You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam kondenadi - 10

Quote

1௦

வேண்டுதல்

ஷிவானி யோசனைகுறியோடு வீட்டின் வாயிலைத் தாண்டி உள்ளே நுழைய, முகப்பறையில் எல்லோரும் அவளை எதிர்பார்த்துதான் காத்திருந்தனர்.

அதுவும் ஒரு மயான அமைதி அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது. வாசலில் நின்றபடியே தன் பார்வையைச் சுற்றி சுழற்றினாள் ஷிவானி.

அரவிந்தன் முகவாயை தடவியபடி சோபாவில் அமர்ந்திருக்க, நளினி கோபமே உருவமாய் நின்றிருந்தார். சபரியோ பதட்டம் கோபம் என இரண்டும் கலந்த நிலையில் அந்த அறைக்குள்ளேயெ நடை பயின்று கொண்டிருக்க,

ரஞ்சனும் சங்கீதாவும் அவர்களுக்குள்ளேயே ரகசிய மாநாடு நடத்திக் கொண்டிருந்தனர். இவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவான மோகன் நகமா விரலா என்று தெரியாமல் இரண்டையும் சேர்த்தே கடித்துக் கொண்டிருந்தான்.

'பத்த வைச்சிட்டியேடா பரட்டைனு' கவுண்டமனி பாணியில்தான் மோகன் செய்த காரியத்தைச் சொல்ல வேண்டும். இவர்களுக்கிடையில் வேதாவின் முகம் மட்டும் கொஞ்சம் தெளிவாய் தென்பட்டது. ஷிவானி நுழைந்ததை வேதாதான் முதலில் கவனித்தார்.

வேதா பார்வையாலேயே அவள் தந்தை கோபமாய் இருப்பதையும், மோகன் சொன்னவற்றையும் உரைத்தவர், 'ஏன் அங்கே போனே?' என்று சமிஞ்சையால் கேட்டுக் கொண்டிருக்க,

அந்த சமயம் மோகன் வாசலில் தயங்கி நிற்பவளைப் பார்த்துவிட்டான்.

அவன் விழியெல்லாம் கோபத்தில் சிவக்க, "வாங்க மேடம்... உள்ளே வாங்க" என்று அழைக்க,

அவள் அடிமேல் அடிவைத்து எல்லோரையும் பார்த்தபடி மிரட்சியோடு நுழைந்தாள். எல்லோரும் அவளையே வெறித்துப் பார்க்க, தான் அப்படியென்ன செய்யக் கூடாததை செய்துவிட்டோம் என்றிருந்தது அவளுக்கு.

"மேடம் நல்லா சாப்பிட்டீங்களா?"  என்று மோகன் அவளிடம் எகத்தாளமாய் கேட்க, "ஷட் அப் மோக்" என்று அவள் கோபமாய் பொங்கினாள்.

"செய்றதெல்லாம் செஞ்சிட்டு ஏன் அவன்கிட்ட எகிற?" என்று சபரி அவளை அதட்ட, அவளோ விழி எடுக்காமல் மோகனை எரிப்பது போல்  பார்த்திருந்தாள்.

"எதுக்கு நீ அங்க போன?... பெரியவங்க நாங்கெல்லாம் இருக்கும் போது உனக்கென்ன அதிகப்பிரசங்கிதனம்" என்று நளினி இப்போது அவள் மீது பாய, அவள் மௌனமாய் தலைகவிழ்ந்து கொண்டாள். எப்படி அவர்களிடம் சொல்லிப் புரிய வைப்பதென்று அவள் யோசித்திருக்க,

மோகன் அப்போது, "கேட்கிறாங்க இல்ல... பதில் சொல்லு" என்று முறைத்தான்.

"நீ பேசாதாடா ராஸ்கல்... உன்னை கொன்றுவேன்" என்றவள் சீற,

"அவன்கிட்ட ஏறாம இங்க நாங்க கேட்கிறக் கேள்விக்கு பதில் சொல்லு" என்று சபரி அவளைத் தீயாய் பார்த்தார்.

"முதல்ல அவன் செஞ்சது சரியான்னு கேளுங்க டேட்" என்று அவள் மோகனிடம் திரும்பினாள்.

"அப்படி என்ன செஞ்சிட்டாங்க?" என்று மோகன் பதிலுக்கு அவளை முறைத்தபடி நின்றான்.

"ஏன்டா என்னை விட்டுட்டு வந்த?"

"ஏன்...  உனக்கு சாப்பிட கொடுத்த உங்க மாமா... உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து விடலயோ?" என்றவன் சொல்லி எகத்தாளமாய் சிரிக்க,

"ஏன் விடாம... அவர்தான் என்னை டிராப் பண்ணாரு" என்றவள் பெருமிதமாகச் சொன்னாள்.

சபரிக்கு ஷாக்கடித்த உணர்வு. வேதா தன் மகள் சொன்னதைக் கேட்டு பூரிப்படைந்து புன்னகையிக்கும் போது தன் கணவனின் முறைப்பைப் பார்த்து தன் சிரிப்பை உள்ளூர அடக்கிக் கொண்டார்.

எல்லோரும் அதிர்ச்சியாய் பார்க்க ஷிவானியே மேலும், "உன்னை நம்பி வந்ததுக்கு என்னை நடுத்தெருவில நிறுத்திட்ட இல்ல" என்றவள் வெறுப்பாய் பார்க்க,

அரவிந்தன் அப்போது எழுந்துநின்று, "தப்பு மோகன்... என்ன நடந்திருந்தாலும் நீ ஷிவானியை அப்படி விட்டுட்டு வந்திருக்கக் கூடாது" என்று தன் மகனிடம் கடிந்து கொண்டார்.

"அவ என்ன சின்ன பாப்பாவா... போஃன் இல்ல... பர்ஸ்ல காசில்ல" என்றதும், "எருமை... என் போஃன் கார்லதான் இருந்துச்சு" என்றாள் அதீத கோபத்தோடு!

"அதுக்காக நீ அவன் கூட ஜோடி போட்டுக்கிட்டு வந்திருவியோ?" என்று மோகன் கேட்டு வைக்க, சபரி அந்த கேள்வியில் அதிர்ச்சியானார்.

வேதாவிற்கோ இவன் வயசுக்கு தன் தம்பியை மரியாதையில்லாம பேசுகிறானே என்று உள்ளூர பொறும,

ஷிவானி முந்திக் கொண்டு, "கொஞ்சம் மரியாதையா பேசு மோக்" என்று சொல்ல,

"பார்த்தீங்களா மாமா... அவனை சொன்னதுக்கு இவளுக்கு கோபம் வருது" என்று சபரியை ஏற்றிவிட்டான் மோகன்.

அவரும் அதே யோசனையில்தான் மகளை ஆச்சர்யமாய் பார்த்திருக்க, ஷிவானி அந்த நொடி ஆவேசமாய் மோகனின் கன்னத்தில் அறைந்துவிட்டாள்.

"திரும்பியும் அவன் இவன்னு சொல்ற வேலை வைச்சுக்காதே" என்றவனை ஷிவானி அழுத்தமாய்  எச்சரிக்க, வேதாவிற்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம்.

சபரிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. தன் மனைவியின் குடும்பத்தை விட்டு அவளை தான் என்னதான் விலக்கி வைத்தாலும் அந்த பாசமும் ஒட்டுதலும் அவளுக்கு இருப்பதை நம்ப முடியவில்லை.

நளினி அதற்குள், "ஆம்பிள பையனை அடிக்கிறளவுக்கு நெஞ்சழுத்தமாயிடுச்சா... அதுவும்  உனக்கு புருஷனா வரப் போறவனைப் போய்" என்று சொல்ல மோகனோ அவளை வெறியாய் பார்த்திருந்தான்.

ரஞ்சன் தன் தம்பி அருகில் சென்று அவனை சமாதானப்படுத்த, அப்போது வேதாவும் தன் மகளிடம், "நீ செஞ்சது தப்பு வாணிம்மா" என்று உரைத்தார்.

"நடிக்காதே வேதா... எல்லாம் நீ சொல்லி கொடுத்துதானே நடக்குது" என்று நளினி பழியைத் தூக்கி அவர் மீது போட்டார்.

அதோடு நிறுத்தாமல் தன் தம்பியைப் பார்த்து, "என்னடா மரம் மாதிரி நிக்கிற... உன் பொண்ணு செஞ்ச காரியத்தை என்னன்னு கேட்க மாட்டியா?" என்று சொல்ல

அப்போது அரவிந்தன் தன் மனைவியிடம், "அமைதியா இரு நளினி... கொஞ்சம் பொறுமையா பேசிக்கலாம்" என்க,

"அவ நம்ம பிள்ளையை கையை நீட்டி அடிச்சிருக்கா... நீங்க என்னவோ பொறுமையா பேசிக்கலாங்கிறீங்க" என்று கணவனை வேறு ஒரு முறை முறைத்தார்.

அப்போது ஷிவானி இடைபுகுந்து நளினியிடம், "ஸாரி அத்தை தப்புதான்... ஆனா நான் ஒண்ணும் அவனை வேணும்டே அடிக்கல... அவன் அப்படி பேசினதாலதான் அடிச்சேன்" என்று சொல்ல அந்த சமயத்தில் சபரி ஒருவாறு அதிர்ச்சியிலிருந்து மீண்டிருந்தார்.

"அவனைப் பத்தி சொன்னா உனக்கே ஏன்  இவ்வளவு கோபம் வருது?" என்றவர்  நிறுத்தி நிதானமாய் கேட்க,

"ஏன் கோபம் வரக் கூடாது?" என்று பதில் கேள்வி கேட்டாள் ஷிவானி.

"ஏன் கோபம் வரனும்? வூ இஸ் ஹீ?" என்று சபரி மகளை முறைத்தபடி கேள்வி எழுப்ப, வேதாவிற்கு பதில் சொல்ல வேண்டும் என்று உதடு துடித்தாலும் அவர் தன் நாவை பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தார்.

ஷிவானியே முன்வந்து, "தெரியாத மாதிரி கேட்கிறீங்க... அவர்  மீ யோட பிரதர்... எனக்கு மாம்ஸ்" என்று தெளிவாய் பதிலளித்தாள். இதை கேட்ட சபரிக்கு பிபி எகிறிக் கொண்டிருந்தது.

அவர் பார்வையாலயே தன் மனைவியிடம் 'இதெல்லாம் நீ சொல்லிக் கொடுக்குறியா?' என்று கேட்க, அவர் இல்லையென்பது போல் தோள்களைக் குலுக்கினார்.

சபரி மீண்டும் தன் மகளிடம், "என்ன திடீர்னு... மாமா அது இதுன்னு ஓவரா உறவு கொண்டாடுற"  கோபப்பட முடியாமல் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்க,

மோகன் முந்திக் கொண்டு, "சாப்பிட கொடுத்தாரு இல்ல... அதான் மேடம் சமாதான புறாவை பறக்க விட்டுட்டாங்க" என்றான்.

"வேண்டாம் மோக்... இன்னொரு கன்னமும் சிவந்திரும்" என்றவள் கடுப்பாகிட,

நளினி அப்போது "என்னடி சொன்ன?"  ஷிவானியை கை ஓங்கிக் கொண்டு வர சபரி அவர் கரத்தைப் பிடித்துத் தடுத்தார்.

"அவ சின்ன புள்ளை க்கா ஏதோ தெரியாம பேசுறா?" என்று சபரி பரிந்து பேச,

"இப்படியே நீ அவளுக்கு இடம் கொடுத்து கொடுத்துதான்... அவ திமிரு பிடிச்சி எல்லோரையும் ஏறி மேய்சசிட்டிருக்கா?" என்று சொல்ல, வேதாவிற்கு கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது.

"போதும் மதினி... இதுக்கு மேல பேசாதீங்க... அவ சொந்த தாய் மாமனை பார்த்துட்டு வந்ததுக்கு அவளை என்னவோ குத்தவாளி மாதிரி நிக்க வைச்சுப் பேசிட்டிருக்கீங்களே" என்றவர்,

"நீ உள்ளே வா வாணிம்மா" என்று மேலே பேச்சை வளர்க்காமல் தன் மகள் கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டார்.

அப்போது நளினி தன் தம்பியிடம், "உன் பொண்டாட்டிக்கு இவ்வளவு ஆகாதுடா" என்க,

"நீங்களும் வாணியைப் பத்தி அப்படி பேசியிருக்க கூடாது க்கா" என்று சபரி சொல்ல நளினி அதிர்ச்சியோடு,

"உன் பொண்ணு மட்டும் என் பிள்ளையை அடிக்கலாமா?" என்று கேட்டார்.

"எல்லாத்துக்கும் இவன்தான் காரணம்... இவ தேவையில்லாம அவளை அங்கே கூட்டிட்டுப் போயிருக்கக் கூடாது"

"இல்ல மாமா... அவதான் அடம்பிடிச்சா" மோகன் சொல்ல

"அவ அடம்பிடிச்சா" என்று சபரி கோபமாய் பார்க்க, மோகன் பதில் பேசாமல் தலைகவிழ்ந்து கொண்டான்.

சபரி மேலும், "சரி கூட்டிட்டு போனே... திரும்பி அவளை பத்திரமா கூட்டிட்டு வர வேணாமா?" என்றவனைகேட்டு முறைக்க மோகனால் அதற்கும் பதில் சொல்ல முடியவில்லை.

அரவிந்தன் சபரியின் தோள்மீது கை போட்டு, "விடு மச்சான்... அவன் அப்படிதான் அவசர குடுக்கை... நீ வா... உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்று சொல்லி சபரியை அழைத்துக் கொண்டு சென்றார்.

அதே நேரம் அறைக்குள் வேதா தன் மகளிடம் நடந்தவற்றை எல்லாம் கேட்டறிந்து கொள்ள, அவரின் விழியோரம் நீர் கசிந்தது.

"அப்போ தம்பி  உன்கிட்ட கோபமா பேசலயா வாணிம்மா" என்று கேட்க,

"கோபமா எல்லாம் பேசல... ஆனா இமோஷனலா பேசினாரு... பாவம்ல தாத்தா பாட்டி" என்றவள் வருத்தம் கொள்ள, "ஹ்ம்ம் ஆமா" என்று கண்கலங்கினார் வேதா.

அந்த நேரம் பார்த்து சபரி அறைக்குள் நுழைய வேதா தன் கண்ணீரை அவசரமாய் துடைத்துக் கொண்டு விட,

அவர் தன் மகளிடம், "உங்க அம்மாவை திங்ஸ் எல்லாம் பேக் பண்ண சொல்லு... சென்னைக்குக் கிளம்பலாம்... அன் நெக்ஸ்ட் வீக் மலேசியாவுக்குப் போறோம்" என்று சொல்ல ஷிவானி அதிர்ச்சியானாள்.

"அப்போ எங்கேஜ்மென்ட் டேட்?" என்றவள் கேட்க, தன் மகளை விழிஇடுங்கப் பார்த்தவர்

"செய்றதெல்லாம் செஞ்சிட்டு இதுல எங்கேஜ்மென்ட்னா கேட்குற... இரண்டு பேரும் எல்கேஜி புள்ளைங்க மாதிரி சண்டை போட்டுக்குறீங்க... உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் வேற பண்ணா ஊரையே இரண்டாக்கிடுவீங்க" என்க, இதைத்தான் அரவிந்தன் அவரைத் தனியாக அழைத்துச் சென்று புரிய வைத்தார்.

"நானும் அப்பவே நினைச்சேன்... நீங்கதான்" என்று வேதா சொல்ல வர அவர் மனைவியை வெடுக்கென ஒரு பார்வை பார்த்தார்.

"அப்போ எங்கேஜ்மென்ட் கேன்ஸலாயிடுச்சா?" என்று ஷிவானி வருத்தமாய் கேட்க, மகளை இருவரும் புரியாமல் பார்த்தனர்.

அவளின் கவலையே வேறு. சொந்தபந்தங்கள் எல்லோரையும் பார்க்க வேண்டுமென்ற அவளின் ஆசை நிராசையாய் போனதே!

தன் தந்தை புறப்பட சொன்னதைப் பற்றி யோசித்தவள் மெதுவாக தன் தந்தையை நெருங்கி, "டேட்... நான் ஒண்ணு கேட்கட்டுமா?" என்று ஆரம்பிக்க

அவர் என்னவென்பது போல் பார்த்தார்.

"நாம நெக்ஸ்ட் வீக் தானே மலேசியா போறோம்... பேசாம இந்த ஓன் வீக் தாத்தா வீட்டில ஸ்டே பண்ணா என்ன?" என்றவள் கேட்டு வைக்க அவருக்கு தூக்கிவாரிப் போட்டது. வேதாவிற்கு ஆனந்தம் கலந்த அதிர்ச்சி.

"யோசிச்சுதான் பேசுறியா வாணிம்மா" மகளை அவர் அதிர்ச்சியாய் பார்த்துக் கேட்க, "வாட்ஸ் ராங் இன் இட்?" என்றாள் ஷிவானி!

"இதெல்லாம் நீ போய் பார்த்துட்டு வந்தியே... அவன் சொல்லிக் கொடுத்தானா உனக்கு?" என்றவர் முறைக்க,

"நோ டேட்... நானேதான் சொல்றேன்...  எனக்கு ரொம்ப ஈகரா இருக்கு... எல்லோரையும் பார்க்கணும்னு... ப்ளீஸ் போலாமே" என்றவள் கெஞ்சலாய் கேட்க, "முடியாது வாணிம்மா" என்று சபரி திட்டவட்டமாய் மறுத்தார்.

"டேட் டேட்... ப்ளீஸ் ப்ளீஸ்  ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஒகே சொல்லுங்க... ஐம் பெக்கிங் யூ... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்று அவள் எந்தளவு முடியுமோ அந்தளவு இறங்கிய தொனியில் கேட்க,

வேதா தன் கணவனின் பதிலுக்காக ரொம்பவும் ஆர்வமாய் எதிர்பார்த்திருந்தார். என்றுமே மகளின் எந்த விருப்பத்திற்கும் மறுப்பு தெரிவிக்காத சபரிக்கு அவளின் அந்த வேண்டுதல் சங்கடத்தைத் தோற்றுவித்தது. 

*******

குருவுக்கு காலை உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தார் தங்கம். அவர் முகத்திலோ அத்தனை இறுக்கம்.

"ம்மோவ்... இப்ப என்னாயிடுச்சுன்னு முகத்தை இப்படித் தூக்கி வைச்சிட்டிருக்கீக?"

"நான் எப்படி இருந்தா உனக்கு என்னவே... சாப்பிட்டிட்டு கிளம்பிப் போய் உன் சோலியை பாரும்" என்றவரை கோபமாய் பார்த்தவன்,

"இப்ப என்னாயிடுச்சு?" என்று அதிகாரமாய் கேட்டான்.

"என்னாயிடுச்சுன்னா கேட்குதே... உங்க அக்காவும் ஐஸ்ஸும் வந்து   சாமியாடிட்டாக... இவகளே இப்படின்னா.. உன் இரண்டாவது அக்காளுக்கும் ராகினிக்கும் மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சுது அவ்வளவுதான்... ஊரை உண்டுயில்லன்னு பண்ணிடுவாங்களாக்கும்" என்றவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

எழுந்து கை அலம்பிக் கொண்டவன்,"யார் என்ன சொன்னாலும் சரி... நான் ஷிவானியைதான் கட்டிக்கிடுவேன்"  என்றான்.

"டே... உரக்க பேசாதே... உங்க ஐயன் உள்ளரதான் இருக்காக" என்றவர் குரலைத் தாழ்த்தி எச்சரிக்க,

"ஏன் எனக்கென்ன பயம்... ஷிவானியைக் கட்டி நான் அவளை இந்த வீட்டு மருமவளா கூட்டிட்டு வரத்தான் போறேன்" என்று உணர்ச்சிவசப்பட்டு சத்தமாய் சொல்ல முருகவேல் வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.

குரு சட்டென்று பதறிக் கொண்டு, "ம்மா... நேரமாயிடுச்சு...  நான் மெஸ்ஸுக்கு கிளம்பிடுதேன்" என்று விறுவிறுவென நழுவிக் கொண்டு வெளியேற தங்கம் மகனின் வீரதீரத்தை எண்ணி உள்ளூர சிரித்துக் கொண்டார்.

அவன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு யாரிடம் வம்புக்கு போனாலும் தன் தந்தையை கண்டால் அடக்கி வாசித்துக் கொள்வான்.

அவன் வாசல்புறம் வர வள்ளியம்மை அவனிடம், "எலகுரு... வரும் போது வெத்தலை வாங்கிட்டு வாவே" என்று அவர் பேரனிடம் அதிகாரமாய் சொல்ல,

"எதுக்கு? வெத்தலையை கொதப்பி கொதப்பி இங்கனயே துப்பி வைக்கவா?" என்று கடுபடித்தான் அவன்.

"வேற எங்கிட்டு துப்ப? உன் தலையிலயா"

"உனக்கு இருந்தாலும் கொஞ்சநஞ்சம் குசும்பில்ல கிழவி" என்று தன் பாட்டியை கோபமாய் அவன் கடிந்து கொண்டிருக்கும் போது,

வீட்டின் வாசலின் புறம் ஒரு கார் வந்து நின்றது. அவன் யாரென்று பார்க்க எதிரே வந்து நின்ற காரில் ஷிவானி வந்திறங்க அவன் அப்படியே திகைத்து நின்றுவிட்டான்.

"ஹாய் மாம்ஸ்" என்றவள் புன்னகையோடு குருவை பார்த்துக்  கையசைக்க அவனும் பதிலுக்கு கையசைக்க யத்தனிக்கும் போது,

சபரி காரிலிருந்து கீழே இறங்கவும், தான் மேலுயர்த்திய கரத்தை சட்டென்று இறக்கிக் கொண்டான்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

Quote

Low dose antihypertensive therapy with 1 buy priligy online

Quote

Nucleic Acids Res 40, 1424 1437 2012 is lasix a blood thinner

You cannot copy content