You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kannadi Thundugal - Episode 3

Quote

3

'நூலறுந்த காற்றாடிப் போல திடீரென்று வாழ்க்கை நமது பிடியை விட்டு நழுவிப் போகும் போதுதான் புதுவிதமான புரியாத அனுபவங்கள் எல்லாம் நமக்கு ஏற்படுகின்றன'

அந்தச் சிறிய டீ கடையின் உள்ளே ஓரமாக அமைந்திருந்த முக்காலிகளில் தீபிகா, விவேக் மற்றும் அவன் நண்பர்களும் ஒன்று கூடிப் பேசி கொண்டிருந்தனர்.

பேருந்திலிருந்து இறங்கியதும் மீண்டும் தீபிகா விவேக்கின் கைப்பேசிக்கு முயற்சி செய்ய, ஒரு வழியாக அவன் அவள் அழைப்பை ஏற்றிருந்தான். அவளின் நிலையைப் புரிந்து கொண்டவன், “நீ அங்கேயே இரு தீபு உடனே வரேன்” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.  

அடுத்த ஒரு மணிநேர காத்திருப்பில்  அவனும் அவனது நெருங்கிய நண்பர்கள் மூவரும் இருச்சக்கர வாகனத்தில் அங்கே வந்து கூடிவிட்டனர்.

அப்போதுதான் விவேக் முகத்திலிருந்த காயத்தையும் கைகளிலிருந்த கட்டையும் பார்த்து அதிர்ந்த தீபிகா,  “என்னாச்சு விவேக்?” என்று விசாரிக்க,

“சொல்றேன்... வா பக்கத்துல இருக்க டீ ஷாப்ல போய் பேசுவோம்” என்று அவளை அழைத்துச் சென்றான்.

யார் கவனத்தையும் ஈர்க்காமல் ஒரு சிறிய தெருவிற்குள் இருந்த அந்த டீ கடையில் வந்து அமர்ந்து பேசத் தொடங்கினர்.

“இப்பவாச்சும் சொல்லு... என்னாச்சு?” என்று தீபிகா மீண்டும் வினவ,   

 “ரோட் க்ராஸ் பண்ணும் போது ஒரு பைக் வந்து மேல இடிச்சிடுச்சு... கீழே விழுந்து செம அடி... இடிச்சவன் கண்டும் காணாம போயிட்டான்...”

”அப்போ கூட இது சாதாரண ஆக்ஸிடென்ட்னுதான் நினைச்சேன்... ஆனா ஒரு வாரமா உன் ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்ல இருந்த போதே லேசா டவுட் வந்திருச்சு... இது யாரோ ப்ளேன் பண்ணி பண்ணி இருக்காங்கனு”

“வேறு யாரு... கிருபாவாதான் இருக்கும்” என்றவள் சொல்ல,

“இந்தாங்க டீ குடிச்சிட்டே பேசுங்க” விவேக்கின் நண்பன் அவர்கள் அனைவருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தான்.

“இல்ல எனக்கு வேண்டாம்” என்று தீபிகா மறுக்க,

“குடி தீபு” என்று விவேக் அந்தத் தேநீர் குவளையை வாங்கி அவளிடம் கொடுக்க,

“வேண்டாம்” என்றாள் அவள்.

“சரி... டீ வேண்டாம்... வேற எதாச்சும் சாப்பிடுறியா?”

 “எனக்கு எதுவும் வேண்டாம்... நான் காலையில பல்லு கூட விலக்காம... அப்படியே நைட்டு போட்டிருந்த டிரஸோட தப்பிச்சா போதும்னு ஓடி வர்றேன்” என்று சொல்லும் போதே அவள் தொண்டைக் கமறியது.

கண்களில் கண்ணீர் திரள அப்பென்ணவளைக் கண்ட அங்கிருந்த ஆடவர்கள் முகங்களும் சோகங்களில் ஆழ்ந்தன. தேநீர் அருந்தியபடி சில நொடிகள் மௌனம் காத்தவர்கள் மீண்டும்,

“அடுத்து என்ன பண்ணலாம்?” என்று பேச ஆரம்பிக்க,

விவேக் தீபிகாவிடம் திரும்பி, “நீ சொல்லு தீபு... இப்போ என்ன பண்ணலாம்?” என்று கேட்டான்.  

அவள் கலக்கத்துடன் தலையசைத்து, “தெரியல விவேக்... நான் எதுவும் யோசிக்கல... வீட்டுல இருந்தா கல்யாணம் பண்ணி வைச்சிருவாங்கன்ற பயத்துல ஓடி வந்துட்டேன்” என்றாள்.

அப்போது நண்பர்களில் ஒருவன், “உன் வீட்டுல யாராச்சும் உன் லவ்க்கு சப்போர்ட் பண்ணுவாங்களாடா மச்சான் ?” என்று விவேக்கிடம் கேட்க, அவன் கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு,

“அம்மா அப்பாகிட்ட பேசலாம்தான்... ஆனா இந்தச் சூழ்நிலைல அவங்ககிட்ட சொல்றது சரியா வராது... வேணா என் அத்தைகிட்ட சொல்லிப் பார்க்கலாம்... அவங்களும் மாமாவும் லவ் மேரேஜ்தான்” என்றவன் உடனடியாக தன் கைப்பேசி எடுத்து அழைத்துத் தன் காதல் விஷயத்தையும் அப்போதைய சூழ்நிலையையும் விவரித்தான்.

ஆனால் அவர்களிடமிருந்து அவன் எதிர்பார்த்தப் பதில் வரவில்லை என்பது அவன் நெற்றிச் சுருக்கத்திலேயே தெரிந்தது.

“என்ன சொன்னாங்க?” என்று தீபிகா கேட்க அவளைக் கவலையுடன் ஏறிட்டவன்,

“அத்தை திட்டுறாங்க தீபு... உன்னைக் கொண்டு போய் வீட்டுல விட சொல்றாங்க” என்ற பதிலைக் கேட்டு ஏமாற்றத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டவள் பின் மெல்ல முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து,

“நான் பேசாம வீட்டுக்குப் போயிடுறேன்” என்றபடி எழுந்து நின்று கொண்டாள்.

“வீட்டுக்குப் போறியா?” என்று விவேக் அதிர,

“ஆமா நான் வீட்டுக்குப் போறேன்... நீங்க எல்லா கிளம்புங்க” என்றவள் விரைவாக எழுந்துவிட்டு அங்கிருந்து வெளியேற, அந்த ஆடவர்கள் அவளைப் புரியாமல் பார்த்தனர்.

“தீபு நில்லு” என்று அவள் பின்னோடு ஓடி வந்த விவேக் அவள் கையைப் பிடித்து நிறுத்தி,   

“நீ இப்போ போனீன்னா அந்த கிருபாக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைச்சுடுவாங்க” என்றான். 

“அதுதான் என் விதினா அப்படியே நடக்கட்டும்” என்றவள் வேதனையுடன் கூறவும் முகம் சிவந்தவன்,

“அப்போ நம்ம காதல் அவ்வளவுதானா?” என, அவளால் பதில் பேச முடியவில்லை. அழுகைதான் வந்தது.

என்ன செய்து கொண்டிருக்கிறோம்? அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று எதுவும் புரியாமல் அவள் தவிப்புடன் நிற்க,

“தீபு நம்ம ஏதாச்சும் கோவில போய் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான் விவேக் உடனே. அவன் சொன்னதற்கு அவள் எந்தவித பதிலும் சொல்லாமல் மௌனமாக நிற்க,

“கல்யாணம் பண்ணிக்கலாம் தீபு?” என்றவன் மீண்டும் அவள் கைகளை அழுந்த பற்றிக் கேட்க, அவள் சில நொடிகள் யோசித்துப் பார்த்தாள். அவளுக்கு அப்போதைக்கு அதுதான் ஒரே தீர்வென்று தோன்றியது.

அவள் தலையசைத்துச் சம்மதிக்கவும் விவேக் மற்றும் அவன் நண்பர்கள் ஒன்று கூடி எங்கே எப்படி அவர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வது என்று விவாதித்தனர்.

இங்கே இவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் பாலாஜி வீட்டில் ஒரு பூகம்பமே வெடித்து கொண்டிருந்தது. மகள் ஓடிப் போனதற்கு தனது அலட்சியம்தான் காரணம் என்று தலையிலடித்து அழுது புலம்பினார்.

இராஜேஷ்வரியை நந்திகாவும்  கிருபாகரனின் அம்மா சங்கரியும் சமாதானம் செய்ய, அவர்களின் எந்தச் சமாதானங்களும் இராஜேஷ்வரி காதில் விழவில்லை.

“தீபா ஓடிப் போனது தெரிஞ்சதும் அப்படியே அவர் சுக்கு நூறா உடைஞ்சிட்டாரு அண்ணி... என்னால அவர் முகத்தைப் பார்க்கவே முடியல... பாவி மக இப்படி பண்ணிட்டு போயிட்டாளே!” என்றவர் மகளின் செயலில் அவமானத்தில் புழுங்கிக் கொண்டிருக்க, 

“அழாத ராஜி... ஏதோ வயசு கோளாறுல ஓடிப் போயிடுச்சு... நம்ம பசுங்க தேடிக் கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வந்திருவாங்க” என்று சொல்லி முடிக்கும் போது கிருபாகரன் பாலாஜியைக் கைத் தாங்கலாக அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

“அவருக்கு என்னாச்சு?” என்று ராஜி பதறி எழ,

“ஒன்னும் இல்ல அத்தை... கொஞ்சம் மயக்கம் மாதிரி தலைசுத்திட்டு வந்துடுச்சு மாமாவுக்கு... தடுமாறி விழப் போயிட்டாரு” என்றவன் சொன்னதைக் கேட்டதும், “அப்பா” என்று ஒரு பக்கம் நந்திகா தந்தைக்காகக் கதற,

“ஐயய்யோ... என்னங்க...” என்று ராஜி கவலையுற்று கணவன் அருகில் வந்தார்.

“டென்ஷனாகாதீங்க அத்தை... ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்... நீங்க மாமாவுக்கு ஏதாவது சாப்பிட கொடுங்க” என்றபடி அவரைக் கைத் தாங்கலாக அழைத்து வந்து படுக்கையறையில் படுக்க வைத்துவிட்டு,

“நீங்க கவலைப்படாதீங்க மாமா... நான் தீபாவைக் கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வரேன்” என்று விட்டு வாயிலைத் தாண்டி தன் காரில் ஏற முயல மகன் பின்னோடு ஓடி வந்த சங்கரி,

“டே கிருபா... ஏதாவது சாப்பிட்டியா டா?” என்று கேட்கவும்,

“ஆமா இப்போ இருக்குற நிலைமைல சோறுதான் ரொம்ப முக்கியமாக்கும்... நானே தீபா எங்க போனா என்னனு புரியாம குழம்பிட்டு இருக்கேன்” என்றவன் எரிச்சலுடன் மொழிய,

“அவ எங்கேயோ ஓடிப் போய் தொலைஞ்சிட்டா... நீ எதுக்குடா அந்த ஓடுகாலியைத் தேடிட்டுச் சோறு தண்ணி இல்லாம அலைஞ்சிட்டு இருக்க? போய் தொலையட்டும்னு விட வேண்டியதுதானே?” என்று மெல்லிய குரலில் சொல்லவும் அவன் முகம் சிவந்தது.

அவரை எரிப்பது போலப் பார்த்தவன், “ஒழுங்கா போயிடு... இருக்குற கடுப்புக்கு அம்மான்னு கூடப் பார்க்க மாட்டேன்” என்று சீறலாகப் பேசிவிட்டு அடுத்த கணமே தன் வாகனத்தில் ஏறிப் பறந்துவிட்டான்.

“நல்லது சொன்னதுக்கு இப்படி மூஞ்ச காட்டிட்டுப் போறான்... எல்லாம் இவங்க அப்பன சொல்லணும்... ஊர்ல வேற பொண்ணே இல்லாத மாதிரி தங்கச்சிப் பொண்ணதான் புள்ளைக்குக் கட்டுவேன்னு பிடிவாதமா நின்னாங்க இல்ல.. அதான் நல்லா சாணியைக் கரைச்சு இவங்க தலையில ஊத்திட்டுப் போயிட்டா... இவங்க இரண்டு பேருக்கும் இந்த அவமானம் தேவைதான்” என்று கணவனையும் மகனையும் மனதிற்குள் கரித்துக் கொட்டியபடி சென்றவர் அப்படியே தன் முகபாவனையை அங்கிருந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொண்டு,

“தம்பிக்கு இப்போ எப்படி இருக்கு ராஜி?” என்று அக்கறையாக விசாரித்தபடி அறைக்குள் சென்றார்.

மாலை வரை தீபிகாவைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காமல் தேடித் திரிந்தவர்களுக்கு இரவு ஏழு மணிக்கு காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. தீபிகாவும் விவேக்கும் அங்கேதான் இருப்பதாக!

கிருபாகரனும் அவன் தந்தை சண்முகமும் பாலாஜியையும்  இராஜேஷ்வரியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். உள்ளே நுழைந்ததும் அவர்கள் அனைவரின் விழிகளும் நேராக கல்யாண கோலத்தில் நின்ற தீபிகாவைதான் பார்த்தன.

மெல்லிய சரிகை வைத்த புடவையில் கையில் மாலையும் கழுத்தில் மஞ்சள் கயிற்றுடன் நின்றிருந்த மகளைப் பார்த்த இராஜேஷ்வரி,

“அடிப்பாவி” என்று கொந்தளிப்புடன் மகளை அடிக்கப் போகவும் அருகே நின்ற கான்ஸ்டபிள் பெண்மணி அவரைத் தடுத்துப் பிடித்துக் கொண்டுவிட்டார்.

“ராஜி பொறுமையா இரு” என்று தங்கையைப் பிடித்துக் கொண்ட சண்முகம்,

“என்னம்மா இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிட்ட” என்று தீபிகாவிடம் பொறும,

“என்னை மன்னிச்சிடுங்க மாமா... எனக்கு வேற வழித் தெரியல” என்று அவள் அழுது கொண்டே பதில் கூறினாள்.

“சீ... வாய மூடுடி” என்று இராஜேஷ்வரி கோபத்துடன் கொப்பளிக்க, அந்தக் காவல் நிலையத்தின் அதிகாரி,

“கொஞ்சம் பொறுமையா இருங்கமா... உட்கார்ந்து பேசுவோம்” என்றார்.

“இனிமே பேசி என்ன ஆகப் போகுது... வா ராஜி போலாம்” என்று பாலாஜி காவல் நிலையத்தை விட்டு விறுவிறுவென வெளியே செல்ல,

“இனிமே செத்தாலும் எங்க மூஞ்சில முழிக்காதே” என்று இராஜேஷ்வரியும் கணவன் பின்னோடு சென்றுவிட்டார்.

“ப்பா ம்மா...” என்ற தீபிகாவின் அழுகையும் குரலும் அவர்கள் செவிகளுக்குச் சென்று சேராமல் காற்றில் தேய்ந்து காணாமல் போனது.

அந்தக் காவல் நிலைய அதிகாரியை அதிருப்தியுடன் நோக்கிய சண்முகம், “வா கிருபா போலாம்” என்று அழைத்தார். ஆற்றாமையுடன் அத்தை மகளைப் பார்த்தவன் திரும்பிக் கோபத்துடன் விவேக்கையும் முறைத்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.  

தன் குடும்பத்தினரிடம் இருந்து மிகப் பெரிய எதிர்ப்பையும் கோபத்தையும் எதிர்பார்த்த தீபிகாவிற்கு நடந்த எதையும் நம்ப முடியவில்லை. எல்லாம் கனவு போல ஒரு நொடியில் நிகழ்ந்து முடிந்துவிட்டது.

akila.l has reacted to this post.
akila.l
Quote

Super ma 

You cannot copy content