You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam kondenadi - 30

Quote

30

பூரிப்பும் ஆனந்தமும்

சபரி உறக்கம் வராமல் படுக்கையின் மீது புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்க, வேதாவின் தூக்க நிலை கலைந்தது.

"என்னங்க தூக்கம் வரலயா?" அரைகுறை தூக்கத்திலேயே அவர் கேட்க, "உனக்கு நல்லா தூக்கம் வருது போல" மனைவியிடம் குத்தலாய் வினவினார் சபரி,

வேதா கண்களை கசக்கிக் கொண்டு விழிக்க, சபரி அப்போது எழுந்துஅமர்ந்தார்.

"என்னங்க ஆச்சு?" சற்று சலிப்போடே வேதாவும் எழுந்து அமர,

"என்ன நொன்னங்க ஆச்சு?" என்றபடி மனைவியை உஷ்ணமாய் ஒரு பார்வை பார்த்தார்.

"ப்ச்... இப்ப உங்க பிரச்சனைதான் என்ன?"

"வாணிம்மா நைட்டு சாப்பிட கூட இல்ல" என்றவர் மனம் தாங்காமல் பொறுமிக் கொண்டிருக்க வேதா பெருமூச்செறிந்து,

"இப்ப இதான் உங்க பிரச்சனையா?" என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்டார்.

"என்னடி ரொம்ப அசால்ட்டா சொல்ற? வாணிம்மா பசி தாங்க மாட்டான்னு உனக்குத் தெரியாது?!"

"ஏன் தெரியாம? நல்லா தெரியுமே... பசிச்சா உங்க பொண்ணு வீட்டையே இரண்டாக்கிடுவாளே" என்று சொல்லி இடைவெளிவிட்டவர்,

"அப்படி பட்டவ இராத்திரி சாப்பிட வரலன்னா என்ன அர்த்தம்னு உங்களுக்குப் புரியலயா?"  வேதா நமட்டுச் சிரிப்போடு உரைக்க, மேலும் கோபமானார் சபரி.

"எனக்கென்னவோ அப்படியெல்லாம் தோணல... உன் தம்பி வீட்டுக்கு வரும் போதே முறைச்சுக்கிட்டே வந்தான்... அதுவுமில்லாம அவன் வாணிம்மாகிட்ட கோபமா பேசிட்டிருந்ததை நான் பார்த்தேன்... அவன் ஷிவானிகிட்ட சண்டை கிண்டை போட்டு... அவ பாவம் அப்படியே அழுதிட்டு தூங்கிட்டிருப்பாளோன்னு எனக்குக் கவலையா இருக்கு" என்றவர் தவிப்போடு சொல்ல வேதாவிற்கும் ஒருநிலையில் அப்படி கூட இருக்குமோ என்று யோசிக்கத் தோன்றியது.

அதே நேரம் குரு அவளை அப்படியெல்லாம் அழ விட மாட்டான் என்ற நம்பிக்கையும் உள்ளுக்குள் எழ, "அப்படி எல்லாம் இருக்காது... நீங்க மனசைப் போட்டு குழப்பிக்காம படுங்க... எதுவாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம்" என்றார் வேதா.

சபரியின் மனம் இந்த வார்த்தைகளில் எல்லாம் ஆறுதல்  அடையுமா என்ன?

மகளின் முகத்தைப் பார்த்தால்தான் அவர் மனம் நிம்மதியடையும். ஆதலால் அவர் அப்படியே யோசனையாய் அமர்ந்திருக்க, கணவனைப் பார்த்த வேதா மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு,

'இந்த மனுஷனுக்கெல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாது... நாம படுப்போம்... எப்படியோ போகட்டும்' என்று எண்ணிக்கொண்டு மீண்டும் அவர் படுக்கையில் சரிந்தார்.

ஆனால் சபரிக்கு உறக்கம் வரவில்லை. படுப்பதற்கும் மனம் இல்லை.

மகளைக் குறித்த சபரியின் கவலை முற்றிலும் உண்மை. கிட்டதட்ட அப்பாவைப் போலவே மகளுக்கும் அங்கே உறக்கம் வரவில்லை. பசியால் அவள் வயிற்றில் இரண்டு மூன்று பெருச்சாலிகள் ஓடி கொண்டிருக்க, இந்நிலையில் அவளுக்கு எப்படித் தூக்கம் வரும்.

படுக்கையில் உழன்று கொண்டிருந்தவளுக்கு அப்போதைய பெரிய பிரச்சனை உலக்கை!

ஆம்! அவள் தேகத்தை உலக்கை போல அழுந்தப் பற்றியிருந்த அவள் கணவனின் கை!

அதனை எடுக்க படாதபாடுபட்டுக் கொண்டிருந்தவளுக்கு ஒரு நிலைக்கு மேல் பொறுமையில்லை.

அவளுக்கு அப்போது ஓர் விபரீத யோசனை உதிக்க, கணவனின் கன்னத்தை எம்பிக் கடித்து வைத்துவிட்டாள். அவளுக்கு இருந்த கோர பசிக்கு அவள் எப்படிக் கடித்திருப்பாள் என்று சொல்லவா வேண்டும்.

குரு பதறி துடித்து அலறி எழுந்து அமர்ந்தவன் கன்னத்தை தேய்த்துக் கொண்டே ஷிவானியின் முகத்தை திரும்பி பார்க்க, அவள் தப்பிக்கும் உபாயமாக தலையணையை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டாள்.

அவன் படுகோபமாக அந்த தலையணையை வீசியெறிந்தவன், "ஏம்ல கடிச்ச... இன்னுமால உன் கோபம் தீரல" என்றவன் எகிறிக் கொண்டு வர,

"சாரி மாம்ஸ் சாரி மாம்ஸ்... பயங்கரமா பசிச்சுது... உங்களை எழுப்பலாம்னு... அதுவும் இல்லாம உங்க கையை வேற எடுக்க முடியல... அதான்!" என்றவள் அச்சப்பட்டுக் கொண்டு சொல்ல குருவின் கோபமெல்லாம் இறங்கியது.

"அதுக்கு ஏன்டி கடிச்சவ? ஆசையா மாமனுக்கு ஒரு முத்தம் கொடுத்திருந்தா எழுந்திரிச்சிக்க போறனாக்கும்" என்றவன் முறுவலித்துச் சொல்ல,

"எதுக்கு? நீங்க மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கவா? அந்த விளையாட்டுக்கு நான் வரல" என்று முகத்தைச் சுருக்க குரு கலீரென்று சிரித்துவிட்டான்.

அவள் இறுகிய பார்வையோடு, "சிரிக்காதீங்க மாம்ஸ்... என் கஷ்டம் உங்களுக்கு காமெடியா இருக்கா?" என்றவள் வயிற்றை இழுத்துப் பிடித்து கொண்டு,

"பசிக்குது மாம்ஸ்" என்றாள் பரிதாபமாக!

"ஏன்டி... மொத்த அல்வாவையும் எனக்குக் கூட கொடுக்காம நீதானல மொக்குன "

"அதெல்லாம் ஸைட் டிஷ்... நான் மெயின் டிஷ் எதுவும் சாப்பிடவே இல்லையே!" என்றவள் இறங்கலாய் சொல்ல அவன் தலையிலடித்துக் கொண்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.

"மாம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்றவள் இழுக்க அவளை யோசனையாய் ஏறிட்டவன்,

"போல... போய் அடுக்கைளையில ஏதாச்சும் இருக்கும்... கொட்டிக்கிட்டு வந்து சேரும்" என்றவன் சொல்லிவிட்டு போர்வையை போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டான். அவள் நகத்தைக் கடித்து கொண்டு மெதுவாய் அவன் முகத்திலிருந்த போர்வையை விலக்க,

"என்னடி?" என்றவன் பல்லைக் கடித்தான்.

"சாக்லேட் தோசை செஞ்சு கொடுங்களேன்" என்றவள் கெஞ்சலாய் கேட்க,

"ஏய்... என்னல விளையாடுதியா? இப்பவே மணி மூணாக்கும்... நான் விடிஞ்சதும் மெஸ்சுக்கு வேற புறப்படணும்... நிறைய சோலி கிடக்கு... மனுஷனைத் தூங்க விடுறி" என்றவன் சொல்லிவிட்டு மீண்டும் போர்வையை போர்த்திக் கொள்ள அவளுக்கு கோபம் கனலாய் ஏறியது.

அவன் போர்வையை அவசரமாய் விலக்கிவிட்டவள்,

"என்னவோ நான்தான் உங்க தூக்கத்தைக் கெடுக்குற மாதிரி பேசிட்டிருக்கீங்க... நீங்கதான் என்னைத் தூங்கிவிட மாட்டிறீங்க... சாப்பிட விடமாட்டிறீங்க... தனியா குளிக்கக் கூட விடமாட்டிறீங்க" அவள் அடுக்கடுக்காய் அவன் மீது குற்றங்களை சாட்ட  குருவால் தன் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"போங்க... எனக்கு எதுவும் வேண்டாம்... நான் தூங்கறேன்" என்று படபடவென பொரிந்துவிட்டு அவள் கோபமாய் படுத்துக் கொள்ள,

அவளை மெல்ல நெருங்கி அணைத்தவன், "சரி... மாமன் சாக்லேட் தோசை செஞ்சு தர்றேன்... பதிலுக்கு நீயும் மாமனுக்கு ஏதாச்சும் தரணும்" என்றவன் அவள் காதோரம் கிசுகிசுக்க அவசரமாய் திரும்பியவள்,

"நானும் பதிலுக்கு ஏதாச்சும் சமைச்சு தரட்டா" என்று கேட்டு வைத்தாள்.

"அதுக்கு பதிலா என் தலையில பெரிய கல்லா தூக்கி போடுல" என்று சொல்லி கோபமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டான் குரு.

"மனுஷன் என்ன கேட்கிறேன்னு கூட தெரியாம" என்றவன் புலம்பியபடி படுத்துக் கொண்டிருக்க

அவள் அவன் காதோரம் நெருங்கி,

"இறுக்கி அணைச்சி ஒரு உம்மா தரவா?!" என்றவள் சொன்னதுதான் தாமதம்.

அவன் முகம் பிரகாசிக்க அவள் புறம் திரும்பியவன் அவளை அணைக்க எத்தனிக்கவும் பட்டென விலகிக் கொண்டவள்,

"சாக்லேட் தோசை சாப்பிட்ட பிறகு" என்றாள்.

"இப்ப சொன்னியல... இது நியாயம்" என்றவன் போர்வையை விலக்கி எழுந்து கொண்டவன் ,

"இங்கனயே இரு... நான் போய் சுட்டு எடுத்துட்டுவர்றேன்" என்றான்.

கதவருகே சென்றவனிடம், "மாம்ஸ் நானும் ஹெல்ப் பண்ண வர்றட்டா" என்றவள் கேட்க,

"ஆணியே புடுங்க வேணாம்... நீ இங்கனயே படுத்துகிட" என்று சொல்லி விறுவிறுவென கதவைத் திறந்து கொண்டு சென்றான்.

குரு அடுக்களைக்கு விரைந்து தேவையான பொருட்களை எடுத்து சாக்லேட் தோசை மாவை தயார் செய்து  அவன் தோசையைக் கல்லில் ஊற்றிய சமயம்,

தூக்கம் வராமல்  தவித்திருந்த சபரி தண்ணீர் குடிக்க வந்து அங்கே குருவின் செய்கையைப் பார்த்து ஆச்சர்யத்தில் சிலையாய் நின்றுவிட்டார். 

'இந்த நேரத்தில இவன் என்னத்த பண்ணிகிட்டிருக்கான்' அவர் இவ்விதம் எண்ணமிட்டுக் கொண்டிருக்க, குரு எதேச்சையாக திரும்பியவன் அவரைப் பார்த்ததும் அதிர்ந்து நின்றான்.

"இந்த நேரத்துல என்ன பண்ணிகிட்டிருக்க குரு?" என்று சபரி யோசனைக்குறியோடு  வினவ, என்ன சொல்லி இவரை சமாளிப்பதென்ற எண்ணத்தோடு ஏறிட்டவன்,

"பசிக்குது... சாப்பிடலாம்னு" என்று பதிலளித்தான்.

சபரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. தன் மகள் அங்கே சாப்பிடாமல் இருக்க, இவனுக்கு மட்டும் சாப்பிட வேண்டுமா என்று தவறாய் புரிந்து கொண்டவர் பதிலேதும் பேசாமல் தண்ணீரைப் பருகிவிட்டு திரும்ப ஷிவானி வந்து முன்னே நின்றாள்.

ஷிவானியைப் பார்த்ததும் அவர் முகம் அத்தனைப் பிராகாசமாக மாற அவள் தலையைத் தடவியவர்,

"என்ன வாணிம்மா? நீ இன்னும் தூங்கலயா?" என்று வினவ,

"ரொம்ப பசிச்சுது... அதான் எழுந்துட்டேன்... மாம்ஸ் எனக்காக சாக்லேட் தோசை ப்ரிப்பேர் பண்ணித் தர்றாரு" என்றவள் பெருமிதத்தோடு உரைக்க,

உடனடியாய் சபரி குருவின் புறம் திரும்ப அவன் அப்படியே எதிர்புறம் திருப்பிக் கொண்டான்.

'போட்டு கொடுத்துட்டாளே?! ஏற்கனவே இந்த மனுஷனுக்கு நம்ம மேல மரியாதையே இல்ல... இதுல இவ வேற' என்றவன் எண்ணிக் கொண்டிருக்க, சபரியோ அதற்கு நேர்மாறாய் எண்ணிக் கொண்டிருந்தார்.

அவருக்கு இந்த நொடிதான் அவன் மீது இன்னும் மரியாதை பெருகியிருந்தது. ஷிவானி தன் தந்தையைப் பார்த்து,

"டேட்... நீங்களும் சாப்பிடுங்க... செம டேஸ்ட்டா இருக்கும்" என்று உரைக்க  அவர் முகம் மலர,

"இருக்கட்டும் வாணிம்மா... நீ சாப்பிடு" என்று மகளின் தலையைத் தடவிவிட்டு அவர் சென்ற மறுகணம் ஷிவானியின் தலையில் நங்கென்று ஒரு அடி விழுந்தது கரண்டியில்!

அதிர்ச்சியாய் திரும்பியவள், "இப்ப எதுக்கு அடிச்சீங்க?" என்று குருவைக் கேட்க,

"உன்னைய உள்ளேதானே இருக்க சொன்னேன்... ஏம்ல வெளியே வந்த" என்று கேட்டு முறைத்தான்.

"நீங்க ரெடி பண்ணிட்டீங்களான்னு பார்க்கலாம்னு வந்தேன்"

"அவசரக் குடுக்கை... சுட்டு எடுத்துட்டு வரமாட்டேன்" என்று சொல்லி திரும்பியவன் தோசையைப் பார்த்தபடி,

"வந்ததில்லாம மாமா தோசை சுடுறாரு அது இதுன்னு சொல்லி என் மானத்தை வாங்கிட்டிருக்க" என்றவன் தொடர்ச்சியாய் திட்டினான்.

அவளோ அவன் கோபத்தையோ திட்டையோ சற்றும் பொருட்படுத்தவில்லை அவனை அப்படியே பின்னிருந்து அணைத்துக் கொண்டு,

"என் மாம்ஸ் எனக்காக தோசை சுடுறாருன்னு சொன்னேன்... இதுல என்ன குறைஞ்சு போச்சு" என்று சொல்ல

"ஏய் என்னடி பண்ற?" என்றவன் தவிப்புற்றான்.

"ஐ லவ் யூ மாம்ஸ்... ஐ லவ் யூ ஸோ மச்" என்று அவள் இன்னும் அவளின் கரத்தை அவன் மேல் இறுக்கியபடி உரைக்க,

அவனுக்கு மோகம் ஏறியது.

"இப்படியெல்லாம் நீ பண்ணா... தோசை வருதோ இல்லயோ மூடு வருது" என்க, "சீ போங்க" என்று வெட்கத்தோடு விலகியவளை குரு இழுத்து தன் ஒற்றை கரத்தால் அணைத்துக் கொண்டபடியே தோசையை வார்த்தான்.

இருவரும் பின்னர் ஜோடியாய் முற்றத்தில் வந்தமர்ந்து கொண்டு மாறி மாறி ஊட்டிக் கொள்ள இந்த காட்சியை தன் அறைக்குள் இருந்தபடி பார்த்து ரசித்தார் சபரி.

அவர்களின் கொஞ்சல்களையும் சீண்டல்களையும் பார்க்க சற்றே சங்கடமாய் இருந்தாலும் மகள் சந்தோஷமாய் இருப்பதைப் பார்த்து உள்ளமெல்லாம் பூரிக்க, விழியோரம் கண்ணீர் துளிர்த்து விழுந்தது.

அதே நேரம் படுக்கையிலிருந்தபடியே கணவனைக் கண்காணித்த வேதா அப்படியென்ன அவர் ஆவலாய் பார்க்கிறார் என்று எட்டிப் பார்த்தவளுக்கும் சொல்லவொண்ணா ஆனந்தம் !

அவர் தன் கணவனின் தோளைத் தட்ட, அப்போது திரும்பிய சபரி மனைவியைப் பார்த்து அசடுவழிய, "உங்க மனசு இப்போ நிம்மதியாயிடுச்சா?" என்று கேட்டார் வேதா.

"ஹ்ம்ம்ம்" என்று இறுக்கமான முகபாவத்தோடு தலையசைத்துவிட்டு அறைக்குள் வர,

அவரே மறைக்க எண்ணினாலும் அவர் முகத்தில் தேங்கியிருந்த பூரிப்பும் விழியோரம் கசிந்து நின்ற கண்ணீரும் அவர் மனநிலையை காட்டிக் கொடுத்துவிட்டது.

ஷிவானியும் குருவும் செய்து கொண்டிருந்த அலப்பறையை இவர்கள் மட்டுமா பார்த்தார்கள். அந்த நொடி மற்றொரு ஜோடியும் ஓரமாய் நின்று பார்த்துக் கொண்டிருந்ததே!

"ஏதோ புள்ளைங்க இரண்டும் சண்டை போட்டுக்குச்சோன்னு பயந்துகிட்டு கிடந்தவ... அங்கன பாரு" என்று அந்த கண்கொள்ளா காட்சியை முருகவேல் தங்கத்திடம் காண்பிக்க,

"அடியாத்தி! இதென்னங்க கூத்தா இருக்கு... இரண்டு பேரும் மூஞ்சியை தெக்கையும் வடக்கையும்ல தூக்கி வைச்சிட்டிருந்தாங்க" என்று ஆச்சர்யமானார் அவர்.

"சின்னஞ் சிறுசுங்கல... அப்படிதான் சண்டை போடுவாயிங்க... சமாதானம் ஆவாய்ங்க... அதெல்லாம் நாம கண்டுக்கிட கூடாது" என்றார் முருகவேல்.

"என் கண்ணே பட்டிரும் போல" என்று தங்கம் ஆனந்தக் களிப்போடு தூரத்தில் இருந்தபடியே அவர்களுக்கு திருஷ்டி கழித்தவர்,

"என் ராசா... என்னம்மா தோசை வார்த்து பெண்ஜாதிக்கு ஊட்டிவிட்டுட்டிருக்கான் பார்த்தீங்களா?" என்றவர் சொல்லிவிட்டு கணவனின் புறம் திரும்பி பெருமூச்செறிந்து,

"ம்க்கும்... எல்லோருக்குமா அந்தக் கொடுப்பனை வாய்க்கும்... என் பேத்திக்கு வாய்ச்சிருக்கு... ராசிக்காரி" என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றார்.

"உன் மவன் ஒரு தோசையை சுட்டு கொடுத்ததுக்கா இந்த சலம்பு சலம்புற" முருகவேல் மனைவியின் பின்னோடு சென்று கேட்க,

"என்ன அம்புட்டு சுளுவா சொல்லிப்புட்டீக...எங்க?  என் மவன் சுட்ட மாதிரி நீங்க ஒண்ணே ஒண்ணு சுட்டுக் காட்டுங்களே பார்ப்போம்" என்றவர் எகத்தளமாய் நீட்டி முழக்க,

"ஆமா ஆமா... தோசை சுடுறதெல்லாம் ஒரு பெரிய இந்த வேலையாக்கும்... அதைப் போய் பெரிசா பேசிக்கிட்டு"

"ம்க்கும்... ஆட தெரியாதவனுக்கு கூடம் பத்தலயாம்" என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டு அவர் படுத்துக் கொள்ள,

"இப்ப என்னல ? நான் தோசையை சுட்டு உம்ம வாயில ஊட்டி விடணும்கிறியோ?!" முருகவேல் முறைத்துக் கொண்டே கேட்டார்.

"அய்யோ சாமி... நான் எப்போ அப்படி சொன்னேன்" என்று தங்கம் பதட்டப்பட,

"பிறவு என்னத்துக்கு புலம்பிட்டு கிடக்க" என்றார் முருகவேல் உதட்டோரம் லேசாய் இழையோடிய புன்னகையோடு!

தங்கம் படுக்கையில் படுத்துக் கொண்டு, "வயசானாலும் இந்த குசும்பு மட்டும் குறையலயே" என்று முனக,

"யாருக்குல இப்போ வயசாயிடுச்சுங்கிறவ?" என்று குரலை உயர்த்தினார் முருகவேல்.

"எனக்குதேன்... நீங்கெல்லாம் அப்படியே பதினெட்டு வயசு குமரனாவே இருக்கீகல்ல" என்க,

"நீ சொன்னாலும் சொல்லலனாலும் நான் குமரன்தேன்" என்று தன் அருவா மீசையை அவர் நீவிவிட்டுக் கொள்ள,

"கர்மம் கர்மம்" என்று தன் கணவனின் கண்ணில் படாமல் தலையில் அடித்துக் கொண்டார் தங்கம். இவர்களின் சம்பாஷணைகள் இப்படி நடந்து கொண்டிருக்க விழித்துக் கொண்டே மௌன நிலையில் இருந்தனர் வேதாவும் சபரியும். ஓர் ஆழ்ந்த கனத்த மௌனம் !

இருவரும் ஏதோ பேசிக் கொள்ள நினைக்க, வார்த்தைகள்தான் பிடிபடவில்லை. மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு ரொம்பவும் சிரமப்பட்டே வேதா அந்த மௌன நிலையைக்  கலைத்தார்.

"ஏங்க" என்றவர் அழைக்க,

"ஹ்ம்ம்" என்றார் சபரி!

"நாம எப்போ மலேசியா போறோம்?" வேதா தன் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வியை சபரியிடம் கேட்டுவிட,

மறுபடியும் ஓர் கனத்த மௌனம்.

"என்னங்க?" என்று வேதா மீண்டும் கேட்க அவரிடம் இருந்து பதிலில்லை.

"என்னங்க... தூங்கிட்டீங்களா?" திரும்பிப் படுத்திருக்கும் கணவனின் கரத்தின் மீது அவர் கை வைக்க, "உம்ஹும்" சபரியின் குரல் மெலிதாய் வெளிவந்தது.

இருளில் அவரின் முகபாவத்தை வேதாவால் பார்க்க முடியாமல் போக,

"என்னங்க பேசுங்க?" என்றவள் கேட்ட நொடி விசும்பலும் அழுகை ஒலியும் கேட்டது.

வேதா பதறித் துடித்து விளக்கைப் போட சபரி அழுத நிலையில்தான் இருந்தார். அவர் விழி குளமாய் மாறியிருக்க கன்னமெல்லாம் கண்ணீர் தடம். விளக்கு வெளிச்சத்தைப் பார்த்ததும் சபரி எழுந்தமர்ந்து தன் கண்ணீரை வேகவேகமாய் துடைத்துக் கொண்டுவிட,

"என்னங்க? ஏன் இப்போ அழறீங்க?" என்று வேதா தவிப்போடு வினவ, அவர் முகத்தில் சொல்லிலடங்கா வேதனை குடி கொண்டிருந்ததை பார்த்து வேதாவின் மனமும் வேதனையில் ஆழ்ந்தது.

"மலேசியாவுக்கு நாம வாணிம்மாவைக் கூட்டிட்டு போகவே முடியாதுல வேதா"

ஏக்கமாய் தவிப்பாய் அவஸ்தையாய் வந்தது அந்த கேள்வி அவரிடமிருந்து!

வேதா தலையைக் கவிழ்ந்தபடி, "அதெப்படிங்க அவளை?" என்று சொல்லும் போதே தடுமாறியது அவர் குரலும்!

"முடியல வேதா... என்னால இந்த உண்மையை ஏத்துக்க முடியல... ரொம்ப கஷ்டமாயிருக்கு" என்று உடைந்து அவர் பேச,

"எனக்கு உங்க நிலைமை புரியுதுங்க... ஆனா நாம இதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும்" என்று சொல்லிக் கணவனின் கரத்தை அழுந்த பற்றினார் வேதா.

"எப்படி ஏத்துக்க சொல்ற... அவ இல்லாம... அவ கூட பேசாம சிரிக்காம... ஹ்ம்ம்.... அவ சூப்பைக் குடிக்காம" என்று சொல்லும் போதே வலி நிறைந்த புன்னகையை அவர் உதிர்க்க,

அந்த வார்த்தைகளைக் கேட்ட வேதாவின் விழிகளிலும் இப்போது நீர் ஏகபோகமாய் வழிந்தோடியது. அவர் இத்தனை நாளாய் கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்வுகளை எல்லாம் கணவனின் வார்த்தைகள் கட்டவிழ்த்துவிட்டன.

அப்படியே கணவனின் தோள் மீது சாய்ந்து அவர் அழ, "நம்ம வீடு முழுக்க குழந்தை மாதிரி சுத்தி வந்துட்டிருப்பாளே... இப்போ அவ இல்லாம அந்த வீடு வெறிச்சோடிப் போயிடுமே வேதா" என்று சபரி மேலும் புலம்ப,

வேதாவிற்கு கணவனின் நிலையைப் பார்த்து அச்சம் தொற்றிக் கொண்டது.

"நீங்க ரொம்ப டென்ஷனாகறீங்க... கொஞ்சம் ரிலேக்ஸ்டா" என்றவர் சொல்ல சபரி அவர் வார்த்தையைக் கவனியாமல்,

"என் பொண்ணுக்கு என்னடி வயசாயிடுச்சு... எதுக்குடி இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சீங்க... இன்னும் கொஞ்ச நாள் அவ என் கூட இருந்திருப்பால்ல... உங்க அப்பத்தா சாகக் கிடக்கிறாங்கன்னு சொல்லி என் உயிரை என்கிட்ட இருந்து பிரிச்சு என்னைய நட பிணமாக்கிட்டீங்களே!" அவர் உணர்ச்சிவசப்பட்டு வெடித்தழ வேதா அவசரமாய் எழுந்து தண்ணீர் பாட்டிலை அவர் முன்னே நீட்டி,

"நீங்க முதல்ல தண்ணி குடிங்க.. அப்புறம் பேசிக்கலாம்" என்று அவரை சமாதானப்படுத்த முயல அந்த முயற்சி தோல்விலேயே முடிந்தது.

கொஞ்ச நேரம் அழுது தீர்த்துவிட்டு மெல்ல தன் அழுகையை தானே அடக்கிக் கொண்டு நிமிர்ந்தவர் மௌனநிலையில் ஆழ்ந்திட கணவனின் தோளில் பரிவாய் சாய்ந்து கொண்டு பெருமூச்செறிந்தார் வேதா.

"வேதா" சபரி மெலிதாய் அழைக்க,

"என்னங்க" தலைதூக்கி அவரை நிமிர்ந்து பார்த்தார் வேதா.

"எனக்கு என்னம்மோ பண்ணுதுடி" முகமெல்லாம் சுருங்க வலியோடு அவர் சொல்ல,

வேதாவிற்கு பதட்டமானது. "என்னங்க பண்ணுது?"

"தோள்பட்டையெல்லாம் வலிக்குதுடி... முடியல" சபரி அவஸ்த்தை பட வேதா படபடப்போடு,

"என்னங்க ஹாஸ்பிடல் போலாமா?!" என்று படபடத்தார்.

"வேண்டாம்... கொஞ்சம் தண்ணி மட்டும்" என்று கேட்க வேதா தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுக்க அதனை வாங்கிய அவர் கரம் நிலைகொள்ளாமல் நடுங்கியது. முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியிருந்தது.

வேதா என்னவோ ஏதோ என்று விதிர்விதிர்த்து போனவர்,

"இருங்க நான் போய் தம்பியை கூப்பிடறேன்" என்று எழுந்து கொண்ட சமயம் சபரி அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு தண்ணீர் பாட்டிலை தவறவிட்டுவிட்டு பின்னோடு சாய்ந்தார்.

jamunarani and shiyamala.sothy have reacted to this post.
jamunaranishiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content