You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kannadi Thundungal - Final Episode

Quote

21

அன்று காலை விடிந்த கணத்திலிருந்து தீபிகாவின் செல்பேசி ஓயாமல் அடித்துக் கொண்டே இருந்தது. அந்த செல்பேசியை எடுத்து ஒவ்வொருவருக்காகப் பதில் சொல்லியே ஓய்ந்து போய்விட்டாள்.

“ஹாப்பி பர்த்டே தீபாமா” என்று பாலாஜியும் ராஜேஸ்வரியும் மகளை வாழ்த்தி முடிக்கும் போது,

நந்திகா வீடியோ காலில் வந்திருந்தாள். “ஹாப்பி பர்த்டேக்கா” என்று அவள் சொல்லி முடிக்கப் பின்னோடு நின்ற பிரதீப், “ஹாப்பி பர்த்டே தீபா... ” என்று அவனும் சேர்ந்து வாழ்த்தினான்.

“தேங்க் யூ பிரதீப்” என்றவள் மேலும்,

“ஹன் பிரதீப்... கம்மிங் ஜூன் அம்மா அப்பா இங்க வராங்க... நீங்களும் நந்துவும் கூட வாங்க” என்றவள் சொல்ல,

“ட்ரை பண்றேன் தீபா” என்றான்.

“ட்ரை எல்லாம் இல்ல... நீங்க வர்றீங்க... செலவு எல்லாம்  என்னோடது” என்றாள்.

“ஷூயரா சொல்றியா?”

“டேம் ஷூயர்... கிளம்பி வாங்க... நான் பார்த்துக்கிறேன்” என்றவள் அதன் பிறகு தங்கையிடம் பேசிவிட்டு,  

“எங்கடி என் குட்டிப் பொண்ணு... அவளைக் காட்டாம ஃபோனை கட் பண்ண... கொன்னுடுவேன்” என்றதும்,

“தர்ஷு தர்ஷு... பெரிம்மா வீடியோ காலில் இருக்காங்க” என்று அழைத்ததுதான் தாமதம்.

அந்தக் குட்டி மகள் சலக் சலக் என்று கொலுசொலிகள் சிணுங்க ஓடி வந்து ஆஜராகி இருந்தாள். “பெம்ம்மா... நான் ரைம்ஸ் பார்த்துட்டு இருந்தேன்... ஜானி ஜானி ரைம்ஸ்... அப்புறம் அப்பா டாகி பொம்மை வாங்கிட்டு வந்தாரு” என்று ஆரம்பித்தவள் வீட்டில் நடந்த அத்தனையும் ஒப்புவித்து விட்டு, கையோடு அவளுடைய புது பொம்மையைக் காட்டுகிறேன் பேர் வழி என்று ஆர்வத்தில் அதனை செல்பேசியின் கேமராவின் மீதே தூக்கி வைத்து விட்டாள்.

குலுங்கிக் குலுங்கிச் சிரித்த தீபிகா, “உன் டாகி பொம்மையும் உன்னை மாதிரி சோ க்யூட்டா இருக்கு” என,

 “லவ் யூ பெம்மா... உம்மா... பை” என்று அடைமழையாகக் கொட்டித் தீர்த்துவிட்டுக் காணொளி அழைப்பிலிருந்து மறைந்திருந்தாள் அந்தக் குட்டி மகள். அவளிடம் பேசினாலே அல்லது அவள் முகம் பார்த்தால் கூடப் போதும். தீபாவின் அத்தனை கவலைகள் டென்ஷன்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.

“உன் பொண்ணு ஒரு மேஜிக்டி” என்று தீபிகா எப்போதும் போல தங்கையிடம் சொல்ல, நந்திகாவும் அதை ஆமோதித்தாள். அதுவரையில் நந்து வாழ்விலிருந்து சின்னச் சின்ன பிரச்சனைகள் மனக்கசப்புகள் அத்தனையும் கூட மாயா ஜாலம் செய்தது போலக் காணாமல் போனது தர்ஷு பிறந்த பிறகு.

தீபிகா தங்கையிடம் பேசி முடித்து அழைப்பைத் துண்டித்த சில நேரத்தில் அவளுடைய அலுவலக நண்பர்கள் வரிசைக் கட்டி அவளுக்கு வாழ்த்துக் கூறினர்.

சில இழப்புகளும் வலிகளும் சில நேரங்களில் பல நண்பர்களைப் பெற்று தந்துவிடுகிறது. அப்படி அவள் வாழ்வில் இணைந்தவர்கள்தான் அத்தனை பேரும்.

அதுமட்டுமல்லாது குறுந்தகவல்களிலும் பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்திருந்தன. அவற்றுள் இருந்த தங்கத்தின் வாழ்த்தைப் பார்த்த கணம் அவளுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டது.

“பிறந்த நாள் வாழ்த்துகள் க்கா” என்றவள் தன் குடும்பப் படத்தை அந்த வாழ்த்துடன் இணைத்து அனுப்பி இருந்தாள். ஐந்து நாள் முன்பு பிறந்த அவளின் மகனும் கணவனுடனும் முகமலர நின்றிருந்த தங்கத்தின் படத்தைப் பார்த்து மனம் நிறைந்தது. அன்றைய தினத்திற்கான ஈடு இணையற்ற பரிசு அவளுக்கு அதுதான்.

வாழ்க்கை எங்கே யாருக்கு என்ன மாதிரியான ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கும் என்று யாருக்கும் தெரியாது. தன் தமக்கை தனத்தின் வீட்டிற்கு அடைக்கலமாக சென்ற தங்கம் அப்படிதான் மதிவாணனை சந்திதாள்.

தனத்தின் கணவன் ஜனாவும் அவர்கள் குடும்பமும் தங்கத்தை அத்தனை அன்பும் அரவணைப்புமாக அவளை அவர்கள் குடும்பத்தில் இணைத்துக் கொண்டனர். ஜனாவின் தம்பிதான் மதிவாணன்.

ஜனாவும் அத்தனை நல்ல மாதிரியாகத் தன் கொழுந்தியாளைப் பார்த்துக் கொண்டான். பார்த்துக் கொண்டதோடு நிறுத்தாமல் அவனின் தம்பி மதிக்கு தங்கத்தைத் திருமணம் செய்விக்கவும் எண்ணினான்.

அதுவரையில் தங்கத்திற்கு நடந்த எதுவும் அவர்களுக்குத் தெரியாது.

“நீ சொல்லாதே தங்கம்... அந்த விஷயத்தை விட்டுடு” என்று அவள் திருமணம் விஷயம் அறிந்த தீபா அறிவுறுத்தி இருந்தாள். ஆனால் தங்கம் மனம் கேட்காமல் தன் கணவன் மதியிடம் உண்மையைச் சொன்ன போது தீபாவிற்குப் பதட்டமானது.

“ஏன் டி சொன்ன... பைத்தியமா உனக்கு?” என்று இவள் திட்டி வைக்க,

“இல்ல க்கா... அவர் என்னைப் புரிஞ்சிக்கிட்டாரு... கல்யாணத்தை நிறுத்த வேண்டாம்... வீட்டில யாருக்கும் தெரியவும் வேண்டாம்னு சொல்லிட்டாரு” என்று மகிழ்வோடு கூறினாள். முந்தைய ஆண்டு அவர்கள் திருமணமும்  நல்லபடியாக நடந்து முடிந்தது.

ஆனால் தீபாவிற்கு உள்ளுர பதட்டம்தான். அவள் சொன்ன உண்மையை அவள் வாழ்க்கையைப் பாதித்துவிடுமோ என்று பயம் இருந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் இந்த ஒரு ஆண்டில் மதி அந்த விஷயத்தைப் பற்றி தங்கத்திடம் மீண்டும் பேசவே இல்லை என்று அறிந்த போது அப்படியொரு ஆசுவாசம்.

தன் வாழ்க்கை போல அவள் வாழ்க்கையும் ஆகிவிடுமோ என்ற பயந்து கொண்டிருந்தாள். இதெல்லாம் தாண்டி தங்கத்திற்கு நடந்த அநியாயத்திற்குத் தானும் ஒரு வகையில் காரணமோ என்று அவளுக்குள் தங்கியிருந்த குற்றவுணர்வுதான் அவளை அப்படி யோசிக்க வைத்தது.

ஆனால் தங்கம் இப்போது குடும்பம் குழந்தை என்று நிம்மதியாக வாழ்வதை அறிந்த பிறகு அவளின் குற்றவுணர்வு எல்லாம் காணாமல் போய்விட்டது.

அலைபேசியை எடுத்து ஓரமாக வைத்துவிட்டுச் சமையலறை சென்று காபியைப் போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தாள். இதோ இந்த ஆண்டுடன் முப்பது வயது முடிகிறது. காபியைப் பருகிக் கொண்டே நடந்தவற்றை எல்லாம் அமைதியாக மூளைக்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.   

இதோ இன்று வரையில் படிப்பு வேலை தவிர வேறு எதுவும் அவள் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை. விவேக்குடன் சந்தோஷமாக வாழ ஆசைப்பட்டாள். நடக்கவில்லை. சத்யாவைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தாள். அதுவும் நடக்கவில்லை. கிருபாவுடனான திருமண வாழ்க்கையாவது நீடிக்கும் என்று நினைத்தாள். அதுவும் நடக்கவில்லை.

இறுதியாகச் செத்தாவது தொலைவோம் என்று நினைத்தாள். அதுவுமே நடக்காமல் போனது அவளுக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.

ஆனால் அதன் பிறகு நடந்த எதுவும் அவளே எதிர்பாராதது. அவளை அடிப்பட்டு தூக்கிச் சென்ற பிறகு தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்ட கிருபா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான். புலி வருது புலி வருது என்ற கதையாகிப் போனது அவன் நிலை. உண்மையிலேயே அன்று புலி வந்துவிட்டது.

ஒரு வகையில் கிருபாவைப் போன்ற மனநிலை கொண்டவர்களின் முடிவு இதுவாகதான் இருக்கும்.

ஆனால் கதை இதோடு முடிந்துவிடவில்லை. நேர்காணல் எடுக்க வந்த யூட்யூபருக்கு கிருபாவின் வாழ்க்கையைப் பற்றிய சுவாரசியமான தகவல் கிடைத்துவிட்டது.

‘மனைவியைக் கொடுமைப்படுத்திய இளம் ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை’ என்ற தலைப்புடன் பதிவிடப்பட்ட வீடியோ பலரின் பார்வைக்குப் போனது. ஊர் மக்களுக்கு உண்மையிலேயே கிருபாவைப் பற்றிய இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சிதான். நேற்று வரை அவனை அப்படிக் கொண்டாடியவர்கள். அவனுக்குள் இப்படி ஒரு மனிதன் இருக்கிறான் என்பதை நம்பவே முடியாமல் திகைத்தனர்.

கிருபா மட்டும் இல்லை. இங்கே உள்ள பெரும்பாலான மனிதர்களின் சமூக முகங்கள் வேறு. தனிப்பட்ட முகங்கள் வேறு. அந்தத் தனிப்பட்ட முகங்களில் கோரத்தை அறிந்தவர்கள் அவர்களின் வாழ்க்கை துணைகளாகதான் இருக்கும்.

தீபிகாவைத் தவிர கிருபா எல்லோருக்கும் நல்லவனாகதான் இருந்தான். ஏன்? அவன் பெற்றோரான சண்முகம் சங்கரிக்கும் கூட அவனின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சிதான். ஆனாலும் இது போன்றதொரு முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள்.  

வாழ்க்கை என்பது எல்லாமும் நிறைந்ததுதானே! இது போன்ற இழப்புகள் வலிகளைக் கடந்து நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும். தீபிகாவும் வாழ்ந்தாள்.

கிருபா அவள் உடலில் ஏற்படுத்திய காயம் சில நாட்களில் சரியாகிவிட்டது. முகத்தில் கண்ணாடித் துண்டுகள் கிழித்து உண்டான தழும்புகளும் ஒரு சிறிய பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாகச் சரி செய்யப்பட்டுவிட்டது.

ஆனால் அவள் மனதில் ஏற்பட்ட இரணங்கள் மறைய நாட்களும் வாரங்களும் மாதங்களும் தேவைப்பட்டன. இருப்பினும் அத்தனையும் அவள் கடந்து வந்தாள்.

கண்ணாடிகள்தான் உடைகின்றன. அது பிரதிபலிக்கும் பிம்பங்கள் உடைவதில்லை. தீபிகாவும் அப்படிதான். ஒவ்வொரு முறை உடையும் போதும் அவள் பல பிம்பங்களாகப் பரிணமிக்கிறாள். பெண்ணவள் புது அவதாரம் எடுக்கிறாள்.

தீபிகாவிற்குக் குடும்ப வாழ்க்கை நினைத்தது போல அமையாவிட்டாலும் வேலையில் அவளுக்கான அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் உயர்த்திக் கொண்டாள்.

அவளின் திறமையைக் கண்டு மீண்டும் அவள் அலுவலகத்திலிருந்து அவளை ஜெர்மனிக்கு அனுப்பி வைத்திருந்தனர். முந்தைய வாரம்தான் அவள் அங்கே வந்து இறங்கியிருந்தாள்.

 அங்கே வந்து இறங்கிய மறுகணம் அவளுக்கு சத்யாவின் நினைவு வந்தது. நினைக்கக் கூடாது என்று எண்ணினாலும் அவர்கள் நின்று பேசிச் சிரித்து களித்த இடங்கள் எல்லாம் அவனை நினைவுப்படுத்தியது.

கிருபாவின் திருமணத்திற்கு முன்பாக அவள் வாழ்க்கையை விட்டுப் போனவன். மீண்டும் திரும்பவும் இல்லை. தொடர்பு கொள்ளவுமில்லை. ஆனால் அவனின் முகநூல் பக்கத்தை அவள் அமைதியாகத் தொடர்கிறாள். அவன் என்ன செய்தாலும் அது அவள் பார்வைக்கு வந்துவிடும்.

சமீபமாகதான் அவன் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக ஒரு பதிவுப் போட்டிருந்தான். இன்று வரையில் அவனுடைய ரிலேஷன் ஸ்டேட்டஸ் சிங்கிளாகத்தான் இருந்தது.

இத்தனை நாளாக ஆழ்கடலின் அமைதி போல அவள் நினைவுக்குள் அமிழ்ந்திருந்தவன் இன்று மீண்டும் அலையலையாய் எழும்பத் தொடங்கியிருந்தான்.  

அவனுக்குத் தன்னுடைய பிறந்த நாள் நினைவிருக்குமா... யோசனையுடன் அவனுடைய முகநூல் பக்கத்தைத் திறந்து பார்த்தாள். அது வெறுமையாக இருந்தது.

 தன்னையே மறந்துவிட்டவனுக்குத் தன் பிறந்த நாள் மட்டும் எப்படி நினைவில் இருக்கப் போகிறது.

அப்போதுதான் ஏன் இப்படி தேவை இல்லாமல் அவனைப் பற்றி யோசித்துக் கொண்டு இந்த நாளை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு வந்தது. 

காபி பருகி முடித்துக் கோப்பையை எடுத்து வைத்துவிட்டு வெளியே சென்று வரலாம் என்று முடிவெடுத்தாள். அங்கிருக்கும் அலுவலக நண்பர்கள் சிலருக்குத் தகவல்கள் அனுப்ப, மதிய உணவிற்கு அவர்களும் அவளுடன் வந்து இணைந்து கொள்வதாகப் பதில் அனுப்பினர்.

தீபிகா குளித்து முடித்துத் தன்னை அழகாகத் தயார் படுத்திக் கொண்டாள். புதிதாக வாங்கி வைத்திருந்த ஸ்லீவ்லஸ் டாப்பையும் பேண்டையும் அணிந்து லேசாகப் பட்டும் படாமல் கொஞ்சம் ஒப்பனையையும் செய்து கொண்டு கண்ணாடியில் பார்த்தாள்.

மற்றத் தழும்புகள் எல்லாம் மறைந்துவிட்ட போதும் நெற்றியின் மேல் பகுதியிலிருந்த ஒரே ஒரு தழும்பு மட்டும் அவளுடன் அப்படியே தங்கிவிட்டது. எப்போது முகம் பார்த்தாலும் அது அவள் பார்வையில் படும். ஆனால் அந்தத் தழும்பு எந்த வகையிலும் அவள் முகத்தையும் அழகையும் பாதித்துவிடவில்லை.

எப்போதும் போல இன்றும் அவள் கண்களுக்கு அவள் அழகாகதான் தெரிந்தாள்.

அதன் பின் வீட்டைச் சுத்தம் செய்ய பணியாளர் ஒருவரை வரச் சொல்லிவிட்டு, அவர் வந்துவிட்டால் அவரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு போகலாம் என்று காத்திருக்கும் போது காலிங் பெல்லின் ஒலி கேட்டது.

பணியாளர்தான் என்று எண்ணி அவள் கதவைத் திறக்க அவளுக்கு இனிய அதிர்ச்சி காத்திருந்தது.

 “ஹாப்பி பர்த்டே தீப்ஸ்... மே ஆல் யுவர் விஷ்ஷஸ் கம் ட்ரூ” என்று சொல்லிக் கொண்டே ஒரு அழகான பூங்கொத்தை அவள் முன்னே நீட்டினான் சத்யா.

பல வண்ண மலர்களால் செய்யப்பட்ட அந்தப் பூங்கொத்தைக் கண்டு ஆச்சரியமுற்றவளுக்கு அந்தப் பூங்கொத்துடன் நிற்கும் அவன் ஒரு கனவு போலதான் தோன்றியது.

************************நிறைவு***********************

Quote

Super ma 

You cannot copy content