You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam kondenadi - 7

Quote

7

விழியோரம் நீர் கசிந்தது

வேதாவோடு சபரி, நளினி, அரவிந்தன் மூவரும் காரில் வந்திறங்கினர். வேதாவின் மனம் அந்த இடத்தின் மாற்றங்களை காரில் வரும் போதே ஒன்றுவிடாமல் குறித்துக் கொண்டே வந்தது.

புழுதியாக இருந்த அந்த சாலைகள் சிமெண்டு சாலைகளாக மாறியிருந்தன. வீடுகள் எல்லாம் அடையாளம் தெரியாதளவுக்கு புதுப்புது தோற்றத்தில் மாறியிருக்க, அவர்கள் வீடு மட்டும் அப்படியே பழமை மாறாமல் இருந்ததுதான் ஆச்சர்யம்.

வீட்டின் எதிர்கே அக்கா தங்கைகள் எல்லோரும் சுற்றி சுற்றி விளையாடிய அந்த அரசமரத்தைத் தேடினார்.  அப்போதெல்லாம் அதுதான் அவர்கள் வீட்டின் அடையாளக்குறி. ஆனால் இப்போது அது இருந்த சுவடு கூட இல்லை.

அவர்கள் வீடு புது வண்ண பூச்சுகளால் சற்று புதிதாய் தோன்றினாலும் அதே வீடுதான். அவள் வாழ்ந்து வளர்ந்து சமைந்த வீடு. இருபது வருடம் பின்னோக்கி ஓடிப் போய் அந்த காலங்கள் அவர் மனக்கண்முன்னே காட்சிகளாய் விரிய, விழியோரம் நீர் கசிந்தது.

திண்ணையில் அமர்ந்திருந்த வள்ளியம்மை, "யாருல?" என்ற தன் கரத்தை நெற்றியில் வைத்துக் கூர்ந்து பார்க்க,

"எப்படி இருக்கீக அப்பத்தா?" என்று கேட்டபடி வேதா கண்ணீர் வழிந்தோட வள்ளியம்மையின் கரத்தைப் பிடித்து கொண்டார்.

அவர் தோற்றம் பழுத்த முதுமையின் சாரம்சத்தை உரைக்க, வேதாவிற்கு இதே திண்ணையில் தன் பாட்டியோடு செல்லம் கொஞ்சிய நாட்கள் எல்லாம்  நினைவலைகளில் எழுந்து மனதை கனக்கச் செய்தது.

பாட்டியோ சற்று நேரம் யோசித்தபடி, "ஒண்ணும் தெரியலயே... யாருவே?" என்று மீண்டும் கேட்க,

"நான் வேதா... அப்பத்தா" என்றவர் உரக்கச் சொன்னார்.

"எது? மூத்தவ வேதவள்ளியா?" என்று சொல்லிலடங்கா ஆச்சர்யம் பொங்க அவர் கேட்க, பாட்டிக்கு பார்வையும் காதும் மங்கியிருந்தாலும் நினைவாற்றல் ரொம்பவும் கூர்மையாக இருந்தது.

வேதாவின் கன்னத்தை தன் தோல் சுருங்கிய கரத்தால் வருடிக் கொடுத்தவர், "எப்படி இருக்க தாயீ?" என்று உணர்ச்சிபிழம்பாய் கேட்க,

"நான் நல்லா இருக்கேன்... நீங்க சுகமா இருக்கீகளா?" என்று அவரை பற்றோடு விசாரித்தார் வேதா. சொந்த வீடும் உறவுகளும் வேதாவிற்கு பழைய நினைவுகளோடு சேர்த்து, மறந்திருந்த அவர்கள் ஊர் பேச்சு வழக்கையும் வெளிகொணர்ந்தது.

"உன்னைய பார்த்துட மாட்டோமானுதான்ல இந்த கெழவி இம்புட்டு வருசமா உசுரை பிடிச்சிட்டு கிடக்கேன்" என்க,  வேதா நெகிழ்ந்து போனார். அவரின் வார்த்தை அத்தனை உணர்வுப்பூர்வமாய் வெளிவந்தது.

கண்ணீரோடு தன் அப்பத்தாவைத் தழுவி கொண்டு அழ, அவரும் பேத்தியை அணைத்துப் பிடித்தபடி, "எங்கல என் பேத்தி சிவானி... அவளை இந்தக் கிழவி  கண்ணுல காட்ட மாட்டியால?" என்றவர் சுற்றிலும் தேடலாய் பார்த்து வினவ,

வேதா சபரியை ஒரு பார்வை பார்த்தார். அவர்தான் ஏதேதோ சொல்லி அவளை அழைத்துவரவிடாமல் செய்துவிட்டார். இப்போது பாட்டியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று அவர் யோசிக்க, சபரி கண்காண்பித்து அவரை உள்ளே வரச் சொன்னார். 

மூவரும் அப்போது உள்ளே செல்ல தயாராக இருந்த நிலையில்

வேதா தன் பாட்டியிடம், "நான் ஷிவானியை அடுத்த தடவை வரும் போது கூட்டிட்டு வர்றேன் அப்பத்தா" என்று சொல்ல, வள்ளியம்மையின்  விழியில்  ஏமாற்றம் குடிகொண்டது.

குரு அவர்கள் காரிலிருந்து இறங்கும் போதே அவர்களைக் கவனித்துவிட்டான்.

அதே நேரம் கார் சத்தம் கேட்டு அடுக்களையில் இருந்தபடி தங்கம், "யாரு குரு வந்திருக்காக?" என்று கேட்டார்.

குரு கோபமான பார்வையோடு, "சீமையில இருந்த உன் மூத்த மவளும் மருமகனும் வந்திருக்காக" என்க, "என்னல உளர்ற?" என்றபடியே அவர் வெளியே வர, அதற்குள் எல்லோரும் வீட்டிற்குள் நுழைந்திருந்தனர்.

தங்கம் அவர்களை எல்லாம் பார்த்து அப்படியே சில விநாடிகள் ஸ்தம்பித்து விட்டாரென்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் தன் மகளைப் பார்த்ததும் உள்ளூர தாய் பாசம் பிரவாகமாய் பொங்க, "வேதா" என்றவர் கண்கள் கலங்கினார்.

"ம்ம்ம் மா" என்று தன் தாயை வேதா கட்டியணைத்துக் கொண்டுவிட,

இருவரின் உணர்வுகளும் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. அத்தனை உணர்ச்சிபூர்வமான காட்சியாக அவர்களின் பிணைப்பு இருக்க,

குருவின் அருகிலிருந்த ஐஸ்வர்யா இந்தக் காட்சியைப் பார்த்து,  "நிஜமாவே பெரிம்மாவா வந்திருக்காக?" என்று அடங்கா வியப்போடு கேட்க, "ஹ்ம்ம்" என்றான் குரு சிரத்தையின்றி.

தங்கம் தன் மகளின் முகத்தை ஆசையாய் தடவியவர், சட்டென்று பின்னோடு நின்றவர்களைப் பார்த்து முந்தானையை மேலே இழுத்து மூடியபடி,

"வாங்க வாங்க.. உட்காருங்க... வாங்க மாப்பிள்ளை... எப்படி இருக்கீக?" என்றவர் கேட்கவும், "ஆன் இருக்கேன்" என்று சபரி சற்றும் தன் மாப்பிள்ளை முறுக்கு தளராமல் பதிலுரைத்தார்.

சபரி உள்நுழைந்ததபடி குருவைப் பார்க்க, அவனோ முகத்தை வெடுக்கென வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.

வேதா அவனிடம் பேச வர, அவன் ஒதுங்கித் தூணில் போய் சாய்ந்தபடி அவரைப் பாராதது போல் நின்று கொள்ள, தம்பியின் இந்த நிராகரிப்பு அவரை ரொம்பவும் காயப்படுத்தியது.

அதே நேரம் சபரி ஆத்திரத்தோடு தன் தமக்கையிடம், "பார்த்தியா க்கா... வீடு தேடி வந்திருக்கோம்... வாங்கன்னு கூட கூப்பிடாம எப்படி நிற்கிறான்... அதுவும் என்னைப் பார்த்து வேணும்னே முகத்தைத் திருப்பிக்கிறான்" என்று பொறுமினார்.

"ரொம்ப திமிரு பிடிச்சவன் போல" என்றார் நளினியும்.

இதற்கிடையில் தங்கம் அவர்கள் எல்லோருக்கும் தண்ணீர் வழங்கிவிட்டு,

"அவக பக்கத்துல போயிருக்காக... இதோ வந்திருவாக... நான் போய் காபி எடுத்துட்டு வந்திடுறேன்" என்றவர் மீண்டும் அடுக்களை நோக்கிச் செல்ல இருந்தவர், பதட்டத்தோடு  குருவின் அருகாமையில் சென்று,

"என்னல... சிலையாட்டும் நிக்க... போய் உங்க ஐயனைக் கூட்டிட்டு வாரும்" என்றார்.

அவன் வேண்டா வெறுப்பாய் தலையசைத்துவிட்டு நகர,

"ஏ ஐஸ்சு... போய் உடனே உங்க அம்மாவைக் கூட்டிட்டு வாடி... எனக்கு கையும் ஓடல காலும் ஓடல" என்று தங்கம் படபடப்போடு சொல்ல, "சரிங்க ஆச்சி" என்றவள் தலைதெறிக்க ஓடிவிட்டாள்.

வேதா தான் பிறந்து வளர்ந்து வீட்டைச் நின்ற இடத்திலிருந்தே சுற்றிபார்த்து  பெருமூச்செறிந்தாள். எந்த காலத்தில் எழுதி வைத்த விதியோ? திருமணமான பின் பெண்களுக்கு பிறந்து வீடு அந்நியமாய் மாறிவிடுகிறது. அதுவும் வேதாவின் நிலைமை படுமோசம்.

அவருக்கு உள்ளே சென்று தன் தாயிடம் தனிமையில் பேச வேண்டுமென்றத் தவிப்பிருக்க, தன் கணவன் இருப்பதால் பெரும்பாடுபட்டு அந்த எண்ணத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார்.

தங்கம் எல்லோருக்கும் காபியைக் கொடுத்து முடிக்கும் போது குரு அவன் தந்தையை அழைத்து வந்திருந்தான்.

முருகவேலை முதுமை தழுவி இருந்தாலும் அவரின் மிடுக்கான நடையும் மீசையும் அவரை கம்பீரத்தோடே காட்டியது. அவர் வீட்டினுள் விறுவிறுவென  நுழைந்த மாத்திரத்தில் அவர் பார்வை ஆசை தீர முதலில் பார்த்தது தன் மூத்த மகளைத்தான்.  

அவர் வருகையை பார்த்து எல்லோரும் எழுந்து நிற்க, அந்த மரியாதை எல்லோருக்கும் தானாகவே தோன்றியது. மாமனார் மீது கோபம் இருந்தாலும் சபரிக்கும் உள்ளுக்குள் அவர் மீதான மரியாதை அப்படியேதான் இருந்தது.

"உட்காருங்க உட்காருங்க... எம்புட்டு வருஷமாச்சு பார்த்து... எப்படி இருக்கீக?" என்றபடி அவர் அமர்ந்து கொள்ள, அரவிந்தன் அவர் கேள்விக்கெல்லாம் பதிலளித்தான்.  சபரி கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தார். முருகவேல் அப்போது பின்னோடு நின்ற தன் மகனைக்  கண்ணசைவாலேயே அழைக்க, அவர் அருகில் குனிந்தவன்

"சொல்லுங்க ஐயா" என்றான்.

"அம்மைகிட்ட  எல்லோருக்கும் சாப்பாடு தயார் பண்ண சொல்லு"

"வேண்டாம் ஐயா... நான் மெஸ்சில சொல்லிட்டேன்... இப்போ எடுத்துட்டு வந்திருவாங்க" என்றான்.

வந்தவர்கள் எல்லோரையும் விசாரித்துவிட்ட பின் முருகவேல் தன் மகளை ஆழ்ந்து பார்த்து, "என்ன தாயி? எப்படி இருக்கவ?" என்று கேட்க அவரருகாமையில் கீழே வந்து அமர்ந்து கொண்டாள் வேதா.

"நல்லா இருக்கேன் ஐயா... நீங்க நல்லா இருக்கீங்களா?"

"எங்கன்ன நல்லா இருக்க... நானும் உன் அம்மையும் உன்னை நினைக்காத நாளே இல்ல தெரியுமால... உன்னை எப்போ பார்ப்போம்னு காத்துக்கிட்டு கிடந்தோம்...

உங்க அப்பத்தா நீ எப்போ வருவன்னு ஓயாம கேட்டுட்டே கிடப்பாக... ஆனா நீங்க...  எங்கள எல்லாம் மறந்து கடல் கடந்து போயிட்டீகல்ல" என்றவர் கேட்டு ஏக்க பெருமூச்சொன்றை வெளிவிட,

"மறக்க எல்லாம் இல்லப்பா... நானும்  எப்பவும் உங்க எல்லோரையும் நினைச்சிட்டேதான் இருப்பேன்" என்று சொல்லித் தன் தந்தையின் கரத்தை பிடித்து சிறு பிள்ளையாய் வேதா கேவி அழ தொடங்க அவர் விழியிலும் நீர் துளிர்த்து வீழ்ந்தது. முருகவேல் தன் மகளின் தலையை வருடி கொடுத்தார். எத்தனை வருடங்கள் கடந்தால் என்ன? எத்தனை வயதானால் என்ன? பெற்றோர்களுக்கு அவர் மகள்தானே.

அதோடு முருகவேல் தன் மருமகனைப் பார்த்து, "என்ன தம்பி ? இப்பையாச்சும் எங்கன மேல இருந்த கோபமெல்லாம் உங்களுக்கு போயிடுச்சா ?" என்றவர் கேட்க,

"அதெல்லாம் இப்ப எதுக்கு பேசிக்கிட்டு... விடுங்க மாமா" என்று தன்னிலையில் இருந்து சற்றும் இறங்கி வராமலே பதிலுரைத்தார் சபரி.

"சிவானியைக் கூட்டிட்டு வந்திருக்கலாமே?! பார்த்து எம்புட்டு வருஷமாச்சு" என்றவர் ஏக்கமாய் பெருமூச்செறிய அதே கவலையும் வருத்தமும் ஓரமாய் நின்றிருந்த தங்கத்தின் விழியிலும் தேங்கி நின்றது.

குருவும் வந்தவுடனேயே அவர்களோடு ஷிவானி வராததை எண்ணி ஏமாற்றமடைந்தான் என்பது அவன் மனதுக்கு மட்டுமே தெரியும்.

ஷிவானியை அழைத்து வராதது குறித்து சரியான காரணம் சொல்ல முடியாமல் எல்லோரும் விழிக்க, முருகவேல் அவர்கள் நிலைமை உணர்ந்து அடுத்த கேள்விக்கு போனார்.

"சிவானி எப்படி இருக்கா? வளர்ந்து பெரிய மனுஷியா ஆயிருப்பாக இல்ல... இன்னும் அந்த சின்ன வயசு முகம்தேன் என் கண்ணுக்குள்ளேயே நிக்கி" என்றார்பேத்தியின் சிறு வயது தோற்றத்தை தன்னுக்குள் நினைவூட்டி கொண்டு!

அரவிந்தன் அப்போது, "கவலைபடாதீங்க ப்பா... உங்க பேத்தி நிச்சியத்தின் போது நீங்க அவளைக் கண்குளிர பார்க்கலாம்... அதுக்கு அழைக்கதான் நாங்க எல்லோரும் வந்திருக்கோம்" என்றதும், முருகவேலின் முகம் அத்தனை பிரகாசமாய் மாறியது.

தங்கமோ தன் மகளிடம் அப்படியா என்று சமிக்ஞையால் வினவ,

வேதாவும்  ஆம் என்பது போல் தலையசைக்க, தங்கம் பூரிப்படைந்து உளமாற பேத்தியின் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டுமென அந்த கணமே இறைவனை வேண்டிக் கொண்டார்.

அப்போது நளினி... எடுத்து வந்த பழம் பூ இனிப்பை எல்லாம் தட்டில் அடுக்கி பத்திரிக்கையை அதன் மீது வைக்க, எல்லோரும் சேர்ந்து அந்த தட்டினை முருகவேலிடம் வழங்கக் காத்திருந்தனர்.

அவர் தன் மனைவி தங்கத்தையும் அருகில்  உடனிருந்து வாங்கிக் கொள்ள அழைத்தார். இருவரும் தம்பதிகளாய் நிற்க, "நீங்கதான் முன்ன நின்னு இந்த நிச்சயத்தை நடத்திக் கொடுத்து உங்க பேத்தியை ஆசிர்வாதம் பண்ணனும்" என்று அரவிந்தன் சொல்லி  பத்திரிக்கையை அவர்களிடம் கொடுக்க நீட்டிய போது, 

"அந்தப் பேத்திக்கு இத்தனை நாள்ல இவைங்க அசீர்வாதம் தேவைப்படலயோ?!" என்று குரு பின்னோடு நின்று குத்தலாய் பேச, எல்லோருமே அதிர்ச்சி கலந்த பார்வையோடு அவனை ஏறிட்டனர்.

முருகவேல் திரும்பி மகனை முறைத்து, "எந்த நேரத்தில என்னல பேசுதே?" என்றார்.

"தப்பா ஒண்ணும் கேட்டிடுலயே... உள்ளதைத்தானே சொல்லுதோம்"

"நீ ஒண்ணையும் சொல்ல வேண்டாம்ல... சத்த நேரம் உன் திருவாயை மூடிக்கிட்டு கம்முனு இரும்" என்று கோபமானார் முருகவேல்.

"மூடிக்கிடுதேன்... ஆனா நீங்க அந்த பத்திரிக்கையை வாங்க மாட்டேன் சொல்லுங்க... மூடிக்கிடுதேன்" என்றான் குரு அழுத்தமாக!

வேதா அதிர்ச்சியோடு, "என்ன பேசுற சிவா... இதுதான் நீ உன் கோபத்தைக் காட்டுற நேரமா?" என்றவர் கேட்க,

"நான் கோபத்தைக் காட்டல... என்  உரிமையை கேட்குதேன்" என்றதும் சபரியின் கோபம் எல்லையை மீற,

"என்னடா உரிமை" என்று கோபமாய் அவனைப் பார்த்து பொங்கி விட்டார்.

அவன் அசராமல், "என்ன மாமோய் ? தெரியாத மாதிரி கேட்குதீக... என் அக்கா மவளுக்கு யாரைக் கேட்டு நீங்க நிச்சயம் பண்ணுதீக... அதுவும் குத்துகல்லாட்டும் நான் இருக்கும் போது...  அவளைக் கட்டிக்கிற உரிமை எனக்குதேன் முதல்ல.... அந்த உரிமையை நான்  யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுதர மாட்டேனாக்கும்" என்று அழுத்தம் திருத்தமாய் சபரியைக் குறி வைத்து அவன் சொல்ல அந்த வார்த்தைகள் அவரின் ஆணிவேரையே ஆட்டங்கண்டிடச் செய்தன.

அவன் சொன்னதைக் கேட்டு எல்லோரும் அதிர்ந்து பார்க்க, அவனோ அப்படி ஒரு வார்த்தையை சொல்லிவிட்டு சற்றும் அலட்டிக் கொள்ளாமல் நின்றான்.

சபரி கோபம் தாளாமல், "நீ எல்லாம் என் பொண்ணை கட்டிக்கணுமா?" என்று கேட்டு அவன் மீது கைஓங்கிக் கொண்டு போக,  அரவிந்தன் அவரைத் தடுத்துவிட்டிருந்தார்.

நளினி அப்போது, "இதானா வேதா... உங்க குடும்பத்துல இருக்கிறவங்க கொடுக்குற மரியாதை" என்று கேட்க,

வேதா தன் தம்பி குருவை கோபமாகவும் அதே நேரம் இயலாமையாகவும் பார்த்தார்.

தங்கம் அவர்களிடம், "அவன் ஏதோ கோபத்தில சொல்லுதான்... நீங்க தப்பா எடுத்துக்காதீக" என்க,

சபரி குருவிடம், "நானும் ஆரம்பத்தில இருந்து பார்த்திட்டிருக்கேன்... நீ ரொம்ப ஓவராதான்டா போற" என்று எகிறினார்.

அரவிந்தன் அவர் கரத்தைப் பற்றி, "சபரி... புறப்படு... இங்க நின்னு பேசிட்டிருந்தா பிரச்சனைதான் வளரும்" என்றுரைத்து அவரை அழைத்துக் கொண்டு புறப்பட, வேதா ஏக்கமான பார்வையோடு அந்த இடத்தைக் கடந்தார்.

முருகவேலும் தங்கமும் அவர்களைப் பின்தொடர்ந்து, "கோவிச்சுக்காதீக... தம்பி... எதுவாயிருந்தாலும் பேசிக்கிடலாம்... உள்ளர வாங்க" என்றழைத்து தடுக்க முற்பட,

சபரி தன் கோபம் அடங்காமல் அவர்களைப் பார்த்து, "என்ன பேசணும்... என் பொண்ணை உங்க மகனுக்குக் கட்டிக் கொடுக்கணும்னு சொல்றீகளா?"  என்று கேட்டார்.

"அவன் ஏதோ கூறுகெட்டதனமா அப்படி கேட்டிடுதான்... நீங்க அதைப் பெருசா எடுத்துகிடாதீங்க" என்று முருகவேல் சபரியிடம் கெஞ்சிப் பார்க்க,

"அவனை நீங்களே தூண்டிவிட்டு பேச வைச்சிட்டு... இப்போ அப்படியே நடிக்காதீங்க" என்று வாசல்புறம் நின்று சபரி கத்த வேதா கையறுநிலையில் யாருக்காகப் பேசுவதென்று புரியாமல் அழுது கொண்டிருந்தார்.

சபரி காரில் ஏறுவதற்கு முன், "உங்க பிள்ளையை இனிமே என் கண்ணில தப்பிதவறிக் கூட பட்டுட வேண்டாம்னு சொல்லி வையுங்க... அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்" என்க,

சிவகுரு பின்னோடு வந்து, "என்ன மாமோய் சும்மா கூவிறீக... நான் இங்கனதான் இருக்கேன்... உங்க சலம்புதலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்... முடிஞ்சா என் அக்கா மவளுக்கு என்னை மீறி உங்க அக்கா மகனோட நிச்சயத்தை நடத்திடுங்க பார்ப்போம்" சவாலாக உரைத்தான். வேதாவோ  தன் தம்பியை அதிர்ச்சியோடு பார்த்தார்.

சபரி அதீத உக்கிரத்தோடு, "நடத்தி காட்டிறேன்டா" என்று அவரும் பதில் சவால்விட, "அதையும்தான் பார்த்திடுவோமே" என்று குரு அசராமல் அவருக்கு பதிலடி கொடுத்தான். சபரி ரொம்பவும் எரிச்சலடைந்தார்.

தங்கமோ, "வாய மூடுல" என்று மகனை அதட்ட முருகவேலோ நம்ப முடியாத அதிர்ச்சியில் இருந்தார். குரு தன் தமக்கைகள் மீதும் அவர்களின் குழந்தைகள் மீதும் எத்தனை அக்கறையும் பாசமும் கொண்டவன் என்று அந்த ஊருக்கே தெரியும்.

அதே நேரம் குடும்ப பொறுப்புகளை சிறு வயதிலேயே தாங்கிகொண்டவன்.  தன் தாத்தாவின் மெஸ்சை நடத்தி அதனை ரொம்பவும் சிரமப்பட்டு இன்று சிறப்பான நிலைக்கு கொண்டு வந்திருப்பவன்.

அவனின் வளர்ச்சியையும் குணத்தையும் அவர் வியக்காத நாளே இல்லை. எல்லோரிடமும் நொடிக்கு நொடி வாய் ஓயாமல் அவனைப் பற்றி அவர் பெருமிதப்பட்டு பேசிக் கொண்டிருக்க, இன்று அவனா இப்படி எல்லாம் பேசி தன் மூத்த தமக்கையின் குடும்பத்தில் பிரச்சனையை இழுத்துவிடுகிறான் என்பதை அவரால் உண்மையில் நம்பவே முடியவில்லை. அவர் மகனின் செய்கைகளை கண்டு அதிர்ச்சியில் சிலையென சமைந்து நிற்க,

அரவிந்தன் கட்டாயப்படுத்தி சபரியை காரில் ஏற்றி அழைத்து சென்றுவிட்டான்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content