You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam kondenadi - 5

Quote

5

ஆழமாய் ஊடுருவிய விழிகள்

 சிவசு மெஸ்ஸிலிருந்து காரில் ஏறி மோகனுடன் புறப்பட்டிருந்த ஷிவானியின் மனம் எங்கோ கண்காண திசையில் தன்னை மறந்து பயணித்துக் கொண்டிருந்தது. எதை நினைத்து எதனால் என்பதற்கான காரண காரியத்தை எல்லாம் அவள் தீவிரமாய் அலசி ஆராயவில்லை.

அதே நேரம் அந்த நெகிழ்ச்சியான உணர்வைச் சற்றும் வெளியேற விடாமல் மௌன நிலையில் வந்தவளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு வந்தான் மோகன்.

'இவளுக்கு என்னாச்சு... ஏன் இவ்வளவு சைலன்ட்டா வர்றா?' என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டவன்,

அதற்கு மேல் பொறுமையிழந்து, "ஷிவா?" என்றழைத்தான்.

"ஹ்ம்ம்.. சொல்லு மோக்" என்று அரைகுறை சிந்தனையோடு ஜன்னலோரக் காட்சிகளை ரசித்தபடி அவள் கேட்க, அவன் அவளிடம் வீடு வரும் வரை பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தான்.

"இறங்கு ஷிவா" என்றவன் சொல்ல... உணர்வு பெற்றவள், காரிலிருந்து இறங்கினாள். அவள் முன்னேறி நடக்க மோகன், "ஷிவா" என்றழைத்தான்

"என்ன லா?" என்றவள் கேட்டபடி திரும்பி நிற்க,

"நான் கேட்டதுக்கு எதுக்கும் நீ பதில் சொல்லாமலே போற... உனக்கு இதுல விருப்பமில்லையா?" என்று கேட்கவும் அவள் முகம் குழப்பமாய் மாறியிருந்தது.

"நீ என்ன கேட்ட... நான் என்ன பதில் சொல்லணும்?" என்றவள் கேட்க,

"ஹே!... நான் உன்கூட இவ்வளவு நேரம் பேசிட்டு வந்ததெல்லாம் நீ காதுலயே வாங்கலையா?!" என்றவன் கடுப்பாகி வினவ,

"ஸாரி லா... நான் வேறேதோ யோசிச்சிட்டு இருந்தேனா?... நீ என்ன சொன்னன்னு நான் கவனிக்கவே இல்லை" என்றாள். அவன் முகமெல்லாம் அத்தனை எரிச்சலாய் மாறியிருக்க

அவள் யோசனைக்குறியோடு, "ஆமா மோக்... நீ என்ன சொன்ன?"  என்று கேட்டாள்.

"நான் ஒரு மண்ணாங்கட்டியும் சொல்லல... நீ போ" என்று கடுப்படித்தான்.

அவனின் கோபமான பாவனை பார்த்துக் குழப்பமானவள், மேலே அவனிடம் எதையாவது பேசி வாங்கிக் கட்டி கொள்வானேன் என்ற எண்ணத்தோடு மௌனமாய் அகன்று விட்டாள்.

மோகன் ஒருவித தோற்றுப் போன உணர்வோடு தன் காரின் மீது குத்திக் கொண்டிருக்க,

"டேய் மோகன்" என்று அவன் செயலைப் பார்த்துப்  பதை பதைத்து ரஞ்சன் அழைக்க அவன் சற்று அமைதி பெற்றான்.

ரஞ்சன் சந்தேகத்தோடு, "ஷிவாகிட்ட பேசிட்டியா?" என்று கேட்டு வைக்க,

"அவ கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானாடா" என்று கோபமானான்.

"என்னடா ஆச்சு? பொறுமையா நடந்ததைச் சொல்லு"

"ஏதாச்சும் நடந்தாதானேடா சொல்றதுக்கு... ஒரு மண்ணும் ஆகல... அவளுக்கு நல்லா சாப்பிடத் தெரியுது... கேவலமா சமைக்கத் தெரியுது... வேறெதவும் தெரியல" என்று மோகன் சொல்ல ரஞ்சன் அவன் தோள்களைத் தடவிக் கொடுத்து,

"நீ டென்ஷனா இருக்க... வா உள்ளே போய் பொறுமையா பேசிக்கலாம்" என்றான்.

"என்னால முடியலடா... மூஞ்சி முகரை தெரியாதவன்கிட்ட எல்லாம் பேசுறா... ஆனா நான் பேசினா காது கொடுத்துக் கூட கேட்க மாட்டேங்குறா... அவ கூட இருக்க போற ப்யூச்சரை நினைச்சா எனக்குக் கதிகலங்குது" என்க, ரஞ்சனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.

இவர்களுக்கிடையில் திருமணம் என்ற உறவு சாத்தியப்படுமா என்று ரஞ்சனுக்கே கவலை எழ, தன் தம்பியைச் சமாதானம் செய்து அப்போதைக்கு இயல்பு நிலைக்கு மாற்ற முயன்று கொண்டிருந்தான்.

இங்கே இவர்கள் சம்பாஷனை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், உள்ளே போன ஷிவானியிடம் நளினி சபரி அரவிந்தன் என எல்லோரும் சூழ்ந்து கொண்டு நிச்சியதார்த்தத்தைப் பற்றிப் பேச முற்பட்டனர்.

நளினி முதலில், "உனக்கும் மோகனுக்கும் எங்கேஜ்மென்ட் பண்ணலாம்னு" என்று கொஞ்சம் தயக்கத்தோடு சொல்ல, வேதாவிற்கு உள்ளூர பயமாய் இருந்தது. இவள் கோபத்தில் எதையெல்லாம் தூக்கிப் போட்டு உடைக்கப் போகிறாளோ என்றவர் அஞ்சிக் கொண்டு நிற்க, ஷிவானி எல்லோரின் மீதும் தன் அதிர்ச்சியான பார்வையை படர விட்டு கொண்டிருந்தாள்.

அவளின் மௌன நிலையைச் சாதகமாய் மாற்றிக் கொண்டு சபரி அவள் அருகில் அமர்ந்து தன் விருப்பத்தை மெதுமெதுவாய் அவள் மூலையில் ஏற்றிக்கொண்டிருந்தார்.

அவள் தந்தையின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவள் தன் மௌனத்தைக் கலைத்து, "இதெல்லாம் அப்போ உங்க ஏற்பாடா டேட் ?" என்று கேட்க,

"இல்ல வாணிம்மா... நீ சம்மதிப்பன்னுதான்" என்றவர் தடுமாறியபடி பதிலுரைத்தார்.

அவள் முகமலர்ச்சியோடு, "கம்மான் டேட்... நீங்க சொல்லி எதுக்காச்சும் நான் வேண்டாம்னு சொல்லியிருக்கேனா?" என்க,

"அப்படின்னா உனக்கு ஒகே வா வாணிம்மா" என்று சபரி மீண்டும் தெளிவுபெறக் கேட்க,

"ஒகே டேட்" என்றவள் தன் சம்மதத்தை பளிச்சென்று உரைக்க, யார் முகத்திலும் ஈயாடவில்லை. அப்போது உள்ளே நுழைந்த ரஞ்சனும் மோகனும் கூட அவள் சொன்னதைக் கேட்டு வியப்பில் மூழ்கினர்.

சபரிக்கு அத்தனை கர்வம். தன் மகள் அப்படியே தன் எண்ணத்தை ஏற்றுக் கொண்டுவிட்டாளே என்று. தன் மனைவியை அவர் திமிராய் ஒரு பார்வை பார்க்க, வேதா நம்ப முடியாதப் பார்வையோடு நின்றிருந்தார்.

அவள் மனதாரதான் சம்மதம் சொன்னாளா என்ற குழப்பம் எழ மகளின் பின்னோடு அறைக்குள் சென்றவர், "உனக்கு உண்மையிலேயே இந்த எங்கேஜ்மென்ட்ல சம்மதமா வாணி" என்று கேட்டார்.

"அப்பாவோட டெசிஷனுக்கு நான் எப்போ மீ... மறுத்துப் பேசியிருக்கேன்" என்று வெளியே சொன்னதையே அவள் திரும்பவும் சொல்ல,

"இது உன் ப்யூச்சர் லைஃப் சம்பந்தபட்ட டெசிஷன் வாணி" என்று அழுத்தி சொன்னார் வேதா.

"அதெல்லாம் டேடுக்கு தெரியாதா மீ... அவரு பார்த்துப்பாரு" என்று ஷிவானி தந்தையின் மீதான நம்பிக்கையோடு பேச வேதாவும் தன் மகளின் வார்த்தைகளைக் கேட்டுப் பூரித்துதான் போனாள்.

அதே நேரம் ஓர் பழைய சம்பவத்தின் நினைவு அவர் விழிகளில் நீரைச் சுரக்க செய்தது. இதே போல ஒரு சூழ்நிலையில் வேதா தன் தந்தையிடம் பேசிய வார்த்தைகள் இப்போது அவர் காதுகளில் ஒலித்தன.

"உனக்கு எதை செய்யனும்... செய்ய கூடாதுன்னு எனக்கு தெரியாதால" என்று வேதாவின் தந்தை முருகவேல் சொல்ல,

"அதெல்லாம் எனக்குத் தெரியாது... நான் அவரைத்தான் கட்டிக்கிடுவேன்... அப்படி இல்லன்னா... இதே உத்திரத்தில தூக்குப் போட்டுத் தொங்கிடுவேனாக்கும்" என்று பிடிவாதமாய் வேதா சொல்ல வீட்டில் உள்ள எல்லோரும் அதிர்ந்து போயினர்.

"அடி பாவி மவளே" என்று அவள் தாய் தங்கம் அவளை அடி வெளுத்து வாங்க

"என்னத்துக்கு வயசுபுள்ளைய போட்டு இப்படி அடிக்க" என்று முருகவேல் மனைவியைத் தடுத்து "போகட்டும் தங்கம்... அவ ஆசைப் பட்டவனையே அவளுக்குக் கட்டி வைச்சிருவோம்" என்றார்.

"என்ன சொல்லுதீக... அவளுக்குப் பிறவு அடுத்து அடுத்து மூணு நிக்கே... அவையளும் இவளைப் போலவே சொன்னா" என்று வேதாவின் தாய் சொல்ல, முருகவேல் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் அவள் விரும்பியவனுக்கே மணமுடித்து வைத்தார்.

அந்த நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்த வேதாவிற்கு... தான் அப்போது சொல்லிய வார்த்தை தன் பெற்றோர்களின் மனதை எந்தளவுக்கு ரணப்படுத்தியிருக்கும் என்பது இப்போது உணர முடிந்தது.

அதுவும் ஷிவானி அவள் அப்பாவின் மீது கொண்ட நம்பிக்கையையும் பாசத்தையும் பார்த்த போது, தான் ஏன் தன் தந்தையின் மீது அத்தகைய நம்பிக்கையை வைக்காமல் போய்விட்டோம் என்று அர்த்தமில்லாமல் எண்ணத் தோன்றியது.

இவ்வாறு எண்ணமிட்டு அவர் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருக்க, அதற்கு நேர்மாறாய் வீட்டில் உள்ள மற்றவர்கள் எல்லோரும் அந்தத் திருமணத்திற்கு ஷிவானி சம்மதம் சொன்னதை எண்ணிக் களிப்புற்றிருந்தனர்.

மோகனும் அவள் சம்மதத்தில் சற்று வியப்பானான். அதன் காரணத்தால் அவள் மீது சுமந்திருந்த வெறுப்பை எல்லாம் அவன் அப்போதைக்கு மறந்து போயிருந்தான்.

அடுத்த நாளே அவர்கள் அனைவரும் குற்றாலத்திலிருந்து திருநெல்வேலிக்கு பயணப்பட்டனர். அங்கே நிச்சியத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதில் மோகனின் தந்தை அரவிந்தனும் சபரியும்  மும்மரமாயினர்.

அதே நேரம் வேதாவிற்கு எப்போது தன் வீட்டாரைப் பார்ப்போம் என உள்ளூரத் தவிப்பும் எதிர்பார்ப்பும் மலையென வளர்ந்து கொண்டிருக்க,அதற்கான சரியான சந்தர்ப்பம்தான் அவருக்கு இன்னும் வாய்க்கப் பெறவில்லை.

மோகனும் ஷிவானியும் திருமணத்திற்கு நிச்சயம் செய்து கொள்ளப் போகிறோம் என்பன பற்றிய எண்ணமெல்லாம் மறந்து, எப்போதும் போல அவர்களுக்கே உண்டான சேட்டைகளையும் சண்டைகளையும் குறையேதுமின்றி செய்து கொண்டு இருந்தனர்.

அந்த வீட்டின் முன்புறம் இருந்த விசாலமான வாசல் புறத்தில் மோகனும் ஷிவானியும் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருக்க, ரஞ்சனும் சங்கீதாவும் ஒரு ஓரமாய் அமர்ந்து இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சங்கீதா தன் கணவனிடம், "இவங்க இரண்டு பேர்கிட்டயும் ஏதோ மிஸ்ஸாகுது... கல்யாணம் பண்ணிக்க போறவங்க மாதிரியே இல்லை" என்க,

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல... இரண்டு பேரும் கொஞ்சம் சின்னப் பிள்ளைங்க மாதிரி பிகேவ் பண்றாங்க... அவ்வளவுதான்" என்றான்.

அவன் சொல்வதற்கு ஏற்றாற் போலத்தான் அவர்கள் இருவரும் இருந்தனர்.

"உனக்கு விளையாடவே தெரியல லா"

"யாரு எனக்கா? உனக்குதான் தெரியல"

அவர்களுக்கிடையில் இடமாறியது இறகுபந்து (Shuttlecork) மட்டுமல்ல. வார்த்தைகளும்தான். ஷிவானி அவன் பேச்சைத் தாங்க முடியாமல் கொஞ்சம் வேகமாய் அந்த பந்தைத் தூக்கி உயர அடித்தாள்.

அது விழுந்த திசையை இருவரும் பார்க்க, அது தூரமாய் வீட்டிற்குள் நுழைந்த ஓர் புது நபரின் மேல் விழுந்தது. அது வேறு யாருமில்லை. சிவகுருதான்.

மோகன் அவள் புறம் திரும்பி, "இதுதான் நீ ஆடுற இலட்சணமா?" என்று கேட்க, "கொஞ்சம் பார்ஸ்ட்டா அடிச்சிட்டேன்... அதுக்கு என்ன இப்போ" என்று எகத்தாளமாய் பதிலளித்தாள் அவள்!

"எது... இது கொஞ்சம் பாஃர்ஸ்ட்டா?" என்றவன் முறைக்க

அவளோ, "உன் Fm பை கொஞ்சம் Off பண்ணு... நான் போய் கார்க்கை எடுத்துட்டு வர்றேன்" என்றவள் முன்னே நடந்தாள்.

குருவும் தன் மீது இதனை யார் எறிந்தார்கள் என்று தேடலாய் பார்த்தவன்,

ஷிவானியைப் பார்த்ததும் தன்னை அறியாமலே முகம் மலர்ந்தான்.

அதே நேரம் அவள் ஒரு த்ரீ போஃர்த் பேண்டும் டைட் டீஷர்ட்டும் அணிந்து கொண்டு வர,  

'இவ நிச்சயம் வெளியூர்கார புள்ளையாதான் இருக்கணும்... அப்புறம் ஏன்...  அன்னைக்கு இவளை எங்கனையோ பார்த்தது போலத் தோணுச்சு' என்றவன் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவள் அவனை நெருங்கி வந்திருந்தாள்.

அவளுக்கும் அவனை அடையாளம் தெரிந்துவிட சற்று குழுப்பமாய் அவனைப் பார்வையாலேயே அளவெடுத்தவள், "நீங்க அந்த ரெஸ்டாரென்ட் ஓனர்தானே" என்று சந்தேகமாய் கேட்க,

"ஓ... அப்போ தெரிஞ்சுதான் இதை என் மேல எறிஞ்சீங்களோ?" என்று கோபமான பாவனையில் கேட்டான் குரு. "நோ... லா" அவள் அதிர்ச்சியாக அவனை ஏறிட்டு பார்க்க,

"அப்ப... இதுவும் அன்எக்ஸ்பெக்டட்னு... சொல்லுதீகளோ?" என்றவன் கிண்டலாய் கேட்கவும் அவள் அவனை அதிசயத்துப் பார்த்து,

"அப்போ நீங்களும் என்னை ஞாபகம் வைச்சிருக்கீங்க போல" என்று கேட்டாள். "எப்படி மறக்க? நீங்கதான் உங்க கைத்தடத்தை என் சட்டையில பதிச்சிட்டு போனீகளே" என்றான்.

ஷிவானி அந்த செயலை எண்ணி உதட்டைக் கடித்து கொண்டு அசட்டுத்தனமாய் அவனை பார்த்து புன்னகையிக்க... அந்த நொடி குருவின் மனம் அவனிடம் இல்லை. அவன் உணராமலே அது அவளிடம் சரண்புகுந்தது.

 

அந்த நேரம் குருவின் முன்னே சென்றிருந்த நபர், "ஏல... குரு... அங்கனேயே ஏன் நிக்க... உள்ளார வா" என்றழைக்க அவன் தன் கரத்திலிருந்த அந்த இறகுபந்தை அவள் கையில் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் சென்றான்.

மோகன் அப்போது அவள் பின்னோடு, "ஷிவா" என்று குரல் கொடுக்க

"யா கம்மிங்" என்று அவனை நோக்கி ஓடினாள். அவன் அருகாமையில் சென்றவள், "உனக்கு தெரியுமா லா... அந்த ரெஸ்டாரென்ட் ஓனர் நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு" என்று வியப்புக்குறியோடு சொல்லித் தன் கரத்திலிருந்த இறகுபந்தை அவனிடம் கொடுக்க,

"எந்த ரெஸ்டாரென்ட் ஒனர்?" என்றவன் கேட்டபடியே மீண்டும் விளையாட்டைத் தொடங்க தயாரானான்.

"அதான் மோக்... நீ என்னைக் கூட்டிட்டு போனியே... சம் நேம்... நான் கூட ஹேன்ட் வாஷ் பண்ண போய் அவர் மேல இடிச்சி" என்று சொல்ல, அவன் யோசனையோடு அவளை நோக்கி, "அந்த ஆளா அது" என்று கேட்டான்.

"ஆளுகீளுனெல்லாம் சொல்லாத லா... கொஞ்சம் ரெஸ்பெக்டா பேசு"

"ரெஸ்பெக்ட்டா... போ ஷிவா... அவன் பார்க்க ரவுடி கணக்கா இருக்கான்"

ஷிவானி எரிச்சலோடு, "ஸ்டாப் இட் மோக்... யாரு என்னன்னு தெரியாம நீயா அவங்களைப் பத்தி ஏதாச்சும் கற்பனை பண்ணிக்காதே... தட்ஸ் நாட் ரைட்" என்று படபடவெனப் பொறிந்தவளை ஏற இறங்கப் பார்த்தவன்,

"ஆமா... நான் எவனையோ பத்தி பேசினா... உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது?" என்று கேட்டான்.

அவள் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் தன் கரத்திலிருந்த பேட்டை தூக்கிவீசியவள் ஆக்ரோஷமாய் அவனிடம் நெருங்கி,

"நான்தான் மரியாதையா பேசுன்னு சொல்லிட்டிருக்கேன்ல... நீ என்னடான்னா திரும்பத் திரும்ப அவன் இவன்னு சொல்லிட்டிருக்க" என்று கேட்டு மோகனின் சட்டையைப் பிடித்து உலுக்க தொடங்கினாள்.  அவளின் அந்தச் செய்கையால் மோகன் திகைத்து நின்றுவிட  இந்தக் காட்சியைப் பார்த்த சங்கீதா, "போங்க... திரும்பியும் இரண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டாங்க" என்று ரஞ்சனிடம் தெரிவித்தாள்.  அவன் பதறியபடி அவர்களை நெருங்கி ஷிவானியின் கரத்தைத் தன் தம்பியின் சட்டையிலிருந்து விலக்கிவிட்டான்.

அவள் கோபமாக அங்கிருந்து சென்றுவிட ரஞ்சன் தன் தம்பியிடம், "என்னாச்சு டா?" என்று வினவினான்.

அவனோ பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட, இவர்களுக்கிடையிலான திருமண உறவு எப்படி இருக்கப் போகிறதென்று எண்ணி ரஞ்சன் அச்சமுற்றான். இதற்கிடையில் வீட்டிற்குள் சென்ற குருவும் அவன் உடன் வந்த நபரையும் இருக்கையில் அமர வைத்துப் பேசிக் கொண்டிருந்தார் அரவிந்தன்.

"நம்ம ஊர் சுத்திலும் என்ன விசேஷம் நடந்தாலும் அது குரு தம்பி சமையலாதான் இருக்கும்... அதுவும் அம்புட்டு ருசியா இருக்கும்... யாரும் ஒரு குறை சொல்ல முடியாது" என்று குரு உடன் வந்தவர் பாராட்டிக் கொண்டிருக்க,

"அதெல்லாம் சரிதான்... ஆனா ரேட்டெல்லாம் எப்படி?" என்று குருவைக் கேட்க,

"எல்லாமே இலை கணக்குதாம்... எத்தனை அயிட்டம் என்னன்னு சொன்னீங்கன்னா அதுப்படி விலையைப் பேசி முடிச்சிக்கிடுவோம்" என்றான்.

அவர் உடனே தன் மனைவியை அழைத்து, "உன் தம்பியையும் தம்பி பொண்டாட்டியையும் கொஞ்சம் கூப்பிடு...  நிச்சயத்துக்கு சமையலாடர் பத்தி பேசிடுவோம்" என்க, நளினியும் உள்ளே சென்று அவர்களை அழைக்கச் சென்றார்.

அரவிந்தன் அப்போது, "என் மச்சான் வந்து பேசிட்டா ஃபைனல் பண்ணி அட்வான்ஸ் கொடுத்திடலாம்" என்று சொல்ல,

குரு அவரிடம், "அப்புறம் விசேஷம்... எங்கே வைச்சிருக்கீக... எப்போன்னு தேதி சொன்னிகன்னா... எனக்கும் எப்படி தோதுபடுன்னு பார்த்துக்கிடுவேன்... ரொம்ப தூரம்னா கொஞ்சம் யோசிச்சிதாம் பண்ணனும்" என்று சொல்லித் தயங்க,

"தம்பி சொல்றதும் சரிதான்... இடம் தேதி எல்லாம் சொல்லிட்டீங்கன்னா" என்று கூட வந்த நபர் கேட்க,

அரவிந்தனும் அவர் சொன்னதை ஏற்றுத் தன் மனைவியிடம் "நளினி அப்படியே நிச்சியதார்த்த இன்விட்டேஷனை எடுத்துட்டு வாம்மா" என்றார். அதே சமயம் சபரியும் வேதாவும் அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து சேர, நளினி தன் நாத்தனாரிடம்,

 "இன்விடேஷன் உங்க ரூம்லதானே இருக்கு...அதைக் கொஞ்சம் எடுத்துட்டு வா வேதா" என்றார்.

"சரிங்க மதினி... எடுத்துட்டு வர்றேன்" என்றவர் செல்ல, "வேதா ஒண்ணு மட்டும்" என்று நளினி சத்தமாய் உரைத்தார்.

"ஆன்... சரிங்க அண்ணி " என்று தன் அறை நோக்கி வேதா விரைந்தார். அப்போது அரவிந்தன் அருகில் சபரி அமர்ந்து எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டிருக்க, குரு ஸ்தம்பித்துப் போனான். அவன் தன் விழிகள் காண்பவை மெய்தானா என்று யோசித்த மேனிக்கு அமர்ந்திருக்க,

வேதா அப்போது தன் கரத்தில் அழைப்பிதழோடு வந்து நின்றார். அரவிந்தன் அதனை குருவிடம் கொடுக்கச் சொல்ல, வேதா அந்த அழைப்பிதழை அவனிடம்  நீட்டினாள். அதனைப் பெற்றுக் கொள்ளாமல் அவன் வேதாவின் முகத்தையே கூர்ந்துப் பார்த்திருக்க, அந்த நொடி அவன் விழிகளில் நீர் தளும்பி நின்றது.

"என்ன குரு அப்படிப் பார்க்க?... பத்திரிக்கையை வாங்கிக்கிடும்" என்று அருகிலிருந்த நபர் குருவின் காதோடு சொல்ல அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவன் சட்டென்று எழுந்து நின்றான்.

வேதா அவனைக் குழப்பமுற நோக்க குருவின் முகத்தில் பலவிதமாக உணர்வுகள் ஒன்றெனக் கலந்திருந்தது. வேதாவை நெகிழ்ந்தபடிப் பார்த்தவன்,

"எப்படி இருக்கீங்க?... சுகமா இருக்கீகளா? என்னைய நினைவு வைச்சிருக்கீகளா?" என்றவன் கேட்டுத் தன் விழியில் எட்டிப் பார்த்த நீரைக் களைந்தான். வேதா புரியாத பார்வையோடுஅவனை ஏற இறங்கப் பார்க்க, மற்ற எல்லோருமே அவன் பேசியதைக் கேட்டு வியப்படைந்தனர்.

வேதாவிற்கு அவன் விசாரித்த தொனியில் உள்ளமெல்லாம் பதைக்க, ஏனோ வார்த்தைகள் தொண்டைக்குள் இருந்து வெளியே வராமல் திக்கி நின்றன. குரு அவர் பார்வையை உணர்ந்து,

"கூடப் பிறந்த பிறப்பையே அடையாளம் கண்டுக்கிட முடியல" என்றவன் குத்தலாய் கேட்க, அவர் ஆச்சர்யம் பொங்க அவனை உற்றுப் பார்த்துவிட்டு, "சிவா" என்றார்.

அப்போது நளினி கையில் பிடித்திருந்த அழைப்பிதழை வாங்கிப் பார்த்த குரு, "ஏன் க்கா...  எல்லோரும் தாய்மாமனை சீர் செய்யத்தான் கூப்பிடுவாயிங்க... ஆனா நீ என்னை சமையல் செய்யக் கூப்பிடுதே... இல்ல" என்று கோபம் பொங்க வினவியவனை வேதாவால் எதிர்கொள்ள முடியவில்லை. அவர் விழியில் நீர் தாரைத் தாரையாய் ஊற்றியது.

"பிறந்த வீட்டு சொந்தத்தையே அத்து எறிஞ்சிட்டு உம்ம மவ கல்யாணத்தை பண்ணுதீகளோ... அப்படி என்ன ஐயனும் ஆத்தாவும் உனக்குச் செஞ்சுபுட்டாக?!" என்று கனலேறிய பார்வையோடு அவன் அத்தனை சீற்றமாய் கேட்க வேதா உடைந்து,

"அப்படி எல்லாம் இல்ல சிவா" என்று சொல்லி அழ தொடங்கினார்.

"தம்பி உட்காருங்க... எதுவாயிருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம்" என்று அரவிந்தன் அப்போது குருவிடம் சொல்ல,

"இனி என்னத்தை பேசி என்னவாக போகுது" என்றவன், அதற்கு மேல் அங்கே நிற்க விருப்பமின்றி விறுவிறுவென நடந்து செல்ல அவன் உடன் வந்த நபர் "நில்லு குரு" என்று அழைத்துக் கொண்டு போனார்.

வேதா அழுத மேனிக்கு அவன் பின்னோடு போக முயல, நளினி அவர் கரத்தைப் பற்றி நிறுத்திச் சமாதானப்படுத்தினார். அவன் கேள்விகள் ஒவ்வொன்றும் சபரியையும் குத்திக் காயப்படுத்தியது.

அதே நேரம் அவன் வயதிற்கு இவ்வளவு பேசியிருக்க வேண்டாமென்று கோபமும் அளவு இல்லாமல் பொங்கியது. குரு வீட்டின் வாயிலை நெருங்க எதிரே வந்த ஷிவானியை ஒரு நொடி நின்று பார்த்தான். அவளை முதன்முதலில் பார்த்தபோது தோன்றிய இனம் புரியாத உணர்விற்கான அர்த்தம் இப்போது விளங்கிற்று. அந்த ஒரு நொடியில் அவன் விழிகள் அவளை அத்தனை ஆழமாய் ஊடுருவிவிட்டுக் கடந்து செல்ல, அவன் விழியன் தாக்கத்தில் அவள் சற்று அரண்டு போனாள்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content