You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kannadi Thundugal - Episode 4

Quote

4

கற்பனைகளைத் திறந்து விட்டு, அறிவை முடக்கி விடுகிறது காதல். திருமணம் கற்பனைகளை மூடிவிட்டு எதார்த்தத்தைப் புரிய வைக்கிறது.

சாலையோரத்தில் நின்று கொண்டு அவசரகெதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சுலபமாக முடிவெடுத்துவிட்டனர் எதார்த்தத்தில் அப்படி நினைத்த மாத்திரத்தில் எல்லாம் திருமணம் செய்துகொள்ளுதல் முடியாது என்ற நிதர்சனம் அவர்கள் மூளைக்கு மெதுவாகத்தான் உரைக்க ஆரம்பித்தது.

இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காகச் சென்ற கோவில்களில் எல்லாம்  முன்பதிவு செய்திருக்க வேண்டுமென்று சொல்லிக் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியே அனுப்பிவிட்டனர். அப்போதுதான் அவசரத்தில் துணிமணிகளையும் பணத்தையும் வாரி போட்டுக் கொண்டு வந்த தான், சான்றிதழ்களை எடுத்து வரவில்லை என்ற தன் முட்டாள்த்தனத்தை எண்ணி வருந்தினாள்.

இப்படி இரண்டு மூன்று கோவில்களில் ஏறி இறங்கி ஓய்ந்து போன நிலையில்தான் உடனிருந்த ஒரு நண்பரின் நண்பர் மூலமாக அந்த ஏரியா கவுன்சிலரின் உதவிக் கிடைத்தது.

இவர்களின் பிரச்சனையைக் கேட்டறிந்தவர் பின்னர் அவரே கோவிலுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குத் திருமணத்தையும் நடத்தி வைத்தார். காவல் நிலையத்திலும் தனக்குத் தெரிந்த அதிகாரி மூலமாக அவர்கள் குடும்பத்திடமும் பேசச் சொல்லிப் பிரச்சனையை முடித்து வைத்தார்.

விவேக்கின் சார்பாக அவனின் தமக்கை வனிதாதான் காவல் நிலையம் வந்து பேசி அவர்களை அழைத்துச் சென்றாள். உண்மையான பிரச்சனையே அதன் பின்புதான் ஆரம்பித்தது.

விவேக்கின் தந்தை காளிமுத்து வீட்டின் வெளியே நிற்க வைத்துச் சுற்றத்தார் அனைவரும் வேடிக்கை பார்க்க, அவர்களை மிக மிக மோசமான வார்த்தைகளால் நிந்தித்தார். இடையே இரண்டு மூன்று முறை விவேக்கை இழுத்துப் போட்டு அடிக்கவும் செய்தார். அந்தக் காட்சியை எல்லாம் பார்த்த தீபிகா கதிகலங்கிவிட்டாள். அவளுக்கு அப்படியே திரும்பி ஓடிவிடலாமா என்று இருந்தது.

அதற்குள் வனிதா குறுக்கிட்டு, “அவன் செஞ்சது தப்புதான்... அதுக்காக இப்படியா... பாவம்பா...  சின்னஞ்சிறுசுங்க ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க... அவங்கள உள்ளே விடுங்க பா” என்று அவர்களுக்காக பரிந்து பேசினாள். அப்போதும் அவர் மனம் இறங்கவில்லை.

“கூட பிறந்த அக்கா இருக்காளேங்குற நினைப்பு இல்லாம... இப்படியொரு காரியத்தைப் பண்ணி இருக்கான்... தறுதலை... அவனைப் போய் உள்ள விட சொல்லுறியா... முடியாது” என்று தீர்மானமாக மறுக்க,

“தம்பியை இப்போ நீங்க உள்ள விடுறீங்களா இல்ல நானும் அவங்களோட சேர்ந்து வெளியே போகட்டுமா?” என்று வனிதா அடித்துப் பேசவும் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் அவர் அடங்கிப் போய்விட்டார்.

அதன் பின் வனிதா அவர்களை உள்ளே அழைத்துச் செல்ல, தீபிகாவிற்குச் சங்கடமாக இருந்தது. இன்னும் என்ன மாதிரியான அவமானங்களை எல்லாம் சந்திக்க நேரிடுமோ என்று ஒருபுறம் அச்சமாகவும் இருந்தது.

அதே மனநிலையுடன் தன் காதலன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள் அவள்.

“ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க” என்று அவர்களை அறை வாசலில் நிறுத்திவிட்டு வனிதா உள்ளே சென்றுவிட, அப்போதுதான் தீபிகா அந்த வீட்டை முழுவதுமாக விழிகளைச் சுழற்றிப் பார்வையிட்டாள்.

விசாலமான முகப்பறை இரண்டு படுக்கை அறைகள் என்று கொஞ்சம் பெரிய வீடுதான். அவளின் வீட்டை விடப் பெரியது. ஒரு வகையில் அவர்களுடைய வீடு மிகவும் பழைய வீடு. அப்பாவிற்குப் புதிதாக வீடு கட்டுவதில் அல்லது வாங்குவதில் விருப்பம் இல்லாததால் காலம் காலமாக அதே பழைய வீட்டில்தான் அவர்கள் வசிக்கிறார்கள்.

ஆனால் விவேக்கின் வீடு சற்றே ஆடம்பரமாகக் காணப்பட்டது. ஓரளவு அனைத்து வசதிகளும் இருந்தன. முன்பொரு முறை விவேக் தன் தந்தை லாரி உரிமையாளர் என்று சொன்னதாக அவளுக்கு நினைவு. ஆதலால் அவர்கள் இத்தனை வசதியாக இருப்பதில் ஆச்சரியமில்லை என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே திரும்பி வந்த வனிதா, 

“உள்ளே வாங்க” என்று அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

அங்கே படுத்தப் படுக்கையாக இருந்த வயதான பெண்மணியைப் பார்த்து அவள் குழம்பி நிற்கும் போதே, “இவங்கதான் எங்க அம்மா...  ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க” என்றாள் வனிதா.

அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. விவேக் ஒருமுறை கூட அவனின் அம்மா இப்படி உடல் நலம் குன்றிய நிலையில் படுத்தப் படுக்கையாக இருக்கிறார் என்று சொன்னதே இல்லை. அவள் அந்த யோசனையில் அப்படியே நின்றுவிட, அப்போது விவேக் அவளிடம் கண்காட்டி ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னான்.

அப்போதைக்கு எதுவும் பேசாமல் அவர் பாதத்தைத் தொட்டுக் கும்பிட்டுக் கொள்ள, அவளைக் கண்டு ஒருவித அதிருப்தியான பார்வையை வீசினார் கஜலக்ஷ்மி.

எந்த அம்மாவிற்குதான் இப்படி திடுதிப்பென்று மகன் சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டு வந்து நிற்பது சந்தோஷத்தைத் தரும்.

அதன் பிறகு வனிதா அவர்களுக்கு உணவு தயாரித்துப் பரிமாறினாள்.

“எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்று காளிமுத்து எழுந்து வெளியே சென்றுவிட,

“அவர் அப்படிதான்... நீங்க சாப்பிடுங்க” என்றாள். அதன் பின் வனிதா தீபிகாவைத் தனியாக அழைத்து வந்து, “கல்யாணத்தைதான் நாள் நேரம்னு பார்க்காம அவசரமா முடிச்சிட்டீங்க... முதல் இரவு மாதிரியான சடங்கையாவது நேரம் பார்த்து பண்ணலாம்னு அம்மா சொல்றாங்க” என, தீபிகா அமைதியாகத் தலையசைத்துக் கொண்டாள்.

அதன் பின் அவளும் வனிதாவும் அன்று அவர்கள் அம்மா இருந்த அறையில் படுத்துக் கொண்டனர்.

வனிதா அவளின் ஒற்றைப் படுக்கையைத் தந்துவிட்டுக் கீழே படுக்க, “இல்ல க்கா நான் கீழே படுத்துக்கிறேன்” என்று தீபிகா சொல்லிய போதும்,  

“அதெல்லாம் வேண்டாம்... நீ மேலே படு” என்று அவளை மேலே படுக்கச் சொல்லிவிட்டு வனிதா கீழே படுத்து உறங்கியும் விட்டாள்.  

ஆனால் அவளால் உறங்க முடியவில்லை. தான் செய்த காரியத்தினால் அம்மா அப்பாவின் மனநிலை எப்படி இருக்குமோ என்று யோசித்துக் கவலையுற்றவளுக்கு வீட்டினர் நினைப்பு மனதை ரொம்பவும் அலைகழித்தது. கண்ணீர் வழிந்தோடின.

இதெல்லாம் மீறி அவள் உறங்க முற்பட்ட போது அந்த அறையில் வீசிய மருத்துவநெடியுடன் கலந்து வந்த பழக்கமில்லாத ஏதோ ஒரு வாசனை, அவளை உறங்க விடவில்லை.

அடுத்த நாள் காலை விவேக், “நல்லா தூங்குனியா தீபு... ஒன்னும் டீஸ்டர்பன்ஸ் இல்லையே” என்று விசாரிக்கவும்,

“அதெல்லாம் இல்ல” என்று அவன் கேட்டதற்காகத் தலையாட்டி வைத்தவள்,

“ஏன் விவேக்...  நான் உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” என்று தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.

“அதென்ன கேட்கட்டுமா? கேளுடி” என்றான்.  

“உங்க அம்மா உடம்பு முடியாம இருக்குறதைப் பத்தி நீ ஒரு தடவை கூட ஏன் என்கிட்ட சொல்லல?” மூச்சை இழுத்துவிட்டு கொண்டு மெல்ல அவள் முகத்தைப் பார்த்துப் பதில் கூறினான்.

“பத்து வருஷமா அவங்க இப்படிதான் இருக்காங்க... பேச முடியாம எழுந்திருக்க முடியாம... ரொம்ப கஷ்டம் தீபு... அம்மா இப்படி ஆனப் பிறகு எங்க குடும்பத்துல இருக்க எல்லோருமே ரொம்ப நொறுங்கிப் போயிட்டாங்க... அக்கா படிப்பை நிறுத்திட்டா... தம்பி மனசொடைஞ்சு போயிட்டான்... அப்பா நிறைய குடிக்க ஆரம்பிச்சிட்டாரு... இதெல்லாம் உன்கிட்ட சொல்லி... உன்னைப் பார்த்துப் பேசுற கொஞ்ச நேரத்தையும் ஸ்பாயில் பண்ண வேண்டாம்னு தோனுச்சு” என,

அவள் அப்போதும் விடாமல், “நீ என்கிட்ட ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துலயாச்சும் சொல்லி இருக்கலாமேடா” என்றாள்.   

“ப்ச் சொல்ல முடியல தீபு” என்றவன் கவலையுடன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டு,

“வீட்டை விட்டுத் தள்ளி இருக்கும் போது மட்டும்தான்... இதெல்லாம் மறந்துட்டு நான் கொஞ்சம் நிம்மதியா சிரிச்சிட்டு இருக்கேன்” என, அவள் மனம் இளகியது.

“ம்ம்ம்... புரியுது” என்று தலையசைத்து அவளும் அவன் கரத்தை ஆதரவாகப் பிடித்துக் கொள்ள, அவன் அவள் தோளில் சாய்ந்து கொண்டான்.

அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் இருவருக்கும் முதல் இரவு சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவற்றுடன் உறவினர்களையும் அழைத்து தீபிகா கழுத்திலிருந்த மஞ்சள் கயிற்றை மாற்றி தங்க செயினில் தாலியாகப் பிரித்துக் கோர்த்து விவேக் அவளுக்கு அணிவித்துவிட்டான். ஆனால் அந்த விழாவில் காளிமுத்துப் பெரிதாக ஈடுபாடு காட்டிக் கொள்ளாமல் ஒரு ஓரமாக நின்று கொண்டார்.  

இதற்கிடையில் அவர்களின் காதல் திருமணத்தைச் சாடியபடி சொந்த பந்தங்களின் குத்தல் பேசுக்களும் எழுந்தன. வனிதா அவற்றை எல்லாம் திறம்பட சமாளித்து அந்த விழாவை எந்தவித மனகசப்பும் ஏற்படாமல் நடத்தி முடித்தாள்.

 உண்மையிலேயே வனிதாவின் திறமையையும் முதிர்ச்சியையும் கண்டு தீபிகா வியந்து போனாள். அது மட்டும் இல்லை. அந்த வீட்டின் அத்தனை பொறுப்புகளையும் ஒற்றை ஆளாக தன் தலையில் சுமக்கும் வனிதா மீது அவளுக்குப் பெரும் மதிப்பு உண்டாகியிருந்தது.

அதன் பின் அறையை அலங்கரித்து விவேக்கையும் தீபிகாவையும் உள்ளே அனுப்பிவிட, இருவரின் மனமும் பல நூறு ஆசைகளுடனும் கனவுகளுடனும் அந்த அறைக்குள் பிரவேசித்தன.

அன்று இரவு அவர்கள் பேசித் தீர்க்க வேண்டிய அத்தனை கதைகளையும் மனம் விட்டுப் பேசிக் கொண்டனர். அந்தப் பேச்சில் தீபிகா அதிகம் பேசியது வனிதாவைப் பற்றியும் அவன் தம்பியைப் பற்றியும்தான்.

“உனக்கு அப்போ என் குடும்பத்தைப் பிடிச்சுப் போச்சுன்னு சொல்லு” என,

“பிடிச்சிடுச்சு... ஆனா உங்க அப்பாவைப் பார்த்தாதான் கொஞ்சம் பயமா இருக்கு” என்றாள்.

“அவர் அப்படிதான்... ஆனா அவரும் ரொம்ப மோசம் எல்லாம் இல்ல”

“ம்ம்ம்” என்றவள் மெதுவாக தலையசைக்கவும்,

“சரி அப்போ ஆரம்பிக்கலாமா?” என்று உதட்டில் இழையோடிய புன்னகையுடன் அவளை நெருங்கி வந்தான்.

“என்ன... ஆரம்பிக்கலாமா?” ,  

“புரியாத மாதிரியே கேட்காதடி” என்று அவன் இன்னும் நெருங்கி வந்தான்.

முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டவள் மெல்லிய குரலில், “இப்போ இதெல்லாம் வேணாம் விவேக்... எனக்கு இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு... அதுவும் இல்லாம நீயும் வேலைக்கு எல்லாம் போகணும்” என, அவன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு,  

“நீ சொல்றது மூளைக்குப் புரியுதுடி... ஆனா?” என்றவன் மீண்டும் அவளை நெருங்கி வந்து அணைக்க முற்பட்டான். 

“ஆனா வூனா இல்ல... கம்னு படு” என்றுவிட்டுத் தள்ளிப் படுத்துக் கொள்ள,

“தீபு ப்ளீஸ் டி... கொஞ்சமா ஏதாச்சும் பார்த்துப் பண்ணுடி” என்றவன் படுத்திருந்தவளின் தோள் மீது தலை வைத்துக் கெஞ்சினான்.

“முடியாதுடா” என்றவள் மீண்டும் அதே அழுத்தத்துடன் சொல்ல, “ப்ளீஸ் தீபு... ப்ளீஸ்” என்றவன் கொஞ்சலும் கெஞ்சலுமாக அவளைத் தன் புறம் திருப்பி முத்தமிட வரவும்,

 “விவேக் விடு” என்று அவனைத் தள்ளிவிட முயன்றாள். ஆனால் அவளுக்கு அது அத்தனை சுலபமாக இல்லை.

“விவேக் ப்ளீஸ்” என்றவள் கெஞ்சலை அவன் பொருட்படுத்தாது தன் சரச லீலைகளைப் புரிய, அத்தனை நேரம் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டவர்கள் மெல்ல தங்கள் உடலையும் உணர்வுகளையும் கூடப் பரிமாறிக் கொண்டனர்.

மெல்ல மெல்ல அவர்கள் வயது உணடாக்கிய கிளர்ச்சியில் இன்னும் இன்னும் அவர்கள் இரவுகள் போதை கொண்டன. அடுத்த ஒரு வாரம் பீச் சினிமா என்று அவர்கள் கல்லூரி காலங்களில் போக நினைத்த இடங்களுக்கு எல்லாம் சுற்றித் திரிந்தார்கள்.

அன்றும் அப்படிதான் அவர்கள் சினிமாவிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் கலகலவென்று சிரித்துப் பேசி கொண்டே உள்ளே நுழைய, காளிமுத்து வீட்டின் முகப்பறையில் அமர்ந்திருந்தார்.

அவரை பார்த்ததும் இருவரும் அதிர்ந்து நின்றுவிட்டனர். பெரும்பாலான நேரங்களில் அவரை வீட்டில் பார்க்கவே முடியாது என்பதால் திடீரென்று முகப்பறை சோஃபாவில் பார்த்ததுமே தீபிகாவிற்குப் பதட்டமானது.

விவேக் அதிர்ந்தாலும் அதன் பின் அவரைப் பொருட்படுத்தாமல் அவன் அறைக்குள் செல்ல, அவளும் அவன் பின்னோடு செல்லப் பார்த்தாள்.

“ஒரு நிமிஷம்” என்ற அவர் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.

அவள் யோசனையுடன் அவர் புறம் திரும்பி நிற்க, “உன்னைத்தான்மா... கொஞ்சம் வா... பேசணும்” என, அவளுக்கு உள்ளுர தடதடத்தது.

“சொல்லுங்க மாமா” என்று ஒரு விதப் பயத்துடன் அவர் முன்னே சென்று நின்றாள்.

“ஏன் மா... அவன்தான் அறிவுக்கெட்டத்தனமா நடந்துக்கிறான்னா நீயுமா?” என்றவர் கேட்க அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

“நீயும் ஒரு பொண்ணுதானே... இதே வீட்டுல கல்யாணம் ஆகாத ஒரு வயசு பொண்ணு இருக்கான்னு யோசிக்க மாட்டியா... இப்படி சோடி போட்டுட்டு இரண்டு பேரும் சினிமா பீச்னு சுத்திட்டு இருந்தா அவ மனசு கஷ்டபடாது” என்று கேட்கவும்தான் அவளுக்குப் புரிந்தது. தன் செயலை எண்ணி அவள் மனம் வருந்தி நிற்கவும்,   

அவர் மேலும், “உனக்கு ஏன் கஷ்டமா இருக்கப் போகுது... உடம்பு சுகத்துக்காக எவன் கிடைப்பான்னு பெத்தவங்கள கூட விட்டுட்டு ஓடி வந்த பொண்ணுதானே நீ... இப்படியும் பொண்ணு வளர்க்குறாங்க... ஆனா நான் என் பொண்ணை அப்படி வளர்க்கலமா... என் பொண்ணுக்கு நான்தான் ஒரு நல்ல மாப்பிளையா பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கணும்... அதுவரைக்குமாச்சும் நீயும் உன் புருஷனும் கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா இருக்கப் பாருங்க” என்று அதிரடியாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட, அந்த வார்த்தைகளைக் கேட்ட தீபிகா அவமானத்தில் கூனிக் குறுகிப் போனாள்.

Quote

Super ma 

You cannot copy content