You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam kondenadi - 13

Quote

13

சூறாவளி வீசியது

குரு தன் கன்னத்தில் அவன் கரத்தை வைத்திருப்பதை உணர்ந்தும் உணராமலும் இரண்டாம் கட்ட நிலையில் இருந்த ஷிவானியைச் சற்று நிலைப்படுத்தி நிறுத்தியது ஜஸ்வர்யாவின் குரல்.

அவள் அந்த நொடியே குருவை விட்டு அவசரமாய் விலகி நிற்க, குருவிற்கு ஏமாற்றமும் ஐஸ்வர்யாவின் செய்கையால் அவள் மீது எரிச்சலும் மூண்டது.

ஐஸ்வர்யாவின் அலறல் அந்த வீட்டில் உள்ள எல்லோருக்குமே கேட்டுவிட்டது. ஏன் வாசலில் திண்ணை மீது அமர்ந்திருந்த வள்ளியம்மை காதுக்கும் எட்டி, "யாருல சத்தம் போடறது?" என்று வினவினார்.

ஆனால் வீட்டில் உள்ள யாரும் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுள் வேதா மட்டும்தான், "ஐஸுக்கு என்னாச்சு?" என்று பதற,

"அதெல்லாம் ஒரு மண்ணும் ஆயிருக்காதுக்கா... அவ சும்மாவே அப்படிதான் கிழிப்பா" என்று அமிர்தா அலட்டிக் கொள்ளாமல் சொல்ல,

"ஆமா ஆமா... அவளுக்கு இதே பொழுப்புதான்" என்று தங்கமும் சலித்துக் கொண்டார். அவளின் பிரச்சனை என்னவென்று  யாரும் கேட்க கூட வரவில்லை.

ஐஸ்வர்யா அந்த நொடி தன் மொத்த கோபத்தையும் பார்வையாலேயே ஷிவானி மீது காட்ட, அவள் ஏதும் அறியாதவளாய் நின்றிருந்தாள்.

குரு கோபம் பொங்க, "இப்ப எதுக்கடி கத்தின?" என்று ஜஸ்வர்யா மீது பாய, "ஏன்? இடைஞ்சல் பண்ணிட்டேனோ?!" என்று எகத்தாளமாய் கேட்டாள். "அறைஞ்சேன்னா... கன்னம் பழுத்திரும்" என்று அவன் தன் கரத்தை ஓங்க,

ஷிவானி பதறித் துடித்து, "சின்ன பொண்ணுக்கிட்ட போய் ஏன் இப்படி கோப்படுறீங்க?" என்று சொல்ல... ஷிவானி அங்கே நிற்பதை மனதில் கொண்டு அவன் அமைதியானான்.

ஆனால் ஐஸ்வர்யா ஆத்திரத்தோடு, "யாரு இங்க சின்ன பொண்ணு?  ஒசரத்தில கொஞ்சம் கம்மியா இருந்தா சின்ன பொண்ணுன்னு சொல்லிடுவீகளோ?" என்றவள் எகிற, குரு தலையிலடித்துக் கொண்டான். 

ஷிவானி இயல்பாய் புன்னகையித்து, "நீ ட்வல்த்து(12th) படிக்கிறதாதானே சித்தி சொன்னாங்க" என்றவள் கேட்க,

"ஆமா... படிக்குதேன்... அதனால எல்லாம் நீங்க என்னை  சுலபமா  ஏமாத்திட முடியாது... மாமாவை நான்தான் கட்டிக்கிடுவேன்" என்று சொல்லி முடிக்கும் முன்னரே அவள் பின்மண்டையில் அடித்தான் குரு.

"மாமா" என்று அவள் கோபமாய் திரும்ப, அவன் எரிச்சலான பார்வையோடு, "நான் உன்னைக் கட்டிக்கிட மாட்டேன்னு பல தடவை படிச்சிப் படிச்சி சொல்லுதேன்... அது ஏன்வே உனக்குப் புரியவே மாட்டேங்குது" என்றவன் அழுத்தமாய் சொன்ன நொடி,

"அப்படின்னா இந்த மலேசியா காரவுகளதான் கட்டிப்பீகளோ?!" என்று கேட்டு வைக்க ஷிவானி அதிர்ந்தாள். ஆமா என்று தொண்டை வரை வந்த வார்த்தையை குரு விழுங்கிக் கொண்டு மௌனமாய் நிற்க, ஐஸ்வர்யாவிற்கு அவன் சொல்லாவிட்டாலும் அவன் எண்ணம் புரிந்து போனது. 

ஐஸ்வர்யா கண்ணீரை உகுத்தபடி, "என் குடியை கெடுக்கத்தான் மலேசியாவில இருந்து வந்தீகளோ?! அப்படி என்னக்கா சொக்கு பொடி போட்டீக என் மாமனுக்கு" என்று விம்மியபடிக் கேட்டதும் ஷிவானியின் மனம் கலக்கமுற்றது.

"என்னடி பேச்சு பேசிட்டிருக்க?... அடி பின்னிடுவேன்... சொல்லிட்டேன்" என்று குரு எச்சரிக்க அவள் சற்றும் அசராமல்,

"அடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா அடிங்க... அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு அடிங்க" என்க, அவன் கடுப்பாக... அவளோ நிறுத்தாமல் மேலே தொடர்ந்தாள்.

"அப்படி என்ன ராகினிகிட்டயும் என்கிட்டயும் இல்லாததை இவுககிட்ட கண்டுட்டீக... இத்தனைக்கும் வெளுப்பு தோலெல்லாம் கூட இல்லையே... பந்தாவா போட்டிருக்கிற உடுப்பில மயங்கிட்டீகளோ?!" என்று ஐஸ்வர்யா சொல்லியபடி ஷிவானியை அருவருக்கத்தக்க பார்வை பார்க்க அவள் கூனிக்குருகிப் போனாள்.  இந்த மாதிரியான பேச்சுக்கள் அவளுக்கு ரொம்பவும் புதிது.

அவள் அழுது கொண்டே கொள்ளைப் புற வாசலின் வழியே வெளியேறிவிட அத்தனை நேரம் அந்த பிரச்சனையை எப்படி  சுமூகமாய் சமாளிப்பதென்று அமைதி காத்தவன், ஷிவானியின் அழுகையைக் கண்ட நொடி ஐஸ்வர்யாவின்  கன்னத்தைப் பதம் பார்த்துவிட்டான்.

அவள் அதிர்ச்சியில், "அவுகளுக்காக என்னை அடிச்சிட்டீக இல்ல" என்று கேட்டு அழுதவள் விடுவிடுவென நடந்து... முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு  வாசல்புறம் செல்ல, குரு தான் என்ன செய்துவிட்டோம் என்று தலையை பிடித்துக் கொண்டுநின்றான்.

யாரை சமாதானம் செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை. சற்று யோசித்தவன், பின்னர் ஐஸ்வர்யா பின்னோடு செல்ல அவளோ வீட்டில் உள்ள யார் அழைப்பிற்கும் செவி சாய்க்காமல் நேராய் சென்று திண்ணையில் அமர்ந்து கொண்டாள்.

அவனும் அவளைத் தேடி கொண்டு வந்து அவள் அருகில் அமர அவள் கோபித்துக் கொண்டு எழுந்து நின்று கொண்டாள்.

"ஏ ஐஸு" என்றவன் அழைக்க,

"என்னை அடிச்சிபுட்டீக இல்ல... போங்க பேசாதீக" என்று கண்ணீரும் கம்பளையுமாக உரைக்க, "மாமா உன்னை அடிக்க கூடாதோ? எனக்கு அந்த உரிமை இல்லையாவே" என்று கேட்டதும் அவள் முகம் லேசாய் தெளிவு பெற்றது.

அவன் அவள் கரத்தைப் பிடித்து அருகில் நிறுத்தியவன், "அடிச்சிருக்கக் கூடாதுதான்... தப்புதேன்... ஆனா நீ பேசினதும் தப்புத்தானே... இத்தனை வருசம் கழிச்சி வந்திருக்காக... அவங்க கிட்ட போய் நீ அப்படி வரைமுறையில்லாமப் பேசியிருக்கக் கூடாது... அந்த கோபத்திலதான் கூறுகெட்ட தனமா கை நீட்டுப்புட்டேன்" என்றவன் பொறுமையாய் விளக்க,

அவன் பேசுவதை அவள் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

"வேணா நீ பதிலுக்கு மாமனை ஒண்ணுக்கு இரண்டடி அடிச்சிக்கிடு" என்று சொல்ல அவள் மனம் மொத்தமாய் இளகியது.

"உம்ஹும்" என்றவள் தலையாட்ட குரு அவளிடம், "போய் ஷிவானி அக்காகிட்ட பேசு ஐஸ்... அவுக மனசு ரொம்ப கஷ்டப்படுறாக" என்று சொன்ன நொடி மீண்டும் கோபம் தலைக்கேற ஐஸ்வர்யா சடாரென அவன் பிடித்திருந்த அவள்  கரத்தை உருவிக் கொண்டாள்.

"இதான் சேதியா? அவுகள நான் சமாதானப்படுத்த... நீங்க என்னை வந்து சமாதானப்படுத்துறீகளோ... நல்லா கதையாம்ல இருக்கு" என்றவள் மூச்சிறைக்க அவனை முறைக்க,

"அப்படி எல்லாம் இல்லவே" என்று குரு சொல்ல, "வேற எப்படியாம்" என்று கேட்டு அவனை விழகள் இடுங்க பார்த்தாள்.

"சின்ன புள்ளன்னு உன்கிட்ட போய் இறங்கி வந்து பேசினேன் பாரு... என்னைய" என்றவன் எரிச்சல் மிகுதியால் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "சரி நான் அவுககிட்ட பேசுதேன்" என்றாள் ஐஸ்வர்யா.

"ஆனா நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணனும்... அப்பதான் பேசுவேன்" என்று சொன்னவளை அவன் குறுகுறுவெனப் பார்க்க,

"என்னைய கல்யாணம் கட்டிக்கிறேன்னு சத்தியம் பண்ணுங்க" என்று தன் கரத்தை நீட்டினாள்.

'இவ அடங்க மாட்டா போல இருக்கே' என்று வாய்க்குள்ளேயே குரு முனக, "சத்தியம் பண்ணுங்க" என்று மீண்டும் அவள் கேட்க, வள்ளியம்மையின் கொம்பு அவள் கரத்தில் பாய்ந்தது.

இத்தனை நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அத்தனை ஆழமாய் ஒட்டுக்கேட்டு கொண்டிருந்த வள்ளியம்மைக்குக் கடைசியாய் ஐஸ்வர்யா பேசியது பளிச்சென்று புரிந்துவிட்டது.

"அம்மாட்சி" என்றவள் கையை வலியால் உதற,

"வித்தாரகள்ளி வெறவொடைக்கப் போனாளாம் கத்தாழை முள்ளு கொத்தோட  ஏறுக்கிச்சாம்... அந்த மாதிரி கதையாம்ல இருக்கு...

என் பேரன் உசரத்துக்கும் உடம்புக்கும் சீக்காளி கோழி மாறி இருந்துக்கிட்டு உனக்கு அவனை கட்டிக்கிடணுமா...   வகுந்துபுடுவேன் வகுந்து... சிவகுருவுக்கு சிவானிதான்னு நான் எப்பவோ முடிவு பண்ணிடுதேன்... இவ யாருடி நடுவில சத்தியம் கேட்குதா?" என்றவர்

குருவின் புறமும் திரும்பி, "அவதான் ரொம்ப சலம்புதான்னா... நீ என்னவோ பார்த்துக்கிட்டு நிக்குதே... செவுலயே இரண்டு விட வேணாமா?!" என்று சொல்ல குருவிற்கு பைத்தியமே பிடித்தது.

ஜஸ்வர்யாவுக்கு கோபம் கனலாய் ஏறியது.

"நான் சீக்காளி கோழியாட்டும் இருக்கேன்... அவுக மட்டும் சீமைப் பசுவாட்டம் இருக்காகளோ... எங்கனயோ இருந்துவந்த அவங்க உங்க இரண்டு பேருக்கும் முக்கியமா போயிட்டாக இல்ல... நான் வேண்டாதவளா போயிட்டேன்" என்க,

"அப்படி எல்லாம் இல்ல ஐஸு" என்று குரு அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்ய, அவள் அமைதியடைவதாக இல்லை.

"அப்படிதேன்... எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு... நீங்க இரண்டு பேரும் சேர்ந்து கூட்டு சதி செய்தீகளோ... பாத்துக்கிடுதேன்... எப்படி அந்த மலேசியாக்காரியை நீங்க கட்டிக்கிடுவீங்கன்னு" என்று சவாலாய் சொல்லிவிட்டு வாசலைக் கடந்து விறுவிறுவென நடந்து சென்றுவிட்டாள்.

குரு எரிச்சலாய் தன் பாட்டியை பார்த்து,

"ஏ வள்ளியம்மை... உனக்கு கொஞ்சமாச்சும் கூறிருக்கா? குலவிக் கூண்டை  கலைச்ச மாதிரி அவகிட்ட போய் வாயக் கொடுத்து வைச்சிருக்க... என்னத்தை செஞ்சு வைக்கப் போறாளோ?!" என்று அவன் தவிப்புற்றுக் கிடந்தான். அதே சமயம் ஐஸ்வர்யா கோபத்தோடு நடந்து போய் கொண்டிருக்க சுப்பு பைக்கில் அவளை வழிமறித்தான்.

"அறிவில்ல... இப்படியா பைக்கை குறுக்கால விடுவாக?" என்று அவள் தன் கோபம் அடங்காமல் அவன் மீது ஏற,

"பாவம்... உச்சி வேளையில கஷ்டப்பட்டு நடந்து போறியே... உன்னைக் கூட்டிட்டு போய் வீட்டில விடலாம்னு பார்த்தா... எதுக்கு இப்போ எரிஞ்சு விழறவ" என்று பாசமாய் கேட்டான் சுப்பு.

"ஒண்ணும் வேண்டாம்... நாங்களே போய்க்கிடுதோம்" அவள் முகத்தைத் திருப்பி கொள்ள, "அதானே... நீ உன் மாமன் பைக்கைத் தவர வேற யார் பைக்கிலையும் ஏற மாட்டீகளே... ஆனா உன் மாமன் கொஞ்சங் கூட விவஸ்த்தையே இல்லாம யார் யாரையோ கூட்டிட்டு சுத்துறான்... அதைப் பத்தி எல்லாம் கேட்க மாட்டீகளா?!" என்று சொல்ல அவள் அவனை ஏற இறங்கப் பார்த்து,

"பொய் சொல்லாதீக... அவுக எந்த பொம்பள புள்ளயையும் பைக்கில ஏத்த மாட்டாக" என்றாள்.

"அதெல்லாம் நேத்து வரைக்கும்... இன்னைக்கு கதையை வேறெம்ல" என்று சுப்பு சொல்ல பதட்டமாய் அவனை ஏறிட்டவள், "யாரை மாமா பைக்ல... ஏத்திட்டுப் போனாக?" என்று நடுக்கத்தோடு கேட்டாள்.

"அதான் அவன் பெரிய அக்கா மவளாமே... ரொம்ப வருசம் கழிச்சி வந்திருக்காகளாமே... அவுகளுக்கு ஸ்பெஷலா மெஸ்ல அல்வாலாம் வரவைச்சுக் கொடுத்ததில்லாம... இரண்டு பேரும் பைக்ல உரசிக்கிட்டே போன கண்கொள்ளா காட்சியை பார்த்தேன் இல்ல நானு.

கமல்ஹாசன் படத்தில ஒரு பாட்டு கூட வருமே... பார்த்த முதல் நாளே... உன்னைப் பார்த்த முதல் நாளே...அப்படி இல்ல இருந்துச்சு அவுக இரண்டு பேர் சோடி பொருத்தமும்" என்று அவன் சொல்லி முடிக்கும் போது ஐஸ்வர்யாவின் மனதில் பெரும் சூறாவளியே வீசியது.

இன்னும் சில நொடிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக என அவள் முகம் அறிகுறிகள் காண்பிக்க அதற்கு மேல் அங்கே நின்றால் தன்னையும் அந்தப் புயல் விட்டுவைக்காது என்று சுதாரித்தவன்,

"நான் கிளம்பிடுதேன் ஐஸு... நீ அப்படியே கொடி  நடையா வீட்டுக்குப் போய் சேரு" என்று  கிண்டலாய் உரைத்துவிட்டு அவன் தன் பைக்கில் விரைந்துவிட்டான்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு.

அத்தகைய நட்புக்கு உதாரணம் நம்ம சுப்புவோட நட்பு. அவன் தன் நட்புக்கு ஆற்ற வேண்டிய கடமையை செவ்வனே செய்துவிட்டுச் செல்ல, குரு அப்போதைக்கு அதை பற்றி ஏதுமறியாமல் ஷிவானி வருத்தத்தில் இருக்காளோ என்ற எண்ணத்தோடு  அவளை சமாதானப்படுத்த அவளைத் தேடிக் கொண்டு சென்றான்.

அவளோ  கொல்லைப்புறத்தில் இருந்து கொண்டு தன் தந்தையோடு வீடியோ கால் பேசிக் கொண்டிருந்தாள்.

"ஐம் ஆல்ரைட் டேட்" என்றவள் சொல்ல,

"இல்ல... ஏதோ ப்ராப்ளம்... உன் கண்ணெல்லாம் சிவந்திருக்கு" என்றார்.

"அய்யோ டேட்... ஆச்சி வைச்ச குழம்பு செம...ஹாட்... செம ஸ்பைஸ்ஸி.... அதான் கண்கலங்கிருச்சு...  பட் டேட்... குழம்போட டேஸ்ட் இருக்கு இல்ல... அவுட் ஆஃப் தி வார்ல்ட்... நீங்கதான் மிஸ் பண்ணிட்டீங்க" என்றவள் சொல்ல குரு பின்னோடு நின்று சிரித்துக் கொண்டான்.

அதே நேரம் சபரி கோபமாக, "உனக்குப் பிடிச்சிருக்கா?  ஐம் ஹேப்பி... ஆனா அந்த மானங்கெட்ட சோறை நான் சாப்பிட மாட்டேன்... சொல்லிட்டேன்" என்றதும், "என்ன டேட் பேசுறீங்க?" என்றவள் கேட்க, அப்போது குருவிற்கு கோபம் கொப்பளித்தது.

"அதை விடு வாணிம்மா... நீ கண்டிப்பா அங்க ஒன் வீக் இருக்கணுமா?" என்றவர் மகளிடம் அழுத்தமாய் வினவ,

"எத்தனை தடவை இந்தக் கேள்வியை நீங்க கேட்பீங்க... நானும் பதில் சொல்லுவேன்" என்று சலித்துக் கொண்டாள்.

"ஐ மிஸ் யூ மை டால்" என்றவர் சொல்ல, "புரியுது டேட்... பட் ஜஸ்ட் ஒன் வீக்தானே" என்றாள்.

"நீ இந்த டேடை மிஸ் பண்ணவே இல்லையா?" என்று அவர் வருத்தத்தோடு கேட்க, "மிஸ் பண்ணாமலா... ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்" என்று முடித்தாள். அவர் மனம் ஆறவேயில்லை. மகளை விட்டுவந்ததில் மனம் நிம்மதியற்றுக் கிடந்தது. அவள் மனசு மாறி புறப்படுவதாக சொல்ல மாட்டாளா என்று எப்படி எப்படியோ முயற்ச்சித்தவருக்கு ஏமாற்றமே மிச்சம்.

"சரி ஒகே... டேக் கேர்... நான் போஃனை வைச்சிடுறேன்" என்று அவர் பேச்சை முடிக்க, "மீ கிட்ட பேசலயா?" என்று கேட்டாள் ஷிவானி.

"உங்க மீ க்கு இப்போ என்கிட்ட பேசறதுக்கெல்லாம் இன்ட்ரஸ்ட் இருக்குமா என்ன?" என்றவர் எகத்தாளமாய் கேட்க, "ஏன் டேட் அப்படிச் சொல்றீங்க... மீ யும்  உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவாங்க" என்றாள்.

"அவளா?  எப்படி மிஸ் பண்ணுவா பாரு" என்று அவர் சற்றுக் கோபமாய் சொல்ல, "டேட்" என்றவள் குரல்துவண்டது.

"சரி சரி... டென்ஷனாகதே... நான் அப்புறமா உங்க மீ கிட்ட பேசறேன்... நீ பார்த்து பத்திரமா இருந்துக்கோ... சரியா?"

"ஒகே டேட் பை" என்றவள் அழைப்பைத் துண்டிக்க போக, "வாணிம்மா கட் பண்ணிடாதே... ஒரு நிமிஷம்" என்று அவர் சொல்ல,

"என்ன டேட்?"

"அந்த சிவா... உன்கிட்ட ஏதாச்சும் வம்பு தும்பு பண்ணான்னா?" என்றவர் பதட்டத்தோடு வினவ,

"ஹீ இஸ் சச் அ நைஸ் பர்ஸன் டேட்... வெரி கைன்ட் ஹர்டட்... பேஃம்லி மேல அவ்வளவு அட்டேச்மென்ட்... ஆனா நீங்க அவரைப் பத்தி ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியல?" என்றவள் சொல்லிக் கொண்டே போக,

அதற்கு மேல் அவன் புகழுரைகளை கேட்க விரும்பாமல், "சரி சரி போஃனை வை... நான் அப்புறமா கால் பண்றேன்" என்றவர் அழைப்பை  அவசரமாய் துண்டித்தார்.

ஷிவானி தன் தந்தையுடன் பேசி முடித்தத் திருப்தியோடு எழுந்து செல்லப் பார்க்க பின்னோடு குரு நின்றிருப்பதைப் பார்த்து,

"இவ்வளவு நேரம் நீங்க இங்கதான் நின்னிட்டிருந்தீகளா?" என்று வியப்பாய் கேட்டாள்.

"ஹ்ம்ம்... ஐஸ் பேசுனதைக் கேட்டு நீங்க ரொம்ப வருத்தத்தில இருப்பீகளோன்னு"

"வருத்தம்தான்... ஆனா அவ சின்ன பொண்ணுதானே... இட்ஸ் ஒகே" என்று ஷிவானி இயல்பாக தலையசைக்க, அவன் உண்மையிலேயே அவள் பெருந்தன்மை கண்டு வியக்கவே செய்தான். குழந்தைத்தனமாக பேசினாலும் அவளிடம் ஒருவித முதிர்ச்சியும் தென்பட்டது.

"சரி நான் உள்ளர போறேன்... நீங்களும் ரொம்ப நேரம் இந்த அனலில் உட்கார்ந்திட்டிருக்காதீக... உள்ளர வாங்க" என்று அவன் சொல்லிவிட்டுச் செல்ல, "மாம்ஸ் ஒரு நிமிஷம்" என்றழைத்து அவன் முன்னே வந்து நின்றாள்.

அவன் அவளை ஆழ்ந்து பார்க்க, "டேட் உங்களைப் பத்தி பேசினதை நீங்க பெரிசா எடுத்துக்காதீங்க" என்க,

 "உங்க அப்பாரு பேசினதை விட... நீங்க என்னை அவர்கிட்ட விட்டுக் கொடுக்காம பேசுனீங்களே... அதுல என் மனசு ரொம்ப நிறைஞ்சிடுச்சு" என்று சொல்லும் போதே அவன் முகம் அத்தனைப் பிரகாசமாய் மின்னியது.

இப்படி சொல்லிவிட்டு அவன் அவளை ஊடுருவிப் பார்க்க அவளோ தடுமாற்றத்தோடு, "நான் என் மனசில பட்டதை சொன்னேன்... அதுக்கு வேறெந்த உள்ளர்த்தமும் இல்ல" என்றாள்.

"இதுதான் எங்க அப்பன் குதுருக்குள்ள இல்லைங்குறதா?!" என்றவன் கேட்டு சிரிக்க, "அப்படின்னா?" அவள் புரியாமல் கேள்வி எழுப்பினாள்.

"அப்படின்னா அப்படிதான்" என்று அவன் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

மனதினோரம் அவன் மீது அவள் ஈர்க்கப்பட்டிருக்கிறாள் என்பதை அவள் இன்னும் உணரவேயில்லை. ஆனால் அதை அவன் ஒருவாறு உணர்ந்து கொண்டுவிட்டான்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote
  • Super ma 
Quote

Super ma 

You cannot copy content