பூவே உன் புன்னகையில்…
கட்டுமான தொழிலில் இந்திய அளவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற சில வணிக பெருநிறுவனங்கள் அதாவது கார்ப்பரேட் கம்பெனிகள் கையிலெடுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்களின் கட்டுமானத்திற்கான துணை ஒப்பந்தங்களை (சப்-காண்ட்ராக்ட்) ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் பெற்று, அவர்கள் தேவைக்கேற்ப கட்டி முடித்துக் கொடுக்கும் பணியை செவ்வனே செய்து வரும் 'கருணா பௌண்டேஷன்' நிறுவனத்தின் அதிபர் கருணாகரன்.
அவருடைய மனைவி தாமரை.
தனக்கென்று தனிப்பட்ட ஒரு வருமானம் இருக்கவேண்டுமென்று பொக்கே ஷாப் ஒன்றை நடத்திவருகிறார் தாமரை. கூடவே, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி நர்சரி ஒன்றையும் பராமரித்து பூச்செடிகளையும் மரக்கன்றுகளையும் விற்பனை செய்கிறார்.
ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு மக்கள் அவர்களுக்கு.
இளையவன் சந்தோஷ், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கிறான்.
சத்தியநாராயணன், தாமரையின் தம்பி. கருணாகரனின் நிறுவனத்திலேயே வேலை செய்துகொண்டு அவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்கிறான்.
இவர்களுடைய ஓர் இனிமையான நாளின் விடியலுடன் தொடங்குகிறது இந்தக் கதை.
1
மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்…
நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம்…
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்…
என்னிலே உன்னையே ஸ்வாசிக்கின்றோம்…
இது உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்…
சில எண்ணங்களை சொல்லும், துள்ளும் கண்ணம்மா!
ஜனனம் தந்தாய், சலனம் தந்தாய், காதல் மொழியில்…
மரணம் கொஞ்சம், மயக்கம் கொஞ்சம், உந்தன் தரவில்…
என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள்...
சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்...
மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள்...
தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்...
ஒரு சேதி, அடி நீயென்பதென் பாதி…
இனி நானென்பதுன் மீதி, தேதி சொல்லம்மா...
(அன்பே சிவம் திரைப்பட பாடல் வரிகள்)
ஜாடியிலிருந்த காஃபியை ஊற்றி மகனுக்குக் கொடுத்தவாறே, "ஹாசினி, இது என்ன சின்ன குழைந்தை மாதிரி கொஞ்சிட்டு இருக்க. மணி இப்பவே ஏழு ஆகுது. எழுந்து காஃபியைக் குடி" என்று மகளிடம் கண்டிக்கும் தொனியில் சொன்ன தாமரை, "வேர்வை கப்பு தாங்கல, மொதல்ல போய் குளிச்சிட்டு மத்த வேலையை பாருடா" என்று மகனிடம் நக்கலாகச் சொல்லி முடித்தார்.
"ஓகே ஆபீசர்" என இலகுவாகவே பதில் கொடுத்துவிட்டு ஒரே மிடரில் காஃபியை பருகியவன் அங்கிருந்து ஓடியே போனான் சந்தோஷ்.
தம்பியைப் போன்று அப்படி வெகு சுமுகமாக விட்டுக்கொடுத்துவிட்டால் அவள்தான் ஹாசினி அல்லவே. கொதி தாங்கா அரிசியாக, "ப்பா... பாருங்கப்பா?" எனத் தந்தையைத் துணைக்கு அழைத்தவள், மகள்மேலும் கொஞ்சம் தவறு இருக்கவே, அவள் பக்கம் சாய்வதா இல்லை மனைவிக்குத் துணை நிற்பதா என விளங்காமல் மதில் மேல் பூனையாக அவர் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, ஒரு நொடி கூட தாமதிக்காமல், "மா... எங்கப்பா நான் கொஞ்சுவேன், உனக்கு என்ன வந்துது? அவர் மடிலதான படுத்திருக்கேன். என்னவோ உன் மடில படுத்த மாதிரி ஓவர் சீன் போட்ற" என நேரடியாகக் களத்தில் இறங்கினாள் மகள்.
அதோடாவது நிறுத்திக்கொண்டிருக்கலாம் அவள். "உன் மடியில நான் தலை வெச்சு படுக்கலையேன்னு பொறாமைலதான இப்படி என்ன திட்ற?" என்று வேறு கேட்டுவைத்தாள். இத்தனைக்கும் கோபமாகவோ சண்டையாகவோ கூட கேட்கவில்லைதான். ஆனால், அதில் அவளுடைய அக்கறையின்மையும் சிறுபிள்ளைத்தனமான கிண்டலும் வெளிப்பட்டுவிட முழு சந்திரமுகியாக மாறிப்போனார் தாமரை.
"என்ன இப்படி பொறுப்பில்லாம பேசற ஹசி! எங்கம்மா என்னை செய்ய சொன்ன மாதிரி வீட்டைப் பெருக்கு, பாத்திரம் தேய், சமையல்செய்னா உன்ன சொல்றேன். ஒண்ணு படிச்ச படிப்ப வேஸ்ட் பண்ணாம அப்பா கூட கம்பெனிக்கு போய் வேலை கத்துக்கோ, இல்லன்னா மேற்கொண்டு ஏதாவது படி. இப்படி அன்ப்ரொடக்ட்டிவா வீட்டுல இருந்துட்டு நாள் முழுக்க போன் கால், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம்னு டைம் வேஸ்ட் பண்ணாதன்னுதான சொல்றேன். போறாத குறைக்கு, வாரத்துல ரெண்டு நாள் மூனுநாள்ன்னு ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்துட்டு சினிமா தியேட்டர் மால்ன்னு சுத்தற. கண்ணுல படற டிரஸ் அக்ஸசரீஸ்னு வாங்கி குவிக்கற.
என்ன வாங்கறேன்னாவது உனக்கு நியாபகத்துல இருக்கான்னா, அதுவும் கிடையாது. சமயத்துல இருக்கறதையே வாங்கிட்டு வந்து வெக்கற. இதெல்லாம் விளங்குமா" என மகளின் குற்றங்களைப் பட்டியலிடத் தொடங்கினார் அவர்.
அவர் சொன்ன வார்த்தைகள் மனத்தில் ஒரு குற்ற குறுகுறுப்பை ஏற்படுத்த, அதனால் உண்டான கோபத்தால் புசு புசுவென எழுந்த பெருமூச்சுடன் கண்களில் நீர் கோர்க்க, அன்னையை குற்றம் சாட்டும் விதமான ஒரு பார்வையை ஹாசினி தந்தையை நோக்கி வீச, அவ்வளவுதான் அடுத்த நொடியே பொசுக்கென்று மகளின் பக்கம் குதித்துவிட்டார் மனிதர்.
அப்படியே நல்லபிள்ளை போல முகத்தை வைத்துக்கொண்டு ஆமோதிப்பாக தலையை மேலும் கீழும் ஆட்டியவள், அவர் உயர்த்திய கையை தன் கையால் தட்டி ஹை ஃபை செய்ய, "அதுதான் நம்ம கம்பெனியை கவனிச்சுக்க சத்யா, சந்துன்னு ரெண்டு ஆம்பள தடியனுங்க இருக்கானுங்க இல்ல. நம்ம குட்டிம்மா ஏன் கஷ்டப்படணும் சொல்லு. நான் இவ்வளவு பாடுபட்டு சம்பாதிக்கறதே நம்ம பிள்ளைகளுக்காகத்தான. அதை அவ செலவு செஞ்சா என்ன தப்பு. விடு விடு... போக போக அவளே புரிஞ்சுப்பா" என மகளுக்குப் பரிந்துகொண்டு அவர் பேசவும், வேதனையாகிப்போனது தாமரைக்கு.
"என்னங்க நீங்களே இப்படி சொல்றீங்க. பொண்ணுங்களுக்குன்னு ஒரு சுய சம்பாத்தியம் இருக்கணும். அதுதான் அவங்களோட சுய மரியாதையை காப்பாத்தும். கல்யாணம் ஆகற வரைக்கும் அப்பாவோட காசையும் கல்யாணத்து பிறகு புருஷனோட காசையும் கண்ணு மண்ணு தெரியாம இஷ்டத்துக்கு செலவு செய்யறதுல இல்லங்க பெருமை" எனச் சொல்லிவிட்டு வருத்தம் அகலாமலேயே அங்கிருந்து சென்றார் தாமரை.
"கண்ணா அம்மா சொல்றதும் சரிதாண்டா. நீயும் கொஞ்சம் கண்ட்ரோல் இல்லாமதான் செலவு செய்யற. கொஞ்சம் உன்னை சேஞ்ச் பண்ணிக்க ட்ரை பண்ணு என்ன" என மகளிடம் தகப்பன் கொஞ்சலாகச் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகள் தாமரையின் செவியைத் தீண்ட, ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது அவரிடம்.
அவர் சொன்ன எதையும் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை ஹாசினி. மேலும், "அப்பா, ஆனாலும் அம்மா கொஞ்சம் ஓவராதான் பேசறாங்க. இவங்க இந்த சேப்லிங்ஸ் பொக்கே இதெல்லாம் வித்து ஆயிரம் ரெண்டாயிரம்னு சம்பாதிக்கிறது சுயமரியாதையாமா? இவங்க படிச்ச பிஏ தமிழ் லிட்டரேச்சருக்கு பாட்டி இவங்கள அந்த வீட்டு வேலை கூட செய்ய சொல்லாம விட்டிருந்தாதான் ஆச்சரியம். சர்வன்ட் மெய்ட் வெச்சுக்கற அளவுக்கெல்லாம் அப்ப பாட்டி வீட்டுல வேற வசதி இல்லல்ல?" என அவள் கிண்டலாக வேறு பேசிவைக்க, கருணாகரனுக்கே ஒரு மாதிரி ஆகிப்போனது.
மகள் சொன்னதை மட்டும் மனைவி கேட்டுவிட்டாள் என்றால், அவளுடைய மனம் வெகுவாக சுணங்கிப்போகும் என்பதை அறிந்தவராதலால் அவருடைய பார்வை அனிச்சையாக அறைக்குள் செல்ல, நல்லவேளையாக அங்கிருந்து சென்றுவிட்டிருந்தார் தாமரை.
"ஹாசினி! சின்ன பொண்ணாச்சேன்னு உனக்கு சப்போர்ட் பண்ணா அம்மாவ, அவளோட படிப்பு அவ அர்பணிப்போட செய்யற வேலைன்னு எல்லாத்தையும் தாழ்த்தி, அதுவும் என் கிட்டயே பேசுவியா நீ. அவளைப் பத்தி என்ன தெரியும் உனக்கு" என அவர் குரலை உயர்த்தவும், "சாரிப்பா... சாரிப்பா, சும்மா ட்ரோல் பண்ணத்தான் அப்படி சொன்னேன்" என ஹாசினி இறங்கி வர, அவளுடைய கண்கள் மீண்டும் கலங்கிப்போனது.
அதை சகிக்க முடியாமல், மகளைத் தோளோடு அணைத்தவாறு, "அம்மா மனசு நோகற மாதிரி இப்படியல்லாம் பேச கூடாது குட்டிமா... சரியா" என அவர் இதமாக சொல்லவும், 'சரி' என்பதாக தலையை நன்றாக ஆட்டிவைத்தாள் அவள். "சரி போ... போய் குளிச்சிட்டு சீக்கிரமா ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வா” என்று அவளை சமாதான படுத்தும் விதமாக அவளுடைய உச்சியில் அவர் முத்தமிடவும், அதில் கரைந்துபோய், "ஓகே..ப்பா" என்றவாறு அங்கிருந்து துள்ளிக்கொண்டு சென்றாள் 'என்றென்றும் சிரிப்புக்கு மட்டுமே சொந்தக்காரியாக இருக்கவேண்டும்' என்ற கொள்கையுடன் கருணாகரன் என்ற தகப்பனால் பொத்தி பொத்தி பாதுகாக்கப்படும் ஹாசினி என்கிற அவருடைய தேவதை.