக்கு வாழப் பிடிக்கலையாம்... விட்டுட்டுப் போகப் போறாளாம்... பையைத் தூக்கிட்டுக் கிளம்பிட்டா?” என்றவன் ஆதங்கத்துடன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த தங்கம் பின் அமைதியுடன்,

“ஏதோ கோபத்துல சொல்லி இருப்பாங்க மாமா... நீங்க அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க” என்றாள்.

“இல்ல தங்கம்... அவளுக்கு என்னைப் பிடிக்கல”

“என்ன பேசுறீங்க மாமா...? உங்களைப் பிடிக்காமலா அக்கா கல்யாணம் பண்ணாங்க?”

“என்னைப் பிடிக்காமதானே அவ எவன் கூடவோ ஓடிப் போனா?” என்றவன் சொன்ன வார்த்தையைக் கேட்டு தங்கத்தின் முகம் மாறியது.

“அதெல்லாம் பழைய விஷயம் மாமா... ஆனா இப்போ அக்காவுக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்”

“அதெல்லாம் இல்ல... அவளுக்கு என்னைப் பிடிக்கல... என்னை எப்படியாச்சும் விட்டுட்டுப் போகணும்னு பார்க்குறா” என்றவன் மீண்டும் அதே பாட்டைப் பாட,

“இல்ல மாமா... அக்காவுக்கு உங்களைப் பிடிக்கும்... நீங்களும் அவங்களும் சேர்ந்திருந்த வீடியோவை அவங்க ஆசையா இரசிச்சுப் பார்த்துட்டு இருந்ததை ஒரு தடவை நான் பார்த்தேன்... உங்க மேல ஆசையும் பிடித்தமும் இல்லாமலா அப்படி பார்த்திட்டு இருப்பாங்க... இப்போ ஏதோ... கோபத்துல விட்டுட்டுப் போறன்னு சொல்லி இருப்பாங்க... அதுக்காக அவங்களுக்கு உங்களைப் பிடிக்கலன்னு ஆகிடுமா”

”அப்படி எல்லாம் இல்ல... நீங்க அந்த மாதிரி எல்லாம் யோசிக்கவே யோசிக்காதீங்க.... நீங்க அக்காகிட்ட போய் சமாதனமா பேசுங்க... அவங்க சமாதானமாகிடுவாங்க” என்றவள் பேசியதைக் கேட்டு அவனுள் இருந்த கோபமெல்லாம் கொஞ்சமாக அடங்கியிருந்தது.

“ரொம்ப யோசிக்காதீங்க... எல்லாம் சரியாயிடும்... நீங்க முதல சாப்பிடுங்க” என்றவள் அன்று அவளே அவனுக்கு உணவுப் பரிமாறி அவனை வயிறார சாப்பிட வைத்துவிட்டே கிளம்பினாள்.

இதுவரையில் இல்லாமல் நேற்றுதான் அவன் நிறைய பேசினான். அவளும் அவனிடம் சகஜமாக உரையாடினாள்.

இப்படியான சூழ்நிலையில் நேற்று நட்டுநடு இரவில் வந்து அவன் கதவைத் தட்டினான். யார் தட்டுகிறார்கள் என்று பதட்டத்துடன் ஜன்னலில் எட்டிப் பார்க்க, கிருபா சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். அப்போது கூட அவன் குடித்திருக்கிறான் என்று அவள் யோசிக்கவில்லை.

எப்போதும் வராதவன் திடீரென்று அவள் வீட்டு வாயிற்கதவைத் தட்டவும் ஏதோ முக்கியமான விஷயமாக வந்திருக்கிறான் போல என்று எண்ணிதான் கதவைத் திறந்துவிட்டாள்.

ஆனால் கதவைத் திறந்த பிறகுதான் அவன் குடித்துவிட்டு வந்திருக்கிறானோ என்ற சந்தேகம் எழுந்தது. நிலை தவறுமளவுக்குக் குடிக்காவிட்டாலும் அவன் மீது போதையின் வாசம் வந்தது.

அவனை அந்த நிலையில் பார்த்து அவளுக்குப் பதட்டம் உண்டான போதும் கூட அவனை அவளால் தவறாக எல்லாம் நினைக்க முடியவில்லை. இத்தனை ஆண்டுகளாக அவன் வீட்டில் அவள் வேலை செய்கிறாள். ஒரு முறை கூடத் தப்பான எண்ணத்துடன் அவளை நெருங்காதவன் இன்றா அப்படி நடந்து கொள்ளப் போகிறான்.

ஆனால் எதற்கு அவன் குடித்துவிட்டுத் தன்னைத் தேடி வர வேண்டும் என்ற குழப்பமும் அவளுக்கு இருந்தது. அவள் புரியாமல் விழித்து கொண்டு நிற்க, அவன் நேராக உள்ளே வந்து அவள் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

அவன் முகம் வேதனையில் ஆழ்ந்திருக்க, “என்ன மாமா என்னாச்சு?” என்றவள் கேட்டதுதான் தாமதம்.

“நீதானே தங்கம் அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்குனு சொன்ன... ஆனா அவ என் முகத்துக்கு நேரா என்னைப் பிடிக்கலன்டா... என்னைப் பிடிச்சுப் போய் எல்லாம் அவ கல்யாணம் பண்ணலயாம்... அவங்க அம்மா அப்பா சொன்னாங்கன்னுதான் பண்ணாலாம்” என்று ஆரம்பித்தவன் தீபிகா அவனிடம் பேசியதை எல்லாம் அப்படியே ஒப்புவித்துவிட்டான்.

அவள் நினைத்ததுப் போல அவர்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சனை சாதாரணமானது இல்லை என்று தோன்றியது. ஆனால் இந்த நிலையில் எப்படி அவனை என்ன சொல்லி வெளியே அனுப்புவது என்று அவள் யோசித்திருக்கும் போதே,

“நான் செத்துட்டா இன்னொரு கல்யாணம் பண்ணிப்பாளாம் தங்கம்” என்று அவன் ஆதங்கப்பட்டுக் கண்ணீர் வடிக்கவும்

‘ஏன் தீபிகா அக்கா இப்படி எல்லாம் பேசி மாமா மனசைக் கஷ்டப்படுத்தணும்?’ என்று எண்ணம் தோன்றிய போதும்  இதில் அவள் என்ன செய்ய முடியும் என்று புரியவில்லை.

“அவ பேசுன இந்த அசிங்கத்தை நான் யார்கிட்ட போய் எப்படி சொல்லுவன்” என்று  தன் புலம்பலைத் தொடர்ந்த கிருபா ஒரு நிலைக்கு மேல் கோபமாகவும் ஆவேசமாகவும் தீபிகாவை நிந்திக்க ஆரம்பித்துவிட்டான்.

“ஓடுகாலி நாயி... அந்த நாய் ஓடிப் போய் அசிங்கப்பட்டு வந்த போதும் நான்... நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... ஆனா அந்தத் திமிரு பிடிச்ச... தேவடியா முண்ட என்னை விருப்பமில்லாம கட்டிக்கிட்டேன்னு என் மூஞ்சியைப் பார்த்துச் சொல்றா” என்றவன் அடுத்தடுத்துப் பேசிய வசை வார்த்தைகளைத் தங்கத்தால் காது கொடுத்துக் கூடக் கேட்க முடியவில்லை.

“அக்காவைப் பத்தி இப்படி எல்லாம் பேசாதீங்க” என்றவள் சொல்ல,  

“உனக்குத் தெரியாது தங்கம்... அவளுக்கு வேற எவன் கூடவோ தொடர்பு இருக்கு... வேலைக்குப் போறேன் வேலைக்குப் போறேன்னு அவ பிடிவாதமா இருக்கும் போதே எனக்குத் தோனுச்சு” என்று அவன் பொங்க,

“ச்சே ச்சே.. அக்கா அப்படி எல்லாம் இல்ல மாமா... நீங்க இந்த மாதிரி எல்லாம் அக்காவைப் பத்தி பேசாதீங்க” என்றவள் திடமாக மறுக்க, அவனுக்குப் கோபமேறியது.

“எனக்கு அந்த ஓடுகாலி வேண்டாம்... அந்த தேவடியா முண்ட எனக்கு வேண்டாம்... பேசாம நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ... நான் உன்னைத் தங்கமா வைச்சுப் பார்த்துக்கிறேன்” என்று சட்டென்று அவன் சொல்லிவிட, அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

‘அடப்பாவி... என்ன இப்படி எல்லாம் பேசுறான் இவன்...? இவனை உட்கார வைச்சு பேசனது தப்பா போச்சே’ என்று அவள் பதறும் போது எழுந்து அவள் அருகில் வந்து,

“நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ தங்கம்” என்று தோள்களைப் பற்ற அவள் நடுநடுங்கிவிட்டாள்.

“மாமா கையை எடுங்க மாமா... யாராச்சும் வந்திரப் போறாங்க” என்றவள் அவன் கரத்தை விலக்கித் தள்ள, அவன் அவள் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ தங்கம்” என்றவன் மீண்டும் அதையே சொல்ல, அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.

“பைத்தியம் மாதிரி பேசாதீங்க.. அதெல்லாம் முடியாது... கையை முதல விடுங்க” என்றவள் சொன்ன நொடி,

“என்னடி சொன்ன... முடியாதா?” என்றவன் அகங்காரமாக அவளை நோக்கினான்.

“ஆமா... முடியாது... இப்போ நீங்களா வீட்டை விட்டு வெளியே போறீங்களா இல்ல நான் கத்தி ஊரைக் கூட்டட்டுமா?” என்றவள் சீறலாகச் சொன்னதைக் கேட்ட அவன் மூளைச் சூடேறியது.  

கிருபா திரும்பி வாசலுக்குச் செல்லவும் அவள் நிம்மதியாக மூச்சை இழுத்துவிட்டாள். ஆனால் அவன் வெளியேறாமல் கதவை மூடித் தாழ்பாள் போட,

“இப்போ எதுக்குக் கதவை மூடுறீங்க?” என்றவள் அச்சத்துடன் முன்னே சென்று கதவைத் திறக்கப் போக, “என்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்ற... பெரிய இவளாடி நீ?” என்று அவளை இடையோடு அணைத்துப் பிடித்துக் கொண்டான்.

வெறும் வேலைக்காரியாகத் தன் வீட்டில் இருப்பவள் தன்னை நிராகரிப்பதா என்ற அகங்காரமும் ஆண் என்ற கர்வமும் அப்போது அவன் தலைக்கு ஏறிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேல் விட்டுக் கொடுக்க முடியாத அவனின் வெறித்தனமான பிடிவாதம்...

 “மாமா விடுங்க மாமா... இதெல்லாம் தப்பு மாமா” என்றவள் நடுக்கத்துடன் அவன் கரத்திலிருந்து வெளியேற முயன்ற போதும் அவன் விடவில்லை.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு எப்படிடி சொல்லுவ?” என்று வெறியுடன் கேட்டவன் அவளை இழுத்து அங்கிருந்த கட்டிலில் தள்ளினான். அவள் சுதாரித்து எழுந்து கொள்வதற்கு முன் அவள் உடலை அவன் களவாடியிருந்தான்.

அவனுடைய இறுக்கமான பிடிகளில் இருந்து அவளால் வெளியேற முடியவில்லை. அவளும் போராடிப் பார்த்தாள். அவனைத் தள்ளிவிட்டு ஓடப் பார்த்தாள். ஆனால் அவனுடைய மூர்க்கத்தனத்திற்கு முன் அவளின் போராட்டம் சிறியளவில் கூடப் பலனளிக்கவில்லை.

இரவு அவன் நடந்து கொண்ட விதத்தை எல்லாம் தங்கம் நடுக்கத்துடன் விவரிக்கவும்,  அதனைக் கேட்ட தீபிகாவிற்குக் குலை நடுங்கியது.

இப்படியொரு காட்டுமிராண்டியுடனான தான் இத்தனை நாள் குடும்பம் நடத்தினோம் என்று யோசித்துப் பார்க்கவே அவளுக்கு அசிங்கமாகவும் அருவருப்பாகவும் இருந்தது.

நேற்றே அவனுடனான உறவு முடிந்து போய்விட்டதென்று அவளுக்குத் தெரியும். ஆனால் அது இப்படி முடிந்திருக்க வேண்டாமே என்று எண்ணியவளின் கண்களில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் பெருக, மறுபுறம் தங்கம் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தாள். 

அவளைப் பார்த்த தீபிகாவிற்கு தன்னுடைய அழுகையும் சோகமும் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. தன் கண்களை அழுந்த துடைத்துக் கொண்ட தீபிகா தங்கத்தைத் தோளோடு அணைத்துப் பிடித்துக் கொண்டு, “அழாதே தங்கம்” என்று ஆறுதல் உரைத்தாள்.

அவளின் ஆறுதல் வார்த்தையே இவளின் குற்றவுணர்வை அதிகப்படுத்த, “நான் நேத்து மாமாவை வீட்டுக்குள்ள விட்டுப் பெரிய தப்பு பண்ணிட்டேன் க்கா... உங்க வாழ்க்கையே அழிச்சிட்டேன் க்கா” என்று வெதும்பினாள்.

“பைத்தியம் மாதிரி பேசாதே... நீ ஒன்னும் என் வாழ்க்கையை அழிக்கல... அதுல புதுசா நீ வந்து அழிக்க எதுவும் இல்ல” என்றவள் விரக்தியுடன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு தங்கம் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.

தீபிகா சாய்வாகக் கால்களை மடித்து அமர்ந்து கொண்டு, “எங்க இரண்டு பேரோட உறவும் நேத்தே முடிஞ்சு போச்சு ... இவன் கூட என்னால வாழ முடியாதுன்னு நேத்தே புரிஞ்சு போச்சு...”

”ஒழுங்கா என்னை விட்டிருந்தா நான் பாட்டுக்கு என் வழிய பார்த்துட்டுப் போயிருப்பேன்... என்னை போக விடாம நிறுத்தி... இப்போ என்னாச்சு... சம்பந்தமே இல்லாத உன் வாழ்க்கைப் போச்சு... எல்லாம் நான் விட்ட வார்த்தையாலதான்” என, தங்கத்திற்கு என்ன பேசுவதென்று புரியாமல் பார்க்க அவள் தொடர்ந்தாள்.

“ஆனா எனக்கு ஒரு விஷயம் புரியல... நான் இரண்டு வார்த்தை தப்பா விட்டுட்டதாலயோ இல்ல அசட்டையா நீ அவனை வீட்டுக்குள்ள விட்டுட்டதாலயோ இந்தத் தப்பு நடந்துச்சா என்ன?” என்று கேட்க தங்கத்திற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“அவ்வளவும் ஆம்பளங்குற அவனோட அகங்காரத்தாலயும் வெறியாலயும் கோபத்தாலயும் நடந்திருக்கு... இப்படியொரு தப்பைச் செஞ்சிட்டா அவன் பாட்டுக்கு நிம்மதியா தூங்கிட்டு இருக்கான்... ஆனா நம்ம இரண்டு பேரும் அழுதிட்டு உட்கார்ந்திருக்கும்... இதுதான் நம்ம சொசைட்டில பொம்பளைங்களோட நிலைமை” என,

தங்கம் பதிலுக்கு, “இதெல்லாம் இன்னைக்கு நேத்தா க்கா நடக்குது... எங்க அம்மா பெரிம்மா... ஆயா காலத்துல இருந்து இப்படிதா நடக்குது... இங்கே எதுவும் மாறல... மாறவும் போறதில்ல” என்றாள் திடமாக.

“ஏன் மாறாது... நாம நினைச்ச மாத்த முடியும்... நீ நினைச்சா மாத்த முடியும்... இவன் மேல நீ போலீஸ்ல கேஸ் கொடு... நான் உன் கூட நிற்கிறேன்... இவனைத் தூக்கி உள்ள போடலாம்” என, தங்கம் மறுப்பாகத் தலையசைத்தாள்.

“அதெல்லாம் கஷ்டம் க்கா... இவங்க மேல கேஸ் எல்லாம் கொடுக்க முடியாது... அப்படியே கொடுத்தாலும் இவங்க அந்த கேஸ ஒன்னும் இல்லாம பண்ணிடுவாங்க... கடைசில எல்லா அசிங்கமும் அவமானமும் எனக்கு மட்டும்தான்... நான் அப்புறம் இந்த ஊருக்குள்ள வாழவே முடியாது”

“அப்போ இவ்வளவு அக்கிரம் பண்ண இவனை விட்டுடலாம்குறியா?”

“என்ன பண்ண முடியும்னு நினைக்குறீங்க?” என்று தங்கம் கேட்க அவளைத் தீவிரமாகப் பார்த்த தீபிகா, “சரி நீ எதுவும் பண்ண வேண்டாம்... நான் கேஸ் கொடுக்கிறேன்... என் வாழ்க்கையை மோசம் பண்ணிட்டான்னு நான் இவன் மேல கேஸ் கொடுக்கிறேன்” என,

“அப்பவும் அசிங்கப்பட போறது நான்தானே க்கா” என்ற தங்கம் அவளின் கரத்தைப் பற்றிக் கொண்டு, “என்னை இந்தப் பிரச்சனைல மாட்டி விட்டுடாதீங்க க்கா... நான் இந்த ஊரை விட்டே போயிடுறேன்... சென்னைல இருக்க எங்க அக்கா வீட்டுக்குப் போயிடுறேன்” என்று கெஞ்சிக் கொண்டே அழத் தொடங்கிவிட்டாள்.

தீபிகாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அப்போது, “தங்கம்” என்று அழைத்தபடி வீட்டுக் கதவை யாரோ தட்டவும் இருவருக்குமே பதறிவிட்டது.

“நீங்க உள்ளேயே இருங்க க்கா... நான் பின்பக்கமா போய் பார்த்துப் பேசிச் சமாளிச்சுக்குறேன்” என்று எழுந்து தலையைக் கொண்டையிட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டவள் கதவைத் திறக்கப் போகும் போது,

“இந்த விஷயம் வெளியே தெரிய வேண்டாம் க்கா... என் மானமே போயிடும் க்கா” என்று தீபிகாவிடம் மீண்டும் கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சிவிட்டுதான் சென்றாள்.

தங்கம் பேசவிட்டுப் போனதை யோசித்துப் பார்த்த தீபிகாவிற்கு அவள் நிலைமையைப் புரிந்து கொள்ள முடிந்த போதும் இதை இப்படியே விட்டுவிடுவதா என்று கோபமாக இருந்தது. கொதித்தது.

எதிரே படுத்திருந்தவனை ஏதாவது கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்றுவிட்டால் என்ன என்று விபரீத சிந்தனை எல்லாம் அவளுக்குள் அப்போது உதித்தது. செய்வதற்குத் தைரியம் எல்லாம் இல்லாமல் இல்லை. இவனைக் கொன்றுவிட்டுத் தான் ஜெயிலுக்குப் போக வேண்டுமே என்றுதான் தயங்கினாள்.

அவள் மனம் சமாதானமடையவில்லை. இவ்வளவு மோசமான அசிங்கமான காரியத்தைச் செய்துவிட்ட இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது என்று மனதில் குமுறிக் கொண்டிருக்கும் போது ஒரு யோசனை வந்தது.

கிருபாவை ஒருமுறை பார்த்துவிட்டுத் தீர்க்கமாக முடிவெடுத்தவள் தன் செல்பேசி எடுத்து சண்முகத்திற்கு அழைத்தாள்.

“நீ எதுக்கு எனக்கு ஃபோன் பண்ற.? உனக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? அதான் எங்க புள்ளையப் பிரிச்சுக் கூட்டிட்டுப் போயிட்ட இல்ல” அழைப்பை ஏற்றதும் அவர் காச் மூச் என்று கத்தத் தொடங்கினார்.

“உங்க புள்ள செஞ்ச அசிங்கத்தைச் சொல்லலாம்னுதான் ஃபோன் பண்ணேன்”

“புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு எல்லாம் நாங்க பஞ்சாயத்துக்கு வர மாட்டோம்... நீ ஃபோனை வை” என்று காட்டமாகப் பேச,

“புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு எல்லாம் நான் உங்களைக் கூப்பிடல... உங்க புள்ள செஞ்ச கேவலமான காரியத்தை எப்படி சரி பண்றதுன்னு தெரியாமதான் உங்களைக் கூப்பிடுறேன்”

சில நொடி மௌனத்திற்கு, “என்ன பண்ணான்?” என்று கேட்க,

“அந்த அசிங்கத்தை எல்லாம் என் வாயால சொல்ல முடியாது... நீங்க தங்கம் வீட்டுக்கு வாங்க” என அவர் புரியாமல்,

“தங்கம் வீட்டுக்கா?” என்று கேட்க,

“ஆமா” என்று அவள் அழைப்பைத் துண்டித்துவிட்டுத் தன் தந்தையின் எண்ணிற்கு அழைத்தாள்.

அவர் அழைப்பை ஏற்றப் போதும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “அப்பா” என்றாள்.

“ம்ம்ம் சொல்லு” என்றவர் குரல் அழுத்தமாக ஒலித்தது.

‘வெறும் சொல்லு... தீபான்னு கூடக் கூப்பிடல... அப்படி என்னதான் நாம செஞ்சிட்டோம்?’ என்று அவள் மனதில் வெதும்ப,  

அவர் அப்போது, “என்ன விஷயமா ஃபோன் பண்ண?” என்று அதே தொனியில் கேட்டார்.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் பா... உடனே நீங்களும் அம்மாவும் மாமா வீட்டுக்கு வாங்க” என்றாள்.

“என்ன... ஏதாவது பிரச்சனை பண்ணி வைச்சு இருக்கியா?” என்றவர் கேட்ட நொடி உள்ளம் வலித்தது. தன் அம்மா அப்பாவே தன்னை நம்பவில்லை என்று எண்ணிக் கொண்டவள்,  

“ஆமா பெரிய பிரச்சனைதான்...  ஆனா பண்ணது நான் இல்ல... உங்க மாப்பிளை... இஷ்டம் இருந்தா கிளம்பி வாங்க... இல்லனா நானே பார்த்துக்கிறேன்” என்றவள் அடுத்த வார்த்தை பேசாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு அமர்ந்திருக்க பின் கதவைத் திறந்து தங்கம் வந்து நின்றாள்.

“பக்கத்து வீட்டு செல்வி அக்காதான்... எப்படியோ சமாளிச்சுட்டேன்” என்றவள் மூச்சை இழுத்துவிட,

“எவ்வளவு நேரம் சமாளிப்ப... ஒருத்தன் முழுப் பூசணிக்காயா... உன் வீட்டுல படுத்துக் கிடக்கிறானே... இவனை எப்படி மறைப்ப?” என, அவள் முகம் வெளிறிப் போனது.

“எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல க்கா” என்றவள் பரிதாபமாகப் பேச,

“நீ இப்போதைக்கு அவனை எதுவும் பண்ண வேண்டாம்... எனக்கு சாப்பிடுறதுக்கு எதாவது கொடு... நேத்து விடிஞ்சதுல இருந்து பச்ச தண்ணிக் கூடக் குடிக்காம செத்துட்டுக் கிடக்கேன்... எல்லாம் இதோ படுத்திருக்கானே... இந்தப் புறம்போக்கால” என்று அவள் பேசப் பேச தங்கம் அவள் முகத்தையே பார்த்திருந்தாள்.

“ஏதாவது சாப்பிட இருக்கா இல்லையா?” என்றவள் அதட்டிக் கேட்கவும்,

“இதோ பார்க்கிறேன் க்கா” என்று தங்கம் அந்த அறையிலேயே ஓரமாகச் சிறிய தடுப்பிட்டு இருந்த அடுப்பங்கறையில் தட்டு முட்டு சாமானை எல்லாம் உருட்டத் தொடங்க, கிருபா அந்தச் சத்தத்தில் அசைய ஆரம்பித்தான்.

மெல்ல தலையைப் பிடித்துக் கொண்டே அவன் விழிகளைத் திறக்க, “சார் எழுந்துட்டீங்களா?” என்று தீபிகா எடக்காக அவனைப் பார்த்துக் கேட்டாள். படுத்தபடி அவள் குரல் வந்த திசையில் பார்த்தான். இன்னும் சரியாக உறக்கம் தெளியவில்லை. எங்கே இருக்கிறோம் என்று குழப்பமாக இருந்தது.

அப்போது தீபிகாவிடம் வந்த தங்கம், “நேத்து இராத்திரி சாப்பாட்டுல தண்ணி ஊத்தி வைச்சதுதான் க்கா இருக்கு... நீங்க சாப்பிடுவீங்களா?” என்று கேட்டுக் கொண்டிருக்கவும் தங்கத்தைப் பார்த்த அவன் விழிகள் பெரிதாக விரிந்தன.

இரவு நடந்ததெல்லாம் அவன் நினைவுக்கு வந்துவிட்ட போதும் தீபிகாவை அவன் அங்கே எதிர்பார்க்கவில்லை என்றவன் விழிகள் அப்பட்டமாகக் காட்டிய அதிர்ச்சியில் இகழ்ச்சியான நகைப்புடன் அவனைப் பார்த்துவிட்டுத் திரும்பியவள் தங்கத்திற்குப் பதிலுரைத்தாள்.     

“நான் சாப்பிடுவேன்... அதையே உப்புப் போட்டுக் கரைச்சு எடுத்துட்டு வா...” என்றாள். அதற்குள் கிருபா தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர தங்கம் மிரட்சியுற்று நின்றுவிட,

“நீ ஏன் டி நிக்குற... எனக்குத் தலையைக் கிறுகிறுன்னு சுத்துது... போய் எடுத்துட்டு வா” என்று கத்தவும் அங்கிருந்து நகர்ந்தவள் பழையதில் உப்புச் சின்ன வெங்காயம் காய்ந்த மிளகாய் எல்லாம் போட்டுக் கரைத்து எடுத்து வந்து தீபிகா முன்னே வைத்தாள்.

கணவனை எரிச்சலுடன் பார்த்த தீபிகா கீழே கிடந்த அவன் வேட்டிச் சட்டைகளை எடுத்து அனாயசமாக அவனிடம் தூக்கியடித்துவிட்டுக் கரைத்து வைத்திருந்த பழையதைக் குடிக்கத் தொடங்கினாள். அவளுக்கு இருந்த பசிக்கும் வயிற்றெறிச்சலுக்கும் அந்தக் கிண்ணத்திலிருந்தது போதவே போதாது. இன்னும் அண்டா அண்டாவாக வைத்திருந்தாலும் குடித்திருப்பாள்.

மறுபுறம் தன் வேட்டிச் சட்டையை அணிந்து கொண்ட கிருபா வெளியே செல்லக் கதவைத் திறக்கப் போக,

“கொஞ்சம் கூட அசிங்கமாவே இல்லையாடா உனக்கு எல்லாம்?” என்று கைக் கழுவிக் கொண்டே கேட்டாள் தீபிகா. அவன் அப்படியே நின்று அவளைத் திரும்பிப் பார்க்க,

“ஒரு பொண்ணு தனியா இருக்க வீட்டுல இராத்திரி எல்லாம் படுத்திருந்துவிட்டு நீ பாட்டுக்கு எந்திரிச்சுப் போறியே... உனக்கு அசிங்கமா இல்லயா?” என்றவள் கேட்டு வைக்க தங்கம் விதிர்விதிர்த்துப் போனாள்.

தயங்கி நின்ற கிருபாவின் பார்வை ஒரு நொடி தங்கத்தைத் தொட்டு மீள தீபிகா கோபமாக எழுந்து வந்து, “அங்க என்ன பார்க்குற? உன் பொண்டாட்டி நான்தானே...  என்னைப் பாரு... என்னைப் பார்த்துப் பேசு” என்று நேருக்கு நேராக அவன் முன்னே வந்து நின்றாள். அவனால் அவளை எதிர்கொள்ள முடியவில்லை.

அவன் பார்வையை வேறு புறம் திருப்பி மௌனம் காக்க தீபிகா விடாமல், “எதுவும் பேசாம சைலன்டா நிற்குற... ஓடுகாலி நாயி... தேவடியா முண்ட... இப்படி ஏதாவது சொல்லு கிருபா” என்று அவள் ஒரு மாதிரி எள்ளல் தொனியில் கேட்கவும் அதிர்ச்சியாக அவளை நிமிர்ந்து நோக்கினான். 

அப்போதும் அவள் கண்களை அவனால் பார்க்க முடியவில்லை. “தீபா எதுவா இருந்தாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்” என்று குரலைத் தாழ்த்திச் சொல்லும் போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

பதட்டத்துடன் ஜன்னலில் எட்டிப் பார்த்த தங்கம், “ஐயோ சண்முகம் மாமா வந்திருக்காரு க்கா” என,

“நான்தான் ஃபோன் பண்ணேன்... வரட்டும்... அவர் புள்ளையோட இலட்சணத்தை அவரே வந்து பார்க்கட்டும்” என்றவள் சொல்லவும் கிருபாவின் முகம் கவலையை நிரப்பியது.

“ஐயய்யய்யோ... ஏன் க்கா” என்றவள் தவிப்புடன் கேட்ட அதேசமயம், “தீபா வேண்டாம்... அப்பாகிட்ட சொல்லாதே... எதுவா இருந்தாலும் நம்ம வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்” என்றான்.  

“இனிமே நம்ம வீடுன்னு ஒன்னு இல்லவே இல்ல கிருபா” என்று திடமாகச் சொன்னவள், சென்று சண்முகத்திற்குக் கதவைத் திறந்துவிட்டாள்.

தங்கம் அச்சத்துடன் நிற்க அவர்கள் மூவரையும் பார்த்த சண்முகம், “இங்கே எதுக்கு என்னை வரச் சொன்ன?” என்று தீபிகாவிடம் கேட்டார்.

“ஏன் மாமா வாசலில நிற்குறீங்க... உள்ளே வாங்க... பேசுவோம்” என, அவரும் குழப்பத்துடன் உள்ளே வந்து மகனை ஆழமாகப் பார்க்க, கிருபாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

“மாமாவுக்குத் தண்ணிக் குடு தங்கம்” என்று தீபிகா சொல்ல,

“எனக்குத் தண்ணி எல்லாம் வேண்டாம்... என்ன பிரச்சனை? இங்கே எதுக்கு என்ன வர்ற சொன்ன? அதைச் சொல்லு முதல?” என்று அவர் மீண்டும் தீபிகாவைக் கேட்க அவள் மெல்லிய நகைப்புடன்,

“என்ன மாமா நீங்க...? கொஞ்ச முன்னாடி வந்திருக்க கூடாது... உங்க புள்ளை இருந்த கோலத்தைக் கண்ணாரப் பார்த்து இரசிச்சு பூரிச்சிருக்கலாமே” என்று அவள் சொன்னதைக் கேட்ட கிருபாவின் முகம் இருளடர்ந்து போனது.

அவன் மெல்லிய குரலில் இரகசியமாக, “தீபா வேண்டாம்... எதுவும் சொல்லாதே” என்று கிட்டத்தட்ட கெஞ்ச, அவள் பதிலுக்குச் சத்தமிட்டுப் பேசினாள்.

“சரி நான் எதுவும் சொல்லல... நீ சொல்லு... நீ செஞ்ச அசிங்கத்தை நீயே சொல்லு”

கிருபா எரித்து விடுவது போல அவளைத் தீவிரமாகப் பார்க்க சண்முகம், “அசிங்கம் அது இதுன்னு என்னடா சொல்லிட்டு இருக்கா இவ” என்று மகனிடம் கேட்டார்.

“எதுவும் இல்லபா... நாம வீட்டுக்குப் போலாம்... வாங்க” என்று விட்டு கிருபா முன்னே செல்ல சண்முகம் புரியாமல் நின்றார்.

 தீபிகா உடனே, “நீ இந்த வீட்டு வாசலைத் தாண்டி ஓரடி எடுத்து வைச்சாலும் நடக்கிறதே வேற” என,

“என்னடி நடக்கும்?” என்றவன் திரும்பி வந்து அவளை முறைக்க,

“நீ தங்கத்துக்கிட்ட நடந்துக்கிட்டதை ஊர் பூராவும் சொல்லி உன்னை அசிங்கப்படுத்துவேன்... போலீஸ்ல கம்பிளைன்ட் பண்ணி உன்னை உள்ளே தள்ளுவேன்” என்றவள் பேசப் பேச அவனுக்கு வெறியேறியது.

“முடிஞ்சா செய்டி பார்க்கலாம்” என்றவன் அவள் கழுத்தை இறுக்கிப் பிடிக்க,

சண்முகம் பதட்டத்துடன், “கிருபா என்ன பன்ற அவளை விடு” என்று மகனைத் தடுத்த போதும் அவன் தன் கரத்தை எடுக்கவில்லை.

“இவளைக் கொன்னாத்தான் என் ஆத்திரம் அடங்கும்” என்றவன்  வெறித்தனமாக அவள் தொண்டைக் குழியை அமுக்க, அவளுக்கு மூச்சு முட்டியது. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.

தங்கமும் பதறிக் கொண்டு, “ஐயோ அக்காவை விடுங்க” என்று தவிக்க, சண்முகம் அதற்குள் மகன் கையைப் பிடித்து இழுத்துவிட்டார்.

 தீபிகா மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்க கிருபா உக்கிரத்துடன், “நேத்து நீ பேசுன பேச்சுக்கு உன்னை அங்கேயே கண்டம் துண்டமா வெட்டிப் போட்டிருக்கணும்டி” என்றான்.

ஒரு மாதிரி சுதாரித்துக் கொண்டவள் அவனை நிதானமாகப் பார்த்து, “நீ பண்ண காரியத்துக்கு உன்னை யாருடா வெட்டிப் போடுவா?” என்று கேட்க, சண்முகத்திற்கு ஒன்றும் புரியவில்லை.

“முதல இரண்டு பேரும் இங்கிருந்து கிளம்புங்க... எதுவா இருந்தாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்” என்று கடுப்புடன் கத்த,  

“எங்க உறவுல பேசறதுக்கு ஒன்னு இல்ல மாமா... அது எப்பவோ முடிஞ்சு போச்சு... ஆனா உங்க புள்ள தங்கத்தை ரேப் பண்ணி இருக்கான்... ஸ்கவுன்டிரல்... அதுக்கு அவன் என்ன பதில் சொல்லப் போறான்னு மட்டும் கேட்டுச் சொல்லுங்க” என்றவள் பட்டென்று விஷயத்தைப் போட்டு உடைக்க, சண்முகம் அதிர்ச்சியானார்.

அவர் மகனைப் பார்த்து, “தீபா சொல்றது உண்மையா... கிருபா?” என்று கேட்கவும், அவன் விழிகள் தீபிகாவை வெறியுடன் நோக்கியது. இங்கேயே இப்போதே அவளைக் கொன்றுவிடும் வெறி அவன் கண்களில்,

ஆனால் அவள் அசறவில்லை. “மாமா கேட்குறாரு இல்ல... சொல்லு... நீ பண்ண கேவலத்தைச் சொல்லு” என,

“ஆமான்டி பண்ணேன்... இப்போ என்ன...?  நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்று அசட்டையாக அவன் சொல்ல, “கிருபாஆஆஆ” என்று அதட்டிய சண்முகம் அந்த நொடியே அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தும் விட்டார்.

அவன் அவமானத்துடன் நிற்க தீபிகா அப்போது, “இந்த அடியை நீங்க முன்னாடியே கொடுத்திருக்கணும் மாமா... அப்படி கொடுத்து வளர்த்து இருந்தீங்கனா அவன் இப்படியொரு அசிங்கத்தை இன்னைக்கு செஞ்சிருக்க மாட்டான்” என, அவர் தலையைத் தாழ்த்திக் கொண்டு நின்றார்.

ஆனால் கிருபா சீற்றத்துடன், “என்னை அசிங்கப்படுத்திட்ட இல்லடி... உன்னை விட மாட்டேன்டி... உன்னைத் துண்டு துண்டா வெட்டிக் காணா பிணமா ஆக்கல என் பேர் கிருபாகரன் இல்லடி” என்று மிரட்டிவிட்டு விறுவிறுவென்று வாசலைக் கடந்துச் செல்ல,

“கிருபா” என்று அழைத்துக் கொண்டே சண்முகமும் மகன் பின்னோடு சென்றார்.

“மாமா உங்ககிட்டப் பேசிட்டுப் போனதைப் பார்த்தா பயமா இருக்கு க்கா” என்று தங்கம் அச்சத்துடன் கூற, தீபிகா மிதமாகப் புன்னகைத்தாள். அவளுக்குப் பயமாக இல்லை. நிறைய பார்த்துவிட்டாள். ஓரளவு இப்போது கிருபாவின் மனநிலையை அவள் புரிந்து கொண்டுவிட்டாள்.

அவனுடன் தான் வாழ வேண்டும். வாழாத பட்சத்தில் தன்னைக் கொல்ல வேண்டும். இதற்கிடையில் அவன் எந்த சமரசத்திற்கும் வர மாட்டான். வரப் போவதுமில்லை.

Quote

Super ma 

<p>You cannot copy content</p> <p> </p>