You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam kondenadi - 26

Quote

26

கோபமும் தாபமும்

குரு வீட்டில் உள்ள எல்லோரும் முகப்பறையில் கூடி நிற்க, கோவில் பூசாரி மற்றும் சபரி, முருகவேல் மூவரும் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

தயா சொன்னது போலத்தான் அந்த பூசாரியும் விரலைவிட்டு ஏதோ வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

குரு அவர் என்ன சொல்லப் போகிறாரென கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க தயா அவன் காதோரம்,

"பூசாரி கணக்கு போடுறத பார்த்தா ஒண்ணும் சரியில்ல... ஹும்ஹும் இப்போதைக்கு உனக்கு சாந்தி முகூர்த்தம் இல்லவே" என்க,

குரு கடுப்போடு அவனை ஒரு முறை முறைத்தான்.

ஷிவானி நடப்பவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் மரகதத்திடம்,

"யாரு சித்தி அவரு... ?" என்று கேள்வி எழுப்ப,

"அவரு நம்ம ஐயனார் கோவில் பூசாரி... உங்க கல்யணத்தன்னைக்கு அவுகள நீங்க பார்த்திருப்பீகளே?" என்று கேட்க ஷிவானிக்கு அதெல்லாம் நினைவிலில்லை. அன்று அவள் இருந்த நிலைமைக்கு யார் முகத்தைதான் அவள் கவனித்தாள்.

"ஆமா... அவரு எதுக்கு வந்திருக்காரு சித்தி?"

"அட கிறுக்கு பயபுள்ள... அது தெரியாமலா நிக்குதே... உம்ம சாந்தி மூகூர்த்ததிற்குதான் தேதி குறிக்கிறாங்க" என்றவள் சொல்ல ஷிவானி மனம் தடதடத்தது. அவள் ஆழமாய் யோசித்துவிட்டு,

"அந்த பூசாரிகிட்ட... ஒரு டென் டேஸ் போஸ்ட்போன் பண்ணி வைக்க சொல்லுங்க" என்றாள்.

மரகததிற்கு சிரிப்பு பொங்க எல்லோரும் இருப்பதினால் அதனைக் கட்டுபடுத்திக் கொண்டவள் ஷிவானியிடம், "அப்படி எல்லாம் பேசக் கூடாது புள்ள... நல்ல விஷயத்தை எல்லாம் உடனே உடனே நடத்திபுடணும்" என்றாள்.

"யாருக்கு நல்ல விஷயம்?" ஷிவானி கோபமாய் வினவ,

"ரொம்ப கஷ்டம்ல என் தம்பி நிலைமை" என்று மரகதம் நொடித்துக் கொள்ள, ஷிவானி சலிப்போடு தலையை நிமிர்த்தினாள் அங்குள்ளவர்கள் மீது பார்வையை செலுத்த அப்போது குருவின் பார்வை அவளைத் தான் நோட்டம்விட்டுக் கொண்டிருந்தது.

அவள் மரகதத்திடம் பேசியதை எல்லாம் அவள் முகபாவனையில் ஒருவாறு கணித்துக் கொண்டவன் தன் ஒற்றை விரலைக் காட்டி அவளுக்கு எச்சரிக்கை விடுக்க,

அவள் முகம் சுணங்கினாள். அந்த சமயம் பூசாரி எல்லா ரிஷி மூல நதி மூல கணக்கை எல்லாம் சீராய் ஆராய்ந்து கணிக்கிட்டுவிட்டு,

"இன்னைக்கே நாள் நல்லாதானே இருக்கு... இன்னைக்கே வைச்சிக்கிடலாமே" என்றார்.

உடனே முருகவேல் திரும்பித் தன் மனைவியிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருக்க,

சபரி அப்போது, "ஒரு இரண்டு மூணு நாள் தள்ளி தேதி பாருங்களேன்" என்று பட்டென அவர் எண்ணத்தை எல்லோர் முன்னிலையிலும் சொல்லிவிட்டார். தன் செல்ல மகளின் தவிப்பை அவரை விடவும் யார் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

அவர் சொன்னதைக் கேட்டு எல்லோரின் முகமும் ஒவ்வொரு விதமாய் மாற, இதில் அதீத அதிர்ச்சியில் நின்றது குருவை விடவும் தயாதான்.

என்னவோ அவனின் முதலிரவையே தள்ளி வைக்கச் சொன்னது போல...

"என்ன ஒரு வில்லத்தனம் பார்த்தியாம்ல?!!" என்று தயா குருவிடம் முறைத்துக் கொண்டே சொல்ல,

அதற்குள் முருகவேலும், "என் மாப்பிள்ளை சொல்றதும் சரிதான்... புள்ள கொஞ்சம் பயந்திருக்காவ... நீங்க அடுத்த அடுத்த நாள்ல ஏதாச்சும் பாருங்களேன்" என்று அவரும் சொல்ல,

"உன் அப்பாரே உனக்கெதிரா சதி பண்ணுதாக... என்ன கொடுமை குரு இது?" தயா குருவின் தோளைத் தொட்டு உண்மையிலேயே...

ஆம்! உண்மையிலேயே வருத்தப்பட, குரு தாங்க முடியாமல் அவர் காலில் ஒரே மிதி மிதித்தான்.

"ஆ...." என்று தயா அலற,

எல்லோரும் அவன் புறம் தன் கவனத்தைத் திருப்பினர்.

மரகதம் தன் கணவனைப் பார்த்து, "என்னங்க?" என்று குழப்பமுறக் கேட்க தயா குருவை ஒரு பார்வை பார்த்தவன் சமாளிப்பான புன்னகையோடு,

"ஆ... அஅது தள்ளிப் போட்டுட்டே போனா ஆடி மாசம் வந்திடப் போகுதுன்னு" என்றவன் நீட்டி முழக்க

"என்னங்க உளர்றீங்க? ஆடி முடிஞ்சு இப்போ ஆவணில நடக்குது" என்று சொல்லி மரகதம் கணவனின் புத்தி கூர்மையை எண்ணி வியந்தாள்.

"சே !!ஆமால" தயா அசடுவழிய புன்னகைத்தவன்,

"அப்படின்னா சரி... நாளை இன்னும் பத்து நாள் கூட தள்ளிப் பாருங்க பூசாரி... பரவாயில்ல" என்று பெருமிதமாய் சொல்ல,

"அடப்பாவி மாமா!!" என்று மெலிதான குரலில் பல்லைக் கடித்து முறைத்தான் குரு. தங்கம் அப்போது தன் மகள் மரகதத்தைப் பார்த்து, "ஏன்டி உன் வூட்டுக்காரர் இப்படி சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசிட்டிருக்காக?" என்க,

"அவருக்கு இப்படிதான் அப்பப்போ லூசு பிடிச்சி போவும்... நீ அதெல்லாம் கண்டுக்கிடாதே" என்றாள். இப்போது பூசாரி இன்னும் தீவிரமாய் பஞ்சாங்கத்தை ஆராய்ந்துவிட்டு,

"ம்ஹும்... இன்னைக்கு விட்டா அப்புறம் நாள் ஒண்ணும் சரியில்ல... இன்னைக்கே வைச்சிப்புடுங்க... இன்னும் கேட்டா நேத்த விட இன்னைக்கு நாள் அம்சமா இருக்கு" என்றார்.

மீண்டும் எல்லோரும் தீவிரமான சிந்தனைக்குள் ஆழ,

"ரொம்ப யோசிக்காதீங்க.. இன்னைக்கே வைச்சுக்கிடுக நான் நல்ல நேரமா குறிச்சி தர்றேன்... நம்ம கருங்குளத்தூர் ஐயனார் ஆசியிருக்கையில என்ன பயம்... எல்லாம் சரியா வரும்" என்று பூசாரி உறுதியாக உரைக்க,

அதற்கு மேல் யாரும் மறுப்புத் தெரிவிக்க முடியாமல் எல்லோரும் பூசாரியின் முடிவிற்கே உடன்பட்டனர். இதில் உடன்பாடில்லாமல் இருந்தது சபரியும் ஷிவானியும்தான். ஆனால் அவர்கள் இருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தயா அப்போது குருவை சந்தேகித்துப் பார்த்து,

"எனக்கு என்னவோ பூசாரி உமக்கு சாதகமா பேசுற மாதிரியே தோணுது.. ஏம்ல... இதுல உன் கைங்கரியம் ஏதாச்சும் இருக்கோ?!" என்றவன் கேட்க,

"இந்த வீட்டிலயே என்னைய சரியா புரிஞ்சிக்கிட்ட ஒரே ஆளு நீரு மட்டும்தான்" என்றான் குரு குறும்புத்தனமான புன்னகையோடு!

"அடப்பாவி மக்கா" என்று தயா அதிர்ந்து குருவை பார்க்க,

அவனோ அப்போது யாரைப் பற்றியும் கவலையின்றி ஷிவானியைப் பார்த்து சமிஞ்சையால் ஏதோ சொல்லிக் கல்மிஷமாய் புன்னகையிக்க,

அவளோ அவஸ்தையோடு சங்கடப்பட்டுக் கொண்டிருந்தாள்.

"உனக்குக் கொஞ்சம் கூட கூறே இல்லையாவே... மொத்த குடும்பமே இங்கன கூடியிருக்கு... நீ பாட்டுக்கு அந்த புள்ளகிட்ட கண்ணைக் காட்டி ரோமன்ஸ் பண்ணிக்கிட்டு கிடக்க" என்று தயா குருவிடம் தாங்க முடியாத கடுப்போடு சொல்ல,

அவன் அப்போதும் ஷிவானியை பார்வையாலேயே சீண்டுவதை நிறுத்தாமல்,

"நான் என் பெண்ஜாதிகிட்ட ரொமன்ஸ் பண்ணுதேன்... நீங்க வேணா உம்ம பெண்ஜாதிகிட்ட பண்ணுங்க" என்றதும் தயா அப்படியே ஷாக்காயிட்டான்.

"யாரு? உங்க அக்காகிட்ட ரொமன்ஸ்... நல்லா வாயில வந்திர போது... அவ பாலுக்கு பதிலா பால்டாயில் கொடுப்பால எனக்கு" என்க,

குரு அப்போது சத்தமாய் சிரித்துவிட, முருகவேல் உடனே மகனைப் பார்த்து முறைக்க... சட்டென்று தன் சிரிப்பை அடக்கிக் கொண்டான் குரு.

பூசாரி புறப்படும் தருவாயில் ஷிவானியை வேறு அருகில் அழைத்து அவள் நெற்றியில் பட்டையாய் திருநீற்றைப் பூசிவிட்டார். அவள் பயத்தைப் போக்க!

ஆனால் அவள் பயத்தைப் போக்கவல்ல சக்தி அதுவல்ல. குருதான். அவனால் மட்டுமே அதை செய்ய முடியும்.

குருவும் தயாவும் வாசல் வரை பூசாரியுடன் வந்து அவருக்கு பணத்தைக் கொடுக்க, "என்னம்ல குரு.... உமக்கு சந்தோசமா?!" என்று கேட்டவர் சற்று குரலைத்தாழ்த்தி,

"மறந்துராத்லெ... என் தங்கச்சி பையன் நிச்சயத்துக்கு நீதான் சமையல் ஆர்டர் செஞ்சு கொடுக்கணும்" என்று அவர் சொல்ல

'அப்படிப் போகுதா கதை' என்று மனதில் எண்ணிக் கொண்டவன்,

"அதெல்லாம் நல்லா வகையா செய்வாக" என்றான் தயா முந்திக்கொண்டு!

"மாமா" என்று குரு கடுப்படிக்க,

"இல்ல...  மச்சான்... நல்லா வகை வகையா செய்யவேன்னு சொன்னேன்" என்று சமாளித்தான். குரு அவனை நொடித்துக் கொண்டு தன் பார்வையை திருப்பி,

"எல்லாம் நல்லா செஞ்சிபுடலாம் ஐயா... நான் பார்த்துக்கிடுதேன்... நீங்க போயிட்டு வாங்க" என்று பூசாரியிடம் உரைக்க,

"ஆகட்டும் தம்பி... அப்புறம் ஒரு விஷயம்" என்று தயங்கினார்.

"சொல்லுங்க" என்று மரியாதையாய் விளம்பினான் குரு.

"இராவுக்கு புள்ளயை பயமுறுத்தாம பார்த்து பக்குவமா நடந்துக்கோங்க" என்று அவர் பங்குக்கு அவனிடம் அறிவுரை வழங்கிவிட்டு செல்ல அவனுக்கு சொல்ல முடியாதளவுக்குக் கடுப்பேறியது.

"சிவானி உன் அழகில மயங்கினது நம்ம திருநெல்வேலி ஜில்லாவுக்கே தெரிஞ்சு போயிடும் போலவே" என்று குருவின் நிலைமை புரியாமல் தயா எள்ளல் செய்ய,

ஏற்கனவே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த குருவின் கோபத்தில் எண்ணெய்யை எக்கச்சக்கமாய் வார்த்தது போலிருந்தது அவன் வார்த்தைகள்.

தன் மாமனைப் பார்த்து முறைத்தவன் இயலாமையோடு விறுவிறுவென உள்ளே நடந்தான்.

"ஏ மச்சான்? சும்மா விளையாட்டுக்கு சொன்னேவே... கோச்சிக்கிடாதே" என்று சமாதானம் சொல்லி அவன் பின்னோடு நடக்க,

குரு கோபமாகத் தன் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொள்ள இவற்றை கவனித்த மரகதம் துணுக்குற்று,

"தம்பியை என்ன சொன்னீக? அவன் ஏன் கோபமா போறான்" என்று கேட்டாள்.

"மாமன் மச்சான்குள்ள ஆயிரம் இருக்கும்... அதெல்லாம் நீ ஏன்டி கேட்க!" தயா எரிந்துவிழ,

"நல்ல மாமன்... நல்ல மச்சான்... எப்படியோ போங்க" என்று அலுப்பாய் சொல்லிவிட்டு அகன்றாள் மரகதம்.

தயா மீண்டும் குருவை சமாதானம் செய்யலாம் என்று எண்ணிக் கொண்டு அவன் அறை நோக்கி செல்லப் பார்க்க, அப்போது ஷிவானியும் வேகமாய் அதே அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

இதற்கு மேல் தன் சேவை அவனுக்குத் தேவையில்லை என்று எண்ணியவன் அப்படியே அமைதியாய் நின்றுவிட்டான் சிறு புன்னகையோடு!

அறைக்குள் போன குருவோ, "என்னைய பார்த்தா எல்லாருக்கும் எப்படி தெரியுதுன்னு தெரியல" என்று தனக்குள்ளயே புலம்பியபடி மேல் சட்டையைக் கழற்றி மாட்டிவி

அவசரத்தில் அது தரையில் விழுந்து அவன் சட்டை பேக்கெட்டில் இருந்த சில்லறையெல்லாம் சிதறின.

"சே... இது வேற" என்று மேலும் கடுப்பானவன் அவற்றை எல்லாம் குனிந்து ஒவ்வொன்றாய் எடுத்துக் கொண்டிருக்க,

ஷிவானி அவன் அறையின் உள்ளே இருப்பதை கவனியாமல் அறைக்குள் நுழைந்துத் தாளிட்டுவிட்டு,

'கொஞ்சங் கூட கம்பாஃர்டபிளாவே(Comfortable) இல்ல... எவ்வளவு பின் பண்ணாலும் நின்னு தொலைய மாட்டேங்குது... இரிடேட்டிங்' என்று சொல்லி அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டே அணிந்திருந்த சேலையின் மாராப்பினை சரி செய்ய முற்பட்டு அதன் பின்னினை கழற்ற,

படுக்கைக்குக் கீழே விழுந்த சிதறிய சில்லறைகளை எடுத்துக் கொண்டிருந்த குரு, அவள் உள்ளே நுழைந்ததை கவனித்திருந்தான்.

அவளோ அவசரமாய் தன் சேலையைக் கழற்ற அவன் விழியில் சொல்லவொண்ணாத எதிர்பார்ப்பும் ஏக்கப் பெருமூச்சும் பலமாய் வெளியேறியது.

'குரு வேணாம்... தப்புல' அவனுக்குள் இருந்த ஒரு விளங்காத மனசாட்சி என்ற நல்லவன் குரல் கொடுக்க,

குரு எழுந்து மௌனமாய் அவள் பின்னோடு நின்றான். முன்னாடி இருந்த கண்ணாடியில் அவன் பிம்பத்தைப் பார்த்து அதிர்ந்தவள், தான் கழற்றிய முந்தானையை மீண்டும் மேலே சாற்றிக் கொண்டு

"நீங்க எப்படி ரூம்ல?" என்று பதட்டமாய் கேட்டுக் கொண்டே திரும்பினாள். 

"நான் ரூமுக்குள்ளதாம்ல இருந்தேன்... நீதான் என்னைய கவனிக்காம உள்ளற வந்து சீலையை" என்று நிறுத்தியவனின் பார்வை அவளை ஆழமாய் அளவெடுக்க,

"பொய் சொல்லாதீங்க மாம்ஸ்... நான் உள்ளே வரும் போது நீங்க இல்லயே" என்றாள் கோபமாக!

"பிறவு... கூரை மேல இருந்து குதிச்சேன்னாக்கும்." என்றவன் சொல்லி எகத்தாளமாய் பார்க்க அவள் புரியாமல் திகைத்தாள்.

"ரொம்ப யோசிக்காதல... என் சட்டை பையில இருந்த ரூவா நோட்டு சில்லறையெல்லாம் கைத் தவறி தரையில கொட்டிடுச்சு... அதைக் குனிஞ்சி எடுத்துக்கிட்டு கிடந்தேன்... அப்பன்னு பார்த்துதாம்ல நீ உள்ளற வந்திருக்க" என்றவன் தெளிவுப்படுத்த,

"ஓ!" என்றவள் தன் தவறை உணர்ந்து  மூச்சை இழுத்துவிட்டுக் கொள்ள, சட்டென்று அவள் மராப்பு பிணைப்பின்றி அவள் மேலிருந்து நழுவிச் சரிந்தது.

குருவின் பார்வை ஒரு நொடி அவளின் முன்னழகில் மொத்தமாய் கிறங்கிப் போய் அசைவற்றுக் கிடக்க அவன் மனசாட்சி,

'நீயே நல்லவனா இருக்கலாம்னு பார்த்தாலும் அது நடக்காது போலயே குரு' என்று புலம்பியதே!

அவளோ பதட்டத்திலும் அவசரத்திலும் தன் முந்தானையை இழுத்து தோளில் பிடித்து நிறுத்த முயல, அது நிற்காமல் தடுமாறி கொண்டே இருக்க அவள் அவதியுற்றாள்.

அவன் மெல்லிய புன்னகையோடு அவளை நெருங்கி வர,

"மாம்ஸ்... ப்ளீஸ் நீங்க கொஞ்சம் வெளியே போங்க" என்றவள் அச்சத்தோடு பின்புறம் நகர்ந்தவள், முந்தானையை தோளோடு நழுவிவிடாமல் கெட்டியாய் பிடித்துக் கொண்டாள்.

அவன் அவள் வார்த்தைகளுக்கு துளியளவும் செவி சாய்க்காமல் அவளை நெருங்கி வந்திருக்க அவளுக்குப் பதட்டமானது. அவள்  விழிகளை மூடிக் கொள்ள, அவனோ அவள் சேலையின் அடிமுந்தானையை பிடித்து எடுத்து அவள் இடையில் சொருகிவிட,

"மா... ம்ஸ்" என்று அவன் தீண்டலில் பெண்ணவள் உணர்ச்சிகள் சிலிர்ப்படைந்து விழிகள் திறந்தாள்.

"இப்படி சொருகினா முந்தானை நிக்க போவுதாக்கும்... இதுக்கு போய் எதுக்கல இம்புட்டு ஆர்பாட்டம்" என்று சொல்லி அவள் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்தான்.

"ஆ" என்றவள் தலையைத் தேய்த்து கொள்ள ஆழ்ந்த பார்வை பார்த்தவன், "என்ன செஞ்சிடுவேன்னு நினைச்சு இப்ப கண்ணை மூடிக்கிட்ட?"  என்று கேட்டான்.

"உம்ஹும்" அவள் படபடப்போடு தலையசைக்க, அவளை அப்படி பயந்த மேனிக்கு பார்த்தவனுக்கு எரிச்சலும் கோபமும் சரமாரியாய் ஏற,

"இப்ப நான் உன்னை என்னம்ல பண்ணிட்டேன்... எதுக்கு என்னைய பார்த்து பயப்படுறீக?" என்றவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே மரகதம் கதவைத் தட்டி "குரு" என்று அழைப்புவிடுக்க,

அவளைக் கோபமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு விறுவிறுவென நடந்து கதவைத் திறந்தான்.

மரகதம் ஒரு நொடி தன்  பார்வையால் ஷிவானியும் குருவையும் அலசி ஆராய்ந்து பார்த்தவள் அதிர்ச்சி நிரம்பிய பார்வையோடு,

"என்னம்ல... பண்ணி வைச்சிருக்க" என்று குரலைத் தாழ்த்திக் கேட்டாள். அவள் பார்வை இருவரையும் ஒருவிதமாய் பார்க்க அப்போதுதான் குரு அவன் மேற்சட்டையில்லாமல் நிற்பதைக் கவனித்தான்.

அதே நேரம் ஷிவானியும் தன் புடவை முந்தானையெல்லாம் கலைந்தபடி நிற்க, அவன் தன் தமக்கை என்ன எண்ணமிட்டுக் கொண்டிருப்பாள் என புரிந்தவன்,

"அக்கா நீ நினைக்கிற மாதிரி எல்லாம்" என்று ஆரம்பிக்க அவள் அவனைப் பேசவிடவில்லை.

"சரியான ஆக்கங்கெட்ட கூவைல்ல நீயி... அப்புறம் எதுக்கு மெனகெட்டு பூசாரியை அழைச்சி பெரியவங்க தேதி நேரம் குறிச்சிருக்காவ" என்றவள் தொடர,

"அக்கா ஒரு நிமிஷம்" என்று குரு அவளை நிறுத்த,

"நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்... போய் முதல்ல சட்டையை போடுல... அப்பாரும் அம்மையும் உன்னைய இப்படிப் பார்த்து வைக்க போறாக"

"சும்மா நிறுத்துறியா... இங்கே எதுவும் நடக்கல... நானும் எதுவும் பண்ணல" என்று குரு வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

"அதெப்படில ஓரே வசனத்தை அச்சு பிசகாம சொல்லிக்கிட்டு திரியிறவன்" என்று கேட்டபடி தயா முன்வந்து நிற்க, "மாம்ம்ம்மா" என்று பல்லைக்கடித்தான்.

"அய்யோ மச்சான்... நீ ஷிவானி கூட ஒண்ணா இருந்த விஷயத்தை நான் சொல்லவேயில்ல... உம்ம அக்காளே  கண்டுபிடிச்சிருக்காவ" என்க,

"நீ வேற கோபத்தைக் கிளப்பாதே மாமா போயிரு" என்றான்.

"செய்றதெல்லாம் செஞ்சிபுட்டு அவரு மேல ஏன்டா கோச்சுக்கிற?" என்று கணவனுக்குப் பரிந்து கொண்டு வர தயாவிற்கே ஒரே பெருமிதம்!

குருவுக்கு தாளமுடியாத கடுப்பு!

"யக்கோவ்... உம்ம வீட்டுக்காரரைப் பார்த்து தெரியாம அப்படி சொல்லிப்புட்டேன்...  நீ வேற ஏதாச்சும் பிரச்சனையை கிளப்பிடாதே" என்றவன் கையெடுத்துக் கும்பிட

"நான் ஏம்ல பிரச்சனை பண்ண போறேன்... எனக்கு அந்தளவுக்கு கூடவா கூறு இல்ல" என்று அமைதியாய் பேசியவள் மேலும்,

"சரி நடந்தது நடந்து போச்சு...  இனிமேயாச்சும் கொஞ்சம் சூதானமா நடந்துக்கிடு... அப்புறம் ஷிவானி ஏற்கனவே பயந்திதருக்காவ...

நீ வேற அந்த புள்ளகிட்ட இப்படியெல்லாம் நடந்துக்கிட்டன்னா இன்னும் பயந்திடுவாகளாக்கும்... எல்லாம் உம்ம நல்லதுக்குதான் சொல்றேன்...  புரிஞ்சி நடந்துக்கிடுல" என்று சொல்லிவிட்டு மரகதம் அகன்றாள்.

'இப்ப என்ன நடந்துச்சு? நான் எப்படியெல்லாம் நடந்துக்கிட்டேன்... அட ராமா' என்று தனக்குத்தானே முனகியவன் தலையிலடித்துக் கொள்ள அப்போது குரு அருகில் வந்த தயா ,

"விடு மச்சான்... இதெல்லாம் சகஜம்தான்... உங்க அக்கா பேசிட்டு போறளவுக்கு நீ செஞ்சது அம்புட்டு பெரிய குத்தமெல்லாம் இல்ல" என்றவன் சொல்ல குரு அலுத்துப் போய் மூச்சை இழுத்துவிட்டான்.

தயா மேலும், "என்ன ஓண்ணு?  ஆக்கப் பொறுத்தவன் கொஞ்சம் ஆறப் பொறுத்திருக்கலாம்... அதுக்குள்ள என்னம்ல அவசரம்?" என்று சொல்ல 

அப்போதைய குருவின் மனநிலையை எப்படி விவரிக்க!

"எப்ப்ப்ப்படி மாமா? இப்ப்ப்ப்படி  சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பழமொழியை அள்ளி வீசுதீக!"

"எல்லாம் தானா வருதுல" என்று பெருமிதமாய் சொன்னான் தயா!

"எனக்க்க்க்கும் நல்ல்ல்லா வருது... ஆனா அக்கா வீட்டுக்காரரா போயிட்டீக... அதான் பார்க்குதேன்" என்று குரு முகம் சிவக்க, அப்போது ஷிவானி  அங்கே நடந்த நிகழ்வுகளுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது போல அந்த அறையை விட்டு வெளியேறினாள். அவனின் மொத்த கோபமும் அவள் மீது திரும்பியது.

அதுவும் எல்லார் பார்வையில் தன்னைக் குற்றவாளியாய் நிறுத்தியதில்லாமல் அவள் அதனை ஆமோதிப்பது போல் மௌனமாய் இருப்பது அவன் மனதை ஆழமாய் காயப்படுத்தியிருந்தது.

ஆதலாலயே அன்றைய இரவுக்காக அவன் ரொம்பவும் ஆர்வமாய் காத்திருந்தான். அவள் மீதான அவன் கோபத்தையும் தாபத்தையும் ஒரு சேர தீர்த்துக் கொள்ள கிடைக்கும் தருணமல்லவா அது?

அதே நேரம் ஷிவானி அன்றைய இரவைக் குறித்து பெருமளவுக்காய் பயங்கொள்ளவில்லை. அதுவும் அறைக்குள் அவள் சேலை சரிந்த போது குரு  கண்ணியத்தை நேரே கண்ட பின் அந்தளவுக்கான பயமில்லை அவளுக்கு. மனம் லேசாகியிருந்தது.

எந்தவித எதிர்பேச்சுகளும் இல்லாமல்  முதலிரவுக்கு அவள் தயாராகி இருந்தாள். வேதாவிற்கும் மரகதத்திற்கும் அத்தனை வியப்பு.  எல்லாம் தானே சரியாய் நடக்கிறதென அவர்கள் எண்ணி மனமகிழ்ந்து கொண்டனர்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content