You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam kondenadi - 14

Quote

14

மிரட்சி

இரவு நடுநிசி வேளை!

எங்கும் ஒரே கும்மிருட்டாய்  இருக்க  ஷிவானி தட்டுத்தடுமாறி அவளின் கைப்பேசி வெளிச்சத்தில் முன்னேறி நடந்துவந்து கொண்டிருந்தாள்.

ரொம்பவும் நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்தவள் சட்டென்று அவளை அறியாமல் எதையோ மிதித்த உணர்வில் அதிர்ச்சியாகி தன் பாதத்தை எடுக்க, "அம்ம்ம்ம்ம்மா" என்று ஓரு அலறல்.

குரு அடித்துப் பிடித்துத் தன் போர்வையை விலக்கிக் கொண்டு எழுந்தான். அவள் உடனடியாய் தன் கைப்பேசி ஒளியை அவன் முகத்தில் அடிக்க அவன் கண்கள் கூசிய உணர்வில்,

"லைட்டை திருப்புவே கண்ணு கூசுது" என்க, அவள் உடனே தன் பேசியை இறக்கிப் பிடித்துக்கொண்டாள்.

அவன் வலியால் தன் கரத்தை உதறியபடி, "இப்ப எதுக்குல என் கையை மிதிச்ச?" என்று கேள்வி எழுப்ப,

"நீங்க ஏன் இங்க படுத்திருக்கீங்க? ரூம்ல படுத்துக்காம" என்று அவள் பதில் கேள்வி கேட்டாள்.

"நீயும் அக்காவும் என் ரூம்ல படுத்திருக்கீக இல்ல... அதான் நான் இங்கன படுத்திருக்கேன்" என்க

"ஓ" என்று அவள் யோசனையாய் இழுத்தாள்.

"அது போகட்டும்... இப்ப எதுக்கல என் கையை மிதிச்ச? அதுக்கு பதில் சொல்லு" என்றவன் சற்று கோபமாய் கேட்க,

"சாரி மாம்ஸ்... தெரியாம... வலிக்குதா?" தவிப்போடு அவன் அருகில் அமர்ந்த வாக்கில் கேட்டாள்.

"வலிக்காதா பின்ன?" என்று கோபமாய் கேட்டு அவளை முறைக்க,

"ஐம் எக்ஸ்ஸ்ஸ்ட்ரீம்லி சாரி ... இருட்டுல தெரியாம" என்றபடி கெஞ்சலாய் முகத்தை வைத்துக் கொண்டவளைப் பார்க்க கொஞ்சம் ரசனையாய் இருந்தது அவனுக்கு.

"சரி போகட்டும்... இப்போ எதுக்கு  இந்த  இருட்டுல  நடந்து வந்தீக... எங்கனயாவது தட்டுத்தடுமாறி விழுந்து வைச்சீகன்னா" என்றவன் கோபமும் அக்கறையும் ஒரு சேர கலந்ததபடி கேட்டான்.

"அது" என்று தயங்கியவள், "வாஷ் ரூம் போகணும்" என்றாள். 

அவன் தன் கண்களை தேய்த்துவிட்டபடி, "லைட் போட்டுட்டு போக வேண்டியதுதானே?!" என்று கேட்க,

"அப்படியும் கண்ணு தெரியாம வந்து என் கையை மிதிச்சீகளாக்கும்" என்று சொல்லி அவன் புன்னகைக்க  விருட்டென எழுந்து நின்றவள்,

"ரொம்பப்  பேசாதீங்க... நான் போய்க்கிறேன்...  நீங்க படுங்க" என்றாள்.

"கோபத்தை நுனி மூக்குலயே வைச்சிட்டுதான் சுத்துறீகளோ?!" என்றவன் தன் போர்வையை விலக்கி எழுந்து நின்று கொண்டு,

"இரு... நானும்  வர்றேன... திரும்பி எங்கனயாவது போய்  முட்டிக்க  போறீக" என்றான்.

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... நான் போயிக்கிறேன்" என்றவள் முறுக்கிக் கொண்டு நடக்க,

"பகலயே பசுமாடு தெரியல... இதுல இருட்டுல எருமமாடு தெரியபோகுதாக்கும்" என்றவன் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அவள் பின்னோடு வர,

"இப்ப என்ன சொன்னிங்க?" என்று கேட்டு திரும்பி நின்றாள் ஷிவானி.

"ஆன்...வெளியே நிறைய எருமமாடுகிடக்கு... நீங்க  தனியா போய் அது முட்டிடுச்சுன்னா... அதான் நான் துணைக்கு வந்து  புறவாசக்  கதவை திறந்துவிடறேன்னு சொல்லுதேன்" என்று அவளுக்கு வழிகாட்டும் விதமாய் அவன் முன்னே செல்ல,

"மாடு முட்டிடுமா?" என்றவள் பயந்தபடிக் கேட்டாள்.

அவள் முகத்தை திரும்பிப் பார்த்தவன், "அதான் நான்  இருக்கேன்யில...தைரியமா வாங்க...ஆனா தலையில இடிச்சுக்காம 

பார்த்து வாங்க" என்று சொல்லிக் கொண்டே முன்னேறி சென்றான்.

அவன் கொல்லைப் புறவாசலை திறந்துவிட. அவளுக்கு  அந்த இருளடர்ந்த வெளிப்புறத்தைப் பார்க்கவே  பீதியாயிருந்தது. அந்த  வீட்டின் பின்புறத்தில்தான் குளியலறையும் கழிவறையும் தனித்தனியே இருந்தது.

அவன் வெளிப்புற விளக்கைப் போட்டுவிட ஷிவானி வாசலைத் தாண்டி அச்சத்தோடே காலெடுத்து வைத்தாள்.

அந்த நொடி அவள் முன்னே அவசரமாய் கடந்து சென்ற ஜீவராசியை பார்த்து மிரண்டவள் மீண்டும் பின்வாங்கி அவனிடத்தில் சென்று நெருக்கமாய்  அவன் பனியனை பிடித்துக் கொள்ள அவன் உரக்க சிரித்து,

"அது பூனைல... ஏதோ புலியைப் பார்த்த மாதிரி மிரள்றீக" என்றான்.

"திடீர்னு க்ராஸ் பண்ணி போச்சா... அதான் பயந்துட்டேன்"

"நீங்க தீடீர்னு போகவும் அவுகளும் பயந்துட்டாக... அதான் இப்படி தெறிச்சி ஓடுதாக" என்று எள்ளலாய் அவளைப் பார்த்து மீண்டும் சிரித்தவனுக்கு அப்போதுதான் அவள் தன்னை நெருக்கி நின்று கொண்டிருப்பதைக் கவனித்தான்.

அவன் மனமெல்லாம் சஞ்சலம் கொள்ள அவளோ தன் படபடப்பு அடங்காமல் அவனை நிமிர்ந்துப் பார்த்து, "ஏதோ சத்தம் கேட்கிற மாதிரியே இருக்கு லா" என்றாள்.

"நடுசாமத்தில இப்படியெல்லாம் பூச்சி சத்தம் கேட்கும்... நீங்க பயப்படாமப் போங்க... நான் இங்கனயே நிக்குதேன்" என்று சொல்ல அவள் காதைக் கூர்மையாய் தீட்டிக் கொண்டு கேட்டபடி,

"அது பூச்சி சத்தமில்ல... கொலுசு சத்தம்" என்றவன் காதோடு ரகசியமாய் சொல்ல அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவளைக் கேலியாய் பார்த்தவன், "கொலுசு சத்தமா? மோகினி பிசாசா இருக்குமோ?!" என்றவன் பயப்படுவது போல் வினவ,

"அய்யய்யோ அப்போ நாம உள்ளே போயிடலாம்" என்றாள் பதட்டத்தோடு!

அவள் தலையில் நங்கென்று கொட்டியவன், "போவே... அதெல்லாம் ஒண்ணும் இல்ல" என்க, அவள் தலையில் தேய்த்து கொண்டு, "உம்ஹும் மாட்டேன்" என்று சொல்ல அவள் செய்கையை எண்ணி சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அதே நேரம் அவள் நெருக்கத்தை அவனால் விரும்பாமலும் இருக்க முடியவில்லை.

அந்த நொடி அவளை அணைத்துக் கொள்ளத் துடித்த தன் எண்ணத்தை பிரயத்தனப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவன்,

அவள் காதாரோம் இறங்கி, "இம்புட்டு நெருக்கமா நின்னா மனசு கிடந்து அலைபாயதுல... கொஞ்சம் தள்ளி நிக்கிறீகளா?!" என்று சொல்லிவிட அவள் சட்டென்று தன்னிலை உணர்ந்து அவனைப் பிரிந்து நின்றாள். 

அவன் அவளை நோக்கி, "இங்கே பயப்படறதுக்கெல்லாம் ஒண்ணும் இல்ல... போயிட்டு வாங்க...  நான் இங்கனயே நிக்குதேன்" என்க,

அவளும் லேசாய் நம்பிக்கை பெற்று அவனை சிலமுறை திரும்பிப் பார்த்தபடியே சென்றாள். அவள் திரும்பி வரும் வரை பொறுமையாய் காத்திருந்தவன் அவள் உள்ளே  வந்த  மாத்திரத்தில்   புற  வாசல்கதவை  மூடித் தாளிட்டான்.

அவள் மௌனமாய் முன்னே நடந்து செல்ல, "ஷிவானிக்கு இருட்டுன்னா ரொம்ப பயமா?!" என்றவன் பின்னோடு வந்தபடியே கேட்டான்.

"அதெல்லாம் இல்லையே" என்று அவள் தோள்களைக் குலுக்க அவன் சிரித்த மேனிக்கு, "நம்பிட்டேன்" என்றான்.

"என்ன கிண்டலா? இப்படி அட்வஞ்சர்ஸா வீடு கட்டி வைச்சா யாருக்குதான் பயம் வராது... அதுவும் அலிபாபா குகை மாதிரி உள்ள உள்ள போயிட்டே இருக்கு... போதாக் குறைக்கு ஆடு மாடு கோழின்னு ஒரு மினி ஜூவே பின்னாடி இருக்கு... இதுல அந்த டேமிட் பூனை வேற... அதை  விட மோசம்.. வாஷ் ரூம் வேற பெட் ரூம்ல இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கு... இட்ஸ் இரிடேடிங்... டேட் சொன்னது கரெக்ட்தான்.. என்னால  இங்க  ஒன்வீக்கெல்லாம்  ஸ்டே பண்ண முடியாது...  நான் நாளைக்கே புறப்படறேன்" என்றவள் படபடவென பொறிந்துத் தள்ள அவள் பேசுவதை நிதானமாய் கேட்டவன்,

அலட்சியமான  பார்வையோடு, "சரி  கிளம்புங்க. இங்கன  யாரும் உங்களைத் தடுத்து நிறுத்த போறதில்ல" என்றான்.

அவன் கோபம் புரிந்தவளாய், "கோச்சிக்காதீங்க மாம்ஸ்... என்னால இங்க  ஸ்டே  பண்ண  முடியாது...  ரூம்ல  கூட  காத்தே  வரல... எனக்கு கம்பஃர்டபிளா (comfortable) இல்ல" என்றதும் அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

"அப்போ... உங்க சந்தோஷமும் உங்க கமப்ஃர்டபிலிட்டியும்தான்  உங்களுக்கு முக்கியம்... வேற யாரைப் பத்தியும் உங்களுக்கு கவலை இல்ல... அப்படிதானே?!" என்று கேட்டு அவளை முறைத்தான்.

"ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க... இப்ப நான் கிளம்பிறதுனால என்னவாயிடப் போகுது?" என்றவள்  வினவ  அவளை ஆழமாய் பார்த்தவன்,

"அதையெல்லாம் சொல்லி  புரிய வைக்க முடியாது... தானே புரியணும்... ஆனால் அதெல்லாம் உங்களுக்குப் புரியாது... ஏன்னா உங்களுக்கு அப்படியே உங்க அப்பாரு புத்தி" என்றான் குரு அழுத்தமாக!

அந்த வார்த்தையை கேட்டு அவள் உக்கிரமானாள். "என்ன சொன்னிங்க?" என்றவள் தன் பார்வையை  அகல  விரித்துக்  கோபமாய் பார்க்க, "தமிழ்லதானே சொன்னேன்... விளங்கிலயோ?!" என்று கேட்டான்.

"வேண்டாம் மாம்ஸ்... திரும்ப திரும்ப நீங்க டேட் பத்தி குறைச்சுப் பேசுறது எனக்குப் பிடிக்கல" என்றவள் எச்சரித்து சொல்ல,

"உண்மையைதானே சொல்லுதேன்...  இல்லாதது ஒண்ணும் சொல்லிடலயே" என்றவன் சொல்லிவிட்டு அலட்சியமாய் முகத்தை திருப்பிக் கொண்டான்.

"வேண்டாம்... இதோட இந்த கான்வஸேஷனை நிறுத்திக்கலாம்" என்றவள் கண்டிப்பாய் சொல்ல அவளை திரும்பி நோக்கியவன்,

"நிறுத்தலன்னா என்னல பண்ணுவ" என்றவன் கேட்டபடி முன்னேறி வர அவள் பின்னோடு சென்று தூணில் முட்டிக் கொண்டாள்.

சற்று நேரம் முன்பு அத்தனை அக்கறையாய் பேசியவனா இவன் என்றவள் சந்தேகமாய்  பார்க்க, அவன் அவளை  அந்தத்  தூணைவிட்டு நகராமல் இருபுறமும் அணைப்போட்டான்.

மிரட்சியாய் பார்த்தவளிடம், "உங்க  அப்பாரு  செஞ்ச எல்லாத்தையும் நான் அவருக்கு திரும்ப செய்வேன்" என்று உரைக்க, "என்ன செய்யப் போறீங்க?" என்று முகமெல்லாம் வியர்க்கக் கேட்டாள்.

"அதான் நான் ஏற்கனவே சொன்னேனே... உன்னை கட்டிக்கப் போறேன்னு" அவள் அதிர்ச்சியோடு அவனை ஏறிட்டுப் பார்க்க, அவன் பார்வை அவளை பயமுறுத்தியது.

அவள் அச்சத்தோடு, "நான்தான் அதெல்லாம் நடக்காதுன்னு அப்பவே  சொல்லிட்டேன்ல" என்றவள் வார்த்தைகள்  திணற, "நடத்திக் காட்டுவோம்... நீ பாரு" என்றவன் உறுதியாய் சொல்லிவிட்டு தன் கரத்தைப் பின்வாங்கிக் கொண்டான்.

அவள் தப்பித்தால் போதுமென அங்கிருந்து நகர, "நாளைக்கு மட்டும் நீ புறப்படுறேன்னு பெட்டியைத் தூக்கி பாரேன்... அப்புறம் பார்ப்ப நீ இந்த குரு யாருன்னு" என்றவன் எச்சரிக்கை விடுக்க,

"நான் போவேன்... நீங்க என்ன பண்றீங்கன்னு நானும் பார்க்கிறேன்" என்றவள் அவனை திரும்பி பாராமலேசொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று கதவை மூடித் தாளிட்டாள்.

அந்த  சத்தம் கேட்டு விழித்த வேதா, "எங்கே வாணிம்மா  போற?" என்று கேட்க, "எங்கேயும் போல... நீ ஸைலன்ட்டா படு மீ" என்று சொல்லியபடி மிரட்சியோடு படுக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள்.

அவள் மனமெல்லாம் பீதிகலந்த உணர்வில் இருக்க குரு சொன்னதை போல செய்துவிடுவானோ என்று அச்சம் மனதை தொற்றிக் கொண்டது.

தூக்கம் வராமல் அவள் தவித்திருக்க, விடியற் காலையில்தான் உறக்கம் அவள் விழிகளை தழுவிக் கொண்டது.

இரவு நடந்த சம்பவமெல்லாம் கனவுமயமாய் வர பூனை மாடு என்று எல்லா ஜீவராசிகளும் அவளை தன் பங்குக்கு  பயமுறித்தன. அதோடு குருவோடு திருமணம் நடப்பது போல ஒரு காட்சி தென்பட அலறித் துடித்தபடி எழுந்தாள் ஷிவானி.

அப்போது அறையில் இருந்த வேதா, "என்ன வாணிம்மா?" என்று பதறிக் கொண்டு அவள் தலையை தடவ,

"ஏதோ கனவு கண்டிருப்பாக போல" என்று ஒரு புதுமுகப் பெண் சொல்ல ஷிவானி அவரை யாரென்பது போல் உற்று கவனிக்கலானாள்.

புதுமுகம்தான் ஆனால் அப்படியொன்றும்  பழக்கப்படாத  முகமல்ல. அவள் அம்மாவின் சாயல் அப்படியே.

வேதா அவள் எண்ணம் புரிந்தவளாய், "உன் இரண்டாவது சித்தி கனகவள்ளி"  என்றுரைக்க, "ஓ" என்றபடி தன் போர்வையை விலக்கியபடி தூக்ககலக்கத்திலிருந்து விடுப்பட்டாள்.

"அப்படியே உன்னை மாதிரியே இருக்கா க்கா" என்று கனகவள்ளி ஷிவானி கன்னத்தைக் கிள்ள,

"பார்க்கத்தான் என்னை மாதிரி... குணத்தில எல்லாம் அப்படியே அப்பா மாதிரி" என்று வேதா சொல்ல

இரவு குரு சொன்னவை அவள் காதில் மீண்டும் ஒலித்தது.

அவள் முகம் கோபமாய் மாற வேதா அவளிடம், "போய் ப்ரஷாயிட்டு வா" என்றாள்.

அவள் விடுவிடுவென எழுந்து சென்றுவிட,"என்னக்கா ஷிவானி  என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாம போறா?" என்று வருத்தம் கொள்ள,

"அதெல்லாம் பேசுவா கனகம்... ஏதோ  தூக்க  கலக்கத்தில  இருக்கா... ப்ரஷாயிட்டு வருவா?!" என்றார்.

ஷிவானி  அடங்காத  கோபத்தோடு அறையை விட்டு வெளியே வர அவள் உயரத்தில் பாதியும் முக்கால்வாசியும் இருந்த இரு பெண்கள் அவளை வழிமறித்து நின்றனர்.

உள்ளே பார்த்த தன் சித்தியின் மகள்களோ என்று அடையாளம் கண்டுகொண்டவள்,அவர்களிடம் பேசலாம் என்று யத்தனிக்கும் போது,

"நீங்கதான் ஷிவானியோ?" என்று அந்த இரு பெண்களும் ஒரு சேரக் கேட்டனர். ஒருத்திக்குப் பதினாறு மற்றவளுக்கு பதின்மூன்று என்ற வயதிருக்கும்.

ஷிவானி ஆர்வமாய் தலையசைத்து, "எஸ்... உங்க பேரு?" என்று கேட்க,

அந்த  இரு பெண்களில் பெரியவள், "என் பேர் விஷாலினி... அவ பேர் ரோஹினி" என்க, "நைஸ் டூ மீட் யூ" என்றவள் கரத்தை நீட்டினாள்.

அவர்கள் முகத்தை கோபமாய் மாற்றி கொண்டு, "நீங்க எங்க அக்கா ராகினிக்கு போட்டியா வந்திருக்கீகளாமே? அப்படியா?" பளிச்சென்று கேட்டுவிட,

"போட்டியாவா? உங்க அக்கா ராகினிக்கா... புரியலயே" என்றாள் ஷிவானி.

"ப்ஃலீம்(film)  இன்ஸ்டிட்யூட்ல  படிக்கிறீங்களா?  இப்படி நடிக்கிறீங்க" என்று விஷாலினி கிண்டலாய் சிரித்துக் கொண்டே கேட்க, ரோஹினியும் தன் தமக்கையோடு சேர்ந்து சிரித்தாள்.

"சாரி... எனக்கு உண்மையிலயே புரியல" என்று சொல்லியவள் குழப்பமாய் பார்க்க,

"குரு மாமா எங்க ராகினி அக்காவுக்குதான்.. நீங்க  அந்த மாதிரி ஆசையெல்லாம் மனசில வளர்த்துக்காதீங்க" என்றவர்கள் எச்சரிக்கையாய் சொல்லிவிட்டு அந்த நொடியே அங்கிருந்து அகன்றனர்.

இந்த வார்த்தைகளை கேட்டு ஷிவானிக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.

குரு இரவு பேசியதையும் இப்போது அவர்கள் பேசியதையும் எண்ணிப் பார்த்தவளுக்கு, எந்த இடத்தில் தான் இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என்றே புரியவில்லை.

யோசித்தபடி முகத்தை அலம்பிக் கொள்ளலாம் என அவள் பின்புற வாசலை நோக்கி நடந்து சென்றாள். அவள் வாசல்புற கதவைக்  கடந்து வந்த  மாத்திரத்தில் அவள்  பார்த்த  காட்சி  அவளை அப்படியே உறைந்து போகச் செய்திருந்தது.

கோபமா அதிர்ச்சியா இவற்றில் எந்த உணர்வு அவளை ஆட்கொண்டது என்பதை அவள் புரிந்து கொள்ள  முடியாத நிலையில் அப்படியே  நின்ற இடத்திலயே அசைவின்றி நின்று விட்டாள்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

Quote

Super ma 

You cannot copy content