You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam kondenadi - 15

Quote

15

அவமானம்

அந்த காட்சியை பார்த்த ஷிவானிக்கு நெருப்பில்லாமல் உள்ளூரப் புகைந்து கொண்டிருந்தது.

கனலேறிய பார்வையோடு அவள் பார்த்துக் கொண்டிருந்த திசையில் குரு நின்றிருக்க, கால் தரையில் படாமல் அவன் கரத்திலிருந்தாள் ஒரு பெண்.

அவள் யாரென்ற அறிமுகம் தேவையா என்ன? ஷிவானியின் சிறுமூளை அவளை ராகினி என்று கணித்துக் கொண்டது.

சற்று முன்பு குரு மாட்டுத் தொழுவத்தில் மாடுகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருக்க, அவனைத் தேடி கொண்டு வந்த ராகினி அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு முதுகில் சாய்ந்தாள்.

நிலைத்தடுமாறி விழப் போனவன் சற்று சுதாரித்துக் கொண்டு அவளைத் தள்ளி விட்டு, "மலைமாடு மாதிரி வளர்ந்திருக்கியே... கொஞ்சமாச்சும் அறிவு வேணாம்" என்று கடிந்து கொள்ள,

"இருந்தா நீங்கதான் கொஞ்சம் கொடுக்கிறது" என்று எகத்தாளமாய் சொல்லிச் சிரித்தாள் ராகினி.

"இந்த வாய் மட்டும் இல்லன்னா உன்னைய எல்லாம் நாய் கூட மதிக்காதுவே" என்றவன் மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தத் திரும்பினான்.

"என்ன மாமா?... எவ்வளவு தூரத்தில இருந்து உன்னைப் பார்க்க வந்திருக்கேன்... இப்படி முகத்தைத் திருப்பிக்கிறியே"

"என்னடி பெரிய தூரம்... இதோ இருக்கு சென்னை... நைட்டு ட்ரெயினை பிடிச்சி காலையில வந்து இறங்கிட்டீங்க"

"ஆமாஆமா சென்னை பக்கம்தான்...  மலேசியாவோட கம்பேர் பண்ணும்போது சென்னை பக்கம்தான்" அவள் குத்தலான பார்வையோடு சொல்ல, அவளை ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு பதில்பேசாமல் மீண்டும் அவன் வேலையைத் தொடர்ந்தான்.

"மலேசியா பார்ட்டிக்கிட்ட ரொம்ப குழையறீங்களாமே?!"

அவள் இப்படி சொன்னதுதான் தாமதம். விருட்டென நிமிர்ந்தவன், "பார்ட்டிக் கீர்ட்டின்ன பல்லு பேந்திரும்... அவ உனக்கு அக்கா ல" என்றவன் சீற்றத்தோடு உரைக்க ராகினியும் பதிலுக்கு முறைத்தாள்.

"அக்காவா? இத்தனை நாளா எங்க போயிருந்தாங்க இந்த அக்கா சொக்கா எல்லாம்"

"என்னல... வார்த்தை தடிக்குது ? பார்த்து பேசு"

"அந்த மூஞ்சியெல்லாம் எனக்குப் பார்க்க வேண்டாம்... நான் உங்களைதான் பார்க்க வந்தேன்"

"ராகினி... அவுக உனக்கு பெரியம்மா பொண்ணு... இப்படியெல்லாம் எடக்குமுடக்கா பேசிக்கிட்டு இல்லாம அவுககிட்ட சகஜமா பேசிப் பழகுங்க... ஏதாவது ஏடாகூடாமா சண்டை கிண்டை போட்டிங்கன்னு தெரிஞ்சுது" என்றவன் சொல்லி அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்க்க அவளோ அலட்சியமான பார்வையோடு,

"என் வழில குறுக்கிடாத வரைக்கும் நான் சண்டைலாம் போட மாட்டேன் மாமா... ஆனா குறுக்கிட்டான்னு வைச்சுக்கோங்க" அவள் மேலே சொல்லாமல் நிறுத்தி குரூரமாய்  பார்த்தாள்.

"என்னடி ரவுடி கணக்கா பேசிட்டிருக்க... உம்ஹும்... உன்னைய சொல்லி குத்தமில்லடி... உன்னைய இப்படி வளர்த்து வைச்சிருக்காக பாரு... எங்க அக்கா ...அவகளை சொல்லணும்"

"அதெல்லாம் பேசாதீங்க... எனக்கு கரெக்டா சொல்லுங்க... உங்களுக்கும் அந்த மலேசியாகாரிக்கும் இடையில என்ன போயிட்டிருக்கு?!"

"என்னவோ போயிட்டிருக்கு... உனக்கென்னடி... போய் வேற சோலியிருந்தா பாருவே"

"அப்போ நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?!"

"என்னடி கேள்விப்பட்ட?"

"நீங்க அந்த மலேசியாகாரிக்கு அல்வா வாங்கித் தந்தீகளாம்... பைக்ல வேற கூட்டிட்டு ஊரைச் சுத்தினாங்களாம்... எல்லாத்துக்கும் மேல... அவங்களை கட்டிக்க போறன்னு சபதமெல்லாம் போட்டீங்களாம்"

அவன் ஆச்சர்யப் பார்வையோடு, "யாருல உனக்கு இதெல்லாம் சொன்னது?" என்றவன் குழப்பமுற,

"எல்லாம் அந்த குள்ள கத்திரிக்காய் ஐஸ்தான்" என்றாள் ராகினி. அவன் வியப்பான பார்வையோடு,”ஐஸ்ஸா” என்று ஆச்சர்யமுற்றவன்

"நீங்க இரண்டு பேரும்... தென்துருவம் வடதுருவமாச்சே... எப்படிறி பேசிக்கிட்டீங்க?" என்று வினவினான்.

"அய்... நாங்க பாட்டுக்கு இங்க சண்டை போட்டிட்டிருந்தா... நீங்க பாட்டுக்கு எவளயாச்சும் அந்தபக்கம் கரெக்ட் பண்ணிட்டு போயிட்டீங்கன்னா".

குரு தலையிலடித்து கொண்டு, "எனக்குன்னு எங்கிருந்து வந்து வாச்சீங்க... நல்லா ஏர்ல பூட்டின எருமையாட்டும்" என்று உரைக்க,

"எருமை கிருமைன்னா எனக்கு செம கோபம் வரும்" என்றாள்.

"அதேதான் நானும் சொல்லுதேன்... என்னை டென்ஷன் படுத்தாம ஓடிப் போயிருக"

ராகினி அவன் அருகில் வந்து, "போயிடுறேன்... ஆனா அந்த மலேசியாகாரிக்கும் உங்களுக்கும் ஒண்ணுமில்லன்னு சொல்லுங்க... பிரச்சனை இப்பவே ஸால்வட்... இல்லன்னா"

"இல்லன்னா என்னடி பண்ணுவ?"

"அந்த மலேசியாகாரியை தெறிக்க விடுவோம்... இந்த தடவை ஐஸும் எங்க கூட்டணிதான்... பார்த்துக்கோங்க சொல்லிட்டேன்"

அவன் தன் புருவத்தை ஏற்றி, "அம்புட்டு தைரியமால உனக்கு... யார் யாரை தெறிக்க விடுறான்னு இப்ப பாரு" என்று தன் கை முஷ்டியை மடக்கியவன்  அவளை அலேக்காய் தன் கரத்தில் தூக்கி கொள்ள,

"என்ன மாமா?" என்று அதிர்ந்தாள் ராகினி.

"தவிடும் புண்ணாக்கும் கலந்து வைச்சிருக்கேன்...  இதுல உன்னைய போட்டு முக்கி எடுக்கப் போறேன்" என்க, அவள் பதறிக் கொண்டு

"வேணா மாமா... வேணா மாமா... ப்ளீஸ் மாமா... அதை பார்க்கவே நல்லா இல்ல... உவேக்" என்றாள்.

"பார்க்கதான் செல்லம் நல்லா இருக்காது... டேஸ்ட்... ஹ்ம்ம்... நம்ம துளசியை கேட்டு பாருக" என்றதும், "யாரு துளசி?" என்று ராகினி புரியாமல் கேட்க,

"என் செல்ல குட்டில... அதோ பாரு" என்றவன் கண்காண்பிக்க, "ம்ம்ம்மாமா" என்று குரல் கொடுத்தாள் துளசி.

"என்னை வைச்சு காமெடி பண்றீங்களா?"

"பின்ன... நீங்க ஹீரோயின் ரோல் பண்ணலான்னு பார்த்தீகளா?"

"நான் தாத்தாவை கூப்பிடிறேன் " என்றவள் அவனை மிரட்டிவிட்டு சத்தமாய், "தாத்தா" என்று கத்த,

"கத்தின சாணில முக்கிடுவேனாக்கும்" என்றவன் சொன்ன நொடி தூக்கி வாரிப் போட்டது ராகினிக்கு!

"இல்ல இல்ல கத்த மாட்டேன்... விட்டிரு மாமா... நீ என்ன சொன்னாலும் கேட்டுக்கிறேன்...ஹேர்ரெல்லாம் பாழாயிடும்... அப்புறம் ஒரே ஸ்மெலடிக்கும்... இந்த வாரம்தான் பேஸியல் பண்ணேன்... இத்தோட நெக்ஸ்ட் மந்த்தான் உன் கஞ்ச பிசனாரி அக்கா காசு கொடுப்பாக" என்றவள் தொடர்ச்சியாய் அவளின் பெரும் கவலைகளை விவரிக்க சிரிப்பாய் கேட்டு கொண்டு வந்தவன்,

"ஓவரா கவலைப் படாதடி... இதுவும் ப்யூர் ஹெர்பல்தான்... நாட்டு மாட்டு சாணமாக்கும்... இன்னும் பொலிவாயிடுவீக"  என்றவன் அதன் பெருமை புகழை எல்லாம் உரைக்க ராகினிக்கு வியர்த்துப் போனது.

"மாமா சாணம் வேணாம்... புண்ணாக்கு தண்ணியே பெட்டர்" என்றளவுக்கு இறங்கி வர,

"இல்லடி... அதுதான் உடம்புக்கு நல்லது" என்று அவர்கள் இரண்டில் எது என வாதம் செய்து கொண்டிருக்கும் போதுதான் ஷிவானி அங்கே வந்து நின்றாள்.

தூரத்தில் நின்று பார்ப்பவளுக்கு அந்த காட்சி எப்படி போய் சேர்ந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.

எதற்கு ஏன் என்று புரியாமல் உள்ளூர அவள் மனம் நொறுங்கிக் கொண்டிருக்க, அந்த நொடி சிவகுரு மீது கொண்ட மதிப்பெல்லாம் சுக்குநூறானது.

ஆனால் அந்த காட்சியின் மூலாதாரம் என்னவென்று ஆராய அவள் மூளைக்குப் பொறுமையில்லை. அவள் விழி அணைக்குள் கண்ணீர் மெல்ல தன் அளவுகோலை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.

அவள் கரமெல்லாம் எதையாவது தூக்கிப் போட்டு உடைக்கலாமா என பரபரக்க, அப்போதைக்கு அவள் கண்ணில் எதுவும் அகப்படவில்லை.

அல்லாடியபடி தன் பார்வையை சுழற்றியவள், இறுதியாய் அவள் நின்றிருந்த இடத்தில் அரைகுறையாய் உடைப்பட்ட பழைய பானையைப் பார்த்தாள்.

அதனைக் கோபத்தில் காலால் ஒரு எத்துவிட, அது உருண்டு சென்று விழுந்த சத்தம் கேட்டு சிவகுரு  திரும்பிப் பார்த்தான்.

அங்கே ஷிவானி நின்றிருப்பதை பார்த்து அவன் துணுக்குற்ற சமயம் ராகினி தரையிறங்கினாள். ஷிவானியோ அவனை எரிப்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாய் குளியலறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொள்ள,

ராகினி குருவின் காதோரம் நெருங்கி, "அவங்கதான் மிஸ். மலேசியாவா?" என்று கிண்டலாய் கேட்டு வைக்க குரு கோபமாய் தன் கரத்தை மடக்கினான்.

"சாரி சாரி அ..க்..கா" என்று மிரண்டபடி சொல்ல, "அந்த பயம்" என்றவன் அவளைப் பார்வையாலேயே மிரட்டிவிட்டு கிணற்றடியில் சென்று தன் கைகால்களை அலம்ப ஆரம்பித்தான்.

ராகினி மனதிலிருந்த தீ இப்பொழுதுதான் இன்னும் அதிக உக்கிரமாய் எரிய ஆரம்பித்தது.

குரு ஷிவானிக்குப் பரிந்து பேசுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதில் திட்டம் தீட்டியபடி அவள் அங்கிருந்து அகன்றுவிட, ஷிவானிக்கும் உள்ளூர கோபத் தீ கனலாய் எரிந்து கொண்டிருந்தது.

குளியலறைக்குள் சென்றவளுக்கு அவளையும் அறியாமல் கண்ணீர் தாரை தாரையாய் பெருகியது. குருவை இன்னொரு பெண்ணோடு பார்த்ததினால் உண்டான கலவரமா? நிச்சயமாய் அவளுக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் மனம் வேதனையில் உழன்றது.

தன்னால் இயன்றவரை அழுதுமுடித்தவள் பின்னர் முகத்தை நன்றாய்  நீரில் அலம்பிக் கொண்டு வெளியே வந்தாள். ஆனால் அவள் கண்ணீர் சுவட்டை அவள் முகம் காட்டிக் கொடுத்ததே. அதை குருவின் பார்வையும் ஒருவாறு குறித்துக் கொண்டது.

அவனை முறைத்தபடியே அவள் கடந்து செல்ல அவள் நடந்து செல்லும் பாதையைக் கவனித்தவன்,

"அங்கன ஒரே பாசியா இருக்கு... வழக்கி விட்டுற போகுது... இந்த பக்கம் வா" என்றவன் நல்லெண்ணத்திலேயே சொன்னாலும் அதனைக் கேட்டு கொள்ளும் மனநிலையில் அவள் இல்லையே!

"எனக்கு தெரியும்... உங்க வேலையைப் பாருங்க" என்று முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டவள் அவன் சொன்னதுக்கேற்றாற் போல் கால் வழுக்கிவிட தரையில் சரிந்தாள்.

"ம்மா" என்றவள் அலறிய சமயம் குரு அந்த காட்சியைப் பார்த்து தன்னையறியாமல் சிரித்துவிட்டான். 'ஷிவானி உனக்கு டைமே சரியில்ல' என்றவள் சுயபச்சாதாபம் கொள்ளும் போது

குரு அவளை நெருங்கி உதவ வர, "ப்ளீஸ் டோன்ட்... நானே எழுந்திருச்சிப்பேன்" என்று கைகாண்பித்துவிட்டு சிரமப்பட்டு எழுந்து கொள்ள முயற்சி செய்தாள்.

அவளை எகத்தாளமாய் பார்த்தவன், "நல்லது சொன்னா கேட்டுக்கிடணும்... இல்லன்னா இப்படிதான்" என்க,

"வேணாம்... நான் செம காண்டல இருக்கேன்" என்று சொன்னவள் எழுந்து கொள்ள முடியாமல் அவதிப்பட, "இருங்க நான் தூக்கி விடறேன்" என்று மீண்டும் அவளை நெருங்கினான்.

"வேண்டாம்... என்னைத் தொடாதீங்க" என்று தீர்க்கமாய் உரைத்தவள் அந்த வலியையும் மீறிக் கொண்டு எழுந்து நின்றாள். அவன் அதிர்ந்த பார்வையோடு,

"தொடக்கூடாதா... அம்புட்டு கோபமால என் மேல?!" என்று கேட்க

"ஆமா... உங்க முகத்தை பார்க்கவே எனக்குப் பிடிக்கல... ஐ ஹேட் யூ" என்று சொல்லிவிட்டு முன்னேறி நடக்க,

"சும்மா கதை விடாதீக... என்னையும் ராகினியும் சேர்த்து பார்த்துட்டு உங்க கண்ணு கலங்கினதை நான் பார்த்தேனே" என்று அவள் காதில் விழும்படி சொன்னான்.

"எனக்கு ஏன் கலங்குது?... அப்படி எல்லாம் இல்ல" என்றவள் அவனிடம் திட்டவட்டமாய் மறுக்க,

அவன் சிரித்தபடி, "உன் முகத்தைப் போய் கண்ணாடில பாருவே... தெரியும்" என்று சொல்ல அவள் மௌனமானாள்.

"அப்புறம் முக்கியமான விஷயம்... அந்த ராகினிகிட்ட கொஞ்சம் பார்த்து பேசுக... வாயாலயே வறுத்து எடுத்திருவா" என்றதும் அவள் புருவங்கள் சுருங்க,

"இப்ப கூட உன்னை எம்புட்டு வைஞ்சிட்டு போனாளோ... அதான் இப்படி விழுந்து வாரியிருக்க" என்க, அவள் குழப்பமாய் ஒரு பார்வை பார்க்க அவன் இவ்விதம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவளும்  வலியோடு நடந்து தன் அறையை அடைந்தவள் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க, அவள் மனதின் தவிப்பை அவள் முகம் அப்பட்டமாய் வெளிக்காட்டியது.

'நான் ஏன் இப்படி இருக்கேன்?" என்று  தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.

அந்த கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை எனினும் அவள் மனதை ஏதொவொரு புது உணர்வு ஆட்கொண்டு அலைக்கழிக்கிறது என்பது மட்டும் புரிந்தது. அவள் இப்படியே கண்ணாடியை உற்றுப் பார்த்து தீவிர சிந்தினையில் ஆழ்ந்திருக்க,

"வாணிம்மா" என்றழைத்தார் வேதா.

"என்ன மீ?" என்றவள் யோசனையாய் திரும்ப, அவள் முகம் களையிழந்திருப்பதை  உணர்ந்த வேதா,

"என்னடி ஆச்சு... ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று வினவினார்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல மீ... நீ சொல்ல வந்த மேட்டரென்ன அதைச் சொல்லு"

"உன்னை உங்க சித்தி எவ்வளவு ஆசையா பார்க்க வந்திருக்காங்க... நீ என்னவோ ரூமுக்குள்ள வந்து நின்னுக்கிட்டிருக்க... போய் அவங்ககிட்ட பேசு"

அந்த நொடி ராகினியின் தங்கைகள் பேசியது நினைவுக்கு வர வேண்டா வெறுப்பாய், "எனக்கு இப்ப யார்கிட்டயும் பேசிற மூடில்ல மீ... நீ வேணா போய் பேசு" என்றாள்.

"அதென்னடி? அப்பாவுக்கும் பொண்ணுக்கும் என் சொந்த பந்தத்தை கண்டாதான் இளப்பமா இருக்கு...இதுவே உங்க நளினி அத்தையா இருந்திருந்தா எப்படி வரிஞ்சிகட்டிட்டு போய் பேசுவ... மோகன் ரஞ்சன்தான் உனக்கு ஒஸ்தி... என் தங்கச்சி பசங்கன்னா உனக்கு எளக்காரமா தெரியுது இல்ல"

"ஓவரா இமேஜின் பண்ணாதே மீ... நான் ஒண்ணும் உன் தங்கச்சி பசங்கள இளக்காரமா பார்க்கல... அவங்கதான்" என்றவள் பேசும் போதே வேதா இடைமறித்து,

"புளுகாதடி... அந்த பிள்ளைங்க எல்லாம் அக்கா அக்கான்னு எவ்வளவு பாசமா விசாரிச்சாங்க தெரியுமா?!"

"பாசமா... அதுவும் என்னைப் பத்தி... போ மீ என்னைக் கடுப்பேத்தாதே"

"இப்ப நீ வெளியே வந்து எல்லோர்கிட்டயும் பேச போறியா இல்லையா?!"

"முடியாது" என்றவள் முடிவாக மறுக்க வேதாவிற்கு கோபம் தன் எல்லையை மீறியது. அந்த நொடி ஷிவானி கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டார்.

ஷிவானிக்கு அந்த அடி பேரதிர்ச்சியாய் இருந்தது. அதுவும் சற்று முன்புதான் குருவின் முன்னிலையில் விழுந்தது அவனை ராகினியோடு சேர்த்துப் பார்த்ததெல்லாம் மனதை காயப்படுத்தியிருக்க இது உடனடியாய் அடுத்த அவமானம்.

சீற்றமானவள், "என்ன மீ? டேட் இல்லாத தைரியத்தில என்னை அடிக்கிற இல்ல... இரு இப்பவே டேடுக்கு நான் கால் பண்ணிச் சொல்றேன்" என்றவள் அவசரமாய் தன் கைப்பேசியைத்  தேடினாள்.

வேதா தன் தவறை எண்ணித் தலையில் அடித்துக் கொண்டு, "அய்யோ வாணிம்மா நான் சொல்றதைக் கேளு... வேண்டாம்" என்று பதட்டமடைந்தார்.

"நோ வே" என்று போஃனை பதைபதைப்பாய் தேடினாள் ஷிவானி.

"ஏய் சொல்றத கேளு... உங்க டேட்கிட்ட நீ இப்படின்னு சொன்னா அவரு இதான் சாக்குன்னு நம்மளை வந்து கூட்டிட்டு போயிடுவாரு"

"எனக்கும் அதான் வேணும்... ஐ டோன்ட் வான்ட் டூ ஸ்டே ஹியர் எனிமோர்" என்றவள் அழுத்தமாய் உரைக்க வேதா அதிர்ச்சியானார்.

ஷிவானியோ அவள் கைப்பேசியை ஒரிடம் விடாமல் ஆராய்ந்து கொண்டிருக்க வேதா அவளிடம், "கோபத்தில சொல்றியா... இல்ல உண்மையிலயே போகணும்னு முடிவு பண்ணிட்டியா?" என்றவர் சந்தேகமாய் கேட்டார்.

"நான் சீர்யஸாதான் சொல்றேன் மீ" என்றாள் ஷிவானி.

வேதாவிற்கு என்ன பேசுவதென்றேப் புரியவில்லை. குழந்தையிடம் பொம்மையைக் கொடுத்து ஆசை காட்டிவிட்டு சடாரென அதனைப் பறித்துக் கொண்டுவிட்டால் எப்படியிருக்குமோ அப்படிதான் இருந்தது அவர் மனஉணர்வும்.

வார்த்தைகளால் தன் வேதனையை வெளிப்படுத்த முடியாமல் அவர் தவிக்க ஷிவானியின் அப்போதைய பெரிய பிரச்சனை அவள் பேசியை எங்கு தேடியும் காணவில்லை.

"மீ... என் போஃனை பார்த்தியா?!"

"எனக்குத் தெரியாது" அவர் அலட்சியமாய் பதில் சொல்ல,

"நான் இங்கதான் மீ வைச்சேன்" என்க,

"நான் பார்க்கலன்னு சொல்றேன் இல்ல" கோபமாய் குரலை உயர்த்தினார் வேதா.

"சரி சரி கத்தாதே... நானே தேடிக்கிறேன்... உன் போஃனை கொடு" என்க, அவர் வாய் பேசாமல் தன் கைப்பேசி இருக்கும் இடத்தைக் காண்பித்தார். அவள் அதிலிருந்து தன் பேசிக்கு டயல் செய்து பார்க்க அது ஸ்விட்ச்ட் ஆஃப் என்க, அவளுக்கு எரிச்சலானது.

பின்னர் அந்த வீடு முழுக்கவும் அலசி ஆராய்ந்தவள்... கடைசியாய் அடுக்களையில் மும்முரமாய் வேலையில் இருந்த தங்கத்திடம் சென்று, "ஆச்சி என் போஃனை காணோம் பார்த்தீங்களா?!" என்றவள் விசாரிக்க,

"இல்லையே தாயி... நல்லா தேடினீகளா? எங்கன விட்டீக?"

"நான் ரூம்லதான் வைச்சிருந்தேன் ஆச்சி"

"அப்போ அங்கனயே நல்லா தேடிப் பாருங்க"

"இல்ல ஆச்சி... நான் நல்லா ரூம் புஃல்லா தேடிப் பார்த்துட்டேன்"

அடுக்களை விட்டு வெளியே வந்தவர் ராகினியையும் அவளின் இரு தங்கைகளும் பார்த்து, "ஏ பசங்களா... அக்காவோட போஃனை காணுமாமே... பார்த்தீங்களா?" என்று கேட்க,

மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"இந்த அக்காவையே நாங்க இப்பதான் பார்க்கிறோம்... இதுல அவங்க போஃனை நாங்க பார்த்தோமான்னு கேட்கிறீங்க...  இது உங்களுக்கே ஓவரா இல்ல" என்று ராகினி எகத்தாளமாய் சொல்ல, அவள் தங்கைகள்  நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

"எல்லாத்துக்கும் வாய் கொழுப்பு ஜாஸ்தியா போச்சு... நீ வா ஷிவானி நம்ம குருவைக் கேட்கலாம்" என்க,

"இல்ல இல்ல ஆச்சி... நானே தேடிப் பார்க்கிறேன்" என்று ஷிவானி குருவின் முன்னிலையில் போய் நிற்க விரும்பாமல் நழுவிக் கொண்டாள்.

அதற்கு பிறகாய் ஷிவானி தன் கைப்பேசியை பல இடங்களில் தேடிப் பார்த்து களைத்து போய் சோபாவில் அமர்ந்து கொள்ள,

குரு அப்போதுதான் தங்கத்திடம் மெஸ்ஸுக்கு புறப்படுவதாக சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்போது தங்கம் அவனிடம், "டே குரு... பிள்ளையோடு போஃனை காணுமாமே... நீ பார்த்தியா? பாவம் வீடெல்லாம் தேடிட்டு கிடக்கா" என்று சொல்ல, ஷிவானி அந்த வார்த்தைகளை கேட்டு குருவின் பதிலுக்காக அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"அந்த கோல்டன் கலர் போஃன்... பிளாக் கவர்... பின்னாடி எஸ் எஸ்னு ஸிம்பிள் இருக்குமே அந்த போஃனால?" என்றவன் அவள் பேசியின் அடையாளங்களை தெள்ளதேளிவாய் விவரிக்க,

"எஸ் லா... அதேதான்" என்று அவள் ஆர்வமாய் எழுந்து நின்றாள்.

"அந்த போஃனை... நான் பார்க்கல" என்று அவன் சாதாரணமாய் சொல்லிவிட்டு தன் அம்மாவிடம், "புறப்படுதேன்... வர நேரமாகும்... சாப்பாடெல்லாம் எடுத்து வைக்காதீங்க" என்று சொல்ல தங்கமும் அவனை வழியனுப்பிவிட்டு உள்ளே சென்றார்.

ஷிவானி சந்தேகமாக, "மாம்ஸ் ஒரு நிமிஷம்" என்று வீட்டிற்கு வெளியே சென்று கொண்டிருந்தவனை நிறுத்த... அவன் அவளை திரும்பி நோக்கினான்.

"எங்கே என் போஃன்?" என்றவள் அவனை சந்தேகமாய் ஏறஇறங்க பார்த்து வினவ, "ஹ்ம்ம்ம்... என் பேக்கெட்ல இருக்கு வந்து எடுத்துக்கிடு" என்று எகத்தாளமாய் பதிலளித்தான்.

"இந்த கிண்டல் எல்லாம் வேண்டாம்... என் போஃனை கொடுங்க"

"கொடுத்திடுதேன்... பதிலுக்கு நீங்க என்ன தருவீங்க?" என்று குரு கல்மிஷமாய் பார்க்க அவள் கோபத்தோடு,

"அப்போ... நீங்கதான் என் போஃனை எடுத்தீங்களா?" என்று கேட்டு பார்வையாலயே சீறினாள்.

"நான் எங்கல உன் போஃனை எடூத்தேன்... நீதானே பூனையைப் பார்த்து பயந்துட்டு போஃனை கீழே போட்டீக"

"அது" என்று யோசித்தவள் பின் அவனை நோக்கி, "சரி அப்பவே கொடுத்திருக்க வேண்டியதுதானே" என்று கேட்டாள்.

"நானே உன் போஃன் அங்கன கிடந்ததைக் காலையிலதான்ல பார்த்தேன்"

"ஏன் என்கிட்ட அப்பவே கொடுக்கல... நான் எவ்வளவு நேரமா தேடிட்டிருக்கேன் தெரியுமா?!"

"அப்படி தேடுனவங்க... ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்டுக்கிடல... அம்புட்டு ரோஷமோ?!" என்றவன் கேட்டு அவளைக் கூர்மையாய் பார்க்க

அவள் சற்று நேரம் யோசித்துவிட்டு, "சரி இப்பையாச்சும் கொடுங்க" என்று தன் கரத்தை நீட்டினாள்.

"இடத்தை சொல்லுதேன்... நீங்களே எடுத்துக்கிடணும்... சரியா?" என்றவன் கள்ளத்தனமாய் சிரித்தான்.

"எங்க வைச்சிருக்கீங்க?"

"அதான் சொன்னேனே... என் சட்டை பாக்கெட்ல" என்க, அவள் அவனை விழிகம் இடுங்க பார்த்து, "அதெல்லாம் முடியாது... நீங்களே எடுத்துக் கொடுங்க" என்று தன் பார்வையை எங்கோ வெறித்தாள்.

"வேண்டான்னா போ... நான் கிளம்பிடுதேன்"

"என்ன மிரட்டிறீங்களா? நான் ஆச்சிக்கிட்ட சொல்லி போஃனை வாங்கிக்கிறேன்"

"நீ உங்க ஆச்சியை போய் கூட்டிட்டு வர்றதுக்குள்ள நான் கிளம்பிடுவேனே... அப்புறம் உங்க போஃன் கிடைக்கவே கிடைக்காது" அவன் அழுத்தமாய் சொல்ல,  "திஸ் இஸ் டூ மச்" என்று கடுப்பானாள் ஷிவானி.

"டூ மச்சா... அன்னைக்கு யாருன்னே தெரியாத போது என் சட்டையில கரை பட்டுடுச்சுன்னு துடைச்சி விட்டீக... நேத்து ராத்திரி பூனையை பார்த்து பயந்து என்கிட்ட அம்புட்டு நெருக்கமா ஓட்டி நின்னீக... இப்ப மட்டும் என்னவே டூ மச்சு... பேக்கெட்ல இருக்க போஃனை எடுக்க எதுக்குல இம்புட்டு சீன்... வேணும்னா எடுத்துக்கோ... இல்லன்னா போ"

அவள் சற்று நேரம் தயங்கியவள் அவனைத் தவிப்பாய் பார்த்துவிட்டு மெல்ல அவள் பேசியை அவன் மேல் கரம் படாமல் ரொம்ப லாவகமாய் எட்டி நின்றபடி எடுக்க, "பார்றா" என்று சொல்லிச் சிரித்தான் குரு.

ஷிவானி அதை எடுத்த மாத்திரத்தில் தன் ஸ்கட்டில் அழுந்த தேய்த்துத் துடைக்க அதுவும் அவன் முன்னிலையிலயே அந்த வேலையை செய்ய,

கடுப்பானவன், "இப்ப எதுக்கு நீ போஃனை அந்தத் துடை துடைச்ச" என்க, "என் போஃன்... நான் என்ன வேணா பண்ணுவேன்... உங்களுக்கு என்ன? கிளம்புங்க" என்று சொல்லிக் கடந்து செல்லப் பார்த்தவளை தன் கரத்தால் மடக்கி  இடையை சுழற்றி அவளை அருகில் இழுத்து அவள் கன்னத்தில் முத்தமிட அதிர்ந்து போனாள்.

"நமக்கு சொந்தமானதை நாம என்ன வேணா பண்ணலாம்... சரிதாம்ல" என்று அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டு அவன் முன்னேறி செல்ல,

அவளோ எத்தகைய உணர்வை வெளிப்படுத்துவது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

அவன் வாசற்கதவோரம் நின்று கொண்டு அவளை திரும்பி நோக்கியவன், "அடியே என் அக்கா மவளே... இது ஒண்ணும் நான் உனக்கு கொடுக்குற முதல் முத்தம் இல்ல... அதனால ரொம்பெல்லாம் வருத்தபடாதீக...

அப்புறம் மறந்திடாம கன்னத்தை நல்லா தேச்சி துடைச்சுக்கோங்க... நான் கிளம்பிடுதேன்" என்று சொல்ல அந்த வார்த்தைகளைக் கேட்டவளின் முகம் அவமானத்தால் சிறுத்துப் போனது. அவள் விழியின் கண்ணீர் மடை உடைப்பெடுத்தது.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content