You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam kondenadi - 19

Quote

19

குற்றவுணர்வு

ஷிவானியை குரு திட்டிய போது ஐஸ்ஸுக்கும் ராகினிக்கும் உள்ளூர அத்தனைக் குளிர்ச்சியாய் இருந்தது. ஆனால் இப்போது ஷிவானியை காணாமல் தவிப்போடு தேடிய மாமனைப் பார்க்கும் போது பற்றி எரிந்தது அவர்களுக்கு.

அதே நேரம் குரு கலவரத்தோடு ஷிவானியைத் தேடியபடி வீட்டின் வாயிலை நோக்கி நடந்தான்.

அவன் வாயிலை நெருங்க ஷிவானியின் குரல் அவன் காதில் ஒலித்தது.  அவன் வேகமாய் அடியெடுத்து வைத்து வாசலைக் கடக்க, திண்ணையில் வள்ளியம்மை மடியில் தலைசாய்த்துக் கொண்டு புலம்பித் தீர்த்து கொண்டிருந்தாள் ஷிவானி.

அவளைப் பார்த்த மாத்திரத்தில்தான் அவனுக்கு மூச்சே வெளிவந்தது. அவன் மனம் ஒருவாறு நிம்மதியடைந்திருக்க,

ஷிவானி அப்போது வள்ளியம்மையிடம், "எல்லோரும் எனக்கிட்டயே கோபப்படுறாங்க... யாருக்கும் என்னை பிடிக்கல அம்மாட்சி" என்றவள் வேதனையுற்றாள்.

வள்ளியம்மை அவளை சமாதானப்படுத்தும் விதமாய், "அப்படி எல்லாம் இல்லடா தங்கம்" என்று அவள் தலையை வருடிக் கொடுக்க,

அப்போது, "ஷிவானி" என்றழைத்து குரு  அவர்கள் முன்னே வந்து நின்றான். ஷிவானி அவன் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் உடனடியாக முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

அப்போது வள்ளியம்மை அவனைப் பார்த்து, "பிள்ளைய ஏசினியாவே?" என்று  கேட்டு தன் கொம்பால் அவனை ஒரு தட்டுத் தட்டினார்.

"ஆ அப்பத்தா" என்றவன் அலற ஷிவானி அத்தனை அழுகையிலும் அந்த காட்சியைப் பார்த்து புன்னகையித்துவிட்டாள்.

அவன் கோபமேற, "என்னை எதுக்கு அப்பத்தா அடிக்கிறீக... முதலில உங்க பேத்தி என்ன செஞ்சான்னு கேளுங்க" என்றான்.

ஷிவானி முந்திக் கொண்டு, "நான் தெரியாமதான் அம்மாட்சி அப்படி பண்ணிட்டேன்... மீ கிட்ட ஸாரி கூட கேட்டேன்" என்றவள் சொல்ல வள்ளியம்மை இதைக் கேட்டு,

"புள்ள தெரியாம செஞ்சதுக்கு போய் எதுக்கல அம்புட்டு கோபப்பட்ட... உன்னைய" என்றவர்  மீண்டும் தன் கொம்பை உயர்த்த அவன் விலகி வந்தான்.

"அய்யோ அப்பத்தா... அவ பாட்டுக்கு அக்கா மண்டைய உடைச்சிப்புட்டு வந்து அமுக்கினியாட்டம் உட்கார்ந்திருக்கா... அவளை விட்டுபுட்டு  என்னைய எதுக்கு சாடுறீக?!" என்றவன் படபடவென பொறிய,

"பொய் அம்மாட்சி... நான் மண்டையெல்லாம் உடைக்கல... அது சின்ன ஹேர் ஸ்ப்ரே பாட்டில்தான்... அதை அப்படித் தூக்கி போட்டேன்... தெரியாம அது மீ தலையில பட்டிருச்சு" என்றவள் விளக்கமளிக்க அவளை முறைத்துக் கொண்டு நின்றவன்,

"சின்ன பாட்டிலா... இரும்ல... நான் அந்த பாட்டிலை எடுத்துட்டு வந்து உன் மேல வீசுறேன்... அப்போ தெரியும்" என்றான்.

"சும்மா பிள்ளைய எதுக்கல வைஞ்சிட்டிருக்க... போலே அந்தாண்ட" என்று வள்ளியம்மை குருவைத் துரத்தினார்.

அவளை இயலாமையோடு பார்த்தவன், 'நீ  உள்ளே வா... உனக்கு இருக்கு' என்றவன் வாயசைத்து  சமிஞ்சையால் உரைக்க,

"பாருங்க அம்மாட்சி... உள்ளே வா உன்னைப் பார்த்துக்கிறேன்னு மாம்ஸ் மிரட்டுறாரு" என்றவள் போட்டுக் கொடுத்தாள்.

"ஏம்ல பிள்ளைய மிரட்டுற... உன்னை அப்பவே போகச் சொன்னேல்ல" என்று கொம்பைக் காட்ட அவன் அவளை முறைப்பது போல் பார்த்துவிட்டு அகன்றுவிட்டான்.

ஷிவானி மெல்ல வள்ளியம்மையின் தோளில் தலைசாய்த்துக் கொண்டுவிட, "பையன் ரொம்ப வைஞ்சிட்டானால" என்று வள்ளியம்மை அவளை அமைதிப்படுத்த முயல, "ஹ்ம்ம்" என்றாள்.

"அவனுக்கு அவங்க அக்கா மேல ரொம்ப பாசம்ல... அதான்"

"ஏன் அம்மாட்சி? எனக்கு எங்க அம்மா மேல பாசமில்லையா என்ன?" என்றவள் தலையை நிமிர்த்தி பதில் கேள்வி கேட்க,

"உன் பாசம் வேற... அவன் பாசம் வேறல" என்றார் அவர்.

"ஏன் வேற?" என்றவள் புரியாமல் கேட்க,

"அது குரு பிறந்த போது உங்க ஆச்சிக்கு உடம்பு சுகமில்லாம போச்சு... அப்போ அவனைக் கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டவ உங்க அம்மாதான்... அவனை குளிப்பாட்டுவா... சோறூட்டுவா... தூங்க வைப்பா... கிட்டதட்ட அவனைப் பெத்த பிள்ளை போலதான் பார்த்துக்கிட்டாக... மத்த அக்காங்களோட இருந்ததை விட உங்க அம்மாவோடு அவன் இருந்ததுதான் அதிகம்ல" என்க, அவள் ஆச்சர்யமாய் பார்த்திருந்தாள்.

வள்ளியம்மை மேலும், "உனக்கு தெரியுமா ல... உங்க அம்மாவுக்கு கல்யாண ஆகிப் போகையில அவன் செஞ்ச ஆர்பாட்டமிருக்கில... இந்த வீட்டையே இரண்டாக்கிபுட்டானா பார்த்துக்கோயேன்...  அவன் உங்க அம்மாவை அனுப்ப மாட்டேன்னு செஞ்ச அலப்பறையில  உங்க அப்பாருக்குக் கூட கிலி பிடிச்சிடுச்சு" என்று சொல்ல

"அப்புறம் என்னாச்சு அம்மாட்சி?... மாம்ஸ் சமாதானம் ஆனாரா இல்லையா?" என்றவள் அந்த காட்சியை மனக்கண் முன் கற்பனை செய்தபடி சிரித்தாள்.

"அவன் எங்கன சமாதானம் ஆனான்... உங்க அம்மா போனதும் அழுது அழுது அவனுக்கு ஜன்னியே கண்டு போச்சு...  புகுந்து வீட்டுக்கு போன உங்க அம்மா அவனைப் பார்க்கத் திரும்பி ஓடி வந்துப்புட்டாகல" என்றார்.

"மாம்ஸுக்கு அம்மா மேல அவ்வளவு அட்டேச்மென்ட்டா?" என்று ஆச்சர்யம் பொங்க அவள் கேட்கவும், "அதென்னல அட்டாச்சுமன்டு?" என்று புரியாமல் வினவினார்.

"இல்ல... அவ்வளவு பாசமான்னு கேட்டேன்"

"பின்ன... அம்புட்டு பாசம்... இன்னொரு விசயம் நடந்துச்சு... அதை கேட்டீகன்னா வெலவெலத்துப் போயிடுவீக" என்றதும் ஆவல் ததும்ப, "என்ன அம்மாட்சி அது?" என்று கேட்டாள்.

"சீமந்தம் பண்ணி உங்க அம்மாவை கூட்டியாந்து இங்கன வைச்சிருந்தோம்... அப்போ இந்த குரு பையன் ஒரு நிமிஷம் அவங்க அக்காவைப் பிரியமாட்டான்... எங்க உங்க அப்பாரு வந்து கூட்டிட்டு போயிடுவாரோன்னு பயம்... எந்நேரமும் உன்னையும் உங்க அம்மாவையும் கட்டிபிடிச்சிக்கிட்டேதான் இருப்பாக"

"என்னையா?!"

"உங்களையும்தான்... நீங்க அப்போ உங்க அம்மா வயித்தில இருந்தீங்க... பாப்பாவையும் அக்காவையும் விட்டு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு கிடப்பான்... அப்படிதான் ஒரு தடவை... நடுசாமத்தில உங்க அம்மாவுக்கு பிரசவ வலி வந்திருச்சு... எல்லாரும் பதிறிட்டோம்"

"உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனிங்களா?" என்றவள் ஆர்வமாய் கதை கேட்க,

"அந்த சமயத்தில எங்கன வண்டி புடிச்சி அஸ்பெத்திரி கூட்டிட்டு போக... நான்தான் உங்க அம்மாவுக்கு பிரசவம் பார்த்தேன்"

"நிஜமாவா அம்மாட்சி" என்றவள் ஆச்சர்யத்தில் விழிகளை அகல விரிக்க,

"பின்ன... வேற வழியில்லையே... ஆனா நீங்க வெளியே வர்றதுக்குள்ள எங்க எல்லாத்தையும் பயமுறுத்திப்புட்டீக"

"ஏன் அம்மாட்சி அப்படி சொல்றீங்க?"

"உங்க அம்மாவுக்கு பிரசவ வலி வந்திருச்சு... ஆனா தலை திரும்பலயே"

"அப்படின்னா?"

"புள்ளய தலை வழியாதாம்ல வெளியே எடுக்க சுலபம்... கால் வழியா எடுக்கிறதெல்லாம்... உசுரு போய் வந்திரும்... எல்லோரும் பயந்துபுட்டாக... உங்க ஆச்சி பூசையறையிலயே தவமா கிடந்தாக... விறைப்பா திரியிற உங்க தாத்தன் கூட கண்ணில தண்ணி வுட்டுப்புட்டாக... உங்க சித்திங்கெல்லாம் அழுது தேம்ப உங்க தாத்தாரு அவுகள பக்கத்தில கூட்டிட்டுப் போய் விட்டுட்டு வந்துட்டாக... ஆனா உன் மாமன்... அக்கா பக்கத்தில இருந்து அசைஞ்சு கொடுக்க மாட்டேனுட்டான்... யாரு சொல்லியும் கேட்டுக்கிடல... பிடிச்ச புடி உடும்பு பிடின்னுல்ல நின்னான்... அவங்க அக்கா அழறதைத் தாங்க முடியலன்னாலும் அவுகள விட்டு போகலயே" இதையெல்லாம் கேட்கக் கேட்க ஷிவானிக்கு கண்ணீர் நிரம்பி ஓடியது.

"அப்புறம் அம்மாட்சி"

"அப்புறம் என்ன... நம்ம கருங்குளத்து ஐயனாருக்கு காசு முடிஞ்சி... என்ர குழந்தைகளுக்கு எதுவும் ஆகாம பாத்துக்கடா ஐயா... உனக்கு கடாவெட்டி பொங்க வைக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன்.. அந்த ஐயாதான் உன்னையும் உங்க அம்மாவையும் காப்பாத்தினாக.... மொள்ள நானும்  பக்கத்துவிட்டு செல்லாத்தாவும்தான் உன்னைய சிரமப்பட்டு வெளியே எடுத்தோம்... அப்பா... உங்க அம்மாவுக்கு உசிரு போய் வந்திருச்சு" என்றதும் ஷிவானி மனம் அழுத்தமானது.

"முதலமுதல்ல நான்தான் இந்த கையால உன்னைத் தூக்கிக்கிடுதேன்" என்று வள்ளியம்மை தன் சுருங்கி தளர்ந்த கரங்களைக் காண்பிக்க ஷிவானி அதனைப் பிடித்து தன் முகத்தோடு ஒத்திக்கொண்டு,

"யூ ஆர் ரியலி கிரேட் அம்மாட்சி... வுமன் ஆஃப் வில் பவர்... நோ வார்ட்ஸ் டூ ஸே" என்று சொல்லி அழத் தொடங்கினாள்.

வள்ளியம்மை அவளைத் தன் மடிமீது சாய்த்துக் கொண்டு, "என்னல சின்ன புள்ளயாட்டும்" என்று சமாதானம் செய்தவர் மேலும்,

"அப்புறம் இந்த குரு பையனப் பத்தி சொல்ல மறந்துட்டேனே... அவன் அடத்துக்குன்னாலும் உங்க அம்மா கையை விடாம பிடிச்சிக்கிட்டு நின்னிட்டிருந்தான்... நீ பிறக்கிற வரைக்கும் அங்கிட்டு இங்கிட்டு அசையிலயே... அம்புட்டு தைரியம்ல அவனுக்கு... ஏன் உங்க அம்மா கூட அவன் கையை விடலயே... அவன்தான் என் தைரியம்... அவன் என் கூடவே இருக்கட்டும்னு சொல்லிப்புட்டாக... அப்புறம் நீ பொறந்த பிறவு உன்னைய உங்க அம்மா கையில கொடுத்ததும்... பயபுள்ள இந்த பாப்பா எனக்குதாம்னு சொல்லி முத்தம் கொடுத்துட்டுதாம்ல போனான்" என்று வள்ளியம்மை சொல்ல ஷிவானியின் முகம் நாணத்தில் சிவந்தது.

அந்த நொடி குரு அவளை அணைத்தபடி கொடுத்த முத்தத்தை நினைவு கூர்ந்தவளுக்கு மனம் எங்கோ அலைப்பாய அதனைக் கட்டி நிலைப்படுத்த அவதியுற்றவள் வள்ளியம்மையைப் பார்த்து, "அப்போ மாமாவுக்கு என்ன வயசிருக்கும்?" என்று ஆர்வமாய் வினவினாள்.

"ஒரு ஆறேழு இருக்கும்ல்" என்றார்.

ஷிவானியின் மனம் அந்த நொடி அவளிடம் இல்லை. சவால்விட்ட மறுநொடியே தோல்வியைத் தழுவ தயாராகிவிடுவோம் என்றவள் எண்ணிக் கொண்டாளா என்ன?

இந்த சிந்தனைக்குள் ஆழ்ந்திருந்தவள் சட்டென்று ஏதோ நினைவுவந்தவளாய், "ஏன் அம்மாட்சி? நான் பிறக்கும் போது டேட் இங்க இல்லையா?" என்று அவள் கேட்கவும்,

"அவுக எங்க இங்கன இருந்தாக... சீமந்தம் முடிச்சி உங்க அம்மாவை விட்டுட்டு போனவுகதான்... அதோடு நீ பிறந்த சேதி தெரிஞ்ச பிறவுதான் வந்து சேர்ந்தாக" என்று சொல்ல அவள் மனதை ஒருவித ஏமாற்றம் தொற்றிக் கொண்டது.

ஷிவானி இந்த எண்ணங்களோடு தன் அறைக்கு வந்து சேர, அங்கே வேதாவும் கனகமும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஷிவானியைப் பார்த்த கனகம் அவளுக்கு நிறைய அறிவுரைகளை வாரி வழங்கிவிட்டு அறையை விட்டு வெளியேறிவிட, அவள் மனம் வேதனையில் உழன்றது.

தன் அம்மாவின் நெற்றியிலிருந்த காயத்தைப் பார்த்த நொடி குற்றவுணர்வில் துடித்தவள் எந்த வார்த்தையை சொல்லி தன் தவறை சரிசெய்துவிடமுடியும் என்று சிலையாய் நின்றாள்.

அப்போது வேதா, "என்ன வாணிம்மா?" என்றவள் வேதனை நிரம்பிய முகத்தைப் பார்த்து வினவ,

அந்த நொடியே தன் அம்மாவை கட்டியணைத்து கொண்டு வெதும்ப ஆரம்பித்தாள் ஷிவானி.

"வாணிம்மா" என்றவர் குரல் கொடுக்க அவளோ கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள். இதுநாள்வரை தன் அம்மாவைத் தான் இரண்டாம்பட்சமாய் நடத்தி இருக்கிறமோ என்ற குற்றவுணர்வும் அதனோடு சேர்ந்து கொண்டிருந்தது.

வேதா தன் மகளின் மனநிலையை விளங்கிக் கொள்ள முடியாமல் வெகுநேரம் சமாதான வார்த்தைகளை சொல்லித் தேற்ற, அவள் விம்மியபடியே இருந்தாள்.

விசும்பலோடு தன் அம்மாவின் கரத்தைப் பற்றி கொண்டவள், "ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரிமா... நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்" என்க, "அப்படியெல்லாம் இல்ல வாணிம்மா" என்றார் அவர்.

ஷிவானியின் மனதிற்கு மட்டுமே புரியும். அவள் மனதை ஆழத்துளைத்த வலி எதுவென்று. வேதா அவளை சமாதனப்படுத்த முயன்று கிட்டத்தட்ட தோற்றுதான் போனார்.

இரவு உணவுக்கு ஷிவானியை வேதா அழைத்த போது கூட அவள் வர மறுத்து அறைக்குள்ளேயே தங்கிவிட,

குருவின் மனமோ உணவின் மீது கவனம் செலுத்த முடியாமல் ஷிவானியை மட்டுமே தேடிக் கொண்டிருந்தது.

குரு அப்போது தங்கத்திடம், "ஷிவானியை சாப்பிடக் கூப்பிடலயா" என்று கேட்க, "அவளுக்குப் பசிக்கலயாம்... வேதா கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தா... ஆனா அவ வரமாட்டேனுட்டளாம்... நான் கூப்பிடுறேன்னு சொன்னே... உங்க அக்காதான் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம்... அவளே பசிச்சா வருவான்னு சொல்லிபுட்டா" என்று சொல்லி முடித்தார்.

குருவின் மனம் இதனைக் கேட்டு வருத்தம் கொள்ள அவளை எப்படியாவது பார்க்க வேண்டுமென எண்ணிக் கொண்டவன், அவள் அறை பக்கமாக போய் எட்டிப் பார்க்க அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

அதே நேரம் அவள் காற்று வராமல் அவதியுற்று புரள்வதைப் பார்த்தவன் வேகமாக டேபிள் பேஃன் ஒன்றை அவள் அறையில் போட்டு விட்டான்.

  சற்று நேரம் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் கிடப்பதை விழியகற்றாமல் பார்த்திருந்தவனுக்கு கண்ணீரில் நனைந்திருந்த அவளின் முகம் மனதை ஏதோ செய்தது.

"என்னை மன்னிச்சிடு குட்டிமா... ஏதோ கோபத்தில" என்றவன் அவள் தலையை வருடிக் கொடுக்க அவள் சிணுங்கினாள்.

சட்டென்று தன் கரத்தைப் பின்வாங்கியவன், "நீ இப்பவும் அப்படியே என் குட்டிமாதான்" என்று சொல்லியபடி ஏக்கமாய் அவள் கரத்தைத் தன் கரத்தோடு பிணைத்து முத்தமிட்டவன் அவளை பார்த்தபடியே மெல்ல அந்த அறையைவிட்டு வெளியேற யத்தனிக்க,

அப்போது அறைக்குள் வேதா நுழைந்து அவனைக் கோபமாக பார்த்தார். 

குரு அவரைக் கண்டும்காணாமல் வெளியேறப் போக, "சிவா ஒரு நிமிஷம்" என்று வேதா குரல் கொடுத்தார்.

அவன் மௌனமாய் நிற்க வேதா கோபத் தொனியில், "நீ செய்றது ஒண்ணும் சரியில்ல" என்க,

"இப்ப என்ன செஞ்சிப்புட்டாக?" என்று எங்கோ அலட்சியமாய் பார்த்தபடி வினவினான்.

"என் பொண்ணு மனசுல நீ ஆசையை வளர்க்க பார்க்குற இல்ல" என்றதும் அவன் சிரித்து கொண்டே,

"ஆமா ஆசையை வளர்க்கிறேன்... அப்பதானே அவ என்னைய விட்டுப் போகமாட்டா" என்றான்.

"நீ செய்றது நியாயமில்ல... அவ சின்னப் பொண்ணுடா"

"சின்னப் பொண்ணா... நீங்க காதலிச்சிகளே... அப்போ உங்களுக்கு எம்புட்டு வயசு?" என்று கேட்க வேதாவால் பதில் பேச முடியவில்லை.

அவனே மேலும், "என் மாமன் மட்டும் உங்களைத் துரத்தி துரத்திக் காதலிக்கல... உங்க மனசில ஆசையை வளர்த்து உங்களைக் கட்டிக்கிடல... அதை நான் செஞ்சா தப்பா...  அதென்ன என் மாமனுக்கு ஒரு நியாயம்... எனக்கு ஒரு நியாயம்"

"அப்போ நீ பிடிச்ச பிடில இருந்து இறங்க மாட்ட" என்றவர் முறைக்க,

"நீங்க மட்டும்... ஐயா எம்புட்டு சொல்லியும் கேட்காமா நான் காதலிச்சவர்தான் கட்டுவேன்னு பிடிவாதமா நின்னிக... உங்க தம்பி நான்... அதே பிடிவாதம் எனக்கு இருக்காதா?" என்றவன் சொல்லியதை கேட்ட வேதா மனம் தளர்ந்தார்.

அவனை சோர்வாய் பார்த்தவர், "நீ பேசிறதெல்லாம் சரிதான்டா... ஆனா ராகினியை உனக்குக் கட்டி வைக்கணும்னு கனகம் ஆசைப்படுறா"

"ஆனா நான் ஆசைப்படலியே... எனக்கு உங்க பொண்ணைதான் கட்டிக்கிடணும்... ஏன் என்னை நம்பி உம்ம பொண்ணைக் கட்டி கொடுக்க மாட்டீகளோ?" என்றவன் கேட்டு அவரைக் கேள்வியாய் பார்க்க,

"அதெப்படி சிவா?" என்று கேட்டு தவிப்புக்குள்ளானார் வேதா. 

"எப்படி என்னன்னெல்லாம் என்னைக் கேட்காதீங்க...  நீங்க உடனே என் மாமன்கிட்ட பேசி ஷிவானியை எனக்குக் கட்டி கொடுக்க சம்மதம் வாங்குறீக...  அப்படி இல்லன்னா அவளைத் தூக்கிட்டு போய் தாலி கட்டிடுவேன்.... சொல்லிட்டேன்" என்றவன் தீர்க்கமாய் சொல்லிவிட்டு அகன்றுவிட வேதா திகிலுற்றார். அவன் நிச்சயம் சொன்ன வார்த்தைக்கேற்ப ஷிவானியைத் திருமணம் செய்யாமல் விடமாட்டான் என்று அவர் மனம் அடித்துச் சொல்ல இவர்களின் விளையாட்டில் பகடையாய் உருளப் போவது தன் தலைதான் என்பது புரிந்தது.

இந்த சிந்தனையோடு படுக்கையில் தலைசாய்த்தவர் மகளின் மீது தன் பார்வையை செலுத்த அவளோ எந்த வித கவலையுமின்றி ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தாள். இவளின் இந்த உறக்கம் என்று பறிபோய்விடுமோ என்றவர் மனம் அவஸ்தைப்பட யார் எண்ணியும் விதியை மாற்றியமைத்துவிட முடியுமா?

வேதாவின் இந்த மோசமான மனநிலையிலும் நித்திராதேவி அவர் மீது இரக்கம் காட்டி அவரை உறங்க வைத்துவிட, அப்போது உறக்கம் கலைந்து எழுந்தாள் ஷிவானி.

பசி அவளைப் போட்டு வாட்டி வதைக்க, "மீ" என்றவள் வேதாவை எழுப்பிப் பார்க்க, அவர் உறங்கிய நிலையில் ஏதோ புலம்பினார். ஆனால் விழித்துக் கொள்ளவில்லை.

எழுந்தவள் இம்முறை ரொம்பவும் தெளிவோடு எந்த சத்தமும் எழுப்பாமல் அடுக்களை நோக்கி சென்றாள். ஏதோ வீம்புக்கென்று சாப்பிடாமல் படுத்தது பெரும் தவறாய் போனது. சிறுகுடல் பெருங்குடலைத் தின்று கொண்டிருக்க, அந்த இடத்தின் பாத்திரங்களை ஒன்றுவிடாமல் அலசி ஆராய்ந்தாள்.

அவள் பார்வைக்கு எந்த உணவுபண்டமும் சிக்கவில்லையே. பிரிட்ஜை திறந்து அதற்குள் தலையை நுழைத்தவள் படுதீவிரமாய் தன் பசியை போக்க ஏதேனும் இருக்கிறதா என்று தேட, அதில் அவளுக்கென்று மிச்சமாய் இருந்த ஒரே ஒரு முட்டை அவளை நிம்மதிப்படுத்தியது.

'சூப்பர்... ஆம்லேட் போட்டுர வேண்டியதுதான்' என்று ஆர்வமாய் அந்த முட்டையை கையில் எடுக்க,

"ஷிவானி" என்றழைப்பு அவளைப் பதறடித்தது. அப்போது அந்த முட்டை பாவம்! பரிதாபமாய் அவள் கையிலிருந்து தவறி விழுந்து தன் உயிரை நீத்துவிட்டது.

'போச்சு... உனக்கு நேரமே சரியில்ல ஷிவானி' என்று புலம்ப குரு அவள் செயலைப் பார்த்து சிரித்துவிட்டான்.

"ஏன் மாம்ஸ் இப்படி பண்ணிங்க?" என்றவள் கோபமாய் அவனிடம் எகிறி கொண்டு போக,

"நான் என்னம்ல பண்ணேன்... தாகத்திற்கு தண்ணி குடிக்க வந்தது தப்பா?" என்றவன் கேட்க அந்த முட்டையைப் பார்த்து இரங்கல் அஞ்சலி செலுத்தியபடி,

"ஜஸ்ட் ஒண்ணுதான் இருந்துச்சு... அதையும் ஸ்பாயில் பண்ணிட்டீங்க" என்றாள்.

"உடைச்சது நீ... பழி என்மேலயோ?"

"உங்கள யாரு ஷிவானின்னு கூப்பிட்டு என்னை பயமுறுத்த சொன்னது"

"இந்நேரத்தில நீ ஏம்ல அடுக்களைல பாத்திரத்தை உருட்டிட்டிருக்கவ... எப்ப பாரு நடுசாமத்தில பேயாட்டம் உலாத்திக்கிட்டே... போய் படுல" என்று மிரட்டலாய் உரைக்க,

"தூக்கம் வரல மாம்ஸ்... பசிக்குது... அதான் ஏதாச்சும் சாப்பிடலாம்னு" என்று வயிற்றை பிடித்துக் கொண்டாள்.

"இந்நேரத்திலயா?!" அவன் அதிர்ச்சியுற,

"பசிச்சா டைமெல்லாம் பார்த்திட்டிருக்க முடியுமா?!"

"அது சரிதான்" என்றவன் அவளுக்காக அடுக்களையில் இருந்த பாத்திரத்தில் ஏதேனும் இருக்கிறதா என ஆராய,

"நான் அதெல்லாம் பார்த்துட்டேன்... எதிலயும் ஒண்ணுமில்ல மாம்ஸ்" என்றாள்.

அவளை யோசனையாய் ஏற இறங்கப் பார்த்தவன், "நீங்கதான் நல்லா சமைப்பீகளே... ஏதாச்சும் சமைச்சுக்கோங்க" என்று உரைக்க,

"முட்டையும் உடைஞ்சி போச்சு... என்ன செய்றது? பசியில மூளை வேலை செய்ய மாட்டேங்குது மாம்ஸ்" என்று தவிப்புற்றாள்.

"ஆளு மட்டும் ஓசரமா வளர்ந்திருக்கீக... ஆனா அறிவு மட்டும் வளரல"

"பசியில காதெல்லாம் அடைக்குது மாம்ஸ்... பேசி பேசி என்னை டார்ச்சர் பண்ணாதீங்க... நான் பேசாம தண்ணிய குடிச்சிட்டுப் போய் படுத்துக்குறேன்" என்றதும் அவளை ஏற இறங்க பார்த்தவன்,

"அதெல்லாம் வேண்டாம்... நீ இரு...நான் ஏதாச்சும் செஞ்சி தர்றேன்" என்றான்.

"நிஜமாவா?" அவள் ஆச்சர்யமாய் கேட்க,

"ஹ்ம்ம்... ஆனா நீங்க முட்டையை உடைச்ச இடத்தை சுத்தம் பண்ணுங்க... உங்க ஆச்சி வந்து பார்த்தாக... இரத்தக் கண்ணீர் விடுவாக" என்று சொல்லி ஒரு பழைய துணியை அவளிடம் நீட்ட,

"க்ளீன் பண்றதா... உவேக்... கையெல்லாம் ஸ்மெலடிக்கும்" என்று மூக்கைப் பொத்திக் கொண்டாள்.

"சாப்பிட மட்டும் முடியுமோ?!"

"ப்ளீஸ் மாம்ஸ்... பசிக்குது" என்றவள் இறங்கிய தொனியில் சொல்ல,

"அஞ்சே நிமிஷம்தான்... நீங்க சாப்பிட நான் சாக்லேட் தோசை செஞ்சு தர்றேன்... அந்த நேரத்துக்குள்ள நீங்க இந்த இடத்தை சுத்தம் செஞ்சிடணும்"  என்றான்.

அவள் முகமெல்லாம் பிரகாசிக்க, "சாக்லேட் தோசையா?!! அதெப்படி இருக்கும்" என்றவள் ஆவல் ததும்பக் கேட்க,

"அதான் சொன்னோம்ல சாக்லேட் தோசைன்னு... அப்புறம் என்ன எப்படியிருக்கும்னு கேள்வி... நீங்க முதல்ல சுத்தம் செய்யுங்க... நான் சமைச்சு தர்றேன்" என்றதும், "செம லா... இதோ டூமினிட்ஸ்ல க்ளீன் பண்ணிடுறேன்" என்றவள் வேகமாய் அந்த இடத்தைத் துடைக்க முற்ப்பட்டாள்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma

Quote

Super ma 

You cannot copy content